அறிமுகம்
இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஆட்சி செய்த சிங்கள ஆட்சியாளர்களால் காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்பட்ட பேரினவாதம் சார்பான சட்டங்களும் மற்றும் சட்டத் திருத்தங்களும், உதாரணமாக தனிச் சிங்களச் சட்டம், பெளத்தம் அரச மதமாக்கப்படல், கல்வி தரப்படுத்தல் சட்டங்கள், தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம், இனக் கலவரங்கள், வேலைவாய்ப்பில் இனப்பாகுபாடு, ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும், மேலும் பலவும், தமிழ் இளைஞர்களை இலங்கை அரசிற்கு எதிராக சத்தியாக்கிரகப் போராட்டங்களை முன்னெடுக்க தூண்டின. தமிழினம் மனித இனத்தில் தனக்கென்று ஒரு தனித்துவமான நாகரிகத்தையும், சமூக அடையாளங்களையும் மற்றும் நீண்ட வரலாற்றுப் பின்னணியையும் கொண்டது. மூத்த இனமாக வரலாற்றில் இடம்பிடித்த ஒரு இனம், இன்னொரு இனத்தின் கீழ் தமது அடையாளங்களை இழந்து வாழ விரும்பவில்லை. எனவேதான் தாயகம், தேசியம், மற்றும் தன்னாட்சி கோரி ,போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கியது. பேச்சுவார்த்தைகள் தோல்விகளில் முடிய அரச படைகளின் ஆயுதமுனைப் போராட்ட அடக்குமுறைகள் காரணமாக ஆயுத ரீதியான உள்நாட்டுப் போர் 23 யூலை 1983 முதல் 26 இடம்பெற்று 2009 இல் விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டதோடு முடிவுக்கு வந்தது.
இந்த வேண்டாத போரினால் இலங்கையின் வடக்கு, கிழக்கின் பொருளாதாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இடப்பெயர்வுகளினால் பல்லாயிரக் கணக்கானோர் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்தனர், உருவாக்கப்பட்ட உயர் பாதுகாப்புவலயங்கள் மற்றும் உள்நாட்டு இடப்பெயர்வுகள் காரணமாக அரச கட்டுப்பாட்டில் இருந்த விவசாய நிலங்கள் விடுவிக்கப்படாமல் காடாகின மற்றும் பரம்பரை விவசாயத்தை பெருமளவானோர் கைவிட்டனர். ஆனால், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மக்கள் அரசாங்கத்தினால் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டும் விடுதலைப் புலிகளின் திட்டமிடல் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட தற்சார்பு விவசாயம் மற்றும் உணவு உற்பத்தி மூலம் விவசாயத்தில் ஈடுபட்டு உணவு உற்பத்தியில் தன்னிறைவு கண்டார்கள். ஆனால் அரச கட்டுப்பாட்டில் இருந்த வடக்கு – கிழக்கின் விவசாய உற்பத்தித் திறன் வீழ்ச்சி அடைந்தது. இன்று போரில்லாத இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை அன்று பொறியில் சிக்குண்ட மக்கள் சந்திக்கவில்லை. அது எவ்வாறு நடந்தது? எவ்வாறான விவசாயத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன ? என்பதையே இந்த அத்தியாயம் விரிவாக ஆராய்கிறது.
உள்நாட்டுப் போரும் வடக்கு கிழக்கு மாகாணங்களின் விவசாய வீழ்ச்சியும்
வடக்கு கிழக்கு மாகாணங்களின் மொத்த விவசாய நிலம் சுமார் 735,000 ஹெக்டேயர். இவற்றில் நெல் நிலத்தின் அளவு 265,000 ஹெக்டேயர் அல்லது விவசாய நிலத்தின் 35%; 125,000 ஹெக்டேயர் வீட்டுத் தோட்டங்களாகவும் மற்றும் 350,000 ஹெக்டேயர் சேனா மானாவாரிப் பயிர் நிலமாகவும் மற்றும் மேய்ச்சல் தரைகளாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, வடக்கு ,கிழக்கு மாகாணங்களில் வேலை செய்யும் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 570,000 பேரில் 50% க்கும் அதிகமானவர்கள் விவசாயத்தையே முக்கியமான தொழிலாகக் கொண்டிருந்தார்கள். இதனால் இலங்கையின் மொத்த உள்நாட்டு விவசாய உற்பத்தியில் 20.5% இனை வடக்கு- கிழக்கு பங்களிப்புச் செய்திருந்தது. மொத்த நெல் உற்பத்தியில் 1/3 பங்கு வடக்குக் -கிழக்கு மாகாணங்களில் இருந்தே இலங்கைக்குக் கிடைத்தது. கால்நடைகளைப் பொறுத்தவரையில், இலங்கையின் மொத்தக் கால்நடையில் கிட்டத்தட்ட 60% வடக்கு -கிழக்கு மாகாணங்களிலேயே காணப்பட்டது. யாழ். குடாநாட்டில் இருந்து சிவப்பு வெங்காயம், மிளகாய், உருளைக்கிழங்கு, புகையிலை, காய்கறிகள், வாழை போன்ற விவசாய விளைபொருட்கள் மற்றும் திராட்சை போன்றன அதிகமாக சாகுபடி செய்யப்பட்டு தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு விவசாய உற்பத்தியில் வடக்கு மாகாண விவசாயிகள் அதிக இலாபம் ஈட்டினர். அம்பாறை மாவட்டம் நெல் உற்பத்தியில் முதலிடத்தில் இருந்தது. வருடத்தில் மூன்று போகங்களில் நெல் பயிரிடப்பட்டது. மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்கள் பால் மற்றும் இறைச்சிக்கு பேர் போன இடங்களாகத் திகழ்ந்தன. சிறீமா ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட உணவு இறக்குமதித் தடைக் காலத்தில் வடக்கு – கிழக்கு மாகாணங்களை நம்பியே முழு இலங்கையும் இருந்தது என்றால் மிகையாகாது. பனைசார் உற்பத்திப் பொருட்கள், உளுந்து, பயறு, தேங்காய் மற்றும் சிறுதானியங்கள் என்பன யாழ்ப்பாணம் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் கணிசமான அளவில் விளைவிக்கப்பட்டன. உணவுக்குப் பஞ்சம் என்பதே வடக்கு – கிழக்கில் இருந்ததில்லை. உள்நாட்டுப் போர் ஏற்படுத்திய தாக்கத்தினைத் தொடர்ந்து வடக்கு- கிழக்கு விவசாயம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு விவசாய உற்பத்தியில் வடக்கு-கிழக்கின் பங்களிப்பு 10% ஆகக் குறைந்தது.
1982 முதல் 2002 வரை பதியப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில் போரினால் வடக்கு -கிழக்கு மாகாணங்களில் விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட நிலங்களில் 25%க்கும் அதிகமானவை விவசாயம் செய்யாமலே காணப்பட்டது. ஆனால் இந்தக் காலகட்டத்தில் போரினால் பாதிக்கப்படாத வட மத்திய மாகாணத்தில் மாத்திரம் விளைச்சல் நிலங்களின் விஸ்தீரணம் 30% அதிகரித்தது. இதற்கு மிக முக்கியமான காரணம் உள்நாட்டு இடப்பெயர்வினால் மக்கள் தமது சொந்த விவசாய நிலங்களில் இருந்து குடிபெயர்ந்தமை. உதாரணமாக 1990ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து 1997ஆம் ஆண்டு வரை வடக்கு மாகாணத்தின் தீவகப் பகுதிகள், முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டத்தின் சிலபகுதிகள் இடப்பெயர்வு காரணமாக முற்று முழுவதுமாக விவசாயம் செய்யப்படாமல் புதர்கள் மண்டிய காடுகளாக மாறின மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் விட்டுச்சென்ற கால்நடைகள் கட்டாக்காலிகளாக மீளக் குடியமர்ந்த பகுதிகளில் விவசாயத்திற்கு இடையூறு விளைவித்தன. பாதுகாப்புப் பிரச்சினை காரணமாக பயிர் செய்யும் நிலங்களுக்குச் செல்லாமை மற்றும் உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரில் வடக்கு- கிழக்கில் கிட்டத்தட்ட 7,000 ஏக்கர் நிலம் (தற்போதைய விலையில் 2$ பில்லியன் மதிப்புள்ள – நிலம்) கையகப்படுத்தும் அறிவிப்புகளைப் பயன்படுத்தி கைப்பற்றப்பட்டது. இதில் 6,381 ஏக்கர் காணியின் பெரும்பகுதி வடக்கில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வலிகாமம் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ளது. 2016ஆம் ஆண்டில் வடக்கு-கிழக்கு மாகாணங்கள் வடக்கு மற்றும் கிழக்காகத் தனியாகப் பிரிக்கப்பட்ட பின்னர் இன்றுவரை விவசாய உற்பத்தியில் மிகமும் பின்தங்கிய மாகாணங்களாகவே இன்றும் காணப்படுகின்றன.
போரின் பின்னரான வடக்கு -கிழக்கு மாகாணங்களின் விவசாயம்
தற்போதைய மதிப்பீடுகளின் படி வடக்கு-கிழக்கு மாகாணத்தில் சுமார் 145,000 குடும்பங்களைச் சேர்ந்த 700,000 பேர் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளனர். வடக்கு மாகாணத்தில் உள்ள குடும்பங்களில் 58% (36,500) மற்றும் கிழக்கு மாகாணத்தில் (65,800) 85% குடும்பங்கள் பிரதானமாக நெல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. மேலும் 14% மானோர் வடக்கிலும் 13% மானோர் கிழக்கிலும் கலப்பு பயிர் மற்றும் பிற பணப் பயிர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். மீதமுள்ள வடக்கு (28%) மற்றும் கிழக்கு (2%) விவசாயிகள் காய்கறி பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளனர். வடக்கில் காய்கறி மற்றும் பணப்பயிர்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளில் கிட்டத்தட்ட 75% விவசாயிகளின் உயர் திறன்வாய்ந்த விளைச்சல் நிலங்கள் யாழ்ப்பாண குடாநாட்டிலேயே காணப்படுகின்றன.
2002ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட போர்நிறுத்த காலத்தில் இருந்து உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர் வரை உலகவங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் நிதி உதவியில் விவசாய மற்றும் மீன்பிடியை மீளக் கட்டிஎழுப்ப பல்வேறு மீள் எழுச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டன. இவ்வாறு தொடங்கப்பட்ட விவசாய அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் போரினால் பாதிக்கப்பட்ட குளங்கள் பல புனரமைக்கப்பட்டுள்ளன. விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்து கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன, மக்கள் தமது விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான விவசாய உள்ளீடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும் இன்னும் பல ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படாமல் மற்றும் மீளக் குடியமர்த்தப்படாமல் காணப்படுவதனாலும், அரசாங்கத்தின், ஸ்திரத்தன்மை இல்லாத விவசாயக் இறக்குமதி மற்றும் மறுசீரமைப்புக் கொள்கையினாலும், விவசாயத் துறையில் பாரிய முதலீடுகளை மேற்கொள்ளப் பணம் இல்லாத காரணத்தினாலும், புலம்பெயர் தமிழர்கள் வடக்கு- கிழக்கின் விவசாயத்தை நேரடி முதலீடுகள் மூலம் அபிவிருத்தி செய்வதில் அரசினுடைய முட்டுக் கட்டையினாலும் மற்றும் போரினால் ஏற்பட்ட பொருளாதார இழப்புக்களினால் வடக்கு- கிழக்கில் பலர் தமது பரம்பரை விவசாயத்தைக் கைவிட்டு தமது பிள்ளைகளை வேறு தொழில்களிற்கும், வெளிநாடுகளுக்கு அனுப்புவதிலும் முனைப்புக் காட்டுவதினாலும் மற்றும் விவசாயத்துறை சார்ந்தவர்களுக்கு மதிப்பளிக்காததினாலும், வடக்கு- கிழக்கு விவசாயம் பாரிய வளர்ச்சி இன்றி வர்த்தக நோக்கமின்றி துடுப்பில்லாத படகுபோல் நோக்கமின்றிச் செல்வதையே காணக்கூடியதாக இருக்கின்றது.
ஆனால் இன்று ஏற்பட்டிருக்கின்ற இந்த பொருளாதார வீழ்ச்சியை விவசாயத் துறையினால் மட்டுமே மீட்க முடியும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
போர்க்காலத்தில் வன்னிப் பெருநிலப் பரப்பினுள் வெற்றிபெற்ற விவசாயம்
போர்க்காலத்தில் வன்னிப் பெருநிலப்பரப்பு மற்றும் வவுனியா – முல்லைத்தீவு ஆகிய பகுதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டினுள் தற்சார்புப் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் முகமாக விவசாயம் வடிவமைக்கப்பட்டிருந்தது. பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் அனைத்து விவசாய நிலங்களும் பண்படுத்தப்பட்டு உணவு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. 1994-1996 ஆண்டுகளில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் அகப்பட்டுக்கொண்ட அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் கல்வியியலாளரான நீரன் (Neeran) என்பவர் தனது அனுபவத்தை The Civil Administration in Thamil Eelam (தமிழீழத்தின் சிவில் நிர்வாகம்) என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் பின்வருமாறு வர்ணித்துள்ளார். அவர் கூறியதாவது “1994இல் விடுதலைப் புலிகளின் பொருண்மிய மேம்பாட்டுக் குழு தயாரித்த ‘தமிழீழத்தின் விவசாயக் கொள்கை’ கையேட்டை நான் மதிப்பாய்வு செய்தேன். அந்த விவசாயக் கொள்கையில் சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு அனைத்து விவசாய முறைமைகளையும் பசுமைநுட்பங்களையும் பயன்படுத்தி நிலைத்திருக்கத்தக்க விவசாயத்தினூடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு காண்பதோடு மட்டுமல்லாமல் தமிழீழம் கிடைத்தபின்பு ஏற்றுமதி விவசாயமாக கொண்டு செல்லும் வழிவகைகளும் பரிந்துரைக்கப்பட்ட ஒரு தலைசிறந்த ஆவணமாகும். என்னால் அந்த கொள்கைக் கையேட்டில் எந்தவித குறையோ திருத்தமோ செய்ய முடியவில்லை அந்த அளவுக்கு அனைத்து விவசாயத்துறை சார்ந்த நிபுணர்களின் வழிகாட்டலில் தயாரிக்கப்பட்டிருந்தது. அந்தக் கொள்கைகளை முன்னிறுத்தி அவர்கள் போர், செயற்கை உரங்கள் – எரிபொருள் தடைக்கு மத்தியில் உணவு உற்பத்தியில் நான்கு வருடங்களில் தன்னிறைவும் கண்டார்கள். இந்த உணவுத் தன்னிறைவுக் கொள்கை இலங்கை அரசாங்கத்தினால் சுதந்திரம் அடைந்ததில் இருந்து கடைப்பிடிக்கப்பட்டும் இன்றுவரை அதனை அடையமுடியவில்லை. யுத்தம் மற்றும் அம்மோனியம் சல்பேட் மீதான தடை இல்லாவிட்டால், வடக்கில் இருந்து அரிசியை இறக்குமதி செய்யக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கும். அரிசியை விட உருளைக்கிழங்கு, புகையிலை, பழ மரங்கள் போன்ற பல்வேறு பணப்பயிர்கள் மிகவும் வெற்றிகரமாகப் பயிரிடப்பட்டன. விவசாயப் புரட்சி முழுமையடைந்து, அமைதி திரும்பியவுடன் தமிழீழம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டும் என்பதற்காக விவசாய ஆராய்ச்சி நிலையங்களும் தோட்ட மையங்களும் புலிகளால் நிறுவப்பட்டன.
ஜூலை/ஆகஸ்ட் 1995 ஆம் ஆண்டு வடக்கில் அமோனியம் உரத்தை அரசாங்கம் தடை செய்தபோது, புலிகளின் நிர்வாகம் விவசாய பீடம், விவசாயிகள் நலச் சங்கங்கள் மற்றும் விரிவாக்க பணியாளர்களின் ஆலோசனை மற்றும் உதவியோடு “விளைபூமி” என்ற உணவு உற்பத்தி திட்டத்தை நிறுவினார்கள். விளைபூமித் திட்டம் வெற்றிபெற விவசாயிகள், விவசாய பீட விரிவுரையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விரிவாக்கப் பணியாளர்கள் நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டத்தைத் தயாரித்து அதனை நடைமுறைபடுத்தினார்கள். இதன் மூலம் யாழ்ப்பாண இடப்பெயர்வின் போது வன்னி சென்ற மக்கள் உணவுப் பற்றாக்குறையை சந்திக்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.
போர்க்காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உணவு உற்பத்தி தன்னிறைவு அடைய மிகமுக்கியமான காரணங்களாக விவசாயத்துறைக்கு கொடுத்த முன்னுரிமையும், தூரநோக்குச் சிந்தனையும், ஊழல் அற்ற ஆட்சியும், மக்களின் விடுதலைக்கான போராட்டத்தின் மீதான அவாவும், விடுதலைப் புலிகளின் சட்டத்துறை மீது மக்களுக்கு இருந்த பயமுமே காரணம் ஆகும். இப்படியான திறன்கள் இலங்கை அரசிற்கும் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் இருந்தால் இலங்கையும் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திருக்கும், பிற நாடுகளில் உணவுக்கு பிச்சை எடுக்க வேண்டிய நிலையும் வராது.
உசாத்துணை
- www.dinamalar.com/news_detail.asp?id=2280442
- organicananth.blogspot.com/p/blog-page_7901.html
- www.sangam.org/ANALYSIS_ARCHIVES/civil.htm
- www.np.gov.lk/pdf/health_agriculture3.pdf
- Sivakumar, Saravanamuttu. (2021). Basic Statistical Information of Water Resources and Agriculture Sector of North East Province -As Base Data for Pre and Post Conflict Scenario
- www.statistics.gov.lk/statistical%20Hbook/2019/Jaffna/Introduction.pdf
தொடரும்.