அக்கபோதியின் மனைவி : அக்கபோதி கவர்ந்து சென்ற அக்கபோதியின் மகள்
Arts
15 நிமிட வாசிப்பு

அக்கபோதியின் மனைவி : அக்கபோதி கவர்ந்து சென்ற அக்கபோதியின் மகள்  

June 28, 2024 | Ezhuna

இலங்கையில் பண்பாட்டுத் தனித்துவம் கொண்ட பல்வேறு நிலப்பரப்புகளுள் கிழக்கு மாகாணத்தின் கீழைக்கரை எனும் நிலப்பரப்பும் ஒன்றாகும். இந்நிலப்பரப்பு ஒரு நெடிய பாரம்பரியத்தையும், ஆதிவேரான பழங்குடிகளின் தொல்மரபையும் கொண்டமைந்துள்ளது. அவ் வரலாற்றை  சிங்கள வரலாற்றாதாரங்களுடன் ஒப்பிட்டு, நவீன ஆய்வுப்பார்வையில் எழுதும் முயற்சியே ‘ஈழத்துக் கீழைக்கரை: ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற இத்தொடராகும். இதன்படி, இலங்கையின் கிழக்கு மாகாணம் எனும் அரசியல் நிர்வாக அலகின் பெரும்பகுதியையும் அப்பகுதியைத் தாயகமாகக் கொண்ட மக்களின் பண்பாட்டையும் வரலாற்று ரீதியில் இது ஆராய்கிறது. கிழக்கிலங்கையின் புவியியல் ரீதியான பண்பாட்டு வளர்ச்சியையும், அங்கு தோன்றி நிலைத்திருக்கும் தமிழர், சோனகர், சிங்களவர், ஏனைய குடிகள் போன்றோரின் வரலாற்றையும், இன்றுவரை கிடைத்துள்ள சான்றுகளை வைத்துத் தொகுத்துக் கூறும் தொடராக இது அமைகிறது.

அனுராதபுரத்தை ஆறாம் அக்கபோதி மன்னன் ஆண்டு வந்த காலத்தில் (722 – 734) சுவையான ஒரு சம்பவம் இடம்பெற்றது. அவன் தன் மகள் சங்காதேவி என்பவளை அக்கபோதி என்ற பெயர் கொண்ட இன்னொரு இளவரசனுக்கு மணமுடித்து வைத்திருந்தான். ஏனோ அவர்கள் இருவருக்கும் அவ்வளவாக ஒத்துப்போகவில்லை. கணவன் – மனைவிச் சண்டையில் ஒருநாள் அவன் அவளை கடுமையாக அடித்துவிட சங்காதேவி தன் தந்தையிடம் சென்று முறையிட்டிருக்கிறாள். தந்தை அக்கபோதி, அவளை கொஞ்சக் காலம் பிக்குணிகளின் மடத்தில் வசிக்குமாறு அறிவுரை கூறியிருக்கிறான்.

ஆனால் சங்காதேவியோ, தன்னை நேசித்தவனும் அப்போது உரோகணத்தை ஆண்டுவந்தவனுமான “அக்கபோதி” எனும் அதே பெயர் கொண்ட தன் மைத்துனன் ஒருவனுடன் வாழச் சென்று விட்டாள். இதனால் சீற்றம் கொண்ட கணவன் அக்கபோதி தன் மாமனின் படையுதவி பெற்று உரோகணத்தை வென்று, தன் கட்டுப்பாட்டின் கீழ் கொணர்ந்து, மனைவியின் ஆசை நாயகன் அக்கபோதியைக் கொன்று, அவளை மீட்டுக்கொண்டான் (மவ. 48:54 – 64).

எல்லா அரசர் கதைகளையும் போலவே மகாவம்சமும் “அதன் பின்னர் இராசாவும் இராணியும் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்கள்” (மவ.48:64-65) என்று கூறினாலும், உண்மையில் சங்காதேவியும் அவள் புருசன் அக்கபோதியும் அதன்பின்னர் என்ன ஆனார்கள் என்பது நமக்குத் தெரியாது. வரலாற்று ஆய்வாளர்களும் “இப்போது உங்களுக்கு அந்தக் கதை தானா முக்கியம்” என்று விட்டு வேறொன்றைச் சுட்டிக்காட்டுகிறார்கள்; அக்கபோதி தன் சக்களத்தன் அக்கபோதியை வெல்வதற்கு முன் முழு உரோகணத்தையும் வெல்கிறான் என்பதுவே அது. எனவே உரோகணம் அப்போது அனுரையின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கவில்லை, சுதந்திரமாக இருந்தது என்கிறார்கள் அவர்கள்.  

இப்படியே விட்டால் உரோகணம் தொடர்ச்சியாக தனிநாடாக நீடிக்க வாய்ப்புள்ளது என்பதை உனர்ந்துகொண்ட ஆறாம் அக்கபோதி, இடையில் கொஞ்சநாள் விடுபட்டிருந்த வழமையொன்றை மீளத்துவங்கினான. அதன்படி ஆரியபாதனின் (அல்லது ஆதிபாதனின்) ஆட்சி உரோகணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வழக்கத்தின் படி, அரசனுக்கு அடுத்து ஆட்சியுரிமை உள்ளவன், அனுராதபுரத்தில் யுவராசன் (இளவரசன்) பட்டம் சூட்டப்பட்ட அரசகுமாரன் “ஆரியபாதன்” (சிங்களம்: ஆபா, āpā, பெரும்பாலும் தமிழில், ஐயடிகள்) என்ற பெயரில் உரோகணத்துக்குப் பொறுப்பானவனாக நியமிக்கப்படுவான். ஆரியபாதன் அனுரை அரச குருதியில் வருவதால், உரோகணத்தின் சுதந்திரமும் கட்டுக்குள் கொண்டுவரப்படும். முழு நாட்டையும் ஆளும் அனுரை அரசனுக்கு அரசியல் பயிற்சி கொடுத்ததாகவும் ஆயிற்று.

ஆறாம் அக்கபோதி காலத்தில் அவன் தன் மருகன் தப்புலன் என்பவனை உரோகணத்தில் ஆப்பாவாக நியமித்தான் என்று தெரிகிறது (Ranawalla, 2018: 82). அவனுக்குப் பின்னர், சங்கா புருசனான இளவரசன் அக்கபோதி, “ஏழாம் அக்கபோதி” என்ற பெயரில் அரசனானான் (734 – 741). அவன் மறைந்ததும் ஆறாம் அக்கபோதியின் மகனான “இரண்டாம் மகிந்தன்” அரசனானான் (741 – 797). அவனை உரோகணத்தின் ஆப்பாவாக இருந்த தப்புலன், இரு தடவை பெரும்படையுடன் எதிர்த்தான். முதல் தடவை தனது இரு சகோதரர்களின் மைந்தர்களுடனும், இரண்டாம் தடவை அனுராதபுரத்தின் கிழக்கே ஆண்ட இரு ஆதிபாதர்களுடனும் அவன் போர்தொடுத்ததாக மகாவம்சம் சொல்லும். இந்த இரண்டு போருக்கும் இடையில் ஓர் இடைவெளி வருவதால், இரு சந்தர்ப்பங்களிலும் குறிப்பிடப்படுபவர்கள் ஒரே ஆட்கள் தானா என்பது தெரியவில்லை.

எது எப்படியோ இரண்டு போரிலும் இரண்டாம் மகிந்தனே வெல்ல நேர்ந்தது. தப்புலன், விடாது மூன்றாவது தடவையும் போருக்கு ஆயத்தமானான் (மவ. 48:95 – 126) நாட்டில் அமைதியைப் பேணவேண்டும் என்று எண்ணிய மகிந்தன் புத்தபிக்குகளின் ஆலோசனையைப் பெற்று தப்புலனுடன் ஒரு உடன்படிக்கை மேற்கொள்ள ஒத்துக்கொண்டான். இந்த உடன்படிக்கையின் அடிப்படையில் முதன்முறையாக கால்க கங்கை உரோகணத்துக்கும் அனுரை அரசுக்குமான எல்லையாக வகுக்கப்பட்டது (மவ. 48:129 – 133).

ஆய்வாளர்களில் சிலர் கால்க கங்கை (|கால்ஃக |கங்|கா, gālha gangā) என்பதை மகாவலி கங்கையாக இருக்கலாம் என்று ஊகிக்கின்றனர் (Geiger, 1953:122ff) எனினும் கால்க கங்கையை கல்லோயா (கல் கங்கை) என்று வாசிக்கும் போது, அது இன்றைய கீழைக்கரையின் மத்திய பகுதியை ஊடறுத்துச் செல்லும் கல்லாற்றையே குறிக்கும். அது எப்படி?

நிற்க; இரண்டாம் மகிந்தனை அடுத்து அனுரையை ஆண்டவன் அவன் மகன் உதயன் (797 – 801). உதயன் காலத்தில் உரோகணத்தின் ஆப்பாவாக இருந்தவன் தாதாசிவன் என்கின்றது மகாவம்சம் (மவ. 49:10). இவன் காலத்தில் உரோகணத்தின் அரசியல் கொந்தளிப்பானதாகவே இருந்தது. தாதாசிவனின் மகனான இளைய மகிந்தன் தந்தைக்கெதிராகப் புரட்சி செய்ததுடன் அனுராதபுரத்துக்கு ஓடி அங்கு ஆண்ட உதயனிடம் அடைக்கலம் புகுந்தான். உதயன் அவனை அரவணைத்து தன் மகள் தேவா என்பவளையும் அவனுக்கு மணமுடித்து வைத்ததுடன், தாதாசிவனுக்கு எதிராக தன் படையையும் அளித்து மகிந்தனுக்கு  ஆசி கூறி அனுப்பினான். அந்தப்போரில் தாதாசிவன் தோற்று சம்புத்தீவுக்கு (இந்தியா) ஓடிவிட்டதாகச் சொல்கிறது மகாவம்சம் (மவ. 49: 10 – 13). உரோகணத்தின் ஆதிபாதன் ஒருவனுக்கு எதிராக அனுரை அரசன் படை கொண்டு செல்ல அனுமதித்திருக்கிறான் என்பது, அவன் அனுரை ஆட்சியாளனுக்கு அச்சுறுத்தலாக, அங்கு பலம் வாய்ந்த ஆட்சியாளனாக நீடித்திருக்கிறான் என்பதற்கே சாட்சியாகிறது.

தாதாசிவன் ஒரு முக்கியமான வரலாற்றுப் பாத்திரம் என்பதையும், அப்போதைய அரசியலில்  கல்லோயா ஆறு முக்கியமானதாக இருந்தது என்பதையும் உறுதிப்படுத்தும் சில சான்றுகள் கீழைக்கரையில் கிடைக்கின்றன. அவை வேகம்பற்று, வடக்கு இராசக்கல் மலையில் கிடைக்கும் மூன்று எட்டாம் நூற்றாண்டு பழஞ்சிங்களக் கல்வெட்டுகள்.

தாதாசிவனே நேரடியாகப் பொறித்த கல்வெட்டொன்று அங்கு கிடைத்துள்ளது. அங்கிருந்த “அரித்தாரா” விகாரத்தில் வசிக்கும் புத்த சமயப் பெரியோருக்கு மாளத்தை, குளவெளி, மீவன்காமம் என்ற இடங்களில் இருந்த நான்கு பாயல் நிலத்தை கொடையளிப்பதற்கான ஆப்பா தாதாசிவனின் (சிங்களம்: |தள்சிவ, dālsiva) ஆணையை இளம் சனபதத்தைச் சேர்ந்த தாதன் (சிங்களம்: |தய், dayi) என்பவன் கல்வெட்டில் பொறித்துள்ளான்.

தாதாசிவனுடைய சமகாலத்தில் பொறிக்கப்பட்ட இன்னும் இரு கல்வெட்டுகள் இராசக்கல் மலையில் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்று வீராங்குரன் என்பவனின் ஆணையின் கீழ் பொறிக்கப்பட்டது. இன்னொன்று சேனன் என்பவனின் ஆணையின் கீழ் பொறிக்கப்பட்டது.

வீராங்குரனின் கல்வெட்டு அதே அரித்தாரா விகாரத்து துறவிகளுக்கு சரட்வாக்கை என்ற இடத்தில் இருந்த மகாவெகின்னை நான்கு பாயல் நிலம் கொடையளிக்கப்பட்டதைச் சொல்கின்றது. சேனனின் கல்வெட்டு இளம் சனபதத்தில் இருந்த பயத்வாக்கையின் கழல்வெளி  நான்கு பாயல் நிலமும், கல்லோயாவின் வலது கரையில் இருந்த சொறுயூர்  (ஒரு) பாயல் நிலமும் இளம் சனபதத்தின் வீராங்குரனால் சேனனின் ஆணையின் கீழ் பொறித்து வழங்கப்பட்டதாகச் சொல்கின்றது.

இந்த மூன்று இராசக்கல் மலைக் கல்வெட்டுகளும் முக்கியமான சில வரலாற்றுத் தகவல்களைச் சொல்கின்றன. முதலாவது, கல்லோயாவின் பெயர் (சிங்களம் : |கல் ஃகோய், gal hōy) இடம்பெறுகின்ற முதலாவது வரலாற்று ஆவணம் இராசக்கல் மலையில் தான் கிடைக்கின்றது. பொபி 2 ஆம் 3 ஆம் நூற்றாண்டுகளில் கல்வெட்டு – இலக்கியச் சான்றுகளில் தீகவாபி என்று நாம் சந்தித்த ஒரு நிருவாகப்பிரிவை இங்கு முதன்முறையாக தீர்க்கமண்டலம் (சிங்களம்: |திகாமடுல்ல, digāmadulla) என்ற பெயரில் காண்கிறோம். இக்கல்வெட்டுகளின் காலத்துக்கு எழுநூறு ஆண்டுகளுக்கு முன்வரை கிரிகும்பீரம் என்ற புத்த சமய மடம் இயங்கிவந்த இடத்தில் அரித்தாரா என்ற பெயரில் தொடர்ந்தும் ஒரு விகாரம் இயங்கிகொண்டிருப்பதையும் இங்கு காண்கிறோம்.

அந்த இடத்தில் “இளம் |சனபதம்” (சிங்களம்: லம் |சனவு, lam janavu) என்ற பெயரில் ஒரு நிருவாக அலகு இருப்பதும் அதனுடன் மகாவம்சத்தில் இடம்பெறும் ஒரு ஆதிபாதனே தொடர்புறுவதும் இந்த இடத்தின் அரசியல் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டுகிறது. இந்தச் சான்றுகளே, மகாவம்சத்தில் வரும் உரோகணத்தின் எல்லை கால்க கங்கையாக கல்லோயாவை அடையாளப்படுத்தத் தூண்டுகின்றன. கல்லோயாவின் தெற்கில் இருந்து உரோகணத்தின் எல்லையை இன்னும் வடக்கே ஆக்கிரமிக்கச் செய்யப்பட்ட முயற்சி அல்லது மறைமுக அறைகூவல் என கல்லோயாவின் வடகரையில் பொறிக்கப்பட்ட இக்கல்வெட்டைச் சொல்லலாம்.

வரிவடிவம், சொற்களின் அடிப்படையில் வீராங்குரனும் சேனனும் தாதாசிவனுக்கு சற்று முன்பின்னாக வாழ்ந்த அரசியல் பெருமக்கள் என ஊகிக்கமுடிகின்றது. ஆனால் அவர்களது பெயர்களுக்கு முன் ஆதிபாதன் (ஆப்பா) என்ற பட்டம் இடம்பெறாவிடினும், அவர்கள் வலுமிக்க ஆட்சியாளர்கள் என்பது தெரிகிறது. அவர்களின் பெயர்கள் வம்ச இலக்கியங்களிலும் இடம்பெறவில்லை. ஒருவேளை தாதாசிவனுக்கு முன்பு உரோகணத்தின் ஆதிபாதனாகச் சொல்லப்படும் தப்புலனின் படையெடுப்பில் உதவியதாக மகாவம்சம் சொல்லும், அவனது இரு சகோதரிமாரின் பெயர் குறிப்பிடப்படாத மைந்தர்கள், இந்த வீராங்குரனும் சேனனும் ஆகலாம். அவர்கள் இருவர் எனின் சேனனின் கல்வெட்டில் வரும் “இளம் சனபதத்தின்” வீராங்குரனும், இரண்டாம் கல்வெட்டைப் பொறித்த வீராங்குரனும், வேறுவேறு நபர்கள் என்றே கொள்ளமுடிகின்றது.    

மாளத்தை என்பது மல்வத்தைக்கு அருகே இருந்த ஓரிடம். அப்பகுதியில் “இளம் |சனபதம்” என்றோர் நிருவாகப்பிரிவு இருந்ததை இக்கல்வெட்டுகள் உறுதிசெய்கின்றன. எட்டாம் நூற்றாண்டிலும் தீகமண்டலம் மக்கள் குடியிருப்புகள் நிறைந்த நிலப்பரப்பாக நீடித்து வந்ததும், அங்கிருந்த புத்தமடம், கல்லோயா என்பன முக்கியமான அரசியல் களங்களாக விளங்கியதும் இந்தச் சான்றுகள் மூலம் தெரியவருகிறது.  

அடிக்குறிப்புகள்

  1. அக்கபோதி என்பது மத்திய கால இலங்கையில் மிகப்பிரபலமான பெயர் போலிருக்கிறது. இலங்கை அரசரில் அதிகமானோர் சூடிக்கொண்ட பெயரும் அது தான். ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை அனுரை அரியணையை அலங்கரித்த ஒன்பது அக்கபோதிகள் வரலாற்றில் பதிவாகி இருக்கிறார்கள்.
  2. இரண்டாம் மகிந்தன் மகாவம்சத்தில் இடம்பெறுகின்ற மிகச்சிறந்த மன்னர்களுள் ஒருவன். அவன் நாட்டு மக்களின் நலனுக்காக உழைத்தது, புத்தத்துக்குச் சமனான வேறு சமயங்களின் கடவுளருக்குக் கோவில் அமைத்தது, தமிழருக்கு குதிரைகளைப் பரிசளித்தது, பிச்சை எடுக்க நாணும் ஏழைகளுக்கு இரகசியமாக உதவியது உள்ளிட்ட பல நற்பணிகளைச் செய்ததை அந்நூல் நெகிழ்வோடு விவரிக்கிறது (மவ. 48:141 – 148)
  3. இந்த நூற்றாண்டுக்குப் பின்னர் தான் பழைய பிராமி வடிவிலிருந்து சிங்கள எழுத்துக்கள் ஓரளவு இன்றைய வடிவை அண்மித்து எழுதப்பட ஆரம்பிக்கின்றன. கிட்டத்தட்ட இதே காலத்தில் தான் தமிழி வரிவடிவிலிருந்து தமிழ் எழுத்தும் இன்றைய பல்லவ வரிவடிவத்தைப் பெறத்தொடங்கியது என்பதை வரலாற்றில் காண்கிறோம். எவ்வாறெனினும் இக் கல்வெட்டிலொன்றில் ‘இசா’ என்ற சிங்களச் சொல் யகர முன்னொட்டுப் பெற்று ‘யிசா’ என்று இடம்பெற்றுள்ளதை அக்காலத் தமிழ் மொழியின் தாக்கம் (இது>>யிது, ஆனை>>யானை) என்கிறார் பேரா.சி. பரணவிதான (EZ, Vol. IV, p.171)
  4. இது எட்டாம் ஒன்பதாம் நூற்றாண்டுகளில் இலங்கையில் இருந்த நில அளவைகளில் ஒன்று. சிங்களத்தில் இதன் பொருள் தெளிவில்லை. இது தமிழ் ‘பாய்ச்சல்’ இல் இருந்து வந்திருக்கக்கூடும்.
  5. IC V, part III, p.137
  6. EZ, Vol. IV, pp. 173 – 174.
  7. மல்வத்தையின் பழைய பெயரான மாளவத்துகம் என்ற பெயரும், மாளத்தையின் இன்னொரு வடிவமான “மலுத்த” என்ற பெயரும் மகாவம்சத்தின் வேறோர் இடத்தில் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன. எனவே இவை இரண்டும் வேறு வேறு இடங்கள். பெயர் ஒற்றுமையை மாத்திரம் கருத்தில் கொள்ளும் போது ஒருவேளை மாளத்தையே இன்றைய மல்லிகைத்தீவு ஆகலாம்.

உசாத்துணைகள்

  1. Geiger. W. (Ed.). (1953). Culavamsa, Volume I, Colmbo : Ceylon Government Information Department,.
  2. Paranavitana, S. (1994). Three Rock Inscriptions in Rāssahela. in Codrington, H.W., & Paranavitane, S. (Eds.) Epigraphia Zeylanica, Volume IV, pp.  169 – 176.
  3. Ranawella, G.S. (2005). Inscriptions of Ceylon, Vol V, part III, Sri Lanka: Department of Archaeology.
  4. ________________. (2018). History of the Kingdom of Rohana: From the Earliest Times to 1500 AC. Colombo: Ministry of Higher Education and Department of Archaeology.

இவ்வத்தியாயத்தில் பிறமொழி ஒலிப்புக்களை சரியாக உச்சரிப்பதற்காக, ISO 15919 ஐத் தழுவி உருவாக்கப்பட்ட தமிழ் ஒலிக்கீறுகள் (Diacritics) பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த ஒலிக்கீறுகளின் முழுப்பட்டியலை இங்கு காணலாம்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

7358 பார்வைகள்

About the Author

விவேகானந்தராஜா துலாஞ்சனன்

விவேகானந்தராஜா துலாஞ்சனன் அவர்கள் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் மூலக்கூற்று உயிரியலும் உயிர் இரசாயனவியலும் கற்கைநெறியில் இளமாணிப் பட்டம் பெற்றவர். அதே பல்கலைக்கழகத்தின் பட்டக்கற்கைகள் பீடத்தில் பொது நிர்வாகமும் முகாமைத்துவமும் துறையில் முதுமாணிக் கற்கையைத் தொடர்கிறார்.

இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாகக் கடமையாற்றும் இவர் தற்போது மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராகப் பணி புரிகிறார்.

இலங்கை சைவநெறிக்கழக வெளியீடான ‘அலகிலா ஆடல்: சைவத்தின் கதை’ எனும் சைவ வரலாற்று நூலையும் (2018), தனது திருமண சிறப்புமலராக ‘மட்டக்களப்பு எட்டுப் பகுதி’ நூலையும் (2021) வெளியிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்