நாக யுவராஜனின் தவறான சமய நம்பிக்கை பற்றிக் குறிப்பிடும் திஸ்ஸமகராம கல்வெட்டு
Arts
13 நிமிட வாசிப்பு

நாக யுவராஜனின் தவறான சமய நம்பிக்கை பற்றிக் குறிப்பிடும் திஸ்ஸமகராம கல்வெட்டு

May 9, 2024 | Ezhuna

‘இலங்கை பிராமிக் கல்வெட்டுக்களில் நாகர்’ எனும் இத்தொடர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை தொல்லியல் ரீதியாக நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களைக் கொண்ட ஆவணமாகும். நாகர் தமிழ் மொழி பேசியவர்கள் எனவும், ஆதி இரும்புக் காலப் பண்பாட்டை பிரதானமாக அவர்களே இலங்கையில் பரப்பினார்கள் எனவும், இங்கு கி.மு ஏழாம் நூற்றாண்டு முதலாகத் தமிழ் ஒரு பேச்சு வழக்கு மொழியாக நிலை பெற்றிருந்தது எனவும் பேராசிரியர் எஸ். பத்மநாதன் கூறியுள்ளார். இலங்கையில் 2300 ஆண்டுகளுக்கு முன்பு பொறிக்கப்பட்ட சுமார் 100 பிராமிக் கல்வெட்டுக்களில் நாக மன்னர்கள், நாக தலைவர்கள், நாக பிரதானிகள், நாக சுவாமிகள், நாக அதிகாரிகள் ஆகியோர் பற்றிய குறிப்புகள் உள்ளன. இலங்கையின் வரலாற்றுதயக் காலத்தில் நாக எனும் பெயர் கொண்ட மன்னர்கள் பலர் ஆட்சி செய்துள்ளனர். இவர்களில் பலர் தமிழ்ச் சமூகத்தோடு தொடர்புடையவர்கள். இவர்கள் பற்றிய வரலாறு மற்றும் வழிபாட்டுப் பாரம்பரியம் ஆகியவை பிராமிக் கல்வெட்டுக்களை ஆதாரமாகக் கொண்டு இத்தொடரில் ஆராயப்படுகின்றன.

இலங்கையின் தென்பகுதியில் உள்ள அம்பாந்தோட்டை மாவட்டத்தில் திஸ்ஸமகாராமை அமைந்துள்ளது. இவ்விடம் பண்டைய மாகம இராச்சியத்தின் முக்கிய நகரமாகும். இது பண்டைய காலத்தில் அக்குறு கொட என அழைக்கப்பட்டது. பண்டைய ருகுணு இராச்சியத்தின் முக்கிய பகுதியாக இந்நகரமும், இதனை அண்டிய பகுதியும் விளங்கியது. இந்த இராச்சியத்தின் எச்சங்களாக பல பெளத்த தூபிகளும், கல்வெட்டுகளும், கட்டிட இடிபாடுகளும், தொல்பொருள் சின்னங்களும் இங்கு அதிகளவில் காணப்படுகின்றன. 

இங்குள்ள திஸ்ஸவாவி குளத்தின் கிழக்குப் பகுதியில் அக்குறு கொட எனும் இடம் அமைந்துள்ளது. இவ்விடத்தின் அருகில் தான் சந்தகிரி தூபி, திஸ்ஸ தூபி போன்ற பண்டைய பெளத்த வழிபாட்டுத் தலங்கள் காணப்படுகின்றன. இங்கு அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட போது பிராமிக் கல்வெட்டு பொறிக்கப்பட்ட கற்பலகை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இக் கல்வெட்டில் தமிழ் சொல்லான பெருமகன் எனும் சொல் காணப்படுகின்றது.

அக்குறுகொடவில் இன்னுமோர் மிக முக்கிய கல்வெட்டு கிடைக்கப்பெற்றது. இக்கல்வெட்டு எண்கோண தூண் ஒன்றில் பொறிக்கப்பட்டுள்ளது. இத்தூண் சுமார் 15 அடி உயரமானதாகும். இரண்டு துண்டுகளாக உடைந்துள்ள இத்தூணில் இரண்டு வரிகளில் கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டு முதன் முதலாக ஆராய்ச்சியாளர் ஹென்றி பாக்கரால் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் இக்கல்வெட்டு பற்றிய விபரங்களை ரோயல் ஆசியாக் கழக அறிக்கையில் வெளியிட்டார். இக்கல்வெட்டில் நாக யுவராஜன் தவறான சமய நம்பிக்கையைக் கைவிட்டு புத்த பெருமானிடம் சரணடைந்தான் எனக் கூறப்பட்டுள்ளது.

இது பொ.ஆ. 2 ஆம் நூற்றாண்டிற்குரிய பிற்கால பிராமிக் கல்வெட்டாகும். இக் கல்வெட்டில் நாக யுவராஜன் இந்து மதத்தைக் கைவிட்டு பெளத்த மதத்தைத் தழுவியது பற்றிய செய்தி பின்வருமாறு பொறிக்கப்பட்டுள்ளது.

“சித்தம் ய கெதம சே பயே நாம சகவதம நெ நாம மிக திதிக ஜ ந அவதய நெ ஹகியே சக ஆச தி சொஹ ரஜிகி கமே மிகதிதி பிணக அதி மத்திம புத்த சரண கடே நாக யுவராஜே நாம கட யுவராஜ கலஹி.”

பொருள் : சித்தம், பேராசையே பயத்தின் மூலமாகும். பற்று அதிகரித்தல் உண்மையாகவே ஒரு தவறான நம்பிக்கையில்லையா? பற்று, ஆசை ஆகியனவற்றில் இருந்து மக்களைத் திசை திருப்ப முடியாதா? இவ்வாறு சிந்தித்துக் கொண்டும் அரசருக்குரிய கிராமத்தில் தவறான நம்பிக்கைகளை நீக்கும் பொருட்டும், மதிநுட்பம் வாய்ந்தவனும், நாக என்ற பெயரை உடையவனுமாகிய உபராஜா பதவியை வகித்த நான் புத்த பெருமானைச் சரணடைந்து இதைச் செய்தேன்.

பாளி நூல்களிலும் இந்து சமயத்தைக் குறிப்பிடும் இடங்களில் தவறான சமய நம்பிக்கை எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதே விடயம் கிரிந்த கல்வெட்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கிரிந்த கல்வெட்டில் “தவறான சமய நம்பிக்கைகள்” எனக் குறிப்பிடும் அதே சமயம் திஸ்ஸமகராம கல்வெட்டில் “அரசனுக்குரிய கிராமத்திலுள்ள தவறான சமய நம்பிக்கை” எனக் கூறப்பட்டுள்ளது. 

இதன் மூலம் ரோகன இராச்சியத்தின் தலைநகரமாக விளங்கிய திஸ்ஸமகாராம எனும் பண்டைய “மாகம அல்லது அக்குறுகோட” பகுதியில் இந்து சமயம் தழைத்தோங்கி இருந்தது எனக் கூறக்கூடியதாக உள்ளது. கிரிந்த, திஸ்ஸமகராம ஆகிய இரு இடங்களிலும் பொறிக்கப்பட்ட இக் கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ள நாகன் எனும் சிற்றரசன் ஒருவனாகத்தான் இருக்க வேண்டும். இக் கல்வெட்டுகள் குறிப்பிடும் தவறான சமய நம்பிக்கை என்பது அக்காலப்பகுதியில் இலங்கையில்  நிலவிய நாக வழிபாடு, சிவ வழிபாடு ஆகியவற்றைக் குறிப்பதாகும். 

inscription
pillar

மகாநாகன், ஈழநாகன் பற்றிக் கூறும் திஸ்ஸமகராம நாக மகாவிகாரை கல்வெட்டு

திஸ்ஸமகாராமையில் உள்ள மிகப்பெரிய தூபி திஸ்ஸமகாவிகாரை என அழைக்கப்படுகிறது. திஸ்ஸவாவி குளத்தின் அணைக்கட்டின் தென்பகுதியில் இந்தத் தூபி காணப்படுகிறது. இதுவே மாகம இராச்சியத்தை அமைத்த மகாநாகன் எனும் மன்னனால் பொ.ஆ. 3 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நாக மகா விகாரையாகும்.

1876 ஆம் ஆண்டு கலாநிதி. கோல்ட் ஸ்மித் இத்தூபியின் சிதைவுகளுக்கு மத்தியில் ஓர் கல்வெட்டைக் கண்டெடுத்தார். பெரிய கற்பலகையில் எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்த இக்கல்வெட்டு ஈழநாகன் எனும் மன்னனால் பொறிக்கப்பட்டதாகும். திஸ்ஸமகராமையில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளில் இக்கல்வெட்டே பெரியதும், மிகப் பழமையானதும் ஆகும். இக்கல்வெட்டில் ஈழநாகன் நாக மகாவிகாரையை புனரமைத்தமை பற்றிக் கூறப்பட்டுள்ளது. இம்மன்னன் மகாதாதிக மகா நாகனின் பேத்தியின் கணவனாவான். பொ.ஆ. 33 முதல் 43 வரையான 10 ஆண்டுகள் ஈழநாகன் இலங்கையை ஆட்சிசெய்தான்.

இக்கல்வெட்டில் நாக மன்னர்களான மகாநாகன், ஈழநாகன் ஆகியோரின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. எனவே இம்மன்னர்களின் ஆட்சியில் தென்னிலங்கையில் நாக வழிபாடு சிறப்புடன் விளங்கியது எனலாம்.

நாக யுவராஜனின் தவறான சமய நம்பிக்கை பற்றிக் குறிப்பிடும் கிரிந்த கல்வெட்டு 

திஸ்ஸமகராம நகரின் தென்கிழக்கில் 11 கி.மீ. தூரத்தில் கடற்கரையை ஒட்டி கிரிந்த எனும் பண்டைய கிராமம் அமைந்துள்ளது. இங்கு கடற்கரையில் உள்ள ஓர் பாறை மீது பண்டைய காலம் முதல் விஷ்ணு, முருகன் மற்றும் சமன் ஆகிய தெய்வங்களின் கோயில்கள் அமைந்துள்ளன. இது “சேதிஹாசிக்க கிரிந்த மகா தேவாலய” என அழைக்கப்படுகிறது. இது தொன்மைமிக்க கிரிந்த மகாகோயில் எனப் பொருள்படுகிறது.

கிரிந்த பற்றிய ஓர் ஐதீக கதையும் உள்ளது. இலங்கையின் மேற்குப் பகுதியில் இருந்த கல்யாணி இராச்சியத்தின் மன்னனான களனிதீசன் தான் செய்த ஓர் தவறுக்கு பிராயச்சித்தம் தேடும் வகையில் தான் வணங்கிய தெய்வத்திற்கு தனது மகளை தானமாக அளிப்பதற்காக, பேழை ஒன்றில் வைத்து அப்பெண்ணை கடலில் விட்டதாகவும், அந்தப் பேழை கிரிந்த கடற்கரையில் கரை ஒதுங்கியதாகவும், இப்பகுதியை ஆட்சி செய்த காக்கைவண்ணன் பேழையில் கரை ஒதுங்கிய பெண்ணை எடுத்து வளர்த்து தானே மணம் முடித்ததாகவும், இப்பெண்ணே விகார மகாதேவி எனவும், இவர்களின் மகனே துட்டகாமினி எனவும் அவ் ஐதீகம் கூறுகிறது.

இவ்விடத்திலேயே பாறையில் கிரிந்த கோயிலும், அடுத்த பாறையில் பெளத்த தூபியும் அமைக்கப்பட்டுள்ளன. கிரிந்த கோயிலில் மூன்று  சந்நிதிகள் உள்ளன. நடுவில் விஷ்ணு சந்நிதியும், இடது பக்கம் முருகன் சந்நிதியும், வலது பக்கம் சமன் தெய்வத்தின் சந்நிதியும் காணப்படுகின்றன. தூபியின் அருகில் விகாரமஹாதேவியின் சிலையும், அதன் அருகில், சிலைமனையின் பின்பக்கம் கல்வெட்டுப் பொறிக்கப்பட்ட பாறையும் அமைந்துள்ளது. சிலைமனையின் இடது பக்கம் உள்ள சிறிய பாறையில் இன்னுமோர் கல்வெட்டும் காணப்படுகிறது.

சிலைமனையின் பின்பக்கம் உள்ள கல்வெட்டு 12 அடி உயரமான உருண்டையான ஓர் பாறையில், நான்கு வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. பொ.ஆ. 2 ஆம் நூற்றாண்டில் நாக யுவராஜாவால் இக்கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு பற்றிய விபரங்களை கல்வெட்டு ஆய்வாளர் எட்வேர்ட் முல்லர் முதன்முதலாக 1883 ஆம் ஆண்டு தனது நூலில் பதிவு செய்தார். அதன் பின்பு பேராசிரியர் பரணவிதான, மாலினி டயஸ் ஆகியோர் இக் கல்வெட்டை மீளாய்வு செய்து 2001 ஆம் ஆண்டு Inscription of Ceylon-Vol.11-Part.11 எனும் நூலில் மீள் பதிவு செய்தனர். 

இக்கல்வெட்டில் நாக யுவராஜன் இந்து மதத்தை கைவிட்டு பெளத்த மதத்தைத் தழுவியது பற்றிய செய்தி காணப்படுகிறது. கல்வெட்டின் வாசகம் பின்வருமாறு: 

“இந்த எல்லையற்ற பிரபஞ்சத்தில் புத்தருக்கு சமமாக ஒருவருமில்லை. எல்லாப் பொருட்களிலும் அவரது நிலையை அடைதல் மிகவும் எளிதன்று. சர்வஞ்ஞரான அவருக்கு மேலான ஆசிரியர் எவருமிலர். அவரே மேலான புகலிடமாவார். அவரே உலகத்தின் கண். அவர் உண்மையாகவே சுயம்பு ஆகவும் உள்ளவர். இப் பாறையிலுள்ள விகாரையில் நாக என்ற பெயருள்ள உபராஜா புத்தபெருமானிடம் சரணடைந்தார். இதனால் தவறான சமய நம்பிக்கைகளைக் கைவிட்டு நல்வழியில் ஈடுபட்டார்.”

kirintha

கல்வெட்டின்படி நாக யுவராஜன் தவறான சமய நம்பிக்கைகளைக் கைவிட்டு புத்தபெருமானிடம் சரணடைந்தான் எனக் கூறப்பட்டுள்ளது. “தவறான சமய நம்பிக்கை” என்பது இந்து சமய நம்பிக்கை என்பதையே குறிக்கின்றது. மகாவம்சம் போன்ற பாளி நூல்களிலும் இந்து சமயத்தைக் குறிப்பிடும் இடங்களில் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்படி இப்பகுதியை ஆண்ட நாக வழிபாடு செய்த சிற்றரசன் புத்த சமயத்திற்கு மதம் மாறினான் எனத் தெரிகிறது. எனவே தென்னிலங்கையில் பொ.ஆ. 2 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியிலும் அங்கிருந்த சிற்றரசர்கள் இந்துக்களாக இருந்துள்ளனர் என்பதும் உறுதியாகிறது.  

இது போன்ற வாசகம் பொறிக்கப்பட்ட கல்வெட்டொன்று திஸ்ஸமகராமையிலும் காணப்படுகிறது. நாக யுவராஜன் தவறான சமய நம்பிக்கைகளைக் கைவிட்டு புத்தபெருமானிடம் சரணடைந்தான் என அக் கல்வெட்டிலும் கூறப்பட்டுள்ளது.

temples
viharamadevi
inscriptioned rock
letters on rock
dharmachakra

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

8476 பார்வைகள்

About the Author

என். கே. எஸ். திருச்செல்வம்

கடந்த 25 வருடங்களாக இலங்கைத் தமிழர் வரலாறு, தமிழர் வழிபாட்டுப் பாரம்பரியம், பிராமிக் கல்வெட்டுகள், இந்து சமயம் என்பன தொடர்பாக ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுவரும் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம் அவர்கள் வரலாற்றுத்துறையில் இளமாணிப் பட்டத்தைப் பெற்றவர். தனது எழுத்துப்பணிக்காகப் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் இதுவரை பல உள்நாட்டு மற்றும் சர்வதேசக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளதுடன் 18 நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் ‘தென்னிலங்கையின் புராதன இந்துக்கோயில்கள்’, ‘புதையுண்டுபோன புராதன இந்துக் கோயில்கள்’, ‘இந்து சமயம் ஓர் அறிவியல் பொக்கிஷம்’, ‘யார் இந்த இராவணன்’, ‘பாரம்பரியமிக்க கதிர்காம பாத யாத்திரை’, ‘பண்டைய தமிழ் நூல்களில் சிவன்’, ‘கன்னியா: பண்டைய சைவத் தமிழரின் பாரம்பரிய அடையாளம்’, ‘தமிழரின் குமரி நாடு உண்மையா? கற்பனையா?’ போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும். இவர் தேசிய மற்றும் சர்வதேச சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகியவற்றில் இதுவரை 295 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்