தொடக்கக் குறிப்புகள்
வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்கள் 2024 டிசம்பரில் 613.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை தாயகத்திற்கு அனுப்பியுள்ளனர். இது புதிய சாதனையாகும். இதற்கு முந்தைய பதிவு செய்யப்பட்ட அதிகபட்சமான தொகை 572.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இது ஒரு மாதத்தில் இலங்கைக்கு தொழிலாளர்களினால் அனுப்பப்பட்ட அதிகபட்ச பணமாகும். அதேபோல் கடந்தாண்டு, வெளிநாட்டுத் தொழிலாளர்கள் 6.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டுக்கு அனுப்பியுள்ளார்கள். இது 2023ஆம் ஆண்டை விட 11% அதிகமாகும். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டில் மொத்தம் 312,836 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக நாட்டைவிட்டு வெளியேறினர். இது நாட்டின் வரலாற்றில் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குக் குடிபெயர்ந்த இலங்கையர்களின் அதிகபட்ச எண்ணிக்கையாகும். இலங்கையின் அந்நியச் செலாவணி வருவாயில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆனால் அவர்களின் நலன்கள் பேணப்படுகின்றதா? அவர்கள் மீதான கரிசனை இலங்கைச் சமூகத்திற்கு இருக்கின்றதா?
இக்கட்டுரை போரின் பின்னரான காலப்பகுதியில், இலங்கையின் வடக்கு – கிழக்கில் இருந்து, மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பணிப்பெண்களாகச் சென்றோரில் கவனம் குவிக்கிறது. மத்திய கிழக்கிற்கு இலங்கையில் இருந்து பணிப்பெண்கள் வேலைக்குச் செல்வது ஒரு முக்கிய பேசுபொருள். அதற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. வரலாற்று ரீதியாக வடக்கு – கிழக்கில் இருந்து அங்கு செல்வோர் மிகக் குறைவு. ஆனால் போரின் முடிவோடும் மீள்குடியேற்றத்தோடும் நாட்டின் வடக்கு – கிழக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றிருக்கிறார்கள், இன்னமும் செல்கிறார்கள். அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள், அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பு, அந்தஸ்து என்பன நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து செல்லும் பெண்களிடமிருந்து இவர்களைப் பல வழிகளில் வேறுபடுத்துகிறது. போருக்குப் பின்னரான வடக்கு – கிழக்கின் சமூக அசைவியக்கங்களில் கவனம் பெறாமல்போன இன்னொரு தொகுதியினர், இவ்வாறு மத்திய கிழக்கிற்குப் பணிப்பெண்களாகப் போனோரும் அவர்தம் குடும்ப உறுப்பினர்களும் ஆவர்.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இத்தருணத்தில் இந்தத் தொழிலாளர் கூட்டத்தின் வரலாற்றையும் முக்கியத்துவத்தையும் அலசுவது முக்கியம். தற்காலிக தொழிலாளர் இடப்பெயர்வு இலங்கையின் பொருளாதாரத்தின் மூலக்கல்லாக மாறியுள்ளது. இலங்கை பெரும்பாலும் தேயிலை, சுற்றுலா மற்றும் ஆடை உற்பத்தியுடன் தொடர்புடையதாக இருந்தாலும், 2017ஆம் ஆண்டில், அதன் மூன்று பெரிய தொழில்களின் ஒருங்கிணைந்த நிகர அந்நியச் செலாவணி வருவாய்க்கு நிகரான தொகை, வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களால் அனுப்பப்பட்டது. இலங்கையின் உழைக்கும் ஏழைகளைப் பொறுத்தவரை, இந்தப் புள்ளிவிவரம் மிகவும் நெருக்கமான சமூக – பொருளாதார யதார்த்தத்தைப் பிரதிபலிக்கிறது. தற்காலிக தொழிலாளர் இடப்பெயர்வு, ஆதிக்கம் செலுத்தும் வாழ்வாதார மற்றும் உயிர்வாழும் உத்தியாக உள்ளது. 1977ஆம் ஆண்டில் பரந்த பொருளாதாரச் சீர்திருத்தங்கள் இலங்கையின் இடப்பெயர்வுக் கொள்கையைத் தாராளமயமாக்கியதிலிருந்து, மத்திய கிழக்கின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு, உள்ளூர் வேலைக்குப் பதிலாக வருமானம் ஈட்டுவதற்கான ஒரு பொதுவான வழிமுறையாக மாறியது.
1977இல் திறந்த பொருளாதாரக் கொள்கை நடைமுறைக்கு வந்தது முதலான முதல் இரண்டு தசாப்தங்களில், மத்திய கிழக்கிற்கு இடம்பெயர்ந்த தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்கள் வீட்டு வேலை செய்யும் பெண்களாகவே இருந்தனர். இவர்கள் பொதுவாக ஏழ்மையான சிங்களப் பின்னணியைக் கொண்டவர்கள். 1997ஆம் ஆண்டளவிலான தரவுகளை நோக்கின், இலங்கையின் அனைத்துத் தற்காலிகத் தொழிலாளர் இடப்பெயர்வுகளில் 75 சதவீதமாகப் பெண்கள் இருந்தனர். 1977ஆம் ஆண்டின் சீர்திருத்தங்களைத் தொடர்ந்து இலங்கையின் ஏற்றுமதித் துறையின் பரந்த பெண்கள் மயமாக்கலுடன் இந்தப் போக்கு ஒத்துப்போகிறது. இதே காலப்பகுதியிலேயே இளம் சிங்களப் பெண்கள் அப்போதைய புதிய ஆடைத் தொழிலுக்கு மலிவு உழைப்பாளர்களாகப் பணியமர்த்தப்பட்டனர்.
விரைவான பணவீக்கம் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார வாய்ப்புகளுக்கு மத்தியில் மீன்பிடி மற்றும் விவசாயத்தில் ஆண்களின் வாழ்வாதாரம் குறைந்து வருவதால், ஆடைத் தொழிலில் வேலை செய்வதற்கான உள்ளக இடப்பெயர்வு அல்லது வீட்டு வேலையாட்களாகச் சர்வதேச இடப்பெயர்வு மூலம் பெண்கள் கிராமப்புற பொருளாதாரத்தின் புதிய வருமானம் ஈட்டுபவர்களாக அதிகரித்து வந்துள்ளனர். இந்தப் புலம்பெயர்ந்த வீட்டு வேலையாட்கள் பெரும்பாலும் சிங்களவர்கள். இலங்கை முஸ்லிம் பெண்களும் பணியாட்களாகச் சென்றாலும் இவர்கள் ஒப்பீட்டளவில் சிறிய பிரிவினரே; இருப்பினும் விகிதாசார அடிப்படையில் அதிக ஈடுபாட்டைக் கொண்டிருந்தனர். இக்காலப்பகுதியில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த தமிழ்ப் பெண்கள் தீவிரமாக வேறுபட்ட அரசியல் பொருளாதார நிலைமைகளை எதிர்கொண்டனர். உள்நாட்டுப் போர் நீடித்தமையால் அவர்களது முறையான பொருளதாரப் பங்கேற்புக் குறைவாகவே இருந்தது. 1994இல் புலம்பெயர்ந்தோரில் திறமையற்ற தொழிலாளர்கள், குறைந்த திறமையான தொழிலாளர்கள் மற்றும் வீட்டுப் பணிப்பெண்கள் ஆகியோர் 95 சதவீதமாகக் காணப்பட்டனர். அடுத்த தசாப்தத்தில் இதில் பாரிய மாற்றங்கள் நிகழவில்லை. 2016 நிலவரப்படி இத்தொகையினர் 89 சதவீதமாக இருந்தனர். இப்போதும் இந்நிலை நீடிக்கிறது.
இலங்கை ‘வீட்டுப் பணிப்பெண்களின் நாடாக’ மாறியுள்ளது என்ற பொதுவான உணர்வு நீடிக்கிறது. தற்காலிகத் தொழிலாளர் இடப்பெயர்வின் பொருளாதார முக்கியத்துவம் கொள்கைத் தளத்தில் அல்லது ஊடகங்களில் அரிதாகவே விவாதிக்கப்படுகிறது. புலம்பெயர்ந்த பெண் தொழிலாளர்கள் நடத்தப்படும் விதம், பின்தங்கிய குடும்பங்களுக்கு ஏற்படும் விளைவுகள் குறித்து பொதுமக்களிடையே ஒரு தெளிவான அக்கறை இருக்கிறது என்பது போன்ற தோற்றம் காட்டப்படுகிறது. இந்தக் கவலை பெரும்பாலும் புலம்பெயர்ந்த வீட்டுப் பணியாளர்கள் தங்கள் குழந்தைகளை ‘கைவிடுவதன்’ மூலம் அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பு மூலம் குடும்பங்களை ‘உடைப்பதன்’ மூலம், தாய்வழிப் பொறுப்புகளைத் தவிர்ப்பது குறித்த ஆணாதிக்க அமைதியின்மையாக வெளிப்படுத்தப்படுகிறது. அதற்கப்பாலான பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வதென்பது உரையாடலாக வெளிப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது.
திறந்த பொருளாதாரமும் மலிவு உழைப்பாளர்களும்
1980களிலும் 90களிலும் ஏன் ஏராளமானோர் வேலைதேடி இலங்கையைவிட்டு இடம்பெயர்ந்தார்கள்? என்ற வினா முக்கியமானது. 1980 முதல் 2010 வரையான மூன்று தசாப்தகால இலங்கையின் கதையை போரும் இனமுரண்பாடும் தன்வயப்படுத்தியுள்ளன. இதனால் அதேகாலப்பகுதியில் நிகழ்ந்த முக்கியமான சமூகப் பொருளாதார அசைவியக்கங்கள் கண்டுகொள்ளப்படவில்லை. இக்காலப்பகுதியில் இலங்கையின் தற்காலிக தொழிலாளர் இடப்பெயர்வின் மையத்தன்மையை சீரற்ற வளர்ச்சியினால் வரலாற்று ரீதியாக உருவாக்கப்பட்ட அரசியல், பொருளாதார கட்டமைப்புகளின் விளைவாக சூழ்நிலைப்படுத்துவது அவசியம். இலங்கையின் பொருளாதார நிலப்பரப்பு ஏகாதிபத்தியத்தின் கட்டமைப்புகளால் மாற்றப்பட்டுள்ளது. அதற்குள் உள்ளூர் வர்க்க அமைப்புகளும், கீழ்ப்படிதல் என்ற தர்க்கமும் வடிவம் பெற்றுள்ளன. தேசியவாதத்தின் பிந்தைய கொலனித்துவ வெளிப்பாடுகளின் கீழ் சாதி, இன மற்றும் பாலின உறவுகளின் பொருளாதார உட்கருத்து, ஒரு சகாப்தத்திலிருந்து மற்றொரு சகாப்தத்திற்கு, சீரற்ற வளர்ச்சிச் செயல்முறைகள் பாதுகாக்கப்படுவதை மேற்பார்வையிட்டுள்ளது. இது 1977இல் இயற்றப்பட்ட புதிய தாராளமய சீர்திருத்தங்களால் மோசமடைந்தது. திறந்த பொருளாதாரம் ஏற்கனவே உள்ள இன மற்றும் பாலினப் பாகுபாட்டை மூலதனக் குவிப்பின் குறிப்பிட்ட வழிகளில் வழிநடத்தியது. வளர்ச்சியின் சீரற்ற தன்மையையும், குறிப்பிட்ட மக்கள் தொகையைத் தொடந்து விலக்கிவைப்பதையும் உறுதிப்படுத்தி நிலைநிறுத்தியது, அது பின்னர் நிலையாகிவிட்டது. இந்தப் புதிய தாராளமய மறுசீரமைப்பின் பின்னணியில்தான், புவியியல் ரீதியாகவும் மக்கள்தொகை ரீதியாகவும் வளர்ச்சியிலிருந்து விலக்கப்பட்ட மக்களுக்கான வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான வாழ்வாதார உத்திகளில் ஒன்றாக தற்காலிக தொழிலாளர் இடப்பெயர்வு வேரூன்றியது.

‘திறந்த பொருளாதாரத்தில்’, பொருளாதார வாழ்க்கையின் மறுசீரமைப்பு, மத்திய கிழக்கிற்கான தற்காலிக தொழிலாளர் இடப்பெயர்வின் மூலமே சாத்தியப்பட்டது. தொழிலாளர் இடப்பெயர்வை தாராளமயமாக்குவதோடு மட்டுமல்லாமல், ஜெயவர்த்தன அரசாங்கம் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரிவின் பங்கை (ஒரு வருடத்திற்கு முன்பு பண்டாரநாயக்கவால் நிறுவப்பட்டது) தனியார்மயமாக்கியது. இது ஆட்சேர்ப்பு முகவர் நிறுவனங்களை, தளர்வாக ஒழுங்குபடுத்தப்பட்ட இடப்பெயர்வு நடைமுறைகளுக்குள் பெருக அனுமதித்தது. உள்ளூர் மற்றும் பிராந்தியச் சூழல்கள் ஆட்சேர்ப்பை ஓர் இலாபகரமான வணிகமாக மாற்றச் சதி செய்தன. பாரசீக வளைகுடாவில் எண்ணெய் வளம் மிகப்பெரிய உபரிகளை உருவாக்கியது. உட்கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் பணக்கார மத்திய கிழக்குக் குடும்பங்களினது வீட்டு வேலைப்பணியாளர் தேவை என்பன புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான தேவையை அதிகரித்தன. அதே நேரத்தில், கிராமப்புற வாழ்வாதாரங்கள் குறைந்து வருவதும், புதிய தாராளமயக் குவிப்பு முறைகளின் கீழ் உருவாக்கப்பட்ட வேலையின்மையும் இலங்கை மக்கள்தொகையில் பெரும்பகுதியை அத்தகைய தேவையைப் பூர்த்திசெய்ய முன்வர வைத்தது. குறிப்பாக பெண் தொழிலாளர்களை அனுப்பும் பிற நாடுகளில், பெண்களின் இடப்பெயர்வுக்கு ஏற்படுத்தப்பட்ட தடையால் உருவாக்கப்பட்ட அதிகப்படியான தேவை காரணமாக, இலங்கையிலிருந்து பணிப்பெண்களாகச் செல்ல விரும்பியோருக்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்தன.
இதேவேளை அந்நியச் செலாவணியை ஈட்டித்தருவோராக இந்தப் பணியாளர்கள் உள்ளமையால் அவர்களின் கட்டற்ற வெளியேற்றத்தை அரசாங்கம் அனுமதித்தது. அவர்களை ஒழுங்குமுறைப்படுத்தவோ, அவர்களுக்கான குறைந்தபட்சப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவோ அரசாங்கம் முனையவில்லை. மத்திய கிழக்கின் ஒப்பந்த வேலைவாய்ப்பினது நன்கு ஆவணப்படுத்தப்பட்ட உடல் மற்றும் உளவியல் கஷ்டங்களுடன் இணைந்து, தற்காலிக தொழிலாளர் இடப்பெயர்வு என்பது விருப்பம் என்பதற்காக அல்லாமல், தேவையை மையமாகக் கொண்ட ஓர் உயிர்வாழும் உத்தியாக உருவெடுத்தது என்பதே உண்மை. அதே நேரத்தில், அதிகரித்து வரும் தொழிலாளர் இடப்பெயர்வால் அரசே பெரிதும் பயனடைந்தது. தற்காலிகத் தொழிலாளர் இடப்பெயர்வு, உள்ளூர் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான அழுத்தத்தைத் தவிர்த்து, அரசியல் மற்றும் பொருளாதாரப் பதற்றங்களைத் தடுக்கிறது. அதேநேரத்தில் அந்நியச் செலாவணியைப் பெற்றுக்கொள்ளும் இலகுவான வழியாகவும் இருக்கிறது. சீரற்ற வளர்ச்சியின் முரண்பாடுகளை திறம்பட ஒத்திவைப்பதன் மூலம், தற்காலிகத் தொழிலாளர் இடப்பெயர்வின் கட்டமைப்பு இயக்கவியல், பொருளாதாரத்தில் வேறு இடங்களில் கீழ்ப்படிதல் மூலம் குவிப்புகள் தொடர்வதைப் பாதுகாத்துள்ளது. அதே நேரத்தில் வணிகர்கள் செல்வத்தைக் குவிப்பதற்கான புதிய வாய்ப்புகளையும் உருவாக்கியது.
சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கையில் அதிகரித்து வரும் முக்கிய அம்சமாக தொழிலாளர் மற்றும் அரசியல் அகதிகள் ஆகிய இரண்டு பிரிவினரின் இடப்பெயர்வு இருந்து வருகிறது. குறிப்பாக, 1970களின் பிற்பகுதி மற்றும் 1980களின் முற்பகுதி ஆகிய இரண்டு காலப்பகுதிகளிலும், இலங்கையர்கள், மலிவு உழைப்புக்கான வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்திசெய்ய அல்லது மேற்கு நாடுகளில் மீள்குடியேற்றம் செய்ய பாரசீக வளைகுடாவிற்குத் தற்காலிகமாக இடம்பெயர்ந்தனர். இந்த இணையான இடப்பெயர்வுகள் தனித்துவமான இனப் பண்புகளையும் கொண்டுள்ளன. பெரும்பாலான அகதிகள் தீவின் தமிழ்ச் சிறுபான்மையினரிடமிருந்து வந்தவர்கள். அதேநேரத்தில் தொழிலாளராகப் புலம்பெயர்ந்தோர் வரலாற்று ரீதியாகச் சிங்களவர்கள் அல்லது – குறிப்பாக மக்கள்தொகை அளவு தொடர்பாக – முஸ்லிம் பின்னணியைக் கொண்டவர்கள். தற்காலிகத் தொழிலாளர் புலம்பெயர்வுச் செயல்முறைகளில் – தமிழர்களின் சமீபத்திய வருகை உட்பட – இந்த இரண்டு வகைக் குடியேற்றங்களுக்குள்ளும் உள்ள மக்கள்தொகை மாற்றங்களை ஆய்வு செய்வது, இலங்கைக் குடியேற்றத்தின் மாறிவரும் சமூக மற்றும் பொருளாதார இயக்கவியலின் முக்கிய பிரதிபலிப்பை வழங்கும்.
1970களின் இறுதியில் இருந்து 1990கள் வரையான காலப்பகுதியில் மத்திய கிழக்கிற்குப் பணிக்குச் சென்றோரின் வாழ்வியலை, அவர்தம் துயரத்தை வரன்முறையாகப் பதிவுசெய்த புத்தகம் ‘Labour Migration to the Middle East: From Sri Lanka to the Gulf’ ஆகும். நெதர்லாந்தில் உள்ள லெயிடன் பல்கழைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகத்தோடு 1980 முதல் 1988 வரையான எட்டு ஆண்டு காலத்தில் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில் எழுதப்பட்டதே இப்புத்தகம். இது பின்வரும் குறிப்போடு நிறைவு செய்யப்படுகிறது:
“தொழிலாளர் இடப்பெயர்வு, குடும்பத்தில் பின்தங்கியவர்களின் மீது விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஆராய்ச்சித் தரவுகள் காட்டுவது போல், உறவினர் ஒருவர் வெளியேறுவது பெரும்பாலும் வீட்டு அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துகிறது. தொழிலாளர் இடப்பெயர்வின் நீண்டகால விளைவுகளில் வீட்டு அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் ஒரு முக்கிய அம்சமாகும். ஒருபுறம், இடப்பெயர்வு என்பது பிரிவினை மற்றும் விவாகரத்திலிருந்து எழும் பிரச்சினைகளுக்கு ஒரு நிவாரணமாகவும் தீர்வாகவும் உள்ளது. மறுபுறம், இடப்பெயர்வுக்கான வாய்ப்பு, இடப்பெயர்வுக்குப்பின் ஏற்படும் விளைவுகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் இல்லாதது ஆகியவை திருமண நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது. இடப்பெயர்வின் வரையறுக்கப்பட்ட காலத்திலும், அதற்கு ஒரு வருடம் முன்பும் பின்பும், திருமண முறிவு ஏற்படும் அபாயம், இடப்பெயர்வுக்கு முந்தைய அல்லது அதற்குப் பிந்தைய வேறு எந்த ஆண்டையும்விட மிக அதிகமாக உள்ளது. அனைத்து விவாகரத்துகள் மற்றும் பிரிவுகளில் 34%க்கும் அதிகமானவை புலம்பெயர்ந்தோர் இல்லாத நான்கு ஆண்டுகளுக்கும் குறைவான இந்தக் காலகட்டத்தில் நிகழ்கின்றன. இது கிட்டத்தட்ட எப்போதும் பெண் புலம்பெயர்ந்தவர்களைப் பற்றியது. இது இலங்கைச் சமூகத்தில் பெண்களின் பலவீனமான சமூக மற்றும் பொருளாதார நிலையை வெளிப்படுத்துகிறது.
தொழிலாளர் இடப்பெயர்வு, தொழிலாளர் ஏற்றுமதிச் சமூகங்களில் ஏற்படுத்தும் சமூக – கலாசார தாக்கம் குறித்த கேள்வியும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இலங்கையைப் பொறுத்தவரை, நாடு பிற தீவிரமான சமூக மற்றும் கலாசார மாற்றங்களுக்கு உள்ளாகி வந்தபோது இடப்பெயர்வு தொடங்கியது என்பதால், இடப்பெயர்வுச் செயல்முறையால் ஏற்படும் விளைவுகளை அம்பலப்படுத்துவது மிகவும் கடினம். இலங்கையில் தொழிலாளர் இடப்பெயர்வு ஒரு சமூக நிகழ்வாக மாறியுள்ளது என்பது உறுதி, அதை இனி புறக்கணிக்க முடியாது. இது தெருவில் உள்ள மனிதனின் அன்றாட உரையாடலில் வளர்கிறது, வானொலியில், தொலைக்காட்சியில் மற்றும் பத்திரிகைகளில் விவாதிக்கப்படுகிறது, சர்வதேச விமான நிலையங்களில் காத்திருக்கும் பயணிகளின் அமைப்பைத் தீர்மானிக்கிறது, அன்றாட வாழ்க்கையின் வணிகமயமாக்கலை ஊக்குவிக்கிறது, இனக்குழுக்களுக்கு இடையிலான உறவுகளிலும் பாரம்பரியமாக அடுக்குப்படுத்தப்பட்ட கலாசார முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது, மேலும் கல்வி மற்றும் மதம் போன்ற நிறுவனங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சுருக்கமாக, தொழிலாளர் இடப்பெயர்வு இலங்கைச் சமூகத்தில், நகரங்களில் மட்டுமல்லாமல், கிராமப்புறங்களிலும் சமூக மாற்றத்தின் செயல்முறையைப் பாதிக்கிறது. இது, தொழிலாளர் இடப்பெயர்வு இலங்கைச் சமூகத்தில் எந்தளவிற்கு நிரந்தரத் தடயங்களை விட்டுச் சென்றுள்ளது என்ற கேள்வியை எழுப்புகிறது.”
சுருக்கமாக, 1977ஆம் ஆண்டின் புதிய தாராளமயத் திருப்பமும் 1983ஆம் ஆண்டின் முழு அளவிலான உள்நாட்டுப் போரின் தொடக்கமும், முறையே தொழிலாளர் மற்றும் அரசியல் இடப்பெயர்வுக்கு வினையூக்கிகளாகச் செயற்பட்டன. அன்றிலிருந்து, இடப்பெயர்வுக்கான இரண்டு வழிகளிலிருந்தும் உருவாகும் மூலதனப் பரிமாற்றங்கள், பிராந்திய மற்றும் தேசியச் சூழல்களில் பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரங்களாக நீடித்து வருகின்றன. இறக்குமதிகள் ஏற்றுமதியைவிட மாறாமல் அதிகமாக இருப்பதால், பணம் அனுப்பும் வருமானம் வெளிநாட்டு இருப்புகளின் முக்கிய ஆதாரமாகவும், இலங்கையின் சாதகமற்ற செலுத்துமதிச் சமநிலைச் சூழ்நிலைக்கு, பரவலாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு பெரிய பொருளாதாரத் தீர்வாகவும் மாறியுள்ளது. பணம் அனுப்பும் தொகை எங்கும் நிறைந்திருந்தாலும், இடப்பெயர்வின் மக்கள்தொகை காலப்போக்கில் கணிசமாக மாறிவிட்டது. சந்தேகத்திற்கு இடமின்றி, புலம்பெயர்ந்த தமிழரின் பெருக்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய மூலதனப் பரிமாற்றம் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஆகும். மறுபுறம், தற்காலிகத் தொழிலாளராகப் புலம்பெயர்ந்தோர் வரலாற்று ரீதியாக உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே உள்ள சிங்கள – பௌத்த, முஸ்லிம் மற்றும் சிங்கள – கத்தோலிக்கச் சமூகங்களிலிருந்து தோன்றியவர்கள் ஆவர். மத்திய கிழக்கில் உள்ள முதலாளிகள் இணக்கமான மதச் சார்புடைய தொழிலாளர்களைக் கோருவதால், கொழும்பில் வசிக்கும் மற்றைய இலங்கையர்களைவிட முஸ்லிம்கள் நான்கு மடங்கு அதிகமாகக் குடியேற வாய்ப்புகள் அமைந்தன.
சமீபகாலமாக, உள்நாட்டுப் போரின் விளைவுகள் காரணமாக, வழக்கமான தற்காலிக தொழிலாளர் இடப்பெயர்வுகளிலிருந்து விலக்கப்பட்டிருந்த தமிழர்களும், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அதிகரித்து வரும் எண்ணிக்கையில் இணையத் தொடங்கியுள்ளனர். போர் முடிவடைந்த உடனடி ஆண்டுகளில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள முக்கிய நகர்ப்புற மையங்களும் – இந்தச் சமூகங்களுக்கு அரசாங்கப் பயிற்சி மற்றும் நிர்வாக ரீதியான தொடர்பு இல்லாத போதிலும் – புலப்பெயர்வு வெளியேற்றத்தில் ஆண்டுக்கு ஆண்டு மிகப்பெரிய அதிகரிப்பைக் காட்டின.
குரல்களின் வலி
இந்தப் பின்புலத்தில் நாட்டின் வடக்கு – கிழக்கில் இருந்து வீட்டுப் பணிப்பெண்களாக வெளியேறியவர்களின் குரல்கள் முக்கியமானவை. அக்குரல்களே இங்கு ஒலிக்கின்றன. இந்த நேர்காணல்கள் 2015 முதல் 2024 வரையான பத்தாண்டுக் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் விளைவிலானவை. மத்திய கிழக்கிற்கு வேலைக்குப்போன பெண்களின் சமூகப் பொருளாதார நிலையை ஆராயும்போது அவர்களின் குடும்பங்கள் பெரும்பாலும் கைவிடப்பட்ட குடும்பங்கள், சாதிய ரீதியான ஒடுக்குமுறைக்கு ஆளான குடும்பங்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் ஆகவே காணப்பட்டன. இவை ஒரு பொதுவான இழையாக பத்தாண்டுகால ஆய்வில் வெளிப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கில் இருந்து திரும்பியோரிடம் ஏன் மத்திய கிழக்கிற்குப் பணிப்பெண்ணாக வேலைக்குச் செல்ல முடிவெடுத்தீர்கள் என்று கேட்டபோது, பெரும்பாலானோரிடம் இருந்து வந்த பதில்கள் ஒரே மாதிரியானவையாக இருந்தன. சில உதாரணங்கள்:
“போரினால் இடம்பெயர்ந்து இறுதியாக எங்கள் சொந்த நிலங்களுக்குத் திரும்பியபோது எம்மிடம் எதுவும் இருக்கவில்லை. தொழில்வாய்ப்புகள் இல்லை, விவசாயம் செய்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக இருந்தன. இருந்த சிறுதுண்டு நிலத்தில் கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லை. குழந்தைகளைக் கவனிக்க வேண்டியிருந்தது. இதனாலேயே எனது அம்மாவிடம் பிள்ளைகளைக் கொடுத்துவிட்டு மத்திய கிழக்குக்குச் சென்றேன்.”
“கடைசிச் சண்டையில எங்கட ஆக்கள் நிறையப்பேர் செத்துப் போயிட்டினம். கனகாலத்துக்குப் பிறகுதான் சொந்த இடத்துக்கு வரவிட்டவ. கனகாலம் காம்பிலேயே போயிட்டுது. திரும்பி வந்த எங்களுக்கு ஒண்டும் இல்லை. நானும் அக்காவும் எங்கட பிள்ளையளோட வந்தனாங்கள். எங்கட கணவர்மார் சண்டையில இறந்திட்டினம். நான் என்ர பிள்ளையளை அக்காட்ட குடுத்திட்டு வெளிநாட்டுக்குப் போனனான்.”
“இந்தச் சமூகத்தில் அந்தஸ்து இல்லாத ஆக்கள் நாங்கள். எங்கட அந்தஸ்துக்காக நாங்கள் போராட வேண்டும். நாங்கள் எல்லாத்திலேயும் ஒதுக்கப்பட்டோம். காசு இருந்தா மரியாதை தானா வரும். நாங்கள் விடுதலைக்காகப் போராடின சமூகம் தான். ஆனாலும் நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் மதிக்கிறேல்ல. காசு இருந்தாத்தான் மரியாதை. என்ர பிள்ளையள் மரியாதையோட வாழவேணுமெண்டுதான் நான் போனனான்.”
இவ்வாறு தங்கள் தெரிவுக்கான கதைகளைக் கூறியவர்களிடம், இந்த முடிவு அவர்களுக்கான பொருளாதாரப் பலத்தைத் தருகின்றதா என்ற வினாவையும் கேட்டேன். அதற்கான அவர்களின் பதில்கள் கலவையாக இருந்தன. அனைவரும் தமது தெரிவு தமது பொருளாதார நிலையை மாற்றியுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டனர். ஆனாலும் தமது தெரிவின் பின்னால் இருந்த சிக்கல்களையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. மகளை அனுப்பிவிட்டு பேரக்குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் அம்மாக்கள் சொல்லிய விடயங்கள் இங்கு முக்கியமானவை.
“எங்களுக்குச் சரியான கஷ்டம், ஆம்பிளையள் யாரும் இல்லை. என்ர மகள் அனுப்புற காசில தான எங்கட சீவியம் போகுது. நாங்க பத்துப்பேர். இரண்டு பேருக்கு துப்பரவா ஏலாது. அவள் அனுப்புற காசு, மாதச் செலவுக்குத்தான் காணும். மிச்சம் பிடிக்க இயலாது.”
“பிள்ளையள நான்தான் பாக்கிறன். மகளுன்ர புருசன், வேற கலியாணம் கட்டிக்கொண்டு போயிட்டார். இது பெரிய இடியாய் விழுந்திட்டுது. மகள் போய் 5 வருசம், நாங்கள் இப்ப வீடு கட்டிறம். ஆனா துணை இல்லை. பொம்பிளப் பிள்ளையள் வளந்திட்டுதுகள். அம்மா இல்லாம வளக்கிறது கஷ்டம்.”
இதேவேளை மத்திய கிழக்கில் பணி முடித்துத் திரும்பிவந்த பெண்களிடம் அவர்கள் திரும்பி வந்தபோது, அவர்களின் மனநிலை எப்படி இருந்தது என்று கேட்டேன்:
“ஐந்து வருடங்கள் கஷ்டப்பட்டு திரும்பி வந்தபோது எங்களுக்கு ஒரு கல்வீடு இருந்திச்சு. அது எங்களுக்கு கனகாலக் கனவு. இண்டைக்கு அந்தக் கனவு நிறைவேறி இருக்கிறது. எங்களது தலைக்கு மேலே ஒரு கூரை வேணுமெண்டுதான் வெளிநாட்டில கஷ்டப்பட்டனான். அந்தப் பலன் கிடைச்சிருக்கு. அது பெரிய ஆறுதல், சந்தோசம்.”
“ஆறுவருசம் கழித்து வீட்டுக்கு வரேக்க, நிறைய எதிர்பார்ப்போட வந்தனான். பொருளாதார ரீதியா நாங்கள் முன்னேறியிருக்கிறம். வீட்டில, டிவி, பிரிச் எல்லாம் இருக்கு. ஆனா பிள்ளையள் படிக்கேல்ல. அவையளை வீட்டில சரியாப் பாக்கேல்ல. இப்ப அவையளின்ட எதிர்காலத்தை நினைச்சாத்தான் பயமாய் கிடக்கு. யுனிவர்சிட்டி கிடைக்காட்டி பிறைவேற்றா படிக்க நிறைய காசு வேணும். திரும்பி வேலைக்குப் போகலாம் எண்டு யோசிக்கிறன்.”
“நாங்கள் பொருளாதார ரீதியாக நல்லா இருக்கிறம். எங்கள் அக்கம் பக்கத்தினரை விட நல்லா இருக்கிறம். ஆனாலும் சமூகத்தில மதிப்பு என்றது இன்னமும் வரேல்ல. பொருளாதார பலத்தை சாதி மேவுது. ஆனா, முந்தி மாதிரி இல்லை. எங்களது பொருளாதார பலத்தால நாங்கள் விரும்பியதை செய்யுறதுக்கு இயலுமாக் கிடக்கு.”
இந்தக் குரல்கள் ஏராளமான விடயங்களைத் தங்கள் சுருக்கமான வசனங்களில் பிரதிபலிக்கின்றன. இந்தக் குரல்களில் தொனிக்கின்ற வலிகளுக்கு அப்பால் இவை சமூக ரீதியாக எழுப்புகின்ற வினாக்கள் முக்கியமானவை. குறிப்பாக விடுதலைக்காக மூன்று தசாப்தகாலம் போராடிய ஒரு சமூகம் தனது சக மனிதர்களை எவ்வாறு நடத்துகிறது என்பதை இக்குரல்கள் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன. இது எங்களது கவனிப்பைக் கோரி நிற்கிறது.
நிறைவுக் குறிப்புகள்
இலங்கையின் தற்காலிக தொழிலாளர் இடப்பெயர்வின் அளவைக் கருத்தில் கொண்டு, குறிப்பாக மத்திய கிழக்கில் காணப்படும் மோசமான வேலை நிலைமைகள் குறித்த பொதுவான விழிப்புணர்வைக் கருத்தில் கொண்டு, கவனிக்கப்பட வேண்டிய மிக உடனடிக் கேள்விகளில் ஒன்று, ஏன் இவ்வளவு மக்கள் இடம்பெயரத் தேர்வு செய்கிறார்கள்? என்பதுதான்.
நவதாராளவாத பொருளாதார மறுசீரமைப்பு பாரம்பரிய வாழ்வாதாரங்களை சீர்குலைத்துள்ளது. அதேநேரத்தில் குறிப்பிட்ட வகைத் தொழிலாளர்களை, ஏற்றுமதித் தொழில்களில், குறுகிய மற்றும் சீரழிந்த வேலை வாய்ப்புகளுக்குள் திருப்பிவிட்டுள்ளது. இதன் விளைவாக வேலையின்மை, குறிப்பாக கிராமப்புறப் பொருளாதாரத்தில், கட்டாய இடப்பெயர்வு நிலைமைகள் தூண்டப்படுகின்றன. புலம்பெயர்ந்தோரின் அபிலாஷைகள் இந்தப் பகுப்பாய்வை உறுதிப்படுத்துகின்றன. ஏனெனில் ஆய்வு செய்யப்பட்ட ஒவ்வொரு புலம்பெயர்ந்த சமூகங்களிலும் தேடப்படும் ‘நல்ல வாழ்க்கை’ ஒரு நிலையான வாழ்வாதாரத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்வதைப் பிரதிபலித்தது. இருப்பினும், இடப்பெயர்வின் விளைவுகள், பொருளாதார வாழ்வாதாரத்தை வளர்க்கும் அதேவேளையில், பணம் அனுப்பும் ஓட்டங்களைத் தக்கவைக்க வெளிநாட்டு வேலையைச் சார்ந்திருப்பதையும் மையமாகக் கொண்டது. தாயகம் திரும்பி நல்லவாழ்க்கை வாழ்தல் என்ற இலட்சியத்தையும் நியாயமான ஏக்கத்தையும், நடைமுறையில் உள்ள வளர்ச்சியின்மை குறுக்கிட்டு, கிட்டத்தட்ட இல்லாமல் செய்துள்ளது. சீரற்ற வளர்ச்சியானது, கட்டாய இடப்பெயர்விற்கான ஒரு கட்டமைப்பு உந்துதலைக் குறிக்கும் அதேவேளையில், பல்வேறு புலம்பெயர்ந்த சமூகங்களில் இடப்பெயர்வு விளைவுகளில் உள்ள மாறுபாடுகள், இடப்பெயர்வு – வளர்ச்சியின் அனுபவங்கள் ஒரே மாதிரியானவை அல்ல என்பதையும், கட்டமைப்பு – நிலைப் பகுப்பாய்விலிருந்து மட்டும் போதுமான அளவு பகுப்பாய்வைச் செய்ய முடியாது என்பதையும் வலியுறுத்துகின்றது.

இலங்கையின் உழைக்கும் ஏழைகள் சமூகமயமாக்கப்பட்டதன் தனித்துவமான பாலின அடிப்படையிலான வழிமுறைகளைக் கருத்தில் கொண்டு, இடப்பெயர்வு எவ்வாறு தனிநபர்களுக்கு இந்தப் பாலின அளவுருக்களுக்குள் அந்தஸ்தை மீட்டெடுக்க வாய்ப்புகளை வழங்குகிறது என்பதை விரிவாக ஆய்வு செய்வது தேவையானது. இலங்கை முழுவதும், உழைப்பின் பரவலான மதிப்பிழப்பாக மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழிகளில் பொதிந்துள்ள சுய மதிப்புக்கான பாலின அடிப்படையிலான கதையாடலாக சூழ்நிலைப்படுத்தப்படுகிறது. இது சமூக எதிர்பார்ப்புகளுடன், சீரமைப்பில் தனிப்பட்ட அனுபவங்களை நிர்வகிக்கும் திறனையும், ‘வெற்றியின்’ பொருள் குறிப்பான்களை வெளிப்படுத்த பணம் அனுப்புவதை வெளிப்படையாக நுகரும் சாத்தியத்தையும் அடையாளம் காட்டுகிறது. வெளிப்படையான பணம் அனுப்பும் பயன்பாடு வீணானது அல்லது ‘உற்பத்தி செய்யாதது’ என்று விளக்கப்படுவதில்லை. இது, உழைப்பை மதிப்பிழக்கச் செய்யும் நுகர்வோர் வாதத்தை மதிக்கும் ஒரு சந்தைச் சமூகம், பொருள் மற்றும் தார்மீக மதிப்பை இழப்பதன் ஒரு தீவிரமான பிரதிபலிப்பாகும்.
இருப்பினும், இத்தகைய நுகர்வு பற்றிய பகட்டுத்தனம், தற்காலிக தொழிலாளர் இடப்பெயர்வின் அற்ப விளைவுகளையே பொய்யாக்கும் ‘வெற்றி’ என்ற தவறான பாசாங்குக்குச் சமமானது. இதுவே செழிப்பு என்ற முகத்திரையைப் பின்பற்ற விரும்பும் வருங்காலப் புலம்பெயர்ந்தோரை தவறாக வழிநடத்துகிறது. அவற்றின் சமூகப் பண்புகளைப் பொருட்படுத்தாமல், இந்த வெளிப்படையான நுகர்வு வடிவங்கள், பணம் அனுப்பும் மூலதனத்தின் பெரிய பொருளாதாரத் தாக்கங்களைப் பாதிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
வீட்டுக்குப் பணம் அனுப்புதல் மற்றும் அந்நியச் செலாவணி வருவாய் ஆகியவற்றின் இரண்டு கூறுகளின் கூட்டுத்தொகையான பணம் அனுப்புதல் மூலதனம், சீரற்ற வளர்ச்சியின் செயல்முறையை அனுமதிக்கிறது. இல்லையெனில் அது நிலைத்திருக்க முடியாது. வீட்டுவசதி, கல்வி, கடன் திருப்பிச் செலுத்துதல் அல்லது நிலைப் பொருட்கள் எனச் செய்யப்படும் குறிப்பிடத்தக்க செலவுகள் ஆகியன வருமானத்தை வெளிநாடுகளுக்கு (இறக்குமதிகள் மூலம்) அல்லது உள்ளூர் மூலதனத்திற்கு மறுபகிர்வு செய்யும் போக்கைக் கொண்டுள்ளன.
ஒரு காலத்தில் தெற்காசியாவின் சிறந்த பொதுச் சேவைகளாக இருந்த இலங்கையின் கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்புத் துறையின் நிதி திரட்டுதல் மற்றும் அதைத் தொடர்ந்த தனியார்மயமாக்கல், இந்த மறுபகிர்வு விளைவை அதிகரிக்கின்றன. இது புலம்பெயர்ந்தோருக்கு மட்டுமே வாழ்வாதாரத்தை வழங்கும் அதேவேளையில், பணம் அனுப்புதல் பொருளாதாரத்திற்கான வெளிநாட்டு மூலதனத்தின் ஒரு அற்புதமான ஊசியாகவும் திரட்டப்படுகிறது. முதன்மையாக நன்மை பயக்கும் என்பதற்குப் பதிலாக, பணம் அனுப்புதல் சார்ந்த நாணயத்தின் நுண் பொருளாதார விளைவுகளை மிகவும் நுணுக்கமாகக் கருத்தில் கொள்வது முக்கியம். இலங்கையின் போருக்குப் பிந்தைய வளர்ச்சிக் கொள்கையை ஆராய்வது இந்த முன்கணிப்பை மேலும்உறுதிப்படுத்துகிறது. ஏனெனில் பணம் அனுப்புதல் சார்ந்த செலவினம் நிலையானதாகத் தோன்றினாலும் ஆழமான முரண்பாடுகளைக் கொண்ட சீரற்ற மற்றும் உள்ளடக்காத வளர்ச்சியின் மீதான சார்பையும் வலுப்படுத்துகிறது. புலம்பெயர்ந்தோரில் திரும்பி வருபவர்கள், சில நேரங்களில் தங்களிடம் இல்லாத செல்வத்தை வெளிப்படுத்துவது போல, இலங்கையும் உண்மையில் இல்லாத ஒரு வளர்ச்சியை முன்வைக்கிறது.
தற்காலிகத் தொழிலாளர் இடப்பெயர்வு மற்றும் பணம் அனுப்பும் மூலதனத்தின் மீதான இலங்கையின் வளர்ந்து வரும் சார்பு, ஒரு பொருளாதார சஞ்சீவியை அளிக்கவில்லை; மாறாக இடப்பெயர்வு – வளர்ச்சியின்மை என்ற சிக்கலான செயல்முறையை வேரூன்றியுள்ளது என்பதை இது நிரூபிக்கிறது.
போருக்குப் பிந்தைய இலங்கையின் வடக்கு – கிழக்கில் வாழும் புறமொதுக்கப்பட்ட குழுக்களில், மத்திய கிழக்கில் பணிபுரிவோரும் அவர்தம் குடும்பங்களும் முக்கியமானவர்கள். ஆனால் அவர்கள் தொடர்ச்சியான ஒதுக்கலுக்கு ஆளாகிறார்கள். இந்தக் குடும்பங்களின் சிதைவு ஏற்படுத்தியுள்ள சமூகத் தாக்கமும் அதன் நீண்டகால சமூகவியல் நெருக்கடிகளும் விரிவான உரையாடலையும் ஆய்வையும் வேண்டி நிற்கின்றன.