வட மாகாணத்தில் இடி - மின்னல் நிகழ்வுகள்
Arts
10 நிமிட வாசிப்பு

வட மாகாணத்தில் இடி – மின்னல் நிகழ்வுகள்

October 3, 2024 | Ezhuna

ஒரு பிரதேசத்தின் பல்வேறு விடயங்களை கட்டமைப்பதில் அந்தப் பிரதேசத்தின் இயற்கை அம்சங்கள் மிகப்பெரிய பங்கினை வழங்குகின்றன. குறிப்பாக ஒரு பிரதேசத்தின் காலநிலை சார்ந்த அம்சங்கள் அந்தப் பிரதேசத்தினுடைய இயற்கையையும் அந்த பிரதேசத்திற்குரிய பொருளாதார, சமூக, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களையும் கட்டமைப்பதில் மிகப்பெரிய பங்கினை வழங்குகின்றது. அந்த அடிப்படையில் வடக்கு மாகாணத்தினுடைய பல்வேறு வகைப்பட்ட விடயங்களை தீர்மானித்ததில் வடக்கு மாகாணத்தினுடைய காலநிலை மிகப்பெரிய செல்வாக்கினை பெற்றிருக்கின்றது. வடக்கு மாகாணத்தினுடைய காலநிலை சார்ந்த பாரம்பரிய அறிவியல் விடயங்களையும் நவீன விஞ்ஞான ரீதியிலான ஆய்வு சார்ந்த விடயங்களையும் உள்ளடக்கியதாக வடக்கு மாகாணத்தினுடைய காலநிலைப் பண்புகளை முழுமைப்படுத்தி வெளியிடுவதாக ‘பிராந்திய காலநிலையியல் : வடக்குப் பிராந்தியம், இலங்கை‘ எனும் தொடர் அமைகின்றது.

அறிமுகம் 

அனர்த்தம் என்பது இயற்கை மற்றும் மானிடவியற் காரணிகளினால் தூண்டப்படுகின்றது. அது உலகின் ஒட்டுமொத்த உயிர்ச்சூழலுக்கும், குறிப்பாக மனித சமூகத்திற்கு உடல், உள, சொத்துகள் மற்றும் சுற்றுச் சூழலியல் ரீதியாக இடர்பாடுகளினை ஏற்படுத்துகின்ற அனைத்து நிகழ்வுகளினையும் குறித்து நிற்கின்றது (Amri et al., 2023). மேற்குறிப்பிட்ட  இயற்கை அனர்த்தங்களில் இடி – மின்னலும் ஒன்றாகும். அதாவது இயற்கை மற்றும் மானிடக் காரணிகளினால் தூண்டப்படுகின்ற காலநிலை மற்றும் நீர் சார்ந்த அனர்த்தங்களில் (Climate and water Disaster) இவ் இடி – மின்னலும் ஒன்றாக அமைகின்றது (Leinonen et al., 2022). ஆரம்ப காலங்களில் இடி – மின்னல் தொடர்பில் பாரியளவு கவனம் செலுத்தப்படவில்லை என்றே கூறவேண்டும். இயற்கை அனர்த்தங்களில், குறிப்பாக அயன மண்டலம் சார் நாடுகளை அதிகம் பாதிக்கும் முக்கிய அனர்த்தங்களில் ஒன்றாக இடி – மின்னல் காணப்படுகிறது (Kuleshov et al., 2002). அயனப் பகுதிகளிலே அதிகளவு உயர்வெப்பம் நிலவி இடைக்கிடை தாழமுக்கங்கள் தோன்றக் காரணமாவதுடன், முகில்களின் வேறுபட்ட உயரங்களிலான உருவாக்கம், நகர்ச்சி, மோதுகை என்பன நடைபெறுவதனால் ஒப்பீட்டளவில் அயனத்திலேயே இடி – மின்னல்களால் தாக்கங்கள் அதிகமாக இடம்பெறுகின்றன (Kuleshov et al., 2002).

இடி – மின்னல் நிகழ்வுகளுடன் தொடர்பான அனர்த்தங்கள், குறிப்பாக இறப்புகள் மற்றும் காயங்கள் வட மாகாணத்தில் அதிகரித்து வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது (படம் 13.1). இதனடிப்படையில் இடி – மின்னல் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றமையும் கண்கூடு. அனர்த்தங்களினை ஏற்படுத்தும் இடி – மின்னலிலிருந்து மனிதன் தன்னைப் பாதுகாத்துக் கொள்வது தொடர்பான பல விடயங்கள் சம்பந்தமான கருத்துகளும் தெரிவிக்கப்படுகின்றன.

இடி – மின்னல் தொடர்பில் ஆரம்ப காலங்களில் வேறுபட்ட கருத்துகள் நிலவி வந்துள்ளன. அதாவது சமய மற்றும் மதக் கொள்கைகளுடன் தொடர்புடையதொரு நிகழ்வாகவே இதனைக் கருதி வந்துள்ளனர். உதாரணமாகக் கூறுவதாயின் இடியும் மின்னலும் கடவுளின் கோபத்தின் வெளிப்பாடுகள் எனக் கருதி வந்துள்ளனர். இவ்வாறாகவே இடி – மின்னல் வானத்திலிருந்து வருகின்றதெனும் அடிப்படையில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சூழ்நிலைகளில், சமய மற்றும் மதக் கொள்கைகளுக்குட்ட வேறுபட்ட சமூக பின்னணியில் வாழ்ந்தவர்களால் அவர்களின் கற்பனைக்கேற்ப வேறுபட்ட கருத்துகள் கூறப்பட்டு வந்துள்ளன.

வடக்கு மாகாணத்தின் அண்மைய இயற்கை அனர்த்த நிகழ்வுகளில் இடி – மின்னல் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அனர்த்தமாக மாறி வருகின்றது. சமீப காலமாக இடி – மின்னல் நிகழ்வுகளின் எண்ணிக்கையும் இடி – மின்னல் நிகழ்வுகளின் பாதிப்புகளும் அதிகரித்து வருவதைக் காண முடியும். குறிப்பாக இடி – மின்னல் என்பது அதிக அளவு பாதிப்பையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருவதை அறிய முடிகின்றது. கடந்த 30 ஆண்டுகாலத் தரவுகளை ஒப்பிடுகின்ற பொழுது இடி – மின்னல் நிகழ்வுகளின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்து வருவதனைக் காணமுடிகின்றது (படம் 13.2, 13.3 மற்றும் 13.4). அத்தோடு இடி – மின்னல் காரணமாக பல்வேறுபட்ட பாதிப்புகளும் ஏற்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. வடக்கு மாகாணத்தினுடைய வெப்பநிலை அதிகரிப்பும் வடக்கு மாகாணத்தினுடைய வானிலையில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றமும் இடி – மின்னல் நிகழ்வுகளின் எண்ணிக்கையை அதிகரித்துச் செல்லுகின்ற நிலைமையைக் காண முடிகின்றது. இடி – மின்னல் என்பது வடக்கு மாகாணத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்ற அனர்த்தமாக மாறி உள்ளது. அந்த அடிப்படையில் இப்பகுதி வடக்கு மாகாணத்தினுடைய இடி – மின்னல் பாதிப்பு வலயங்களையும் பாதிப்பினுடைய தன்மைகளையும் ஆராய்வதாக உள்ளது. வடக்கு மாகாணத்தின் முதலாவது இடைப்பருவ காலத்திலும் இரண்டாவது இடைப்பருவ காலத்திலுமே அதிக அளவிலான இடி – மின்னல் நிகழ்வுகள் இடம்பெற்று இருப்பதனை அறிந்து கொள்ள முடிகின்றது. கடந்த 10 ஆண்டுகளில் வடக்கு மாகாணத்தில் 182 பேர் இடி – மின்னல் காரணமாக இறந்திருக்கின்றனர். மேற்காவுகைச் செயற்பாடுகளின் காரணமாகவும் வடக்கு மாகாணத்தில் அதிக அளவிலான இடி – மின்னல்கள் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக மார்ச், ஏப்ரல், மே, ஜூலை, ஓகஸ்ட், செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நிகழ்கின்ற இடி – மின்னல் நிகழ்வுகளின் காரணமாக அதிக அளவிலான உயிரிழப்புகள் பதிவாகி வருவதனை அறிந்து கொள்ள முடிகின்றது.

வடக்கு மாகாணத்தில் இடி – மின்னலுக்கான காரணங்கள்

வடக்கு மாகாணத்தின் மழை வீழ்ச்சியைத் தீர்மானிப்பதில் பல காரணிகள் பங்களிப்புச் செய்கின்றன. அதில் மொன்சூன் சுற்றோட்டம் (Monsoon Circulation), வங்காள விரிகுடாக் கடற்பிரதேச வெப்பநிலையும் அமுக்க வேறுபாடுகளும் (Sea surface temperature and Atmospheric pressure variations), எல்நினோ தெற்கு அலைவு (El Nino Southern Oscillation – ENSO), மேடன் யூலியன் அலைவு (Madden Julian Oscillation – MJO), இந்து சமுத்திர வெப்பச் சுட்டெண் (Indian Ocean Dipole – IOD), றொஸ்பி அலைகள் (Rossby waves), கடல் தரைக் காற்றுகள் (Land and Sea Breezes), மேற்காவுகைச் செயற்பாடுகள் (Convectional Process) போன்றன பங்களிப்புச் செய்கின்றன. எனினும் அண்மித்த 20 ஆண்டுகளில் வருடத்தின் மொத்த மழைவீழ்ச்சியில் மேற்காவுகைச் செயற்பாட்டின் பங்களிப்பினால் கிடைக்கின்ற மழையின் அளவு அதிகரித்து வருவதனைக் காண முடிகின்றது. அதேசமயம் வடக்கு மாகாணத்தின் வெப்பநிலை அதிகரிப்பு, அதிகரித்த அளவிலான மேற்காவுகைச் செயற்பாடுகளையும் தூண்டி வருவதனை அவதானிக்க முடிகின்றது. அதிகரித்த மேற்காவுகைச் செயற்பாடுகளின் விளைவாக இடி – மின்னல் நிகழ்வுகளினுடைய எண்ணிக்கையும் அதிகரித்து வருவதனை அவதானிக்கலாம். அந்த அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் மேற்காவுகைச் செயற்பாடு என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வானிலைச் செயற்பாடாக மாறி வருகின்றது. பிற்பகல் 2 மணி வரைக்கும் நிலவுகின்ற அதிக அளவிலான வெப்பநிலை, அதிக ஆவியாக்கத்தையும் ஆவியுயிர்ப்பையும் தூண்டி அதிகளவான மேற்காவுகைச் செயற்பாடுகள் இடம்பெறச் செய்கின்றன. ஆவியாக்கச் செயன்முறை மூலம் மேலே செல்லுகின்ற நீர், மாறன் மண்டலத்தில் ஒரு குறிப்பிட்ட உயரம் செல்வதற்கு இடையில் குளிர்வடைந்து, பிற்பகலில் குறிப்பாக மாலை அல்லது இரவு வேளைகளில் அல்லது அதிகாலை வேளைகளில், மழையாகக் கிடைக்கின்ற நிலைமையை அவதானிக்கலாம். 

மழைக் காலங்களில் மேகங்களின் இடையே ஏற்படும் மிகப்பெரிய தீப்பொறி போன்ற மின்பொறி, கீற்றாக கண்ணைப் பறிக்கும் ஒளிக்கதிர்களோடு கோடுகளாய் வானில் நொடிப் பொழுதில் தோன்றி மறையும் நிகழ்வு மின்னல் ஆகும். மின்னலோடு சேர்ந்து கேட்கும் பெரும் சத்தத்தையே இடி என்கிறோம். அணுக்கள் மேகங்களில் மின்னூட்டல் பெற்று எதிர் மின்னூட்டத்தால் ஈர்க்கப்படும் போது வெளியாகும் மின்சாரப் பாய்ச்சலே மின்னலாகின்றது. அதாவது மழை முகிலில் காணப்படும் நேர் அயன்களும் (Positive ions) மறை அயன்களும் (Negative ions E-) ஒன்றுடன் ஒன்று தாக்கம் புரிவதன் காரணமாக ஏற்படும் மின்னேற்றம் மின்னலாகின்றது. மழை மேகங்களுக்குள் இருக்கும் அணுக்கள் பல வழிகளில் உராய்ந்து மின்னோட்டம் பெறுகின்றன. இவ்வாறு சில மேகக் கூட்டங்கள் நேர் மின்னோட்டமும், சில மேகங்கள் எதிர் மின்னோட்டமும் பெறுகின்றன. இவ்வாறாக எதிர் எதிரான மின்னோட்டம் கொண்ட பிற மேகக் கூட்டங்கள் அருகருகே வரும் பொழுது மின்னோட்ட ஈர்ப்பு விசையால் காற்றின் வழியே மின்னாற்றல் பாய்ந்து மின்னூட்டத்தைக் கடத்துகின்றன. இவ்வாறு காற்றின் வழியே மின்னோட்டம் பாயும் பொழுது தீப்பொறி போல் ஒளி தெரிகின்றது. இப்பகுதியின் காற்றானது மின் மயமாக்கப்படுகின்றது (Bhardwaj & Singh, 2018).

இவ்வாறாக மின்னல் ஏற்படும் பொழுது அதனோடு கேட்கின்ற ஒலியே இடியாகும். அதாவது மின்னல் மின்னும் போது வெளியிடப்படும் மிக அதிகமான வெப்பம் அதைச் சுற்றிலும் உள்ள காற்றினால் ஓர் அலையைக் கிளப்பி விடுகின்றது. இவ்வாறு அதிகளவு அழுத்தத்துக்குள்ளான காற்று அழுத்தக் குறைவான பகுதிக்கு அதிவேகமாக இடமாற்றம் செய்யப்படும் போது ஏற்படும் ஒலியே இடியோசை எனலாம். ஒளியின் (மின்னல்) வேகம் ஒலியின் வேகத்தை விடவும் மிக அதிமாக இருப்பதனாலேயே முதலில் மின்னலின் வெளிச்சம் தென்பட்டு சிறிது நேரத்தின் பின்னர் இடி ஓசையைக் கேட்க முடிகின்றது. எளிமையாகக் கூறுவதாயின் மின்னலென்பது மின்சாரம் தான். அடர்ந்த ஈர மின்சாரம்; அது அடர் ஈர மேகங்களில் உலவிக் கொண்டேயிருக்கும். அம்மின்சாரம் மேகத்திற்குள்ளேயே மேலும் கீழுமாக அசையும். மழைக் காலங்களில் வானத்தை அவதானித்தால் மேகத்துக்குள்ளேயே வெளிச்சம் மின்னி மின்னி மறைவதனைக் காணலாம். இது மின்சாரத்தின் உலாவலாலேயே ஏற்படுகின்றது. அவ்வப்போது நேர், எதிர் மேகங்கள் அருகருகே வரும் போது மேகங்களிடையே இவ்வாறாக மின்னல் உருவாகின்றது. இதனுடன் கூடவே இடியும் உருவாகின்றது.

சிலவேளைகளில் ஒரு மரத்தையோ நிலத்தையோ இடி – மின்னல் அல்லது மேகங்களுடன் கலந்துள்ள மின்னோட்டம் பாய்ந்து தாக்கும். இதுவே இடி விழுதல் எனப்படுகின்றது. இடி – மின்னலானது மழைக் காலங்களில் தோன்றுகின்றது. இது எதிர்பாராதவொரு இயற்கை அனர்த்த நிகழ்வாகும். எனவே எதிர்பாராத விதமாகவே தாவரங்கள், விலங்குகள், மனிதன் உட்பட சகல உயிரினங்களினையும் இது பாதிப்பதோடு, இறப்பிற்கும் காரணமாக அமைகின்றது.

கன மழையுடன் கூடிய இடி – மின்னல் கலந்த காற்றுக்கு இடி – மின்னல் புயல் (Thunder storm) என்று பெயர். இவை கார்திரள் மேகங்களிலிருந்து ஏற்படக்கூடியவை. வெப்பநிலை -20 பாகை செல்சியசிற்கும் கீழாகக் குறையும் வகையில் நீர்த்துளி மற்றும் பனித்துளிகள் பெருமளவில் அதிக உயரத்திற்கு எடுத்துச் செல்லப்படும் போதுதான் இடியும் மின்னலும் தோன்றுகின்றன. இடி – மின்னல் புயலில் கடுங்காற்று, கார்திரள் மேகம், இடி – மின்னல், கனமழை போன்றவை உருவாகுவதால் இவை வானிலை உற்பத்திக்கூடம் (Weather factory) என அழைக்கப்படுகின்றது. 

இடி – மின்னலில் இருந்து பாதுகாப்பு பெறுதல்

தற்போது வடக்கு மாகாணத்திற்கு கிடைக்கின்ற மழைவீழ்ச்சி மேற்காவுகைச் சுற்றோட்டத்தின் (Conventional current) விளைவாகக் கிடைக்கின்ற மழை வீழ்ச்சியாகும். செறிவான மேற்காவுகை மழைவீழ்ச்சி (Intensive convectional rainfall) எப்போதும் இடி – மின்னலுடன் தொடர்புடையது. மேற்காவுகைச் செயற்பாட்டின் போது உருவாகின்ற கார்திரள் (Cumulonimbus) முகில்களுக்கிடையிலான மின்னேற்றமே இடி – மின்னலுக்கான அடிப்படையாகும். இடி – மின்னல் இரண்டு வகைப்பட்டதாகும். 

  1. இரண்டு முகில்களுக்கிடையிலான கிடையான (Horizontal) மின்னேற்றம்.
  2. பூமியின் மேற்பரப்பிற்கும் முகில்களுக்கும் இடையிலான குத்தான (Vertical) மின்னேற்றம். 

இதில் குத்தான மின்னேற்றமே எமக்கு உயிர், உடல் மற்றும் சொத்துப் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. இதில் உயிர் மற்றும் உடற் பாதிப்புகளை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது தொடர்பான சில ஆலோசனைகள் தரப்படுகின்றன:

  1. ஏப்ரல், மே, ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் செறிவான மழைவீழ்ச்சி (20 மி.மீ.) தொடங்கும் போதே அடுத்து இடி – மின்னல் நிகழ்வு இடம்பெறும் என்பதனை அனுமானித்து பாதுகாப்பிடத்திற்கு நகர்தல்.
  2. பரந்த மற்றும் வெட்ட வெளிகளில் நிற்பதனைத் தவிர்த்தல்.
  3. திறந்த வெளிகளில் திறந்த வாகனப் (சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்) போக்குவரத்தைத் தவிர்த்தல்.
  4. தொலைபேசி மற்றும் மின்சாதனப் பயன்பாட்டைத் தவிர்த்தல்.
  5. மரங்களுக்கு அண்மையில் அல்லது கீழே நிற்பதனைத் தவிர்த்தல்.
  6. விவசாயிகள் விவசாய உபகரணங்களைப் பாவிக்காதிருத்தல். 
  7. ஒரு பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடி – மின்னல் நிகழ்வுகள் இடம்பெறுமாயின் தாடையைத் தொடர்ந்து அசைத்துக் கொண்டிருத்தல். இது செவிப்பறைப் பாதிப்பைத் தடுக்கும் (இதனால் தான் எமது முன்னோர் இடி – மின்னலின் போது ‘அர்ஜூனனுக்கு அபயம்’ எனக் கூற வேண்டும் என்று தெரிவித்தனர்). 
  8. இயன்றவரை கால் பாதத்தின் குதிப்பகுதி நிலத்தின் மீது படுவதனைத் தவிர்த்து காதுகளை மூடி நிலத்தில் இருத்தல்.
  9. வீட்டில் நின்றாலும் சமையலறைப் பகுதியில் நிற்பதனைத் தவிர்த்தல். 

மேற்கூறிய பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இடி – மின்னல் பாதிப்புகளைக் குறைக்க முடியும்.


ஒலிவடிவில் கேட்க

1950 பார்வைகள்

About the Author

நாகமுத்து பிரதீபராஜா

கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறையில் முதுநிலை விரிவுரையாளராக கடமையாற்றி வருகின்றார். காலநிலையியலில் தனது கலாநிதி பட்டத்தினை பூர்த்தி செய்த பிரதீபராஜா காலநிலையியல் தொடர்பான பல்வேறுபட்ட ஆராய்ச்சிகளை வெளியிட்டுள்ளார். வடக்கு மாகாணத்தினுடைய காலநிலை பற்றியும் பொதுவான காலநிலை அம்சங்கள் தொடர்பாகவும் 07 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 40 இற்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை தேசிய மற்றும் சர்வதேச சஞ்சிகைகளில் பிரசுரித்துள்ளார். கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, வடக்கு மாகாணத்தினுடைய வானிலை தொடர்பான இவரது எதிர்வு கூறல்களை பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் பின்பற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • October 2024 (4)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)