பாரம்பரிய மீன்பிடித்தல் மற்றும் கடலுணவு விவசாயம்
பூமியின் மேற்பரப்பின் பெரும்பகுதி கடலாகவுள்ளது. மனிதர்களாகிய நாம் எண்ணற்ற வழிகளில் கடலைச் சார்ந்திருக்கின்றோம். கடலில் இருந்து வரும் உணவானது, மீன்பிடித்தல் மற்றும் மீன்வளர்ப்பு ஆகிய இரண்டு தொழில்வகை மூலம் நமக்குக் கிடைக்கிறது. கடலுணவானது மலிவானதும், இலகுவாகவும் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து ஆகும். அத்துடன், கடலுணவு உற்பத்தியானது, பல கோடி பேருக்கு தொழில் வாய்ப்பை வழங்குவதன் மூலம், பெரும் வாழ்வாதார அடிப்படையாகவும் உள்ளது.
கடல் உணவுத் துறையானது ‘பாரம்பரிய மீன்பிடித்தல்’ மற்றும் ‘கடலுணவு விவசாயம்’ ஆகிய இரண்டு தொழில் முறைகளிலும் பாரிய வளர்ச்சியை கண்டவண்ணமுள்ளது. கடலுணவு விவசாயம் கடந்த 20 வருடங்களில் பாரிய வளர்ச்சியைக் கண்டு வருகிறது. ஆனாலும், இந்த வளர்ச்சியானது பாரம்பரிய மீன்பிடியை சார்ந்ததாகவே இருந்து வருகிறது.
- பாரம்பரிய தொழில் செய்யும் கடற்பிரதேசத்தை ஆக்கிரமித்து கடல்விவசாயப் பண்ணைகளை உருவாக்கல்.
- சுயாதீன மீன்பிடித் தொழிலாளர்களை கடல் விவசாயத் தொழிற்துறையின் கூலிகளாக்குதல்.
- கடலுணவு விவசாயத்திற்கு முக்கியமான பொருட்களில் ஒன்றான, வளர்ப்பு மீனினத்துக்கான / இறால் / நண்டு இனத்துக்கான தீவன உற்பத்தியில் வழமையான மீன் பிடியைச் சார்ந்திருத்தல்.
அதாவது, ரோலர் மற்றும் ஆள் கடல் மீன்பிடியில் பெறப்படும் சிறு மீனினங்கள் (சூடை, சாளை, நெத்தலி போன்றவை) உலர்த்தப்பட்டு, அரைத்து வளர்ப்பு மீன்களுக்கான தீவனமாக ஆக்கப்படுத்தல்.
சர்வதேச வர்த்தகத்தில் கடலுணவு விவசாயமானது தனது செல்வாக்கை அதிகரித்து கொண்டு போகும் இன்றைய நிலையில், மேற்கூறிய காரணங்களினால், இவ் வளர்ச்சியானது அடிப்படையில் சூழலுக்கும், சமூக பொருளாதாரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையே அதிகரித்து வருகிறது.
இதில் குறிப்பாக கடல் விவசாயத்துக்கான தீவன உற்பத்திக்கு மீன்களை உபயோகிப்பது கடல்வளத்துக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்து வருகிறது. கடலின் இயற்கைக்கும், அதன் மீன்வளத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தாமல் மீன்பிடித் தொழில் செய்வதானால், கடலின் மீன்வளத்தில் 35 சதவீதத்தில் இருந்து அதிக பட்சம் 50 வீதம் வரை பிடிக்கலாம். ஆனால், இன்று அது 80 – 90 விகிதமாக அதிகரித்துள்ளது. இந்த தகவலை UNs Food and Agriculture Organization (FAO)/ உலக உணவு அமைப்பு (FAO, 2019 “Blue Growth”) வெளியிட்டு, கடலின் மீன்வளத்தின் எதிர்காலம் சம்பந்தமாக கவலையைத் தெரிவித்துள்ளது.
மேற்படி கட்டற்ற மீன்பிடியின் அதிகரிப்புக்கு மிக முக்கியமான காரணமாக கடந்த 20 வருடங்களில் பாரிய வளர்ச்சியைப் பெற்றுவருவது கடல் விவசாயமென ஐக்கியநாடுகள் சபையின் உலக உணவு- விவசாய அமைப்பு கூறுகிறது. கடலிலிருந்து பிடிக்கப்படும் 35 விகிதத்திற்கும் அதிகமான அளவு மீன்வளங்கள், கடல் விவசாயத்துக்குப் பயன்படும் தீவன உற்பத்திக்கே உபயோகப்படுத்தப்படுகின்றன.
நேரடியாகவே மனிதர்களால் உணவாக உண்ணக் கூடிய மிகவும் புரதம் நிறைந்த இந்த மீன்வகைகள், பெருமெடுப்பிலான கடல் விவசாயத்தில் தீவனமாக மாற்றப்படுகிறன. சர்வதேச தீவன வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள், குறிப்பாக அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பிய நாடுகளும், தமது கடல்வளத்தை பாதுகாத்தபடி, ஆசிய-ஆபிரிக்க, தென் பசுபிக் சமுத்திர கடல்களில் மேற்கொள்ளும் கடல்வளக் கொள்ளையை ஊக்குவிக்கின்றன. இந்த நாடுகளே சீனா, இந்தியா போன்ற நாடுகளிடமிருந்து தீவனத்தை பெருமளவில் இறக்குமதி செய்பவை. அதேவேளை, சீனா, இந்தியா போன்ற நாடுகள் பல வருடங்களுக்கு முன்பேயே தமது கடல்வளங்களில் பெரும்பகுதியை கட்டுப்பாடற்ற மீன்பிடியால் அழித்து விட்டன.
சர்வதேச அரசியல், சூழலியல் மற்றும் சமூக முன்னேற்றம் போன்ற விடயங்களில் அதி உச்ச அபிவிருத்தி கண்டதாக கூறப்படும் நாடுகளின் முதல் வரிசையில் நிற்பவை ஸ்கண்டிநேவிய நாடுகளாகும். இதில், கடல் சார்ந்த உணவு உற்பத்தியில் உலக அளவில் முன்னிலை வகிக்கும் நாடு நோர்வேயாகும். இந்த நாடு தனது கடல்விவசாயத்துக்கு தேவையான தீவனத்தை சர்வதேசச் சந்தையிலேயே வாங்குகிறது. பல நூறு கோடி டொலர் பெறுமதியான தீவன வர்த்தகத்தை நோர்வே பெரும்பாலும் சீனாவுடனேயே செய்து கொள்கிறது.
சீன மீன்பிடிக் கப்பல்களானவை பல தசாப்தங்களுக்கு முன்பே தமது சொந்த கடல்வளத்தை துடைத்து அழித்து விட்டன. இப்போது, இந்து சமுத்திர கடற்பிராந்தியம், ஆபிரிக்கக் கண்டத்தின் மேற்கு மற்றும் கிழக்குக்கரையோரப் கடற்பிராந்தியம் மற்றும் வசதி கிடைக்கும் போதெல்லாம் பசுபிக் சமுத்திரத்தின் தென்பகுதியிலும் தீவன உற்பத்திக்கான மீன்களை சீனா பெருந்தொகையில் பிடிக்கின்றது.
மேலே கூறப்பட்ட கடற்பிராந்தியங்களுக்கு உரித்தான நாடுகள் பொருளாதார ரீதியான நன்மைகளையோ அல்லது பாதுகாப்பு அடிப்படையிலான காரணங்களையோ முன்னிறுத்தி சீனாவின் இந்தக் கடல்வளக் கொள்ளையைக் கண்டும் மௌனித்து இருக்கின்றன. இந்த வகையிலேயே நமது நெத்தலியும், சூடையும் பெருமெடுப்பில் களவாடப்படுகின்றன.
உதாரணமாக, இலங்கையின் கடற்பொருளாதார வலயத்துக்குள்ளும், அதற்கு வெளியிலிருக்கும் கடற்பகுதியிலும் சீனாவின் ரோலர்கள் இலட்சக் கணக்கான தொன் அளவில் சாளை, சூடை மற்றும் நெத்தலி போன்ற மீனினங்களைப் பிடிக்கின்றன. பிடித்த மீன்கள், மீன்பிடிக் கப்பல்களுடன் இணைத்து செயற்படும் தொழிற்சாலைக் கப்பலுக்கு மாற்றப்பட்டு, அங்கே தீவன உற்பத்தி நடைபெறும். உற்பத்தி செய்யப்பட்ட தீவனமானது அருகில் இருக்கும் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து தீவனத்துக்கு ’ஓர்டர்’ கொடுத்த நாடுகளுக்கு அனுப்பப்படும். சில சமயங்களில் நேரடியாகவே சீன வணிகக் கப்பல்களில் கடலில் வைத்தே தீவனப் பொதிகள் ஏற்றப்பட்டு அவை சேரவேண்டிய இடத்துக்கு அனுப்பப்படும்.
இந்தத் தீவனத்தை இறக்குமதி செய்யும் நோர்வே, தனது சல்மன் மீன்வளர்ப்பு பண்ணைகளுக்கு இத்தீவனத்தை உபயோகப்படுத்துகிறது. இலங்கையின் கடலில் பிடித்த நெத்தலி, சூடை, சாளை மீன்களினால் செய்யப்பட்ட தீவனம், நோர்வேயின் வடகடல் (North Sea) மீன்வளர்ப்பில் சல்மன் மீனுக்கு உணவாகப் போடப்படும். அந்த மீன்கள் 14-22 மாதங்களில் 4-5 கிலோ நிறையை அடையும் போது, வளர்ப்பு கண்டிகளிலிருந்து பிடிக்கப்படும். பின்பு அவை 24 மணிநேரத்துக்கு உள்ளாகவே, இந்திய, சீன, ஜப்பானிய, ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் சந்தைகளுக்கு, தரை மற்றும் விமான மார்க்கங்கள் ஊடாக அனுப்பப்படும்.
எமது கடலில் பிடிக்கப்படும் / களவாடப்படும் மீன்வளத்தினால் இங்கு முதற்கட்ட இலாபத்தை சீனாவும், இரண்டாம் கட்டத்தில் பெருமளவு இலாபத்தை நோர்வேயும் பெற்றுக்கொள்கின்றன. அதேவேளை, இலங்கைக் கடலில் பிடிக்கப்படும் நெத்தலி மீனோ அல்லது சாளையோ எந்தவித மறு உற்பத்திக்கும் உட்படுத்தப்படாமலேயே மக்களால் உண்ணக் கூடியவை. நிறைந்த புரதத்தைக் கொண்டவை. இந்த மீன்களை சீனா பிடித்து மறு உற்பத்திக்கு உள்ளாக்கி மேலதிக பெறுமதியை கூட்டிக்கொள்கிறது (Value Added Production) பெரும் இலாபத்தையும் ஈட்டிக்கொள்கிறது.
இந்தப் பெறுமதி சேர்ப்பானது பொருளாதார/ சந்தை ரீதியில் விலையை அதிகரிக்கிறதே தவிர, அந்த மீன்களின் மனித உணவு சார்ந்த பயன்பாட்டின் அடிப்படையில் அல்ல. அந்த மீன்களை நேரடியாக சந்தையில் விற்றால் ஒரு தொன் மீனின் விலை 30,000.(1000 kg X 30,) ரூபா. அவற்றை அரைத்து தீனியாக மாற்றும் போது, அண்ணளவாக, 200 kg தீவனமும், 120 லீட்டர் மீன் எண்ணெயும், உபரியாக 680 லீட்டர் நீரும் கிடைக்கும். தற்போதுள்ள சர்வதேசச் சந்தையின் மதிப்பில் (12.2022) 1kg தீவனம் 1.5 டொலருக்கும், 1 லீட்டர் மீன் எண்ணெய் 2 டொலருக்கும் விற்கப்படுகிறது. மார்கழி 2022 இல் சர்வதேச நாணய மதிப்பில் ஒரு அமெரிக்க டொலரின் பெறுமதி 360 ரூபா. இதன் மூலம் தீவனத்துக்கு 10,8000- ரூபாவையும், மீன் எண்ணெய்க்கு 86,400- ரூபாவையும் சீனா பெற்றுக்கொள்கிறது.
மொத்தத்தில் இலங்கை கடலில் கொள்ளையடிக்கப்படும் ஒவ்வொரு தொன் சாளை, சூடை, நெத்தலி இன மீன்களுக்கு குறைந்தது 19,4400- ரூபாவை சர்வதேச தீவனச் சந்தையில் இலாபமீட்டுகிறது சீனா. இதில் உபரியாக கிடைக்கும் நீர் கூட (ஒரு தொன் மீனில் 680 லீட்டர் மீன் தண்ணீர் கிடைக்கிறது ) சர்வதேசச் சந்தையில் உணவு சுவையூட்டிகளை உருவாக்கும் தொழிற்றுறைக்கு விற்கப்படுகிறது. இதன் வருமானம் பற்றிய சரியான தகவலைப் பெற முடியவில்லை.
இலங்கை ஒரு அபிவிருத்தி அடையாத மீன் பிடி நாடு. உலக அளவில் பாரிய கடல்வளத்தைக் கொண்டிருக்கும் இலங்கையிடம், அந்த வளங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கான மூலதனம், தொழில் நுட்பம் மற்றும் உட்கட்டமைப்பு கிடையாது. நெத்தலியும், சூடையும், சாளையும் வாடைக்காற்று வீசும் பருவகாலத்தில் இலங்கையின் கரையிலிருந்து 50 கிலோ மீற்றருக்கு நெருக்கமாகவுள்ள கடற்பரப்பிற்குள் வரும்போது அவற்றைப் பிடிக்கும் திறனே நம்மிடமுள்ளது. ஆனால் சீன ரோலர்கள் வருடத்தில் எல்லாக் காலத்திலும், எந்தத் தூரத்திலும் வைத்து அம் மீன்களைப் பிடித்துக்கொள்ளும் திறன் வாய்ந்தவை.
வளம் குறைவான நாடாக நாம் இருந்த போதும், இலங்கையின் கடற்றொழிலாளர்களால் நமது மீன்வளம் பிடிக்கப்படும் போது அது நம் நாட்டின் மக்களுக்கு உணவாகிறது. சிறுவர்களுக்குப் போஷாக்காகிறது. பசிப்பிணி ஓரளவுக்குத் தீர்க்கப்படுகிறது. அத்துடன், பாரம்பரிய மீன்பிடி முறையை அல்லது சிறிய தொகையிலான மீன்களைப் பிடிக்கும் முறைமையை இலங்கை மீனவர்கள் உபயோகப்படுத்தும் போது (Sustainable Fishery Production), கடல்வளத்தை – மீன்வளர்ச்சியை பாதிக்கும் அளவில் பிடிக்க மாட்டார்கள். இதனால், கடல்வளம் பாதுகாக்கப்படும். மீன்வளம் தொடர்ச்சியாகப் பெருகிக்கொண்டே இருக்கும்.
இன்று சர்வதேச அளவில் நடைபெறும் கடல்வளக் கொள்ளையை நிறுத்த பல ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும் அவை எவற்றையும் கடலாதிக்கத்தை கொண்டிருக்கும் நாடுகளான சீனா, இந்தியா போன்ற நாடுகள் மதிப்பதில்லை .
இலங்கை சர்வதேச அளவில் அதிகாரமற்ற நாடாக இருந்தாலும் கூட, தனது கடல்வளம் திருடப்படுவதை சர்வதேச சபைகளில் அம்பலப்படுத்த அதற்கு எந்தவித தடையுமில்லை. மக்கள் நலனைவிட, நமது வயிற்றுப் பசியைவிட, அன்றாடங்காய்ச்சிகளான வறுமைப்பட்ட சிறுவர்களின் போசாக்கு குறைபாடு என்பதைவிட இலங்கையின் அதிகார வர்க்கமும் நமது ஆட்சியாளர்களும், ஆதிக்க நாடுகளுக்கு அடிமைச் சேவகம் செய்வதே ‘இலங்கை தேசத்தின் இறைமை’ என்பது போல நடந்து கொள்கிறார்கள்.
கடல் அழிவையும், இயற்கைவளக் கொள்ளையையும் எதிர்த்த போராட்டமும், சுபீட்சமான விடுதலையடைந்த சமுதாயத்தை உருவாக்கும் போராட்டமும் என்பது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போலானவை என்பதை நமது நாட்டின் சமூக சிந்தனையாளர்கள் ஆழமாகப் புரிந்துகொள்ளல் வேண்டும்.
உசாத்துணை :
- Vera Mo . Norske penger i global sjømat Framtiden i våre hender / Etisk bankguide Rapport april — 2020 framtiden.no/aktuelle-rapporter/880-retningslos-til-havs-norske-penger-i-global-sjomat/file.html
- Steinar Alsos og Mattias Rolighed Bergset «Enorme utslepp frå norsk lakseeksport» 13.03.2020
framtiden.no/202003057552/aktuelt/mat/enorme-utslepp-fra-norsk-lakseeksport.html - Bellona. 25.03..2007 «Fôrregnskap for oppdrett av laksefisk» bellona.no/nyheter/ukategorisert/2007-03-forregnskap-for-oppdrett-av-laksefisk
தொடரும்.