யாழ்ப்பாண பாரம்பரிய உணவில் கீரை, இலைவகைகள் - பகுதி 2
Arts
12 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாண பாரம்பரிய உணவில் கீரை, இலைவகைகள் – பகுதி 2

February 10, 2023 | Ezhuna

ஈழத்தில் யாழ்ப்பாணம் தனக்கென சிறப்பான உணவுப் பழக்கவழக்கங்களையும் மருத்துவத்தில் சில விசேட முறைகளையும் கொண்டிருந்தது. ஆயினும் அந்நியர் ஆட்சி, பூகோளமயமாதல், வர்த்த நோக்கிலான வாழ்வியல், நாகரிகமோகம் என்பன அந்த உணவுப்பழக்கவழக்கத்தைக் குலைத்துப்போட்டது. அதன் விளைவாக, ஆரோக்கியக் குறைபாடுகள், தொற்றா நோய்கள் என பலவீனமான சமுதாயம் ஒன்று நம்மிடையே உருவெடுத்துள்ளது. இந்த நிலையை மாற்றியமைத்து, மீண்டும் ஆரோக்கியமான சமுதாயத்தைக் கட்டியெழுப்ப எமது பாரம்பரிய உணவுமுறைமையை மீட்டெடுக்க வேண்டும். ஈழத்தமிழர்களின் உணவுப்பழக்க வழக்கங்கள், உணவுகள் என்பன தொடர்பாக  சித்தமருத்துவம், தற்கால உணவு விஞ்ஞான  ஆய்வு என்பவற்றின் நோக்குநிலையில் விளக்குகின்றது ‘மாறுபாடில்லா உண்டி’ என்ற இந்தக்கட்டுரைத்தொடர்.

வல்லாரை  (யோசனைவல்லி)

உடலைத் தேற்றக்கூடியது, உடலை வன்மையாக வைத்திருக்கக்கூடியது. சிறந்த ஞாபகசக்தியைத் தரக்கூடியதுடன் மனநலத்தைக்காக்கும் குணம் கொண்டது.

வல்லாரை துவர்ப்பு, கைப்பு, இனிப்பு சுவைகளைக் கொண்டது. சித்தமருத்துவ தத்துவங்களின் படி பித்த தோசத்தை சமப்படுத்தக் கூடியது. மதுமேக நோயில் சிறந்த பலனைத் தரக்கூடியது.

“வல்லாரை யிலையை யுண்ண மடிந்திடும் பயித்தி யங்கள்
அல்லாத கறைக்கி ராணி யனலுடன் பெரிப்பு மேகம்
பொல்லாத மற்று நோய்கள் போமென நந்திக் கந்நாள்
எல்லார்க்கு முதல்வ னாய விறைபர்ந் திட்ட வாறே”

– பக்.67, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி.

வல்லாரை

வல்லாரை இலையை உண்ண பயித்திய ரோகங்கள் (பித்த தோஷத்தால் ஏற்படும் ரோகங்கள்) மடிந்திடும். குருதியில் உள்ள குறைபாடுகள், வயிற்றுக்கடுப்பு, கழிச்சல், மேக ரோகம் (மதுமேகம்) இவை போன்ற ஏனைய நோய்களும் குணமாகுமென நந்திதேவருக்கு முதற்சித்தனான சிவன் அருளினார் எனப்பாடல் குறிப்பிடுகின்றது.

வல்லாரையானது மேற்குறிப்பிட்ட பாடலில் குறிப்பிட்டது போல உடல் ஆரோக்கியத்துக்கு எல்லா வகையிலும் உதவுகின்றது. குறிப்பாக தோல் நோய்கள், புண் (காயம்), கட்டி, வீக்கம், கண்டமாலை, சுரங்கள், இளைப்பு, யானைக்கால் நோய் எனப் பல்வேறு நோய்களுக்கும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வல்லாரையானது நோய்களைப் போக்குவது போல் நோய் அணுகாதிருக்கவும் செய்வதுடன், உடலை நரை, திரை, மூப்பின்றி வைத்திருக்க கற்பமாகவும் (Antioxidant) தொழிற்படும். இவற்றுக்கு வல்லாரையில் அதிகம் உள்ள உயிர்ச்சத்து C, உயிர்ச்சத்து A, மற்றும் வல்லாரையில் உள்ள Phenolics வகை தாவர இரசாயனங்களும் ஆகும்.

இதனையே “தேரையர் வெண்பா”,  “தேரையர் காப்பியம்”,  உள்ள பாடல்கள் குறிப்பிடுகின்றன.

“வல்லாரைக் கற்பமுண வல்லாரை யார்நிகர்வார்
கல்லாரைப் போலக் கலங்காமல் – வல்லாரைச்
சாறு மிலவணமுஞ் சாதிபத்திரி யுமுண்ணப்
பேருமடி வல்லலைப் பிணி”

– பக்.168, தேரையர் வெண்பா.

சித்தமருத்துவத்தில் கற்பமுறையானது விசேட சிகிச்சை முறையாகக் காணப்படுகின்றது. இம்முறையில் வல்லாரையை உட்கொள்ளும்போது மூளையானது சிறப்பாகச் செயற்படும். இவ்வல்லாரைச் சாற்றுடன் சாதிபத்திரி மற்றும் உப்பு சேர்த்து கற்பமுறையில் உண்ண பெருவயிறு, வயிற்றுவலி தீரும்.

இது மருத்துவமுறை. மருத்துவரின் ஆலோசனையின்படி உண்ண வேண்டியது. வல்லாரையின் சிறப்பினை எடுத்துக்காட்டவே இங்கு  தரப்பட்டுள்ளது.

“வல்லாரை யினிலை மருவுகற்ப மாய்க்கொள்
வெல்லாப் பிணிகளு மிலாமையா மெய்யினில்”

– பக்.12, தேரையர் காப்பியம்.

வல்லாரை இலையை கற்பமாக உண்ண எல்லாப் பிணிகளும் உடலில் இல்லாது போகும்.

எனவே இவ்வாறு பல பயன்களைக் கொண்ட வல்லாரைக் கீரையினை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளல் வேண்டும். இவ்வளவு பயன்களையும் கொண்ட வல்லாரையை இலகுவாக வீட்டிலேயே வளர்த்துக்கொள்ளலாம்.

பிரண்டை

பிரண்டை

சமையலில் அருகிவரும் வச்சிரவல்லி என அழைக்கப்படும் பிரண்டை நிறைந்த கல்சியத்தையும் நார்ச்சத்தையும் கொண்டது. உடலை உறுதியாக வைத்திருக்கக்கூடிய தன்மையைக் கொண்டிருப்பதால் இதனை வஜ்ரவல்லி என அழைப்பர்.

பொதுவாகப் பிரண்டையைத்  துவையலாகச் செய்து உணவுடன் உட்கொள்வர். இவ்வாறு துவையல் செய்வதற்கு பிரண்டையைப் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய விடயங்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

  1. பிரண்டையின் துளிர்களையும், இலைகளையும் பயன்படுத்த வேண்டும்.
  2. துளிர்களை நன்றாகக் கழுவியபின் சிறிது சிறிதாக நறுக்கி பசு நெய்யினில் வறுத்த பின்னரே பயன்படுத்த வேண்டும். இல்லையேல் சுணையுடன் கூடிய கடி வாயினில், உடம்பினில் சிலருக்கு ஏற்படலாம்.
  3. புதிதாக உண்பவர்கள் சிறிது உண்டு பார்த்து அதன் பின்னரே உண்ண வேண்டும்.
  4. ஏனைய கறிகளைப் போன்று அதிகம் உண்ணுதல் கூடாது. சம்பல் போன்று சிறிதளவாக உண்ணலாம்.
  5. பிரண்டையில் உணவு தயாரிக்கும் போது மிளகு, நற்சீரகம், உள்ளி போன்ற திரிதோச சமதிரவியங்கள் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

முக்கியமாக நெய்யில் வறுத்துக்கொள்ள வேண்டும்  என பின்வரும் பாடல் கூறுகின்றது.

“பிரண்டையைநெய் யால்வறுத்துப் பின்ரைத்து மாதே!
வெருண்டிடா தேற்று விழுங்கில் – அரண்டுவரும்
மூலத் தினவடங்கும் மூலவி ரத்தமறும்
ஞாலத்தி னுள்ளே நவில்”

-பக்.675, பதார்த்த குணபாடம்.

மூலநோயில் பிரண்டையை நெய்யில் வறுத்து அரைத்து உண்கில் மூலத் தினவு, மூலத்தால் இரத்தம் போதல் என்பன மாறும்.

பிரண்டையின் மருத்துவக் குணங்கள் தொடர்பில் யாழ்ப்பாண நூலாகிய அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“பிரண்டையின் குணத்தை யோதிற் பித்தமாம் வாயு மந்தம்
திரண்டமார் வலியே குன்மஞ் சேட்டுமஞ் சூலை வாதம்
வெருண்டநாய் நரிக டித்த விடமகோ தரமே மூலம்
உருண்டுபோ மற்று நோயு மோடுமென் றோதி னாரே”

பக்.68, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி.

உடலிற் சோம்பல், களைப்பு, மார்பு (இதய) வலி, குன்மம் (வயிற்றுப்புண்), வலி, வாத, பித்த, கப அதிகரிப்பு, நாய் நரி கடிவிசம், பெருவயிறு, மூலம் என்பன இல்லாமற் போகும் போகும்.

பிரண்டையில் கல்சியம், உலர்ந்த இலையில் – 1.68g/100g, உலர்ந்த தண்டில் – 1.76g/100g, உலர்ந்த வேரில் – 1.51g/100g காணப்படுகின்றது. ஒரு நாளைக்கு தேவைப்படும் கல்சியத்தின் அளவு 1g. கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார், பொதுவாகப் பெண்களுக்கு 50 வயதுகளின் பின் சராசரியாக 1.2 g தேவைப்படும். ஏனைய உணவுகளுடன் பிரண்டையினை உணவில் சேர்த்துக்கொள்ளும்போது உடலுக்குத் தேவையான கல்சியமானது தாராளமாகக் கிடைக்கும்.

உடலில் கல்சியத்தின் தொழிற்பாடுகள் ஆவன,

  1. உடற் கலங்களின் ஒழுங்கான செயற்பாட்டுக்கு அவசியம்.
  2. தசைகள், இதயம், நரம்பு இழையங்களின் தொழிற்பாட்டுக்கு அவசியம்.
  3. என்பு வளர்ச்சிக்கு அவசியமானது.

இதேபோல் பொஸ்பரஸ்,

  1. உலர்ந்த இலையில் – 1.42g/100g
  2. உலர்ந்த தண்டில் – 1.82g/100g
  3. உலர்ந்த வேரில் – 1.26g/100g காணப்படுகின்றது.

சராசரியாக ஒரு நாளைக்குத் தேவைப்படும் பொஸ்பரஸ் 0.4g. என்பு வளர்ச்சிக்கும் பற்களின் வளர்ச்சிக்கும் பொஸ்பரஸ் அவசியமானதாகும்.

பிரண்டையானது பாரம்பரியமாக துவையலாக உணவுடன் சேர்த்துக்கொள்ளப்டுகின்றது. பிரண்டையின் முக்கியத்துவத்தை அறிந்தே வாழ்வியல் சடங்குகளில் குருக்களுக்கு தான உணவுப் பொருட்களுடன் பிரண்டையும் சேர்த்து வழங்கப்படுகின்றது.

பிரண்டையை இலகுவாக நாளாந்தம் பயன்படுத்த பிரண்டை வடகம் சிறந்தது. இதனை தேரையர் காப்பியத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“வச்சிரவல்லி வடகந் தனைத்தின
வுச்சித மாக வொழியுங் கபப்பிணி”

பக்.20, தேரையர் காப்பியம்.

வச்சிரவல்லி வடகத்தை தினமும் உண்டுவர கப தோசத்தால் வந்த பிணிகளெல்லாம் ஒழியும். மேலும்,

“வச்சிரவல்லி வடகமதைச் சொல்வேன்
மந்தவாய்வு மகோதரம் வல்லைபோம்
மார்வலித்தல் உளைத்தல் கடுத்தல்போம்
வைகலும் திடமாம் உடலினுக்கே …

வச்சிரவல்லி வடகத்தை உண்டுவர மந்தத்துடன் கூடியவாயு, பெருவயிறு, வயிற்றுவலி என்பன தீரும். அதேபோல் நெஞ்சில் ஏற்படும் வலி, உளைவு, கடுப்பு என்பனவும் தீரும். இவற்றுடன் உடல் வன்மை பெறும்.

பிரண்டை வடகம் செய்யும் முறை

… பச்சைப்பிரண்டைகொய்து பாண்டத்திட்டு
நிறைத்தக் கிரத்தால் இருபகல்கழித்து
நற்கதிர்பசை யதில்கொளப் பானுவிலீர்பகல்
வச்சுலர்த்தி யதைநிறுத் தந்நிறை
மன்னுபாத அரிதகி சுக்குகொள்
மாடமஞ்சள் மிளகுளி சீரகம்
வாய்விளங்க மிலவண மிப்பொருள்
உச்சநீச மிலாமனி றுத்ததி
லூறுகாடி சலமிட்டரைத்ததை
ஒக்கநையப் பிசைந்து வடகஞ்செய்
துலரவைத்தெடுத்துக் கொள்ள லாகுமே”

– பக்.20, தேரையர் காப்பியம்.

பச்சையாகப் பிரண்டையை நறுக்கி ஒரு பாத்திரத்திலிட்டு பிரண்டை மூழ்குமாறு பசுவின் மோர்விட்டு அதிலுள்ள பசைபோகுமாறு இரண்டு நாள் வெயிலில் வைத்துலர்த்தி பின் அதில் 100 கிராம் நிறுத்து எடுத்து நன்கு தூளாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

கடுக்காய், சுக்கு, கொள்ளு, மஞ்சள், மிளகு, உள்ளி, சீரகம், வாய்விடங்கம், உப்பு என்பன 10 கிராம் வீதம் எடுத்து அரிசி கழுவிய நீரில் அரைத்து எடுத்து மோரில் ஊறவிட்டு காயவைத்த பிரண்டைத் தூளுடன் பிசைந்து வடகமாக்கிக் கொள்ள வேண்டும்.

பிரண்டை வடகத்தினை நெய்யில் பொரித்து உண்ணுதல் நன்று.

முருங்கை

“முருங்கை நட்டவன் வெறுங் கையோடு போவான்” என்ற பழமொழி மூலம் முருங்கை மரத்தின் பயனையும் அதன் இலைகளின் பயனையும் அறிந்து கொள்ளலாம். முருங்கை மரத்தை நட்டு வளர்த்து அதன் பயன்களை அனுபவித்தவன் உடற் திடகாத்திரத்தோடு கைத்தடி இன்றி எவர் உதவியும் இன்றி ஆரோக்கியமாக இருப்பான் என்பதே இப்பழமொழியின் கருத்தாகும்.

முருங்கையின் இலை, காய் என்பன உணவாகப் பயன்படுவது போல ஏனைய பகுதிகளும் மருந்தாகப் பயன்படுகின்றன.

“உண்டிடு முருங்கை தன்னி லுறுமிலை வாயு மந்தம்
அண்டிடா மயக்கந் தீர்க்கு மணுகிடும் பித்தம் பூவால்
கண்டகண் பசாட்டி னோடு கருங்கணோய்ப் படலம் போகும்
மண்டுகாய் பெலனுண் டாக்கு மறுவில்பத் தியத்திற் காமே”

– பக்.79, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி.

முருங்கையிலை வாயு, மந்தம் ஏற்படாமல் தடுக்கும். பித்த தோச அதிகரிப்பால் சோர்வு, மயக்கம் ஏற்படாமல் தடுத்திடும். பூவினால் கண்ணில் பசாடு வளர்தல், கண்ணோய்களும் போகும். முருங்கைக்காயினால் உடலுக்கு நல்ல பலமுண்டாகும். இது மறுபத்தியத்துக்கு உகந்ததாகும். அதாவது நோய்கள் ஏற்பட்டு மாறியவுடன் உடலைத் தேற்றுவதற்கு உகந்ததாகும்.

தேரையர் காப்பியத்திலும் முருங்கை உடலுக்கு வன்மையைத் தந்து நோய்களைப் போக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“முருங்கைக் காய்கறி முகிழிலை வேர்கொள
வொருங்குள நோயெலா மோடவுந் துரத்துமே”

-பக்.22, தேரையர் காப்பியம்.

முருங்கைக்காய், பூ, இலை, வேர் என்பனவற்றை உணவாகவும் மருந்தாகவும் உட்கொள்ள, உடலை ஒழுங்காக்கி நோய்கள் எல்லாவற்றையும் துரத்தும் எனக் குறிப்பிடப்படுகின்றது.

முருங்கைப்பூவானது விந்துற்பத்தியை அதிகரிக்கும்.

முருங்கை  அதிகளவிலான ஊட்டச்சத்துக்களைக் கொண்டது. கறிமுருங்கை இலை  நிறைந்த இரும்பு, கல்சியத்தையும், பல அமினோஅமிலங்கள் நிறைந்த புரதத்தையும் கொண்டது. எனினும் நாம் பச்சையாக உள்ளெடுக்கும்போது கிடைக்கும் அளவைவிட இலைகளை உலரவைத்து தூளாக்கி எடுக்கும்போது நிறைந்த ஊட்டச்சத்துக்களைப் பெற்றுக்கொள்ளமுடியும். அத்துடன் மிக மலிவானதும், இலகுவாக வீட்டில் தயாரிக்கக் கூடியதும் ஆகும்.

பொன்னாங்காணி

மிகவும் குளிர்ச்சியைத் தரக்கூடிய கீரைவகைகளில் முக்கியமானது. தற்காலத்தில் இதனைப் பயன்படுத்துவதும் குறைந்து வருகின்றது. ஆனால் உண்மையில் தற்கால நோய்களுக்கு குறிப்பாக நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு சிறந்தது.

“அதிகமாம் பொன்னாங் காணிக் கரோசிநீர்க் கடுப்புப் பித்தம்
முதிர்சல ரோகங் கண்ணோய் மூலம்பீ னிசங்க யம்போம்
குதியினில் வாத மோடு கொடியபீ லிகையும் போகும்
மதுரமா முண்ணக் காந்தன் மாறிடுங் குளிர்ச்சி யுண்டாம்”

– பக்.72, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி

பொன்னாங்காணி

பொன்னாங்காணியால் பசியின்மை, உணவில் வெறுப்பு, சிறுநீர்க்கடுப்பு, அதிக பித்தம், சலரோகம், கண்ணோய், மூலம், பீனிசம், கசம், குதிக்கால் வாதம், மண்ணீரலில் ஏற்படும் வீக்கத்தால் ஏற்படும் கொடிய வயற்றுவலி என்பன தீருவதுடன் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.

பொன்னாங்காணியில் அதிகமாக கல்சியம், இரும்பு, பொஸ்பரஸ், பொட்டாசியம், நாகம், மக்னீசியம், சோடியம்  அதிகளவில் காணப்படுகின்றன. குருதிச்சோகை ஏற்படாமல் தடுக்கும்.

பொன்னாங்காணியும் கற்ப (Antioxidant) மூலிகைகளுள் ஒன்றாகும். கண்களுக்குச் சிறந்த ஆரோக்கியத்தை தந்து கண்ணில் ஏற்படும் நோய்கள் குணமாக உதவும். முடிவளர்ச்சியை அதிகரிக்கும். கற்ப முறையில் நாற்பது நாட்கள் உப்பின்றி வேகவைத்து வெண்ணெய்யில் உண்டுவர கண்களுக்கு ஆரோக்கியத்தைத் அதிகம் தரும்.

தினந்தோறும் பொன்னாங்காணியை சீராக உண்டுவரின் நோய்களெல்லாம் குணமாகும் என தேரையர் காப்பியம் கூறுகின்றது.

“சீதையை நாடோறுஞ் சீரண வுண்டிடக்
காதை சேர் நோயலாங் காதமோ டிடுமே”

-பக்.10, தேரையர் காப்பியம்.

மொசுமொசுக்கை / முசுமுசுக்கை

“… தேடுநன் முசுமு சுக்கை சேடமே வரட்சி தாகம்
ஓடரு மிருமல் பித்த முழலையே சுரத்தை மாற்றும்”

– பக்.72, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி.

நாவரட்சி, தாகம், சளி, இருமல், அழல், சுரம் என்பவற்றை மாற்றும். பொதுவாக பித்த, கப தோச நோய்களை மாற்றும். தனியாக சம்பலாக அரைத்து அல்லது இலைகளை இரசத்துடன் சேர்த்து உணவுடன் உட்கொள்ளலாம்.

அகத்தி

 யாழ்ப்பாண பாரம்பரிய உணவுப்பழக்கத்தில் கோடைகாலங்களில் உடலில் அதிக வெப்பத்தினால் உண்டாகும் உபாதைகளின் போது, அகத்தி இலை சொதியுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகின்றது. உதாரணமாக வாய்ப்புண், வயிற்றுப்புண் போன்றவற்றுக்கு சிறந்தது. உடலுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது. பித்தத்தினால் ஏற்படும் ரோகங்களுக்கு மருத்துவம் செய்ய சிறந்தது.

மேற்படி விடயங்களை யாழ்ப்பாண நூலாகிய சொக்கநாதர் தன்வந்திரியம் எனும் நூல் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

“பசிய பச்சிலை சீதம் பழுப்பினால்
நசியஞ் செய்யப் பயித்தியந் நாடிடாக்
கசியும் பூவிலை பிஞ்சுங் கறிபண்ணிப்
பொசிய கத்தி பயித்தியம் போக்குமே”

-பக்.8, சொக்கநாதர் தன்வந்திரியம்

அகத்தியை எவ்வாறு சமைத்து உண்டால் மேற்படி பலன்களைப் பெறலாம் என்று தேரையர் வெண்பா பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

“தன்னை யெழுப்பிடுபித் தப்பிணி களைத்தீர்க்கும்
பின்னும் பசியைப் பெருக்குமே – பன்னமுதல்
நிச்சயமா கப்புளிபுன் னேர்கறியா ணத்தருந்தும்
அச்சமச்ச மாகியப யம்”

– பக்.133, தேரையர் வெண்பா.

அகத்திக்கீரை

அதாவது அச்சம் தரும் பித்தப் பிணிகளைத் தீர்க்கும். பசியை அதிகரிக்கும். புளியுடன் அகத்தி இலைகளை குழம்பாக்கி உண்ண மேற்படி பலன்களை நிச்சயமாகப் பெறலாம் என்கின்றது பாடல்.

ஆனால் அகத்தியானது பொதுவாக மருந்துக்கு (நோய்க்கு அல்ல) அபத்திய உணவாகவே காணப்படுகின்றது. எனவே நோயுற்றவர்களுக்கு மருந்துண்ணுங் காலத்தில் அகத்தி உணவில் சேர்த்தல் ஆகாது.

இவற்றைவிட பல்வேறு கீரைவகைகள், இலைவகைகள் நமது பாரம்பரியத்தில் உணவாக உட்கொள்ளப்பட்டு வந்துள்ளன, உட்கொள்ளப்படுகின்றன. அந்தவகையில் தவசி முருங்கை, சண்டிஇலை, வாதநாரணி, பனங்கீரை, கற்றாளைப் பூந்துணர், வாதமடக்கி, கறிமுல்லை, பூசினி இலை எனப் பலவகைகள் காணப்படுகின்றன.

பொதுவாக கீரைவகைகள், இலை வகைகளை உண்ணும்போது அளவில் அதிகமாகவும் அதேவேளை தொடர்ச்சியாக ஒரே வகையானவற்றை உண்ணாது மாறி மாறி அனைத்தையும் பயன்படுத்துதல் நன்று. அதேபோல் பருவகாலங்களில் கிடைக்கும் கீரைவகைகள் இலைவகைகள் என்பனவற்றை நமது பாரம்பரிய முறைப்படி உணவாகக் கொள்ளுவதன் மூலம் சிறந்தபலனை அடையக்கூடியதாக இருக்கும். குறிப்பாகத் தொற்றா நோய்களின் தாக்கம் குறையும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

14326 பார்வைகள்

About the Author

தியாகராஜா சுதர்மன்

தியாகராஜா சுதர்மன் அவர்கள் யாழ். பல்கலைக்கழகத்தின் சித்தமருத்துவ பட்டதாரியும், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் உணவு விஞ்ஞானத்தில் பட்டப்பின் டிப்ளோமா பட்டதாரியும், தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் உளவளத்துணை டிப்ளோமா பட்டதாரியும் ஆவார்.

அரச சித்த மருத்துவ உத்தியோகத்தராகப் பணிபுரியும் இவர் ஒரு சிறுகதை எழுத்தாளருமாவார். இவர் 'ஆகாரமே ஆதாரம்' எனும் நூலையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)