வாழைப்பூ – காய் – தண்டு
“வாழையின் பூவி னாலே வளர்பெரும் பாடு போங்காய்
சூழுறு மரிய மூலப் பிரமேகந் தொலைக்கு மித்தண்
டாழுறு மலக்கட் டெல்லா மகற்றுமென் றுரைத்தார் முன்னே
தாழ்விலாப் பொதிகை மேய தபோதனர் கோமான் றானே”
– பக்.76, அமிர்தசாகரம் பதார்த்தசூடாமணி
வாழைப்பூவினால் பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் உதிரப்பெருக்கு குறையும். வாழைக்காய்க்கு மூல நோய்கள், நீரிழிவு என்பன கட்டுப்படும். (ஏனைய நீரிழிவுக்குரிய பத்தியம் காக்கப்பட வேண்டும்).
வாழைத்தண்டினால் மலக்கட்டு நீங்கும் என அகத்தியர் பெருமானால் குறிப்பிடப்பட்டுள்ளது. வாழைப்பூ, காய் என்பன பற்றி அகத்தியர் குணபாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பயன்கள் பின்வருமாறு காணப்படுகின்றன.
வாழைப்பூ
“வாழைப்பூ மூலரத்தம் மாபிரமி வெட்டைபித்தம்
கோழைவயிற் றுக்கடுப்பு கொல்காசம் – ஆழியனல்
என்னஎரி கைகால் எரிவுந் தொலைத்துடலில்
மன்னவளர்க் குந்தாது வை”
– பக்.814, குணபாடம். (அ.கு)
குருதிமுளை (எருவாய்முளை) அதாவது மூலத்தால் குருதி போதல், வெள்ளைபடல், அதிஉடற்சூடு, வயிற்றுக்கடுப்பு, சளி, தீவிர ஒவ்வாமை, கை கால் எரிச்சல் என்பனவற்றை குணமாக்கும். உடற்தாதுக்களை வளர்த்து உடலுக்கு பலத்தைத்தரும்.
வாழைக்காய் – பிஞ்சு
“உதிரம் விழுகடுப்போ டுண்மூல ரத்தம்
எதிரிலிலுறு நீரிழிவும் ஏகும் – மதிநுதலே
பேழை வயிற்றுப்புண் பேருந் துவர்ந்த
வாழக்கச் சற்கு மருண்டு”
– பக்.814, குணபாடம் (அ.கு)
மூலரோகத்தில் மூலக்கடுப்பு, குருதிபோதல் போன்றவற்றுக்கும், நீரிழிவில் அடிக்கடி சிறுநீர்கழித்தல், வயிற்றுப்புண் போன்ற ரோகநிலைகளில் சிறந்த பத்திய உணவாகும்.
வாழைக்காய்
“வாந்திபித் தம்பேதி வாய்நீர் வயிறுளைதல்
ஆர்ந்தவ னலங்காசம் அண்டாதாம் – சூழ்ந்தேறு
செம்புனலுந் தென்புமுண்டாம் திண்டி மிகப்பெருகும்
அம்புவியுள் வாழையின் காய்”
-பக்.815, குணபாடம் (அ.கு)
வாழைக்காயினால் கழிச்சல், வாய்நீருறல், உமிழ்நீர்ச்சுரப்பு, வயிறுழைதல், உடற்சூடு, வரட்டிருமல் போன்ற வாதபித்த தோசங்களால் உணவுத் தொகுதியில் ஏற்படும் ரோகங்கள் குணமடையும். குருதி அதிகரிப்பையும், உடல் வன்மையையும், உணவில் விருப்பத்தையும் உண்ணும் அளவையும் அதிகரிக்கும்.
தேங்காய்ப்பால்
பொதுவாக எமது பாரம்பரியத்தில் தேங்காய், தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய் என்பன சமையலில் அதிகமாகவே பயன்படுத்தப்படுகின்றது. கொழுப்புச்சத்துள்ள இவற்றை அதிகமாகப் பயன்படுத்தும்போது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. எனினும் எமது நாட்டினைப் பொறுத்தவரையில் நமது உணவில் கொழுப்புச்சத்தின் பிரதான மூலமாக இருப்பது இவை தான்.எனவே இவற்றினை பயன்படுத்தினால் ஆபத்து என்பதனைவிட எவ்வாறு அளவாகப்பயன்படுத்த வேண்டும் என்பதே தேவையான விடயமாகும். அதிலும் இன்றைய பொருளாதார நெருக்கடியில் இவற்றின் பயன்பாடு அவசியமாகின்றது.
“….மங்கிடா விதன்பா லிற்கு வலுமிக வுண்ணடாம் வாதம்
தங்கிடும் வாயு வுண்டாந் தாதுவிர்த் திக்கு மன்றே”
– பக். 82, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி
தேங்காய்ப்பாலுக்கு உடல் வலிமையடையும். ஆயினும் வாததோசமானது பலத்திட உடலில் வாயு அதிகரித்து உடல் குத்துழைவு, வலி உண்டாகும். வாதநோய்கள் அதிகரிக்கும். உடற்தாதுக்கள் விருத்தியடையும் இதன்போது உடலில் கொழுப்பும் அதிகரிக்கும்.
இதனால் உடலில் கெட்ட கொழுப்புக்களின் உருவாக்கம் (LDL – cholesterol) அதிகரிக்கும். இதனால் இதயநோய்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. எனவே அளவோடு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஐந்து பேர் கொண்ட குடும்பம் ,நடுத்தரமான அளவுடைய ஒரு தேங்காய் ஒரு நாளைக்கு பாவித்துக்கொள்ள முடியும். இது நாம் உட்கொள்ளும் ஏனைய கொழுப்பு உணவுகளின் அளவுடன் மாறுபடும். தேங்காய்ப்பால் அதிகம் பயன்படுத்துபவர்கள் பேக்கரி உணவுகளைத் தவிர்த்தல் நன்று.
பயற்றங்காய்
“ஐய மகலு மரோசிகெடுந் தீபனமாம்
பையுதிர வாய்வும் பறக்குமென்பார் – செய்யு
நயத்தவ வுசதமு நாசமடையும்
பயற்றங்காய் தன்னை யுண்டுபார்”
– பக்.222, பதார்த்தகுண சிந்தாமணி
பசியுண்டாகும், உடலைப்போசிக்கும், கப ரோகங்கள் அகலும் (சளி, சுவாச நோய்கள் …), இரத்த வாந்தி நிற்கும் அதேவேளை நோய்களுக்காக உண்ணும் மருந்துகளை முறிக்கும்.
பொதுவாக அவரையினக் காய்கறிகள் நீர்ச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் உயிர்ச்சத்துக்கள், கனிமங்களை அதிகம் கொண்டவையாகும். இதனால் இவை உடலுரமாக்கிகள் என குறிப்பிடப்படுகின்றன. இதனாலேயே உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடிய உணவான ஒடியல்மா கூழின் பிரதான உள்ளடக்கங்களில் ஒன்றாக பயற்றங்காய் உள்ளது. முக்கியமாக உயிர்ச்சத்து வகைகள், கனிம வகைகள், புரதவகைகள் பெரும்பாலானவற்றை பயற்றங்காய் கொண்டுள்ளது.
இதனை தேரையர், தேரையர் காப்பியத்தில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.
“… அவரையின் காய்கறி யயிலமெய் யுரமாகும்
சுவையுறு பயற்றின்காய்க் கறிமிக நன்றே”
– பக். 23, தேரையர் காப்பியம்
அவரையினக் காய்களில் கறிகளை பக்குவமாக உண்டுவரின் உடலுக்கு உரமாகும். அவ்வாறே பயற்றங்காய்க் கறியும் உடலுக்கு மிக நன்றே ஆகும்.
ஒடியல்மா கூழ்
(சமையற் கலசம் – ஆ.பவானி)
தேவையான பொருட்கள்
- ஒடியல்மா – 1 சுண்டு
- பயற்றங்காய் – 1/4 கி.கிராம்
- மரவள்ளிக்கிழங்கு – 1/4 கி.கிராம்
- கத்தரிக்காய் – 1/4 கி.கிராம்
- பலாக்கொட்டை – 200 கிராம்
- கடலை – 100 கிராம்
- வாழைக்காய் – 1 பெரியது
- செத்தல் மிளகாய் – 25 -30
- மிளகு – 1 மேசைக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
- உள்ளி – 5 பெரியபல்லு
- பழப்புளி – 1 பாக்களவு
- புழுங்கலரிசி – 1/4 சுண்டு
- முள்ளில்லா மீன்வகை – 1 கிலோகிராம்
- நண்டு – 2 – 4
- பாரை மீன் தலை – 1
- சிறிய மீன் கருவாடு – 100 கிராம்
- முசுட்டை இலை – 20
- பல்லுப்போல் வெட்டப்பட்ட தேங்காய்ச் சொட்டுகள் – 1/2 சுண்டு
- உப்பு – தேவையான அளவு
(சைவ உணவுப்பழக்கமுள்ளோர் அசைவ உணவுப்பொருட்களைத் தவிர்த்து அதற்கு ஏற்றாற்போல் ஏனைய சைவ உணவுப்பொருட்களை தேவைக்கு ஏற்றவாறு கூட்டிக்கொள்ளலாம்).
கடலையைக் கழுவி 3 மணி நேரம் ஊற வைக்கவும். செத்தல் மிளகாய், மிளகு, உள்ளி, மஞ்சள் என்பவற்றுக்கு ஓரளவு நீர் சேர்த்துப் பசுந்தாக அரைத்தெடுக்கவும். மீன்வகைகள், கருவாடு, நண்டு என்பவற்றைத் துப்பரவு செய்து கழுவி வைத்துக்கொள்ளவும். அதேபோல் மரவள்ளிக்கிழங்கு, பயற்றங்காய், கத்தரிக்காய், வாழைக்காய், பலாக்கொட்டை என்பவற்றை சுத்தஞ் செய்து சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்க. பழப்புளியை ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு கரைத்து வைத்துக்கொள்க.
ஒடியல்மாவைப் பாத்திரத்தில் இட்டு அளவுக்கு நீர் சேர்த்து கூழ்ப்பதமாக கரைத்து அரைமணிநேரம் ஊற வைத்தெடுத்து ஒருதுணியில் இட்டுப்பிழிந்தெடுத்துப் பிறிதொரு பாத்திரத்திலிட்டு, அரைத்த கூட்டையும் சேர்த்து, கரைத்து வைத்துள்ள 1 டம்ளர் பழப்புளியையும் விட்டு, அளவாக தண்ணீர்விட்டு நீர்ப்பதமாக கரைத்து வைக்கவும்.
ஒரு பானையில் (ஒரு கொத்து அவியக்கூடிய பானை) அதன் அரைவாசிக்கு தண்ணீர்விட்டு கொதிக்கவைத்து, கொதித்தபின் சுத்தமாக்கி வைத்துள்ள மரக்கறிவகை, முசுட்டை இலை, கழுவிய அரிசி, கடலை என்பவற்றை இட்டு அவிய வைக்கவும். இவை முக்காற்பதமாக அவிந்த பின்பு மீன் வகைகள், கருவாடு, நண்டு என்பவற்றைச் சேர்த்து நன்கு அவியவிடவும். மரக்கறி வகை நன்கு அவிந்தபின் ஒடியல்மாக் கரைசலை சேர்த்து நன்றாகக் கரண்டியால் கலக்கி அரைத்து வைத்த செத்தல், மிளகு, உள்ளி, மஞ்சள் கலவையையும், தேவையான அளவு உப்பு சேர்த்து ,தேங்காய்ச்சொட்டையும் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி சூட்டுடன் பரிமாறவும்.
எலுமிச்சம் பழம், பலாக்கொட்டை
“வயமாஞ்சம் பீர மேவும் வண்பழம் பித்தம் போக்கும்
கயமான விழிக்கு நன்றாங் கருதுமிவ் விலைபுண் ணுக்காம்
நயமான பலாப்ப ழங்காய் நண்ணுமை வாத பித்தம்
பயமான கரப்பன் றானும் பகர்வித்து வாதம் வாயு”
– பக். 76, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி
எலுமிச்சம்பழமானது அதிகரித்த பித்தத்தை போக்கி உடலுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது. கண்ணுக்கு சிறந்த ஆரோக்கியத்தைத் தரக்கூடியது. இதன் இலையானது புண்களை ஆற்றக்கூடியது.
அதிகளவு உயிர்ச்சத்து C இனை அதிகமாகக் கொண்டது. உயிர்ச்சத்து C ஆனது இரும்புச்சத்தினை உடலால் அகத்துறிஞ்சும் (Ferrous iron -Fe2+ is better absorbed than ferric iron -Fe3+) நிலைக்கு மாற்ற தேவையானது. இதன் மூலம் குருதிச்சோகை (Anaemia) ஏற்படுவதைத் தடுக்கின்றது. அதிக இரும்புச்சத்துள்ள கீரைவகைகள், இலைவகைகள் சமைக்கும்போது, இலைகளில் சம்பல் அரைக்கும்போது தேசிப்புளி சேர்க்கப்படுகின்றது. உயிர்ச்சத்து C ஆனது வெப்பத்துக்கு அழிவடையும் தன்மை கொண்டதினால் அடுப்பில் இருந்து இறக்கிய பின்னரே கறியுடன் சேர்க்கப்பட வேண்டும். அத்துடன் உயிர்ச்சத்து C கற்பமாகவும் (Antioxidant) தொழிற்படுகின்றது.
பலாப்பழம், பலாக்காய் என்பன கபதோசத்தை வாத, பித்த தோசங்களுடன் பொருத்தி அவற்றினைப் பலவீனப்படுத்தி தோல் நோய்களை ஏற்படுத்தக்கூடியவை. பலாப்பழம் அதிகம் உண்ணும்போது மேற்படி உபாதைகள் ஏற்படும். அதேவேளை பலாக்கொட்டையானது வாததோசத்தை அதிகரித்து உடலில் வாயுவை ஏற்படுத்தக்கூடியது.
இதனாலேயே எமது முன்னோர் பலாப்பழம் அதிகமாக உண்ணும்போது பச்சையாக பலாக்கொட்டை ஒன்றையும் உண்பார்கள். இதன்போது பழம் உண்ணும்போது பலவீனப்படும் வாத தோசத்தை பலாக்கொட்டை நன்னிலைக்கு கொண்டுவந்து பலாப்பழத்தினால் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கின்றது. பலாப்பழ பருவ காலத்தில் பலாக்கொட்டைகளில் பொரியல், குழம்பு என்பன சமைப்பதினால் மேற்படி உபாதைகள் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது.
வெண்டைக்காய்
அதிகளவிலான கனிமங்களைக் கொண்டது. அதிகளவிலான மங்கனீஸை கொண்டது. 100 கிராமில் ஒருநாளைக்குத் தேவையான மங்கனீஸில் 34% ஐ கொண்டுள்ளது. மங்கனீஸ் ஆனது மாபோசணைக் கூறுகளான மாப்பொருள், கொழுப்பு, புரதம் போன்றவற்றின் அனுசேபத் தொழிற்பாடுகளுக்கு அவசியமானதுடன் என்பு வளர்ச்சி, சுக்கில தாது, முட்டை வளர்ச்சிக்கும் தேவையானதாகும்.
இதனைவிட செப்பு, மக்னீசியம், கல்சியம், பொஸ்பரஸ், பொற்றாசியம், நாகம் போன்ற கனிமங்களையும், உயிர்ச்சத்துக்களான K, C, B9, B6, B1, B2, A என்பவற்றையும் குறிப்பிடத்தக்களவு கொண்டது. உயிர்ச்சத்துக்களான K, C என்பன நாளொன்றுக்கு தேவையான அளவிலும் 25% க்கு மேல் 100 கிராமில் உள்ளன.
“கண்ட கிராணி கடிய அதிசாரம்
விண்டவெண் சீதரத்தம் மேவுங்காண் – ஒண்டொடியே
வண்டற்காய் வெய்யகப வாதமிகும் வாய்க்குணவாம்.
வெண்டுக்காய் உண்பார்க்கு விள்”
-பக். 214, பதார்த்த சூடாமணி
கிராணி என்பது நீண்ட நாட்களாக காணப்படும் கழிச்சல் ஆகும். இது குடலில் புண்களை ஏற்படுத்தக்கூடியது. அதன் தொடர்ச்சியாக மலத்துடன் குருதியும் போகும். இந்நிலை அதிசாரம் எனப்படும். தொடர்ந்து மலத்துடன் சீதமும் வெளியேறும். இந்நிலைகளில் வெண்டைக்காய் சிறந்த பத்திய உணவாகக் காணப்படும். வெண்டைக்காய்க்கு கப, வாத தோசங்கள் அதிகரிக்கும்.
வெங்காயம்
பொதுவாக சமையலின்போது சுவைக்காகவும், கறிவகையாகவும் வெங்காயம் பயன்படும்.
“வெப்பமூ லங்கிரந்தி வீறுரத்த பித்தமுடன்
செப்புநா அக்கரந்தீ ராத்தாகம் – வெப்புக்
கடுப்பறும்மந் தஞ்சந்நி காசம்வயிற் றுப்பல்
தடிப்பேறும் வெங்காயத் தால்”
– பக். 599, குணபாடம் (1936)
உடற்சூடு, மூலம், கிரந்தி, இரத்தபித்தம் (இரத்தக்கசிவுடன் தொடர்பான நோய்நிலை), வாய்ப்புண், தீராத தாகம் என்பன குறைவடையும். ஆனால் பசியின்மை, இருமல், வயிறூதல் என்பன உருவாகும்.
வெங்காயப்பூ
“வயிற்றுச் சிறுநோயை வாத வலியை
உயித்தியஞ் செய்யாமல் ஓட்டும் – குயிற்றாத
சிங்காரக் கொங்கைச் செழுந்திருவே! நாட்டிலுறை
வெங்காயப் பூஎனவே விள்”
– பக். 598, குணபாடம் (1936)
மூன்று தோசங்களாலும் ஏற்படும் வயிற்றுப் புண் மற்றும் குடலைப் பற்றிய வாத நோய்களையும் குறைக்கும்.
மரவள்ளிக்கிழங்கு
பஞ்ச காலத்தில் ஏழை மக்களின் சிறந்த உணவாகும். ஆனாலும் மந்தத்தை ஏற்படுத்தும். இதனால் பசி அதிகரித்துள்ள நிலையில் பசியைக் குறைக்க சிறந்த உணவுத் தெரிவாகும். நிறைந்த மாச்சத்தினைக் கொண்டது. இதனை உலர்த்தி மாவாக்கி கஞ்சி செய்து குடிக்கலாம்.
“பித்தங் கலந்த பெருவாயு வைக்கூவு
மெத்த அனல் மந்தத்தை மேலெலுப்புஞ் – சுத்த
இரவள்ளிக் கொண்டகுழ லேந்திழையே யிந்த
மரவள்ளிக் கந்தமென வை”
– பக்.138, பதார்த்தகுண சிந்தாமணி
இக்கிழங்கை உண்பதினால் பித்தவாத தோச தொந்தத்தினையும், வாயுவையும் அதிகரிப்பதுடன், பசியை உண்டாக்கக் கூடிய அக்கினியையும் மந்திக்கும்.
தாமரைக் கிழங்கு
“கண்ணுக் கொளிகொடுக்குங் காசபித்தம் போக்கு
மெண்ணுங் குளிர்ச்சிதரு மேந்திழையே – மண்ணுலகிற்
றூமரைப்புண் ணும்போக்குந் தொந்திக் கடுப்பகற்றும்
தாமரைக்கந் தமதுதான்”
– பக். 144, பதார்த்த சூடாமணி
சிறந்த கண்பார்வையைத் தரும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. பித்த தோசத்தில் ஏற்படும் ஒவ்வாமைகளைக் போக்கக் கூடியது. தசையைப்பற்றிய தவளைச் சொறி எனப்படும் நோயைக் குணமாக்கும். வயிற்றில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கும்.
புளியம்பழம்
“புத்தியு மந்தமாகும் பொருமியே யுடலமூதும்
பத்தியத் தவறுஞ்சந்நி பாதமாஞ் சுரங்கள் வீறுஞ்
சர்த்தியும் பித்தந்தீரும் தனுவெலாம் வாதமேறு
மத்திபந் தாதுபுட்டி வருந்திசை நரைபுளிக்கே”
– பக். 226, பதார்த்தகுண சிந்தாமணி
இதனால் சிந்தனைத்திறன் குறையும், உடல் பெருக்கும் (உடல் ஊதல்), பத்தியத்துக்கு ஆகாத அபத்தியப்பொருள் ஆகும். மூன்று தோசங்களாலும் ஏற்படும் சுரங்கள் அதனால் ஏற்படும் சத்தி, பித்த தோச அதிகரிப்பு நீங்கும். அங்கங்களில் வாத சலனமேற்பட்டு வாதத்துக்குரிய உபத்திரவங்கள் ஏற்படும். உடற்தாதுக்கள், சுக்கிலதாது விருத்தி குறையும்.
ஆனால் புதிய புளியை அடுத்த பருவத்தில் பாவிக்கும்போது அது பழைய புளியாகின்றது. இதன்போது பழம்புளியின் குணங்களில் மாற்றம் ஏற்படுகின்றது.
பழைய புளி
“தீதிற் பழம்புளியைச் சேர்க்கத் திரிதோசம்
வாதமொடு சூலைகப மாறுங்கா – ணோதுகுரஞ்
சர்த்தியென்ற தோசமிவை சாந்தமாங் கண்ணோய்போம்
பித்தமென்ற பேரொழியும் பேசு”
– பக். 227, பதார்த்தகுண சிந்தாமணி
தீதில்லா பழைய புளியை உணவில் சேர்க்க மூன்று தோசங்களால் ஏற்படும் ரோகங்கள், வாதத்தில் ஏற்படும் வலிகள், கப ரோகங்கள், சமிபாடு இன்மை, சத்தி என்பன மாறும். கண்களில் ஏற்படும் ரோகங்கள் தணியும். மனநிலை சீராகும்.
இவற்றுக்கமைவாகவே காய்ச்சல், அஜீரண நிலைகளில் மற்றும் நாட்பட்ட சில ரோக நிலைகளில் புளிக்கஞ்சி பத்திய உணவாக கொடுக்கப்படுகின்றது. இங்கு குறிப்பிடப்பட்ட மரக்கறி வகைகள் யாழ்ப்பாணத்து நூலான அமிர்தசாகரம் ,பதார்த்த சூடாமணி மற்றும் பதர்த்தகுண சிந்தாமணி எனும் நூல்களை அடிப்படையாக கொண்டவை. அதனால் தற்போது பெரிதும் பயன்பாட்டில் உள்ள தக்காளி, கரட், பீற்றூட், கோவா, உருளைக்கிழங்கு, மைசூர்பருப்பு …. போன்றன இவற்றில் உள்ளடக்கப்படவில்லை.
எனினும் வித்துக்கள், கிழங்குவகைகள் போன்றவற்றுக்கான பொதுவான மருத்துவ குணங்களைக் கொண்டு அவற்றின் குணங்களை ஓரளவு அறிந்து கொள்ளலாம். பொதுக்குணங்களில் இருந்து விதிவிலக்குகளும் உண்டு.
உணவுப்பொருட்களில் உள்ள வித்துக்களின் பொதுவான குணம்
சமையலின்போது நாம் சமைக்கும் மரக்கறி வகைகளில் உள்ள வித்துக்களை கழித்துவிடுவது உண்டு. ஆனால் வித்துக்கள் அதிக ஊட்டச்சத்துக்களையும், நன்மை பயக்கக் கூடிய அதிகளவிலான தாவர இரசாயனங்களையும் கொண்டவை. அவற்றை நாம் கழித்துவிடாமல் உணவுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளல் வேண்டும். உதாரணமாக பூசணி விதைகூட மேலை நாடுகளில் சத்துள்ள நொருக்குத் தீனியாக பயன்படுகின்றது.
“மிக்கனலி மிக்குநளிர் வித்துக்கள் விதைப்புரக்கத்
தக்கனவன் றாஞ்சமர சந்தகவா – மக்குறிகா
யாகாய மின்றிபடர்ந் துறைவித் தங்கிநெடு
மாகாய மென்றார்வித் தாம்”
– பக்.243, பதார்த்த குண சிந்தாமணி.
அதிக சூடுள்ள, அதிக குளிர்ச்சி கொண்ட வித்துக்கள் விந்துற்பத்தியை பெருக்குவதில்லை. ஆனால் சூடும் குளிர்ச்சியும் சமமாயுள்ள வித்துக்கள் விந்துற்பத்தியை அதிகரிக்கக் கூடியன.
இடைவெளியின்றி ஒன்றோடு ஒன்று நெருங்கியிருக்கும் தூதுவளை போன்ற வித்துக்கள் அதிக சூடுள்ளவையாகும். இடைவெளியுடன் ஒன்றுடன் ஒன்று நெருங்காமல் உள்ள பூசினி போன்ற வித்துக்கள் அதிக குளிர்ச்சியுடையவை ஆகும்.
தனித்தனியே சமமான இடைவெளியுடன் இருக்கும் முருங்கை, பாதாம், முந்திரி போன்ற வித்துக்கள் சூடுகுளிர் சமமாயுள்ளனவாகும். இவை விந்துற்பத்தியை அதிகரிக்கவல்லன.
உணவுப்பொருட்களில் உள்ள கிழங்குகளின் பொதுவான குணம்
“கிழங்குவகை யின்பேரைக் கேண் மூலத்துண்
முழங்கும் வாதத்தின் முரசம் – வழங்குகின்ற
சூரணக் கிழங்குகளைத் துய்த்தார் பேர்சொல்லிற்
சீரணக் குடும்பமங்கே சொல்”
– பக். 149, பதார்த்தகுண சிந்தாமணி
பொதுவாக கிழங்குளை உண்ணும்போது மூலத்தில் வாததோசமானது அதிகரிக்கும். இதனால் பெருங்குடலில் வாய்வு அதிகரித்துக்கொள்ளும். வயிறு ஊதல், பொருமல் ஏற்படும். மூல நோயை ஏற்படுத்தக்கூடியன. விதிவிலக்காக கருணைக்கிழங்கு மூல நோயைக் குறைக்கும்.
தொடரும்.