முள்ளங்கி இலை, கிழங்கு
“முள்ளங்கி யிலைக்கு வாயு முதிர்ந்திடும் வலிகுன் மம்போம்
எள்ளலி லிதன்கி ழங்கிற் கேகுமே மூல மேகம்
விள்ளுறு சேட காச மிகுகுன்ம மிருமல் வாந்தி
தள்ளிடு மிதனின் கொட்டை சார்கொள்ளிக் கரப்ப னீக்கும்”
– பக். 68, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி.
முள்ளங்கி இலைக்கு வாதம் அதிகரிக்கும், வலிகுன்மம் (வலியுடன் கூடிய வயிற்றுப்புண்) மாறும்.
முள்ளங்கிக் கிழங்குக்கு, மூல நோய், மேக (சிறுநீரக நோய்கள், பாலியல் நோய்கள், நீரிழிவு போன்ற சிறுநீருடன் தொடர்பான நோய்கள்), சுவாச நோய்கள், மிகுந்த குன்மம், இருமல், வாந்தி என்பனற்றைக் குறைக்கும். முள்ளங்கி கிழங்கின் சாறினை 30-60 மி.லீ குடித்துவர சிறுநீரைப் பெருக்கும். இதனால் சிறுநீரகத் தொற்று, சிறுநீரகக்கல் போன்ற வியாதிகள் குறைவடையும். முள்ளங்கியை சமைத்தோ அல்லது பச்சையாகவோ உணவுடன் உள்ளெடுக்கும்போது சமிபாட்டை சீராக்குவதுடன், பசியினையும் அதிகரிக்கும். கிழங்குகளில் முள்ளங்கி, கருணைக்கிழங்கு என்பன உடலுக்கு சிறந்தவை என தேரையர் காப்பியம் கூறுகின்றது.
“கருணைக் கிழங்குநற் கந்தமுள் ளங்கியு
மருவுமிவ் வுடற்கு வாய்த்ததென் றுரைப்பர்”
– பக்.23, தேரையர் காப்பியம்.
பூசணி
- நீற்றுப்பூசணி / பெரும்பூசணி / வெண்பூசணி / கலியாணப்பூசணி / கூழ்ப்பாண்டம் / சாம்பற் பூசணி
- பூசணி / சர்க்கரைப்பூசணி / பறங்கிப்பூசணி
- சுரைக்காய் / கோடைப்பூசணி / குழிப்பறங்கிக்காய்
சாதாரணமாக நாம் சர்க்கரைப்பூசணியையே பூசணிக்காய் என்கின்றோம். ஆனால் இவை மருத்துவ நூல்களில் பறங்கிப் பூசணி என்றே குறிப்படப்படுகின்றது.
நீற்றுப் பூசணியே மருத்துவ குணங்கள் அதிகம் கொண்டது. நீற்றுப்பூசணியுடன் ஒப்பிடும்போது, பொதுவாக நாம் பயன்படுத்தும் பூசணி நோய்களை உண்டுபண்ணக்கூடியது என கீழ்வரும் பாடல்கள் குறிப்பிடுகின்றன.
“பூசணிக் காயனல் புன்மை கூழ்ப்பாண்டமு
மேசுரைக் காய்கப மிலைக்றி நன்மையாம்”
– பக்.23, தேரையர் காப்பியம்.
பூசணிக்காய் வெப்பநோய்களையும் (நோய்கள் பதார்த்த சூடாமணி பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது) வெண்பூசணிக்காய் குளிர்ச்சியையும் உண்டாக்கும். சுரைக்காய் கபநோய்களை உண்டாக்கும். ஆயினும் இம்மூன்றினது இலைகளையும் சமைத்து உண்டுவரின் உடலுக்கு நன்மைகளை உண்டாக்கும்.
பூசணி (பறங்கிக்காய் / சர்க்கரைப்பூசணி)
“பூசணி யிலைபூக் காயே புகல்சுரந் தினவு பித்தம்
நேசமில் கரப்ப னோடு நிறைசிரங் கதிக மாகும்
பேசிய பொருமன் மந்தம் பிறந்திடுங் கிரந்தி யுண்டாம்
ஆசிலா முனிவர் சொன்ன வருங்குண மிவையா மன்றே”
– பக்.68, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி.
பூசணிக்காயானது பித்தத்தை அதிகரிப்பதாலும், மந்தத்தை ஏற்படுத்துவதாலும் சுரம், தினவு (சொறிவு), கரப்பன் (தோல் நோய்கள்), சிரங்கு என்பன அதிகரிக்கும். எனவே அளவோடு அவ்வப்போது உண்ணுதல் நன்று. இவ்வாறான குணங்கள் இருப்பதனாலேயே இவற்றை குறைக்க பூசணி சமைக்கும்போது மிளகு, உள்ளி அதிகம் சேர்க்கப்படுவதுடன் வேறு மரக்கறிகளுடனும் சேர்த்து பாரம்பரிய முறைகளில் சமைக்கப்படுகின்றது.
இவ்வாறு சமைக்கும்போது பூசணியில் உள்ள நன்மைகளைப் உபத்திரவங்கள் இன்றிப் பெற்றுக்கொள்ளலாம்.
பூசணியில் உள்ள நன்மைகள்
- அதிகளவு உயிர்ச்சத்து A (Vitamin A) ஐ கொண்டுள்ளது. ஒருநாளைக்கு ஒருவருக்கு சாதாரணமாக தேவைப்படும் உயிர்ச்சத்து A (900 மைக்ரோகிராம்) யின் அளவைவிட அண்ணளவாக 125 கிராம் (சராசரியாக 8 மேசைக்கரண்டி) பூசணியில் அதிகம் (1356 மைக்ரோகிராம்) உள்ளது. இதனால் சிறந்த கற்பமாக (Antioxidant) செயற்பட்டு உடற்கலங்களின் ஆரோக்கியத்தை பேணுவதோடு புற்றுநோய்களை தடுக்கின்றது. அத்துடன் கண்பார்வைக்குச் சிறந்தது. நுண்ணங்கிகளை அழிக்கக்கூடியது. இனப்பெருக்க உடற்தொழிற்பாட்டில் உதவும்.
- உயிர்ச்சத்துகள் C, E, போலேற் மற்றும் இரும்பு என்பவற்றை குறிப்பிடத்தக்களவு கொண்டுள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக்கூடியது.
- இது கொண்டிருக்கும் பொற்றாசியமானது (253mg/ 125g) இரத்த அழுத்தத்தை குறைக்கின்றது. அத்துடன் பக்கவாதம், சிறுநீரகக்கல், நீரிழிவு என்பவற்றின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கின்றது.
- அதிக நார்ச்சத்தையும் குறைந்த கலோரிகளையும் கொண்டிருப்பதால் உடல் எடை அதிகரிப்பை குறைக்கின்றது.
- பூசணியின் விதை அதிகளவிலான கனிமங்களையும், Tryptophan எனும் புரதத்தையும், PLant sterols போன்றவற்றையும் அதிகம் கொண்டது. இவற்றினால் உடலில் நல்ல கொழுப்பு அதிகரிக்க உதவுகின்றது. அத்துடன் ரிப்ரோபன் நல்ல நித்திரையையும் கொடுக்கக்கூடியது.
நீற்றுப்பூசணி / வெண்பூசணி
“நீற்றுப் பூசணிக்காய் செய்யு நிறைகுண மலசலம் போம்
மாற்றிடுங் கயமே பித்த மருத்தீடு காய்ச்ச றாகம்
போற்றுறு சரீர நோய்கள் போமேனி திடமே யேறும்
வேற்றுமை யில்லா வாத மிகு முண்ண வினிதா மன்றே”
– பக்.68, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி
உண்பதற்கு இனிதான நீற்றுப் பூசணிக்காயானது மலம், சலம் போன்றவற்றை நன்றாக வெளியேற்றும். ஒவ்வாமைகள், மருத்தீடு, பித்ததோச அதிகரிப்பு, காய்ச்சல் இதனால் ஏற்படும் தாகம் என்பவற்றை மாற்றிடும். உடலில் உள்ள நோய்கள் எல்லாம் குறைந்து உடல் வன்மை அதிகரிக்கும். வாதம் (உடற்தொழிற்பாடுகள்) நல்லமுறையில் சீராகும்.
பூசணியுடன் (1mg/100g சோடியம்) ஒப்பிடும்போது நீற்றுப்பூசணியில் சோடியத்தின் அளவு (107 mg/100g) அதிகம். அதேபோல் உயிர்ச்சத்து C யும் நீற்றுப்பூசணியில் அதிகம் உள்ளது.
சுரைக்காய்
“சுரையிலை பித்தம் போக்குஞ் சொல்லுந் தண்டிற்கு வாதம்
மருவிடா தகலுங் காய்தான் வாயுவாங் கொழுந்து வாதம்
திரிபித்தஞ் சேட நீக்குந் திகழ்முன்னை யிலையுட் காய்ச்சல்
வருபிர மேகம் பித்த மாற்றுநன் மணமுண் டாமே”
– பக்.67, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி
சுரையிலை ஆனது பித்த தோசம் போக்கும். சுரை தண்டுக்கு வாதம் அகலும். சுரைக்காய் வாயுவை அதிகரிக்கும். சுரையின் கொழுந்து (குருத்திலை) வாத தோசம், திரிபடைந்த (வேற்றுநிலை விருத்தியடைந்த) பித்த தோசம் மற்றும் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோசங்களாலும் ஏற்படும் சன்னி நிலையை நீக்கும்.
இங்கு சுரைக்காய் ஆனது வாயுவை அதிகரிப்பதன் மூலம் வாததோசத்தை அதிகரித்து வாதரோகங்களை ஏற்படுத்தும். இப்பாடலின் முன்னை இலைபற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னை இலைக்கு உட்காய்ச்சல் (உடற்சூடு), நீரிழிவு, பித்தத்தை குறைக்கும்.
உஷ்ண குணமுள்ள சுரைக்காயினால் வாதம், பித்த தோசங்கள் அதிகரிப்பதுடன் உணவில் விருப்பின்மை, பசியின்மை, மண்ணீரல் நோய்கள், தடைகள் ஏற்பட்டு மாரடைப்பு போன்ற நோய்கள் உருவாகும். உடற்சூடு குறைவடையும் என பதார்த்தகுண சிந்தாமணி கூறுகின்றது.
“வாதபித்தம் வாயருசி வன்பீலிகஞ் சீத
மோதிருத்து நோயுண்டா முள்ளனற்போ – மோதத்
திருப்பபாற் கடற்றிருவே தீக்குணத்தை மேவுஞ்
சுரைக்காயைத் தின்பவர்க்குச் சொல்”
– பக்.218, பதார்த்தகுண சிந்தாமணி.
பாகற்காய் / பாவிரி
“… பாகற்காய் கிருமி போக்கும் பயித்திய பித்தஞ் சேர்க்கும்
பாகமா யுண்ம ருந்தைப் பகைத்துடன் கெடுக்கு மாமே”
பக்.69, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி.
பாகற்காய் ஆனது வயிற்றில் உள்ள கிருமிகளைப் (Worms) போக்கும். கேடடைந்த பித்த தோசத்தை அதிகரிக்கும். நோய் நிலையில் நோய்க்காக உண்ணும் மருந்துகளை முறிக்கும்.
“மருந்துகளி னற்குணத்தை மாற்று மஃதொன்றா
திருந்துவலி வாதத்தைச் சேர்க்கும் – பொருந்துபித்தங்
கூட்டுமவ பத்தியத்தைக் கொண்டிருக்கும் வன்கரப்பன்
காட்டுங் கொம்புப்பாகற் காய்”
– பக்.220, பதார்த்தகுண சிந்தாமணி
மருந்துகளின் குணத்தை மாற்றக்கூடிய வன்மையான அபத்திய உணவுப்பொருளாகும். வாத, பித்தத்தை கூட்டும். தோல் நோய்களை உருவாக்கும்.
வாதம் பித்தம் பலவீனப்பட்டுள்ள நிலையில் கசப்புச் சுவையை கொண்டிருப்பதினால் வாத தோசத்தை அதிகரித்து பித்தத்தையும் அதிகரிக்கும். இதன்மூலம் நீரிழிவுக்கு சிறந்த பலனைத்தரக்கூடியது. பாகற்காயில் காணப்படும் தாவர இரசாயனங்களான Polypeptide-p, Vicine, and Charant என்பன இன்சுலின் போன்று செயற்பட்டு குளுக்கோசின் அளவைக்குறைக்கின்றன. அத்துடன் பாகற்காயில் காணப்படும் lectin பசியினைக் குறைப்பதாலும் அதிகளவில் உள்ளெடுக்கப்படும் குளுக்கோசின் அளவு குறைக்கப்படுகின்றது.
அதிகாலையில் வெறும் வயிற்றில் மருத்துவர்களின் ஆலோசனைக்கமைய 15 – 30 மி. லீ பாகற்காய்ச்சாறு அருந்துவதன் மூலம் நீரிழிவினைக் கட்டுப்படுத்தலாம்.
அதிகளவு நார்ச்சத்து மற்றும் உயிர்ச்சத்து C, A, Float, பொட்டாசியம், நாகம், இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்களையும் கொண்டது.
மிதிபாகல் / குருவித்தலைப்பாகல் / காரவல்லி
“காரவல் லிப்பெயர்க் காய்கறிப் பித்தமாம்
பேருற மாருதப் பெருமையைப் பெருத்திடும்”
– பக்.21, தேரையர் காப்பியம்.
காரவல்லி என்னும் பெயருடைய பாகற்காயை முறைப்படி கறிசமைத்து உண்டுவர பித்தத்தை அதிகரிக்கும், வாயுவைப் பெருக்கும்.
இப்பாகற்காய் சாதாரணமாக நாம் பயன்படுத்தும் பாகற்காயை விட வீரியம் கூடியது. இது நீரிழிவு நோய்க்கு சிறந்த பலனைத்தரக்கூடியது. ஆனால் முறைப்படி சமைத்து உண்ணுதல் வேண்டும். மருந்தாக எனில் சித்தமருத்துவர்களின் வழிகாட்டல் அவசியமாகும். இதன் பழம் ஈரல் நோய்களில் உணவாகக்கொள்ள சிறந்த பலனைத்தரும். இதனை வற்றலாக்கி பயன்படுத்துவது சிறப்பாகும்.
இங்கு பாகற்காயின் குணத்தை உரியமுறையில் சமைத்து உட்கொண்டு ஆரோக்கியத்தை பேணியிருக்கின்றார்கள் நம் முன்னோர்கள். இன்று நீரிழிவு நோயுள்ளவர்கள் தனியே பாகற்காய்ச் சாறினை தொடர்ச்சியாக உட்கொள்வதன் மூலம் தேவையற்ற உபாதைகளைத் தேடிக்கொள்கின்றனர். உதாரணமாக கரப்பன் எனப்படும் தோல் நோய்கள், ஒவ்வாமைகள் ஏற்படலாம். எனவே மேற்படி நீரிழிவு நோயுள்ளவர்கள் பாரம்பரிய முறைப்படி பாகற்காயை சமைத்து உண்பதே சிறந்தது.
பொதுவாக பாகற்காய் சமைக்கும்போது ஏனைய கறிவகைகளைவிட பழப்புளி சேர்த்துக் கொள்வது வழக்கம். அதேபோல் இளநீரில் பாகற்காயை அவித்து சமையலுக்கு பயன்படுத்துவது வழக்கம். அதேபோல் தக்காளி, இஞ்சி உள்ளி என்பனவும் அதிகம் சேர்த்துக் கொள்ளப்படும்.
கருணைக்கிழங்கு
“கருணையின் கிழங்கி னோடு கழன்றிடும் வெருகுக் கந்தம்
உரைமூல முட்ட ணத்தை யோட்டு …”
– பக்.73, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி
கருணைக் கிழங்கானது மூலரோகம், உடற்சூடு என்பனவற்றை போக்கும். இப்பாடலில் வரும் வெருகு என்பதும் ஒருவகை செடியாகும்.
பொதுவாக ஏனைய கிழங்குகளைப் போலன்றி கருணைக்கிழங்கானது உடலுக்கு நன்மைதரக்கூடியது. கருணைக் கிழங்கைப் போலவே முள்ளங்கியும் உடலுக்கு நன்மை தரக்கூடியதொன்றாகும் என தேரையர் கூறியுள்ளார்.
“கருணைக் கிழங்குநற் கந்தமுள் ளங்கியு
மருவுமிவ் வுடற்கு வாய்த்ததென் றுரைப்பர்”
– பக்.23, தேரையர் காப்பியம்.
கருணைக் கிழங்கும், நல்ல மணமுள்ள முள்ளங்கியும் உடலுக்கு உகந்தது என்று கூறுவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருணைக்கிழங்கு சிறிது சுனையுள்ளதாகும். எனவே பக்குவமாக கறிசமைத்தல் வேண்டும். சங்க காலத்தில் கருணைக்கிழங்கு வறுவல் செய்து தீட்டாத சிவப்புப்பச்சை அரிசிச் சோற்றுடன் இறைவனுக்கு படைத்து உள்ளனர். இதனை நக்கீரரால் பாடப்பெற்ற நற்றிணைப் பாடலில் வரும் வரிகள் குறிப்பிடுகின்றன.
“கொடுங் கண் காக்கைக் கூர் வாய்ப்பேடை
நடுங்கு சிறைப்பிள்ளை தழீஇ கிளை பயிர்ந்து
கருங் கண் கருணைச் செந்நெல் வெண்சோறு
குருடைப் பலியிடு கவரிய குறுங் கால்”
– பக்.50, சுவையான சங்ககால தமிழர் சமையல்.
கருணைக்கிழங்கு வறுவல்
தேவையான பொருட்கள்
- கருணைக்கிழங்கு – 300 கிராம்
- மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
- மிளகுதூள் – 1 1/2 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- நெய் – தேவையான அளவு
தோலுடன் கழுவிச் சுத்தம் செய்த கருணைக் கிழங்கைத் தண்ணீரில் மஞ்சள்தூள், உப்புச் சேர்த்து வேக வைத்து பின் அதன் தோலினை உரித்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
மிளகுதூள், உப்புடன் நறுக்கிய கிழங்கினை சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ளவும். சட்டியில் நெய் விட்டு சூடாக்கிக் கொள்ளவும். சிறிது சிறிதாக பிரட்டிய கருணைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து நெய்யில் பொரித்து எடுத்துக்கொள்ளவும்.
கருணைக்கிழங்கில் அதிகளவு கனிமச் சத்துக்கள் (Minerals) இருப்பினும் Oxalate, tannin, Hydrogen cyanide, Phytate (இவையே கிழங்கின் சுனைக்கான காரணங்கள்) போன்ற ஊட்டச்சத்துக்கள் அகத்துறிஞ்சலுக்கு ஒவ்வாத (Anti nutrient contents) இருப்பதால் சமைக்கும்போது மேற்கூறியவாறு சமைத்து உண்ணும்போதே கருணைக்கிழங்கில் உள்ள பயன்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
கத்தரிக்காய்
யாழ்ப்பாண தமிழர் வாழ்வியலில் கத்தரிக்காய் மிகவும் முக்கியமானதாகும். பெண்களின் விசேட உணவுகளில் குறிப்பாக சரக்குக்கறியில் அதிகம் பயன்படுத்தப்படுவது கத்தரிப்பிஞ்சு. பலவிதமான கத்தரி வகைகள் காணப்படுகின்றன. இதில் வெள்ளைக்கத்தரிக்காய் மிகவும் சுவையானதும் எல்லோராலும் விரும்பப்படும் ஒன்றாகவும் காணப்படுகின்றது. அதிலும் மட்டுவில் கத்தரிக்காய் பிரபல்யமானதொன்றாகும். மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலய பங்குனிமாத பொங்கல் காலத்தில் தாராளமாக சந்தைகளுக்கு வருவதொன்றாகும்.
பலவகையான கத்தரிக்காய்கள் உள்ளதுபோல் பலவகையான கத்தரி இனங்களும் உள்ளன. வட்டுக்கத்தரி, கண்டங்கத்தரி, சுண்டங்கத்தரி என பலவகை இனங்கள் காணப்படுகின்றன.
கத்தரிப்பிஞ்சு, காய் தொடர்பில் யாழ்ப்பாண நூலாகிய அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
“கத்தரிப் பிஞ்சு ரோசி கண்ணிணோய் மலமும் போக்கும்
மத்தமார் மூன்று தோட மருவிடா வுண்டி தன்னை
மெத்தவே விரும்புந் தேக மிகுசவுக் கியம தாகும்
தித்தமார் காய்கி ரந்தி தினவோடு பித்தஞ் சேர்க்கும்”
-பக்.74, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி.
கத்தரிப்பிஞ்சானது பசியின்மை, உணவில் வெறுப்பு, கண்ணில் ஏற்படும் ரோகங்கள், மலக்கட்டு என்பவற்றைப் போக்குவதோடு, வாத, பித்த, கப தோசங்களால் உணவில் உருவாகும் உபாதைகளை தடுக்கும். அத்துடன் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். ஆனால் கத்தரிக்காய் ஆனது கிரந்தி, உடலில் கடி, என்பவற்றுடன் பித்தத்தையும் உடலில் அதிகரிக்கும்.
பிரதானமாக நார்ச்சத்து, பொற்றாசியம், உயிர்ச்சத்துகள் C, B6 என்பன காணப்படுகின்றன.
கத்தரியில் காணப்படும் தாவர இரசாயனங்களில் flavonoids, Anthocyanin என்பன இருதய நோய்கள் ஏற்படாவண்ணம் தடுக்கின்றன. Chlorogenic acid ஆனது கெட்ட கொலஸ்திரோல் (LDL) உருவாகாமல் தடுப்பதுடன் வைரஸ், பக்ரீரியா போன்ற கிருமித்தாக்கங்களில் இருந்தும் பாதுகாக்கின்றது. அதேவேளை புற்றுநோய் உருவாகாமலும் பாதுகாக்கின்றது.
Nasunin ஆனது Flavonoids குடும்பத்தைச் சேர்ந்த Anthocyanin ஆகும். இதுவே கத்தரிக்காயின் நாவல் நிறத்துக்குக் காரணமாகும்.
கத்தரிக்காயின் தோற்பகுதி அதிகளவு கிரந்தித் தன்மையைக் கொண்டது. கிரந்தித் தன்மைக்கு காரணமான Histamine தோல்ப் பகுதியிலேயே அதிகம் காணப்படுகின்றது. கத்தரிக்காய் முதிர்ச்சியடைய முதிர்ச்சியடைய தோலில் Histamine அளவானது அதிகரிக்கின்றது. இதனாலேயே பிஞ்சுக்கத்தரிக்காயை பயன்படுத்தவேண்டும் என சித்தமருத்துவம் கூறுகின்றது. முத்திய கத்தரிக்காய் கிரந்தியையும், சொறியையும் (ஒவ்வாமை) ஏற்படுத்தும் எனக் குறிப்பிடுகின்றது.
சுண்டங்கத்தரி
சுண்டங்கத்தரியானது இலகுவாக வீடுகளில் வளரக்கூடியது. நிறைந்த பலனைத் தரக்கூடியது. வற்றல் செய்து நீண்ட காலம் வைத்திருந்து பயன்படுத்தக் கூடியது. அனைத்து ரோக நிலையிலும் பத்தியத்துக்கு உகந்ததாகும்.
“நெஞ்சின் கபம்போ நிறைகிருமி நோயும்போம்
விஞ்சு வாத்தின் விளைவும் போம் – வஞ்சியரே
வாயைக் கசப்பிக்கு மாமலையிலுள்ள சுண்டைக்
காயைச் சுவைப்பவர்க்குக் காண்”
– பக்.215, பதார்த்தகுண சிந்தாமணி
கசப்புச் சுவையுள்ள சுண்டங்கத்தரிக்காயால் நெஞ்சுச் சளி, மூச்சுக்கஸ்டம் (ஆஸ்துமா) போன்ற சுவாசரோகங்கள், வயிற்றில் உள்ள புழுக்கள் (worms) என்பனவும் வாத தோசத்தின் அதிகரிப்பினால் ஏற்படும் ரோகங்களும் மாறும்.
சுண்டங்கத்தரி வற்றல்
“சுண்டைக்காய் வற்ற லுண்ணச் சுரமொடு வாய்வ ரோசி
அண்டிடா நோய்போ மென்ப ரறையும்பத் தியத்திற் காகும்…”
– பக்.75, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி.
“பித்தஅ ரோசகம்போம் பேராப் புழுச்சாகும்
உற்ற கிராணியறும் உட்பசியாஞ் – சத்தியமாய்
பண்டைக் குதஆமம் பற்றுமிங்கி யாரையுந்தான்
சுண்டைக்காய் வற்றலுண்ணச் சொல்”
– பக். 215, பதார்த்தகுண சிந்தாமணி.
பித்ததோச அதிகரிப்பால், காய்ச்சல் என்பவற்றால் ஏற்படும் சுவையின்மை, வயிற்றுப்புழு என்பன இல்லாது போகும். வயிற்றுப்போக்கு நிற்கும். பசி அதிகரிக்கும். மலக்கட்டு, மூல நோய் என்பன இல்லாது போகும். அண்மைய ஆய்வுகளில் நீரிழிவுக்கு சிறந்த தொன்றாகக் காணப்படுகின்றது.
சுண்டங்கத்தரி வற்றல் செய்யும் முறை
உலர்ந்த சுண்டங்கத்தரியை போதுமான அளவு எடுத்து நன்றாகப் புளித்த மோரும் உப்புங் கலந்து காயவைத்து உலர்த்தி எடுத்துக்கொள்ளவும்.
புடோலங்காய்
புடோலங்காய் அல்லது புடலங்காயில் கொத்துப்புடோலங்காய், நாய்ப்புடோலங்காய், பன்றிப்புடோலங்காய், பேய்ப்புடோலங்காய் எனப் பல வகைகள் உண்டு. இவற்றில் கொத்துப்புடோல், நாய்ப்புடோல் என்பன கொடியாக அன்றி செடியாக வளர்வன. இவை யாழ்ப்பாணத்தில் அரிது.
பன்றிப்புடோல் கொடி வகை ஆனால் புடலோங்காய் போன்று நீட்டாக இல்லாமல் கட்டையாக இருக்கும். பேய்ப்புடோல் மிகவும் கசப்பாக இருக்கும்.
யாழ்ப்பாணத்தில் அதிகம் காணப்படுவது சாதாரண நீளமான புடோலங்காய் மற்றும் பன்றிப் புடோலங்காய் என்பனவாகும். இவற்றின் குணங்கள் பற்றி அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
“புடோலங்காய் சேடமாகும் புலம்புறு பித்தஞ் சேர்க்கும்
அடுபன்றிப் புடோறான் சீத மணுகிடு மநேக ரோகம்…”
– பக்.75, பதார்த்தகுள சிந்தாமணி
புடோலங்காய் ஆனது அதிக குளிர்ச்சியைக் கொண்டது. அதேபோல் கேடடைந்த பித்ததோசத்தையும் அதிகரிக்கும். பன்றிப்புடோலங்காய் ஆனது அதிக குளிர்ச்சியைக் கொண்டதுடன் அனேகமான ரோகங்களை உண்டு பண்ணும்.
புடோலங்காய் அதிக நீர்ச்சத்தையும், நார்ச்சத்தையும், குறைந்த கலோரிகளையும் கொண்டிருப்பதால் மலச்சிக்கல், சிறுநீரக நோய்கள், நீரிழிவு போன்ற நோய்நிலைகளில் பயன்படுத்துவது சிறந்த பலனைத்தரும்.
புடோலங்காய்க்கு சுக்கிலத்தை பெருக்கும் தன்மையும் போகமனநிலையை அதிகரிக்கும் தன்மையும் உண்டு என சித்தமருத்துவ நூலான பதார்த்தகுண சிந்தாமணி கூறுகின்றது.
“போகம் விளையும் பொருந்தி வளருமைய
மாகமதிற் பித்த மணுகுங்காண் – மேக
புடலங் கவியகப் பாவாய் கேணாளும்
புடலங்காய்க் குள்ள புகழ்”
-பக்.220, பதார்த்தகுண சிந்தாமணி.
ஆண்மலட்டுத்தன்மை அண்மைய காலமாக அதிகரித்து வருகிறது என்ற கருத்துக்கள் உள்ள நிலையில் புடோலங்காயை நாம் கறிவகைகளில் கைவிட்டு வருவது கவனிக்கத்தக்கதாகும்.
மிளகாய்
“தீதிலா மிளகாய்க் குள்ள செய்கையைச் சொல்லக் கேண்மோ
வாதமே சேடம் வாயு மந்தமென் றினைய வெல்லாம்
காதம்போ சனங்க டம்மைக் கடிதினிற் சமிக்கப் பண்ணும்
பேதமார் பித்தந் தோன்றும் பிரிவில்சீ மலமும் போமே”
– பக்.75, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி
தீமையற்ற மிளகாய்க்கு வாதம், கபம் என்பவற்றால் வரும் ரோகங்கள், வாயு, மந்தம் போன்ற உபத்திரவங்கள் எல்லாம் இல்லாமற் போகும். உணவினை இலகுவிற் சமிபாடு அடையச் செய்யும். அதிகமாயின் பித்தம் அதிகரிப்பதோடு சீதமுடன் மலமும் போகும்.
மிளகாயில் பலவகைகள் காணப்படுகின்றன. அவற்றில் நெய் மிளகாய் உணவின் சுவையை அதிகரிப்பதோடு நெய்வாசனையையும் தருகின்றது. இது இலங்கைக்குரிய சிறப்பான இனமொன்றாகும். இதன் பழம், செத்தல் என்பன மிகுந்த காரமுடையன.
பொதுவாக மிளகாய் ஆனது பச்சைக் காய் ஆகவும், காயவைத்து செத்தல் மிளகாய் ஆகவும் பயன்படுத்தப்படுகின்றது. செத்தல் மிளகாயில் இருந்து மிளகாய்த்தூள் தயாரிக்கப்பட்டு கறிசமைக்கும்போது சேர்க்கப்படுகின்றது.
இவ்வாறு மிளகாய்த்தூள் சேர்த்து கறி “குழம்பு” வைக்கப்படும். மிளகாய்த்தூளில் காரம் மிகையாகி உபத்திரவங்கள் ஏற்படாமலிருக்க அதாவது மேற்குறிப்பிட்டதுபோல் பித்தம் அதிகரித்து சீதத்துடன் மலம் போதல் மற்றும் வயிற்றுப்புண் என்பன ஏற்படாமல் இருக்க மல்லி, மஞ்சள், சீரகம், வாசனைத் திரவியங்கள் என்பன சேர்க்கப்பட்டே மிளகாய்த்தூள் தயாரிக்கப்படுகின்றது. இவற்றின் சேர்வை அளவுகள் இடத்துக்கிடம் மாறுபடுகின்றன.
மிளகாய்த்தூள் சேர்த்து வைக்கப்படும் குழம்பானது உடலுக்கு பொதுவாக நன்மையே பயக்கின்றது. பயன்படுத்தப்படும் காய்கறிகளின் ஒவ்வாமைகள் குணங்களை மிளகாய்த்தூள் மாற்றுகின்றது.
குழம்பின் மருத்துவ குணங்கள் தொடர்பாக பதார்த்த குணசிந்தாமணி இவ்வாறு குறிப்பிடுகின்றது.
“சொல்ல வுறைக்குங்குழம்பாற் றேனறா தனிலம்ஃ
தில்லையெனில் வாத மிருக்குங்காண் – தொல்லுலகி
னீர்த்த காரக்குழ்மபா னீடு முத்தோட முன்பின்
பார்த்தோடு மென்றே பகர்”
– பக்.391, பதார்த்தகுண சிந்தாமணி.
உறைப்புள்ள குழம்பால் வாதம் உருவாகாது. ஆனால் உறைப்பற்ற குழம்பால் வாதம் உருவாகும். நல்ல காரக்குழம்பால் வாதம் முதலாகிய மூன்று தோசங்களும் தன்னிலைப்பட்டு ஆரோக்கியத்தைத் தரும் என்று கூறு.
குழம்பானது மூன்று தோசங்களையும் தன்னிலைப்படுத்தி ஆரோக்கியத்தைத் தரும் என்பதை தேரையரும் தனது தேரையர் காப்பியம் எனும் நூலில் குறிப்பிடுகின்றார்.
“….. வளிபுட்டு முப்பிணி மத்திய மிட்டலி
மோர்க்குழம் பப்படி முதற்பிணி யாணமாம்
பாற்குழம் பப்படி பாற்சோறு மேற்படி”
– பக்.19, தேரையர் காப்பியம்
வாயுவைத் தரக்கூடிய பிட்டானது முக்குற்ற (முத்தோச) வேறுபாட்டினை உண்டாக்கி நோய்களைத்தரக் கூடியது. இட்டலி முக்குற்றத்தினையும் ஒழுங்குறச் செய்யும். அதேபோல் மோர்க் குழம்பும் ஆகும். பாற்குழம்பும், பாற்சோறும் முக்குற்றங்களையும் தன்னிலைப்படுத்தி உடலுக்கு நன்மையைத் தருவன.
பொரியலின் குணம்
“காரமிகு பொரியல் காயந்தனிற் கபத்தைச்
சேற வுறவாக்குந் திண்ணமே – சோரப்
புளியிட்டிடும் பொரியல் போர்மந்தத் தோடு
வளியிட்டிடு மனதுத்துள் வை”
– பக். 390, பதார்த்தகுண சிந்தாமணி.
காரமுள்ள பொரியல் உடலினில் கபத்தினைச் சேர்த்திடும். உதாரணமாக அதிஉடற்பருமன், கொலஸ்திரோல் போன்றனவற்றை ஏற்படுத்தும். புளி சேர்த்த பொரியல் மந்தத்தை போக்கி வாதத்தை அதிகரிக்கும்.
எமது பாரம்பரிய சமையல் முறைகளில் பொதுவாக அனைத்து காய்கறிகளையோ, மாமிச உணவுகளையோ பொரித்து குழம்பு வைக்கும் பழக்கம் இல்லை. தேவையெனில் வாசனைத் திரவியங்களை சிறிதளவு எண்ணெய்யிலோ நெய்யிலோ தாளித்துச் சேர்த்துக்கொள்வார்கள்.
இப்பொழுது குழம்பு வைப்பது என்றாலே அனைத்தையும் பொரித்தே குழம்பு வைக்கின்றார்கள். இதன்போது குழம்பின் நன்மைகள் இல்லாது போகின்றது. அதனால் பல்வேறு நோய்கள் அதிகரிக்கின்றன. இதில் நாம் அதி உடற்பருமன், கொலஸ்திரோல் போன்றனவற்றை கவனிக்கக் வேண்டும்.
தொடரும்.