மனித மூளையும் அறிவு வளர்ச்சியும்
பிரபஞ்சத்திற்கும் மனித இருப்புக்குமான தொடர்புகளை, இவற்றின் உற்பத்திகள், மூலங்கள் அல்லது தொடக்கப்புள்ளிகளை, விலங்கு உலகில் வாழ்ந்த காலத்திலேயே மனித சமூகம் தேடத் தொடங்கி விட்டது. இந்தத் தேடலே விலங்கு உலகிலிருந்து இந்த மனிதக் கூட்டத்தைப் பிரித்து, மனித உலகிற்குக் கொண்டுவந்தது. அதற்கு அடிப்படையாக இருந்தது, விலங்கு மூளையிலிருந்து மாறுபட்டிருந்த மனித மூளையாகும்.
இந்த மூளை எவ்வாறு வளர்ந்தது? மனிதர், புற உலகின்மீது தமது உழைப்பினால் தாக்கம் செலுத்தி, அந்தப் புற உலகை மாற்றுவதோடு தம் இயல்பையும் மாற்றுகின்றனர். விலங்கிலிருந்து மனிதர் வேறுபட இந்த உழைப்பே காரணம். இயற்கையோடு மனித குலம் நடத்தும் இந்தத் தொடர் போராட்டமே மனித இருப்புக்கான போராட்டம்; மனித குல வளர்ச்சிக்கான போராட்டம். இப்போராட்டத்தினூடு, தாம் பெற்ற வாழ்வனுபவங்கள் மூலமும், கிடைத்த உணவுப் பொருட்களில் இருந்த விட்டமின்கள் மூலமும், தமது அடிப்படைத் தேவையான பசியைப் போக்க எடுத்துக்கொண்ட பல முயற்சிகள் மூலமும், அந்த மூளை மேலும் மேலும் தன்னை வளர்த்துக் கொண்டது. மானுடம் தன்னைச் சூழவுள்ள இயற்கையையும் தன் வாழ்வையும் மெல்ல மெல்லப் புரிந்து கொண்டதோடு, மனிதக் குலம் இயற்கையை வென்று வளரவும் ஆயிற்று. சுருக்கமாகச் சொன்னால், இயற்கையோடு மானிடக் குலம் நடத்திய போராட்டமே அதன் மூளையை மேலும் மேலும் வளர்த்தது. ஆரம்பக் கண்டுபிடிப்புகளுக்கான அடித்தளம் இதுவே. இந்த வளர்ச்சியே மானிட குல வளர்ச்சி. இதனூடாகத்தான் மதம், மொழி, இனம், பண்பாடு யாவும் வளர்ந்தன. இப்படி இயற்கையைப் புரிந்து கொள்ள எடுத்த சிந்தனை இரண்டு கிளைகளாக வளர்ந்தது:
- ஆன்மீகச் சிந்தனை: எல்லாத் தோற்றத்திற்கும் மூலம் இறைவனே எனக் கூறி, அதனடியாக உலகைப் புரிந்து கொள்ள முயன்றது. இன்றும் புரிந்து கொண்டிருக்கிறது. அதன் வெளிப்பாடுகளே கோவில் வழிபாடுகள்.
- பௌதீகச் சிந்தனை: எல்லாத் தோற்றத்திற்கும் மூலம் இயற்கை எனக் கூறி, அதனடியாக உலகையும் வாழ்வையும் புரிந்து கொள்ள முயன்றது. அதன் வெளிப்பாடுகளே விஞ்ஞான வளர்ச்சியும் இன்றைய நிலையும் ஆகும்.
இரண்டு பிரதான சிந்தனைப்போக்குகள்
இந்த இரு சிந்தனைப் போக்குகளையும் முதலில் அறிந்து கொள்ளுதல், நமது கூத்தின் மூலத்தை அறிய உதவும். ஒரு சிந்தனைப் போக்கு, கூத்தின் மூலகர்த்தா சிவன் எனக் கூறுகிறது; மற்றொரு சிந்தனைப் போக்கு, கூத்தின் மூலங்கள் மனித ஆற்றுகை எனக் கூறுகிறது. இந்த இரண்டினிடையேயும் ஒரு ஒற்றுமையை நாம் காண முடியும். அது அவர்களின் புரிதலில் மற்றும் எடுத்துரைப்பு முறையில் உள்ளது. முதல் சிந்தனைப் போக்கு தமிழர் நாட்டியத்தின் பரிணாம வளர்ச்சியை விளக்குகிறது. அதனைக் கூறுவது ‘கூத்தநூல்’ ஆகும். இதனை எழுதியவர் சாத்தனார்.
கூத்த நூல்
இந்நூல் தோன்றிய காலத்தை ஆய்வாளர்கள் கி.பி. 3ஆம் அல்லது 4ஆம் நூற்றாண்டாகக் கருதுகின்றனர். அதாவது, இது இன்றிலிருந்து சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு என எடுத்துக் கொள்ளலாம். இந்நூல், அந்தக் காலத்தில் தமிழர் மத்தியில் கூத்தின் வளர்ச்சி பற்றிய சிந்தனைப் போக்குகளில் ஒன்றைப் பிரதிபலிக்கிறது. அது கூத்தின் பிறப்பை இவ்வாறு கூறுகிறது:
“மோனத்து இருந்த முன்னோன் கூத்தில்
உடுக்கையில் பிறந்தது ஓசையின் சுழலே
ஓசையில் பிறந்தது இசையின் உயிர்ப்பே
இசையில் பிறந்தது ஆட்டத்து இயல்பே
ஆட்டம் பிறந்தது கூத்தினது அமைவே
கூத்தில் பிறந்தது நாட்டியக் கோப்பே
நாட்டியம் பிறந்தது நாடக வகையே”
கூத்த நூல் ஆசிரியர் இவ்வாறு கூறுகிறார்: “சிவன் உடுக்கொலியின் பின்னணியில் நடனமாடினான். அந்த உடுக்கோசையில் இருந்துதான் ஓசை பிறந்தது. அந்த ஓசையில் இருந்துதான் இசை உயிர்த்தது. அந்த இசையில் இருந்துதான் ஆட்டம் பிறந்தது. அந்த ஆட்டத்தில் இருந்துதான் கூத்தின் அசைவு பிறந்தது. அந்தக் கூத்தில் இருந்துதான் நாட்டியம் பிறந்தது. அந்த நாட்டியத்தில் இருந்துதான் நாடகம் பிறந்தது.” அவர் வாக்கின் படி, ஒன்றின் படிமலர்ச்சி மற்றதிற்கு வழிவகுத்ததாகக் கூறலாம். இதனை பின்வருமாறு வகைப்படுத்தலாம்:
உடுக்கோசை> ஓசையின் அசைவு> இசை> ஆட்டம்> கூத்து> நாட்டியம்> நாடகம்
இந்தத் தொடர் சங்கிலியை கவனமாகப் பரிசீலித்தால், ஒன்றிலிருந்து ஒன்று பரிமாணம் பெற்றது புரிய வருகிறது. அந்த பரிமாண வளர்ச்சி ஒரு தொடர் சங்கிலி என்பதும் தெளிவாகிறது. ஆனால், இந்த வளர்ச்சியின் மூலம், அதாவது இதன் உற்பத்தி அல்லது ஊற்று, சிவனுடன் முடிச்சுப் போடப்படுகிறது. இந்தச் சங்கிலியின் உச்சமாக அமைவது நாடகமே எனக் கூறுகிறார். நாடகம் என்பது அனைத்துக் கலைகளும் சங்கமிக்கும் கலை என்பதை இப்போது நன்கு புரிந்துகொள்ளலாம். ஆம், அதற்குள் ஓசை உள்ளது, இசை உள்ளது, ஆட்டம் உள்ளது, கூத்து உள்ளது, நாட்டியம் உள்ளது. இவை அனைத்தையும் தன்னுள் அடக்கி உள்ளதால், நாடகம் இவற்றின் சாரமாக எழுந்த கலை ஆகும்.
கூத்த நூல் ஆசிரியர் சாத்தனார் கூறும் இத் தொன்மக் கதை, ஒரு நம்பும் தொன்மமாக வளர்ந்து இன்று பெரும்பாலானோர் சிந்தனையைப் பெரிதாக ஆக்கிரமித்துள்ளது. தொன்மங்களுக்குள் சில உண்மைகள் அடங்கியிருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், தொன்மம் மனித மனதில் உண்மையை விட ஆழப் பதிகிறது; உண்மையைக் காட்டிலும் தொன்மமே வலிமையானது என கூறுவர்.
உண்மையை விடப் பலமான தொன்மம்
ஒவ்வொரு இனமும், ஒவ்வொரு சாதியுமே தம்மைப் பற்றி ஒரு தொன்மத்தை வைத்துள்ளது. அந்தத் தொன்மம், அந்த இனத்தின் அல்லது சாதியின் இரத்தம், நாடி, நரம்புகளில் பரம்பரையாகக் கலந்திருக்கிறது; ஒட்டுமொத்தமாக ஊட்டப்படுகிறது. அந்தத் தொன்மத்திற்காக உயிரையும் கொடுக்க, சிலர் தயங்குவதில்லை. சுருங்கச் சொன்னால், தொன்மம் உணர்ச்சியின் மீது கட்டப்படுகின்றது. ஆனால், அதற்குப் பக்கத்தில் அறிவு என்ற ஒன்றும் இருக்கிறதே!
விஞ்ஞான சிந்தனைப் போக்கு
அடுத்த சிந்தனைப் போக்கு விஞ்ஞான மற்றும் பௌதீக சிந்தனைப் போக்காகும். இந்தப் போக்கு சிவனை முன்னிலைப்படுத்துவதில்லை. 18 ஆம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்னரிலும் தோன்றி இன்று பெரும் வளர்ச்சியடைந்த நவீன சிந்தனைப் போக்குகள் மற்றும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் இதில் முக்கியமானவை. மனித குலத்தை ஆராயும் மானிடவியல், சமூவியல், மெய்யியல், உளவியல், பண்பாட்டியல், புவியியல், சரித்திரவியல், அரசியல், சூழலியல், தொடர்பாடலியல், மரபணுஇயல் போன்ற ஆய்வுத் துறைகள் பெருவளர்ச்சியடைந்து, அந்தப் பல்துறைகளின் சங்கமிப்பில் வரலாற்றினையும் பண்பாட்டினையும் ஆராயும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவை அனைத்தினாலும் எழுந்த ஆற்றுகைக் கோட்பாடுகள் கூத்தின் மூலத்தை மற்றும் அதன் ஊற்றுக்கண்ணை அறியப் பெரிதும் உதவுகின்றன. இந்தப் பின்னணியில், கூத்தின் ஆணிவேர்களைக் கண்டறிய முயலும் ஒரு சிறு முயற்சியே இக்கட்டுரையில் மேற்கொள்ளப்படுகிறது.
கூத்துக் கலையின் ஆணிவேர்கள்
வெங்காயம் ஒன்றை உரிப்பது போல, அதன் புறத் தோல்களை நீக்கிக் கொண்டு, வரலாற்று வழியில் பின்னோக்கி, கூத்துக் கலையின் ஆணிவேரைத் தேடச் சென்றால், கூத்துகள் ஆதியானது அல்ல என்பதே அடையப்படும் உண்மை.
இன்று கூத்துகள் பெருவளர்ச்சி பெற்றதாகவும், முழுமையான தாளக்கட்டுகளும் ஆட்டக்கோலங்களும் அமைந்த பல பரிமாணங்களைப் பெற்றதாகவும், இறுக்கமான ஒரு வடிவை அடைந்துள்ளதாகவும் இருக்கின்றன. இதுவே இன்றைய மரபு என, மரபின் வரலாறு தெரியாத சிலர் வரையறுக்க முயல்கின்றனர். அவர்களின் புரிதல் அவ்வாறே இருக்கலாம். ஆனால், ஆரம்பகாலத்தில் கூத்தோ அல்லது பரத நடனமோ இன்று காணும் இந்த இறுக்கமான வடிவில் இருந்ததா என்றால், அதற்கான விடை ‘இல்லை’ என்பது தான். காலத்தோடு ஏற்பட்ட வளர்ச்சியின் மூலம், பண்பாட்டுக் கலப்புகளின் வழியே, பல புதிய அம்சங்களை தழுவிக்கொண்டு, இன்றைய இந்த வடிவத்தை கூத்துப் பெற்றுள்ளது. இதற்கான இலக்கிய, கல்வெட்டு மற்றும் வரலாற்றுச் சான்றுகளும் நமக்குக் கிடைக்கின்றன. மேலும், புதிய ஆய்வுத் துறைகளும் இதற்கான ஆதாரங்களை வழங்குகின்றன. அந்த முறையில் நாம் பின்னோக்கிச் செல்லும் போது, கூத்தின் தொடக்கமாக ஆற்றுகைகளே அமைந்தன என்பதை அறிய நேருகிறது.
ஆற்றுகை என்றால் என்ன?
ஒருவர் அல்லது பலர் முன்போ ஒன்றைச் செய்துகாட்டுவது ஆற்றுகை ஆகும். இந்த ஆற்றுகையில் இரண்டு முக்கிய அம்சங்கள் இடம் பெறுகின்றன: ஒன்று, மீளச் செய்தல்; இன்னொன்று, தொடர்பு கொள்ளல். மீண்டும் மீண்டும் ஒன்றைச் செய்து காட்டுகிறோம், யாருக்கு? பார்வையாளருக்கு. பார்வையாளருடன் தொடர்பு கொள்ள, உடல்மொழி, குரல், அசைவு, ஆடை, அணி, காண்பியங்கள், மற்றும் ஏனைய பொருட்கள், தொடர்பு ஊடகங்களாக அமைகின்றன. இந்த ஆற்றுகை பல வகைகளில் வெளிப்படுகிறது. இந்த மானுட ஆற்றுகைகளை:
- வாழ்வியல் ஆற்றுகை
- சடங்கு ஆற்றுகை
- கலை ஆற்றுகை
எனப் பிரதானமாக மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
வாழ்வியல் ஆற்றுகைகளாக பிறப்புச் சடங்குகள், பூப்பு நீராட்டச் சடங்குகள், திருமணச் சடங்குகள், மரண வீட்டுச் சடங்குகள் ஆகியவற்றை உதாரணங்களாகக் குறிப்பிடலாம். தொழில் ஆற்றுகைகளாக வேளாண்மை, மீன்பிடி, வேட்டைத்தொழில், வியாபாரம் ஆகியவற்றைச் செய்யும்முன் நிகழ்த்தப்படும் சடங்குகள் காணப்படுகின்றன. இவை யாவும் நம்பிக்கையினடியாக நிகழ்த்தப்படுகின்றன; அவை பொழுதுபோக்கல்ல, வெறும் கேளிக்கையும் அல்ல.
ஆனால் ஏனைய ஆற்றுகைகளான கரகம், காவடி, கோலாட்டம் போன்றவை நம்பிக்கை குறைந்தவை, மகிழ்ச்சியூட்டுபவை, கேளிக்கையூட்டும் வகையில் உள்ளவை. இவற்றைக் ‘கலை ஆற்றுகை’ எனக் கூறுவர். இவற்றிலிருந்து பிறந்தவை தான் பெரும் கலை ஆற்றுகைகள்; அவற்றுள் கூத்து, நடனம், நாடகம் என்பன அடங்கும். கூத்து என்பது கதை தழுவி வரும் ஆடல் எனப் புரியப்படுகிறது. இவற்றை விட இன்னும் பல ஆற்றுகைகளும் தமிழர் மத்தியில் உண்டு. ஊர்வலம், விளையாட்டுப் போட்டிகள், பெரிய சங்கீத நிகழ்ச்சிகள், இராணுவ அணி வகுப்புகள், சர்க்கஸ் — அனைத்தும் ஒரு வகையில் ஆற்றுகைகளே. ஆற்றுகைகள் அதிகம் உள்ள சமூகம், விசைவேகம் மிக்க சமூகம் ஆகும். இந்த ஆற்றுகையின் போது, மூன்று விடயங்கள் முக்கியமானவை: ஆற்றுபவர், பார்ப்போர், மற்றும் ஆற்றுகை நிகழும் இடம்.
ஆற்றுகை நிகழும் இடம், மேடை எனப்படும். மேடையை அரங்கு என அழைக்கும் வழக்கு உண்டு. எனினும், மேடை என்பது வேறு, அரங்கு என்பது வேறு. மேடை என்பது வெட்டவெளியாக இருக்கலாம், உயர்த்தப்பட்டதாக இருக்கலாம், வட்டக்களரியாக இருக்கலாம், ஒரு பக்கம் அடைக்கப்பட்டதாக இருக்கலாம், முப்பக்கம் அடைக்கப்பட்டதாக இருக்கலாம் அல்லது அதிநவீன மேடையாகவும் இருக்கலாம். ஆனால் அது உயிர் இல்லாத வெறும் மேடை தான். ஆற்றுகை அங்கு நிகழ்ந்தால்தான் மேடை உயிர்ப்புப் பெறும். மேடையை மனிதர் தம் உடலாலும், உடல் அசைவுகளாலும், குரலாலும், காண்பியங்களாலும், ஆடல் பாடல்களாலும், வசனங்களாலும் உயிர்ப்பிக்கும் போது அது அரங்காகிறது. அங்கேதான் தொடர்பாடல் நிகழ்கிறது. இவ்வகையில் இதன் தொடர் சங்கிலியை இவ்வாறு கூறலாம்:
ஆற்றுவோார்> பார்ப்போர்> ஆற்றுகை> மேடை = அரங்கு
இவை அனைத்தும் சங்கமிக்கையில், அது அரங்காகிறது. அரங்கில் நிகழும் அனைத்தையும் நாம் அரங்கக் கலைகள் என அழைக்கின்றோம். இந்த அரங்கக் கலைகளில் ஒன்றுதான் நமது கூத்து ஆகும். அரங்கக் கலைகளுக்கு ஆற்றுகைக் கலைகள் என இன்னொரு பெயரும் உண்டு. இந்த ஆற்றுகைக் கலைகளை விஞ்ஞான பூர்வமாக கற்கும் முறையியல் அண்மைக்காலத்தில் உருவாகி, செல்வாக்கும் பெற்றுவிட்டது.
ஆற்றுகைக் கற்கைநெறி என்றால் என்ன?
ஆற்றுகையினை மானிடவியல், சமூகவியல், தொடர்பாடல், இலக்கியம், இசை, தத்துவம், நடனக் கற்கை, பண்பாட்டுக் கற்கை, புவியியல், உளவியல், அரசியல், சூழலியல் ஆகிய புதிய துறைகளைப் பயன்படுத்தி பல்வேறு நோக்கில் அணுகி, அதன் தன்மைகளைப் புரிந்துகொள்ளும் ஒரு பாட நெறிதான் ஆற்றுகைக் கற்கை நெறி. ஆற்றுகையினை தம் சிந்தனையின் அடிப்படையில் மேற்கு நாட்டவரும், கிழக்கு நாட்டவரும், இந்திய நாட்டவரும் புரிந்துகொள்ள முயன்றனர். மேற்கில் அரிஸ்டோட்டில் முக்கியமானவர். இதனை இந்திய மரபில் பரதமுனிவரும், தமிழ் மரபில் தொல்காப்பியரும் ஆராய முனைந்தார்கள். இவர்கள் வழியில் பின்னால் ஆராய்ந்த அறிஞர்கள் பலர். அந்த ஆய்வுகளை நம்மவர் அறிதல் அவசியம்.
ஆற்றுகைக் கற்கைநெறி ஏன் மேற்கிளம்பியது?
ஆற்றுகைக் கற்கை நெறி மனித நடத்தைகளையும், அவற்றின் அடித்தளமாக இருக்கும் பண்பாட்டையும், பண்பாட்டின் வேறுபாடுகளுக்கான காரணங்களையும் ஆராய்கிறது. இதனால் சமூக விஞ்ஞானிகளும், சமூகத்தை மேலும் அறிய விரும்புவோரும், அதனை மாற்ற விரும்பும் செயற்பாட்டுவாதிகளும் இக்கற்கை நெறி நோக்கிக் கவரப்படுகிறார்கள். ரிச்சர்ட் செக்னரின் ஆற்றுகைக் கோட்பாடுகள் (Performance Theory – Schechner), ஹென்றி பியால் தொகுத்த ஆற்றுகை கற்கைகள் (The Performance Studies Reader – Henry Bial), கொலின் கௌன்சிலும், லோறி வூல்பும் தொகுத்த ஆற்றுகைகளைப் பகுத்தாய்தல் (Performance Analysis – Colin Kaunsil and Lauri Wolf) எனும் நூல்கள் ஆற்றுகைக் கற்கை நெறி அறிய விரும்புவோர் வாசிப்பதற்குரிய நூல்களாகும். அத்துடன், இது பற்றி மேலும் அறிய ஆர்வமுடையோர் தொல்காப்பியம், கூத்த நூல், பஞ்சமரபு, பரதசேனாபதியம், அபினயதர்ப்பணம், நாட்டிய சாஸ்திரம் ஆகியன கூறும் ஆற்றுகை முறைகளையும் ஒப்பிட்டுக் கற்க வேண்டும்.
மேடையில் ஒரு பாத்திரத்தை நிறுத்தி ஒரேயொரு ஒளிப்பொட்டை அதன் மீது பாய்ச்சினால் அதன் ஒரு பக்கம் மட்டுமே தெரியும். அதனச் சுற்றி வலது புறம், இடது புறம், மேற்புறம் என சகல பக்கங்களிலும் ஒளிப்பொட்டுகளைப் பாய்ச்சினால் அப்பாத்திரத்தின் பல பாகங்களும் தெரிய வந்து, அந்தப் பாத்திரத்தின் தோற்றம் ஒரு முழுமையைத் தரும். அதேபோல, ஆற்றுகைகளையும் பல்வேறு துறை அணுகுமுறைகளையும் பயன்படுத்தி அதன் முழுமையைப் புரிந்து கொள்கிறோம். ஆற்றுகையின் முழுமையை அறிதலே இங்கு முக்கியமானதாகும். இப்பின்னணியில் நமது கூத்தினை அணுகுவோம்.
கூத்தின் மூலமும் அதன் பரிணாமமும்
முதலில் தொழிற்சடங்குகள் இருந்தன என்றேன்; அதன் பரிமாணமே சமயச் சடங்குகள் ஆகும், அதன் பரிமாணமே சமயம் சாராத கலை ஆற்றுகைகள் ஆகும், அதன் பரிமாணமே கலையில் கதை கூறும் ஆற்றுகைகளான கூத்து ஆகும், அதன் முகிழ்ப்பே நடனம் ஆகும், அதன் அடுத்த வளர்ச்சி நாடகம் ஆகும். இப்படிப் பார்த்தால், கூத்தநூல் அடி நின்றும், ஆற்றுகைக் கற்கைகள் நெறி நின்றும் கூத்தின் மூல வேர்களின் அடியினைக் கண்டு கொள்ளலாம்.
வெட்டவெளியிலே நடத்தப்பட தொழில் ஆற்றுகையில், வெட்டவெளியில் நடத்தப்பட்ட சடங்கு ஆற்றுகையில், அல்லது உயர்த்தப்பட்ட மேடையில் நிகழ்த்தப்பட்ட கலை ஆற்றுகையில் கூத்தின் மூல வேர்களைக் காண்கிறோம். சடங்குகளிலே கூத்தின் மூலவேர்கள் தெரிகின்றன. தொழில், சடங்கு, கலை என்பனவற்றின் பின்னணியில் சமூக அமைப்புகள் உண்டு. சமூகம் ஒன்றிலிருந்து ஒன்று பெற்றுப் பரிணாம வளர்ச்சி பெற்றது என்பது சமூகவியல் ஆய்வாளர் முடிவாகும். சமூகம் மாற, சடங்கும் தொழிலும் கலை ஆற்றுகையும் மாறுகின்றன. இப்படி ஆராய்வதை ‘கூத்தின் சமூகவியல்’ (Sociology of Theatre) ஆய்வு எனலாம்.
சமூக மாற்றத்தினடியாக கிரேக்க நாடகம் எவ்வாறு தோன்றியது என ஜோர்ஜ் தோம்சன் தமது ‘எஸ்கைலஸ் மற்றும் ஏதென்ஸ்’ (Aeschylus and Athens) எனும் நூலில் நிறுவியுள்ளார். சமயச் சடங்களிலிருந்து புராதன தமிழ் நாடகம் எவ்வாறு தோன்றியது என பேராசிரியர் சிவத்தம்பி தனது ‘பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம்’ எனும் நூலில் நிறுவியுள்ளார். சமயச் சடங்களிலிருந்து ஈழத்துக் கூத்துகள், முக்கியமாக மட்டக்களப்பு, வடமோடி, தென் மோடிக் கூத்துகள் எவ்வாறு வந்தன என்று ‘மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள்’ எனும் நூலில் இக்கட்டுரை ஆசிரியர் நிறுவியுள்ளார். இது பற்றி மேலும் அறிய விரும்புவோருக்கு இந்நூல்கள் உதவக் கூடும்.
“சடங்களிலிருந்து கூத்து எதை எடுத்தது?” ஒரு மாணவி கேட்டாள்.
“சடங்கில் சொல்லப்படுவது என்ன?” நான் அவளைக் கேட்டேன்.
“மந்திரங்கள்” அவள் மறுமொழி கூறினாள்.
“அங்கிருந்துதான் உச்சரிப்புகளை கூத்தும் பரதமும் பெற்றிருக்க வேண்டும்” என்றேன்.
“அது எவ்வாறு?” என்றாள்.
“சடங்கில் கூறப்படும் மந்திர உச்சரிப்பை ஒரு தரம் நினைத்துப் பாருங்கள். அதுவே கூத்துத் தாளக்கட்டின் அடிவேராக இருக்கலாம்” என்றேன்.
பொருள் இல்லாத அந்த ஓசை உச்சரிப்புகள்தான் மந்திரமாகும். பொருளற்ற ஓசையால் தெய்வத்தை உலகை வசப்படுத்தலாம் என மந்திரவாதிகள் எண்ணினர். “ஓம் கிரீம் சிக் ஹக்” இவை மந்திர உச்சாடனங்கள். “தாம் தாம் தரிகிட தோம்” என்பன கூத்துத் தாளக்கட்டுகள். அதிலிருந்து முகிழ்த்த செவ்வியல் நடனம் எனப்படும் பரதத்தின் ஜதியில் “தக்கத் தீங்கு தடீங்கு தக திமி” என்ற ஜதிகளைக் காண்கிறோம். சடங்கிலிருந்து பெற்ற ஓசைகளினடியாக கூத்திற்கும் பரதத்திற்கும் முறையே தாளக்கட்டுகளையும் ஜதிகளையும் நட்டுவனாரும் அண்ணாவியாரும் உருவாக்கியிருக்க வேண்டும். அவர்கள் கைபட்டு, அவர்களின் கற்பனையில் வளர்ந்த தாளக்கட்டுகளே அதனடியாக எழுந்த ஆட்டங்களே கூத்தாகவும் பரதமாகவும் மலர்ந்திருக்கலாம் என்பது அறிவுக்குப் பொருத்தமாக இருக்கின்றது.
பின்னால் வடமோடிக் கூத்துகள் பொருள் தரும் தாளக் கட்டுகளை உருவாக்கிக்கொண்டன. அவற்றைச் சொற்கட்டுகள் என்பர். பின்னர் மந்திரங்களுக்கும் பொருள் தரும் போக்குகளும் உருவாகின. கூத்து நடனம் என வருகையில், அவை நிகழ்த்த தமக்குள் பல கதைகளைக் கொண்டிருந்தன. கதை தழுவி வருவது கூத்து எனவும் கூறப்படலாயிற்று. அவை ஆரம்பத்தில் உள்ளூர்க் கதைகளாக இருந்தன. ஆரம்பகாலத் தமிழர் வழிபாடுகள் இன்றைய வழிபாடுகள் போல அல்ல; இன்றிருக்கும் அதிகமான தெய்வங்கள் அன்றிருக்கவில்லை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என வகுக்கப்பட்ட ஐந்து நிலங்களுக்கும் பல தெய்வங்களும் பிரதான தெய்வங்களும் இருந்தன. நிலத்திற்கு ஒரு தெய்வம் இருந்தது.
இன்று தமிழரிடையே பெரு வழக்கிலிருக்கும் புராணக்கதைகளில் வரும் தெய்வங்கள் அன்றிருக்கவில்லை. அன்றைய பண்டைய தமிழர் வழிபாட்டுத் தெய்வங்களுள் மேலெழுந்தவை கொற்றவையும் முருகனுமே. சங்க இலக்கியங்களில் இத் தெய்வ ஆடல்களுக்கான குறிப்புகள் உண்டு. ஏர்க்கள வேள்வி, போர்க்கள வேள்வி, சுடலையில் பெண்கள் ஆடிய துணங்கைக் கூத்து, வேலனாட்டம், வெறியாட்டம், போர் வென்று ஆடிய குரவைக் கூத்து என்பன பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. கூத்தர் இருந்தமைக்குச் சான்றுகளுண்டு. அவர்கள் மன்னன் புகழ் பாடியே கூத்துகள் ஆடியுள்ளனர்; புராணக் கதைகள் பாடி ஆடவில்லை. சங்க இலக்கியத்தில் வரும் தலைவன், தலைவி, தோழி, செவிலி, நற்றாய் கூற்றுகள் ஒரு நாடகப் பாத்திரம் கூறும் கூற்றுகளாகவேயுள்ளன. பெரும் நாடகம் ஒன்றில் வரும் சிறு காட்சிகள் போல அவை இருக்கின்றன. நமது பண்டைய பாணரும் கூத்தரும் ஆடிய கூத்துகளின் கருப்பொருள்கள், இவையாகவே அன்று இருந்திருக்கும்.
கூத்த நூல் கூறுவதுபோல் உடுக்கடித்து ஓசை எழுப்பி நடனத்தை உருவாக்கிய கூத்தனான சிவன் பற்றிய பெரிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. புராண இதிகாசக் கதைகள் பண்டைய தமிழகத்தை அதிகம் தாக்கவில்லை; அதுவே அன்றைய தமிழ்க் கூத்து. சடங்கிலிருந்து வெளிவந்த கலையாகிய ஆடலும் பாடலும் நிறைந்த ஆற்றுகையான கூத்து, தனக்கான கதைகளினை வடமொழியில் இருந்து பெற்று மேலும் வளர்ந்தமை, கூத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி எனலாம்; அது தமிழ் நடனம், சமஸ்கிருதமயம் பெற்ற கதை. அது பற்றி பின்னால் கூறப்படும்.
ஈழக் கூத்துகளுக்குச் செல்ல முன், தமிழ் நாட்டில் மிகப் பழங் காலத்தில் கூத்து எவ்வாறு வடமொழிப் புராண, இதிகாசக் கதைகளை உள்வாங்கி புதிய மாற்றம் பெற்றது என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.