அரசை நிலைகுலைய வைத்த சத்தியாக்கிரகப் போராட்டம்
Arts
10 நிமிட வாசிப்பு

அரசை நிலைகுலைய வைத்த சத்தியாக்கிரகப் போராட்டம்

May 11, 2023 | Ezhuna

இந்தியவம்சாவழி தொழிலாளர்களின் இலங்கை வருகை, அவர்களின் பிரஜாவுரிமை போன்ற பல விடயங்கள் தொடர்பேசுப்பொருளாக அமைந்திருக்கின்றன. ஆனால் கோப்பி பயிர்செய்கைக்குப் பின்னரான இந்தியவம்சாவழித் தமிழரின் வாழ்க்கை சூழல் எவ்வாறு அமைந்ததென ஒரு சில ஆய்வுகளே வெளிவந்துள்ளன. “கண்டி சீமையிலே-2 – சதிகளையும் சூழ்ச்சிகளையும் கடந்த வரலாறு” என்ற இந்த வரலாற்றுத்தொடர் அந்த இடைவெளியை நிரப்புவதாக அமைகின்றது. இலங்கையில் கோப்பிப்பயிர்செய்கை முடிவுற்று தேயிலை பயிர்செய்கைக்கான ஆரம்பத்தினை எடுத்துக்கூறுகின்றது. இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் தேயிலை தோட்டங்களில் பட்ட இன்னல்களையும் இடர்களையும் எடுத்துரைப்பதாக அமைகின்றது. கண்டி சீமைக்கு அழைத்துவரப்பட்ட தொழிலாளர்களின் உண்மை நிலையினை வரலாற்றுப் பார்வையினூடாக ஆதாரங்களுடன் எடுத்தியம்புகின்றது. இது வெறுமனே மக்களின் வாழ்வியல் பிரச்சினைசார் விடயங்களை மாத்திரம் தெளிவுப்படுத்தாமல், தொழில்சார், அரசியல், பொருளாதார, சமூகம் சார்ந்த பல்பரிமாண அம்சங்களினை வெளிகொணர்வதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்தொடரின் கடந்த வார அத்தியாயத்தில் ஒரு தொழிற்சங்கம் தன் தலையாய கடமை ஒன்றை  நிறைவேற்றத் தவறியதால் இந்த நாட்டில் 150 ஆண்டுகாலமாக வசித்த ஒட்டுமொத்தமான இந்திய வம்சாவழிச் சமூகத்தினரே எவ்வாறு அரசியல் அனாதைகள் ஆகிப்போனார்கள் என்பதையும் அன்றைய சூழ்நிலையில் அப்படி ஒரு வேலை நிறுத்தம் செய்து இருந்தால் நமக்கு இருந்த சாதகமான காரணிகளைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். மலையகத் தொழிற்சங்கங்கள் இன்று வரை இதே தவறை மீண்டும் மீண்டும் செய்து வருகின்றன. ஏனைய துறைகளைச் சார்ந்த தொழிற்சங்கங்கள் தொட்டது தொண்ணூறுக்கெல்லாம் வேலைநிறுத்தம் செய்து தங்களது கோரிக்கைகளை சுலபமாக பெற்றுக்கொள்கிறார்கள். ஏன் இந்த நிலை.?  அதனால்தான் ஒரு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வைக் கூட எம்மால் பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறது. இனி விட்ட இடத்திலிருந்து கட்டுரையைத் தொடர்கிறேன்.

PROTEST INDIAN TAMILS

6. நூற்றுக்கணக்கான  தேயிலை ஏற்றுமதித் தரகு நிறுவனங்களும் இதனுடன் தொடர்புடைய ஆயிரக்கணக்கான உப நிறுவனங்களும் தேயிலை ஏற்றுமதி தொழிலையே முதன்மையாகக் கொண்டு அவற்றில் தங்கியிருந்தன. அவர்கள் அனைவருமே தொழிலை இழந்து நஷ்டத்தை எதிர்நோக்கி இருந்திருக்க மாட்டார்கள். அவர்கள் அனைவருமே இத்தகைய நிறுத்தம் ஒன்று இடம் பெறுவதை விரும்பி இருக்க முடியாது.

7. தேயிலைப் பெருந்தோட்ட உற்பத்தித் துறையுடன் சார்ந்தவர்களாக ஆயிரக்கணக்கான ஒப்பந்தகாரர்கள், உப ஒப்பந்தக்காரர்கள் மற்றும் பெருந்தொகையான சேவையாளர்கள் வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்டு அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை கொண்டுவருவார்கள்.

NERU-SRILANKA-INDIAN-TAMILS

8. இறுதியாக சோசலிச சிந்தனைகளைக் கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நேரு அவர்கள் இலங்கை சுயாதீனமான ஒரு இறைமையுள்ள நாடு என்ற அடிப்படையில் அதன் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற கொள்கையைக் கொண்டு நடுநிலை வகித்தார். எனினும் இப்படி ஒரு நிலையில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் அனைவரும் ஒருசேர இணைந்து  இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு ஒன்றை ஏற்படுத்தும் படி விடாப்பிடியாக நின்றிருந்தால், அப்படி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்கள் மீது அத்துமீறல்களையும் அடாவடித்தனங்களையும் அரசாங்கமும் முதலாளித்துவ வர்க்கமும் ஏவி விடத் துணிந்தால்  இந்தியப் பிரதமருக்கு இதில் தலையிட்டே ஆகவேண்டிய ஒரு கட்டாய நிலை தோன்றி இருக்கும். அப்படி ஒரு நிலை ஏற்படுவதற்கு தொழிற்சங்கங்கள் இதனை ஒரு காரணமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

இது தொடர்பில் இன்னும் சில சாதகமான காரணிகளைப் பட்டியலிட முடியும். எனினும் இந்தக் காரணிகளே இத்தனை பெரிய சாதகமான தீர்வொன்றை பெற்றுக் கொடுப்பதில் இருந்து இலங்கை இந்திய காங்கிரஸ் அரசியல் கட்சியும் அதன் தொழிற்சங்கமும் தவறி இருக்கின்றது என்பதை புரிந்து கொள்வதற்கு போதுமானதாகும்.  அதன் காரணமாக இந்த மக்கள் இன்று வரை அனுபவிக்கும் துன்ப துயரங்களுக்கும் இவர்களே காரணமாகிவிட்டார்கள். தம் கரங்களில் வைத்திருந்த மிகப்பெரிய ஆயுதமான “தொழிற்சங்கம் மற்றும் தொழிலாளர்  சக்தி” என்பவற்றைப் புறந்தள்ளி சாத்வீகப் போராட்டம், உண்ணாநோன்பு போன்ற பொருத்தமற்ற போராட்ட வழிகளில் அவர்கள் இறங்கினார்கள். இந்தவிதப் போராட்டங்களை குண்டர்களையும் காடையர்களையும் ஏவிவிட்டு ஒடுக்கி போராட்டக்காரர்களை அடித்து உதைத்து நசுக்கிவிடுவது அவர்களுக்கு ஒரு கடினமான காரியமாக இருக்கவில்லை.

THONDAMAN-NERU

1952 ஆம் ஆண்டு மே மாதம் 24, 26, 28, 30 ஆம் ஆகிய திகதிகளில் இலங்கை நாடாளுமன்றத்துக்கான இரண்டாவது பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இலங்கை இந்திய காங்கிரஸ் தாம் மேற்படி பிரஜா உரிமைச் சட்டத்துக்கு எதிராக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் இறங்கப் போவதாக 1952 மே, முதலாம் திகதி தொழிலாளர் தினத்தன்று அறிவித்தனர். தேர்தல் தினங்கள் உட்பட சுமார் 140 தினங்கள் நீடித்த இந்தப் போராட்டம் வெற்றி பெறவில்லை என்ற போதும் இலங்கை வரலாற்றில் ஒரு முக்கிய அரசியல் நிகழ்வாக பதிவு செய்யப்பட்டுவிட்டது.

இதற்கிடையில் அன்றைய காலகட்டத்தில் இலங்கையின் பிரதமராகப் பதவி வகித்தவரும்  இலங்கையில் இந்திய வம்சாவழித் தமிழரின் ஒட்டுமொத்தப் பிரஜா உரிமையையும் ஓட்டுரிமையையும் பறித்தெடுத்த முற்றிய இனவாதி என்ற பெயரை பெற்றுக்கொண்டவரும்,  இந்த நாட்டை அதல பாதாளத்தை நோக்கி இட்டுச் செல்லும் அரசியல் பாதையில் முதல் காலடி எடுத்து வைத்தவருமான  டி. எஸ். சேனநாயக்கா திடீர் சுகவீனமுற்று 1952, மார்ச் மாதம், 22 ஆம் திகதி காலமானார். அதனைத் தொடர்ந்து அவரது புத்திரன் டட்லி சேனநாயக்கா பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.  புதிய பிரதமரான டட்லி சேனநாயக்காவும்கூட தன் தந்தை  டி. எஸ். சேனநாயக்கா சென்ற அதே இனவாதப் பாதையில் செல்வதற்கு கொஞ்சம் கூட பின்நிற்கவில்லை.

CONGRESS

இத்தகைய கட்சி மாற்றங்களுக்கு மத்தியில் இலங்கை இந்திய காங்கிரஸ் கட்சி மற்றும் தொழிற் சங்கத்தின் தலைவர் தொண்டமான் மற்றும் அப்துல் அசீஸ் ஆகியோரின் தலைமையில் பிரதமர் டட்லி சேனநாயக்காவின் அலுவலகத்தின் முன்றலில் சத்தியாக்கிரக சாத்வீகப் போராட்டம் ஆரம்பமானது. இவர்கள் இரண்டு குழுவினராகப் பிரிந்து ஒரு குழுவில் 500 பேர் வரையில் இருக்கும்படி அமைத்துக் கொண்டனர். ஒரு குழுவினர் ஐந்து நாட்கள் உண்ணாவிரதம் இருக்கும் போது மற்றைய குழுவினர் அதனை தொடர்ந்து வரும் மேலும் ஐந்து நாட்களுக்கு உண்ணாவிரதம் இருப்பது என்று வேலைத்திட்டம் ஒன்றை அமைத்துக் கொண்டனர். முதல் ஐந்து நாள் சத்தியாக்கிரகப் போராட்டக் குழுவினருக்கு எஸ். தொண்டமான், கே. இராஜலிங்கம், எஸ். சோமசுந்தரம், கே. குமாரவேல் ஆகிய தலைவர்கள் பிரதானமாகக் கலந்து கொண்டனர். இந்த உண்ணாவிரதப் போராட்டம் இந்த அளவுக்கு பெரிதாகவும் திட்டமிட்டபடியும் இடம்பெறும் என்று பிரதமர் டட்லி சேனநாயக்காவும் அவரது அடிவருடிகளும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் இதைப் பற்றி அறிந்த உடனேயே பொலிஸ் தடியடிப்  பிரிவையும், குண்டாந்தடிகளையும், காடையர் கூட்டத்தையும் தயார் பண்ணி வைத்துக்கொண்டனர். அவர்களைப் பொறுத்தவரையில் என்ன திருகுதாளம், தில்லுமுல்லுகள்  செய்தாவது இந்த சாத்வீகப் போராட்டத்தை முறியடித்து விட வேண்டும் என்பதாகும்.

 இக்காலத்தில் இலங்கை இந்திய காங்கிரஸ் அமைப்பின் தலைமைக் காரியாலயக் கட்டடம் கொழும்பு மெயின் வீதியிலேயே அமைந்திருந்தது. அன்று அதிகாலையிலேயே தலைவர்கள் முன்னே செல்ல தொண்டர்கள் பின்தொடர மெயின் வீதியில் இருந்து ஊர்வலமாக சென்று கோல்பேஸ் திடலில் அமைந்திருந்த பிரதம மந்திரி காரியாலயத்தின் முன்றலை அடைவது என்பதே அவர்களது திட்டம். ஆனால் இத்திட்டத்தை முன்பே அறிந்து வைத்திருந்த அரசாங்கம் அந்த ஊர்வலத்தை தடுத்து முறியடிப்பதற்காக அவர்கள் செல்லும் வழிகளில் குறிப்பிட்ட சந்திகளில் குண்டர்களையும், கூலிப்படையையும்,  பொலிஸாரையும் அனுப்பி தடியடி பிரயோகம் மேற்கொள்ள ஏற்பாடு செய்திருந்தது. இருந்தாலும் ஊர்வலத்தில் கூட்டம் அதிகம் இருந்ததாலும்  நாடாளுமன்ற அங்கத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்ள தயக்கம் காட்டியபடியாலும் அவர்கள் ஒருவாறு தடைகளைக் கடந்து  நாடாளுமன்ற வாயிலைச் சென்றடைந்தார்கள்.

இவ்வாறு அன்று  நாடாளுமன்றத்துக்கு முன்பாகவும் பிரதமர் காரியாலயத்திற்கு முன்பாகவும் சத்தியாக்கிரகமும் உண்ணாவிரதப் போராட்டமும் நடந்துகொண்டிருந்தபோது  நாடாளுமன்றத்துக்கு உள்ளே  நாடாளுமன்ற நிகழ்வுகளை அங்குரார்ப்பணம் செய்து வைத்து ஆளுநர் நாயகம் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். இந்த நிலையில்  நாடாளுமன்றத்துக்கு வெளியே  நாடாளுமன்றப் பூமியில் இத்தகையதொரு சத்தியாகிரகம் இடம்பெறக்கூடாது என்று கருதிய சபாநாயகர் அதிகாரிகளை அழைத்து சத்தியாக்கிரகிகளை அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார். வெளியே வந்த அதிகாரிகள் சபாநாயகரின் கட்டளையை அறிவித்தபோது சத்தியாக்கிரகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து நாங்கள் சபாநாயகரைச் சந்திக்க வேண்டுமென்று குரல் கொடுத்தார்கள்.  அவர்களது கோஷம்  நாடாளுமன்ற வளாகம் எங்கும் ஓவென்று எதிரொலித்தது.  பொலிஸ் அதிகாரிகள் சத்தியாக்கிரகிகளை அகற்ற முற்பட்ட போதும் யாரும் அங்கு இருந்து அசையவில்லை. அவர்கள் மீண்டும் மீண்டும் கோஷம் எழுப்பினர். அவர்களது கோசம் பின்வருமாறு அமைந்திருந்தது :-

அடிக்காதே ….. அடிக்காதே… சத்தியாக்கிரகிகளை அடிக்காதே….”
” நசுக்காதே …… நசுக்காதே ….
அகிம்சாவாதிகளை நசுக்காதே ….. “
” கொடு …… கொடு ……
பிரஜாவுரிமையை திருப்பிக்கொடு….”
” எங்களுக்கு தேவை …… மனித உரிமை மட்டுமே ….. “
” பிரஜாவுரிமை எங்கள் பிறப்புரிமை… “

சத்தியாக்கிரகம் இவ்வாறு அங்கு நடந்துகொண்டிருந்தபோது இவர்களை எவ்வாறு அங்கிருந்து அகற்றலாம் என்று அமைச்சர்கள் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள் .

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

7410 பார்வைகள்

About the Author

இரா. சடகோபன்

இரா. சடகோபன் என்று எழுத்து உலகில் அறியப்பட்ட இராமையா சடகோபன் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிறப்பு பட்டதாரி ஆவார். அதன்பின் ஒரு சட்டத்தரணியாக தன்னை உயர்த்திக் கொண்ட இவர் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் மூன்று நூல்களுக்குத் தேசிய சாகித்திய விருதுகளையும் பெற்றுள்ளார்.

விஜய் சிறுவர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரான இவர், 'சுகவாழ்வு' சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் ஆவார். இதனைத் தவிர மலையக மக்கள் மேம்பாடு தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். சடகோபன் ஊடகத்துறையில் ஆற்றிய பணிக்காகச் சிறந்த ஊடகவியலாளருக்கான ஜனாதிபதி விருதையும் பெற்றுள்ளார்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)