தமிழில் : த. சிவதாசன்
யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் புதிய பீடத் தலைவராக செப்டெம்பர் 2021 முதல் நியமனம் பெற்ற டாக்டர் ராஜேந்திரன் சுரேந்திரகுமாரன் (சுரேன்) அவர்களைச் சந்திக்கும்வரை சர்வதேசங்களுடனான ஊடாட்டத்தின் முக்கியத்துவம் பற்றி நான் அதிகம் பொருட்படுத்தியிருக்கவில்லை. ஒரு தொழில்துறையின் வெற்றிக்கு நிபுணத்துவம், அனுபவம், ஆராய்ச்சி, நிதியுதவி ஆகியன எவ்வளவு முக்கியமோ அதே போன்று கல்வித்துறையின் வெற்றிக்கும் அவை அவசியமானவை.
தனது நண்பர்கள், சக பணியாளர்கள் என்ற பரந்த வலையமைப்பினூடாக சுரேன் புலம்பெயர் தமிழர்களுடன் ஏற்படுத்தியுள்ள ஈடுபாட்டைப் பார்த்து நான் புளகாங்கிதம் அடைந்தேன். பிரித்தானியாவிலுள்ள பேர்மிங்ஹாம் பல்கலைக்கழகம், பிறிஸ்டல் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கல்வியாளர்களோடு அவர் உறவை ஏற்படுத்தியிருக்கிறார்; ‘வெல்கம் ட்றஸ்ட்’ (Wellcome Trust), ‘றோச் குளோபல்’ (Roche Global), பிரித்தானியாவின் சுகாதார ஆராய்ச்சிக்கான தேசிய நிலையம் (National Institute of Health Research (NIHR) மற்றும் பிரித்தானிய தேசிய சுகாதார சேவை (National Health Service – NHS) ஆகிய அமைப்புகளிடமிருந்து சுரேன் தனது திட்டங்களுக்கு நிதியுதவியைப் பெற்றிருக்கிறார். சீரற்ற இதயத் துடிப்பு (Atrial Fibrillation ) ஆராய்ச்சி தொடர்பாக யாழ்ப்பாணத்திலுள்ள அவரது குழு பிரேசில், சீனா ஆகிய நாடுகளிலுள்ள ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. வடக்கு, கிழக்கில் புற்றுநோய்த் தடுப்புக்கான ‘கேன்’ (Cancer control North East (CANE)) அமைப்பின் தலைவராக சுரேன் பணிபுரிகிறார். இவ்வமைப்பு பிரித்தானியாவின் ‘கேன் – யூ.கே’ (CANE UK) என்ற தொண்டு நிறுவனத்தின் ஆதரவில் இயங்குகிறது. ‘கேன்’ ஆதரவுடன் யாழ்ப்பாணத்தில் சுரேன் ஆரம்பித்த, வலி முகாமைத்துவத்துடன் (pain management) கூடிய, அந்திமகாலப் பராமரிப்புச் சேவை (Palliative Care) கனடிய தொண்டு நிறுவனமான ‘இரு உலக புற்றுநோய் ஒத்துழைப்பு’ (Two World Cancer Collaboration – TWCC) மற்றும் கனடா, அமெரிக்காவைத் தளங்களாகக் கொண்ட அனைத்துலக மருத்துவ நல அமைப்பு ( International Medical Health Organisation – IMHO) ஆகியவற்றின் ஆதரவில் நடைபெற்று வருகிறது.
இச்சேவையின் உண்மையான பலனாக, TWCC மற்றும் IMHO தொண்டு நிறுவனங்களின் ஆதரவில், வட மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் உதவியுடன் சுரேன் ஆரம்பித்த நடமாடும் அந்திம காலப் பராமரிப்பு மற்றும் வலி முகாமைத்துவ சேவைக் குழுவினர் நோயாளிகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் இறுதிக் காலங்களை வலி குறைந்தவையாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவது காணப்படுகிறது. இச் சேவை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் நோயாளிகள் தம் இயலாமையையும் பொருட்படுத்தாது தூர இடங்களிலிருந்து பஸ் வண்டிகளில் ஏறி மருத்துவமனைகளுக்கு வந்துபோக வேண்டியவர்களாக இருந்தார்கள்.
யாழ். மருத்துவ பீடத் தலைவராகப் பணியாற்றாத வேளைகளில் சுரேன், சிறிய பிராந்திய மருத்துவமனைகளில் பணி புரிகிறார். 1973 இல், தான் பிறந்த மருத்துவமனையான மூளாய் கூட்டுறவு மருத்துவமனையில், கெளரவ மருத்துவ ஆலோசகராகப் பணியாற்றுகிறார். புலம்பெயர் தமிழரது ஆதரவுடன், மானிப்பாய் கிரீன் மெமோரியல் மருத்துவமனையில், 2011 இல், மருத்துவ விஞ்ஞான நிலையம் (Institute of Medical Sciences – IMS) சுரேனால் ஆரம்பிக்கப்பட்டது. இதற்காக சுரேன் லண்டனிலுள்ள பிரபல செய்ன்ட் பார்தலோமியூ மருத்துவமனையில் ஒரு வருட விசேட கல்வியைப் பெற்றிருந்தார். சுகாதார சேவைகளை வழங்குவதுடன், மருத்துவரல்லாத, இதர மதிப்பற்ற சுகாதார சேவைகளில் இளையோரை ஈடுபடுத்தும் பயிற்சிகளையும், வழிகாட்டல்களையும் இம் மருத்துவ விஞ்ஞான நிலையம் வழங்கி வருகிறது.
மருத்துவத் துறைக்கு அப்பால், சுரேன் பல சமூக சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். உலக சுகாதார அமைப்பின் ஒரு பிரிவானதும், அதன் நிதி ஆதரவில் இயங்குவதுமான ‘யாழ்ப்பாண சுகாதார நகர்’ (Jaffna Healthy City) என்ற அமைப்பின் யாழ்ப்பாண முகாமைத்துவக் குழுவிற்குத் தலைவராகவும் சுரேன் செயற்படுகிறார். அரசியல் அர்ப்பணிப்பு, நிறுவன ரீதியான மாற்றம், சுகாதார அபிவிருத்தி, திறன் உருவாக்கம், பங்காளி அடிப்படையில் திட்டமிடல், புதுமையான திட்டங்கள் ஆகிய நடைமுறைகளினூடு உள்ளூராட்சி அரசுகளை சுகாதார அபிவிருத்தியில் ஈடுபட ஊக்குவிக்கும் முயற்சிகளை உலக சுகாதார நிறுவனம் இவ்வமைப்பினூடாகச் செய்ய எத்தனிக்கிறது. இதைவிடவும், உலக வங்கியின் ‘எஹெட்’ (World Bank’s AHEAD) திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘நீர்ப் பாதுகாப்பு’ திட்டத்தில், வட மாகாணத்தில் ‘பல பங்குதார’ (multi-stakeholder) அணுகுமுறையைக் கையாள முன்னெடுக்கப்பட்டுவரும் ஆராய்ச்சியில் சுரேன் ஒருங்கிணைப்பாளராகச் செயற்பட்டு வருகிறார். குப்பைகூழ முகாமைத்துவம், மீள் சுழற்சி, ஆரோக்கிய உணவு, உடற் பயிற்சி ஆகிய விடயங்களில் முன்னெடுப்புக்களை நடைமுறைப்படுத்தும் உத்திகளையும் செயற்பாட்டு முறைகளையும் அறிமுகப்படுத்துவதற்கு இளைய தலைமுறையினரை ஈடுபடுத்துவதில் தற்போது சுரேன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
சமகாலப் பிரச்சினைகள்
பீடத் தலைவராகப் பதவியேற்றதிலிருந்து எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சினைகள் என்ன என்று நான் கலாநிதி சுரேந்திரகுமாரனைக் கேட்டேன்.
இளம், மதியூகிகளான மருத்துவர்களைக் கல்வித்துறைக்குள் ஈர்க்க மருத்துவ பீடம் சிரமப்படுகிறது. வெளி மாகாணங்களுக்கு நகர்வது, வெளிநாடுகளுக்குக் குடிபெயர்வது ஆகியவற்றின் மூலம் பல மருத்துவர்கள் அதிக சம்பாத்தியத்தையும், சந்தர்ப்பங்களையும் நோக்கிச் செல்கிறார்கள். சம்பள வழங்கல் விடயங்களில், இலங்கையின் பல்கலைக்கழக மருத்துவ பீடங்கள், உயர்கல்வி அமைச்சின்கீழ் வருகிறது. இது அரசாங்க மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை விடக் குறைவானது.
ஆராய்ச்சி, அபிவிருத்திகளில் (R&D) செய்யப்படும் முதலீடுகள் இலங்கையில் மிகவும் குறைவு. இலங்கை நிதியமைச்சின் புள்ளிவிபரப்படி, 2020 இல் இலங்கையின் மொத்த உற்பத்தியின் 0.2 சதவீதமே ஆராய்ச்சி, அபிவிருத்தித் துறையில் முதலீடு செய்யப்பட்டது. யுனெஸ்கோ நிறுவன புள்ளிவிபரங்களின்படி இவ்விடயத்தில் இலங்கை மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது.
கொழும்பு, மொறட்டுவ உள்ளிட்ட இதர பல்கலைக்கழகங்கள், தனியார், அறக்கட்டளைகள், நிதியங்கள், இலாப நோக்கற்ற அமைப்புக்கள் மற்றும் அரச திணைக்களங்களிலிருந்து நிதியைப் பெறுவதால் இவ்விடயத்தில் வெற்றிகரமாகச் செயற்படுகின்றன. அத்தோடு அவை தனியார் – அரசு இணைந்த (Public Private Partnerships – PPP) கூட்டு உற்பத்தி, சேவை வழங்கல் முறைகளையும் கடைப்பிடிக்கின்றன. இவற்றைப் போன்று தனியார் நிதிகளைப் பெறும் வழிகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வழிகளைத் திறமையாகக் கையாளக் கற்றுக்கொள்வதன் மூலம் யாழ். பல்கலைக்கழகமும் ஆராய்ச்சி, அபிவிருத்தித் துறையில் மேம்பட்ட ஒன்றாக வரமுடியும்.
குறிப்பாக, யாழ். பல்கலைக்கழகம், பல்கலைக்கழக – தொழில் நிறுவன இணைப்புகளை (University Business Linkages – UBL) உருவாக்க வேண்டும். பல்கலைக்கழகங்களை தொழில் நிறுவனங்களுடன் இணைப்பதன் மூலம் இருதரப்பும் பரஸ்பர நன்மைகளைப் பெறமுடியும். விஞ்ஞான முறைகளைப் பின்பற்றுவதால் உயர் இலக்குகளை அடையக்கூடிய வளங்களைத் தொழில் நிறுவனங்கள் பெற்றுக் கொள்ளலாம். அதே வேளை, உதவிப் பணங்களில் தங்கியிருப்பதை விட, தொழில் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், பல்கலைக்கழகம், குறிப்பாக இளம் கல்வியாளர்கள், மாணவர்கள், நிஜமான புதிய கண்டுபிடிப்புக்களையும், புதிய சேவைகளையும் அறிமுகம் செய்து அதன் மூலம் பெரும் பணமீட்டலைச் செய்துகொள்ள முடியும்.
பல்கலைக்கழகம் தனது கற்கைநெறியைப் புதுமைப்படுத்திக்கொள்ள வேண்டும். நிதிப்பற்றாக்குறையாலும், புதிய அனுபவங்களையும் எண்ணக்கருக்களையும் கொண்டுவரக்கூடிய புதியவர்களை ஈர்க்காமையால், நவீன தொழில்நுட்பத்தையும் வளங்களையும் பெற்றுக்கொள்ள முடியாமல் யாழ். பல்கலைக்கழகம் பின்தங்கிவிட்டது. வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதன் மூலம் இங்குள்ள கல்வியாளர்கள் அங்கு சென்று புதிய அனுபவங்களையும், எண்ணக்கருக்களையும் கொண்டுவர முடியும். இலங்கையின் இதர பல்கலைக்கழகங்கள் மிகச் சிறந்த வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளன. இப்படி வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதன் மூலம் யாழ் பல்கலைக்கழகத்திற்கும் பல இளைய, விவேகமான கல்வியாளர்களை ஈர்க்க முடியும்.
பல்கலைக்கழகத்தின் இதர பீடங்களுடன் நெருங்கிய ஒத்துழைப்பை உருவாக்கிக் கொள்ளலாம். கிளிநொச்சியில் இருக்கும் பொறியியல் பீடத்தோடு ஏற்கனவே இணைந்து செயற்படுவதன் மூலம், 3D வார்ப்பு (3D Printers) தொழில்நுட்பத்தைப் பாவித்து செயற்கை இருதய வால்வுகள், மூட்டுக்கள், அவயவங்கள் ஆகியன உற்பத்தி செய்யப்படுகின்றன. டிஜிட்டல் சுகாதாரத் திட்டத்தின் கீழ், ஸ்மார்ட் ஃபோன்களின் உதவியுடன் இருதயத் துடிப்பைக் கண்காணிக்கும்/எச்சரிக்கும் (ECG ) வழிமுறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஒரு நோயாளி மருத்துவமனைக்கு விரைவாகவே சென்று சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள முடியும். வீடுகளில் தனிமைப்படுத்தப்படுபவர்களது சுகாதாரத்தைக் கண்காணிக்கும் வழிமுறைகள் ஆராய்ச்சியில் உள்ளன. பெருந்தொற்றுக் காலத்தில் இவை மிகவும் பிரயோசனமாகவிருக்கும்.
கல்வியாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காக நேரம் ஒதுக்கப்படுவதில்லை. அவர்களது நேரம் முழுவதும் கற்பித்தலுக்காகவே ஒதுக்கப்படுகிறது. அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் உட்பட, பலவற்றால் ஆராய்ச்சிகளுக்காக ஒதுக்கப்படும் பணத்தை எப்படிப் பாவிப்பது என்பது பற்றி கல்வியாளர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும். பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். ஒரு பல்கலைக்கழகத்தின் பெயரும் புகழும் இப்படியான ஆராய்ச்சிகளில் தான் தங்கியிருக்கிறது.
புலம்பெயர் தமிழரின் வலு
பல்கலைக் கழகத்துக்கு ஆதரவு வழங்குவதில் புலம் பெயர் தமிழர்களின் பலம் பற்றி சுரேன் மீண்டும் அழுத்திக் கூறுகிறார். பெர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் நிதியாதரவு, நான்கு ஆய்வாளர்கள், 25 தரவு சேகரிப்பாளர்களைக் கொண்ட குழு, ஒரு நிலையத்தை நிர்வகிப்பதற்கான செலவு ஆகியவற்றைக் கவனித்துக் கொள்கிறது. யாழ் பல்கலைக்கழகத்தின் அறுவைச் சிகிச்சைத் திணைக்களம், எலும்பியல் பிரிவு சிங்கப்பூர் லீ அறக்கட்டளை மற்றும் சிங்கப்பூர் நலன் விரும்பிகள் ஆகியவர்களின் ஆதரவில் நடைபெற்று வருகிறது.
புற்றுநோயியல் ஆராய்ச்சிக்கென வழங்கப்படும் ஏ.எஸ். தம்பையா நன்கொடையைத் தன் தந்தையின் நினைவாக மலேசியாவிலிருந்து திரு.ரி. யோகேஸ்வரன் வழங்கி வருகிறார். புற்றுநோய் ஆராய்ச்சிக்கான ஒரு பேராசிரிய இருக்கைக்கு இந் நிதியம் ஆதரவு தருகிறது.
ரொறோண்டோ பலகலைக்கழகத்தின் இடப்பகிர்வுத் திட்டத்தின்கீழ் பலர் தொண்டு ரீதியிலும், சம்பள ரீதியிலும் வட மாகாணத்துக்கு வந்து சேவை புரிகிறார்கள். தம் தாயகத்தைப் பற்றி அறிந்திராத இரண்டாம் தலைமுறை புலம்பெயர் தமிழர்கள் இத் திட்டத்தின் மூலம் தாய் மண்ணுடன் இணைப்புகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும். பல தமிழர்கள், புலம் பெயர் தேசங்களில் பல உயர் பதவிகளில் இருக்கிறார்கள். இப்படியான தொடர்புகளை ஏற்படுத்துவதிலுள்ள அவசியத்தையும் அதனால் ஏற்படுத்தவல்ல சந்தர்ப்பங்களையும் அவர்கள் உணர்வார்கள்.
மக்கள் தம் சுய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவல்ல சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்க புலம்பெயர் தமிழர்கள் அதிக உதவிகளைச் செய்யவேண்டும் என்கிறார் டாக்டர் சுரேந்திரகுமாரன். சிறந்த பயிற்சி, சிறந்த வேலை, சிறப்பான சந்தர்ப்பங்கள் ஆகியன பண உதவியால் கிடைக்கும் ‘சுய பிரயோசனமற்றவர்’ என்ற உணர்வு நிலையைவிடச் சிறந்தவை. இதுவே வடமாகாணத்தில் இன்று காணப்படும் நீடித்த உடல், மன, சமூக நோய்களுக்கான காரணம்.
டாக்டர் சுரேந்திரகுமாரனைத் தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் surenthirakumaran@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி : மறுமொழி, Lanka Business Online (www.lankabusinessonline.com)
தொடரும்.