இன்றைய நாட்களில் சமூக ஊடகங்களின் வகிபாகம் மிக முக்கியமானது. சகல துறைகளிலும் அதன் செல்வாக்கை் தவிர்க்க முடியாதுள்ளது. நல்லதோ கெட்டதோ சமூக ஊடகம் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. கால்நடை வளர்ப்புச் செயன்முறையும் இதற்கு விதிவிலக்கல்ல. இன்றைய நவீன கால்நடை வளர்பில் கணிசமான விடயங்களை சமூக ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்த முடிகிறது. இனிவருங் காலங்களின் அதன் பங்களிப்பு இன்னுமின்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தக் கட்டுரை கால்நடை வளர்ப்பு விரிவாக்கத்தில் சமூக ஊடகத்தின் பங்களிப்பை ஆராய்கிறது. எவ்வாறெல்லாம் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி கால்நடை வளர்ப்பை மேம்படுத்தலாம் என தெரிவிக்கப் போகிறேன்.
இலங்கை போன்ற நாடுகளில் உள்ள கால்நடைகளின் உற்பத்தி திறன் (Productivity) கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அமைந்திருக்கவில்லை. பெரும்பாலான கால்நடை வளர்ப்பாளர்கள் மேம்படுத்தப்பட்ட முகாமைத்துவ முறைகளைக் கையாள்வது கிடையாது என்பதால் அவர்களின் வளர்ப்பு முறைகளில் மாற்றம் செய்வது அவசியமாகிறது. இதற்காக கடுமையான விரிவாக்கற் (Vigorous extension) செயன்முறை தேவைப்படுகிறது.
முன்பெல்லாம் ஒரு முக்கியமான விரிவாக்கல் (Extension) செயன்முறையை செய்யும் போது அங்கு நேரடியாக வரும் பயனாளர்களுக்கு மட்டுமே தகவல் போய்ச் சேர்ந்திருக்கும். உதாரணமாக, கறவை மாடு வளர்ப்பில் முக்கியமான உணவாக இருக்கும் ஊறுகாய்ப் புல்லைத் தயாரிப்பதை நேரடியாக பண்ணையாளர்களுக்குச் செய்து காட்டும் போது, அங்கு வருகை தந்திருக்கும் குறித்த எண்ணிக்கையான பண்ணையாளர்கள் மாத்திரமே அதனை அறிந்து கொள்வார்கள். எனினும் இன்றைய சமூக ஊடகச் செயன்முறையுடன் அமைந்த விரிவாக்கல் முறைகள் காரணமாக மிகத் தொலைவில் வாழும் நபர்களும் பயன்பெற முடிகிறது. சமூக ஊடகப் பரப்பில் பல்வேறு வகையான பண்ணையாளர்களின் அனுபவங்கள், வெற்றிக்கதைகள், தோல்விக் கதைகள், கால்நடை வைத்தியர்களின் ஆலோசனைகள் எனப் பல முக்கியமான கால்நடை வளர்ப்பின் நுட்பங்கள் காணொளி வடிவில், எழுத்து வடிவில் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தி பலர் தமது பண்ணை வளர்ப்பை மேம்படுத்தியும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நவீன சமூக ஊடகங்களாக Facebook, Whatsapp, Youtube, Instagram,Tiktok, linkedin, Telegram, X (Twitter) போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவை ஒரு நாட்டுக்கு என்று மட்டும் வரையறுக்கப்படாது, சர்வதேச ரீதியாகவும் இணைந்துகொள்ள வழிசமைக்கின்றன. நான் தமிழ்நாட்டிலுள்ள பல கால்நடை வைத்தியர்களின் whatsapp, Telegram, Facebook குழுமங்களில் இணைந்திருப்பதால் அங்குள்ள கால்நடை வைத்தியர்களின் தகவல்கள், பிரச்சினைகள், வாய்ப்புகள் மற்றும் நவீன நுட்பங்கள் பற்றி அறிய முடிகிறது. பல பன்னாட்டுக் கால்நடை மருத்துவ மற்றும் ஏனைய கால்நடை தொடர்பான Facebook, Telegram, Youtube குழுக்களை subscribe செய்து இணைந்ததன் காரணமாக அந்தந்தப் பகுதிகளின் பல முன்னேற்றகரமான விடயங்களை அறிந்து கொள்ள முடிகிறது. இதே போல் பல பண்ணையாளர்களும் பல குழுக்களில் இணைந்து பயனடைகிறார்கள்.
கால்நடை வளர்ப்பை மேம்படுத்தக் கூடிய சமூக ஊடகங்களும் செயற்பாடுகளும்
கால்நடை வளர்ப்புத் தொடர்பான விடயங்களைத் தரத்தக்க குழுக்கள் (Groups), பக்கங்கள் (Pages) போன்றவற்றை உருவாக்கி பண்ணையாளர்கள், கால்நடை வைத்தியர்கள், கால்நடைத் தொழில்நுட்பவியலாளர்களை இணைக்கலாம். நான் எனது Facebook தளத்தில் அன்றாடம் எனது தொழில் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களை, புதிய விடயங்களைப் பதிவிடுகிறேன் என்பதை அறியத் தருகிறேன். எனக்குத் தெரிந்து உலகளாவிய ரீதியில் பல கால்நடை வைத்தியர்கள், பண்ணைகள், அமைப்புகள், கால்நடை வளர்ப்புத் தொடர்பான தொழிற்சாலைகள், கடைகள், அரச அமைப்புகள் போன்றன இந்த மாதிரி பக்கங்களையும் குழுக்களையும் கொண்டுள்ளன. பார்வையாளர்கள் அந்தக் குழுக்களில் இணைவதன் மூலம் தகவல்களைத் தொடர்ச்சியாகப் பெறமுடியும் (இலங்கை கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள DAPH extension, இந்தியக் கால்நடைத் துறையின் Dept of Animal Husbandry and Dairying Ministry of FAHD போன்றன முக்கிய Facebook பக்கங்கள்). தொடர்ச்சியான தகவல் பதிவுகள் மூலம் பயனாளர்களை தொடர்ச்சியாகப் பேணமுடியும். மேலும் Facebook live மூலம் பல நேரடியான தகவல்களை வழங்கமுடியும் என்பதுடன் பண்ணையாளர்களின் கேள்விகள் மற்றும் கருத்துகளுக்கு (Comments) அமைய பதிவுகள் (Posts) கருத்துகளை (Comments) திட்டமிடலாம். அதிகளவில் பதிவுகளைப் (Posts) பகிர்வதன் (share) மூலம் பல பயனாளர்களையும் அடையமுடியும். கட்டணம் செலுத்தி விளம்பரம் செய்வதன் (Post Boost) மூலம் மேலும் பயனாளர்களை அடைய முடியும்.
மிகப் பிரபலமான சமூக ஊடகம். குழுக்களை உருவாக்கி கால்நடை வளர்ப்புத் தொடர்பான தகவல்களைப் பரிமாற முடிகிறது. இது தகவல் பெறுநர்களும் பதிவிடத்தக்க செயலியாகும். கால்நடைகளின் நோய், பண்ணை மேலாண்மை தொடர்பான பல ஆலோசனைகள், காணொளி மூலம் பண்ணையாளர்களால் பெறப்படுகின்றன. நான் இலங்கை மற்றும் இந்தியாவின் கால்நடை வைத்தியர்கள் மற்றும் வளர்ப்பாளர்களின் குழுக்களில் இருந்து பல தகவல்களைப் பெறுவதோடு எனது பண்ணையாளர் குழுக்களின் மூலம் பல தகவல்களை வழங்குகிறேன். உலகளாவிய ரீதியில் பண்ணை விலங்குகள், பொருட்களை விற்பதில் பல Whatsapp குழுக்கள் உதவி புரிகின்றன. நுகர்வோர் பலர் இதன் மூலம் பயனடைகின்றனர்.
- Youtube
தகவல்களை காணொளி வடிவில் வழங்கும் முக்கிய ஊடகமாகும். கால்நடை வைத்தியர்கள், பண்ணையாளர்கள் தங்கள் பதிவுகளை காணொளிகளாக வெளியிடுகின்றனர். வெற்றிக்கதைகள், மருத்துவ ஆலோசனைகள், Webinars போன்றவற்றை வெளியிட்டு பாரியளவு பயனாளரை அடையமுடிகிறது. பயனாளரின் எண்ணிக்கைக்கு அமைய வருமானத்தையும் பெறமுடிகிறது. இது அண்மைக்காலத்தின் மிகச் சக்திமிக்க ஊடகம். இதன் மூலம் இலகுவாக பண்ணையாளர்கள் கவரப்படுகின்றனர். இங்கும் Youtube நேரலை மூலம் பயனாளரை நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியும். அண்மைக்காலத்தில் Youtube Podcast பிரபலமடைந்து வருகிறது. பொருத்தமான கால்நடை வளர்ப்பு வல்லுநர்களின் podcasts இனைக் கேட்டு பயனுள்ள தகவல்களைப் பெறலாம்.
தரம்மிக்க கால்நடை வளர்ப்பின் விடயங்களடங்கிய தெளிவான புகைப்படங்களைப் பதிவிடுவதன் மூலம் இளம் சந்ததியைக் கவர முடிகிறது. Instagram இல் அதிகம் இளைஞர்களே உள்ளனர்.
- Tiktok
சிறிய காணொளிகளை பதிவிட முடியும். மிக விரைவாக பலரைச் சென்றடைவதால் இது சிறந்த விரிவாக்கல் செயலியாக அமைகிறது. இதுவும் இளைஞர்களைக் கவரக் கூடியது. சீனச் செயலி என்பதால் இந்தியாவில் தடையிலுள்ளது.
- Telegram
கால்நடை வளர்ப்புத் தொடர்பான காணொளிகளை அதிக தரவு (Memory) உள்ள புத்தகங்களையும் காணொளிகளையும் இலகுவாகப் பகிரமுடியும். நான் பல கிடைத்தற்கரிய கால்நடை மருத்துவப் புத்தகங்களை pdf வடிவில் இந்த தளம் மூலமே பெற்றுள்ளேன்.
- zoom செயலி / Google meet
அண்மைக்காலத்தில் கருத்தரங்குகள் பல zoom, Google meet போன்றவற்றின் மூலம் நிகழ்த்தப்படுகின்றன. Powerpoint Presentation களை பகிர்வதன் மூலம் இவற்றின் செயற்திறன் மேம்படுத்தப்படுகிறது. பார்வையாளர்கள் நேரடியாகக் கேள்விகளைக் கேட்டு பதில்களைப் பெற முடிகிறது. இங்கு பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகளை Youtube போன்ற ஏனைய தளங்களில் பதிவிடவும் முடியும்.
- இணையத்தளங்கள் மற்றும் Blog Pages
எழுத்து வடிவான பல தகவல்களை இணையத்தளம் மற்றும் Blog Pages மூலம் வழங்க முடியும். சிறிய பதிவுகள் முதல் பெரிய கட்டுரைகள் வரை இவற்றிலுள்ளது. இந்தக் கட்டுரையும் ஒரு இணையத்தள கட்டுரையே. எனது பல பதிவுகளை என் தனிப்பட்ட Blog மூலமும் பதிவிடுகிறேன்.
சமூக ஊடகங்கள் மூலம் கால்நடை வளர்ப்புச் செயற்பாட்டை திட்டமிடலும் செயற்படுத்தலும்
யாருக்கு இந்த விரிவாக்கல் செயற்பாட்டைச் செய்யப் போகிறோம் என்பது மிக முக்கியமானது. பண்ணையாளர்கள், கால்நடை வைத்தியர்கள், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் எனப் பலர் பயனாளர்களாக அமைவார்கள். அவர்களுக்கு பொருத்தமாக தளங்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் (Facebook, Whatsapp, Youtube, Zoom, Instagram).
கால்நடை நோய்கள், உணவூட்டல் முறைகள், இனப்பெருக்க நுட்பங்கள், சந்தை முறைகள், வெற்றிக் கதைகள், தோல்விக் கதைகளை பொருத்தமான முறைகளின் மூலம் பயனாளர்களுக்கு முறையாகத் தயாரித்து வழங்க வேண்டும். பொருத்தமான காணொளிகள், புகைப்படங்கள், தகவல் படங்கள் (Infographic), கட்டுரைகள், பதிவுகளை கவனமாகத் திட்டமிட்டு வழங்க வேண்டும். முன் தயாரிப்பு மிக அவசியம். வழங்கப்படும் தகவல்கள் இலகுவாக, சகலரும் புரிந்து கொள்ளத்தக்கதாக அமைய வேண்டும். கடினமான பதிவுகள் கவனிக்கப்படாமல் போகலாம். அண்மைக் காலத்தில் குறுகிய பதிவுகளே விரும்பப்படுகின்றன. இதனால் செறிவான தகவல் முறை அவசியம்.
தொடச்சியான பதிவுகள் (Continuous Posts) அவசியம். இல்லாது போனால் பயனாளர்கள் வேறு பக்கம் போய்விடுவார்கள். பண்ணையாளர்களின் கேள்விகளுக்கு சரியான பதில்களை வழங்கும் போது அவர்கள் மேலும் மேலும் ஈடுபாட்டுடன் செயற்படுவார்கள். சரியான தகவல்களே வழங்கப்பட வேண்டும். பதிவுகளின் நம்பகத்தன்மை கெட்டால் பிறகு யாரும் பதிவுகளைப் பார்க்க மாட்டார்கள். புதிய, அண்மைய தகவல்களாக அமைவது சிறப்பு. இதற்காக நவீன சஞ்சிகைகள், ஆய்வுக் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம்.
பண்ணையாளர்களின் பதிவுகள் உள்ளூர் மொழியில் இடம்பெறும் போது புரிந்து கொள்ளும் தன்மை அதிகரிக்கும். எனினும் கால்நடை வைத்தியர்களுக்காக நடாத்தப்படும் செயற்பாடுகள் ஆங்கிலத்திலும் இருக்கலாம். பதிவுகளில், பயனாளர்களின் வருகை மற்றும் ஈடுபாட்டை தொடர்ச்சியாக அவதானிக்க வேண்டும். வருகை மற்றும் ஈடுபாடு குறைவான பதிவுகளை மாற்றம் செய்வதோடு, அதிக ஈடுபாடான தகவல்களுடைய பதிவுகளை இடலாம். பயனாளர்களின் பிரதிபலிப்புகள் பதிவாளரின் தரத்தை மேம்படுத்தும். தவறுகளைத் திருத்த வழி ஏற்படுத்தும்.
இணைய வழியான நிகழ்நிலைச் செயற்பாடுகள்
அண்மைக் காலத்தில் பல நிறுவனங்களும் அமைப்புகளும் இணையவழி மூலமான நிகழ்நிலைச் செயலிகள் மற்றும் சமூக ஊடகங்களைக் கொண்டு பல அமர்வுகளை நடாத்துகின்றன. பல்கலைக்கழகங்களும் பாடசாலைகளும் பல விரிவுரைகளை இந்த முறையிலேயே அதிகம் செய்கின்றன. நான் அமெரிக்கா – புளொரிடா பல்கலைக்கழகத்தால் நிகழ்த்தப்பட்ட zoom மற்றும் சமூக ஊடக இணைவிலான நவீன கால்நடை வளர்ப்புத் தொடர்பான சிறு கற்கைநெறியை, இலங்கையிலிருந்தபடியே செய்திருந்தேன். எனது பதவியுயர்வுக்குத் தேவையான பல பாடநெறிகளையும் கருத்தரங்குகளையும் நிகழ்நிலைச் செயலிகள் மூலம் செய்திருக்கிறேன். பல உள்ளூர்ப் பயிற்சி நெறிகளும் தற்போது இணைய வழியில் இடம்பெறுகின்றன. வவுனியா மாவட்டச் செயலகத்தின் சிறு கைத்தொழில் பிரிவு மூலம், நாடளாவிய ரீதியில், பண்ணையாளருக்கு ஆடு வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்புத் தொடர்பான நிகழ்நிலைக் கருத்தமர்வுகளை நடாத்தியிருக்கிறேன். கொவிட் நிலைமையின் பின், நிகழ்நிலைக் கருத்தமர்வுகள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியாக, நவீன சமூக ஊடகங்கள் மற்றும் இணைய ஊடகங்களின் மூலம் கால்நடை வளர்ப்பு விரிவாக்கல் சேவைகளை பண்ணையாளர்கள், கால்நடை வைத்தியர்கள் மற்றும் ஏனைய விரிவாக்கல் அதிகாரிகள் பயன்படுத்தி முன்னேற்றமடைய முடியும்; கால்நடை உற்பத்திகளை அதிகரிப்பதோடு உற்பத்தித் திறனையும் மேம்படுத்த முடியும். நவீன மாற்றங்களைச் சரிவர அவதானிக்காத துறைகள் பாதிப்படைவது திண்ணம். கால்நடை வளர்ப்பும் அதற்கு விதிவிலக்கு கிடையாது.
தொடரும்.