பக்கவாட்டுச் சிந்தனைகள் மூலம் முக்கிய சிக்கல்களை தீர்த்தல்
Arts
8 நிமிட வாசிப்பு

பக்கவாட்டுச் சிந்தனைகள் மூலம் முக்கிய சிக்கல்களை தீர்த்தல்

November 24, 2022 | Ezhuna

திரை கடலோடி திரவியம் தேடியவர்கள் தமிழர்கள். உலக வணிகத்துறையில் மிகமுக்கியமான இடம் தமிழர்களுக்கு இருந்தது. ஆனால் அவையெல்லாம் இன்றோ பழங்கதைகளாகிவிட்டன. வணிகம் என்றாலே, தமக்கும் அதற்கும் சம்பந்தமில்லாதது போலவும், தம்மால் ஒருபோதும் வணிகத்துறையில் சாதிக்கவே முடியாதென்பது போலவும் நம்மவர்கள் ஒதுங்கி, ஒடுங்கிக் கொண்டுள்ளனர். உண்மையில் இத்தகைய முற்கற்பிதங்கள் தான் வணிகத்துறையில் அவர்கள் நுழைவதற்கும், சாதிப்பதற்கும் தடைக்கற்களாக இருக்கின்றன. அவற்றைக் களைந்து, சரியான படிமுறைகளுக்கூடாக, உலகின் எதிர்காலத்துக்குப் பொருத்தமான வணிகத்தில் காலடி எடுத்து வைத்தால், நம்மாலும் சாதிக்க முடியும். இவை வெறுமனே மேம்போக்கான வார்த்தைகள் அல்ல. ஈழத்தில், புலோலி என்ற கிராமத்தில் பிறந்து, அமெரிக்காவின் சிலிக்கன் பள்ளத்தாக்கில் வணிகத்துறையில் சாதித்த பின்னர் வெளிவருகின்ற கட்டுரையாளரது பட்டறிவின் மொழிதலே இது. ‘ஈழத்திலிருந்து சிலிக்கன் வலி வரை’ என்ற இக்கட்டுரைத்தொடர் உலகில் மிகப்பிரபலமான தொழில் நுட்பதாரிகளைப்பற்றியும் அவர்களது ஆரம்ப நிலை தொழில் நிறுவனங்களை (Startup Companies) அமைக்கும் போது எதிர் கொண்ட சில முக்கியமான நுணுக்கங்களை (Nuances)  அடிப்படையாகக் கொண்டும், கட்டுரையாளரின் வணிகரீதியான சாதிப்பு அனுபவங்களைப் பகிர்வதாக அமைகிறது.

“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு”. — திருக்குறள் (467)

மு.கருணாநிதி விளக்கம்:

நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்;
இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு.

புதிய தொழில் முயற்சிகளை தொடங்குவதென்பது அவ்வளவு இலகுவானதல்ல. அந்த வல்லமை எல்லோருக்கும் வாய்த்தும் விடாது.  புதிய தொழில் என்பது தனியே வர்த்தகம் என்பதாக அர்த்தப்படாது. அது அறிவியல் பாதி, செய்கலை பாதி கலந்து செய்த நுட்பத்தினூடாகவே புதிய சிந்தனைகளும், அதன் வழியே புதிய தொழில்களும் பிறப்பெடுக்கின்றன. அப்படியான புதுமைகளுக்கு அடிநாதமாக இருப்பதுதான் பக்கவாட்டுச் சிந்தனை (Lateral Thinking). பக்கவாட்டுச் சிந்தனை அல்லது யோசனை என்பது மிக்க சிக்கலான வேலை ஒன்றை செய்து முடிப்பதற்கு  குறித்த பிரச்சினையை  எல்லோரும் அணுகிய விதத்தை விடுத்து, தனித்துவமான இன்னொரு வழிமுறையூடாக தனது கற்பனாசக்தி, பட்டறிவு என்பவற்றின் துணையுடன் இலகுவாகச் செய்து முடிப்பதைக் குறிக்கும்.  எமக்கான இலக்கை அடைய எமக்கு முன்னதாக பலர் சென்ற பாதைகள் இருக்கலாம். ஆனால் அவற்றை விடுத்து, அந்த இலக்கைச் சுலபமாகவும், சரியாகவும் அடைவதற்கு புதிய பாதை ஒன்றைக் கண்டடைவதே பக்கவாட்டுச் சிந்தனை.

ஜெஃப் பெசோஸ்

இந்தப் பக்கவாட்டுச் சிந்தனையால் வென்றவர்கள் வரிசையில் வாழும் உதாரணமாக இருப்பவர்,  உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான அமேசான் (Amazon.com) நிறுவனத்தின் நிறுவுநர்  ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) தான். அவர் தன் தொழில் முயற்சியை வித்தியாசமாகவும், தனித்துவமாகவும், பட்டறிவையும் கற்பனையையும் கலந்து யோசித்ததால் தான் இன்றைக்கு இந்தளவுக்கு அவரால் உயரமுடிந்தது. இப்படி ஜெஃப் பெசோஸின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் பக்கவாட்டுச் சிந்தனையை அவருக்கு அறிமுகப்படுத்தியது ஒரு இலங்கையர் என்பது பலருக்கும் தெரியாத ஒரு விடயம்.

ஜெஃப்  பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில்  (Princeton University) பயின்றபோது, அவரது அறைத்தோழனாக இருந்தவர் ஒரு இலங்கையர். அவர்தான் மிகச் சிக்கலான கணிதப் புதிர்களுக்கெல்லாம், மாற்றுவழிகளில் தனக்கேயுரித்தான புதுமையான பாணியில் விடைகளை விரைவாகவும் சரியாகவும் கண்டுபிடித்துக் காட்டினார். அதைப் பார்த்த ஜெஃப் பெசோஸ், அதேவழியைக் கையாண்டு தொழில் முயற்சி ஒன்றை ஆரம்பித்தால் என்ன என்று சிந்தித்ததன் விளைவே, இன்று உலகமெங்கும் ஆலமரம் போல இணைய வியாபாரத்தில் அசைக்கமுடியாத  சக்தியாக உருவெடுத்திருக்கும் ‘அமேசான்’ நிறுவனம்.  ஜெஃப் பெசோஸ் தன் தந்தையிடம் பெற்ற சிறுதொகைப் பணத்தை மூலதனமாகக் கொண்டு,  சியாற்றில் (Seattle) நகரில் இணையவழியில் புத்தகங்களை விற்பனை செய்யும் தளமாக ஆரம்பிக்கப்பட்ட அமேசானில் இன்று உலகில் உள்ள அத்தனை பொருள்களையும்  ஒரே இடத்தில் வாங்கிக்கொள்ளக்கூடியளவுக்கு, அமேசான் நிறுவனம் உலகெங்கும் வியாபித்து நிற்பதற்கும்  பக்கவாட்டுச் சிந்தனையே அடிப்படைக் காரணம். தனக்குப் பக்கவாட்டுச் சிந்தனையை அறிமுகம் செய்ததால், ஒட்டுமொத்த இலங்கையர்களும் தன் நண்பரைப் போன்று, பக்கவாட்டுச் சிந்தனையில் ஊறித்திளைத்தவர்கள் என்ற எண்ணம் ஜெஃப் பெசோஸுக்கு இன்றளவும் உண்டு.

அமேசன்-நிறுவனம்

பக்கவாட்டுச் சிந்தனைப் பிரயோகம் தொடர்பில் எனது அனுபவத்தையும் குறிப்பிடுதல் இங்கு பொருத்தமானதாக அமையும். எனது 28 ஆவது வயதிலேயே முதலாவது நிறுவனத்தை நான் தொடங்கிவிட்டேன். துணிகர முதலீட்டாளர்களை (Venture Capitalists) எமது நிறுவனத்தில் பத்துமில்லியன் டொலரையும் முதலிட வைத்தோம்.  நாங்கள் தொலைபேசியில் பேசும் ஒலிகளை இணையத்தளத்தினூடாக (Voice Over IP – VOIP) அனுப்பும் பொறிமுறையே எமது நிறுவனத்தின் முதலாவது தயாரிப்பு. இதேபோன்ற பொறிமுறையை இன்னொரு சர்வதேச நிறுவனமும் ஒரு நேர்கோட்டு வழிமுறையில்  ஏற்கனவே மேற்கொண்டிருந்தது. அப்படிப்பட்ட சூழலில் எமது நிறுவனத்தின் தயாரிப்பு, குறித்த சர்வதேச நிறுவனத்தின் தயாரிப்பைவிடவும் மேம்பட்டதாகவும் வினைத்திறனானதாகவும், கையாள இலகுவானதாகவும் இருந்தால் மாத்திரமே நாங்கள் வெற்றிபெறலாம் என்ற சூழல் இருந்தது. இதன்போதுதான் பக்கவாட்டுச் சிந்தனை எமக்கு கைகொடுத்தது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த சர்வதேச நிறுவனத்தின் தயாரிப்பை விடவும்  எட்டுமடங்கு வேகத்தை அதிகமாகக் கொண்டதாக எமது தயாரிப்பை வெற்றிகரமாக முன்வைத்தோம். அதன் பயனாக எனக்கு இதுவரை ஐக்கிய அமெரிக்காவில் கிடைத்துள்ள 34 காப்புரிமைகளில் இரண்டை அந்தத் தயாரிப்பு பெற்றுத்தந்திருந்தது.

தொழில்முனைவோருக்கு தோள் கொடுக்கும் இந்தப் பக்கவாட்டுச் சிந்தனையை எல்லோரும் தமக்குள் வளர்த்தெடுக்க முடியும். ஆனால் அதற்கு அவர்கள் சில விடயங்களைக் கைக்கொள்ளவேண்டியிருக்கும். அவற்றை இங்கு பார்க்கலாம்.

தெளிவான பிரச்சினை (Clear Problem)

 முதலில் பிரச்சினை மற்றும் தேவை என்பவற்றை சரியாக மனதில் விளங்கிக் கொள்ளல். என் அனுபவத்தில் பலர் பிரச்சினையை விளங்கிக் கொள்ள முன்னரே அதற்கான பதிலைத் தேடத் தொடங்கி விடுவார்கள். அதனால் பிழையான பிரச்சினைக்கு அல்லது தேவையில்லாத பிரச்சினைக்கு விடை தேடி நேரத்தையும் பணத்தையும் செலவழிப்பார்கள். சரியான பிரச்சினையுடன் தேடலைத் தொடங்குவதன் மூலம், கவனமாக அந்த பிரச்சினைக்கான காரணம், அதற்கு மற்றவர்கள் எப்படி  தீர்வு கண்டார்கள், அதற்கு பதில் கண்டுபிடித்தால் அதன் வணிக நன்மைகள் என்பவற்றைக்கொண்டு அந்த பிரச்சினையில் வளங்களைச் செலவழிப்பதில் பிரயோசனம் உண்டா என்று தொடக்கத்திலேயே உணரலாம்.

amazon.com-boxes

புதுமையான தீர்வுகள் (Innovative Solution)

 புதுமையான தீர்வுகள் என்பது ஒரு கேள்விக்கு மற்றவர்கள் யோசிப்பது போன்று இல்லாமல் வித்தியாசமாக விடை காண்பது. அந்த விடை வித்தியாசம் யோசனையோடு மட்டும் இல்லாமல் செய்யும் பொருளுக்கும் கூடிய மதிப்பு கொடுக்கக்கூடியதாக இருக்கவேண்டும்.  எமது  நிறுவனத்தில் நான் புதுமையும்,  நுணுக்கமும் கலந்து  செய்த பொறிமுறை எமது வாடிக்கையாளர்களுக்கு குறைய பணத்தை (cost) செலவிட வைத்தது மட்டுமன்றி மிகக் குறைந்த இடத்தையும் (realestate) குறைந்த மின்சாரத்தையும் (Power/Electricity) பிடித்தது. இவ்வாறான விடயங்கள் எமது பொருளின் மதிப்பை மிகவும் அதிகரித்தன.

ஆக்கபூர்வமான தீர்வுகள் (Creative Solution)

 சிக்கல்களுக்கு பல விதமான புதுமையான தீர்வுகளைக் காணலாம். ஆனால் இயற்கையாகவே பலராலும்  ஆக்கபூர்வமான தீர்வினை வழங்கமுடியாது. இன்னொருவர் அந்த தீர்வைச் சொல்லும்போது மற்றவர்கள் ஏன் தங்களால் அவ்வாறான தீர்வை முன்னரே சிந்திக்க முடியவில்லை என கவலைப்படுவதுண்டு. உதாரணமாக நாங்கள் இலங்கையில் பட்டம் ஏற்றி விளையாடுவோம். ஆனால் அதே காற்றின் சக்தியை வைத்தே,  காற்றில் சுற்றும் காற்றாடியை வைத்து மின்சாரம் செய்யலாம். அதை இப்போதுதான் இலங்கையில் வணிகரீதியில் மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். இதை முன்பே செய்திருந்தால் எரிபொருள் இறக்குமதியை இலங்கை குறைத்திருக்கலாம்.

வேறு பிரச்சினைக்கு விவரணையாக்குவது (Mapping to simpler or familiar problem)

 பக்கவாட்டு முறையில் இது மிக முக்கியமானது. புதிய சிக்கலான பிரச்சினையை, தெரிந்த ஒன்றுக்கு விவரணையாக்குவதன் மூலம் அல்லது பதிலீடாகப் பயன்படுத்துவதன் மூலம் தன் அனுபவத்தையும் மற்றும் படித்தவற்றையும் வைத்து தீர்வு காணலாம். நான் பொறியியலிலிருந்து (Engineering), உற்பத்தி குழுவுக்குப்போய் (Manufacturing), பின் சந்தைப்படுத்தலில் ஈடுபட்டு (Marketing) இப்போது விற்பனை செய்யும் குழுவில் (Sales Team) பணியாற்றுகிறேன். இவையெல்லாவற்றிலும் திறமையோடு பணியாற்ற காரணம் இந்த முறை தான்.

மன வரைபடம் (Mindmap)

 சிக்கலான கேள்விகளுக்கு விடை தேடுவது  மிகக் கடினமாக இருக்கும். அதற்கு நான் ஒரு மூத்தவரிடமிருந்து கற்றுக்கொண்ட முறை ஒன்று உண்டு.  முதலில் எமக்கு  தெரிந்தவை (Known), தெரியாதவை (Unknown) என்று காகிதத்தில் அல்லது கரும்பலகையில் எழுதுவ வேண்டும். பின் தெரியாதவை என்ற பகுதிக்குள் இருக்கும் விடயங்களை ஒவ்வொன்றாக அணுகித் தீர்வு காணுதல் அல்லது அதில் அனுபவமுள்ள ஆலோசகர்களைத் தேடிப்பிடித்தல். இவ்வாறு விடயங்களை எழுதிவைத்து, படிப்படியாக அவற்றைத் தீர்ப்பதால் இந்த முறை மனதுக்கு சுமையை ஏற்றாமல் தெளிவான மனத்துடன் முடிவு காண உதவும்.

அரங்குக்கு வெளியேயான சிந்தனை (Out of Box Thinking)

 பக்கவாட்டுச் சிந்தனையை பலர் அரங்குக்கு வெளியேயான சிந்தனை அல்லது கிணற்றுக்கு வெளியேயான சிந்தனை என்பார்கள் (கிணற்று தவளை என்பது இதிலிருந்துதான் வந்ததோ?!). ஒரு சிக்கலான விடயத்துக்கு நாங்கள் வழக்கமான வழிமுறையால் பதில் தேடாமல் பலரும் சிந்திக்காத இன்னொரு முறையில் பதில் காண முயல்வதால் இவ்வாறு அழைக்கிறார்கள். இப்படிச் சிந்திக்கக் கூடிய சிலர் உங்கள் குழுவில் இருப்பது எப்போதுமே நல்லது.

Northgate Distribution Center Building

அமேசானின் ஜெஃப் பெசோஸ் கண்டுகொண்ட ’மாதிரி இலங்கையர்’ மூலம்  பக்கவாட்டுச் சிந்தனையில்  இலங்கையர் எல்லோருமே மிகச் சிறந்தவர்கள் என்று எண்ணுகிறார் என முன்னரே கூறியிருந்தேன். அவ்வாறான பக்கவாட்டுச் சிந்தனை  எங்கள் கல்விமுறையாலோ வளர்ப்பு முறையாலோ  கூட எமக்குள் வந்திருக்கலாம். இதை நான் “மாதிரிப் பொருத்தம்” (Pattern Matching) என்று நினைத்திருந்தேன். இதை நாங்கள் ஐந்தாம் வகுப்பு புலமைப்பரீட்சையிலும் பின் மேல்தர வகுப்பிலும் (A/L) சரியாகக் கற்றோம், பிரயோகித்தோம். எனக்கு இப்போதும் நல்லையா சேர் தூய கணிதத்தையும்,  சூரியநாதன் சேர் பௌதிகவியலையும்  கற்பிக்கும்போது, சிக்கலான கேள்விகளுக்கு எளிமையாக விடை காணும் முறைகள்   கண்முன்னே நிற்கின்றன.  அவற்றையெல்லாம் தொகுத்துப் பார்க்கும் போது, எங்கள் ஈழத்தவர்களும் பக்கவாட்டுச் சிந்தனை தொடர்பான கற்றிவிலோ, பட்டறிவிலோ எவ்விதத்திலும் சளைத்தவர்களில்லை. ஆனால்  அதனை அவர்கள் பயன்படுத்துவதற்கு சரியான சூழல் தான் இல்லை. அந்தச் சூழமைவை   உருவாக்கினால்,  நிச்சயம் நம்மவர்களும் உலகளவில் நவீன தொழிற்றுறையிலும் கோலோச்சுவார்கள். 

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

15353 பார்வைகள்

About the Author

கணபதிப்பிள்ளை ரூபன்

கந்தரூபன் (ரூபன்) கணபதிப்பிள்ளை அவர்கள் யாழ் மாவட்டத்தின் புலோலியைச் சேர்ந்தவர். போர் காரணமாக ஆபிரிக்காவுக்கு இடம்பெயர்ந்து பின் அங்கிருந்து ஐக்கிய அமெரிக்காவிற்கு சென்று இளமாணி, முதுமாணிப் பட்டங்களை இயந்திரவியலில் பெற்றுள்ளார்.

கடந்த மூன்று தசாப்தங்களில் பல புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்கி பல கோடி டொலருக்கு விற்றுள்ளார். மேலும் இவர் “Accidental Entrepeneur by Ruban” என்ற தலைப்பில் நூற்றிற்கு மேற்பட்ட கட்டுரைகளை தன்னுடைய அனுபவங்களை உள்ளடக்கி ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)