வடக்கின் விருட்சங்கள்: தொலையாது காப்போம்! - மரங்களின்றி மனிதனேது?
Arts
10 நிமிட வாசிப்பு

வடக்கின் விருட்சங்கள்: தொலையாது காப்போம்! – மரங்களின்றி மனிதனேது?

September 24, 2021 | Ezhuna

சுதேச மரங்கள் மனித வாழ்வியலோடு ஒன்றிப்போனவை. மனித நாகரிகத்தின் சாட்சியாக நிற்பவை என்றெல்லாம் நாம் பார்த்தோம். அவை எதற்கெல்லாம் பயன்படுகின்றன என நாம் சிந்தித்துப் பார்த்திருப்போமா? நாம் அறிந்த பயன்களுக்கப்பால் நாம் அறியாத பயன்களையும் இம்மரங்கள் கொண்டிருக்கின்றன. மனிதர்கள் என்ற நிலையில் இருந்து பார்க்கும் போது மரங்களை எப்படியெல்லாம் எமது தேவைகளுக்கு நாம் பயன்படுத்தலாம் என்ற சிந்தனை தான் எமக்குள் எழும். ஆயினும் அவற்றையும் தாண்டி இம்மரங்கள் ஆற்றும் தொழிற்பாடுகள் காரணமாகத் தான் இப்புவியிலே உயிர்கள் நிலைத்திருக்கின்றன என்றால் எவராலும் மறுக்க முடியாது. இத்தொழிற்பாடுகள் ‘சூழல் தொகுதிச் சேவைகள்’ என அழைக்கப்படுகின்றன.

வன்ன் பகுதிகளில் காணப்படும் காட்டுகாட்டுமரங்கள்

மரங்கள் வழங்கும் சூழல் தொகுதிச் சேவைகள்

மரங்களே இல்லாத சீமெந்துக் கட்டடங்களால் சூழப்பட்ட தார் வீதியிலே செல்வதை விட  இரு மருங்கிலும் மரங்கள் நாட்டப்பட்ட வீதியில் செல்லும் போது உங்கள் உணர்வு எப்படி இருக்கிறது? குளிர்மையாக, மனதுக்கு இதமாக உணர்ந்திருக்கிறீர்களா? உள்ளூரிலே மரங்கள் வழங்கும் மிகப்பிரதானமான சூழல் தொகுதிச் சேவை இதுவாகும். இந்த சூழல் தொகுதிச் சேவைகள் நான்காக வகுக்கப்படுகின்றன. அவை வழங்கல்1 சேவைகள், ஒழுங்குறுத்தல்2 சேவைகள், கலாசாரச்3 சேவைகள், உதவிச்4 சேவைகள் என்பனவாகும். 

இந்த மரங்களின் வழங்கல் சேவைகளை நம்பியே உலகின் பெரும்பாலான மக்கள், அதிலும் குறிப்பாக கிராமிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். மரங்கள் அப்படியென்ன சேவைகளை வழங்கி விடுகின்றன என நீங்கள் எண்ணக் கூடும். எமக்குத் தேவையான உணவு, நார்ப்பொருள் தொட்டு விறகு, எண்ணெய் போன்ற சக்தித் தேவைகள், அரிமரம், ஏனைய தேவைகளுக்கான மரம், மருந்து, தூய நீர், மரபு வளங்கள், தொழிற்றுறைக்குத் தேவையான மூலப்பொருட்கள், வருமானம், நெருக்கடி நிலைமைகளின் போதான பாதுகாப்பு என மரங்களின் வழங்கல் சேவைகள் பரந்து விரிந்து செல்லும். அன்றாடம் நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளையும் எண்ணிப்பாருங்கள். அவை ஒவ்வொன்றின் பின்னும் மரங்களின் வழங்கல் சேவைகள் காணப்படும்.

ஒழுங்குறுத்தல் சேவைகளானவை எமது சுற்றுச் சூழலின் தரத்துடன் தொடர்புபட்டவை. அவை வெற்றுக்கண்ணுக்குத் தெரியாதவையாகும். ஆதலினால் அவற்றின் அவசியத்தை நாம் உணர எண்ணுவதில்லை என்பதுடன் அவை எமக்கு இலவசமாகக் கிடைக்க வேண்டியவை என எண்ணி விடுகிறோம்.  மரங்கள் வழங்கும் ஒழுங்குறுத்தல் சேவைகளுள் வளி மற்றும் மண்ணின் தரத்தை மேம்படுத்தல், காலநிலை ஒழுங்குறுத்துகை, நீர் ஒழுங்குறுத்துகை,  நீர்ச் சுத்திகரிப்பு, பீடைக் கட்டுப்பாடு, மாசுக்கட்டுப்பாடு, மகரந்தச் சேர்க்கை, இயற்கை அனர்த்தங்கள் மற்றும் நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாத்தல்,  சூழல் தொகுதி மறுசீரமைப்பு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உதவல் போன்றன மிகப்பிரதானமானவை. மரங்கள் அழிவடையும் போது இந்த ஒழுங்குறுத்தல் சேவைகள் குலைவடையும். அவ்வாறு அவை குலைவடையும் போது எமக்கு ஏற்படும் இழப்புகளும் சேதங்களும் அளப்பரியனவாக இருப்பதுடன் அவற்றை மறுசீரமைத்தல் மிகவும் கடினமான விடயமாகும்.

சகல சூழல் தொகுதிகளுக்கும் அவை வழங்கும் சேவைகளுக்குமான ஆதாரமாக உதவிச் சேவைகளைக் கருதுவர். உணவு உற்பத்தி தொட்டு கனிப்பொருள் சுழற்சி, மண் உருவாதல், வன ஜீவராசிகளுக்கான வாழிடம், நீர் வட்டம், பிரிகையடையச் செய்தல், உக்கச் செய்தல், விவசாய முறைமைகளின் உறுதித் தன்மையை அதிகரித்தல் என இவை நீண்டுகொண்டே செல்லும்.  மரங்கள் வழங்கும் கலாசார சேவைகள், சமூக உறவுகளை வளர்த்தல், ஆன்மீகப் பெறுமானங்கள், சடங்குகளுக்கான ஆதாரமாக இருத்தல், சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கான தளமாகவிருத்தல், கல்விக்கான ஆதாரமாக விருத்தல், கலை, கலாசாரம், பண்பாடு, வடிவமைப்புகளுக்கான அடிப்படையாகவிருத்தல், புத்தாக்கத்துக்கான மூலாதாரமாகவிருத்தல் எனப் பலவகைப்படும்.

சூழலின் தாங்குதிறன்

சுதேச மரங்கள், இங்குறிப்பிடப்பட்ட சேவைகளுள் ஒன்றுக்கு மேற்பட்டவற்றை வழங்குவனவாகும். அவற்றிலும் உதவிச் சேவைகள் பலவற்றை வழங்குவனவாகும். அவை அழிந்து போனால், அவற்றினால் வழங்கப்படும் மேற்குறிப்பிட்ட சேவைகள் எமக்குக் கிடைக்காமலே போய்விடும். அவை கிடைக்காவிடில் எமது சூழல் நிலை குலைந்து விடும். சூழலுக்கும் தாங்குதிறனிருக்கிறது. அத்தாங்குதிறன் எல்லை வரை தான் தன் மீது பிரயோகிக்கும் அழுத்தங்களைச் சூழல் தாங்கி நிற்கும். அதன்பின்னர் தன் நிலை குலையத் தொடங்கும். அது தன் நிலை குலையத் தொடங்கினால் பூமி தாங்காது என்பதே யதார்த்தம். மனித நடவடிக்கைகளே சூழலைத் தன் நிலை குலைய வைக்கின்றன.

ஒவ்வொரு இனமும் தன் வாழிடத்திற்கேற்ப வெவ்வேறான தாங்குதிறனைக் கொண்டிருக்கும். இத்தாங்குதிறனானது அதன் உணவு, புகலிடம், ஏனைய சமூகத் தேவைப்பாடுகளின் கிடைப்பனவுக்கமைய வேறுபடும். சனத்தொகை அதிகரிக்கும்போது அதிகரிக்கும் மனிதத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக சூழல் மீதும் இயற்கை வளங்கள் மீதும் பாரிய அழுத்தமொன்று பிரியோகிக்கப்படும். வளங்களின் நுகர்வு மீதான போட்டி அதிகரிக்கும். வளங்கள் மட்டுப்படுத்தப்பட, அப்போட்டியில் வெல்ல முடியாத இனங்களின் குடித்தொகை மட்டுப்படுத்தப்பட ஆரம்பிக்கும். பல இனங்கள் அழிந்தும் கூடப் போகலாம். அடிப்படையில் இது ஒரு சமநிலை சார்ந்த நிகழ்வாகவே பார்க்கப்பட்டது. ஆயினும் மனித நாகரிகத்தின் வளர்ச்சியும் சனத்தொகை அதிகரிப்பும் அதீத நுகர்வுப்பாங்கும் அச்சமநிலையைக் குலைக்கும் போக்கில் செயற்படத் தொடங்கியமையானது பல சூழல் தொகுதிகளும் இனங்களும் சுவடே இல்லாமல் அழிந்து போகக் காரணமாகியது. இன்னும் காரணமாகி வருகிறது. இனியாவது அதை நாம் உணராவிட்டால் மனித குலத்தின் எதிர்காலம் இருண்டதாகவே மாறிவிடும்.

கண்முன்னே அழியும் மரங்கள்

வன்ன் பகுதிகளில் காணப்படும் காட்டுகாட்டுமரங்கள்

இவையெல்லாம் எங்கோதானே நடக்கின்றன. இவை பற்றி எமக்கென்ன? என்று உங்களில் சிலர் எண்ணக்கூடும். அவை எமக்கு மிக அருகிலேயே நடந்து கொண்டிருக்கின்றன.  வன்னிப் பெரு நிலப்பரப்பிலே காட்டு மரங்கள் என்று சொல்லப்பட்ட பல மரங்கள் இன்று வீதியோரங்களில் மாத்திரமே காணப்படுகின்றன.  19 ஆம் நூற்றாண்டிலே பிரித்தானிய தாவரவியலாளர்களால் அடையாளம் காணப்பட்ட மரங்கள் சிலவற்றின் பெயர்கள் இன்று எவருக்கும் தெரியவில்லை. ஓரிரு தசாப்தங்களுக்கு முன்னர் கைகளால் கட்டிப்பிடிக்க இயலாதளவு பெரிய மரங்களைக் கண்ணுக்கெட்டிய தூரத்திலே காணக்கூடியதாக இருந்தது. ஆனால் இன்றோ அத்தகைய மரங்களைக் காண்பது மிக அரிது. அதிலும் அரிமரப் பெறுமதி மிக்கவையென்றால் காணவே கிடைக்காது. வன விலங்குகள் சரணாலயத்தில் கூட அத்தகைய பாரிய மரங்கள் எனில் அவை வீரையாகவோ அல்லது பொந்துள்ள ஏனைய மரங்களாகவோ தான் இருக்குமே தவிர ஏனைய மரங்களை மருந்துக்கும் காண்பதரிது.

இவை பற்றி நாம் அதிகம் சிந்தித்துப் பார்த்திருக்க மாட்டோம். ஏனெனில் தாவரங்கள் யாவுமே பச்சையாகத் தெரிவதாலோ என்னவோ, விலங்கினங்களைக் காண்பதில், பாதுகாப்பதில் எமக்கிருக்கும் நாட்டம் தாவரங்களைப் பாதுகாப்பதில் இருப்பதில்லை எனலாம். காணியில் ஒரு மரமிருந்தால் அதன் இருப்பைத் தீர்மானிப்பதற்காக எம்மில் பலர் பல்வேறு விதமாகச் சிந்திப்பார்கள். மரத்தின் பொருளாதாரப் பயன் என்பதற்குமப்பால், அது அங்கு இருந்தால் எனக்கு எவ்வளவு பணம் கிடைக்கும்? அதை வெட்டினால் எனக்கு எவ்வளவு பணம் கிடைக்கும்? ஒரு வகையிலும் பணப்பெறுமதியில்லாவிட்டால் அது உயிருடன் இருந்து வீணே இடத்தைப் பிடிப்பானேன்? இந்த மரம் இருந்தால் பிறகு வீடு கட்ட இயலாது; மதில் கட்ட இயலாது; இந்த மரம் வீட்டுக்கு ஆகாது; நிழல் இருந்தால் பயிர் வளராது எனப் பத்தும் பலதுமாக வந்து செல்லும் சிந்தனைகளும் மரத்தின் பணப்பெறுமதியும் மாத்திரமே அதன் இருப்பைத் தீர்மானிக்கும்.

எமது கடப்பாடு

எமது அலட்சியமும் நாம் அறிவிலிகளாக இருப்பதும் மாத்திரமே பல சந்தர்ப்பங்களில் அம்மரங்களின் பணப்பெறுமதியைக் குறைத்துக்  காட்டுகின்றன என்பதும் மரங்களிலிருந்து எம்மை அந்நியப்படுத்தி விட்டன என்பதையும் இனியேனும் நாம் உணர வேண்டும். இப்போதும் நாம் விழிப்படையா விட்டால், இந்த மரங்களால் நாம் பெற்றுக்கொண்ட நன்மைகளை வருங்கால சந்ததியினரும் பெற்றுக்கொள்வதைத் தடுத்த அவப்பெயர் மாத்திரமே எமக்கு எஞ்சும். உண்மையில் நாம் தற்போது அனுபவித்து வரும் நன்மைகள் எமக்குரியனவல்ல. அவை வருங்கால சந்ததியினருக்குரியவையாகும். அந்த அவப்பெயரை நீக்கவேண்டுமாயின் இன்றே நாம் செயற்பட ஆரம்பிக்கவேண்டும்.  நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் வேண்டுவதும் அதுவே! எமது பிராந்தியத்தின் சுதேச மரங்களின் பயன்கள் பற்றி அறிதலே அதற்கான முதற்படியாகும்.

  1. வழங்கல் சேவைகள்,  Provisional Services  எனவும் 
  2. ஒழுங்குறுத்தல் சேவைகள் Regulatory Services எனவும் 
  3. கலாசார சேவைகள் Cultural Services எனவும்
  4. உதவிச் சேவைகள் Supporting Services எனவும் ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகின்றன.

(தொடரும்)


ஒலிவடிவில் கேட்க

4680 பார்வைகள்

About the Author

மனோகரன் சாரதாஞ்சலி

மனோகரன் சாரதாஞ்சலி அவர்கள் ஆசிய தொழில் நுட்ப நிறுவகத்தில் இயற்கை வள முகாமைத்துவத்தில் முதுமாணிப் பட்டம் பெற்றவர். இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதிகவியல் இளமாணிப்பட்டதாரி என்பதுடன் ஊடகவியலும் கற்றவர். லேக் ஹவுஸ் நிறுவனத்தில் சூழலியல் கட்டுரையாளராகப் பணிபுரிந்து பின்னர் கடந்த ஒரு தசாப்தகாலமாக இலங்கை நிர்வாக சேவை அலுவலராகப் பணிபுரிகிறார்.

இவர் முதுமாணிப் பட்டப்படிப்புக்காக உலகவங்கியின் புலமைப்பரிசிலையும் முதன்மை மாணவிக்கான இரு விருதுகளையும் பெற்றவராவார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்