லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் - 2
Arts
14 நிமிட வாசிப்பு

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் – 2

July 5, 2024 | Ezhuna

இலங்கையில், குடியேற்றவாத காலத்திலிருந்துதான் நிலப்படங்களும் வரைபடங்களும் நமக்குக் கிடைக்கின்றன. குறிப்பாக ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்தவை இலகுவாகக் கிடைக்கின்றன. எழுத்துமூல ஆவணங்கள், புழங்கு பொருட்கள், ஓவியங்கள், தொல்லியற் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றையும் இவற்றைப்போன்ற இன்னோரன்ன பழைய நிலப்படங்கள், வரைபடங்கள் வரலாற்றுத் தகவல்கள் என்பனவும் இங்கு பொதிந்துள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த நிலப்படங்களும் வரைபடங்களும் இவற்றுள் அடங்கும். எனினும், யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு இவற்றைப் பயன்படுத்துவது குறைவாகவே உள்ளது. வரலாற்றுத் தகவல்களை வழங்குவதில் குடியேற்றவாதக் கால நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாகவும், யாழ்ப்பாணத்தின் வரலாற்றுத் தகவல்களை நிலப்படங்கள் வரைபடங்களிலிருந்து விளக்குவதாகவும், நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் தகவல் உள்ளடக்கங்கள் குறித்து ஆராய்வதாகவும் ‘யாழ்ப்பாணப் பிரதேசத்தின் குடியேற்றவாதக் காலத்து வரலாற்றுத் தகவல் மூலங்களாக நிலப்படங்களும் வரைபடங்களும்’ என்ற இத்தொடர் அமையவுள்ளது.

சென்ற கட்டுரையில் லெயுசிக்காம் தொகுப்பிலுள்ள, வலிகாமத்தைத் தனியாகக் காட்டும் நிலப்படத்தில் முழு வலிகாமத்துக்கும் தொடர்பான விடயங்களைப் பற்றிப் பார்த்தோம். தொடர்ந்து இனி வரும் கட்டுரைகளில் வலிகாமப் பிரிவுக்குள் அடங்கிய யாழ்ப்பாண நகரத்தையும் ஏனைய கோவிற்பற்றுப் பிரிவுகளையும் பற்றி ஆராயலாம். இந்தக் கட்டுரை யாழ்ப்பாண நகரப் பகுதியை எடுத்துக்கொண்டு, அப்பகுதி தொடர்பாக நிலப்படம் காட்டும் விடயங்களைக் குறித்தும், அவற்றோடு தொடர்புடைய சில வரலாற்றுத் தகவல்களைப் பற்றியும் விளக்குகிறது.

யாழ்ப்பாண நகரப்பகுதி எல்லைகள்

ஒல்லாந்தர் கால யாழ்ப்பாண நகரப்பகுதி, கோட்டையையும் அதைச் சுற்றியிருந்த முற்றவெளி, ஐரோப்பியர் நகரம் ஆகியவற்றையும் உள்ளடக்கியது என்பதை நிலப்படத்திலிருந்து தெளிவாக அறியமுடிகிறது. (படம்-1) இம்மூன்றையும் நிலப்படம் பெயர் குறித்துக் காட்டுகிறது. நகரப் பகுதி மேற்கிலும் வடக்கிலும் வண்ணார் பண்ணைக் கோவிற்பற்றாலும் கிழக்கில் சுண்டிக்குழிக் கோவிற்பற்றாலும் சூழப்பட்டுள்ளது. அக்கால யாழ்ப்பாண நகரப் பகுதியின் எல்லைகளாகத் தெற்கே யாழ்ப்பாணக் கடலேரியும் கிழக்கே நான்காம் குறுக்குத் தெருவும் இருப்பதைத் தெளிவாக அறியமுடிகிறது. மேற்கு எல்லையைத் தெளிவாக வரையறுக்கக்கூடிய அடையாளங்கள் எதுவும் நிலப்படத்தில் இல்லாவிட்டாலும், இவ்வெல்லை இன்றைய தொலைத்தொடர்பு நிலையத்துக்குப் பின்புறமாக உள்ள மீனாட்சியம்மன் வீதி இருக்கும் இடத்தையண்டியோ அதற்குச் சற்று மேற்குப் புறமாகவோ இருந்திருக்கக்கூடும். வடக்கே இன்றைய பறங்கித்தெருப் பகுதியை அண்டி, நான்காம் குறுக்குத் தெருவிலிருந்து இன்றைய மணிக்கூட்டுக் கோபுர வீதிவரை சப்பல் வீதி, வேம்படி வீதி ஆகியவற்றுக்கு இடையிலும், மணிக்கூட்டுக் கோபுர வீதிக்கு மேற்கிலுள்ள பகுதி ஏறத்தாழத் தற்காலத்து வைத்தியசாலை வீதித் தடத்துக்குச் சற்றுத் தெற்கே இருந்திருக்கலாம் (படம்-2). 

இப்போதைய காங்கேசந்துறை வீதியோரமாக ஒரு ஒடுக்கமான பகுதியும் நகர எல்லைக்குள் அடங்கியதாக நிலப்படம் காட்டுகிறது. அந்தப் பகுதியிலேயே இன்றைய பெரியகடை (Grand Bazaar) இருக்கிறது. இப்பெரியகடை போர்த்துக்கேயர் காலத்திலிருந்தே அவ்விடத்தில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.1 அதேவேளை, போர்த்துக்கலின் லிஸ்பன் நகரிலுள்ள சில பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு பி. ஈ. பீரிஸ் எழுதிய குறிப்பொன்றிலிருந்து போர்த்துக்கேயர் காலத்தில் உள்ளூரில் உற்பத்தியாகும் துணிகளுக்கு வரி கட்டாமல் விடுவதைத் தடுப்பதற்காகக் குறிப்பிட்ட சில பொது இடங்களில் மட்டுமே நெசவாளர்கள் துணிகளை விற்கவேண்டும் என்ற ஆணை இருந்ததாகத் தெரியவருகிறது. யாழ்ப்பாண நகரில் பெரியகடைச் சந்தையிலேயே மேற்படி துணி விற்பனை இடம்பெற்றது என்ற தகவலும் அக்குறிப்பில் உள்ளது.2 போர்த்துக்கேயர் காலத்திலேயே பெரியகடை யாழ்ப்பாண நகரப் பகுதிக்குள் அடங்கியிருந்ததையே மேற்படி தகவல் காட்டுகிறது எனக் கொள்ளலாம். ஒல்லாந்தர் காலத்திலும் இவ்வாறு இருந்ததையே நிலப்படமும் காட்டுவதாகக் கொள்ளமுடியும். மேலே குறிப்பிட்ட எல்லைகள் சரியானால், அக்காலத்து யாழ்ப்பாண நகரப்பகுதி அண்ணளவாக 220 ஏக்கர் (0.89 சதுர கிலோமீட்டர்) பரப்பளவு கொண்டதாக இருந்திருக்கும் என மதிப்பிடலாம்.3 

யாழ்ப்பாணக் கோட்டை

இந்த நிலப்படத்தின்படி யாழ்ப்பாணக் கோட்டை, இன்று அது இருப்பதுபோல் ஐங்கோண வடிவம் கொண்டதாகவும், அதன் ஐந்து மூலைகளிலும் அம்புத்தலை வடிவான கொத்தளங்களோடு கூடியதாகவும் உள்ளது.  தற்போதையை யாழ்ப்பாணக் கோட்டையைச் சுற்றியுள்ள அகழியோ அதற்கு வெளியில் அமைந்த வெளிப்புற அரண்களோ நிலப்படத்தில் இல்லை. உள் அரணை மட்டுமே நிலப்படம் காட்டுகிறது. எனவே, நிலப்படத்திலுள்ள கோட்டை அக்காலத்திலிருந்த கோட்டையின் உண்மையான நிலையைக் காட்டுகிறதா அல்லது அது, எளிமைப்படுத்தப்பட்ட ஒரு குறியீட்டு வடிவமா என்ற கேள்வி எழலாம். ஒல்லாந்தர் காலத்தில் யாழ்ப்பாணக் கோட்டை அவ்விடத்தில் முன்னர் இருந்த போர்த்துக்கேயரின் நாற்கோண வடிவிலான கோட்டையை மேம்படுத்தியும் விரிவாக்கியும் ஏறத்தாழ இன்று அது இருக்கும் வடிவில் அமைக்கப்பட்டது.4 இதற்கான கட்டுமான வேலைகள் ஒரே தடவையில் குறுகிய காலத்தில் இடம்பெறவில்லை. பல கட்டங்களாக மிக நீண்ட காலம் எடுத்தே கோட்டை வேலைகளை ஒல்லாந்தர் முன்னெடுத்தனர். 

முதற் கட்டமாக பழைய நாற்கோணக் கோட்டை ஐங்கோணக் கோட்டையாகவும் கூடிய நிலப்பரப்பை உள்ளடக்கியதாகவும் விரிவாக்கப்பட்டது. இதுவே தற்போதுள்ள கோட்டையின் உள் அரண் ஆகும். இந்த வேலைகள் 1680 ஆம் ஆண்டில் நிறைவெய்தின. உள் அரண் வாயிலின் மேற்பகுதியில் இன்றும் காணக்கூடியதாகவுள்ள ஆண்டுப் பொறிப்பு இதற்குச் சான்று. சுற்றியுள்ள அகழி, வெளி அரண்கள் என்பவற்றின் கட்டுமான வேலைகள் 1765 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தொடங்கி, யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் காலத்தின் இறுதி ஆண்டுகளிலும் தொடர்ந்ததாகத் தெரிகிறது. எனவே, நிலப்படம் வரையப்பட்ட 1719 ஆம் ஆண்டில் கோட்டையின் உள் அரண் மட்டுமே நிறைவடைந்திருந்தது. இதிலிருந்து, நிலப்படம் அக்காலக் கோட்டை இருந்த நிலையைச் சரியாகவே காட்டுகிறது என்பது தெளிவாகிறது. நிலப்படத்தில் கோட்டையின் அமைவிடமும், அதன் இரண்டு கொத்தளங்கள் கடலேரிக் கரையை அண்டியவாறுள்ள அமைவுத் திசையும்கூட இன்றைய நிலைமைகளுடன் ஒத்துள்ளன.

இந்நிலப்படம் வரையப்பட்ட காலத்தில், கோட்டைக்குள் நிர்வாகக் கட்டடங்களும் கட்டளைத் தளபதியின் மாளிகையும் பிற தளபதிகளுக்கான வீடுகளும் வேறு சில கட்டடங்களும் இருந்தன. நிலப்படம் அவற்றைக் காட்டவில்லை. இந்த நிலப்படத்தின் நோக்கங்களுக்கு மேற்குறித்த விவரங்கள் தேவையில்லாமல் இருந்திருக்கலாம்.

ஒல்லாந்தருடைய நகரம்

கோட்டைக்குக் கிழக்கே ஒல்லாந்தருடைய நகரத்தை நிலப்படம் காட்டுகிறது. இப்பகுதி அண்மைக்காலம்வரை பறங்கித்தெரு என அறியப்பட்டது. இந்த நகரத்தைப் போர்த்துக்கேயரே முதலில் உருவாக்கினர். யாழ்ப்பாணத்தை 1658 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயரிடமிருந்து கைப்பற்றிய ஒல்லாந்தர் அதை மேலும் மேம்படுத்தி முழுமையான வலையமைப்புக் கொண்ட ஒரு நகரமாக மாற்றினர்.5 ஆனால், இந்த மேம்பாடுகள் எப்போது, எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன என்ற தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. வீதி அமைப்பைப் பொறுத்தவரை ஏறத்தாழ முழுமைபெற்ற ஒல்லாந்தர்கால நகரத்தை இந்த நிலப்படம் காட்டுவதால், 1719 ஆம் ஆண்டுக்கு முன்னரே நகரத்தின் வீதி வலையமைப்பு மேம்பாடுகள் பெருமளவு நிறைவடைந்துவிட்டன எனலாம். 

நிலப்படம் காட்டும் நகரத்தில் மேற்கிலிருந்து கிழக்காக நான்கு வரிசைகளிலும், வடக்கிலிருந்து தெற்காக மூன்று வரிசைகளில் மொத்தம் 12 நகர நிலத்துண்டுகள் (City blocks) காணப்படுகின்றன. நகர வீதிகள் குறுக்கும் நெடுக்குமாக வெட்டும்போது அவ்வீதிகளிடையே தனிப்படுத்தப்பட்டு உருவாகும் நிலத்துண்டுகளே நகர நிலத்துண்டுகள் எனப்படுகின்றன. இந்நகரத்தின் மேற்கு எல்லையில் வீதி எதுவும் இல்லை. அந்தப் பக்கத்தில் இருந்திருக்கக்கூடிய கட்டடங்களை அணுகுவதற்கான ஒரு வழி இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே, அப்பக்கத்திலும் ஒரு வீதி இருந்திருக்கும் என எடுத்துக்கொண்டால், வடக்கு-தெற்குத் திசையில் ஐந்து வீதிகள் இருந்துள்ளன எனலாம். இவை இன்றைய முன் வீதி, முதலாம் குறுக்குத் தெரு, இரண்டாம் குறுக்குத் தெரு, மூன்றாம் குறுக்குத் தெரு, நான்காம் குறுக்குத் தெரு என்பன. அதேபோல, மேற்கு-கிழக்குத்  திசையில் உள்ள நான்கு வீதிகளும் வடக்கிலிருந்து தெற்காக இன்றைய சப்பல் வீதி, பிரதான வீதி, வங்கசாலை வீதி, கடற்கரை வீதி என்பனவாகும். (படம்-3) ஒல்லாந்தர் காலத்தில் மேற்படி யாழ்ப்பாண நகரம் மூன்றாம் குறுக்குத்தெரு வரையே இருந்தது என ஜோன் எச். மார்ட்டின் தொகுத்த நூலில் ஒரு குறிப்பு உள்ளது.6 பிற்காலத்தில் யாழ்ப்பாண நகரத்தைப் பற்றி எழுதிய சிலரும் மார்ட்டினின் குறிப்பைச் சான்றாகக் கொண்டு ஒல்லாந்தர் காலத்து நகரம் மூன்றாம் குறுக்குத்தெருவுக்கு அப்பால் விரிவடையவில்லை என்றே எழுதினர். இது உண்மையல்ல என்பதையும், ஒல்லாந்தர் ஆட்சி முடிவடைவதற்கு 76 ஆண்டுகளுக்கு முன்பே நான்காம் குறுக்குத் தெரு வரை நகரம் விரிவடைந்திருந்தது என்பதையும் நிலப்படம் தெளிவாகக் காட்டுகிறது.

ஒல்லாந்தருடைய நகரத்தில் குறுக்கும் நெடுக்குமாக அமைந்த வீதிகளைத் தெளிவாகக் காட்டியபோதும், அங்கு இருந்திருக்கக்கூடிய முக்கியமான கட்டடங்களோ பிற அமைப்புகளோ நிலப்படத்தில் இல்லை. போர்த்துக்கேயர் காலத்தில் இப்பகுதியில் பல கத்தோலிக்கத் தேவாலயங்களும் குருமடங்களும் மிசரிக்கோடியா என அழைக்கப்பட்ட கருணை இல்லம் முதலான வேறு முக்கியமான கட்டடங்களும் இருந்ததற்குச் சான்றுகள் உள்ளன.7 ஒல்லாந்தர் காலத்தில் மேற்படி தேவாலயங்களும் பிற பொதுக் கட்டடங்களும் நகரத்திலிருந்து அகற்றப்பட்டுவிட்டன. அக்காலத்தில் இங்கே முக்கியமான பெரிய கட்டடங்கள் இருந்ததற்குச் சான்றுகள் இல்லை. இந்நகரப் பகுதியில் ஒரு நீதிமன்றும் மதிலால் சூழப்பட்ட ஒல்லாந்தரின் இடுகாடும் இருந்தது பற்றி யொகான் வூல்ஃப்காங் ஹைட் என்பார் 1744 இல் வெளியான தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.8 அவையும் நிலப்படத்தில் குறிக்கப்படவில்லை. ஒல்லாந்தர் காலத்தில் இது பெருமளவுக்கு ஒரு குடியிருப்புப் பகுதியாகவே இருந்தது. ஒல்லாந்தக் குடியேறிகளும் அதிகாரிகளும் இங்கே வசித்தனர்.  

தென்னந்தோப்பு

நகரத்தின் வடமேற்கு மூலைக்கு எதிர்ப் பக்கத்தில் ஒழுங்கான வரிசைகளில் மரங்கள் நடப்பட்டது போன்ற குறியீடு உள்ளது. இது ஒரு தென்னந்தோப்பைக் குறிப்பதாக இருக்கலாம். இது, இன்று மத்திய கல்லூரியின் விளையாட்டு மைதானம் இருக்கும் இடமே என்பதைத் தெளிவாக அடையாளம் காணமுடிகிறது. யாழ்ப்பாணத்தைப் போர்த்துக்கேயரிடமிருந்து கைப்பற்றியவரும், ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியின் இந்தியப் பகுதிகளுக்கான ஆளுனர் நாயகமுமான ரைக்குளோஃப் ஃபொன் கூன்ஸ் (Rycklof von Goens) 1658 ஆம் ஆண்டில் எழுதிய வழிகாட்டற் குறிப்பில் நகரத்துக்கு அருகில் தென்னை மரங்கள் உள்ளிட்ட பலவகை மரங்களை நடும்படி பரிந்துரை செய்துள்ளார்.9 இதற்கு அமைவாகவே மேற்குறிப்பிட்ட தென்னந்தோப்பு உருவாகியிருக்கும் என ஊகிக்கலாம்.

அலுப்பாந்தித் துறை

கோட்டைக்கும் நகரத்துக்கும் இடையில் கரையோரமாக இரண்டு தூண்களையும் அவற்றின்மேல் தாங்கப்பட்ட ஒரு வளையையும் கொண்ட மரத்தாலானதாகத் தெரியும் ஒரு அமைப்பையும் அருகிலேயே ஒரு சிறிய தூண் போன்ற அமைப்பையும் உள்ளடக்கிய குறியீடொன்று பெரிய அளவில் காட்டப்பட்டுள்ளது. இது நிலப்படம் வரையப்பட்ட காலத்திலேயே குறிக்கப்பட்டதா, அல்லது பிற்காலத்தில் வேறு காரணங்களுக்காகக் குறிக்கப்பட்டதா என்பது தெளிவில்லை. இது அலுப்பாந்தித் துறையுடன் தொடர்புடைய ஏதோ ஒன்றைக் குறிப்பதாக இருக்கக்கூடும். ஆனால், இதை விளக்கும் எழுத்துமூலக் குறிப்பு எதுவும் நிலப்படத்தில் இல்லை. நீண்டகால வரலாற்றைக் கொண்ட இத்துறை, போர்த்துக்கேயர் காலத்திலும் ஒல்லாந்தர் காலத்திலும்கூட முக்கியமான துறையாக இருந்ததுடன், அக்காலத்தில் முக்கியமான சுங்கவரி அறவிடும் இடமாகவும் இருந்தது. போர்த்துக்கேயர் காலத்தில் சுங்கத்தைக் குறிக்கும் அரபு மொழி மூலத்தையுடைய “அல்ஃபான்டிகா” என்னும் போர்த்துக்கேயச் சொல்லால் இவ்விடம் அழைக்கப்பட்டது. இது தமிழில் அலுப்பாந்தி ஆனது. ஒல்லாந்தர் காலத்திலும் பயன்பாட்டிலிருந்த இச்சுங்கம், துறை ஆகியவற்றைப் பற்றிய குறிப்புகள் நிலப்படத்தில் இல்லாததன் காரணம் தெரியவில்லை.

வெடிமருந்துச்சாலையும் களஞ்சியசாலையும்

நகர எல்லையை ஒட்டியபடி ஆனால் அதற்கு வெளியே இரண்டு கட்டடங்களை நிலப்படத்தில் காட்டியுள்ளனர். ஒன்று வெடிமருந்து ஆலை, மற்றது களஞ்சியசாலை. இவ்விரண்டும் வண்ணார் பண்ணைப் பிரிவுக்குள் இருந்தாலும், இவை கோட்டையோடு தொடர்புள்ளவையாகத் தோன்றுவதால் அவைபற்றி இங்கே குறிப்பிடுவது பொருத்தம். வெடிமருந்து ஆலை நகரத்தின் வடக்கு எல்லைக்கு அருகே இன்றைய மணிக்கூட்டு வீதித் தடத்தை அண்டி அமைந்துள்ளது. அக்காலத்தில் இந்தப் பகுதி நகரத்துக்கு ஒதுக்குப் புறமாக இருந்ததால், ஆபத்தை விளைவிக்கக்கூடிய இந்த ஆலை அவ்விடத்தில் அமைக்கப்பட்டது எனக் கொள்ளலாம். களஞ்சியசாலைக் கட்டடம் கோட்டைக்கு மேற்கில் நகரத்தின் மேற்கெல்லையில் கரையோரமாக உள்ளது. இந்த அமைவிடம் பொருட்களைக் கடலேரி வழியாக நேரடியாகக் களஞ்சியத்துக்கு எடுத்துவர வசதியானது. இது எத்தகைய பொருட்களைக் களஞ்சியப்படுத்துவதற்குப் பயன்பட்டது என்பது தெரியவில்லை. கோட்டையிலிருந்து சற்றுத் தொலைவிலும் மக்கள் வாழும் நகரத்திலிருந்து வெகு தூரத்திலும் இதை அமைத்துள்ளதால் இதுவும் வெடிபொருட்கள் போன்ற ஏதாவது தீங்கு விளைவிக்கும் பொருட்களோடு தொடர்புடையதாக இருக்கக்கூடும்.  

குளம்

மேலே குறிப்பிட்டவை தவிர, ஒரேயொரு குளத்தையும் நகரப் பகுதிக்குள் நிலப்படம் காட்டுகிறது. இதன் பெயரைக் குறிப்பிடாமல் குளம் என்ற பொதுப் பெயரை மட்டுமே நிலப்படம் தருகிறது. இது கோட்டைக்கு நேர் வடக்கே நகரப் பகுதியின் எல்லையை அண்டியும் இன்றைய காங்கேசந்துறை வீதித் தடத்துக்கு அருகிலும் உள்ளது. இந்தப் பகுதியில் இன்று வட்டக்குளம் என்னும் பெருமளவுக்குத் தூர்ந்துபோன ஒரு குளமும் புல்லுக்குளமும் உள்ளன. நிலப்படத்திலுள்ள குளத்தின் அமைவிடம் சரியாகக் குறிக்கப்பட்டிருந்தால் அது புல்லுக்குளமாக இருக்கும் வாய்ப்ப்புக் குறைவு. இது, இன்றைய வட்டக்குளம் இருக்கும் இடத்தில் அக்காலத்தில் பெரிதாக இருந்த ஒரு குளமாக இருப்பது சாத்தியம்.

அடுத்த கட்டுரையில் யாழ்ப்பாண நகரப்பகுதியை அண்டியுள்ள கோவிற்பற்றுகளைப் பற்றி நிலப்படத்தில் உள்ள தகவல்களை விரிவாகப் பார்க்கலாம்.

குறிப்புகள்

  1. P. E. Pieris, The Kingdom of Jafanapatam 1645 (New Delhi: Asian Educational Services, 1995), 13, 63.
  2. Pieris, The Kingdom of Jafanapatam 1645, 13.
  3. இணையவழிச் செய்மதிப் படங்களைப் பயன்படுத்தி மதிப்பிடப்பட்டது.
  4. இ. மயூரநாதன், யாழ்ப்பாண நகரின் வளர்ச்சி வரலாறு (பதிப்பில்)
  5. மயூரநாதன், யாழ்ப்பாண நகரின் வளர்ச்சி வரலாறு (பதிப்பில்) 
  6. John H. Martyn, Notes on Jaffna (New Delhi: Asian Educational Services, 2003), 156.
  7. Joao Rebeiro, The Historic Tragedy of the Island of Ceilao, trans. P. E. Pieris (New Delhi: Asian Educational Services,1999), 36.
  8. Johann Wolffgang Heydt, Heydt’s Ceylon, Being the Relevant Sections of the Allerneuester Geographisch- und Topographischer Schau-Plats,trans. Reven-Hart (Ceylon Government Information Department, 1952), 80.
  9. Instructions from the Governor-General and Council of India to the Governor of Ceylon 1656-1665, trans. Sophia Pieters (Colombo: Ceylon Government Printer, 1908), 75.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

5018 பார்வைகள்

About the Author

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் அவர்கள் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கச் சூழல் துறையில் விஞ்ஞான இளநிலைப் பட்டத்தையும் (B.Sc. (BE)) பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலையில் விஞ்ஞான முதுநிலைப் பட்டத்தையும் (M.SC. (Arch)) பெற்றார். அத்துடன் இலங்கைக் கட்டடக்கலைஞர் சங்கம் (AIA (SL)), பிரித்தானியக் கட்டடக் கலைஞர்களின் அரச சங்கம் (RIBA) ஆகியவற்றில் பட்டயம் பெற்ற உறுப்பினராவார்.

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய காலத்திலிருந்து அதன் முதற் பயனராகப் பங்களிப்புச் செய்து வருகின்றார். தமிழ் விக்கிப்பீடியாவில் 4500இற்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொடங்கியுள்ளதுடன், மேலும் பல ஆயிரம் கட்டுரைகளின் விரிவாக்கத்திலும் பங்களிப்புச் செய்துள்ளார்.

தமிழ் விக்கிப்பீடியாவில் இவரது பங்களிப்புக்காக கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2015 ஆம் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல்விருது பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஆனந்தவிகடன் இதழ் வழங்கும் நம்பிக்கை விருதுகளில் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த 10 மனிதர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விருதை பெற்றுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • October 2024 (4)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)