இந்தத் தொடரின் சென்ற கட்டுரையில் லெயுசிக்காம் நிலப்படத் தொகுப்பிலுள்ள யாழ்ப்பாணப் பட்டினத்தின் நான்கு பெரும்பிரிவுகளையும் தீவுகள் சிலவற்றையும் காட்டும் நிலப்படத்தின் சில அம்சங்கள் குறித்து ஆராய்ந்தோம். இனி யாழ்ப்பாணப் பட்டினத்தின் வலிகாமப் பிரிவைத் தனியாகக் காட்டும் நிலப்படம் (படம்-1) தரும் விவரங்களை ஆராயலாம்.
நெதர்லாந்தின் தேசிய ஆவணக் காப்பகத்தில் உள்ள லெயுசிக்காம் நிலப்படத் தொகுப்பின் ஒரு பகுதியான இந்த நிலப்படம் ‘4. VELH 328.14’ என்னும் இலக்கத்தைக் கொண்டது. “வலிகாமப் பிரிவின் நிலப்படம்” என்னும் தலைப்பிட்ட இந்த நிலப்படத்தின் விளக்கக் குறிப்பில் இப்பிரிவிலுள்ள 14 கோவிற்பற்றுப் பிரிவுகளும் அவற்றில் அடங்கிய மொத்தம் 68 ஊர்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. (படம்-2) அக்கால யாழ்ப்பாண நகரம் மேற்படி பிரிவுகளுக்குள் அடங்காத தனிப் பிரிவு.
கோயிற்பற்றுகளும் ஊர்களும்
நிலப்படத்தில் தரப்பட்டுள்ள பட்டியலில் உள்ள 14 கோவிற்பற்றுகளும் அவற்றில் கீழ் வருகின்ற மொத்தம் 68 ஊர்களும் பின்வருமாறு:
- வண்ணார்பண்ணை: வண்ணார்பண்ணை
- சுண்டிக்குழி: சுண்டிக்குழி, கரையூர், கடையா குடியிருப்பு, கொழும்புத்துறை, சிவியாதெரு, நளவபரவு
- நல்லூர்: நல்லூர், திருநெல்வேலி, கொக்குவில், கோண்டாவில்
- கோப்பாய்: கோப்பாய், இருவாலை, உரும்பிராய், ஊரெழு, நீர்வேலி
- புத்தூர்: புத்தூர், சிறுப்பிட்டி, அச்செழு, ஆவரங்கால்
- அச்சுவேலி: வடக்குப் புறவேனி, தெற்குப் புறவேனி, நவக்கீரி, பத்தமேனி, கதிரிப்பாய், தம்பாலை, வளலாய்
- மயிலிட்டி: மயிலிட்டி, பலாலி, வயாவிளான், வறுத்தலைவிளான், தையிட்டி, வீரமாணிக்கன் துறை, பெரியநாட்டுத்தேவன் துறை
- தெல்லிப்பழை: தெல்லிப்பழை, மாவிட்டபுரம், பளை, வீமன்காமம், கட்டுவன்
- மல்லாகம்: மல்லாகம், அளவெட்டி, ஏழாலை, ஈவினை, புன்னாலைக்கட்டுவன், சூராவத்தை (?)
- உடுவில்: உடுவில். சங்குவேலி, சுன்னாகம், இணுவில், தாவடி
- மானிப்பாய்: மானிப்பாய், சுதுமலை, ஆனைக்கோட்டை, நவாலி, சண்டிலிப்பாய்
- வட்டுக்கோட்டை: வட்டுக்கோட்டை மேற்கு, வட்டுக்கோட்டை கிழக்கு, அராலி
- சங்கானை: சங்கானை, மூளாய், தொல்புரம், சுழிபுரம்
- பண்டத்தரிப்பு: பண்டத்தரிப்பு, சில்லாலை, மாதகல், பெரியவிளான், சிறுவிளான், மாகியப்பிட்டி (?)
நிலப்படத்தில் உள்ள பட்டியலில் மல்லாகம், பண்டத்தரிப்பு ஆகிய கோவிற்பற்றுகளில் உள்ள இறுதிப் பெயர்கள் இருக்கும் இடங்களில் தாள் மடிந்துள்ளதால் அவற்றை வாசிக்க முடியாதுள்ளது. நிலப்படத்தில் குறித்துக் காட்டியுள்ள பிரிவுகளை ஆராய்ந்து பார்க்கும்போது, நிலப்படத்தில் உள்ள இரண்டு ஊர்கள் மேற்குறிப்பிட்ட பட்டியலில் இல்லாதது தெரிகிறது. அவை சூராவத்தை, மாகியப்பிட்டி என்பனவாகும். சூராவத்தை மல்லாகம் கோவிற்பற்றுக்குள் அடங்கியிருப்பதை நிலப்படம் தெளிவாகவே காட்டுகிறது. எனவே, மல்லாகத்தில் மறைந்திருக்கும் பெயர் ‘சூராவத்தை’ என்பதில் ஐயமில்லை. ஆகவே, பண்டத்தரிப்பில் மறைந்துள்ள பெயர் மாகியப்பிட்டியாக இருக்கவேண்டும். பட்டியலில் மறைந்துள்ள ஊரின் முதல் எழுத்து M என்பது தெளிவாகத் தெரிவதும் இதையே சுட்டுகிறது. ஆனால், நிலப்படத்தைப் பார்க்கும்போது இது தொடர்பில் பின்வரும் முரண்பாடுகளைக் காணமுடிகிறது.
- நிலப்படம் மாகியப்பிட்டியை மானிப்பாய்க் கோவிற்பற்றில் அடங்குவதாகவே காட்டுகிறது. ஆனால், அதிலுள்ள பட்டியலில் மானிப்பாயின் கீழ் மாகியப்பிட்டியைப் பட்டியலிடவில்லை.
- பண்டத்தரிப்புக் கோவிற்பற்றில் தெளிவாகத் தெரியாத ஊர் உட்பட ஆறு ஊர்கள் இருப்பதாக நிலப்படப் பட்டியல் தகவல் தருகிறது. ஆனால், நிலப்படம் பண்டத்தரிப்பில் ஐந்து ஊர்களை மட்டுமே காட்டுகிறது. இதில் மாகியப்பிட்டி இல்லை.
- மாகியப்பிட்டி பண்டத்தரிப்புக் கோயிற்பற்று எல்லைக்கு மிக அருகில் உள்ளபோதும் நிலப்படத்தில் இரண்டுக்குமிடையே தொடர்ச்சி இல்லை.
எனவே, நிலப்படத்திலுள்ள பட்டியலில் தெளிவாகத் தெரியாத பெயர் மாகியப்பிட்டி என்பது சரியே என்றாலும், நிலப்படத்தில் காட்டியபடி அது மானிப்பாய்க் கோவிற்பற்றுக்குள் அடங்கிய ஊர் என்பதே சரியாக இருக்கவேண்டும். பட்டியலில் அதைப் பண்டத்தரிப்பின் கீழ்த் தந்திருப்பது பிழை.
நிலப்படத்திலுள்ள அம்சங்கள்
இந்த நிலப்படத்தில் முக்கியமாக கோவிற்பற்றுப் பிரிவு எல்லைகளையும் அவற்றின் துணைப் பிரிவுகளான ஊர்களின் எல்லைகளையும் குறித்துக் காட்டியுள்ளனர். கோவிற்பற்று எல்லைகளைக் குறிக்கத் தடித்த கோடுகளும், ஊர் எல்லைகளைக் குறிக்க மெல்லிய கோடுகளும் பயன்பட்டுள்ளன. ஒவ்வொரு கோயிற்பற்றுப் பிரிவிலும் அதற்குரிய தேவாலயம், அதனோடிணைந்த தேவாலய இல்லம் ஆகியவற்றின் அமைவிடங்கள் தெளிவான குறியீடுகளால் காட்டப்பட்டுள்ளன. இவ்வாறு தேவாலயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதனாலேயே லெயுசிக்காமின் தொகுப்பிலுள்ள நிலப்படங்கள் திருச்சபையின் தேவைக்காக வரையப்பட்டவை என்று ஆர்.எல். புரோகியர் குறிப்பிட்டுள்ளார் போலும்.1 நிலப்படத்தில் பரவலாகக் காட்டியுள்ள இன்னொரு முக்கியமான அம்சமாக நீர்நிலைகளைக் குறிப்பிடலாம். குளம், கேணி, துரவு என வெவ்வேறு வகை நீர்நிலைகளை அவற்றின் தமிழ்ப் பெயரொட்டுகளுடன் நிலப்படத்தில் காட்டியுள்ளனர். அதேவேளை, சில இடங்களில் சிறப்புப் பெயர் இல்லாத குளங்களை ‘Tanck’ என்ற டச்சு மொழிச் சொல்லால் குறிப்பிட்டிருப்பதையும் காணமுடிகிறது. இவற்றுடன், கோட்டைகள், களஞ்சியங்கள், மடங்கள்/ அம்பலங்கள், யானைப் பந்திகள், துறைகள் முதலிய அம்சங்களும் நிலப்படத்தில் உள்ளன.
நிலப்படம் காட்டும் வீதிகள்
சென்ற கட்டுரையில் யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதையும் காட்டும் நிலப்படத்தைக் குறித்து விளக்கியபோது வலிகாமத்தையும் வடமராட்சியையும் இணைக்கும் வீதியைப் பற்றியும் வலிகாமத்தைத் தென்மராட்சி, பச்சிலைப்பள்ளி ஆகியவற்றுடன் இணைக்கும் வீதியைப் பற்றியும் சில தகவல்களை அறிந்தோம். குறிப்பாக மேற்படி வீதிகள், பிரிவுகளுக்கு இடையிலான நீரேரியைக் கடக்கும் இடங்கள் தொடர்பாகவே அக்கட்டுரையில் கவனம் செலுத்தினோம். இந்தக் கட்டுரையில் வலிகாமப் பிரிவுக்குள் அடங்கிய மேற்குறித்த இரு வீதிகளின் பகுதிகளைப் பற்றியும், முழுமையாக வலிகாமத்துக்குள் அடங்கிய பிற வீதிகளைப் பற்றியும் பார்க்கலாம் (படம்-3).
சென்ற கட்டுரையில் நிலப்படத்தில் காட்டியுள்ள வீதிகள் பெரும்பாலும் தேவாலயங்களை இணைக்கும் வீதிகளாக இருப்பதையும் சுட்டிக்காட்டினோம். இக்கட்டுரையில் இணைத்துள்ள படங்கள் இதைத் தெளிவாகக் காட்டுகின்றன. தேவாலயங்களை இணைப்பதற்காகவே இவ்வீதிகள் அமைக்கப்பட்டன என்பது இதற்குப் பொருளல்ல. முன்னைய போக்குவரத்து வழித்தடங்களை அல்லது அவற்றின் சந்திப்புக்களை அண்டித் தேவாலங்களைக் கட்டியதால் அல்லது முன்னரே பிரதேசக் குவிமையங்களாக இருந்த அரச கட்டடங்கள், சந்தைகள், கோவில்கள் போன்றவற்றின் இடங்களில் அல்லது அவற்றுக்கு அருகில் தேவாலயங்களைக் கட்டியதால் இத்தோற்றப்பாடு ஏற்பட்டிருக்கலாம். இந்நிலப்படம், தேவாலயங்களை இணைக்கும் வீதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் காட்டி, ஏனைய பல வீதிகளைக் காட்டாமல் விட்டிருந்தாலும் வீதிகளைத் தேவாலயங்களுக்கு முதன்மை கொடுத்து அமைத்தது போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கலாம். வேறு ஒல்லாந்தர்கால நிலப்படங்கள் மூலம் அக்காலத்தில் இருந்ததாகத் தெரியும் சில வீதிகளை நிலப்படம் காட்டவில்லை என்பது தெரிகிறது. எடுத்துக்காட்டாக, இன்றைய அரசடி, வீதி, நாவலர் வீதி ஆகியவை அக்காலத்தில் இருந்ததற்கு வேறு நிலப்படச் சான்றுகள் உள்ளபோதும் இந்த நிலப்படத்தில் அவ்வீதிகள் இல்லை. இவற்றைப்போல் வேறு பல வீதிகளையும் நிலப்படம் காட்டாமல் தவிர்த்திருக்கலாம்.
ஒல்லாந்தர் காலத்திலேயே காங்கேசந்துறை முக்கியத்துவம் பெற்றிருந்தது. அங்கே ஒரு கோட்டையை அமைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.2 ஆனால், நிலப்படத்திலுள்ள வீதி வலையமைப்பில் காங்கேசந்துறை இணைக்கப்படவில்லை. இன்றைய முக்கிய வீதிகளுள் ஒன்றான பலாலி வீதியை நிலப்படம் காட்டவில்லை. உண்மையில் அவ்வீதி அக்காலத்தில் இல்லை. இவ்வீதி மிகவும் பிற்பட்டது. பிரித்தானியர் காலத்தில் அமைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதி
வலிகாமத்தையும் வடமராட்சியையும் இணைக்கும் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியின் வலிகாமப் பிரிவுக்குள் அடங்கிய பகுதி யாழ்ப்பாண நகரத்திலிருந்து வண்ணார்பண்ணை, நல்லூர், கோப்பாய், நீர்வேலி, சிறுப்பிட்டி, புத்தூர், ஆவரங்கால், அச்சுவேலி தெற்குப் பகுதி, அச்சுவேலி வடக்குப் பகுதி ஆகிய ஊர்களை ஊடறுத்து தொண்டைமானாறு நீரேரிக் கரையை அடைகிறது. நல்லூர், கோப்பாய், புத்தூர் ஆகிய ஊர்களிலுள்ள தேவாலயங்கள் இவ்வீதியில் அமைந்துள்ளன. நல்லூரிலிருந்து தொண்டைமானாறு நீரேரிக்கரை வரையான இவ்வீதித் தடம் போர்த்துக்கேயருக்கு முற்பட்ட காலத்திலேயே இருந்திருக்கக்கூடும். போர்த்துக்கேயர் 1619 ஆம் ஆண்டில் நல்லூரைக் கைப்பற்றியபோது இரண்டாம் சங்கிலி பருத்தித்துறையூடாக தஞ்சாவூருக்குத் தப்பிச்செல்ல முயன்று பிடிபட்டது வரலாறு. சங்கிலி, நல்லூரிலிருந்து மேற்படி வீதியூடாகவே பருத்தித்துறைக்குச் சென்றிருக்கக்கூடும்.
நல்லூர் – இருபாலை வீதி
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியிலிருந்து, பிராமணன் குளத்துக்கு அருகிலிருந்து தொடங்கி வடக்காகச் சென்று திருநெல்வேலிப் பகுதியில் கிழக்குத் திசையில் திரும்பி மீண்டும் பருத்தித்துறை வீதியைச் சந்திக்கும் ஒரு வீதியும் நிலப்படத்தில் உள்ளது. இது இன்றைய நல்லூர்க் கந்தசாமி கோவிலுக்கு மேற்கே பருத்தித்துறை வீதி/கோவில் வீதிச் சந்தியிலிருந்து இருபாலை வரை செல்லும் வீதி என்பதில் ஐயம் இல்லை. இந்த வீதியின் ஒரு பகுதி போர்த்துக்கேயருக்கு முந்திய தலைநகரான நல்லூரின் மேற்கு எல்லையாக இருந்திருப்பது சாத்தியம்.
யாழ்ப்பாணம் – தொழும்புத்துறை வீதி
நிலப்படத்தில் இவ்வீதி இன்றைய பிரதான வீதி – நாலாம் குறுக்குத்தெருச் சந்தியிலிருந்து கரையூர், சுண்டிக்குழி ஆகிய ஊர்களூடாக கொழும்புத்துறைக்குச் செல்கிறது. இந்த வீதி இன்றைய கொழும்புத்துறை வீதித் தடத்திலேயே அமைந்துள்ளது. ஒல்லாந்தர் போர்த்துக்கேயரின் யாழ்ப்பாண நகரத்தை மேம்படுத்துவதற்கு முன்னர் நகரத்திலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் வீதி பிரதான வீதியின் நீட்சியாக அல்லாமல், வங்கசாலை வீதியின் நீட்சியாகவே இருந்ததை லெயுசிக்காம் நிலப்படங்களுக்கு முந்திய சில நிலப்படங்கள் காட்டுகின்றன. இவ்விடயத்தைப் பற்றி இனி வரும் கட்டுரைகளில் விரிவாகப் பார்க்கலாம். எவ்வாறெனினும், கொழும்புத்துறையும், இன்றைய கோட்டைக்கு அருகில் இருந்த பண்ணைத்துறையும் போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தில் காலடி வைப்பதற்கு முன்பே முக்கியமாக துறைகளாக இருந்தன. குறுகிய தூரத்தில் அமைந்த இவ்விரு துறைகளுக்குமிடையே கரையோரமாகப் போக்குவரத்து இடம்பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை. அப்போக்குவரத்து நிலப்படத்திலுள்ள வீதியின் தடத்திலேயே இடம்பெற்றிருக்கும் எனச் சொல்லமுடியாவிட்டாலும், போர்த்துக்கேயருக்கு முன்பே அப்பகுதியில் ஒரு வீதி இருந்திருக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
நல்லூர் – சுண்டிக்குழி வீதி
நிலப்படத்தின்படி இவ்வீதி இன்று முத்திரைச் சந்தை என அழைக்கப்படும் இடத்திலிருந்து தெற்கு நோக்கிச் சென்று, யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை வீதியைச் சுண்டிக்குழித் தேவாலயத்துக்கு அருகில் சந்திக்கிறது. சுண்டிக்குழித் தேவாலயம் முதலில் போர்த்துக்கேயரால் கத்தோலிக்கத் தேவாலயமாகக் கட்டப்பட்டது. அதையே ஒல்லாந்தர் கைப்பற்றித் தமது தேவாலயமாகப் பயன்படுத்தினர். எனவே, நல்லூர் – சுண்டிக்குழி வீதியை, நல்லூரைச் சுண்டிக்குழித் தேவாலயத்துடன் இணைப்பதற்காகப் போர்த்துக்கேயரே அமைத்திருக்கக்கூடும். ஆனாலும், இதை உறுதிப்படுத்துவதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை.
தென்மராட்சி வீதி
வலிகாமத்தைத் தென்மராட்சியுடன் இணைக்கும் வீதி, நல்லூர் – சுண்டிக்குழி வீதியில் தொடங்கி சிவியாதெரு ஊடாக நீரேரிக்கரையை அடைகிறது. 1658 ஆம் ஆண்டில் ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தின்மீது படையெடுத்து வந்தபோது, தென்மராட்சியில் உள்ள நாவற்குழியிலிருந்து தென்மராட்சிக்கும் வலிகாமத்துக்கும் இடையிலுள்ள உப்பாறு நீரேரியைக் கடந்து வலிகாமத்துக்குள் நுழைந்தனர். அங்கிருந்து சுண்டிக்குழித் தேவாலயப் பகுதியூடாக யாழ்ப்பாண நகரத்தின் கிழக்கு எல்லையை அடைந்தனர்.3 எனவே, நிலப்படத்திலுள்ள தென்மராட்சி வீதியும் போர்த்துக்கேயர் காலத்திலேயே ஒரு வழித்தடமாகவேனும் இருந்திருக்கக்கூடும்.
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை – தொண்டைமானாறு நீரேரி வீதி
தற்காலத்திலும் வலிகாமப் பிரிவின் முக்கிய வீதிகளிலொன்றாக இருக்கும் யாழ்ப்பாணம் – காங்கேசந்துறை வீதியின் பெரும் பகுதியை நிலப்படத்தில் காணமுடிகிறது. இது நகரத்தை வலிகாமம் வடக்குப் பகுதியுடன் இணைக்கிறது. இந்த வீதி போர்த்துக்கேயரின் யாழ்ப்பாண நகரம் உருவாவதற்கு முன்பே உருவாகியிருக்கக்கூடும். இன்றைய கோட்டை இருக்கும் இடத்தில் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கடல்வழி வணிகச் செயற்பாடுகள் இருந்ததற்கான தொல்லியற் சான்றுகள் அண்மையில் கிடைத்துள்ளன. இப்பகுதியைக் குடாநாட்டின் ஏனைய பகுதிகளுடன் இணைக்கும் வீதியாக இது, மிகப் பழைய காலத்திலேயே தோற்றம்பெற்றிருக்க வாய்ப்புண்டு.4 நிலப்படத்தில் இந்த வீதி யாழ்ப்பாண நகரப் பகுதியிலிருந்து வடக்காக வண்ணார்பண்ணை, கொக்குவில், தாவடி, கோண்டாவில், இணுவில், உடுவில், சுன்னாகம், மல்லாகம் ஆகிய ஊர்களூடாகத் தெல்லிப்பழை வரை செல்கிறது. அங்கிருந்து வீதி கிழக்கு நோக்கித் திரும்பி, கட்டுவன், வறுத்தலை விளான், மயிலிட்டி, பலாலி, பத்தவேனி, அச்சுவேலி வடக்கு ஆகிய ஊர்களைக் கடந்து நீரேரிக் கரைக்கு அருகில் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் இணைகிறது. மேலே குறிப்பிட்ட வீதியும் மல்லாகம், தெல்லிப்பழை, மயிலிட்டி, அச்சுவேலி ஆகிய ஊர்களிலுள்ள தேவாலயங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது.
யாழ்ப்பாணம் – மானிப்பாய் வீதி
மேற்குறிப்பிட்ட வீதியில் நகரத்திலிருந்து வடக்காகச் சற்றுத் தொலைவிலுள்ள சந்தியிலிருந்து தொடங்கும் ஒரு வீதி கிழக்குப் பக்கமாக வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை, சுதுமலை ஆகிய ஊர்களூடாக மானிப்பாயை அடைகிறது. இந்த வீதி தற்காலத்து மானிப்பாய் வீதியுடன் பொருந்துகிறது. யாழ்ப்பாண நகரத்துக்கு அருகில் அது தொடங்கும் சந்தி அண்மைக்காலம் வரை மிட்டாசுக்கடைச் சந்தி என அறியப்பட்ட சந்தியே என்பதிலும் ஐயமில்லை. நிலப்படம், மேற்படி வீதி மானிப்பாயில் இரண்டாகப் பிரிவதாகக் காட்டுகிறது.
மானிப்பாய் – மருதனார்மடம் வீதி
மேலே குறிப்பிட்ட கிளைகளுள் ஒன்று கிழக்குப் பக்கம் திரும்பி, சங்குவேலி, உடுவில் ஊடாக யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை வீதியைச் சந்திக்கிறது. இச்சந்தியை இன்றைய மருதனார்மடம் சந்தி என அடையாளம் காணலாம். இப்போது மருதனார்மடம் சந்தியிலிருந்து நான்கு திசைகளிலும் வீதிகள் உள்ளன. ஆனால், நிலப்படம் இதை ஒரு முச்சந்தியாகவே காட்டுகிறது. இங்கிருந்து கிழக்கு நோக்கிக் கைதடிக்குச் செல்லும் வீதி பிற்காலத்தில் அமைக்கப்பட்டது.
மானிப்பாய் – பண்டத்தரிப்பு – தெல்லிப்பழை வீதி
மானிப்பாயிலிருந்து ஏறத்தாழ வடமேற்குத் திசையில் செல்லும் அடுத்த கிளை வீதி சண்டிலிப்பாய், சங்கானை ஊடாகப் பண்டத்தரிப்புக்குச் சென்று அங்கிருந்து கிழக்காகத் திரும்பி, பெரியவிளான், சிறுவிளான் அளவெட்டி ஊடாகத் தெல்லிப்பழையில் யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை வீதியுடன் இணைகிறது. இந்த வீதி பண்டத்தரிப்புத் தேவாலயத்தை மானிப்பாய்த் தேவாலயத்துடனும் தெல்லிப்பழைத் தேவாலயத்துடனும் இணைப்பதைக் காணலாம்.
ஓட்டுமடம் – வட்டுக்கோட்டை மேற்கு – மூளாய் வீதி
யாழ்ப்பாணம் – மானிப்பாய் வீதியிலிருந்து வண்ணார்பண்ணைத் தேவாலயத்துக்கு அருகே இன்னொரு வீதி தொடங்குகிறது. இது இன்றைய ஓட்டுமடம் சந்தி என அடையாளம் காணலாம். இங்கிருந்து வீதி வடமேற்காக ஆனைக்கோட்டை, நவாலி, அராலி ஊடாக வட்டுக்கோட்டை மேற்கை அடைகிறது. இங்கிருந்து ஒரு வீதி மூளாய் ஊடாக காரைதீவுக்கு (இன்றைய காரைநகர்) எதிர்புறத்தில் நீரேரிக்கரையை அடைகிறது. இவ்விடத்திலிருந்தே அக்காலத்தில் காரைதீவுக்குத் தோணிகளைப் பயன்படுத்திப் பயணம் செய்திருப்பர். எனவே, இவ்வீதி நல்லூரிலிருந்து காரைதீவுக்குச் செல்லும் வீதியின் ஒரு பகுதியாக இருந்திருக்கும். இந்தியாவுக்கு யானைகளை ஏற்றுமதி செய்யும் துறை காரைதீவில் இருந்தது. இது யானைத்துறை எனப்பட்டது. போர்த்துக்கேயர் காலத்துக்கு முன்பே நல்லூரிலிருந்து யானைத்துறைக்குச் செல்லும் வீதியொன்று இருந்தது பற்றிப் போர்த்துக்கேய வரலாற்றாசிரியரான கோட்டூ என்பவரின் நூலில் தகவல் உள்ளது.5 எனவே, மேலே குறிப்பிட்ட வீதியும், இதன் கிழக்கு முனையிலிருந்து நல்லூருக்குச் செல்லும் வீதியும் நல்லூர் தலைநகராக இருந்த காலத்திலேயே இருந்திருக்கும் எனலாம்.
வட்டுக்கோட்டை – பண்டத்தரிப்பு வீதி
வட்டுக்கோட்டையிலிருந்து பிரியும் இன்னொரு வீதி சங்கானை ஊடாகப் பண்டத்தரிப்பை அடைகிறது. இது மானிப்பாய் – பண்டத்தரிப்பு வீதியைச் சந்திக்கிறது.
போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் கால வீதி வலையமைப்பு மாற்றங்கள்
குடாநாட்டின் பிரதேச வீதி வலையமைப்பு யாழ்ப்பாண நகரத்தை மையப்படுத்தி அதை நோக்கிக் குவியும் வகையிலும் அமைந்துள்ளதையும் லெயுசிக்காம் தொகுப்பிலுள்ள நிலப்படங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. ஆனால், யாழ்ப்பாண நகரத்தை வீதி வலையமைப்பில் குவியப் புள்ளியாக்கும் முயற்சிகள் போர்த்துக்கேயர் அல்லது ஒல்லாந்தர் காலத்துக்கு உரியவை. போர்த்துக்கேயர் யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றுவதற்கு முன்னர் நல்லூரே தலைநகரமாக இருந்தது. அக்காலத்தில், அதுவே வீதி வலையமைப்பின் குவியப்புள்ளியாக இருந்திருக்கும். அவர்கள் தலைமையிடத்தைப் புதிய யாழ்ப்பாண நகருக்கு மாற்றிய பின்னர் அதைப் பிரதேசத்தின் குவியமாக மாற்றவேண்டிய தேவை எழுந்திருக்கும். இது தொடர்பில் போர்த்துக்கேயர் காலத்திலும் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் முதல் அறுபது ஆண்டுகளிலும் இடம்பெற்ற மேம்பாடுகளைக் குறித்துத் தகவல்கள் இல்லை. யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வீதி வலையமைப்பைப் பற்றியும், அதில் யாழ்ப்பாண நகரத்தின் வகிபாகம் குறித்தும் அறிந்து கொள்வதற்குத் தேவையான மிகப் பழைய தகவல்கள் லெயுசிக்காமின் நிலப்படங்களில் கிடைக்கின்றபோதும், இந்த மாற்றங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவக்கூடிய தகவல்கள் வேறு ஒல்லாந்தர் நிலப்படங்களில் கிடைக்கின்றன அவற்றைப்பற்றி இனி வரும் கட்டுரைகளில் பார்க்கலாம்.
குறிப்புகள்
- R. L. Brohier, “Ceylon in Maps,” The Journal of the Dutch Burgers Union, vol XXXII, no. 2 (October 1942): 82.
- R. L. Brohier, “Ceylon in Maps,” The Journal of the Dutch Burgers Union, vol XXXII, no. 2 (October 1942): 80.
- Phillipus Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, trans. Pieter Brohier, The Ceylon Historical Journal, vol. VIII nos. 1-4 (July 1958-April 1959), —.
- இதுபற்றிய கூடுதல் விவரங்களை விரைவில் வெளிவரவிருக்கும், கட்டுரையாசிரியரின் “யாழ்ப்பாண நகரின் வளர்ச்சி வரலாறு” என்னும் நூலில் காணலாம்.
- Donald Ferguson (trans. and ed.), “History of Ceylon from the Earliest Times to 1600 A. D. as Related by Joao de Barrows and Diogo do Couto,” Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society XX, no. 60 (1908): 188-189.
தொடரும்.