லெயுசிக்காமின் வலிகாமப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் சங்கானைக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில், பண்டத்தரிப்புக் கோவிற்பற்றுத் தொடர்பாக நிலப்படத்திலுள்ள விவரங்களை ஆராயலாம்.
பண்டத்தரிப்புக் கோவிற்பற்றில் பண்டத்தரிப்பு, சில்லாலை, மாதகல், பெரியவிளான், சிறுவிளான், மாகியப்பிட்டி ஆகிய ஆறு துணைப் பிரிவுகள் இருப்பதை நிலப்படத்தில் உள்ளடங்கியுள்ள பட்டியல் தெளிவாகக் காட்டுகிறது. அத்துடன், நிலப்படம் இந்த ஆறு பிரிவுகளையும் எல்லை குறித்தும் காட்டுகிறது (படம்-1).

எல்லைகள்
நிலப்படத்தின்படி பண்டத்தரிப்புக் கோவிற்பற்றுக்கு வடக்கு எல்லையாகப் பாக்கு நீரிணை உள்ளது. கிழக்கில் தெல்லிப்பழை, மல்லாகம் ஆகிய கோவிற்பற்றுகளும்; தெற்கில் மல்லாகம், சங்கானை என்பனவும்; மேற்கில் சங்கானையும் எல்லைகளாக அமைந்துள்ளன (படம்-2). இக்கோவிற்பற்றுக்குள், பாக்குநீரிணைக் கரையோரமாக மாதகல் துணைப்பிரிவு உள்ளது. இக்கோவிற்பற்றின் கடற்கரை முகப்பின் பெரும் பகுதி மாதகல் துணைப் பிரிவுக்குள்ளேயே அடங்குகிறது. சில்லாலை, பண்டத்தரிப்பு, பெரியவிளான், சிறுவிளான் ஆகிய நான்கு துணைப்பிரிவுகளும் மேற்கிலிருந்து கிழக்காக வரிசையாக அமைந்துள்ளன. இவற்றுள் சில்லாலைக்கும் சிறுவிளானுக்கும் கடல் முகப்பு இருப்பதை நிலப்படத்திலிருந்து அறிய முடிகிறது.

நிலப்படத்தின்படி ஆறாவது துணைப் பிரிவான மாகியப்பிட்டி மேலே குறிப்பிட்ட ஐந்து பிரிவுகளுடனும் தொடுப்பு இன்றித் தனியாக உள்ளது. இது, மல்லாகம், மானிப்பாய் ஆகிய கோவிற்பற்றுகளால் சூழப்பட்டுள்ளது. லெயுசிக்காமின் தொகுப்பிலுள்ள முழு யாழ்ப்பாணக் குடாநாட்டையும் காட்டும் நிலப்படத்திலும் இவ்வாறே மாகியப்பிட்டி தனியாகக் காட்டப்பட்டிருந்தாலும் அது பண்டத்தரிப்புக் கோவிற்பற்றைச் சேர்ந்தது எனத் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளனர். இதிலிருந்து, ஒல்லாந்தர் காலத்தில் மாகியப்பிட்டி பண்டத்தரிப்புக் கோவிற்பற்றின் ஏனைய பகுதிகளுடன் தொடுப்பின்றி இருந்தது தெளிவாகவே தெரிகின்றது. தற்கால நிர்வாகப் பிரிவுகளின்படி, பெரியவிளான், மாகியப்பிட்டி ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளுக்கிடையே பொது எல்லை உள்ளது.
ஒல்லாந்தர்காலப் பண்டத்தரிப்புக் கோவிற்பற்றின் பகுதிகள் தற்காலத்தில் சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலர் பிரிவுக்குள் அடங்குகின்றன. அதேவேளை, உள்ளூராட்சி நிர்வாக அமைப்பில், பண்டத்தரிப்புக் கோவிற்பற்று இன்றைய வலிகாமம் – தென்மேற்குப் பிரதேச சபையின் ஒரு பகுதியாக உள்ளது.
வீதிகள்
லெயுசிக்காமின் நிலப்படத்தின்படி, மானிப்பாயிலிருந்து பண்டத்தரிப்புக்குச் செல்லும் ஒரு வீதியும், இவ்வீதியைப் பண்டத்தரிப்பு நகரப் பகுதிக்கு அருகில் சந்திக்கும் சங்கானையில் இருந்து வரும் ஒரு வீதியும், பண்டத்தரிப்பிலிருந்து தெல்லிப்பழைக்குச் செல்லும் ஒரு வீதியும், பண்டத்தரிப்புக் கோவிற்பற்றுக்குள் அமைந்துள்ளன. முதல் இரண்டு வீதிகள் சந்திக்கும் இடம் பண்டத்தரிப்புக் கோவிற்பற்றுக்குள் இருப்பதாக நிலப்படம் காட்டுகின்றபோதும், உண்மையில் இது பண்டத்தரிப்புக்கு வெளியே சங்கானைக்கும் மானிப்பாய்க்கும் இடையிலான எல்லைக்கு அருகிலேயே உள்ளது என்று சென்ற கட்டுரையில் எடுத்துக்காட்டினோம். இதன்படி, இரண்டாவதாகக் குறிப்பிட்ட வீதியின் எப்பகுதியும் பண்டத்தரிப்புக் கோவிற்பற்றுக்குள் இருக்காது என்பது தெளிவு. இது வீதிகள் துல்லியமாக வரையப்படாமையால் ஏற்பட்ட பிழையாகும்.
பண்டத்தரிப்பிலிருந்து தெல்லிப்பழைக்குச் செல்லும் வீதி பண்டத்தரிப்புக் கோவிற்பற்றுக்குள் பண்டத்தரிப்பு, பெரியவிளான், சிறுவிளான் ஆகிய மூன்று துணைப் பிரிவுகளை ஊடறுத்துச் செல்கிறது. இந்த வீதி, ஒல்லாந்தர் காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்த பல கிறித்தவத் தேவாலயங்களை இணைக்கும் வகையில் அமைந்த நீண்ட வீதியின் ஒரு பகுதி.
தேவாலயமும் தேவாலய இல்லமும்
பண்டத்தரிப்புக் கோவிற்பற்றுத் தேவாலயத்தையும் அதற்கு அண்மையில் அமைந்த தேவாலய இல்லத்தையும் பண்டத்தரிப்புத் துணைப் பிரிவுக்குள் நிலப்படம் குறித்துக் காட்டுகிறது. இவ்விடம் இன்று பண்டத்தரிப்பு அமெரிக்க இலங்கை மிசன் (இப்போது தென்னிந்தியத் திருச்சபை) தேவாலயம் அமைந்துள்ள இடத்துடன் ஏறத்தாழப் பொருந்துகிறது.
ஒல்லாந்தர்காலத் தொடக்கத்தில் பண்டத்தரிப்புத் தேவாலயம் தேவைக்குப் பொருத்தமான செம்மையான கட்டடம் என்பதையும், அது முருகைக் கற்களால் கட்டப்பட்டது என்பதையும் போல்டேயஸ் பாதிரியாருடைய விவரிப்பிலிருந்து அறிய முடிகிறது. அருகிலிருந்த தேவாலய இல்லமும் அழகாகவும் உறுதியானதாகவும் கட்டப்பட்டிருந்தது.1 இதன் கீழ்ப் பகுதியில் வளைவு வரிசைகள் இருந்துள்ளன. நூலில் உள்ள படத்திலும் தேவாலய இல்லம் விவரிப்பில் உள்ளவாறே இரண்டு தளங்களைக் கொண்டதாகவும் வளைவுகளுடன் கூடியதாகவுமே காணப்படுகின்றது2 (படம்-3).

பெரும்பாலான பிற கோவிற்பற்றுத் தேவாலயங்களைப் போலவே பண்டத்தரிப்புக் கோவிற்பற்றுத் தேவாலயமும் முதலில் போர்த்துக்கேயராலேயே கட்டப்பட்டிருக்க வேண்டும். இதையே ஒல்லாந்தர் திருத்தியும், தமது தேவைக்கேற்ப மாற்றங்களைச் செய்தும் பயன்படுத்தியிருப்பர். போல்டேயஸ் பாதிரியார் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த, ஒல்லாந்தர் காலத்தின் முதல் ஏழு ஆண்டுகளிலேயே இத்தேவாலயம் நிரந்தரமான கட்டடப் பொருட்களாலான உறுதியான பெரிய கட்டடமாக இருந்ததால், போர்த்துக்கேயர் காலத்திலேயே இது ஒரு குறிப்பிடத்தக்க கட்டடமாகவே இருந்திருக்கும் என ஊகிக்கலாம். 1697ஆம் ஆண்டை அண்டிய காலப்பகுதியில் தேவாலயங்களின் பராமரிப்பில் தொய்வு ஏற்பட்டிருந்தது பற்றியும், அவற்றின் கட்டடங்கள் மோசமான நிலையில் காணப்பட்டதாகவும் அக்காலக் கட்டளைத் தளபதியின் அறிக்கையில் தகவல் உண்டு.3 1733-1737 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்துக்கும் வருகை தந்திருந்த யொகான் வுல்வ்காங் ஹெய்ட் என்பாரும் அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த தேவாலயங்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்ததாகவே குறிப்பிட்டுள்ளார்.4
பிரித்தானியர் ஆட்சிக் காலத்திலும் முதல் இரண்டு பத்தாண்டுகளில் தேவாலயங்கள் கைவிடப்பட்ட நிலையில் இருந்ததால் அவை பெரிதும் சேதமடைந்தன. பண்டத்தரிப்பு ஒல்லாந்தர் தேவாலயமும் இவ்வாறே சிதிலமடைந்த நிலையில் இருந்தது. அமெரிக்க மிசன் மதப் பணியாளர்கள் யாழ்ப்பாணம் வந்தபோது கையேற்றுத் திருத்திப் பயன்படுத்திய ஐந்து ஒல்லாந்தத் தேவாலயங்களுள் பண்டத்தரிப்புத் தேவாலயமும் ஒன்று.5 இப்போதும் அவ்விடத்தில் தென்னிந்தியத் திருச்சபைத் தேவாலயம் இருப்பது பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டோம்.
சம்புக்கழி
பண்டத்தரிப்புக் கோவிற்பற்றுக் கடற்கரையிலிருந்து உள்நோக்கி வரும் வகையில் அமைந்த நீர்ப்பரப்பு ஒன்றை நிலப்படம் காட்டுகிறது. இதற்குச் சம்புக்கழி எனப் பெயர் குறித்துள்ளனர். இப்பகுதி தற்காலத்தில் சம்புத்துறை என அழைக்கப்படுகிறது. மகாவம்சம் உள்ளிட்ட சில பழைய பாளி நூல்கள் ஜம்புகோள, ஜம்புகோள பட்டுன, கோள பட்டுன முதலிய பெயர்களில் ஒரு துறைமுகம் இருந்தது பற்றிக் குறிப்பிடுகின்றன. இது மேற்படி சம்புத்துறையே என வரலாற்றாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இலங்கை வரலாற்றில், குறிப்பாக இந்நாட்டில் புத்த மதம் பரவியது தொடர்பில், இது முக்கியத்துவம் வாய்ந்த இடமாகக் கருதப்படுகிறது.
கி.மு இரண்டாம் நூற்றாண்டில் மகதப் பேரரசர் அசோகரின் மகளும் பிக்குணியுமான சங்கமித்தை புத்தர் ஞானம் பெற்ற புனித வெள்ளரசு மரத்தின் கிளை ஒன்றுடன் இலங்கையின் வடபகுதியிலுள்ள ஜம்புகோள என்னும் இடத்தில் வந்து இறங்கியதாக மகாவம்சம் கூறுகிறது.6 அக்காலத்தில், அனுராதபுரத்திலிருந்து அரசுபுரிந்த தேவாநாம்பிய தீசன் இவ்விடத்துக்கு வந்து வெள்ளரசுக் கிளையை வரவேற்றதாகவும், அதற்காகக் கடற்கரையில் சமுத்தாசன்ன சாலை என்னும் மண்டபம் ஒன்றை அமைத்ததாகவும் மகாவம்சம் தகவல் தருகிறது.
பாளியிலும், சிங்களத்திலும் ஜம்பு (Eugenia jambolana) என அறியப்படும் மரத்தின் பெயரைத் தழுவியே இப்பெயர் ஏற்பட்டதாகச் சிலர் கருதுகின்றனர். அதேவேளை, தமிழில் சம்பு (Typha elephantina) எனப்படும் ஒரு புல்வகையே இப்பெயர் ஏற்படக் காரணம் என்ற கருத்தும் உண்டு. இப்பகுதியின் பொதுவான தாவர வகைகளையும் சூழலியல் தன்மைகளையும் கருத்திற் கொள்ளும்போது இரண்டாவது பெயர்க்காரணம் பொருத்தமானது என்பது கலாநிதி இரகுபதி அவர்களின் கருத்து.7
மன்னாருக்கு அண்மையிலுள்ள அருவியாற்றின் முகத்துவாரத்துக்கு அருகில் அமைந்த மாந்தைத் துறைமுகம் முக்கியத்துவம் பெற்று அனுராதபுரத்துக்கான முதன்மைத் துறைமுகமானபோது சம்புத்துறை அதன் முன்னையை முக்கியத்துவத்தை இழந்தது என்ற கருத்து உள்ளது.8 சம்புத்துறை முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகமாக இருந்த காலத்தில் அதற்கு அண்மையில் காரைதீவுக்கும் புன்னாலைக்கும் இடையிலிருந்த நீர்வழியினூடாக யாழ்ப்பாணக் கடலேரிக்குள் செல்ல முடிந்தது. சம்புத்துறை முக்கியத்துவம் இழந்து, காரைதீவுக்கும் புன்னாலைக்கும் இடையிலான நீர்வழியும் அடைபட்டதன் பின்னர் யாழ்ப்பாணக் கடலேரிக்குள் நுழைவதற்கான மாற்று வழியான காரைதீவுக்கும் வேலணைத் தீவுக்கும் இடையிலுள்ள வழி முக்கியத்துவம் பெற்று ஊர்காவற்றுறைத் துறைமுகமும் வளர்ச்சி அடைந்திருக்கக்கூடும்.9
இன்று சம்புத்துறை மாதகல் மேற்குப் பகுதியில் இருந்தபோதும், லெயுசிக்காமின் நிலப்படம் இவ்விடத்தைப் பண்டத்தரிப்புக் கோவிற்பற்றின் சில்லாலைத் துணைப்பிரிவில் அடங்கிய கடற்கரை ஓரமாகவே குறித்துக் காட்டுகிறது. ஒல்லாந்தர் காலத்தில் சில்லாலைத் துணைப்பிரிவுக்குள் இருந்த இவ்விடம் பிற்காலத்தில் ஏற்பட்ட நிர்வாக எல்லை மாற்றங்களால் மாதகலின் பகுதியாக ஆனதாகக் கொள்ளலாம். நிலப்படத்தில் இதற்குச் சம்புக் கழி (Chamboe Callie) எனப் பெயர் குறித்துள்ளனர் (படம்-4). தமிழில் ‘கழி’ என்பது கடற்கரையை அடுத்து உள்நாடி அமைந்துள்ள அமைதியான கடல்நீர்ப் பகுதி என்றும் பொருள்படும்.10 இவ்விடத்தின் புவியியல் அமைப்பைக் கருத்திற் கொள்ளும்போது இதைச் சம்புக் கழி என்று குறித்திருப்பது பொருத்தமானதே.

நிலப்படத்தில் இதைக் கடற்கரையிலிருந்து உள்நோக்கிச் செவ்வக வடிவில் நீண்டிருக்கும் நீர்ப்பரப்பாக வரைந்துள்ளனர். இது ஓர் இயற்கையான அம்சமாக அல்லாது செயற்கையாக அமைக்கப்பட்டது போலவே தோன்றுகிறது. ஒல்லாந்தர் காலத்தில் இப்பகுதியில் வண்டல் அகற்றப்பட்டு கரைகள் நேராக்கி அமைக்கப்பட்டனவா என்பது தெரியவில்லை. நிலப்படத்தில் இதற்கு முக்கியத்துவம் கொடுத்துக் குறித்திருப்பதால் ஒல்லாந்தர் காலத்தில் இதற்குக் குறிப்பிடத்தக்க பயன்பாடு ஏதாவது இருந்திருக்கக்கூடும். ஆனால், இவ்விடத்தை ஒரு துறையாக நிலப்படம் குறித்துக் காட்டவில்லை.
மிக அண்மைக் காலத்தில் கடற்படையினருடைய பொறுப்பிலிருந்த இப்பகுதியில் ஒரு புத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதுடன், பிக்குணி சங்கமித்தைக்கு ஒரு சிலையும் ‘கழி’ப் பகுதிக்குள் சங்கமித்தை பயணம் செய்த படகைக் குறிக்க ஒரு படகுச் சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இவ்விடம் ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. பெரும்பாலும் தென்னிலங்கைப் பௌத்த – சிங்கள மக்கள் இவ்விடத்துக்கு வருகின்றனர்.
குளங்கள்
லெயுசிக்காமின் நிலப்படம் பண்டத்தரிப்புக் கோவிற்பற்று எல்லைக்குள் பத்துக் குளங்களைக் காட்டுகிறது. சில்லாலைத் துணைப் பிரிவுக்குள் பொருமிக் குளம், தம்பலைப்பாய் என்னும் இரண்டு குளங்களும்; மாதகல் துணைப் பிரிவுக்குள் கல்வளைக் குளம், பள்ளக் குளம் ஆகிய இரண்டும்; பண்டத்தரிப்புத் துணைப் பிரிவுக்குள் பன்வல்லைக் குளம் என்ற பெயரில் ஒரு குளமும், வெறுமனே குளம் என்று குறிக்கப்பட்ட ஒரு குளமும்; பெரியவிளானில் வட்டக்கரை, சுளன்னைக் குளம் என்னும் இரண்டு குளங்களும்; சிறுவிளானில் கல்லுவில் குளம், மானாவளை ஆகிய இரண்டு குளங்களும் உள்ளன. மாகியப்பிட்டிக்குள் குளம் எதுவும் இல்லை.
தற்காலக் குளங்களின் பதிவுகளின்படி, ஒல்லாந்தர் காலத்துப் பண்டத்தரிப்புக் கோவிற்பற்றுக்குள் அடங்கியிருந்த பகுதிகளுக்குள் 12 குளங்கள் உள்ளன.11 அமைவிடங்களையும் பெயர் ஒலிப்பு ஒற்றுமையையும் கருதும்போது சில்லாலைப் பகுதியில் இன்று உள்ள குருமைக் குளமும் தும்பலைப்பாய்க் குளமும் நிலப்படத்தில் சில்லாலைப் பிரிவுக்குள் குறித்துள்ள பொருமிக் குளம், தம்பலைப்பாய்க் குளம் ஆகியவற்றோடு பொருந்தக்கூடும். நிலப்படத்தில் பெரியவிளான் பிரிவுக்குள் வட்டக்கரை (வட்டக்கரைக் குளம்) என்னும் குளமும் தற்காலத்தில் பண்டத்தரிப்புப் பிரிவுக்குள் வட்டக் குளம் என்ற பெயரில் ஒரு குளமும் உள்ளன. இவற்றின் அமைவிடங்கள் ஏறத்தாழப் பொருந்திவருவதால், இவை ஒன்றாக இருக்க வாய்ப்பு உள்ளது.
நிலப்படத்தில் மாதகல், பண்டத்தரிப்பு, சில்லாலை ஆகிய துணைப்பிரிவுகள் சந்திக்கும் இடத்தில் பண்வல்லைக் குளம் (Panwalle Coelam) என்ற பெயரில் ஒரு குளம் உள்ளது. தற்காலத்தில் இந்தப் பகுதியில் உள்ள பாணாகவெட்டிக் குளம் (அல்லது பாணாவெட்டிக் குளம்) என்ற பெயரிலுள்ள குளமே இதுவாகும். பாணாக வெட்டி என்பது இவ்விடத்தின் குறிச்சிப் பெயர். இப்பெயரை நிலப்படத்தில் பண்வல்லை என்று பிழையாக எழுதினரா, அல்லது பிற்காலத்தில் பழைய பெயர் மருவிப் பாணாவெட்டி/ பாணாகவெட்டி ஆனதா என்பது தெரியவில்லை.
இக்குளத்துக்கு அருகில் இருந்த கண்ணகியம்மன் கோவில், சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு எடுத்த விழாவில் கலந்துகொண்டவனும், கண்ணகி வழிபாட்டை இலங்கையில் அறிமுகப்படுத்தியதாகக் கருதப்படுபவனுமான கயவாகு மன்னனால் அமைக்கப்பட்டது என்ற ஐதீகம் உண்டு. இம்மன்னன் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் அனுராதபுரத்திலிருந்து அரசாண்டவன். கண்ணகி விழாவுக்குச் செல்லும்போது அக்காலத்தில் முக்கிய துறைகளுள் ஒன்றாக விளங்கிய சம்புத்துறையூடாகவே சென்றதாகவும், வரும் வழியில் துறைக்கு அண்மையிலிருந்த இக்குளக்கரையில் கண்ணகிக்குக் கோயில் அமைத்ததாகவும் இக்கோவிலின் தலவரலாறு கூறுகிறது.12 இது, பல நூற்றாண்டுகளாக வழக்கில் இருந்துவரும் ஐதீகமா அல்லது இப்பகுதியோடு தொடர்புடைய வரலாற்றுத் தகவல்களை, இக்கோவில்மீதும் ஏற்றிப் பிற்காலத்தில் கட்டப்பட்ட கதையா என்பது தெரியவில்லை.
போர்த்துக்கேயர் காலத்தில் அங்கிருந்த பழமையான கண்ணகி சிலை பாணாவெட்டிக் குளத்துக்குள் வீசப்பட்டதாகவும், அது பிற்காலத்தில் குளத்திலிருந்து மீட்கப்பட்டதாகவும் சொல்வர்.13 யாழ்ப்பாணத்தின் பழமையான பல நாட்டார் தெய்வக் கோவில்கள் ஆகமக் கோவில்களாக மாறியதைப் போலவே இந்தக் கண்ணகி அம்மன் கோவிலும் அண்மைக் காலத்தில் ஶ்ரீபுவனேஸ்வரி அம்மன் கோவிலாக மாற்றம் பெற்றுவிட்டது.
குறிப்புகள்
- Phillipus Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, trans. Pieter Brohier, The Ceylon Historical Journal, vol. VIII nos. 1-4 (July 1958-April 1959), 322.
- Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, 309.
- Memoir of Hendrick Zwaardecroon, Commandeur of Jaffnapatam 1697, trans. Sophia Pieters (Colombo: Ceylon Government Printer, 1911), 57, 111.
- Johann Wolffgang Heydt, Heydt’s Ceylon, Being the Relevant Sections of the Allerneuester Geographisch- und Topographischer Schau-Plats,trans. Reven-Hart (Ceylon Government Information Department, 1952), 83.
- Miron Winslow, Memoirs of Mrs. Harriet L. Winslow (New York: American Tract Society, 1840), 192.
- The Mahavansa Part I, Trans. George Turnour (New Delhi: Asian Educational Services, 1996), 75.
- இத்தகவல்கள் கலாநிதி பொ. இரகுபதியுடனான தனிப்பட்ட கலந்துரையாடல் ஊடாகப் பெறப்பட்டவை.
- Lankapura, Dambakola Patuna, https://lk.lakpura.com/pages/dambakola-patuna
- இத்தகவல்கள் கலாநிதி பொ. இரகுபதியுடனான தனிப்பட்ட கலந்துரையாடல் ஊடாகப் பெறப்பட்டவை.
- சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி
- விவசாய அபிவிருத்தித் திணைக்களப் பதிவுகளின்படி
- “பாணாகவெட்டி அம்மன் தலவரலாறு”, மாதகல் – பாணாகவெட்டி ஶ்ரீ புவனேஸ்வரி அம்மன் கும்பாபிஷேக சிறப்பு மலர், ஆலய பரிபாலன சபையினர், 2011, 9.
- “பாணாகவெட்டி அம்மன் தலவரலாறு”, 10.