கோப்பாய்க் கோவிற்பற்றுத் தொடர்பாக நிலப்படத்திலிருந்து அறியக்கூடிய தகவல்களைப் பற்றிச் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் உடுவில் கோவிற்பற்றுத் தொடர்பான விடயங்களை ஆராயலாம். இக்கோவிற்பற்றில் தாவடி, இணுவில், உடுவில், சங்குவேலி, சுன்னாகம் ஆகிய ஐந்து துணைப் பிரிவுகள் உள்ளன. (படம்-1) ஒல்லாந்தர்கால உடுவிற் கோவிற்பற்று முழுவதும் இன்றைய வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் பகுதியாக அமைந்துள்ளது.
எல்லைகள்
உடுவில் நிலத்தால் சூழப்பட்ட ஒரு கோவிற்பற்று. இதற்குக் கடலேரி அல்லது கடல் எல்லை கிடையாது. இதன் தெற்கெல்லையில் நல்லூர்க் கோவிற்பற்றும்; கிழக்கு எல்லையில் நல்லூர், கோப்பாய் ஆகிய கோவிற்பற்றுகளும்; வடக்கில் மல்லாகம் கோவிற்பற்றும்; மேற்கில் மானிப்பாய்க் கோவிற்பற்றும் காணப்படுகின்றன. உடுவிற் கோவிற்பற்றின் தெற்கு அந்தலையில் தாவடித் துணைப் பிரிவும்; வடக்கு எல்லையோரம் சுன்னாகமும் இவ்விரண்டுக்கும் இடையே மேற்கிலிருந்து கிழக்காக சங்குவேலி, உடுவில், இணுவில் ஆகிய துணைப் பிரிவுகளும் அமைந்துள்ளன. (படம்-2)
இக்கோவிற்பற்றுக்குள் அடங்கிய சில ஊர்கள் இன்றுள்ளதைவிட வேறுபட்ட எல்லைகளைக் கொண்டிருந்தன என்ற கருத்துகள் நிலவுகின்றன. குறிப்பாக, ஒருகாலத்தில் இணுவில் இன்றிருப்பதைவிடப் பரந்து இருந்தது என்ற கருத்து உண்டு.1 இதற்குத் தெளிவான சான்றுகள் இல்லை. எவ்வாறெனினும், ஒல்லாந்தர் காலத்திலேயே பெருமளவுக்கு இன்றைய எல்லைகள் நிலைபெற்றுவிட்டதை நிலப்படம் தெளிவாகக் காட்டுகிறது. கோயிற்பற்றின் துணைப் பிரிவுகளுக்கு இடையிலான எல்லைகளுடன் பெருமளவுக்கு ஒத்துப்போகும் வகையிலேயே இன்றைய கிராம அலுவலர் பிரிவுகளின் எல்லைகள் அமைந்துள்ளதையும் அவதானிக்க முடிகிறது. எனினும், நிலப்படத்தில் மருதனார்மடப் பகுதியில் இணுவிலுக்கும் உடுவிலுக்கும் இடையிலான எல்லைக் கோட்டை வீதிக்குக் கிழக்குப் பக்கமாகக் குறித்து, வீதி முழுமையாக உடுவில் துணைப்பிரிவுக்கூடாகச் செல்வதாகக் காட்டப்பட்டுள்ளது. ஆனால், தற்போதைய எல்லை வீதியுடன் பொருந்தும் வகையில் அமைந்துள்ளது. அண்மைக் காலத்தில் வசதிக்காக இந்த எல்லையைச் சற்று மாற்றியதாகக் கொள்ளலாம்.
வீதிகள்
இன்றைய யாழ்ப்பாணம் – காங்கேசந்துறை வீதித் தடத்தில் இருந்ததும் யாழ்ப்பாணத்திலிருந்து தெல்லிப்பழைவரை சென்றதுமான அக்காலத்து வீதி உடுவிற் கோவிற்பற்றை தெற்கு – வடக்காக ஊடறுத்துச் செல்கிறது. இது தாவடித் துணைப் பிரிவின் சிறு பகுதியை மட்டும் வெட்டிச் செல்வதுடன், இணுவில், உடுவில், சுன்னாகம் ஆகிய துணைப்பிரிவுகளூடாகவும் சென்று வடக்கு நோக்கித் தொடர்கிறது. நிலப்படம் காட்டும் இவ்வீதியின் தடம், தற்கால வீதியுடன் பெருமளவுக்குப் பொருந்துவதைக் காணமுடிகிறது. இவ்வீதி குடியேற்றவாதக் காலத்துக்கு முன்னரே இருந்திருக்கக்கூடும் என்பதுபற்றி இத்தொடரின் முன்னைய கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தோம்.
மேற்குறிப்பிட்ட தெல்லிப்பழை வீதியின் இரண்டு பக்கங்களிலும் இருக்கக்கூடிய முக்கியமான இடங்கள் காலத்துக்குக் காலம் குறுக்கு வீதிகளால் இவ்வீதியுடன் இணைக்கப்பட்டன. இந்த வகையில் அமைந்து, இவ்வீதியின் ஒரு புள்ளியிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் இன்னொரு வீதியும் நிலப்படத்தில் உள்ளது. இது உடுவில், சங்குவேலி ஆகிய துணைப் பிரிவுகளூடாகச் செல்கிறது. மானிப்பாயிலும் உடுவிலிலும் இருந்த தேவாலயங்களைத் தெல்லிப்பழை வீதியுடன் இணைப்பதற்காக இவ்வீதியைப் போர்த்துக்கேயர் காலத்தில் அல்லது ஒல்லாந்தர் கால முற்பகுதியில் அமைத்திருக்கக்கூடும் அல்லது மேம்படுத்தியிருக்கக்கூடும். இவ்வீதி தெல்லிப்பழை வீதியில் தொடங்கும் இடம் இன்றைய மருதனார்மடம் சந்தி என்பதையும் அவ்வீதி இன்றைய மானிப்பாய் – கைதடி வீதியின் ஒரு பகுதி என்பதையும் எளிதில் அடையாளம் காணலாம். மருதனார்மடம் சந்தியிலிருந்து உரும்பிராய், கோப்பாய் ஊடாகக் கைதடி வரை செல்லும் பகுதி பிற்காலத்தது என்பதைச் சென்ற கட்டுரையில் எடுத்துக்காட்டினோம். இதனால், மருதனார்மடம் சந்தியை ஒரு முச்சந்தியாகவே நிலப்படம் காட்டுகிறது.
தெல்லிப்பழை வீதி நீண்டகாலமாக யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஒரு முதன்மையான அச்சாக இருந்துவருவதால் இது ஊடறுத்துச்செல்லும் பகுதிகள் பண்பாட்டிலும் பொருளாதாரத்திலும் சிறப்பாக வளர்வதற்கான உள்ளாற்றலைக் (Potential) கொண்டிருந்தன. இடஞ்சார்ந்து குடாநாட்டின் மத்தியில் அமைந்துள்ளதும் நல்ல மண்வளம், நிலத்தடி நீர் வளம் ஆகியவற்றைக் கொண்டதுமான உடுவிற் கோவிற்பற்றும் இந்தவகையில் முக்கியத்துவம் பெற்ற ஒரு பகுதி.
அமெரிக்க மிசனைச் சேர்ந்தவர்கள் 1820 இல் உடுவிலுக்கு வந்த காலத்தில் உடுவில் ஏற்கெனவே மக்கட் செறிவுமிக்க ஊராக இருந்தது பற்றியும் அப்பகுதி முழுவதும் பயிர்ச் செய்கைக்கு உட்பட்ட நிலங்களாக இருந்தது குறித்தும் குறிப்புகள் உள்ளன.2 அமெரிக்க மிசன் செயற்பாட்டாளர்கள் உடுவிலுக்கு வந்தபோது ஒல்லாந்தர் ஆட்சி முடிவுற்று 25 ஆண்டுகள் கழிந்துவிட்டன. மேலே குறிப்பிட்ட வேளாண்மை, மக்கள்தொகை என்பன சார்ந்த வளர்ச்சிகள் இந்த 25 ஆண்டுகளுக்குள் மட்டும் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இல்லை. இப்பகுதியின் உள்ளாற்றல் காரணமாக நீண்ட காலமாகவே இந்த வளர்ச்சிகள் ஏற்பட்டிருக்கவேண்டும். ஒல்லாந்தர் காலத்திலும் இப்பகுதியில் வேளாண்மை நல்ல நிலையில் இருந்திருக்கும் என்பதிலும் இப்பகுதியிலிருந்த ஊர்கள் மக்கட் செறிவு கொண்டவையாக இருந்திருக்கும் என்பதிலும் ஐயமில்லை. ஆனாலும், நிலப்படம் வரையப்பட்ட காலத்தில், கிறித்தவ தேவாலயத்தைத் தவிர்ந்த பண்பாடு, பொருளாதாரம் என்பன சார்ந்த வேறு நிறுவன வளர்ச்சிகள் ஏற்பட்டிருந்தது குறித்து நிலப்படத்தில் தகவல்கள் இல்லை.
ஆனாலும், நிலப்படத்திலிருந்து அறியக்கூடியதாக இருக்கின்ற அதன் அமைவிடம், அக்கால வீதி வலையமைப்பில் அதன் இடம் என்பவை அப்பகுதியின் பிற்கால வளர்ச்சிக்கான உள்ளாற்றலைத் தெளிவாகவே காட்டுகின்றன. குறிப்பாக, யாழ்ப்பாண நகரத்துடனும் வலிகாமப் பிரிவிலுள்ள மக்கட் செறிவு கொண்ட பிற பகுதிகளுடனும் இக்கோவிற்பற்று கொண்டுள்ள இலகுவான போக்குவரத்துத் தொடர்பு முக்கியமானது. 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் இப்பகுதியில் உடுவில் மகளிர் கல்லூரி, இராமநாதன் மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளும்; மக்லியொட் மருத்துவமனையும்; சுன்னாகம், மருதனார்மடம் சந்தைகளும் காணப்பட்டமையும், பிற்காலத்தில் சுன்னாகம் யாழ்ப்பாணக் குடாநாட்டின் முக்கிய நகரங்களுள் ஒன்றாக வளர்ச்சியடைந்ததும் மேற்படி உள்ளாற்றலின் வெளிப்பாடுகளே. மருதனார்மடம் என்ற இடப்பெயருக்குக் காரணமான ஒரு மடமும் இப்பகுதியில் இருந்துள்ளது.3 இதுவும் ஒல்லாந்தர் காலத்துக்குப் பிற்பட்டதாகவே தோன்றுகிறது.
முக்கியமான கட்டடங்கள்
உடுவிற் கோவிற்பற்றுக்குள் இருந்திருக்கக்கூடிய கட்டடங்களுள் கோவிற்பற்றுத் தேவாலயத்தையும் அதோடு இணைந்த குருமனையையும் மட்டுமே நிலப்படம் காட்டுகிறது. போல்தேயசின் நூலில் இத்தேவாலயத்தையும் குருமனையையும் பற்றிய குறிப்புகள் உள்ளன. மேற்படி குறிப்புகளின்படி இவ்விரு கட்டடங்களும் மனதுக்கு இதமான காட்சிகளைப் பெறக்கூடிய வகையில் பெரிய வெளியில் அமைந்திருந்தன. குருமனை விறாந்தையுடன் கூடிய, செங்கற்களால் கட்டப்பட்ட பெரிய கட்டடம். இந்த இல்லத்தில் போர்த்துக்கேயர் காலத்தில் பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த பாதிரியார் வசித்ததாக போல்தேயஸ் பாதிரியார் தகவல் தந்துள்ளார்.4 எனவே, இந்தக் கட்டடங்கள் போர்த்துக்கேயரின் கத்தோலிக்கத் தேவாலயத்துக்கு உரியனவாக இருந்து ஒல்லாந்தர் காலத்தில் புரட்டஸ்தாந்த தேவாலயத் தேவைகளுக்கு ஏற்ப மாற்றம் பெற்றவை என்பது தெளிவு.
பிரித்தானியர் காலத்தில் உடுவிலில் இருந்த ஒல்லாந்தருடைய தேவாலயத்தையே அமெரிக்க மிசனைச் சேர்ந்தவர்கள் பொறுப்பேற்றுத் திருத்திப் பயன்படுத்தினர் என்பதால், இன்று உடுவில் மகளிர் கல்லூரிக்கு அருகில் உள்ள அமெரிக்க மிசன் தேவாலயத்தின் அமைவிடத்திலேயே நிலப்படத்திலும் ஒல்லாந்தருடைய தேவாலயத்தைக் குறித்துக் காட்டியுள்ளனர் என்பதில் ஐயமில்லை. தற்காலத்தில் இருப்பதைப் போலவே மருதனார்மடத்திலிருந்து மானிப்பாய் செல்லும் வீதியோரமாகவே நிலப்படமும் தேவாலயத்தைக் குறித்துக் காட்டுகிறது.
உடுவிலிலிருந்த தேவாலயமும் குருமனையும் அமெரிக்க மிசனிடம் அழிந்த நிலையில் கையளிக்கப்பட்டபோது அக்கட்டடத்தைக் குறித்துத் திருமதி ஹரியட் வின்ஸ்லோ எழுதியுள்ளார். இவரது குறிப்புகளிலிருந்து, குருமனையின் சுவர்கள் கல்லால் கட்டிச் சாந்து பூசப்பட்டு வெள்ளையடிக்கப்பட்டு இருந்ததாகவும், கூரை மர வளைகளின்மீது பனையோலையால் வேயப்பட்டிருந்ததாகவும் தெரிகிறது. மேலும், நீளமான அமைப்பைக் கொண்டிருந்த அவ்வீட்டின் முன்பக்கத்தில் விறாந்தை இருந்துள்ளது. முன்பகுதியில் நான்கு அறைகளும் பின்பக்கம் நான்கு ஒடுக்கமான அறைகளும் இருந்ததாகத் தெரிகிறது.5 இது ஒல்லாந்தர்காலக் குருமனையின் அமைப்பு என்பதில் சந்தேகம் இல்லை.
போல்தேயஸ் பாதிரியாருடைய விவரிப்புகளில் தேவாலயக் கட்டடம் நிரந்தரமான கட்டடப்பொருட்களால் கட்டப்பட்டது என்ற தகவல் இல்லாவிட்டாலும், குருமனை நிரந்தரமான கட்டடம் என்பதால் இதுவும் அவ்வாறே இருந்திருக்கக்கூடும். நூலில் உள்ள படமும் இதை ஒரு நிரந்தரக் கட்டடம் போலவே காட்டுகிறது. (படம்-3)
குளங்கள்
நிலப்படத்தின்படி உடுவிற் கோவிற்பற்று எல்லைக்குள் 13 குளங்கள் உள்ளன. இவற்றுள் பொதுப் பெயர்களால் குறித்துள்ள மூன்றைத் தவிர ஏனையவற்றுக்குச் சிறப்புப் பெயர்கள் தந்துள்ளனர். தற்காலப் பதிவுகளின்படி இப்பகுதியில் அமைந்துள்ள குளங்களின் எண்ணிக்கை 12. துணைப்பிரிவு வாரியாக நிலப்படம் காட்டும் குளங்களை ஆராயும்போது, இணுவிலில் ஒரு குளமும் உடுவிலில் ஐந்து குளங்களும் சங்குவேலியில் நான்கு குளங்களும் சுன்னாகத்தில் மூன்று குளங்களும் காணப்படுகின்றன. தாவடியில் குளங்கள் எதுவும் இல்லை.6 நிலப்படத்தில் குறித்துள்ளபடி, இணுவிலில் இணுவிற் குளமும்; உடுவிலில் நுணாரெயேல், கேணி, Tanck, பிலியன் கழி (அல்லது புளியடிக்குளம்), உடுவில் குளம் என்பனவும்; சங்குவேலியில் வெட்டுக் குளம், வேரக்கைக் குளம், பரவைக் குளம், வேவில் குளம் என்பனவும்; சுன்னாகத்தில் வண்ணான் குணம், சின்னக் குளம், துரவு என்பனவும் உள்ளன. இவற்றைவிடத் தற்காலக் குளங்களின் பட்டியலில் கேளங்காமம் குளம் என்னும் பெயருள்ள ஒரு குளம் உடுவில் பிரிவுக்குள் பதியப்பட்டிருந்தாலும், நிலப்படம் இதை சங்குவேலிக்கும் மானிப்பாய்க்கும் இடையிலான எல்லையில் மானிப்பாய்க் கோவிற்பற்றுக்குள் அடங்கியதாகவே காட்டுகிறது. உடுவில் கோவிற்பற்றுக்குள் தேவாலயத்துக்கு அருகில் ஒரு கேணி இருப்பதை நிலப்படம் காட்டுகிறது. தேவாலயத்தை அமைத்தபோது அதன் தேவைக்காக இதை வெட்டினரா அல்லது ஏற்கெனவே இருந்த கேணிக்கருகில் தேவாலயத்தை அமைத்தனரா என்பது தெரியவில்லை. தற்காலத்தில் இப்பகுதியில் கேணி இல்லை. பிரித்தானியர் காலத்தில் உடுவில் மகளிர் கல்லூரியை அமைத்தபோது அல்லது அதற்குப் பின்னர் இக்கேணியை மூடியிருக்கக்கூடும்.
தற்காலப் பதிவுகளின்படி, தாவடியில் மட்டுமன்றி இணுவிலிலும் குளங்கள் இல்லை. இணுவிலில் கந்தசாமி கோவிலுக்கு எதிரில் முன்னர் இரண்டு குளங்கள் இருந்ததாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இவை இன்று காங்கேசந்துறை வீதியிலிருந்து இணுவில் கந்தசாமி கோவிலுக்குச் செல்லும் வீதியின் இரண்டு பக்கங்களிலும் இருந்தது என்கின்றனர். இணையாக இருந்த இக்குளங்களினாலேயே இவ்வூர் இணைவில் (வில்=குளம்) என்ற பெயர் பெற்று இணுவில் ஆனது என்ற விளக்கமும் உண்டு. காலப்போக்கில் தூர்ந்துபோன இக்குளங்கள் இன்று வேறு தேவைகளுக்குப் பயன்படுகின்றன. முன்குறிப்பிட்ட வீதிக்குத் தெற்கிலிருந்த பெரிய குளத்துக்குக் காக்கைக் குளம் என்றும், வடக்கிலிருந்த குளத்துக்கு முதலிக் குளம் எனவும் பெயர்கள் வழங்கியதாகத் தெரிகிறது.7 காக்கைக் குளம் இருந்த இடத்தில் அண்மைக் காலத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ இந்த இடத்திலேயே இணுவில் குளம் என்ற பெயரில் ஒரு குளம் மட்டும் இருந்ததாக நிலப்படம் காட்டுகிறது. பிற்காலத்தில் இப்பகுதியில் வீதியை அமைத்தபோது இது இரண்டு குளங்களாக உருவாகியிருக்கக்கூடும்.
உடுவில் துணைப்பிரிவில் தற்காலத்திலும் ஐந்து குளங்களே காணப்பட்டாலும் பழைய பெயர்கள் எவையும் நிலைக்கவில்லை. எனினும், உடுவில் குளம் என அறியப்பட்ட குளம் இன்று பெரிய குளம் என அறியப்படுவதைத் தெளிவாக அடையாளம் காண முடிகிறது. சங்குவேலியிலும் எண்ணிக்கையில் மாற்றமின்றி இன்றும் நான்கு குளங்களே காணப்படுகின்றன. இவற்றுள் பரவைக் குளம், வேவில் குளம் ஆகிய பெயர்கள் இன்றுவரை வழக்கில் உள்ளன. சுன்னாகம் பிரிவில், முன்னிலும் ஒன்று குறைவாக இன்று இரண்டு குளங்கள் மட்டுமே உள்ளன. இவற்றுள் வண்ணான் குளம் என்ற பெயர் இன்றும் வழக்கில் உள்ளது. அதேவேளை, நிலப்படத்தில் சின்னக் குளம் என்ற பெயரில் குறிக்கப்பட்டுள்ள குளமே இன்று ஐயனார் கோவில் குளம் என்று பெயர் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
குறிப்புகள்
- நவரத்தினம் பரமேஸ்வரன், “பெரிய கோவில் எனப்படும் இணுவில் கந்தசுவாமி கோவில்,“ சீர் இணுவைத் திருவூர், பதிப்பாசிரியர் மூ. சிவலிங்கம் (சைவத் திருநெறிக் கழகம், 2004), 40.
- Miron Winslow, Memoirs of Mrs. Harriet L. Winslow (New York: American Tract Society, 1840), 203.
- தகவல்: கலாநிதி ஆறு. திருமுருகன்
- Phillipus Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, trans. Pieter Brohier, The Ceylon Historical Journal, vol. VIII nos. 1-4 (July 1958-April 1959), 322.
- Winslow, Memoirs of Mrs. Harriet L. Winslow, 203-204.
- தகவல்: விவசாய அபிவிருத்தித் திணைக்களம்
- பரமேஸ்வரன், “இணுவில் கந்தசுவாமி கோவில்,” 40.