லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் - கோப்பாய்
Arts
11 நிமிட வாசிப்பு

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் – கோப்பாய்

November 2, 2024 | Ezhuna

இலங்கையில், குடியேற்றவாத காலத்திலிருந்துதான் நிலப்படங்களும் வரைபடங்களும் நமக்குக் கிடைக்கின்றன. குறிப்பாக ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்தவை இலகுவாகக் கிடைக்கின்றன. எழுத்துமூல ஆவணங்கள், புழங்கு பொருட்கள், ஓவியங்கள், தொல்லியற் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றையும் இவற்றைப்போன்ற இன்னோரன்ன பழைய நிலப்படங்கள், வரைபடங்கள் வரலாற்றுத் தகவல்கள் என்பனவும் இங்கு பொதிந்துள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த நிலப்படங்களும் வரைபடங்களும் இவற்றுள் அடங்கும். எனினும், யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு இவற்றைப் பயன்படுத்துவது குறைவாகவே உள்ளது. வரலாற்றுத் தகவல்களை வழங்குவதில் குடியேற்றவாதக் கால நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாகவும், யாழ்ப்பாணத்தின் வரலாற்றுத் தகவல்களை நிலப்படங்கள் வரைபடங்களிலிருந்து விளக்குவதாகவும், நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் தகவல் உள்ளடக்கங்கள் குறித்து ஆராய்வதாகவும் ‘யாழ்ப்பாணப் பிரதேசத்தின் குடியேற்றவாதக் காலத்து வரலாற்றுத் தகவல் மூலங்களாக நிலப்படங்களும் வரைபடங்களும்’ என்ற இத்தொடர் அமையவுள்ளது.

சென்ற கட்டுரையில் நல்லூர்க் கோவிற்பற்றுத் தொடர்பாக நிலப்படம் தரும் தகவல்களைப் பார்த்தோம். இனி வலிகாமப் பிரிவின் இன்னொரு கோவிற்பற்றான கோப்பாயைப் பற்றி ஆராயலாம். இக் கோவிற்பற்றில் கோப்பாய், இருபாலை, உரும்பிராய், ஊரெழு, நீர்வேலி ஆகிய ஐந்து துணைப் பிரிவுகள் உள்ளதாக நிலப்படத்திலுள்ள விளக்கக் குறிப்பில் தகவல் இருந்தாலும், நிலப்படம் இருபாலையைத் தனியான பிரிவாக எல்லை குறித்துக் காட்டவில்லை (படம்-1). கோப்பாய், இருபாலை ஆகிய இரண்டு துணைப் பிரிவுகளையும் கோப்பாய்த் துணைப் பிரிவுக்குள் அடக்கியிருப்பதாகவே தெரிகிறது.

எல்லைகள்

கோப்பாய்க் கோவிற்பற்றின் தெற்கு எல்லையில் நல்லூர், சுண்டிக்குழி ஆகிய கோவிற்பற்றுகளும்; கிழக்கு எல்லையாக உப்பாறுக் கடலேரியும்; வடக்கில் புத்தூர், மல்லாகம் ஆகிய கோவிற்பற்றுகளும்; மேற்கில் நல்லூர், உடுவில் என்பனவும் காணப்படுகின்றன. இக் கோவிற்பற்றின் தெற்கு, கிழக்கு எல்லைகளை அண்டிக் கோப்பாய்த் துணைப் பிரிவும்; வடக்கு எல்லையோரம் நீர்வேலியும்; வடமேற்கு மூலையில் ஊரெழுவும்; மேற்கு எல்லையில் உரும்பிராயும் உள்ளன. புத்தூர்க் கோவிற்பற்றின் தெற்கெல்லையில் உப்பாற்றுக் கரையோரம் அமைந்த ஒரு நிலப்பகுதியும் நீர்வேலித் துணைப் பிரிவுக்குள் அடங்கியிருப்பதைக் காண முடிகிறது. இது இன்றைய நீர்வேலி வடக்கின் ஒரு பகுதியாக உள்ளது (படம்-2). இன்றைய உள்ளூராட்சி நிர்வாக அமைப்பில் இந்தக் கோவிற்பற்றுக்குள் அடங்கிய இடங்கள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் பகுதிகளாக உள்ளன. 

முக்கியமான கட்டடங்கள்

கோப்பாய்க் கோவிற்பற்றுக்குள் நிலப்படம் காட்டும் கட்டடங்கள் கோவிற்பற்றுத் தேவாலயமும், தேவாலய இல்லமும், ஒரு மடமும் மட்டுமே. 

தேவாலயமும் தேவாலய இல்லமும்

தேவாலயமும் தேவாலய இல்லமும் கோப்பாய்ப் பிரிவில் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதிக்குக் கிழக்குப் பக்கத்தில் உள்னன (படம்-3). நிலப்படத்திலிருந்து இக்கட்டடங்களின் துல்லியமான அமைவிடத்தை அறிய முடியாது. ஆனாலும், இவை முன்னர் போர்த்துக்கேயர் அமைத்த கத்தோலிக்கத் தேவாலயத்தின் இடத்தில் அமைந்தவை என ஊகிக்கலாம். இந்த ஊகம் சரியானால், இந்த இடத்திலேயே தமிழ் மன்னர் ஆண்ட காலத்தில் நல்லூருக்கு வெளியே அமைந்த கோட்டை இருந்திருக்க வேண்டும். கேரோஸ் பாதிரியாரின் நூலில், நல்லூரிலிருந்து ஒன்றரை லீக் தொலைவில் ஒரு கோட்டை இருந்தது என்றும் அது வட்டமான கொத்தளத்தோடு கூடிய, சுடாத செங்கற்களினாலான கட்டடம் என்றும் தகவல் உள்ளது.1 இந்தக் கோட்டை இருந்த வளவுக்குள்ளேயே போர்த்துக்கேயர் குவாடலூப் அன்னை தேவாலயம் என்ற பெயரில் ஒரு கத்தோலிக்கத் தேவாலயத்தை அமைத்ததாகவும் கேரோஸ் பாதிரியார் தகவல் தந்துள்ளார்.2 இக்கோட்டை கோப்பாயில் இருந்தது என பி.ஈ. பீரிஸ் அடையாளம் கண்டிருந்தார்.3 1917 ஆம் ஆண்டளவில் இவ்விடயம் தொடர்பாக ஆய்வு செய்த சுவாமி ஞானப்பிரகாசர், பழைய கோட்டை, போர்த்துக்கேயர் காலத் தேவாலயம் என்பவற்றின் அமைவிடங்களை உறுதி செய்துள்ளார்.4 எனவே, நிலப்படத்திலுள்ள தேவாலயம் இருக்கும் இடம் குடியேற்றவாதத்துக்கு முற்பட்ட காலத்திலிருந்தே முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்பதில் ஐயமில்லை. 

ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்காகக் கோட்டையை முற்றுகை இட்டிருந்த காலத்தில் கோப்பாயிலிருந்த கத்தோலிக்கத் தேவாலயத்தை உள்ளூர் மக்கள்  சேதப்படுத்தியதற்குச் சான்றுகள் உள்ளன.5 இவ்வாறு சேதமடைந்த தேவாலயங்களைத் திருத்தும்படி கட்டளைத் தளபதிக்குக் கோவாவில் இருந்த மேலதிகாரி ஆணை பிறப்பித்திருந்தார்.6 இக் கட்டளைக்கு இணங்க சேதமான தேவாலயம் எப்போது திருத்தப்பட்டது அல்லது மீளக்கட்டப்பட்டது என்பது குறித்துத் தகவல் கிடைக்கவில்லை. ஆனாலும், 1719 இல் வரையப்பட்ட இந்த நிலப்படத்தில், ஏறத்தாழ சுவாமி ஞானப்பிரகாசர் அடையாளம் கண்ட இடத்திலேயே தேவாலயத்தைக் குறித்திருப்பதால் அக்காலத்தில் தேவாலயம் பழைய இடத்திலேயே இயங்கி வந்தது என எடுத்துக்கொள்ளலாம்.

ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தின் முதல் ஏழு ஆண்டுகள் (1658-1665) யாழ்ப்பாணத்தில் பணிபுரிந்த போல்தேயஸ் பாதிரியார் எழுதிய நூலில் கோப்பாயில் இருந்த ஒல்லாந்தத் தேவாலயம் பற்றிய குறிப்பு உள்ளது. அத்துடன், தேவாலயத்தையும் குருமனையையும் காட்டும் படம் ஒன்றும் நூலில் காணப்படுகின்றது.7 வண்ணார்பண்ணையிலும் நல்லூரிலும் இருந்த தேவாலயங்களைப் போலன்றிக் கோப்பாய்த் தேவாலயம் நிரந்தரமான கட்டடப் பொருட்களால் ஆனதாகவே படத்தில் தெரிகிறது. இந்நூலிலுள்ள தேவாலயங்களின் படங்கள், அத் தேவாலயங்களைப் பார்க்காத ஒருவரால், நூலாசிரியரின் விவரிப்புகளை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டவை என்பதால், அவை அக்காலத் தேவாலயங்களின் உண்மையான அமைப்பைக் காட்டுவதாகக் கொள்ளமுடியாது என்ற கருத்து உள்ளது. எனினும், கட்டடப் பொருட்கள் குறித்து இலகுவாக விளக்கியிருக்க முடியும் என்பதால் அவை தொடர்பாகப் பிழைகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புக் குறைவு. 

முன்னர் குறிப்பிட்டபடி இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இத்தேவாலயம் இருந்த இடத்தைப் பார்வையிட்ட சுவாமி ஞானப்பிரகாசரும், அங்கே பழைய தேவாலயத்தின் அத்திவாரங்களும் சுவர்களும் பிற்காலக் கட்டடங்களின் பகுதிகளாக இருந்தது பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.8 குறைந்தது நூறு ஆண்டுக்கு மேல் பழமையான இந்த எச்சங்களின் பகுதிகள் தொடர்ந்தும் பயன்படுத்தக்கூடிய நிலையில் இருந்ததால் அவை நீடித்திருக்கக்கூடிய கட்டடப் பொருட்களால் ஆனவை என்பதில் ஐயமில்லை. எவ்வாறெனினும், பழைய தேவாலயம் இருந்த இடம் பிரித்தானியர் காலத்தில் சேர்ச் மிசன் சபையின் பொறுப்பில் இருந்தபோதும், அவர்கள் 1849 இல் கோப்பாயில் புதிய தேவாலயத்தை அமைக்க எண்ணியபோது வேறிடத்திலேயே அதை அமைத்தனர். அக்காலத்தில் ஒல்லாந்தருடைய தேவாலயம் கைவிடப்பட்டு 50 ஆண்டுகளைக் கடந்துவிட்டதால் பழைய தேவாலயம் திருத்திப் பயன்படுத்தக்கூடிய நிலையில் இருக்கவில்லை என்பதாலேயே வேறிடத்தில் தேவாலயத்தைக் கட்டியிருக்கக்கூடும். 

தேவாலயத்துக்கு அருகில் ஒரு குளமும் அதற்குப் பக்கத்தில் ‘குருசடி’ என்ற பெயரும் காணப்படுகிறது. அது அக்குளத்தின் பெயரா அல்லது ஒரு குருசு (சிலுவை) இருந்ததால் அவ்விடம் அப்பெயரைப் பெற்றதா என்பது தெளிவில்லை. அது குளத்தின் பெயரோ, இடத்தின் பெயரோ எதுவானாலும் அவ்விடத்தில் ஒரு சிலுவை இருந்திருக்கும் எனக் கொள்வது தவறாகாது. இப்பகுதிக்கு நேர் எதிரே வீதிக்கு மேற்குப் பக்கத்தில் ஒரு பெரிய நிழல் மரம் இருப்பதை நிலப்படம் காட்டுகிறது. ஏதாவது பொதுச் செயற்பாட்டுக்கு இவ்விடத்தை அக்காலத்தில் பயன்படுத்தியிருக்கக்கூடும்.

மடம்

நீர்வேலிப் பிரிவுக்குள், பருத்தித்துறை வீதியோரமாக, அதற்கு மேற்குப் பக்கத்தில் ஒரு மடம் இருப்பதை நிலப்படத்தில் காணமுடிகிறது. இதற்குத் ‘தச்சன் மடம்’ எனப் பெயர் குறித்துள்ளனர். இம்மடத்துக்குச் சாதி குறித்துப் பெயரிட்டிருப்பதன் காரணம் தெரியவில்லை. குறித்த சமூகப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் கட்டியதால் இந்தப் பெயர் ஏற்பட்டதா, அல்லது அக் குழுவினரின் பயன்பாட்டில் இருந்ததால் அப்பெயர் ஏற்பட்டதா என்பது குறித்துத் தெளிவில்லை. இது அக்காலத்தில் யாழ்ப்பாணத்துக்கும் பருத்தித்துறைக்கும் இடையில் பயணம் செய்பவர்கள் ஓய்வெடுத்துச் செல்வதற்கான ஒரு வீதியோர மடமாக இருந்திருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது. 

வீதிகள்

நிலப்படத்தின்படி யாழ்ப்பாணத்தையும் பருத்தித்துறையையும் இணைக்கும் வீதி மட்டுமே கோப்பாய்க் கோவிற்பற்றை ஊடறுத்துச் செல்கிறது. அத்துடன், சென்ற கட்டுரையில் குறிப்பிட்டபடி, இன்றைய கோவில் வீதியின் வடக்கு நோக்கிய நீட்சியும் கோப்பாய் எல்லைக்குள் அமைந்த இருபாலைப் பகுதியில் பருத்தித்துறை வீதியுடன் இணைகிறது. இருபாலைத் துணைப்பிரிவை நிலப்படம் தனியாகக் காட்டாவிட்டாலும், கடைசியாகக் குறிப்பிட்ட வீதி அக்காலத்து இருபாலைப் பிரிவுக்குள் அடங்கியதாகவே தோன்றுகிறது. தற்காலத்தில் மேற்படி வீதி பருத்தித்துறை வீதியைக் குறுக்காக வெட்டும்படி பிற்காலத்தில் அமைக்கப்பட்ட கோண்டாவில் – இருபாலை வீதியில் முடிவடையுமாறு மாற்றம் செய்துள்ளனர். நிலப்படத்தில் இவ்வீதி பருத்தித்துறை வீதியைச் சந்திக்கும் விதம், அச் சந்திப்பின் அமைவிடம் ஆகியவற்றை நோக்கும்போது இவ்வீதி முன்னர் இச் சந்திப்பையும் தாண்டி பருத்தித்துறை வீதிக்குக் கிழக்குப் பக்கமாகச் சென்று மீண்டும் இன்றைய பருத்தித்துறை வீதித் தடத்துடன் இணைந்திருக்கும் எனத் தோன்றுகிறது (படம்-4). இந்தத் தடமே குடியேற்றவாதக் காலத்துக்கு முற்பட்ட பருத்தித்துறை வீதித் தடமாக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. முத்திரைச் சந்தைக்கும் இருபாலைச் சந்திக்கும் இடைப்பட்ட இன்றைய பருத்தித்துறை வீதி பழைய நல்லூர் நகரத்து வீதியொன்றை நீட்டிப் பெறப்பட்டதா என்பது ஆய்வுக்குரியது. பருத்தித்துறை வீதி இருபாலை, கோப்பாய், நீர்வேலி ஆகிய துணைப் பிரிவுகளூடாகச் செல்கிறது. உரும்பிராய், ஊரெழு ஆகிய துணைப் பிரிவுகளில் வீதிகள் எதையும் நிலப்படம் காட்டவில்லை. 

தற்காலத்தில் உரும்பிராயூடாகச் செல்லும் மானிப்பாய் – கைதடி வீதி இந்த நிலப்படம் வரைந்த காலத்தில் இருக்கவில்லை. இது பிரித்தானியர் காலத்தில் 1850 களின் இறுதியில் அல்லது 1860 களின் தொடக்கத்தில் அமைக்கப்பட்டது. 

உரும்பிராய், ஊரெழு ஆகிய இரண்டு பிரிவுகளினூடாகவும் செல்லும் தற்போதைய முக்கிய வீதிகளுள் ஒன்றான பலாலி வீதியும் 1870 களில் அமைக்கப்பட்டதே. பிரித்தானியர் காலத்தில், 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (1869-1896) அரசாங்க அதிபராக இருந்த சேர் வில்லியம் துவைனம், பலாலி வீதியின் முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிட்ட போது பருத்தித்துறை வீதிக்கும் காங்கேசந்துறை வீதிக்கும் இடைப்பட்ட, வலிகாம் கிழக்கு, வலிகாமம் தெற்கு ஆகிய பிரிவுகளின் பல பகுதிகள் வீதி வலையமைப்பில் முறையாக இணைக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.9 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே நிலைமை இதுவாயின், அதற்கு ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு முன், நிலப்படம் வரையப்பட்ட 1719 ஆம் ஆண்டில் இப்பகுதியில் நல்ல வீதிகள் இருந்திருக்கும் என்று கூறமுடியாது.

குளங்கள்

நிலப்படத்திலுள்ள கோப்பாய்க் கோவிற்பற்றுப் பிரிவுக்குள் தற்காலத்தில் 37 குளங்கள் உள்ளன.10 ஒல்லாந்தர் காலத்தில் இதற்குக் கூடுதலாகவே இருந்திருக்கும் எனலாம். ஆனால், நிலப்படம் 23 குளங்களை மட்டுமே காட்டுகிறது. கோப்பாய், இருபாலை ஆகிய துணைப்பிரிவுகளுக்குள் தற்காலத்தில் 26 குளங்கள் காணப்படுகின்றன. நிலப்படத்தில் 15 குளங்களையே குறித்துள்ளனர். நீர்வேலிப் பிரிவில் இப்போது 9 குளங்கள் இருக்கின்றன. நிலப்படத்திலும் அதே எண்ணிக்கையான குளங்களைக் காணமுடிகிறது. தற்காலப் பதிவுகளின்படி ஊரெழுப் பிரிவில் 2 குளங்கள் உள்ளபோதும் நிலப்படம் அப்பிரிவில் குளங்கள் எதையும் காட்டவில்லை. உரும்பிராய்ப் பிரிவில் அன்றும் இன்றும் குளங்கள் இல்லை. 

நிலப்படத்தில் குறித்துள்ளபடி இருபாலை, கோப்பாய்ப் பிரிவுகளுக்குள் கும்பக் குளம், தொண்டைமான் குளம், திருக் குளம், நீலன் குளம், செம்மணிக் குளம், வெட்டுக் கடவை, வடபுலத்தில் குளம், வேலன் கேணி (வேலங் கேணி?), நாவற் கேணி, சாட்டைக்கள்ளி, சம்புக் குளம், கோப்பாய்க் குளம், குருசடிக் குளம், வெட்டியார் துரவு ஆகிய குளங்களும் நீர்வேலிப் பிரிவுக்குள் வெட்டுக் குளம், குட்டடுவான் குளம், பண்டாரிக் குளம், நறுவில் தாழ், இந்தென், வெட்டுக்குளம், நல்லவன் குளம், தாண்டியார் குளம், அம்பலவில் குளம் ஆகிய குளங்களும் இருந்தன.

இக்கோவிற்பற்றுக்குள் குளங்களின் பரம்பலை நோக்கும்போது ஒல்லாந்தர்கால நிலப்படத்தில் ஒரு குளத்தைத் தவிர ஏனைய எல்லாக் குளங்களும் பருத்தித்துறை வீதிக்குக் கிழக்குப் பக்கத்திலேயே காணப்படுகின்றன. இப்போதும் 37 குளங்களுள் 32 குளங்கள் மேற்படி வீதிக்குக் கிழக்குப் பக்கத்திலேயே அமைந்துள்ளன. 

நிலப்படத்தில் இக் கோவிற்பற்றிலுள்ள ஒரு குளத்தைத் தவிர ஏனைய குளங்களுக்கு சிறப்புப் பெயர்கள் உள்ளன. ஆனாலும், அவற்றுள் செம்மணிக் குளம், வெட்டுக்குளம், வேலன் கேணி, சம்புக் குளம் ஆகிய குளங்கள் மட்டுமே பெயர் மாற்றமின்றி  இன்றுவரை நிலைத்துள்ளன. இவற்றைவிட, அக்காலத்தில் கும்பக் குளம், நறுவில் தாழ், அம்பலவில் குளம் என்று பெயர் குறித்துள்ள குளங்களை இன்று முறையே கும்பவயற் குளம், நறுவந்தாழ்வில் குளம், அம்பலத்தாலைக் குளம் என்ற ஓரளவு ஒற்றுமை காணத்தக்க பெயர்களுடன்கூடிய குளங்களுடன் அடையாளம் காணமுடியும். நிலப்படத்தில் பருத்தித்துறை வீதிக்கு மேற்கே உட்புறமாக இருக்கும் கோப்பாய்க் குளத்தைத் தற்காலத்தில் ஏறத்தாழ அதேயிடத்தில் காணப்படும் நாச்சிமார் குளத்துடன் அடையாளம் காணலாம்.

மேலே தரப்பட்டுள்ள பட்டியலில் தொண்டைமான் குளம் என்ற குளமொன்று உள்ளது. தற்காலக் குளங்களின் பட்டியலில் இப்பெயர் இல்லை. இப்போது இக்குளத்துக்கு வேறு பெயர் வழங்கக்கூடும். இது இருபாலைப் பிரிவில் நல்லூர் எல்லைக்கு அருகில் காணப்படுகிறது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் தொண்டைமானாறு என்ற இடப்பெயரையும் உரும்பராயில் அமைந்துள்ள கருணாகரப் பிள்ளையார் கோவிலின் பெயரையும் முதலாம் குலோத்துங்க சோழனின் தளபதியாக விளங்கிய கருணாகரத் தொண்டைமானுடன் தொடர்புபடுத்தும் ஐதீகங்கள் உள்ளன. இவை போன்ற ஐதீகங்களின் அடிப்படையில் மேற்படி குளத்துக்கும் தொண்டைமானின் பெயர் ஏற்பட்டிருக்கக்கூடும். யாழ்ப்பாணத்தில் தொண்டைமானின் பெயர்த் தொடர்புகளை ஆராய்வதில் இக்குளத்தின் பெயரும் மேலதிக தகவலாக அமையக்கூடும்.

குறிப்புகள்

  1. Fernao De Queyroz, The Temporal and Spiritual Conquest of Ceylon vol I, trans. S. G. Perera (New Delhi: Asian Educational Services, 1992), 363.
  2. Queyroz, The Temporal and Spiritual Conquest of Ceylon, 695.
  3. Paul E. Pieris, Ceylon the Portuguese Era, vol I (Dehiwala: Tisara Prakasakayo, 1983), 167.
  4. S. Gnanaprakasar, “Sankily’s Fortress at Kopay”, In Ceylon Antiquary and Literary Register II, part III (January 1917): 194-195.
  5. Instructions from the Governor-General and Council of India to the Governor of Ceylon 1656-1665, trans. Sophia Pieters (Colombo: Ceylon Government Printer, 1908), 93.
  6. Instructions from the Governor-General and Council of India to the Governor of Ceylon 1656-1665, 93.
  7. Phillipus Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, trans. Pieter Brohier, The Ceylon Historical Journal, vol. VIII nos. 1-4 (July 1958-April 1959), 327-328.
  8. S. Gnanaprakasar, “Sankily’s Fortress at Kopay”, In Ceylon Antiquary and Literary Register II, part III (January 1917): 194-195.
  9. Government Agent, Northern Province, “Revenue Administration Report of the Government Agent, Northern Province for 1873,” by W. C. Twynam, In Ceylon Administration Reports for the Year 1873 (Colombo: Government Printer, 1874), 180.
  10. கமநல அபிவிருத்தித் திணைக்களத்திலுள்ள பதிவுகளின்படி.

ஒலிவடிவில் கேட்க

2405 பார்வைகள்

About the Author

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் அவர்கள் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கச் சூழல் துறையில் விஞ்ஞான இளநிலைப் பட்டத்தையும் (B.Sc. (BE)) பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலையில் விஞ்ஞான முதுநிலைப் பட்டத்தையும் (M.SC. (Arch)) பெற்றார். அத்துடன் இலங்கைக் கட்டடக்கலைஞர் சங்கம் (AIA (SL)), பிரித்தானியக் கட்டடக் கலைஞர்களின் அரச சங்கம் (RIBA) ஆகியவற்றில் பட்டயம் பெற்ற உறுப்பினராவார்.

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய காலத்திலிருந்து அதன் முதற் பயனராகப் பங்களிப்புச் செய்து வருகின்றார். தமிழ் விக்கிப்பீடியாவில் 4500இற்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொடங்கியுள்ளதுடன், மேலும் பல ஆயிரம் கட்டுரைகளின் விரிவாக்கத்திலும் பங்களிப்புச் செய்துள்ளார்.

தமிழ் விக்கிப்பீடியாவில் இவரது பங்களிப்புக்காக கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2015 ஆம் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல்விருது பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஆனந்தவிகடன் இதழ் வழங்கும் நம்பிக்கை விருதுகளில் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த 10 மனிதர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விருதை பெற்றுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (15)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)