சென்ற கட்டுரையில் சுண்டிக்குழிக் கோவிற்பற்றுத் தொடர்பாக நிலப்படத்தில் உள்ள விவரங்களைப் பற்றிப் பார்த்தோம். இனிப் போர்த்துக்கேயருக்கு முன் தலைநகரமாக இருந்த நல்லூரை உள்ளடக்கிய நல்லூர்க் கோவிற்பற்றைப் பற்றி ஆராயலாம். இக் கோவிற்பற்றில் நல்லூர், தின்னவேலி (திருநெல்வேலி), கொக்குவில், கோண்டாவில் ஆகிய நான்கு துணைப் பிரிவுகள் உள்ளன.
லெயுசிக்காமின் நிலப்படத்திலுள்ள நல்லூர்க் கோவிற்பற்றின் எல்லைகளைப் பார்க்கும்போது அது முழுவதும் இன்றைய நல்லூர் பிரதேசச் செயலர் பிரிவுக்குள் அடங்கியிருப்பதைக் காணமுடிகிறது. உள்ளூராட்சிப் பிரிவுகளைப் பொறுத்தவரை கோவிற்பற்றின் நல்லூர் துணைப் பிரிவின் பெரும்பகுதி யாழ்ப்பாண மாநகர சபைக்குள் அடங்கியிருக்க ஏனைய மூன்று துணைப் பிரிவுகளும் நல்லூர் பிரதேச சபைக்குள் அடங்குகின்றன.
எல்லைகள்
நல்லூர்க் கோவிற்பற்றின் தெற்கு எல்லையில் வண்ணார்பண்ணை, சுண்டிக்குழி ஆகிய கோவிற்பற்றுகளும்; கிழக்கு எல்லையில் சுண்டிக்குழி, கோப்பாய் ஆகியனவும்; வடக்கில் கோப்பாயும்; மேற்கு எல்லையில் உடுவில், மானிப்பாய் ஆகியனவும் உள்ளன. இதற்கு நீரேரி அல்லது கடல் எல்லை கிடையாது. நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டது. கோவிற்பற்றின் தெற்கு எல்லையை அண்டி, மேற்கிலிருந்து கிழக்காகக் கொக்குவில், தின்னவேலி, நல்லூர் என்னும் ஒழுங்கில் அத் துணைப்பிரிவுகள் அமைந்துள்ளன. கோண்டாவில் பிரிவு, வடக்கு எல்லையோரமாக அமைந்துள்ளது. (படம்-1, 2)
குடியேற்றவாதக் காலத்துக்கு முன்னர் யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகராக இருந்தது நல்லூர். வரலாற்றில், நல்லூர்ப் பகுதி தொடர்பான ஓரளவு விவரங்களையாவது காட்டுகின்ற மிக முந்திய நிலப்படமாக இந்தக் கட்டுரையில் ஆய்வுக்கு எடுத்துள்ள வலிகாமப் பிரிவின் நிலப்படத்தைக் குறிப்பிடலாம். குடியேற்றவாதக் காலத்துக்கு முந்திய நல்லூரின் எல்லைகளுக்கும் இந்த நிலப்படம் காட்டும் நல்லூர்த் துணைப் பிரிவின் எல்லைகளுக்குமிடையே எத்தகைய தொடர்புகள் இருக்கக்கூடும் என்பது பற்றித் தெளிவாகக் கூறமுடியாது. அதேவேளை, பழைய நல்லூர் நகரம் போர்த்துக்கேயரால் கைப்பற்றப்பட்டபோது இருந்த எல்லைகள், நிலப்படம் காட்டும் நல்லூர்ப் பிரிவின் எல்லைகளோடு ஏறத்தாழப் பொருந்தி வரக்கூடிய வாய்ப்பையும் முற்றாக மறுக்க முடியாது. எனினும் நிலப்படம் தரும் தகவல்களிலிருந்து ஒரு காலத்தில் மதிலால் சூழப்பட்டிருந்ததாகக் கருதப்படும் பழைய நல்லூர் நகரத்தின் வடிவத்தைத் துல்லியமாகக் கூறமுடியாது. இது சதுர வடிவில் அமைந்திருக்கக்கூடும் என்ற கருத்து இருந்தாலும்,1 நிலப்படம் இதை உறுதிசெய்யவில்லை. (படம்-3) எனினும் நிலப்படம் வரைவதற்கு முந்திய நூறு ஆண்டுகளில் எல்லைகளில் பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டனவா என்பது பற்றி அறிய ஆழமான ஆய்வுகள் தேவை.
வீதிகள்
ஒல்லாந்தர் காலத்தில் யாழ்ப்பாண நகரத்தைக் குடாநாட்டின் ஏனைய பகுதிகளுடன் இணைத்த இரண்டு முக்கிய வீதிகள் நல்லூர்க் கோவிற்பற்றை ஊடறுத்துச் செல்கின்றன. நிலப்படத்தின்படி யாழ்ப்பாணத்தைத் தெல்லிப்பழையுடன் இணைத்த வீதி கொக்குவில், கோண்டாவில் ஆகிய பிரிவுகளூடாகச் செல்கிறது. இது ஏறத்தாழ இன்றைய காங்கேசந்துறை வீதியின் தடத்தில் அமைந்திருந்ததாக ஏற்கெனவே குறிப்பிட்டோம். நிலப்படத்திலுள்ள வீதியும் இன்றைய வீதியைப் போலவே கோண்டாவில் பிரிவின் மேற்கு எல்லைக்கு மிகவும் அண்மையாகச் செல்வதைக் காணமுடிகிறது. அடுத்தது, யாழ்ப்பாண நகரத்தைப் பருத்தித்துறையுடன் இணைக்கும் வீதி. இது நல்லூர்த் துணைப் பிரிவை ஊடறுத்துச் செல்கிறது. மேற்கு – கிழக்குத் திசையில் நல்லூருக்குள் நுழையும் இவ்வீதி நல்லூர்த் தோட்டம் என்று பெயர் குறிக்கப்பட்டுள்ள அரசாங்க வதிவிடத் தோட்டம் வரை செல்கிறது. இந்த இடம் இன்று முத்திரைச் சந்தை என அழைக்கப்படும் இடம் என எளிதில் அடையாளம் காணலாம். மேலே குறிப்பிட்ட வீதி இங்கிருந்து ஏறத்தாழ வடக்குத் திசை நோக்கித் திரும்பி நல்லூரின் வடக்கு எல்லையைக் கடக்கும்போது மீண்டும் கிழக்கு நோக்கித் திரும்புவதைக் காணமுடிகிறது.
இந்த வீதியின் மேற்கு – கிழக்குத் திசையில் செல்லும் வீதிப் பகுதியின் ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு வீதி தொடங்கி, வடக்கு நோக்கிச் சென்று தின்னவேலிப் பகுதிக்குள் மீண்டும் கிழக்கு நோக்கித் திரும்பி, கோப்பாய்க் கோவிற்பற்றுக்குள் நுழைகிறது. இன்று நல்லூர்க் கந்தசாமி கோவிலுக்கு மேற்கே பருத்தித்துறை வீதியை வெட்டிச் செல்லும் கோவில் வீதியின் வடக்குப் பகுதியே இது என்பதில் ஐயமில்லை. இந்த வீதியையும், முத்திரைச் சந்தைப் பகுதியிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் வீதியையும் குறுக்காக இணைக்கும் வகையில் ஒரு வீதியும் நிலப்படத்தில் உள்ளது. இது இன்று சட்டநாதர் கோவிலுக்கு அருகில் உள்ள சட்டநாதர் வீதியுடன் பொருந்துகிறது. இதுவும் ஒரு பழைய வீதி என்பதற்கு நிலப்படம் சான்றாக அமைகின்றது.
மேற்குப் பக்கத்திலிருந்து முத்திரைச் சந்தைவரை வரும் பருத்தித்துறை வீதிப் பகுதியின் நீட்சி போல ஒரு சிறிய வீதி, நல்லூர்த் தோட்டத்தின் தெற்கெல்லையை அண்டிச் செல்வதாகக் நிலப்படம் காட்டுகிறது. தற்காலத்தில் இந்த வீதி செம்மணி வரை செல்கிறது. நிலப்படம் இந்த வீதியை முழுமையாகக் காட்டவில்லை. இவ்வீதி அக்காலத்தில் இருக்கவில்லையா, அல்லது இருந்தும் நிலப்படம் அதைக் காட்டவில்லையா என்பது தெரியவில்லை. மேற்குறிப்பிட்ட செம்மணி வீதி, பழைய நல்லூர் நகரத்தில் தெற்கு வாயிலூடாகச் சென்றிருக்க வாய்ப்பு உள்ளதாலும், இந்த வீதியே நல்லூரை நாயன்மார்கட்டு, சிவியாதெரு முதலிய குடியிருப்புப் பகுதிகளுடன் இணைத்திருக்கும் என்பதாலும் இவ்வீதி ஒல்லாந்தர் காலத்திலும் இருந்திருக்கும் எனலாம்.
தற்காலத்தில் பிராமணக்கட்டுக் குளத்தின் வடக்குப் பக்கத்தில் உள்ள பருத்தித்துறை வீதி நிலப்படத்தில் தெற்குப் பக்கத்தில் உள்ளது. இது தவறாக வரையப்பட்டதா அல்லது ஒல்லாந்தர் காலத்தில் வீதி குளத்துக்குத் தெற்குப் பக்கமாகச் சென்றதா என்பது தெரியவில்லை. பெரும்பாலும் வரைபடத்தில் இது பிழையாக வரையப்பட்டிருக்கவே வாய்ப்பு அதிகம். இன்று பருத்தித்துறை வீதியிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் கோவில் வீதிப் பகுதி நிலப்படத்தில் இல்லை. பிரித்தானியர் காலத்தின் முதற் சில பத்தாண்டுகளில் நான்காம் குறுக்குத் தெருவுக்கு அப்பால் பிரதான வீதியின் இரண்டு பக்கங்களிலும் காணப்படும் வீதிகள் (இராசாவின் தோட்ட வீதி தவிர) இருக்கவில்லை என்று ஜோன் மார்ட்டினின் நூலில் குறிப்பொன்று உள்ளது.2 இதிலிருந்து கோவில் வீதியின் தெற்குப் பகுதி பிரித்தானியர் காலத்தில் அமைக்கப்பட்டது என்பது விளக்கமாகிறது.
முக்கியமான கட்டடங்கள்
குடியேற்றவாதக் காலத்துக்கு முந்திய யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமான நல்லூர், நிலப்படம் காட்டும் நல்லூர்த் துணைப் பிரிவுக்குள் அடங்கியிருந்தது. எடுத்துக்கொண்ட நிலப்படம் வரையப்பட்ட காலத்தில் நல்லூர் தலைநகரத் தகுதியை இழந்து ஏறத்தாழ நூறு ஆண்டுகளாகிவிட்டன. இக்காலப் பகுதியுள் அரச மாளிகைகள் உள்ளிட்ட யாழ்ப்பாண இராச்சியக் காலக் கட்டடங்கள் அனைத்தும் அழிந்துவிட்டதாகவே தெரிகிறது. அவ்வாறான கட்டடங்கள் இருந்திருந்தாற்கூட அவற்றை இந்நிலப்படத்தில் குறித்துக் காட்டவேண்டிய தேவை இருந்திருக்காது.
நல்லூர்த் தோட்டம்
இந்நிலப்படம் வரையப்பட்ட காலத்தில் இப்பகுதியில் ஒல்லாந்தரின் முக்கியமான கட்டடங்கள் சில இருந்தது பற்றி வேறு எழுத்து மூலப் பதிவுகளிலிருந்து அறியமுடிகிறது. ஆனால், ‘நல்லூர்த் தோட்டம்’ எனப் பெயரிட்ட, இரண்டு கட்டடங்களைக் கொண்ட ஒரு வளாகத்தை மட்டும் இங்கே குறித்துக் காட்டியுள்ளனர். இது, ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியின் உயர் அதிகாரிகள் பயன்படுத்துவதற்கான ஒரு வதிவிடத் தோட்டம் ஆகும். நிலப்படத்திலுள்ள குறியீட்டிலிருந்து இதற்குள் ஒரு மாளிகையும் பிற வசதிகளுக்கான கட்டடங்களும் இருந்ததாக அறிய முடிகிறது. இந்தத் தோட்டத்தின் சுற்றுமதிலுக்கு வெளியே அதன் மேற்கிலும் தெற்கிலும் மரங்களை நட்டு மனதுக்கு இதமான சூழலை உருவாக்கியிருந்ததை நிலப்படத்தில் காணமுடிகின்றது.
1658 இல் யாழ்ப்பாணத்தின் கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்ற அந்தனி பவிலியன் என்பவருக்கு ஒல்லாந்தரின் இந்தியப் பகுதிகளுக்கான ஆளுநர் நாயகம் ரைக்குளோஃப் வான் கூன்ஸ் (மூத்தவர்) (Ryclof van Goens – Sr.), உள்ளூர் அதிகாரி ஒருவருக்கு வழங்கப்பட்டிருந்த நிலமொன்றை மீளப் பெற்று இவ்வாறான தோட்டம் ஒன்றை அமைப்பதற்கு ஆணையிட்டிருந்தார்.3 இதன் விளைவாகவே நிலப்படம் காட்டும் தோட்டம் அமைக்கப்பட்டதாகக் கருத இடமுண்டு. 1767 ஆம் ஆண்டில் கொழும்பிலிருந்த ஒல்லாந்த ஆளுனர் இமான் வில்லெம் ஃபல்க் பத்து நாட்கள் தனது மனைவியுடன் இங்கே தங்கியிருந்தது குறித்த தகவல்களும் உள்ளன.4
இதைத் தவிர, யாழ்ப்பாணக் கட்டளையகத்தில் ஒல்லாந்தர் நிறுவிய செமினரி இப்பகுதியிலேயே இருந்தது.5 இதுவும் ஒரு பெரிய கட்டடத் தொகுதி. 1692 ஆம் ஆண்டில் தொடங்கிய இச்செமினரி 1722 ஆம் ஆண்டுவரை இயங்கியது. எனவே, நிலப்படம் வரையப்பட்ட காலத்தில் இந்நிறுவனம் இயங்கு நிலையில் இருந்தது என்பதில் ஐயமில்லை. எனினும், இதை நிலப்படம் காட்டவில்லை. நல்லூர்க் கோவிற்பற்றில் இருந்திருக்கக்கூடிய தேவாலயமும் நிலப்படத்தில் இல்லை. இதற்கான காரணம் தெரியவில்லை. இது பற்றி இத்தொடரின் முன்னைய கட்டுரையொன்றிலும் குறிப்பிட்டுள்ளோம்.
குளங்கள்
கமநல அபிவிருத்தித் திணைக்களத்திலும் யாழ்ப்பாண மாநகர சபையிலும் உள்ள தகவல்களின்படி தற்காலத்தில் இப்பகுதியில் மொத்தமாக ஏறத்தாழ 25 குளங்கள் இருப்பதாகத் தெரிகிறது. லெயுசிக்காமின் நிலப்படத்தின்படி நல்லூர்ப் பிரிவில் ஐந்து நீர்நிலைகளும், தின்னவேலியில் இரண்டும், கோண்டாவிலில் மூன்றுமாக மொத்தம் பத்துக் குளங்களே நல்லூர் கோவிற்பற்றுக்குள் காணப்படுகின்றன. கொக்குவிலில் நீர்நிலை எதுவும் குறிக்கப்படவில்லை. குறிப்பாக இன்று கொக்குவிலில் இருக்கும் பெரிய குளமான நந்தாவில் குளம் நிலப்படத்தில் இல்லை. ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் நிலப்படம் அக்காலத்திலிருந்த எல்லாக் குளங்களையும் காட்டவில்லை என்றே கொள்ளவேண்டும்.
நிலப்படத்தில் உள்ளவற்றில் ஆறு குளங்களைப் பொதுப் பெயர்களாலும் நான்கைச் சிறப்புப் பெயர்களாலும் குறித்துள்ளனர். நல்லூர்ப் பிரிவுக்குள் மூன்று குளங்கள் சிறப்புப் பெயர்களால் குறிக்கப்பட்டுள்ளன. பிராமணன் குளம், பண்டாரக் குளம், தாமரைக் குளம் ஆகிய இம்மூன்று குளங்களுள் முதல் இரண்டும் தற்காலத்திலும் அதே பெயர்களாலேயே அழைக்கப்படுகின்றன. தாமரைக் குளத்தின் அமைவிடத்தைக் கவனத்திற் கொண்டு பார்க்கும்போது இதைத் தற்போதைய நாயன்மார்கட்டுக் குளத்துடன் அடையாளம் காணமுடியும். நல்லூரில் உள்ள ஏனைய இரண்டு குளங்களை ‘Tanck’ (குளம்) என்னும் டச்சு மொழிப் பொதுப் பெயரால் குறித்துள்ளனர். இவற்றுள் தெற்கு எல்லையோரமாக அமைந்துள்ள குளத்தை இன்றைய மக்கிக் குளத்துடன் அடையாளம் காணலாம். கிழக்கு எல்லையோரம் அமைந்துள்ள மற்றக் குளம் பிற்காலத்தில் மூடப்பட்டுவிட்ட ஒரு குளமாக இருக்கக்கூடும்.
தின்னவேலிப் பிரிவுக்குள் அடங்கியதாக நிலப்படம் காட்டும் இரண்டு குளங்களுள் ஒன்று கால்வாய்க் குளம். மற்றது ‘Tanck’ (குளம்) என்னும் பொதுப் பெயருடன் கூடியது. கால்வாய்க் குளம் இன்றைய பூதராயர் குளமாக இருக்கக்கூடும். மற்றது தற்காலத்தில் பரவைக் குளம் என அழைக்கப்படும் குளம் எனக் கொள்ளலாம். கோண்டாவிலில் காணப்படும் மூன்று நீர்நிலைகளுக்கும் நிலப்படத்தில் ‘Tanck’, துரவு, கேணி எனப் பொதுப் பெயர்களையே கொடுத்துள்ளனர்.
தாமரைக் குளம்
மேலே குறிப்பிட்ட குளங்களுள், நாயன்மார்கட்டுக் குளம் என அடையாளம் காணப்பட்ட தாமரைக் குளம் ஏனைய குளங்களைவிட வித்தியாசமாகவும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்தும் காட்டப்பட்டுள்ளது. (படம்-4) இக்குளத்தைச் சுற்றிலும் மரங்கள் வரையப்பட்டுள்ளதுடன் குளத்தின் நான்கு பக்கங்களிலும் படிகள் போன்ற அமைப்புகளும் காணப்படுகின்றன. இவ்வம்சங்கள், அக்காலத்தில் மேற்படி குளத்துக்குச் சிறப்புப் பயன்பாடுகள் இருந்ததைக் காட்டுவதாகக் கொள்ளமுடியும். ஒல்லாந்தர்கால இறுதியில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஹாஃப்னர் என்பார் அக்காலத்தில் நல்லூர் ஒல்லாந்தக் குடும்பங்களின் சுற்றுலாத் தலமாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.6 பொழுதுபோக்கு நோக்கத்துக்காகவே இக்குளத்தையும் அதன் சுற்றாடலையும் ஒல்லாந்தர் பயன்படுத்தியிருக்கக்கூடும்.
மேற்படி குளமும் அதை அண்டிய பகுதிகளும் தமிழ் மன்னர் நல்லூரிலிருந்து ஆண்ட காலத்திலேயே முக்கியத்துவம் பெற்றிருந்ததாகக் கருதப்படுகிறது. இப்பகுதியில் பல்வேறு பண்பாட்டுச் செயற்பாடுகள் இடம்பெற்றன என்ற கருத்தும் உண்டு.
குறிப்புகள்
- வ. ந. கிரிதரன், நல்லூர் இராஜதானி நகர அமைப்பு, (சென்னை/டொராண்டோ: ஸ்நேகா/மங்கை பதிப்பகம், 1996), 68.
- John H. Martyn, Notes on Jaffna (New Delhi: Asian Educational Services, 2003), 156-157.
- Instructions from the Governor-General and Council of India to the Governor of Ceylon 1656-1665, trans. Sophia Pieters (Colombo: Ceylon Government Printer, 1908),
- R. Raven-Hart, Travels in Ceylon 1700 – 1800 (Colombo:The Associated News Papers of Ceylon Ltd., date not indicated), 60.
- இ. மயூரநாதன், யாழ்ப்பாண நகரின் வளர்ச்சி வரலாறு (பதிப்பில்)
- J. Haafner, “Travels on foot through the island of Ceylon,” (New Delhi: Asian Educational Services, 1995), 2-3.