லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் - சங்கானை
Arts
12 நிமிட வாசிப்பு

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் – சங்கானை

March 2, 2025 | Ezhuna

இலங்கையில், குடியேற்றவாத காலத்திலிருந்துதான் நிலப்படங்களும் வரைபடங்களும் நமக்குக் கிடைக்கின்றன. குறிப்பாக ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்தவை இலகுவாகக் கிடைக்கின்றன. எழுத்துமூல ஆவணங்கள், புழங்கு பொருட்கள், ஓவியங்கள், தொல்லியற் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றையும் இவற்றைப்போன்ற இன்னோரன்ன பழைய நிலப்படங்கள், வரைபடங்கள் வரலாற்றுத் தகவல்கள் என்பனவும் இங்கு பொதிந்துள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த நிலப்படங்களும் வரைபடங்களும் இவற்றுள் அடங்கும். எனினும், யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு இவற்றைப் பயன்படுத்துவது குறைவாகவே உள்ளது. வரலாற்றுத் தகவல்களை வழங்குவதில் குடியேற்றவாதக் கால நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாகவும், யாழ்ப்பாணத்தின் வரலாற்றுத் தகவல்களை நிலப்படங்கள் வரைபடங்களிலிருந்து விளக்குவதாகவும், நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் தகவல் உள்ளடக்கங்கள் குறித்து ஆராய்வதாகவும் ‘யாழ்ப்பாணப் பிரதேசத்தின் குடியேற்றவாதக் காலத்து வரலாற்றுத் தகவல் மூலங்களாக நிலப்படங்களும் வரைபடங்களும்’ என்ற இத்தொடர் அமையவுள்ளது.

சென்ற கட்டுரையில் வட்டுக்கோட்டைக் கோவிற்பற்றுத் தொடர்பாக லெயுசிக்காமின் வலிகாமப் பிரிவைக் காட்டும் நிலப்படம் தரும் தகவல்களையும், அவை சார்ந்த வரலாற்றுக் குறிப்புகளையும் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் சங்கானைக் கோவிற்பற்றுத் தொடர்பாக நிலப்படம் காட்டும் தகவல்களை ஆராயலாம். சங்கானைக் கோவிற்பற்றில் சங்கானை, சுழிபுரம், தொல்புரம், மூளாய் ஆகிய நான்கு துணைப் பிரிவுகள் அடங்குகின்றன. நிலப்படம் இந்நான்கு பிரிவுகளையும் எல்லை குறித்துக் காட்டுகிறது (படம்-1).

இக்கோவிற்பற்று, தற்காலத்தில் சங்கானைப் பிரதேச செயலாளர் பிரிவின் நிர்வாகத்துக்கு உட்பட்டதாகவும், உள்ளூராட்சி முறைமையில் இது வலிகாமம் மேற்குப் பிரதேச சபையின் ஒரு பகுதியாகவும் உள்ளது.

எல்லைகள்

நிலப்படத்தின்படி, சங்கானைக் கோவிற்பற்றின் எல்லைகளாக வடக்கில் பண்டத்தரிப்புக் கோவிற்பற்றும், கிழக்கில் மானிப்பாய்க் கோவிற்பற்றும், தெற்கில் வட்டுக்கோட்டைக் கோவிற்பற்றும், மேற்கில் யாழ்ப்பாணக் கடலேரியும் உள்ளன. இம்மேற்குக்கரை கடலேரிக்கு அடுத்த பக்கத்தில் உள்ள காரைநகர்த் தீவை நோக்கியபடி அமைந்துள்ளது. இந்த எல்லைகளுக்குள் கிழக்குப் பக்கத்தில் சங்கானைத் துணைப்பிரிவும், மேற்கே கடலேரிக் கரையோரமாக வடக்கிலிருந்து தெற்காக சுழிபுரம், தொல்புரம், மூளாய் ஆகிய பிரிவுகளும் வரிசையாக அமைந்துள்ளன.

வீதிகள்

நிலப்படத்தின்படி மூன்று வீதிகள் சங்கானைக் கோவிற்பற்றினூடாகச் செல்கின்றன. மானிப்பாயிலிருந்து பண்டத்தரிப்புக்குச் செல்லும் ஒரு வீதி சங்கானைப் பிரிவினூடாகச் செல்கிறது. சங்கானைக் கோவிற்பற்றுத் தேவாலயப் பகுதியிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் இன்னொரு வீதியும் சங்கானைப் பிரிவை ஊடறுத்துச் சென்று பண்டத்தரிப்புக் கோவிற்பற்றுக்குள் நுழைகிறது. இறுதியாகக் குறிப்பிட்ட வீதி, முதலில் குறிப்பிட்ட மானிப்பாய்-பண்டத்தரிப்பு வீதியைப் பண்டத்தரிப்புக் கோவிற்பற்று எல்லைக்குள், பண்டத்தரிப்புச் சந்திக்கு அண்மையில் சந்திப்பதாக நிலப்படம் காட்டுகிறது (படம்-2). தற்காலத்தில் சங்கானைச் சந்தியிலிருந்து வடகிழக்காகச் செல்லும் வீதியையே நிலப்படம் இவ்வாறு காட்டுகிறது எனலாம். நிலப்படத்தில் இது பிழையாக வரையப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அத்துடன், இந்த வீதி, உண்மையில் இன்றைய மானிப்பாய் – பண்டத்தரிப்பு வீதியை சங்கானை, மானிப்பாய் ஆகிய கோவிற்பற்றுகளிடையேயான எல்லைப்பகுதியிலேயே சந்திக்கிறது, நிலப்படம் காட்டுவதுபோல் பண்டத்தரிப்புக் கோவிற்பற்றுக்குள் அல்ல. 

வட்டுக்கோட்டையிலிருந்து தொடங்கும் இன்னொரு வீதி மூளாய்ப் பிரிவை ஊடறுத்து, மூளாய், தொல்புரம் ஆகிய பிரிவுகளுக்கிடையேயான எல்லையை அண்டி கடலேரிக்கரையில் முடிவடைவதாக நிலப்படம் காட்டுகிறது. இந்த முடிவிடம் இன்றைய புன்னாலைப் பாலம் தொடங்கும் இடத்துடன் பொருந்தி வருவதையும், அவ்விடத்திலிருந்து காரைநகருக்கான கடல்வழிப்பாதை இருந்ததை லெயுசிக்காமின் தொகுப்பிலுள்ள வேறு நிலப்படங்கள் காட்டுவதாகவும் சென்ற கட்டுரையில் ஏற்கெனவே குறிப்பிட்டோம். 

நீண்ட காலமாகவே வலிகாமத்திலிருந்து காரைநகருக்கான போக்குவரத்துப் புன்னாலையூடாகவே இடம்பெற்று வந்தது. அக்காலத்தில் ஏற்றுமதிக்காகக் காரைதீவிலிருந்த யானைத்துறைக்குக் கொண்டுசெல்ல வேண்டியிருந்த யானைகளையும் புன்னாலையூடாகவே எடுத்துச் சென்றதாகத் தெரிகிறது. ஆனால், லெயுசிக்காமின் நிலப்படத்தில் புன்னாலைத்துறை என்ற பெயர் மேலே குறிப்பிட்ட வீதி முடிவுறும் இடத்துக்கு வடக்கே கரையோரமாகச் சற்று தொலைவிலேயே குறிக்கப்பட்டுள்ளது. இதன் அருகே ஒரு மடத்தையும் நிலப்படம் காட்டுகிறது. இந்தத் துறை அக்காலத்தில் படகுத் துறையாகச் செயற்பட்டிருக்கக்கூடும். இத்துறையை அணுகுவதற்கான வீதியெதையும் நிலப்படம் காட்டவில்லை. 

வட்டுக்கோட்டையிலிருந்து வரும் வீதி முடியும் இடத்திலிருந்து காரைநகர் வரையான ஆழம் குறைந்த கடலேரிப் பகுதி ஏறத்தாழ நான்கு கிலோமீட்டர் அகலம் கொண்டது. முற்காலத்தில், வற்றுக் காலங்களில் இப்பகுதியூடாக மக்கள் கால்நடையாகக் கடலேரியைக் கடந்து காரைநகருக்குச் சென்றதாகத் தெரிகிறது.1 ஏற்றுமதிக்காகக் காரைநகர் யானைத்துறைக்குக் கொண்டுபோக வேண்டிய  யானைகளையும் இவ்வழியாகவே நடத்திச் சென்றிருக்கலாம். இந்த ஆழம் குறைந்த பகுதியூடாகவே 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரித்தானியர் புன்னாலைத் தாம்போதியை அமைத்துக் காரைநகரை யாழ்ப்பாணக் குடாநாட்டுடன் இணைத்தனர். 

சுழிபுரம், தொல்புரம் ஆகிய பிரிவுகளூடாக எந்தவொரு வீதியையும் நிலப்படம் காட்டவில்லை. தற்காலத்தில் சித்தங்கேணிச் சந்தியிலிருந்து தொல்புரம், மூளாய் ஆகிய பிரிவுகளை ஊடறுத்துப் புன்னாலைக்குச் செல்லும் வீதியும், புன்னாலையிலிருந்து தொல்புரம், சுழிபுரம் ஆகிய பிரிவுகளூடாகப் பருத்தித்துறைக்குச் செல்லும் வீதியும் நிலப்படத்தில் இல்லை. சித்தங்கேணிச் சந்தியிலிருந்து சங்கானைக் கோவிற்பற்றூடாகப் பண்டத்தரிப்புக்குச் செல்லும் தற்கால வீதியையும் நிலப்படம் காட்டவில்லை என்று ஏற்கனவே குறிப்பிட்டோம். இத்தொடரின் பல இடங்களில் குறிப்பிட்டதுபோல், இவை அக்காலத்தில் முறையான வீதிகளாக இல்லாமல் இருந்திருக்கலாம், அல்லது நிலப்படத்தில் நோக்கத்துக்கு அவற்றைக் காட்டவேண்டிய தேவை இல்லாதிருந்திருக்கலாம்.

கட்டடங்கள்

பெரும்பாலான ஏனைய கோவிற்பற்றுகளைப் போலவே சங்கானைக் கோவிற்பற்றிலும் ஒரு தேவாலயத்தையும் தேவாலய இல்லத்தையும் நிலப்படம் குறித்துக் காட்டுகிறது. இவற்றைத் தவிர, ஏற்கெனவே குறிப்பிட்டபடி, ஒரு மடத்தையும் நிலப்படத்தில் காணமுடிகிறது. 

தேவாலயமும் தேவாலய இல்லமும்

யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத் தொடக்கத்திலேயே சங்கானைத் தேவாலயமும் அதன் இல்லமும் நிரந்தரமான கட்டடப் பொருட்களாலான கட்டடங்களாகவே இருந்துள்ளன. போல்தேயஸ் பாதிரியார், இவ்விரு கட்டடங்களும் முருகைக் கற்களால் கட்டப்பட்டவை என்றும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டவை என்றும் குறிப்பிட்டுள்ளார். முன்புறம் நல்ல முற்றமும் எல்லாவற்றையும் சுற்றி மதிலும் இருந்ததாகவும் அவர் எழுதியுள்ளார்.2 தேவாலயம், தேவாலய இல்லத்தளவு பெரியது என அவர் குறிப்பிட்டிருப்பது, தேவாலயம் பெரிய கட்டடமாக இருக்கவில்லை என்பதைக் குறிப்பதாகவே தோன்றுகிறது. சங்கானைத் தேவாலயத்தின் வரைபடம் ஒன்று போல்தேயசின் நூலில் உள்ளது (படம்-3). அந்நூலிலுள்ள ஏனைய தேவாலயங்களின் வரைபடங்களைப் போலவே இதன் நம்பகத்தன்மையும் கேள்விக்குரியதே.

இன்றும் சங்கானையில் அழிபாடுகளாகக் காணப்படும் கட்டடமே போல்தேயஸ் பாதிரியார் விவரித்த தேவாலயத்தின் எச்சம் என்பதில் ஐயமில்லை (படம்-4). அழிபாடுகளிலிருந்து ஒல்லாந்தர்காலத் தேவாலயக் கட்டடத்தின் வழிபடுவோருக்கான மண்டபம் ஏறத்தாழ 110 அடி 6 அங்குல நீளத்தையும் 31 அடி 8 அங்குல அகலத்தையும் கொண்டிருந்தது.3 இம்மண்டபத்தின் நடுவில் இரண்டு வரிசைகளில் 7 அடி 6 அங்குலம் சுற்றளவுள்ள தூண்கள் இருந்ததாக ஜே.பி. லூயிஸ் 1916 ஆம் ஆண்டில் எழுதிய கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.4 தற்காலத்தில் அத்தூண்கள் தடயம் எதுவும் இன்றி அழிந்துவிட்டன. இத்தூண் வரிசைகள் மண்டபத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்தன. மண்டபத்தின் பக்கச் சுவர்களும் தூண் வரிசைகளும் மண்டபத்தை மூடியிருந்த கூரையைத் தாங்கின. கூரை, மண்டபத்தின் நீளப்பாட்டு அச்சுக்கு நேர் மேலே அமைந்த முகட்டையும், அதிலிருந்து பக்கச் சுவர்களை நோக்கி இருபக்கமும் சரிந்து செல்லும் அமைப்பையும் கொண்டிருந்தது. தேவாலயச் சுவர்கள் நான்கு அடி தடிப்புக் கொண்டவை. மண்டப வாயிலுக்கு எதிர்ப் பக்கத்தோடு இணைந்துள்ள குருமாருக்கும் பாடற்குழுவுக்குமான பகுதியின் (chancel) நீளம் 28 அடி, அகலம் 20 அடி. இப்பகுதி கல்லாலான வளைவுக் கூரையைக் (vault) கொண்டது.5 

இத்தேவாலயம் போர்த்துக்கேயரால் முதலில் கட்டப்பட்டுப் பின்னர் ஒல்லாந்தரால் திருத்தி அமைக்கப்பட்டது. ஒல்லாந்தர் ஆட்சியின் முதற் சில ஆண்டுகள் யாழ்ப்பாணத்திலிருந்த போல்தேயஸ் பாதிரியார், அக்காலத்தில் தேவாலயம் நிரந்தரமான கட்டடப் பொருட்களால் ஆனதாகக் குறிப்பிட்டதாலும் அவரது நூலில் உள்ள சங்கானைத் தேவாலயத்தின் படமும் அவ்வாறே காட்டுவதாலும், போர்த்துக்கேயர் காலத்திலேயே இது உறுதியான நிரந்தரமான கட்டடமாக இருந்ததாகக் கருத முடியும். 

பிரித்தானியர் காலத்தில் சங்கானைக் கோவிற்பற்றுக்கு அண்மையிலிருந்த ஐந்து கோவிற்பற்றுகள் 19 ஆம் நூற்றாண்டின் முற்பாதியிலேயே அமெரிக்க மிசனின் முக்கிய நிலையங்களாக இருந்தன. இதனால், அக்கோவிற்பற்றுகளில் இருந்த ஒல்லாந்தர் காலத் தேவாலயங்களை அவர்கள் திருத்திப் பயன்படுத்தினர். ஆனால், சங்கானையில் அவர்கள் மதப்பணி செய்தபோதும், பழைய சங்கானைத் தேவாலயத்தை அவர்கள் கையேற்றுப் பயன்படுத்தவில்லை. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்க மிசனைச் சேர்ந்தவர்கள் சங்கானையில் தேவாலயமொன்றை நிறுவியபோதும் அது வேறிடத்திலேயே நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஒல்லாந்தரின் பழைய தேவாலயம் பிரித்தானியர் காலம் முழுவதிலும் அதன் பின்னரும் கைவிடப்பட்ட நிலையிலேயே இருந்தது. அண்மையில் அதன் அழிபாட்டை இலங்கைத் தொல்லியல் திணைக்களம் தொல்லியற் சின்னமாக அறிவித்துள்ளது.

பழைய சங்கானைத் தேவாலயத்தின் அழிபாடுகள் இன்றைய மானிப்பாய் – காரைநகர் வீதியை அண்டி, சங்கானைச் சந்திக்கும் சித்தங்கேணிச் சந்திக்கும் இடையில் வீதிக்குத் தெற்குப் பக்கத்தில் உள்ளது. ஆனால், நிலப்படம், தேவாலயமும் இல்லமும் மானிப்பாய் – காரைநகர் வீதிக்கு வடக்கே, சங்கானையிலிருந்து பண்டத்தரிப்புக்குச் செல்லும் வீதியை அண்டி இருப்பதாகக் காட்டுகிறது. நிலப்படம், தேவாலயத்தைப் பிழையான இடத்தில் குறித்துள்ளதாகவே தோன்றுகிறது. 

மடம்

சங்கானைக் கோவிற்பற்றின் தொல்புரப் பிரிவின் கரையோரத்திலேயே மேலே குறிப்பிட்ட மடம் காணப்படுகிறது. அவ்விடத்தைப் புன்னாலைத் துறை எனப் பெயர் குறித்துள்ளனர். இதை மடம் எனப் பெயர் குறித்துக் காட்டாவிட்டாலும், இதன் குறியீட்டையும் அமைவிடத்தையும் கருதிப் பார்க்கும்போது இது ஒரு மடமே என்பதில் ஐயம் இல்லை. மடத்தைக் குறிக்கச் சிறிய கட்டடம் போன்ற குறியீடும், நிலப்படத்தில் பல இடங்களில் காணப்படுவதுபோல் அதற்கு அருகில் நிழல் மரத்தைக் குறிக்கும் ஒரு குறியீடும் உள்ளன. பொதுவாக இவ்வாறான கரையோர மடங்கள் கடல்வழிப் பாதைகள் தொடங்கும் இடங்களில் அல்லது துறைகளை அண்டியே காணப்படுவது வழக்கம். நிலப்படமும் பெரும்பாலான பிற இடங்களில் இவ்வாறே காட்டுகிறது. இதுபற்றி இக்கட்டுரைத் தொடரில் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளோம். ஆனாலும், இங்கே துறை எனக் குறிப்பிட்டுள்ள இடத்திலிருந்து கடல்வழிப் பாதைகள் எதுவும் காட்டப்படவில்லை. இவ்விடத்துக்குத் தெற்கே சற்றுத் தொலைவில் வட்டுக்கோட்டையிலிருந்து வரும் வீதி முடியும் இடத்திலேயே காரைநகருக்கான கடல்வழிப் பாதை தொடங்குகிறது எனவும் அது வற்றுக்காலத்தில் நடந்து செல்வதற்கு ஏற்றது என்றும் ஏற்கெனவே குறிப்பிட்டோம். அவ்விடத்தில் மடம் எதுவும் இல்லை.  

குளங்கள்

நிலப்படத்தில் சங்கானைக் கோவிற்பற்றுக்குள் மொத்தம் 14 குளங்களைக் குறித்துள்ளனர். இவற்றுள் சங்கானைப் பிரிவுக்குள் ஐந்து குளங்களும் சுழிபுரம் பிரிவில் ஐந்து குளங்களும் தொல்புரம், மூளாய் ஆகிய பிரிவுகளுக்குள் ஒவ்வொன்றிலும் இரண்டு குளங்களும் காணப்படுகின்றன. சங்கானைப் பிரிவுக்குள் அமைந்தவற்றுள் சித்தன் குளம், கோவாம் குளம், சங்கானைக் குளம், மஞ்சள் ஓடை ஆகியவை சிறப்புப் பெயர்களைக் கொண்டவை. ஒரு குளம் வெறுமனே குளம் (Tanck) என்ற பொதுப் பெயரால் குறிக்கப்பட்டுள்ளது.  சுழிபுரம் பிரிவில் உள்ளவை, உடும்பு செத்த குழி, பிரளாய், நளவ கிராய், வெள்ளாள கிராய், நெடுங்குளம் ஆகிய பெயர்களைக் கொண்டவை. தொல்புரம் பிரிவில் புன்னாலைக் குளம், வரட்டைக் குளம் ஆகிய இரண்டு குளங்கள் உள்ளன. மூளாயில் பொக்கண்ண ஓடை என்ற சிறப்புப் பெயர் கொண்ட ஒரு குளமும் ஒரு கேணியும் காணப்படுகின்றன. 

மேற்கண்டவற்றுள் புன்னாலைக் குளம், நளவ கிராய், வெள்ளாள கிராய், நெடுங்குளம் என்பன தற்காலப் பதிவிலுள்ள புன்னாலைப் பெரிய குளம், நளவராயன் குளம், வெள்ளவராயன் குளம், நெடுங்குளம் ஆகியவற்றுடன் பெயர் ஒப்புமை கொண்டவையாக உள்ளன.6 அது மட்டுமன்றி, நிலப்படத்திலுள்ள மேற்படி குளங்களின் வடிவங்களும் அமைவிடங்களும்கூடத் தற்காலக் குளங்களுடன் பெருமளவுக்கு ஒத்துள்ளன. நிலப்படத்தில் சங்கானைப் பிரிவுக்குள் கோவாம் குளம் என்ற பெயரில் உள்ள குளமே தற்காலப் பதிவுகளில் அதே பகுதியில் காணப்படும் கொவ்வைக் குளமாக இருக்கக் கூடும். சுழிபுரம் பிரிவில் நிலப்படம் காட்டும் பிரளாய் (Pralaay) என்னும் குளம், அப்பிரிவில் அடங்கும் பறாளாய்ப் பகுதியில் இருந்த ஒரு குளமாக இருக்கக்கூடும். நிலப்படத்தில் அதன் அமைவிடத்தை நோக்கும்போது, அது இன்றைய பறாளாய் முருகன் கோவில், பறாளாய் ஈஸ்வர விநாயகர் கோவில் ஆகியவற்றுக்கு அண்மையில் இருந்திருக்கும் எனத் தோன்றுகிறது. தற்காலத்தில் அப்பகுதியில் குளங்கள் எதுவும் இல்லை. அது மூடப்பட்டிருக்கலாம்.

சங்கானைப் பிரிவுக்குள் குறித்துள்ள சித்தன் குளம் என்ற பெயருக்கும் இன்று அப்பகுதிக்கு அண்மையில் உள்ள சித்தன் கேணி அல்லது சித்தங்கேணி என்ற ஊர்ப் பெயருக்கும் இடையேயான ஒற்றுமையும் கவனத்துக்கு உரியது. இந்தச் சித்தன் குளம் சித்தங்கேணிப் பகுதியில் அமையவில்லை. அதனால், சித்தங்கேணி என்னும் பெயர் ஏற்படுவதற்குச் சித்தன் குளம் காரணமாக இருக்காது எனலாம். ஆனால், இரண்டுக்குமான பெயர் ஒற்றுமை ஆய்வுக்கு உரியது.  

குறிப்புகள்

  1. கா. குகபாலன், தீவகம்-தொன்மையும் மேன்மையும் (கொக்குவில்: 2017), 240.
  2. Phillipus Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, trans. Pieter Brohier, The Ceylon Historical Journal, vol. VIII nos. 1-4 (July 1958-April 1959), 311, 323.
  3. Sagara Jayasinghe, “The ‘Remains of Faith’: Portuguese – Influenced Ecclesiastical Art and Architecture in the Northern Province of Sri Lanka”, 5-6.
  4. Jayasinghe, The Remains of Faith, 6. இல் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
  5. Jayasinghe, The Remains of Faith, 6.
  6. விவசாய அபிவிருத்தித் திணைக்களப் பதிவுகளின்படி.

ஒலிவடிவில் கேட்க


About the Author

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் அவர்கள் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கச் சூழல் துறையில் விஞ்ஞான இளநிலைப் பட்டத்தையும் (B.Sc. (BE)) பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலையில் விஞ்ஞான முதுநிலைப் பட்டத்தையும் (M.SC. (Arch)) பெற்றார். அத்துடன் இலங்கைக் கட்டடக்கலைஞர் சங்கம் (AIA (SL)), பிரித்தானியக் கட்டடக் கலைஞர்களின் அரச சங்கம் (RIBA) ஆகியவற்றில் பட்டயம் பெற்ற உறுப்பினராவார்.

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய காலத்திலிருந்து அதன் முதற் பயனராகப் பங்களிப்புச் செய்து வருகின்றார். தமிழ் விக்கிப்பீடியாவில் 4500இற்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொடங்கியுள்ளதுடன், மேலும் பல ஆயிரம் கட்டுரைகளின் விரிவாக்கத்திலும் பங்களிப்புச் செய்துள்ளார்.

தமிழ் விக்கிப்பீடியாவில் இவரது பங்களிப்புக்காக கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2015 ஆம் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல்விருது பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஆனந்தவிகடன் இதழ் வழங்கும் நம்பிக்கை விருதுகளில் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த 10 மனிதர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விருதை பெற்றுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்