‘வன்னி’ (Vanni: A Family Struggle through the Sri Lankan Conflict): கிராபிக் நாவலை முன்வைத்து
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
10 நிமிட வாசிப்பு

‘வன்னி’ (Vanni: A Family Struggle through the Sri Lankan Conflict): கிராபிக் நாவலை முன்வைத்து

April 26, 2025 | Ezhuna

ஈழத்தில் போர் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக உக்கிரமாக நடந்திருக்கின்றது. அது அங்கிருந்த அனைத்து மக்களையும் ஏதோ ஒருவகையில் பாதித்திருக்கின்றது. இப்போது யுத்தம் முடிந்து பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன. போர் ஒரு கொடுங்கனவாய் மக்களின் மனதில் இருந்து மறக்கடிக்கப்பட்டிருந்தாலும், அதன் நிமித்தம் ஏற்பட்ட உடல்/உள வடுக்கள் இன்னும் இல்லாமல் போகவில்லை. இனங்களிடையே நல்லிணக்கம் மட்டுமில்லை, போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆற்றுப்படுத்தல்கள், உதவிகள் கூட போரால் வெற்றி கொள்ளப்பட்ட அதிகாரத் தரப்பால் நிகழ்த்தப்படவில்லை. இன்னுமின்னும் இலங்கையில் இருக்கும் ஒவ்வொரு இனங்களும் துவிதங்களாகப் பிரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஈழத்துப் போர்ச்சூழலின் பின்னணியில் எழுதப்பட்ட பனுவல்களை முன்வைத்து வாசிப்புச் செய்யப்படுகின்ற ஒரு தொடராக ‘இருத்தல்களின் மீது கவியும் இன்மைகள்’ அமைகின்றது.

‘வன்னி’ (Vanni: A Family Struggle through the Sri Lankan Conflict) என்கின்ற கிராபிக் நாவல் ஈழத்தில் நடந்த இறுதி யுத்தத்தைப் பற்றிப் பேசுகின்றது. 2004 இல், செம்பியன்பற்றில் சுனாமியால் பாதிக்கப்படும் ஒரு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த அன்ரனிதான் இதில் முக்கிய பாத்திரம். அவரின் குடும்பத்தினரும், அயலவரான சுஜி/நளாயினி குடும்பத்தினரும் செம்பியன்பற்றில் இருந்து பரந்தன், கிளிநொச்சி, விசுவமடு, No Fire Zone 1, No Fire Zone 2 என்று இடம்பெயர்ந்து, இறுதியில் முள்ளிவாய்க்காலுக்குச் செல்வதுவரை இந்தநூல் விவரிக்கின்றது.

இதைக் கதையாக எழுதிய பெஞ்சமின், சுனாமிப் பேரழிவு சமயத்தில் வன்னிக்குள் சென்றவர்; இறுதியில் யுத்த வலயத்துள் இருந்து வெளியேற்றப்பட்டவர். ஐ. நாவின் பணியாளராக இருந்தவர். 2008, செப்ரெம்பர் 16, காலை 10.45 இற்கு, அரச சார்பற்ற நிறுவனங்கள் வன்னிக்குள் இருந்து அரசால் வெளியேற்றப்பட்டன என பெஞ்சமின் துல்லியமாகச் சொல்கிறார். ஏனென்றால் அவ்வாறு வெளியேற்றப்பட்ட  இறுதிப் பணியாளர்களில் ஒருவராக அவர் இருந்திருக்கின்றார். 

போரை நேரடியாகப் பார்த்ததால், அவர் மீண்டும் தனது சொந்தநாடு திரும்பும்போது, PTSD யினால் பாதிக்கப்படுகின்றார். அந்தப் பாரத்தை ஏதோ ஒருவகையில் இறக்கிவைக்காவிட்டால், உளவியல் சிக்கலுக்குள் மூழ்கிவிடக்கூடுமென்ற அச்சத்திலேயே ‘வன்னி’யை எழுதத் தொடங்கியிருக்கின்றார். 

பெஞ்சமின் கிளிநொச்சியில் இருந்து  பலவந்தமாக வெளியேற்றப்பட்டபோது, போர் நடந்துகொண்டிருந்த அன்றைய காலத்தில் (2009) அநாமதேயமாக ஒரு கட்டுரையை எழுதியிருக்கின்றார். அது அன்று தெல்ஹா (Telka) பத்திரிகையில் ‘இரண்டு இராணுவங்களுக்கு இடையில்’ (In between Two Armies) எனும் தலைப்பில் பிரசுரிக்கப்பட்டுமிருந்தது.

பெஞ்சமின் வன்னிக்குள் நின்ற இறுதிக்காலங்களில், இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சிலிருந்து தப்ப, பதுங்குகுழிக்குள் இருந்திருக்கிறார். அந்த நாட்களில் வாசித்த பாலஸ்தீனியம் (Palestine) பற்றியதும், யூதப்படுகொலை (Maus) பற்றியதுமான கிராபிக் நாவல்களே ‘வன்னி’ நாவலுக்கு உந்துசக்தியாக இருந்தன எனச் சொல்கிறார்.

அன்ரன் இலண்டனில் வாகனச்சாரதியாக வேலை பார்க்கின்றார். அவர் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர் என அவரது காரில் ஏறும் பயணியொருவர் அறியும்போது, “இலங்கை நல்ல காலநிலையையும், அழகான கடற்கரைகளையும் கொண்ட ஒரு நல்ல நாடு. நான்கூட விரைவில் இலங்கைக்குப் போக இருக்கின்றேன். நீ இலங்கைக்குப் போகவில்லையா?” எனக் கேட்கின்றார். அதிலிருந்து அன்ரனின் கடந்தகாலத் துயரக்கதை வாசகர்களாகிய நமக்கு எடுத்துரைக்கப்படுகின்றது. 

அன்ரனின் தகப்பனும், அன்ரனின் சகோதரரான ரஞ்சனும் கொழும்பிற்குச் செல்லும்போது, ‘1983’ இனக்கொலைகள் நடக்கின்றன. அதில் அன்ரனின் தகப்பன் கொல்லப்பட, அதிர்ஷ்டவசமாக தப்பும் ரஞ்சன் ஊர் திரும்புகின்றார். எனினும் படுகொலைகளை நேரடிச் சாட்சியமாகப் பார்த்த ரஞ்சன் ஒரு விடுதலைப்புலிப் போராளியாக மாறுகின்றார். ரஞ்சன் விடுமுறையில் வீட்டுக்குத் திரும்பும்போது அவரின் பெறாமக்களான மைக்கலும், தீபாவும் அவரோடு அன்பு பாராட்டுகின்றனர். போர் தீவிரமாகும்போது, அன்ரனின் பக்கத்து வீட்டுக்காரரான சேகரும் புலிகளில் இணைகின்றார். இவர்கள் இருவரும் இறுதி யுத்தத்தில், இராணுவத்திடம் சரணடையும்போது, இராணுவத்தால் கைகள் பின்புறமாகவும், கண்கள் துணியாலும் கட்டப்பட்டு சுட்டுக் கொல்லப்படுகின்றார்கள். 

இவ்வாறே புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பில் பலவந்தமாகச் சேர்க்கப்பட்ட ரஞ்சனின் மனைவியின் சகோதரியான பிரியாவும், அவரது தோழியான கவிதாவும் (இவர்கள் இருவரும் புலிகளின் மருத்துவப்பிரிவில் வேலை செய்கின்றனர்.) போரின் இறுதிக்கட்டத்தில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு ‘காணாமல்’ ஆக்கப்படுகின்றனர்.

அன்ரனும் ரஞ்சனியும் காதலித்துத் திருமணம் செய்கின்றனர். இருவரும் வெவ்வேறு சமூகப்பின்னணியில் இருந்து வந்தவர்கள். அன்ரனின் தாயான ஈழநிலாவால் இதனை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவ்வாறு ஈழத்தில் சமூகங்களிடையே இருந்த ஏற்றத்தாழ்வுகளும் இந்த கிராபிக் நாவலில் சுட்டிக்காட்டப்படுவது முக்கியமானது. அன்ரனுக்கும் ரஞ்சனிக்கும் மைக்கல், தீபா என்கின்ற இரு குழந்தைகள் பிறக்கின்றனர். இறுதி யுத்தம் முடியும்போது இவர்கள் தமது குழந்தையான மைக்கலையும், குழந்தையின் பாட்டியான ஈழநிலாவையும் இழக்கின்றனர். 

அன்ரனின் சகோதரரும் (ரஞ்சன்), மச்சாளும் (பிரியா) புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் என்பதால், இராணுவத்தில் சரணடைந்த அன்ரனை இராணுவம் கொடுமையான சித்திரவதைகள் செய்கின்றது. ஒரு கட்டத்தில் முள்வேலி முகாமில் தங்கியிருந்த அன்ரனின் மனைவியான ரஞ்சினியும், மகள் தீபாவும் இராணுவத்துக்கு – அவர்களின் உறவினர் ஒருவரால் – இலஞ்சம் கொடுக்கப்பட்டு முகாமிலிருந்து வெளியே கொண்டுவரப்படுகின்றனர். அவ்வாறே அன்ரனும் மிகப்பெரும் பணம் கொடுத்து அகதி முகாமில் இருந்து வெளியில் தப்பிவருகின்றார்.

இவர்கள் பின்னர் கொழும்பிற்குச் சென்று, தமிழகத்துக்குத் தப்பிப் போகின்றனர். அங்கேயும் உரிய ஆவணம் இன்றித் தமிழகப் பொலிஸின் கண்காணிப்பில் சிக்குகின்றனர். ஒருவழியாக அன்ரன், உறவினர் ஒருவரின் உதவியால் இங்கிலாந்துக்கு வந்து, தனது துயரக்கதையை இங்கிலாந்துக் குடிவரவு அதிகாரியிடம் சொல்கின்றார். இறுதியில் ரஞ்சனியும், தீபாவும் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு வந்து அன்ரனோடு சேர்வதோடு இந்த கிராபிக் நாவல் முடிகின்றது. 

ஈழப்போரின் கொடூரத்தைப் பதிவு செய்யவேண்டுமென சிறு காமிக்ஸ் புத்தகமாக 40 பக்கங்கள் அளவில் தயாரிக்க ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம், பின்னர் கிட்டத்தட்ட 250 பக்கங்களில் கிராபிக் நாவலாக விரிந்திருக்கின்றது. இதை முன்வைத்தே பெஞ்சமின் தனது மானிடவியலுக்கான Ph.D பட்டத்தையும் செய்திருக்கின்றார். பெஞ்சமின், இந்த நாவலுக்காக, வரைபடக்கலைஞரான லிண்ட்சேயுடன் மீண்டும்  இலங்கைக்குத் திரும்ப விரும்பியிருக்கின்றார். நாட்டின் நிலைமைகள் உகந்ததாக இருக்கவில்லை. ஆகவே, 2012 இல், இவர்கள் இருவரும் தமிழ்நாட்டுக்குச் சென்று அங்கிருக்கும் அகதி மக்களோடும், பிறரோடும் கள ஆய்வுகளைச் செய்திருக்கின்றனர். மேலும் இங்கிலாந்திலும், சுவிஸிலும், பிரான்சிலும், கனடாவிலும்; போரிலிருந்து தப்பிய ஈழத்தமிழர்களை இவர்கள் சந்தித்திருக்கின்றனர். இவர்கள் இருவரும் இந்நாவலின் பாத்திரங்களாகவும் வருகின்றனர். அதனை, இலண்டனில் அன்ரனி தன் கதையைச் சொல்லும் பக்கங்களில் நாம் பார்க்க முடியும். 

2017 இல், பெஞ்சமின் மீண்டும் இலங்கைக்குச் சென்று, கிளிநொச்சியில் அவர் பணியாற்றிய ஐ. நாவின் கட்டடத்தைப் பார்க்கின்றார். அந்த அனுபவத்தைக்கொண்டு, போருக்கு முன்பும், அதற்குப் பின்புமாக இருந்த வன்னியைப் பற்றி ஒரு விரிவான கட்டுரையை இந்த கிராபிக் நாவலின் பின்னிணைப்பாக அவர் எழுதியிருக்கின்றார். மேலும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு அகதியும், போருக்குள் இருந்ததைப் போன்றே, தமது அகதி மனுக்கோரிக்கைகள் ஏற்கப்படுமா? நிராகரிக்கப்படுமா? என்ற பதற்றத்துடன் இருக்கின்றார்கள் என்பதை தனது ஆய்வின் அடிப்படையில் சொல்கின்றார். அவ்வாறு அகதிக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதால், தற்கொலைக்கு முயன்ற சிலரைக்கூட, தான் இந்த நாவல் எழுதுவதன் பொருட்டுச் சந்தித்திருப்பதாகச் சொல்கின்றார். அன்ரனைப் போன்று யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வேறு நாடுகளுக்கு அகதிகளாக வந்தவர்களுக்கு, வாழ்வை மீண்டும் மீண்டும் கட்டியெழுப்புவதைத் தவிர வேறு எந்த வழிகளும் இல்லையெனவும் கூறுகின்றார். இவர்கள், ஓர் அந்நியக் கலாசாரத்தில், புதிய மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டியிருப்பது பற்றியும், அவர்களுக்குப் பழக்கமற்ற அந்தந்த நாட்டுப் பண்பாட்டு விழுமியங்களை அறிந்துகொள்ள அவதிப்படுவது பற்றியும் பெஞ்சமின் இங்கே கவனப்படுத்துகின்றார். அன்ரனைப் போன்றவர்கள், இழந்த வீடுகளை மட்டுமல்ல, போரில் இறந்த உறவுகள்/ நண்பர்களின், நினைவுகளையும் தாங்கியபடி, இன்னமும் உளவியல் சிக்கல்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களென அடையாளப்படுத்துகின்றார். 

அந்தவகையில் இந்த ‘வன்னி’ என்னும் கிராபிக் நாவல் வித்தியாசமான முயற்சி எனலாம். இதனூடாக போருக்கு முன்பான அமைதியான வாழ்க்கை மட்டுமன்றி, இறுதிப்போரின் உக்கிரமான ஒவ்வொரு காலகட்டமும் வரைகலை ஓவியங்களாக மாற்றப்பட்டு, மறக்க முடியாத நினைவுத்தடங்களாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

பிபிஸியின் இலங்கைக்கான செய்தித் தொடர்பாளரான பிரான்ஸிஸ் ஹாரிசன், ஈழப்போர் தொடர்பாக ‘Still Counting the Dead’ என்ற நூலை எழுதியிருந்தார். அதன் அறிமுக நிகழ்வு கனடாவில் நடந்தபோது, பிரான்ஸிஸ், ஈழப்போரின்போது நடந்த மனிதவுரிமை மீறல்கள் குறித்து வெவ்வேறு கலைவடிவங்களில் வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டுமெனக் கூறியிருந்தார். ஏனெனில், அங்கு நடந்தவை பற்றி அறிய, பல புகைப்படங்களும், காணொளிகளும், நேரடிச் சாட்சியங்களாக இருந்தாலும், அவற்றைப் பற்றி எவரும் அக்கறைப்படுவதாகக் காணவில்லை. எனவே நாம் வெவ்வேறு ஊடகங்கள்/ தளங்கள் மூலம் அவற்றை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தக் கவனம் செலுத்தவேண்டுமெனக் கூறியிருந்தார். 


ஒலிவடிவில் கேட்க


About the Author

இளங்கோ

யாழ்ப்பாணம் அம்பனையில் பிறந்தவர். ஈழத்திலிருந்து போரின் நிமித்தம் தனது பதினாறாவது வயதில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்து தற்போது ரொறொண்டோவில் வசித்து வருகிறார். கவிதைகள், சிறுகதைகள், நாவல் தவிர, 'டிசே தமிழன்' என்னும் பெயரில் கட்டுரைகளும், விமர்சனங்களும், பத்திகளும் பல்வேறு இதழ்களிலும், இணையத்தளங்களிலும் எழுதி வருகின்றார். நாடற்றவனின் குறிப்புகள் (கவிதைகள் - 2007), சாம்பல் வானத்தில் மறையும் வைரவர் (சிறுகதைகள் -2012), பேயாய் உழலும் சிறுமனமே (கட்டுரைகள் - 2016), மெக்ஸிக்கோ (நாவல் - 2019), உதிரும் நினைவின் வர்ணங்கள் (திரைப்படக்கட்டுரைகள் - 2020), ப்யூகோவ்ஸ்கி கவிதைகள் (மொழிபெயர்ப்பு -2021), தாய்லாந்து (குறுநாவல் - 2023) ஆகியவை இதுவரையில் இவர் எழுதிய பனுவல்கள் ஆகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்