அறிமுகம்
இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த ஆதிகாலத்தில் இருந்து விவசாயமும் கால்நடை வளர்ப்பும் மனிதர்களின் முக்கிய தொழில்களாக இருந்து வருகின்றன. குறிப்பாகத் தமிழகச் சூழலில் உருவான திணைக்குடிகள் இதற்குச் சான்றாகின்றன. வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம்; அதுவே விவசாயத்தின் பூர்வீகம் என்று கூறப்பட்டாலும் முல்லை நிலமும் குறிஞ்சியும் கூட குறித்த காலகட்டத்தின் பின் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டன. விவசாயமும் கால்நடை வளர்ப்பும் தவிர்க்க முடியாத தொழில்சார் இணங்கு முறையை உடையன என்பது முக்கிய விடயமாகிறது. தமிழகத்து முல்லை நிலம் காடுகளை, அவற்றை ஒட்டியமைந்த மேய்ச்சல் நிலப் பகுதிகளைக் கொண்டவை; கால்நடை வளர்ப்புக்கு உகந்தவை. காலப்போக்கில் சிறுவேளாண்மை நிலங்கள் உற்பவிக்கப்பட்டன. வரகு, தினை முதலான தானியங்கள் நிறைவாக உற்பத்தி செய்யப்பட்டன என கலித்தொகை (53: 22: 108:3) பல இடங்களில் எடுத்துரைக்கிறது.
எருது வளர்ப்பவர்கள் அண்டர்கள் எனப்பட்டனர் (குறுந்தொகை 117:3). ஆயர் எனப்படுவோர் கோட்டினத்தாயர் (எருமை வளர்ப்பவர்), கோவினத்தாயர் (பசு வளர்ப்போர்), புல்லினத்தாயர் (ஆட்டிடையர்) என வகைப்பட்டிருந்தனர். இடையர் பல வகையினராக இருந்தனர் (குடவர், கோவலர், பூழியர், பொதுவர்). விவசாயம், கால்நடை இணைந்த வாழ்வு திணை மரபில் இருந்து மாறிய புதுவாழ்வை அளித்தது. பிற்கால இந்தியக் கால்நடை வளர்ப்போர் மேய்ச்சல் நிலம் தேடி இடம் பெயர்ந்து சென்றனர் எனவும் அதில் ஒரு பகுதியினர் இலங்கையினை வந்தடைந்து வாழ்ந்தனர் எனவும் கருதப்படுகிறது.
மனிதர், வேட்டையாடல் – உணவுதிரட்டல் வாழ்க்கைமுறையில் இருந்து வேளாண்மை சார் வாழ்க்கைமுறைக்கு மாறியபோது, அனைத்துத் தொல்பண்பாடுகளிலும் வழக்கில் வந்த கால்நடைகளை வளர்த்தல், பேணுதல், உணவாகப் (இறைச்சி) பயன்படுத்தல் ஆகிய செயல்முறைகளின் கூட்டுத்தொழில் கால்நடை வளர்ப்பு எனப்பட்டது. இது வேளாண்மையின் துணைத்தொழிலாகிவிட்டது. கால்நடை வளர்ப்பானது, பண்பாட்டுக்குப் பண்பாடு, காலத்துக்குக் காலம் மாறிவருவதோடு, தனித்துவமான பண்பாட்டு, பொருளியல் பாத்திரத்தையும் வகிக்கிறது.
எது எவ்வாறாயினும் கால்நடை வளர்ப்போரை இடையராகவோ, ஆயராகவோ கருதும் நிலை மாறியது. அது விவசாய நிலம் சார் மக்களின் தொழிலாயிற்று. பெருங்குடி வேளாளர், சிறுகுடி வேளாளர்களின் தொழிலாயிற்று. காலனிய காலத்தில் எல்லா மக்களும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டனர். ஆயினும் ‘பட்டி’ வளர்ப்பு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தாரால் தான் இன்றுவரை மேற்கொள்ளப்படுகிறது.
மாடுகளை மேய்ச்சலுக்கு இட்டுச் செல்லும் சிறுகுடி வேளாளர் மாடு வழி தவறிச் செல்லாதிருக்கவும், நோய் நொடியின்றி பட்டி பெருகவும் பல தெய்வங்களை வழிபட்டு வந்துள்ளனர். பிராந்திய அடிப்படையில் வெவ்வேறு பெயர்கள், வெவ்வேறு வழிபாட்டு முறைகள் காணப்படினும் அவற்றின் அடிக்கட்டுமானம் ஒன்றாக இருப்பதைக் காணமுடிகிறது. எடுத்துக்காட்டாக சிறுகுடி வேளாளரின் பொதுநிலைத் தெய்வமாக அண்ணமார் காணப்படுகிறார். அவருக்குப் ‘பொல்லு’ வைத்து (தடி) வழிபடும் மரபே காணப்படுகிறது. அதையொத்து பூநகரிப் பிராந்தியத்தில் வழிபடப்படும் குறிப்பன் துவரந்தடி (பொல்லு) வைத்தே வழிபடப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கால்நடை வளர்ப்பாளர்களின் நம்பிக்கை மிகுந்த இன்னொரு தெய்வமாக வன்னித் தம்பிரான் என்கின்ற வன்னித்தெய்வம் விளங்குகிறது. இதேபோல மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வதனமார், குமாரர், முன்னடித் தம்பிரான் வழிபாடுகளும் காணப்படுகின்றன.
இந்த ஆய்வுக்காக திருகோணமலையில் இத்தெய்வம் பற்றிய தரவுகளை நேரே சென்று திரட்ட திசானி, டிலக்சனா, கஸ்தூரி ஆகியோர் உதவினர். அதேபோல முல்லைத்தீவில் அபிஷேகன், கனுசியா போன்றோரின் உதவி கிடைத்தது.
வன்னித்தம்பிரான்
இந்தியாவில் இருந்து இலங்கை வந்த வதனமார்களில் ஒருவரான வன்னித் தம்பியே வன்னித் தம்பிரான் என வழங்கப்படுவதாக அறியமுடிகிறது. வேளாள சமூகத்தின் ‘வன்னியர்’ தெய்வ வழிபாடு இலங்கையின் பல பாகங்களிலும் காணப்படுகிறது. அவ்வழிபாடும் இவ்வன்னித் தம்பிரான் வழிபாடும் ஒன்றா என்பதைச் சரிவர அறியமுடியவில்லை. தம்பிரான் என்பதற்கு பெரியவர், தலைவர், மதிப்பிற்குரியவர் என்ற பொருள்கள் உண்டு (உதாரணம் பெரியதம்பிரான், நாகதம்பிரான்). வன்னியர்களின் தலைவனாகவோ அல்லது வன்னியர்களின் வழிவந்த வழிபடு தெய்வமாகவோ வன்னித்தம்பிரான் வழிபாடு வந்திருக்கலாம்.
1) வதனமார்களும் வன்னித் தம்பிரானும்
‘வதனமார் குழுமாடு கட்டு அகவல்’ எனும் நூலில் (ஈழத்துப் பூராடனார்: 2000) “சுவாதியம்மனின் மகனார் மங்கலனார், வதனமார் பதின்மரோடும் யானை, காலி (குழுமாடு/ குழுவன்) பிடிக்கின்ற செயலுக்காய் வில்லம்பு, செல்லை, வெளுக்கயிறு, கோடாலி, கிருசவடி, மேல்வளைந்த கோடரி (கோடரி), எல்லையில்லாப் பொல்லு என்பவற்றை எடுத்துக்கொண்டு, அவர்களது நாடான அயோத்தியில் இருந்து புறப்பட்டு ‘இராவணனாராண்ட’ இலங்கையை வந்தடைந்தனர்” எனக் கூறப்படுகின்றது. அவர்களுள் ஒருவரே வன்னித் தம்பிரான் என கிழக்கிலங்கை மக்களால் நம்பப்படுகிறது.
2) மாருதப்புரவீகவல்லியும் வன்னித்தம்பிரானும்
தமிழ்நாட்டிலிருந்து மாருதப்புரவீகவல்லி என்னும் இளவரசி, தன்னைப் பீடித்திருந்த நோயைத் தீர்ப்பதற்காக இலங்கையின் வடபகுதிக்கு வந்தார். அந்நோய் தீர்ந்தபின், வன்னி என அழைக்கப்படும் அடங்காப்பற்றுப் பகுதியை ஆண்டுவந்த உக்கிரசிங்கசேனன் என்பவரை மணந்து இலங்கையிலேயே தங்கிவிட்டார். வையாபாடல், இவர்களுக்குப் பிறந்த மகனின் திருமணத்துக்காக, மதுராபுரியில் இருந்து பெண் ஒருவரை அழைத்துவந்தபோது, அவளுடன் 60 வன்னியர்கள் வந்ததாகக் கூறுகின்றது. இவர்கள் அடங்காப்பற்றுக்கு அனுப்பப்பட்டு அப்பகுதிக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டபோது இலங்கைக்கு மேலும் பல வன்னியர்களை இவர்கள் அழைத்து வந்துள்ளனர். முல்லைத்தீவில் குடியேறிய முல்லை மாலாணன், சிவலை மாலாணன், சருகி மாலாணன், வாட்சிங்கராட்சி போன்ற வன்னியர்களின் பெயர்கள் வையாபாடலில் கூறப்பட்டுள்ளன.
வன்னி – அடங்காப்பற்றின் பூர்வகுடிகளினால் ஏற்பட்டு வந்த தொல்லைகளின் காரணமாக, அவர்களை அடக்குவதற்காகவும், தமிழ்நாட்டிலிருந்து பல வன்னியர்கள் அங்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். வையாபாடலில், ‘கறுத்தவராயசிங்கம், தில்லி, திடவீரசிங்கன், குடைகாத்தான், முடிகாத்தான், வாகுதேவன், மாதேவன், இராசசிங்கன், இளஞ்சிங்கவாகு, சோதையன், அங்கசிங்கன், கட்டையர், காலிங்கராசன், சுபதிட்டன், கேப்பையினார், யாப்பையினார், ஊமைச்சியார், சோதிவீரன், சொக்கநாதன், இளஞ்சிங்கமாப்பாணன், நல்லதேவன், மாப்பாணதேவன், வீரவாகு, தானத்தார், வரிப்பத்தார்’ ஆகிய 24 பேர் அழைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் சிலர் பளை, கரைப்பற்று, கச்சாய், கருவாட்டுக்கேணி, கட்டுக்குளம் போன்ற இடங்களில் குடியேற, வேறு பலர் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டப் பகுதிகளிலும் குடியேறினர். யாழ்ப்பாணத்திலும் சிலர் குடியேறினர். இன்னும் சில வன்னியர் கணுக்கேணி, முல்லைத்தீவு, தனிக்கல்லு, கிழக்குமூலை, மேற்குமூலை ஆகிய இடங்களில் ஆட்சிசெலுத்தி வந்த பல்வேறு பூர்வகுடிச் சாதியினரைத் தோற்கடித்து, அப்பகுதிகளைத் தாங்களே ஆண்டு வந்துள்ளனர்.
3) திருகோணமலையில் வன்னித் தம்பிரான் பற்றிய கதைகள்
வதனமார் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்ததாகவும் இலங்கையில் திருகோணமலையில் முதலில் இறங்கியதாகவும் சொல்லப்படும் அதேவேளை, இவர்களின் பொழுதுபோக்காக யானை, குதிரைகளை அடக்குதல் என்பன இருந்து வந்துள்ளன. அவர்களில் மொத்தமாக ஏழு பேர் இருந்துள்ளனர். அவர்களில் வன்னித்தம்பி என்ற ஒருவர் பாலை மரத்தில் தேனைக் கண்டு அதனை தான் மட்டும் குடித்துவிட்டார். அவ்வேளை இவரைக் காணாது தேடி வந்த மற்ற ஆறு பேரும், இவர் தான் மட்டும் தேனை அருந்தியிருப்பதைக் கண்டு கோபமுற்று, இங்குள்ள கால்நடைகளுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், பாதிப் பழமோ அல்லது பாக்கோ வைத்தால் கூட, அதனையும் ஏற்றுக்கொண்டு நன்மை செய்ய வேண்டும் என்றும் அவருக்குச் சாபமிட்டனர் (பூசாரி நல்லையா தவராசா).
இவ்வழிபாடானது கிருஷ்ண அவதாரத்துடன் இணைத்துப் பேசப்படுகின்றது. அதாவது கிருஷ்ணவதாரத்தில் எவ்விதம் கிருஷ்ணர் பசுக்களைக் காத்து வந்தாரோ அதனைப் போல தங்களுடைய கால்நடைகளையும் பாதுகாப்பவராக இவர் கருதப்பட்டு வழிபடப்படுகின்றார். பசுக்கள் பெருகுவதற்காக வழிபடப்படும் இவரிடமே எருமை மாடுகள், பசுமாடுகள் என அனைத்தும் இருந்துள்ளன. இவர் காளை மாடுகளைச் சாந்தமாக்குதல், காட்டு மாடுகளைப் பிடித்து வைத்தல் போன்றவற்றினைச் செய்பவராகவும் கருதப்படுகின்றார். நம் மக்கள் எல்லாம் பால் கறப்பதில்லை. பால் வேண்டுமெனில் ஏனத்தைக் (பாத்திரத்தை) கொண்டு சென்று மாடுகள் உள்ள வழியில் வைப்பர். பின்னர் ‘கூ’ என்ற சத்தம் கேட்கும். சிறிது நேரம் கழித்துச் சென்று பார்த்தால் ஏனத்தில் பால் நிறைந்திருக்கும். இவ்வாறு இருக்க, ஒரு சமயம் வண்ணார் குலத்தைச் சார்ந்த ஒருவரும் மற்றொருவரும் பால் கறப்பவர் யார் என்பதனை அறிய வேண்டும் என்ற ஆர்வத்தில் ஏனத்தை பசுக்கள் செறிந்துள்ள இடத்தில் வைத்துவிட்டு, காட்டில் ஒளிந்திருந்து பார்த்தனர். சிறிது நேரத்தில் அந்த ஏனத்தில் பால் நிரம்பி வழியத் தொடங்கியது. அவ்வேளையில் ஒளிந்திருந்த அவ்விருவரும் போதும் என்று சொன்னதால் பாலுடன் ஏனமும் இல்லாமல் போனது. அன்றிலிருந்து பால் கொடுப்பதில்லை. அப்போதுதான் இவர் தனிப்பட காட்டிற்குச் சென்று இந்தப் பூசையைச் செய்கின்றார். ஏனெனின் அவரின் அம்மாசுவாதி அம்மன் ‘நீ அங்கே, இங்கே போய் ஒன்றும் கேட்கக்கூடாது. பிறரின் பட்டியில் போய் பாலும் எடுக்கக்கூடாது. முழுப்பேரும் கொண்டு வந்து வெள்ளி, சனிக்கிழமைகளில் உனக்குப் பரமுதம் செய்து தருவார்கள். அதை இல்லையென்று சொல்லாமல், அங்கே போய் பரமுதத்தைச் செய்துட்டு, சாப்பிட்டு வா’ என உரைத்ததாக நம்பப்படுகிறது.
தினகரன் பத்திரிகையில் 2014.11.16 அன்று வெளிவந்த தாழை செல்வநாயகம் என்பவர் எழுதிய ‘கிளிச்சிறாம்பி’ எனும் சிறுகதையில் உயிர்களைக் காப்பாற்றும் தெய்வமாக வன்னித்தம்பிரான் குறிப்பிடப்படுகின்றார்.
வன்னித்தம்பிரான் வழிபாடு
இன்று வன்னித் தம்பிரான் வழிபாடு திருகோணமலையில் சம்பூர், கிளிவெட்டி முதலான ஊர்களில் செல்வாக்குப்பெற்றுக் காணப்படுகிறது. வன்னித் தெய்வம் என்ற பெயரில் முல்லைத்தீவில் குமுழமுனை, ஆண்டாங்குளம் பகுதியில் உள்ள காட்டில் இவ்வழிபாடு காணப்படுகிறது. ஏலவே கூறியது போல மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வதனமார் வழிபாடு காணப்படுகிறது. அத்தெய்வத்துக்கான வழிபாட்டு முறையும் வன்னித் தம்பிரான் வழிபாட்டு முறையும் ஒத்த தன்மையுடையவை. அதேபோல மட்டக்களப்பில் காணப்படுகின்ற ‘முன்னடித் தம்பிரான் வழிபாடு, குமார தெய்வ வழிபாடு’ என்பன வன்னித்தம்பிரான் வழிபாட்டுடன் முழுமையாக ஒத்தமைந்தமை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகச் சூழலில் இவ்வழிபாடு இருப்பதாகத் தெரியவில்லை.

வன்னித் தம்பிரானுக்கெனத் தனிக்கோயில் எதுவும் இல்லை. காட்டின் ஒரு புறத்தில் பற்றைகள் வெட்டப்பட்டு ஒரு மரத்தை மையமாகக் கொண்டதாக இவ்வழிபாடு நிகழ்த்தப்படுகின்றது. குறிப்பாக பாலைமரம் அல்லது ஆலமரம் முதன்மைப்படுத்தப்படுகின்றது. முல்லைத்தீவில் வெள்ளைக்கல் ஒன்று பாலை மரத்தடியில் வைத்து வழிபடப்படுகிறது.
வழிபாட்டு முறைகள்
வன்னித்தம்பிரானுக்கான சடங்குகளானது தை, மாசி, பங்குனி மாதங்களிலேயே பெரும்பாலும் செய்யப்படும். இவை கால்நடைகளுக்கு நோய் தாக்காது இருக்கவும் காணாமல்போன கால்நடைகளைத் திரும்பப் பெறுவதனையும் நோக்காகக்கொண்டு ஆற்றப்படுகின்றதெனலாம். மாடுகள் கன்று போட்டதன் பின்பு அவை கறக்கும் பாலினை வீட்டிற்குக் கொண்டு வந்து காய்ச்சி, அதிலிருந்து வருகின்ற பாலாடை, நெய் என்பவற்றினை எடுத்து, அதில் விளக்கேற்றி இச்சடங்குகள் ஆற்றப்படுகின்றன. அந்தக் காலத்தில் வரும் பாலினை விற்க மாட்டார்கள். வீட்டிற்குக் கொண்டுபோய் வன்னித் தம்பிரானுக்காக நெய் எடுத்து அதில் விளக்கேற்றி, உறி போட்டு, பாலை மரத்திற்கு அடியில் அந்த உறியில் முக்காலியைக் கட்டி, அதில் மடை வைத்து, பின்பு தேங்காய்ப் பாலில் பொங்கி, பானையை மூடி வைப்பர். அப்பானை திறக்கப்பட மாட்டாது. எனினும் தேங்காய்ப் பால் நன்கு பொங்கி வரும்வேளை, அதனை உறியில் வைத்து வெற்றிலை மடை மட்டும் வைக்கப்படுமேயன்றி வேறு மடைகள் பரப்பப்படமாட்டாது. பானையோடு தூக்கி முக்காலி மாதிரி உறியில் வைத்து கொஞ்ச நேரம் வெளியில் தள்ளி நின்றுவிட்டு சிறிது நேரம் கழித்து வந்து, கற்பூரம் கொளுத்தி பூசை செய்து முடிப்பார்கள். அதுமட்டுமன்றி வன்னித் தம்பிரானுக்கு வீட்டில் இருக்கும் பறங்கி வாழையை நேர்ந்து கட்டுவதுண்டு. அந்த வாழை உரிய நேரத்தில் பெரிய குலை போடும் என்ற நம்பிக்கையும் உண்டு. மேலும் அந்த வாழைக்குலையிலிருந்த வரும் பழத்தைக் கொண்டுவந்து தான் இங்குள்ள மடையில் வைப்பார்கள். இங்கு படைக்கப்படும் எந்தப் பொருளும் வீடுகளுக்குக் கொண்டுசெல்லப்பட மாட்டாது. அதுமட்டுமன்றி பெண்கள் இவற்றினைச் சாப்பிடுவதும் கிடையாது (பூசாரி நல்லையா தவராசா).
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வதனமாரில் ஒருவரான முன்னடித் தம்பிரான் தெய்வத்திற்கு பெரிதாக பந்தலினை அமைத்து, இலை-குழைகளினால் அலங்கரித்து வழிபாடியற்றப்படும். இதில் பச்சை அரிசியினையும் பாலினையும் சேர்த்துப் பொங்கல் செய்வர். அதில் வேறெந்தப் பொருளும் சேர்க்கப்படமாட்டாது. அகப்பையினைப் பயன்படுத்தாமல் பொங்கலைப் பொங்க வேண்டும். வாழைப்பழத்தினைக் குலையோடு பந்தலில் வைத்து வெற்றிலை, பாக்கு, பூக்கள் என்பவற்றினையும் மடையில் வைத்து வழிபாட்டினை ஆரம்பிப்பர். ஆண்டுதோறும், மாடு முதற் கன்று ஈன்றதும், பட்டிக்காரர்களால் இளங்கன்றுப் பால் எடுத்து பொங்கல் செய்யப்படும். இளங்கன்று வளர்ந்த பிற்பாடு அதன் பாலை எடுத்துச் சடங்கு செய்வர். இது ‘முதியான் கன்றுப் பால்’ எனப்படும். இரு தடவை செய்ய முடியாதவர்கள் ஒரு தடவை மாத்திரம் செய்யும் சந்தர்ப்பங்களும் உண்டு. பந்தல் போட்டு அப்பந்தலில் முக்காலி கட்டி அம்முக்காலியிலும் பொங்கல், பழம் என்பன படைக்கப்படும். இச்சடங்கானது முறையாகப் பூசாரியினால் செய்யப்பட்டால் முன்னடித்தம்பிரான் பூசாரியினுள் வெளிப்படுவார். பொங்கலைப் படைத்துவிட்டு காட்டிலேயே அதனை விட்டு வருவர். அதனை வீட்டிற்கு எடுத்து வரமாட்டார்கள். பின்னர், படைத்த பொங்கலை காட்டிற்குச் சென்றுதான் உண்ண வேண்டும் என்ற கட்டுப்பாட்டினை விதித்துள்ளனர். குறிப்பாக வீட்டிலுள்ள பெண்கள், குழந்தைகள் இப்பொங்கலை உண்ணக்கூடாது (ஈழத்துப் பூராடனார், 2000). இந்த அடிப்படையில் வன்னித் தம்பிரான் வழிபாடும் முன்னடித்தம்பிரான் வழிபாடும் ஒன்று என்றே கருதத் தோன்றுகிறது.
குமுழமுனைப் பூசாரி தியாகசோதி சந்திரன், தை மாதத்தில் காடுவெட்டி நிகழ்த்தப்படும் வழிபாடாக இதனைக் குறிப்பிடுகின்றார். அவர் கூறுவதன்படி, அது பட்டிப்பொங்கலை அண்மித்து வருதலை அவதானிக்க முடிகிறது. உரிய பூசைத்தினத்திற்கு முதல்நாள் உரல், உலக்கை, சுளகு, நெல் உள்ளிட்ட நெல் குற்றலுக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் சென்று மஞ்சள் நீரினால் கழுவி, நெல்குற்றும் மரத்தடியைத் தூய்மைப்படுத்தி அவ்விடத்தில் வைத்துக் குற்றிய பின், அரிசியை அம்மரத்திலேயே பாதுகாப்பாகக் கட்டி வைத்துவிட்டு வருவர். பெண்கள் புழங்கிய (பயன்படுத்திய) பொருட்களைப் பயன்படுத்துவதில்லை அல்லது அவற்றை மஞ்சள் நீரால் தூய்மைப்படுத்தி எடுத்துச் செல்வர். இச்சடங்கிலும் வழிபாட்டிலும் பெண்களை எந்த வகையிலும் சம்பந்தப்படுத்த முடியாது – கூடாது என்பது இவ்வழிபாட்டின் நியதியாகக் காணப்படுகிறது.

பட்டியில் உள்ள எருது, பசு என்பவற்றில் இருந்து பெறப்பட்ட பாலை நெய்யாக்கி, அதனையும் பாலையும், குற்றித் தீட்டிய அரிசியோடு சேர்த்துக் கட்டி, ஒரு வருடம் நிறைவுற்ற தேங்காயையும் சொட்டுகளாக்கி (துண்டுகளாக்கி), புனிதமாக்கப்பட்ட பானையில் இட்டுப் பொங்குவர். பொங்கலுக்கு நீர் விடப்படுவதில்லை. பானையில் அகப்பையிட்டுக் கிண்டாது இப்பொங்கல் நிகழ்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
இம்மக்கள் தங்கள் வயல்களையும் கால்நடைகளையும் காக்குமாறு வேண்டி வயல்களின் எல்லைகளிலும் மேய்ச்சல் நிலங்களின் – கிராமங்களின் எல்லைகளிலும் காஞ்சுரம் மரத்தில் இருந்து வெட்டியெடுக்கப்பட்ட வலிதான ஒன்றரைப் பாகம் (ஏறத்தாழ ஆறடி) கட்டையை (தடி) நிலத்தில் அடித்து நிறுத்துவர். பின் தென்னை மரத்தில் இருந்து பழுத்து விழுந்த தேங்காய் ஒன்றைத் தெரிவு செய்து மஞ்சள் நீரில் கழுவித் தூய்மைப்படுத்திய பின் திருநீறு, சந்தனம் இட்டு வன்னித் தம்பிரானுக்கு நேர்ந்து, இக்காஞ்சுரங் கட்டையில் கட்டிவிடுவர். இதன் வீரியம் ஒரு வருடத்திற்கு இருக்கும். ஒரு வருட நிறைவில், இத்தெய்வத்திற்கான பொங்கலில் இத்தேங்காயை உடைத்துத் துண்டுகளாக்கி இடுவர். பின்னர், மீளவும் நேர்ந்து தேங்காய் கட்டப்படும். இவ்வாறு தேங்காய் கட்டப்படுவதனால் தமது வயலும் பயிரும், கால்நடைகளும் பாதுகாக்கப்படுவதாக இன்றும் நம்பப்படுகிறது. இவ்வழக்கம் குமிழமுனையிலேயே காணப்படுகிறது.


இந்தத் தெய்வத்துக்கான பூசையின் போது தெய்வமாடினும், குறி சொல்லும் வழக்கம் இல்லை. பூசையின் முடிவில் பூசாரி அடியவர்களுக்கு நெற்றியில் நீறிட்டு ஆசிர்வதிப்பார். முல்லைத்தீவு குமுழமுனையில் படையல்களைத் தட்டுவம் என்கிற பனையோலையில் படைப்பதும், தட்டுவத்திலிட்டே பிரசாதத்தை உண்பதுமான வழக்கம் காணப்படுகிறது. திருகோணமலையில் இலையில் படையலிடும் வழக்கமே காணப்படுகிறது.

சில அவதானிப்புகள்
- வதனமார்களில் ஒருவராகவே வன்னித்தம்பிரான், முன்னடித்தம்பிரான் ஆகியோர் சுட்டப்படுகின்றனர்.
- வதனமார், குமாரதெய்வச் சடங்குகளில் கட்டுக் கூறப்படும். வன்னித் தம்பிரான் தெய்வமேறினும் கட்டுக் கூறுவதில்லை.
- ஏனைய தெய்வங்களோடு வதனமார், குமார வழிபாடுகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில், வன்னித்தம்பிரான் வழிபாடு தனித்தே இன்றும் இடம்பெறுகிறது.
- குமார வழிபாடு, இல்லங்களிலும் நிகழ்த்தப்படுகிறது. வதனமார் தெய்வம் காளி, வைரவர், மாரி கோயில்களில் காவல் தெய்வமாக அமைந்துள்ளது. வன்னித்தம்பிரானோ இன்றும் காடுகளில் வைத்தே வழிபடப்படுகிறார்.
- பூசைக்காலம் முழுவதும் மௌனமாகவே யாவரும் கலந்து கொள்ள வேண்டும். அதேவேளை பூசாரி வாய் கட்டிப் பூசை செய்தல் நீண்டகால மரபாக இருந்து வருகிறது. ஆயினும் முல்லைத்தீவு குமுழமுனை வன்னித்தம்பிரான் வழிபாட்டில் தற்போது வாய் கட்டிப் பூசை செய்யப்படுவதில்லை.
- அந்தரத்தில் முக்காலியோ, அன்றிச் சிறுபரணோ அமைத்துப் படையல் வைப்பதும், பொங்கலைப் பானையோடு வைத்தே படைப்பதும் பொதுப்பண்பாக உள்ளது.
- திருகோணமலைப் பிரதேசத்தில் வன்னித்தம்பிரான் முன்பு பரணிட்டு அதன் மேல் குழைகளைப் பரவி, அதன்மீது பெரிய காட்டிலைகளில் அல்லது வாழையிலைகளில் படையலை வைத்துப் படைக்க, முல்லைத்தீவில் பனையோலையிலான தட்டுவத்தில் வைத்துப் படைக்கின்றனர்.
- பூசாரி படையலுணவை முதலுண்ணத் தொடங்குவார். ஏனையோர் அதன் பின் உண்ணத் தொடங்குவர். முழுவதும் உண்ணப்பட வேண்டும் என்பதோடு பூசாரி இடத்தைவிட்டு எழுந்த பின்பே ஏனையோர் எழமுடியும்.
- ஆண்கள் மட்டுமே பங்குபற்றும் வன்னித்தம்பிரான் பூசையில் பெண்களுக்கு இடமில்லை என்பது மட்டுமல்ல, அவர்கள் அளைந்த பொருட்களைப் பாவிக்கக்கூடாது; அன்றிப் புனிதப்படுத்திப் பாவிக்க வேண்டும்.
முடிவுரை
ஈழத்தில் வடக்குக் கிழக்குப் பிராந்தியங்களில், குறிப்பாக திருகோணமலை, முல்லைத்தீவுப் பிராந்தியங்களில் காணப்படும் கால்நடை, விவசாய கலப்புத்தொழில் செய்கின்ற மக்களின் வழிபடு தெய்வமே வன்னித்தம்பிரான். இவர் வன்னித் தெய்வம் எனவும் சுட்டப்படுகின்றார். காடுகளில் வைத்து வழிபடப்படுகின்ற, உருவமற்ற மரங்களில் வீற்றிருக்கும் தெய்வமாக இது கருதப்படுகிறது. இதனால் படையல்களும் உயரமான இடத்தில் – அந்தரத்தில் வைத்தே வழிபடப்படுகின்றன. இது வதனமார் வழிபாட்டோடு இணைந்த கதையாடல்களையும் வழிபாட்டு மரபுகளையும் கொண்டு அமைவதோடு, முன்னடித்தம்பிரான் வழிபாட்டோடு ஒத்தமைந்ததாகவும் காணப்படுகிறது. ஒரேவிதமான அடிப்படையில் ஒன்றான இத்தெய்வம், பிராந்தியப் பண்பியலுக்கேற்ப மாறுபட்டுக் காணப்படுவதாகவே எண்ணத் தோன்றுகின்றது. ஈழத்துக்கான வன்னியர் மரபோடும் இது இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கால்நடையோடு இயைந்த விவசாயம் என்பது இன்று வேளாண்மையாகக் கருதப்படுவதற்கான முன்னோடி வாழ்வின் விளைவே வன்னித்தம்பிரான் வழிபாடு ஆகும். ஆயினும், இன்று நிலவியல்சார் பிரச்சினைகளால் கால்நடை வளர்ப்பு அருகி வருகிறது. கால்நடை வளர்ப்பில் உள்ள சவால்கள் (மேய்ச்சல் நிலமின்மை, அபகரிப்பு, குடியேற்றம்), ஆர்வமின்மை, நவீன வாழ்வு, இதனைத் தாழ்வாகக் கருதுதல் முதலான பல சிக்கல்கள் இதற்கு ஏதுவாகின்றன. இதனால் வன்னித் தம்பிரான் வழிபாடும் அருகி வருகின்றது.