Arts
10 நிமிட வாசிப்பு

பொற்கொல்லன் நாகன் பற்றிக் கூறும் அனுராதபுரம் – வெஸ்ஸகிரி கல்வெட்டுகள்

June 27, 2024 | Ezhuna

‘இலங்கை பிராமிக் கல்வெட்டுக்களில் நாகர்’ எனும் இத்தொடர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை தொல்லியல் ரீதியாக நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களைக் கொண்ட ஆவணமாகும். நாகர் தமிழ் மொழி பேசியவர்கள் எனவும், ஆதி இரும்புக் காலப் பண்பாட்டை பிரதானமாக அவர்களே இலங்கையில் பரப்பினார்கள் எனவும், இங்கு கி.மு ஏழாம் நூற்றாண்டு முதலாகத் தமிழ் ஒரு பேச்சு வழக்கு மொழியாக நிலை பெற்றிருந்தது எனவும் பேராசிரியர் எஸ். பத்மநாதன் கூறியுள்ளார். இலங்கையில் 2300 ஆண்டுகளுக்கு முன்பு பொறிக்கப்பட்ட சுமார் 100 பிராமிக் கல்வெட்டுக்களில் நாக மன்னர்கள், நாக தலைவர்கள், நாக பிரதானிகள், நாக சுவாமிகள், நாக அதிகாரிகள் ஆகியோர் பற்றிய குறிப்புகள் உள்ளன. இலங்கையின் வரலாற்றுதயக் காலத்தில் நாக எனும் பெயர் கொண்ட மன்னர்கள் பலர் ஆட்சி செய்துள்ளனர். இவர்களில் பலர் தமிழ்ச் சமூகத்தோடு தொடர்புடையவர்கள். இவர்கள் பற்றிய வரலாறு மற்றும் வழிபாட்டுப் பாரம்பரியம் ஆகியவை பிராமிக் கல்வெட்டுக்களை ஆதாரமாகக் கொண்டு இத்தொடரில் ஆராயப்படுகின்றன.

அனுராதபுரம் புனித நகரில் உள்ள இசுருமுனிய விகாரையின் தெற்குப் பக்கத்தில் சுமார் 600 மீற்றர் தூரத்தில் வெஸ்ஸகிரிய கற்குகைகள் மற்றும் கட்டிட இடிபாடுகளைக் கொண்ட வளாகம் அமைந்துள்ளது. சுமார் 500 மீற்றர் நீளம் கொண்ட இவ்வளாகத்தின் மத்தியில் உள்ள நீண்ட பாறைத் தொடரில் 10 இற்கும் மேற்பட்ட கற்குகைகளும், இங்கிருந்து சற்று தூரத்தில் இன்னும் சில கற்குகைகளும் உள்ளன.  

இங்கு மொத்தமாக 24 பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் ஒன்றைத் தவிர ஏனையவை முற்கால பிராமிக் கல்வெட்டுகளாகும். இக்கல்வெட்டுகளில் இரண்டில் நாகர் பற்றி பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“தலதர நாகய புத தேவஹ லேனே அகட்ட அனகட்ட சட்டு திச சகச”

இது ஆங்கிலத்தில், “The cave of Deva, son of Nagaya the Goldsmith, [is given] to the sangha of the four quarters, present and absent.” எனப் பொருள்படும். தமிழில் இது, “பொற்கொல்லன் நாகனின் மகனான தேவனின் குகை, நான்கு திசைகளிலும் இருந்து சங்கத்தார் வந்தாலும், வராவிட்டாலும் வழங்கப்பட வேண்டும்” எனப் பொருள்படும்.

inscription 1

வீட்டு உரிமையாளர் நாகன் பற்றிய கல்வெட்டு

நாகர் பற்றிக் குறிப்பிடும் இரண்டாவது கல்வெட்டில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது,

“கபதி நாக புத திசஹ லேனே சகச” 

இது தமிழில், “வீட்டு உரிமையாளர் நாகனின் மகன் தீசனின் குகை சங்கத்தாருக்கு” எனப் பொருள்படும். ஆங்கிலத்தில் இதன் பொருள், “The cave of Tissa, son of the house holder Naga, [is given] to the sangha” என்பதாகும்.

வெஸ்ஸகிரி குகைகளில் ஒன்றில் காணப்படும் கல்வெட்டு ஒன்றில் ‘விசதேவ’ எனும் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இது இராவணின் தந்தையான விஷ்ரவசு முனிவரின் பெயர் எனவும், இது அவர் வாழ்ந்த இடம் எனவும், அதனால் தான் அவரின் பெயர் இக்குகையில் பொறிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாகவே இவ்விடம் வெஸ்ஸகிரி எனப் பெயர் பெற்றதாகவும் கலாநிதி சூர்ய குணசேகர, ஆய்வாளர் தனேஷ் கொடிப்பிலி ஆராச்சி ஆகியோர் தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

inscription 2
cave
cave 2

பரத நாகன் பற்றிக் குறிப்பிடும் பில்லாவேகல கல்வெட்டு

அநுராதபுரத்தில் இருந்து வடமேற்கு நோக்கி அரிப்புக்குச் செல்லும் வீதியில் ஓயாமடுச் சந்தி உள்ளது. இங்கிருந்து வடக்குப் பக்கமாக தந்திரி மலைக்குச் செல்லும் வழியில் உள்ள பில்லாவே என்னுமிடத்தின் அருகில் உள்ள மலைப்பாறைகள் நிறைந்த பகுதியே பில்லாவேகல எனும் இடமாகும். இவ்விடம் தற்போது “பரத நாக லேன” என அழைக்கப்படுகிறது.    

இங்குள்ள மலைப்பாறைகளில் இயற்கையான பல கற்குகைகள் அமைந்துள்ளன. இவற்றில் பல கற்புருவங்கள் வெட்டப்பட்ட குகைகளாகும். இக்குகைகளில் மொத்தமாக 10 பிராமிக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 3 முற்கால பிராமிக் கல்வெட்டுகளும், 7 பிற்கால பிராமிக் கல்வெட்டுகளும் அடங்குகின்றன. இவற்றில் நாகர் பற்றிய இரு கல்வெட்டுகள் உள்ளன. ஒரு கல்வெட்டு முற்கால பிராமிக் கல்வெட்டாகும். அதன் விபரங்கள் பின்வருமாறு,

“பரத நாகக லேனே சகச”

இது தமிழில் ‘பரத நாகனின் குகை’ எனப் பொருள்படும். ஆங்கில மொழியில் இதன் பொருள் “The cave of lord Naga [is given] to the sangha” என்பதாகும்.

இக்கல்வெட்டில் ‘பரத நாக’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலுள்ள ‘பரத’ எனும் சொல் பற்றி பேராசிரியர் சி.க. சிற்றம்பலம் பின்வரும் விபரங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

“பத/பரத போன்ற பதங்கள் பரதவர் என்ற சமூகப் பிரிவினரைக் குறித்தன. அனுராதபுர மாவட்டத்தில் நாக என்ற வழிபாட்டுப் பெயரைத் தாங்கிய பரதவர்களின் கல்வெட்டுகள் ஆறு இடங்களில் காணப்படுகின்றன. இவற்றில் நான்கு கல்வெட்டுகளில் “பத நகஹ லெணெ” என்ற வாசகம் காணப்படுகிறது. இதன் கருத்து, “நாக என்ற வழிபாட்டுப் பெயருடைய பரதவ குலத்தவரது குகை என்பதாகும்.”

பேராசிரியரின் மேற்சொன்ன குறிப்பின்படி இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நாகன் என்பவன் பரதவர் எனும் தமிழ்ச் சமூகத்தை சேர்ந்தவன் எனத் தெரிகிறது. 

inscription 3

மன்னன் நாகன் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு

நாகர் பற்றிக் குறிப்பிடும் அடுத்த கல்வெட்டு பிற்கால பிராமிக் கல்வெட்டாகும். இது பொ.ஆ 2 ஆம் நூற்றாண்டுக்குரியதாகும். இரண்டு வரிகளில் பொறிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டிலுள்ள விபரங்கள் பின்வருமாறு,

“சித விகர மவிட்ட பரிஹ சத்த கொவக சிவஹ லேனே-

-சத்து திசிக சகய நியதே நாக ரஜஹ ரஜஹி மவிடே” 

இதன் பொருள் ஆங்கிலத்தில், “Hail, The cave of Siva, who caused this Monastery to be built and who is the guardian of the umbrella of the assembly has been dedicated to the sangha of the four directions. (The Monastery) was built in the reign of King Naga” என்பதாகும்.

இது தமிழில் “மன்னன் நாகனின் ஆட்சிக் காலத்தில், மடாலயத்தைக் கட்டக் காரண கர்த்தாவாக இருந்தவரும், ராஜ சபைக்குப் பொறுப்பானவருமான சிவன் தனது கற்குகையை, இம்மடாலயத்துக்கு நாலா திசையிலிருந்து வரும் சங்கத்தாருக்காக தானமாக அர்ப்பணித்தான்” எனப் பொருள்படும்.

இக்கல்வெட்டில் உள்ள வாசகங்களின்படி நாக மன்னனின் ஆட்சியில் சிவன் என்பவன் அரச நிர்வாகத்திலும், சமயச் செயற்பாடுகளிலும் முக்கியஸ்தனாக விளங்கியுள்ளான் எனத் தெரிகிறது.  

inscription 4
nagar cave
nagar cave

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

3068 பார்வைகள்

About the Author

என். கே. எஸ். திருச்செல்வம்

கடந்த 25 வருடங்களாக இலங்கைத் தமிழர் வரலாறு, தமிழர் வழிபாட்டுப் பாரம்பரியம், பிராமிக் கல்வெட்டுகள், இந்து சமயம் என்பன தொடர்பாக ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுவரும் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம் அவர்கள் வரலாற்றுத்துறையில் இளமாணிப் பட்டத்தைப் பெற்றவர். தனது எழுத்துப்பணிக்காகப் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் இதுவரை பல உள்நாட்டு மற்றும் சர்வதேசக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளதுடன் 18 நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் ‘தென்னிலங்கையின் புராதன இந்துக்கோயில்கள்’, ‘புதையுண்டுபோன புராதன இந்துக் கோயில்கள்’, ‘இந்து சமயம் ஓர் அறிவியல் பொக்கிஷம்’, ‘யார் இந்த இராவணன்’, ‘பாரம்பரியமிக்க கதிர்காம பாத யாத்திரை’, ‘பண்டைய தமிழ் நூல்களில் சிவன்’, ‘கன்னியா: பண்டைய சைவத் தமிழரின் பாரம்பரிய அடையாளம்’, ‘தமிழரின் குமரி நாடு உண்மையா? கற்பனையா?’ போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும். இவர் தேசிய மற்றும் சர்வதேச சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகியவற்றில் இதுவரை 295 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)