இந்திய அரசியலமைப்பை எவ்வாறு வகைப்படுத்துவது என்பது தொடர்பில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வந்திருக்கின்றன. ஆரம்பத்திலே அது ஒரு பலமான ஒற்றையாட்சி சார்புள்ள ஒரு கூட்டாட்சி என்றவாறாக தான் அந்தப் பார்வை இருந்தது. காரணம் இந்திய உபகண்டத்தின் பிரிவினையின் தாக்கம் கூடுதலாக அரசியலமைப்பு உருவாக்கத்தில் இருந்தது. 1990 களுக்குப் பின்னர் இந்திய அரசியல் மிக அடிப்படையில் ஒரு பிராந்திய அரசியலை நோக்கிய நகர்வானது இந்திய அரசியலமைப்பையும் அடிப்படையில் மாற்றி புரட்டிப் போட்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். எவ்வாறு அரசியலமைப்பினுடைய வியாக்கியானம் என்பது அரசியலை பின்தொடர்வது என்பதற்கு இந்திய அரசியல் அமைப்பினுடைய பரிணாம வளர்ச்சி ஒரு உதாரணமாக அமையும் என்று கூறுவார்கள். மாநில கட்சிகள் பலமடைய மத்திய கட்சிகள் வலுக் குன்றியதாக போக இந்தியாவினுடைய அரசியல் அமைப்பானது கூடுதலாக வீரியமாக சமஷ்டி பண்புகளுடன் வீறுபெற்றது என்று சொல்வார்கள். நரேந்திர மோடியினுடைய இரண்டு அடுத்தடுத்த பெரும் வெற்றிகள் காரணமாக இதில் மாற்றம் ஏற்பட்டு மீள இந்திய அரசியலமைப்பினுடைய போக்கானது ஒரு ஒற்றையாட்சி பண்புடன் பிரயாணிக்கின்றது என்ற அண்மைக் காலங்களில் முன்வைக்கப்பட்டு வந்தது. நரேந்திர மோடி பாரத பிரதமராக பதவியேற்ற பின்னராக இந்திய நீதித்துறை கூடுதலாக ஒற்றையாட்சி பண்புகளை கொண்டதாகத்தான் இந்திய அரசியலமைப்பை பொருள்கோடல் செய்து வந்தது என்று ஒரு குற்றச்சாட்டு இருந்தது. இந்த இடத்தில்தான் தற்போது பேரறிவாளன் விடுதலை தொடர்பாக இந்திய உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இந்தத் தீர்ப்பு பேரறிவாளனுக்கு பொதுமன்னிப்பு கொடுத்து விடுதலை செய்யக் கூடிய அதிகாரம் படைத்த நபர் யார் என்பது தொடர்பில் தான் இங்கே முக்கியமானதாக இருக்கின்றது.