இயற்கையோடு ஒட்டி வாழத் தலைப்பட்ட காலத்தில் இருந்து மனித வாழ்வில் சடங்குகளும் சமயங்களும் உருவாகத் தொடங்கின. இயற்கையை வழிபடத் தொடங்கிய மனிதர், அதனைத் திருப்திப்படுத்த பல சடங்கு சம்பிரதாயங்களைச் செய்ய முற்பட்டனர். மக்களின் வாழ்க்கையோடு இயைந்த வழக்காறாக, நிலப் பண்பாடாக அவை வளர்ந்தன; சமய வழிபாட்டு முறைகள், சடங்குகள், நம்பிக்கைகள், கலைகள் என பன்முகப்படுத்தப்பட்டன. அவை பற்றி உரையாடல்கள் கர்ண பரம்பரைக் கதைகள், வாய்மொழிப் பாடல்கள், வெறியாடல்கள், கூத்துகள் எனப் பல தளங்களில் பரிணமித்தன. இவை கிராமியத் தெய்வங்களைத் தந்தன. அவற்றின்வழி மேன்மேலும் விரிவாக்கமுற்றன. இயற்கையோடு இயைந்த வாழ்வில் தெய்வ – சமய நம்பிக்கை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. சமய நம்பிக்கையின் பாற்பட்ட வகையில் சமயச் சடங்குகள், நேர்த்திக்கடன்கள் என்பன மென்பக்தி – வன்பக்தி சார்ந்தவையாக வெளிப்படுத்தப்படுகின்றன. மக்களது நம்பிக்கைகளின் புலப்பாடுகளாகவும்; மக்களிடம் மேலும் நம்பிக்கையை ஊட்ட வல்லனவாகவும் கிராமியக் கலைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்ச் சமூகத்தில் நின்று நிலவுகின்ற கிராமியத் தெய்வங்களுள் ஒருவராக காத்தவராய சுவாமி (காத்தான், வழுக்கு மரத்தான்) சுட்டப்படுகிறார். காத்தான் பற்றிய கதையாடல்கள் – கதைப் பாடல்கள் – உடுக்கடிப் பாடல்கள் தெருக்கூத்தாக, மேடைக்கூத்தாக, சிந்து நடைக் கூத்தாக அது பல நிலைகளில் தமிழர்களிடையே நிலவி வருகிறது. கூத்து என்ற வகையில் கிறிஸ்தவர்களாலும் காத்தவராயன் கூத்து ஆடப்பட்டு வருகிறது .
காத்தவராய சுவாமி – பெயர் பற்றிய உரையாடல்கள்
சிலப்பதிகாரத்தில் ‘சாத்தன்’ என்ற காவல் தெய்வம் கூறப்படுகிறது. சாத்தன் என்பதை ஐயப்பன் என்னும் ஹரிகரபுத்திரனாக சில ஆய்வாளர் குறிப்பிடுகின்றனர்; சாத்தன் – காத்தன் – காத்தான் எனவும் கொள்ளலாம். அதேபோல் இராமாயணத்தில் வருகின்ற உத்தரகாண்டத்தில் இராவணனைக் கொல்லக்கூடிய ஆற்றல் படைத்தவனாகச் சுட்டப்பட்ட காத்த வீரியன், ‘காத்தவராயன்’ எனப் பிற்காலத்தில் சுட்டப்பட்டிருக்கலாம்.
சாத்தான், ஐயப்பன், காத்தான் மூன்றுமே காவற் தெய்வங்களாகக் குறிப்பிட்ட காலம் வரை தனித்தனியே வழிபடப்பட்ட தெய்வங்கள். அதிலும் ஐயப்பன் ஹரி – ஹர இணைவினால் பிறந்ததை ஒத்த கதையையே காத்தவராயனின் கதையும் கொண்டமைந்துள்ளது. சிவன் ஆணாகவும் திருமால் பெண்ணாகவும் உருவெடுத்த காலத்தில் தோன்றிய குழந்தையே காத்தவராயன் எனப்படுகிறார். ‘ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள்’ என்பது போல் ஒரே கதை வெவ்வேறு பிரதேசங்களில் வெவ்வேறு விதமாகக் கூறப்பட்டிருக்கலாம். காத்தவராயன் ‘காத்தவன், காத்தான், காத்தையன், காத்தமுத்து, காத்தலிங்கர், காத்தலிங்க சுவாமி எனப் பல பெயர்கள் கொண்டு குறிப்பிடப்படுகின்றார். எல்லாப் பெயர்களிலும் ‘காவல்புரிபவர்’ என்ற தொனிப்பொருள் உள்ளடங்கியிருக்கிறது. காத்தான் என்பதை ‘காளியால் காக்கப்பட்டவன்’ என்று பொருள் சுட்டப்படுகிறது. ‘காத்தையன்’ என்னும் பெயர் திருமுருகாற்றுப்படையில் முருகனைக் குறித்து நிற்பது குறிப்பிடத்தக்கது. காத்தான் பற்றி எழுந்த பிற்காலக் கதைகள் சில முருகனின் திரு அவதாரமாகவே காத்தனைக் குறிப்பிடுவது ஒப்பு நோக்கத்தக்கது.
காத்தவராய சுவாமி பற்றிய கதைகள்
1. காத்தவராய நாடகம் – தக்கன் யாகத்திற்கு ஈசன் மறிக்கவும் நில்லாது சென்ற பார்வதி தேவி அவமானப்பட்டுத் திரும்பியதும், வீரபத்திரர் தோன்றி தக்கன் யாகத்தை அழித்தார். ஈசன் ஈஸ்வரியை ‘பூதலத்தில் பிறந்து பாவம் தீர்ப்பாய்’ எனக் கூற, அப்பாவம் போக்க புத்திரன் வேண்டும் என்றும், இத்தலத்தில் உள்ள நந்தவனங்களைக் காக்கப் புத்திரன் வேண்டும் என்றும், வேண்டியதன் பயனாகப் பிறந்தவரே காத்தவராய சுவாமி.
2. காத்துமுத்து நாடகம் – ஈஸ்வரனின் பரிபூரணத்தில் சந்தேகம் கொண்டு அல்லது பரிசோதிக்கும் பொருட்டு ஈஸ்வரி எறும்பு ஒன்றைப் பிடித்து ‘சிமிழி’ ஒன்றினுள் அடைத்து வைத்துள்ளார். அடுத்த நாள் அந்தச் சிமிழியைத் திறந்து பார்த்தபோது அவ்வெறும்பின் வாயில் ‘நொய்’ (அரிசிக் குருணல்) இருக்கக் கண்டு திகைத்துத் தான் செய்த தவறுக்காக ஈசனிடம் மன்னிப்புக் கூறியுள்ளார். எறும்பைத் துன்புறுத்திய பாவம் நீங்க பூமியில் பிறந்து நதிக்கரைகளில் பூங்காவனங்கள் அமைத்து விமோசனம் பெறுமாறு ஈசன் கட்டளையிட்டார். அப்போது ஈஸ்வரி பூங்காவனத்தைக் காக்க மகவொன்று வேண்டும் என்று கேட்டதற்கிணங்க முருகன் காத்தவராய சுவாமியாக அவதரித்தார்.
3. சிவவாக்கியர் போதம் – தக்கன் தன் யாகத்தில் இடம்பெற்ற தவறை உணர்ந்து வீரபத்திரர் தன்னை அழிக்கும் சந்தர்ப்பத்தில் தான் சிவத்தலங்களில் காவல் தெய்வமாக இருக்க வேண்டும் என வேண்டியதற்கிணங்க, அதன் வழி தக்கனே காத்தவராய சுவாமியாக அவதரித்ததாகக் கூறப்படுகிறது.
4. காத்தவராயன் கதைப்பாடல் – சேப்பிள்ளையான் எனும் காவல் அதிகாரியின் வளர்ப்பு மகனே ‘பரிமளம்’ (பரிமணம்) என்ற காத்தவராயன் ஆவார். இவர் பறையர் குலத்தவர். பிராமணப் பெண்ணான ஆரியமாலாவை மணந்து நாட்டைவிட்டு ஓடியவர். இவரைக் கண்டுபிடித்து கழுவேற்றம் செய்ய அரசன் முடிவு செய்ததாகவும், பின்னர் இவர் வாதங்களில் உள்ள நியாயங்களை ஏற்று மன்னித்ததாகவும், ஆயினும் காத்தவராயன் தானாகவே முன்வந்து கழுவேறியதாகவும் இந்நூல் கூறுகிறது. இக் கழுவேற்றத்துக்குக் காரணமாக, கைலாசத்தில் சிவனுடன் இருந்த காலத்தில் ஆறு தேவப் பெண்களைக் கண்டு ஆசை கொண்டதாகவும், அதனால் பூவுலகில் பிறந்து அவர்களை மணந்து கழுவேறிச் சாகவேண்டும் என இறைவன் சபித்ததாகவும் கூறப்படுகிறது. இது இரு பெண்கள் மீது ஆசை கொண்ட ‘ஆலகால சுந்தரரின்’ கதையை ஒத்ததாக உள்ளது.
5. ஈழத்துக் காத்தான் கூத்துப் பிரதிகள் – ஈழத்தில் பதிப்பிக்கப்பட்ட காத்தவராயன் பாடல்கள், கூத்துப் பிரதிகள் யாவும் காத்தானை ஆதி சிவனின் மைந்தனாகவும் மாரியம்மனின் வளர்ப்பு மகனாகவும் சுட்டுகின்றன. உமையின் இளைய சகோதரியான மாரியம்மன் திருமணமாகாத கன்னித் தெய்வமாவாள். சிவனும் திருமாலும் மான்களாக மாறிப் பெற்றெடுத்த மான் கன்றை மாரியம்மன் கைகளால் தூக்க, அது ஆண் குழந்தையாக மாறுகிறது. அக் குழந்தையை மாரியம்மன் வளர்த்து வரும் காலத்தில், கங்கை பெருக்கெடுத்து இருவரையும் அழிக்க வருகிறது. அப்போது குழந்தை கங்கையை காலால் மறித்துத் தாயைக் காத்தது. வளர்ந்து தாயின் நந்தவனத்தையும் காத்து வந்தது. இவ்விரு காரணங்களாலும் அது காத்தான் எனும் பெயர் பெற்றது.
மேற்குறிப்பிட்ட ஐந்து கதைகளும் காலந்தோறும் காத்தான் பற்றிய பல்வேறு கதைகளாக பிரதேச, கால வேறுபாடுகளுக்கேற்ப வாய்மொழி மரபின் வழி பேணப்பட்டு வந்து நூலுருப் பெற்றுள்ளன. காத்தவராயன் நாடகம் எனும் பிரதியில் மட்டும் கழுவேற்றம் பற்றிய குறிப்பு இல்லை. சிவவாக்கிய போதம் மட்டுமே தக்கனின் அவதாரம் எனக் காத்தனைக் குறிப்பிடுகின்றது. காத்தானை முருகனின் அவதாரம் எனக் கூறும் சில கதைகளும் உண்டு. இவை தவிர மேற்சொன்ன கதைகள் பலவற்றையும் உள்வாங்கி பிறிதாக இன்னொரு கதையும் கூறப்படுகிறது.
பார்வதி சிற்றெறும்பை சிமிழியிலடைத்த கதையைக் கூறி இறை சாபத்தால் நந்தவனம் அமைத்துப் பராமரித்தாள். அதற்குக் காவலாக காத்தான் எனும் ஒரு வாலிபனை நியமித்தாள். சப்த கன்னியர்கள் சித்திரப் பொய்கையில் நீராடிய பின், இந் நந்தவனத்து மல்லிகை மலர்களைப் பறித்து கொண்டு கைலை சென்றனர். இதனை அவதானித்த காவலாளி அவர்கள் நீராடும் போது அவர்களின் ஆடையை எடுத்து மறைத்ததாலும், ஆடையில்லாததால் இளைய கன்னி நீரினுள் நிற்க, ஏனையவர் கைலை சென்று சிவனிடம் முறையிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபம் கொண்ட சிவன் காத்தானை ‘ஏழு பிறவிகள் எடுத்து கழுவேறி இறக்கச் சாபம்’ கொடுத்தார். இடைமறித்த பார்வதி ‘தீயில் உடல் வேகலாகாது’ என சாப நீக்கம் அளித்தார். இவ்வாறு இடைமறித்ததால் பார்வதிக்கும் சாபம் வழங்கப்பட்டது. காத்தான் நான்காவது பிறப்பில் தாயைச் சந்தித்ததும் ஆரியமாலாவை கரம் பிடித்து கழுவேறியதுமாக இக்கதை அமைகிறது. இக்கதை தமிழகப் பிராந்தியங்கள் பலவற்றைச் (கொல்லிமலை, கம்பா நதி) சுட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது. கழுமரம் காத்தவராயனின் அடையாளமானதற்குப் பின்னணியில் துயர் மிகுந்த காதல் கதை ஒன்று மறைந்திருக்கிறது. காத்தவராயன் 14 ஆம் நூற்றாண்டில் திருச்சிக்கு அருகே வாழ்ந்த காவற்காரன். அப்போதே காதல் புரட்சி செய்து தண்டிக்கப்பட்டவன். மரணத்துக்குப் பிறகு சாமியாகி பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு நம்பிக்கையாகத் திகழ்கிறவன் எனக் கூறப்படுகிறது. தமிழகச் சூழலில் காமாட்சி அம்மன் கோயில்களில் முதன்மையான காவல் தெய்வமாக காத்தவராயன் வழிபடப்படுகின்றார். ஈழத்தில் முத்துமாரியம்மன் வழிபாட்டோடு தான் காத்தவராயன் வழிபாடு இணைக்கப்பட்டுள்ளது. காத்தவராய சுவாமிக் கதைகள் இன்று வரை கால, தேச, வர்த்தமானத்துக்கு ஏற்ப பலவாறு பரிணமித்துக் கொண்டிருக்கின்றன.
காத்தவராயன் பற்றிய இக்கதைகள் யாவும் பலவாக அமைந்தாலும் மாரியம்மன் வழிபாடும், காத்தவராய சுவாமி வழிபாடும், கழுமர வழிபாடும் ஒன்றாக நின்று நிலைத்துவிட்டன; மக்கள் மனதில் பெரு நம்பிக்கையை வளர்த்து விட்டன. விஜய நகரக் காலத்துக்கு முந்தைய கதையாகவும் வழிபாடாகவும் இது கருதப்படுகிறது. பலதார மணம், பரத்தமை உள்ளிட்ட நாயக்கர் கால வாழ்வியல் இப் பிரதிகளில் காணப்படுகின்றது.
ஈழத்துக் காத்தவராய சுவாமி கோயில்கள்
மாரியம்மன் கோயில்களில் பெரும்பாலும் கழுமரமும் காத்தவராய சுவாமி சிலையும் வைத்து வழிபடும் மரபு எங்கும் காணப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா, இலங்கை போன்ற தேசங்களில் செல்வாக்கு மிக்க இக்காவல் தெய்வத்துக்கு, தனியான கோயில்கள் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன.
ஈழத்தில் அல்வாய், பருத்தித்துறை, திக்கம், வராத்துப்பளை, ஊரணி, நெடியகாடு (வல்வெட்டி துறை), நெடுங்கேணி, திருகோணமலை உள்ளிட்ட பல இடங்களில் தனியான காத்தவராய சுவாமி கோயில்களும், வல்வட்டித்துறை, அல்வாய், வேலிவத்தை, மாயக்கை, பருத்தித்துறை, தும்பளை, அளவெட்டி, கோண்டாவில், திருநெல்வேலி, திருகோணமலை (நிலாவெளி), முல்லைதீவு (புதுக்குடியிருப்பு), மட்டக்களப்பு போன்ற இடங்களில் உள்ள முத்துமாரியம்மன் கோயில்களோடு இணைந்த காத்தவராய சுவாமி கோயில்களில் கழுமரமும் காணப்படுகின்றன.
வழிபாட்டு முறைகள்
இத் தெய்வத்திற்கான வழிபாட்டு முறை இரு முறைகளில் நிகழ்த்தப்படுகிறது:
1) மாரியம்மன், காளியம்மன் கோயில் சடங்குகள் நிகழ்த்தப்படும் போது இணைத் தெய்வமான காத்தவராயருக்கும் சடங்கு வழிபாடுகள் நிகழ்த்தப்படும்.
2) காத்தவராய சுவாமி தனிக் கோயில்களில் தனியான சடங்கு வழிபாடுகள் நிகழ்த்தப்படும்.
பெரும்பாலான மாரியம்மன் கோயில்களில் காத்தவராயருக்கு தனி சந்நிதியோ அல்லது கழுமரம் மட்டுமோ காணப்படுகிறது. மாரியம்மன் அம்மை, பொக்குளிப்பான், சின்னமுத்துப் போன்ற நோய்களைத் தருபவளாகவும், தன்னை வணங்குபவருக்கு நோய் தீர்க்கும் தெய்வமாகவும் கருதப்படுபவள். அதனால் பயபக்தி நிறைந்த வழிபாட்டிற்குரிய தெய்வத்துக்கு குளிர்ச்சிச் (குளிர்த்தி) சடங்கு நிகழ்த்தப்படும்; பொங்கல் பொங்கி வேள்வி நடத்துவர். வேள்வியில் கோழி, ஆடு போன்றவற்றை பலி கொடுக்கும் வழக்கமும் இருந்து வந்துள்ளது. பொங்கலோடு பழவகைகள், பலகாரங்கள், வெற்றிலை, பாக்கு என்பவை வைத்து மடை பரப்புவர். இவ்வாறே காத்தவராய தனிக் கோயில்களிலும் மடை பரப்பப்படும். முன்னைய காலத்தில் காத்தவராயருக்கு இடப்படும் மடைகளில் இறைச்சி, மீன், கள், முட்டை என்பவற்றோடு பல்வேறு வகைத் தானியங்களில் அவிக்கப்பட்ட பிட்டுகளும் மரவள்ளி, தவிடு போன்றவற்றாலான பிட்டுகளும் படைக்கப்படும். கருவாடும் சுட்டுப் படைக்கப்படும். பூசாரியாக அவ்வக் குலத் தோன்றல் பூசையைச் செய்வார். வேள்வியின் போது பறைமேளம் இசைக்கப்படும். மத்தளம், உடுக்கு இசைக்கும் வழக்கமும் இருந்துள்ளது.
இத் தோற்கருவிகள் இசைக்கப்படும் போது பூசாரிகளோ அல்லது வேறு எவரோ தெய்வமேறி உருக்கொண்டாடுவர். கலை வந்து விட்டதாக, தமது தெய்வம் அருள் புரிய வந்து விட்டதாகக் கருதி மக்கள் வழிபடுவர். உருவேறியவர் குறி சொல்வார்; இறுதியில் வெறியாட்டுவோர் பறையிசை ஒலிக்க செம்பு நீர், கோயில் பிரம்பு என்பவற்றுடன் அருகிலிருக்கும் நாற்சந்தியையோ அல்லது முற்சந்தியையோ அடைந்து பூசை செய்து எலுமிச்சங்காய்களை வெட்டி எறிவார். அவை நிமிர்ந்து விழும் பட்சத்தில் ‘வழிவெட்டிவிடுதல்’ சடங்கு சிறப்பாக நடைபெற்றதாகக் கருதப்படும். இதற்குப் பதிலாக கோழி, ஆடு போன்றவற்றை பலி கொடுக்கும் வழக்கமும் இருந்து வந்துள்ளது. சடங்குகள் முடியும் தறுவாயில் தெய்வமாடியோர் சன்னதம் இழந்து நிலத்தில் விழுவர். இது தெய்வம் மலையேறிவிட்டதாகக் கருதப்படும். பின்பு பக்தர்களுக்கு பூசாரி திருநீறு, சந்தனம், தீர்த்தம் முதலியவற்றை வழங்குவார்.
மட்டக்களப்பில் நிகழ்த்தப்படும் மாரியம்மன் சடங்கு தனித்துவமானது. மாரியம்மன் சாபத்தால் தான் இழந்த அனைத்து ஆற்றல்களையும் மீளப் பெறுவதற்காக தவ நிலைக்கு ஏறச் செல்லும்போது, காத்தான் தடுப்பதும், இதனால் மாரியம்மன் காத்தானை கழுமரத்தில் ஏற்றிக் கட்டிவைத்து விட்டுச் செல்வதும், தவநிலை முடிந்து ஆற்றல்களை பெற்றுவரும் மாரி, காத்தானை கழுமரத்தில் இருந்து இறக்கி திருவருள் புரிவதும் முக்கியம்சங்களாகும். இவ்விடங்களில் கழுமரத்தில் வாழைப்பழச் சீப்புகளை கட்டிவிடுவதும், கழுமரத்திலேறிய காத்தான் அவற்றைப் பிடுங்கி மக்களுக்கு ஏறிதலும் நடைபெறுகின்றன. சடங்கில் காத்தானின் ஆடல் சிறப்பாக அமையும். இசையோடு கூடிய பாடலும் சிலம்பு, உடுக்கு, பறை உள்ளிட்ட பல்வேறு இசைக்கருவிகளின் இசையும் ஆட்டத்தை உச்சத்திற்கு இட்டுச்செல்லுகிறது. காத்தவராயன் கும்மி, காத்தான் – ஆரியமாலா காதல், காத்தானின் குறும்பு என பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய ஆட்டமாக இது காணப்படுகிறது. மலையகத்திலும் மாரியம்மன் வழிபாட்டுடன் இணைந்ததாக காத்தான் வழிபாடு காணப்பட்டு வருகிறது.
நேர்த்திக்கடன்
மக்கள் தமது நம்பிக்கை, வழிபாட்டு முறை என்பனவற்றுக்கேற்ப பல்வேறு நேர்த்திக் கடன்களை தெய்வங்களுக்கு வைப்பர். தம் காரியம் நிறைவேற வைக்கப்படும் நேர்த்திக் கடன்களை காரியம் நிறைவேறிய பின் செலுத்துவர். பொங்கல், மடைபரவல், விரதம், காவடி, கரகமெடுத்தல், அலகு குத்துதல், முள்ளு மிதியடி நடத்தல் எனப் பலவகையான நேர்த்திக் கடன்கள் உண்டு. வடமராட்சியில் மாரியம்மன் – காத்தவராய சுவாமி வழிபாடுகளில் முதன்மையுறும் நேர்த்திக்கடன் ‘கூத்தாடுதல்’ ஆகும். காத்தவராயன் கூத்து நேர்த்திக்கடனாக வைத்து ஆடப்படும். காத்தவராயன் கூத்தில் பிரதான காத்தான் பாத்திரத்தை நேர்த்திக்கடன் வைத்தவர் ஏற்றாடுவார். அம்மனுக்கும் காத்தானுக்கும் செய்யும் ஒரு வகை வழிபாட்டு நெறியாகவே காத்தான் கூத்து ஆரம்பத்தில் ஆடப்பட்டது. சின்னான், காத்தான், மாரியம்மன், காளியம்மன் பாத்திரங்கள் கூத்தாடி கொண்டிருக்கும் போதே சன்னதம் செய்தல் உண்டு.
தமிழகச் சூழலில் உடுக்கடிப்பாடல், தெருக்கூத்து, தனியாள் பாடல், கூடு முறைப் பாடல் என்னும் தளங்களில் காத்தவராயன் கதை பயிலப்பட்டு வருகிறது. இம்முறையியல்கள் ஈழத்தில் காணப்பட்டாலும், தென்மோடி ஆட்டமுறையில் தனித்துவமான துள்ளல் நடையினையுடைய சிந்துநடைக் கூத்தாக ஆடப்பட்டு வருகிறது. இக்கூத்து வாய்மொழி மரபான அண்ணாவிமார்களால் பேணப்பட்டு வந்துள்ளது. இது பரம்பரை பரம்பரையாக ஆடும் கூத்துக் கலையாகவும் அமைந்துள்ளது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை ஆகிய இடங்களில் இக்கூத்து சிறப்பாக, பரம்பரை பரம்பரையாக ஆடப்பட்டு வருகிறது. நேர்த்திக் கடனுக்கான கூத்து என்ற வகைக்கு அப்பாற்பட்ட தனித்துவமான கூத்துக்கலையாக வளர்ந்துள்ளது.
சமகாலப் பயில்வு
யாழ்ப்பாணத்தில் காத்தான் வழிபாடு பஞ்ச கம்மாளர்களிடமே அதிக செல்வாக்கு உடையது என்றும், காத்தான் கூத்து ஆடுபவர்களும் அண்ணாவிமாரும் அச்சமூகத்தவர்களிடமே காணப்பட்டனர் என்றும் கூறப்பட்டாலும், அல்வாய் போன்ற பகுதிகளில் பள்ளர் சமூகத்தவர்களிடம் வழிபாடும், கூத்தும் நீண்ட காலம் நிலவிவருவதை அறிய முடிகின்றது. செட்டி, பறையர், வண்ணார் போன்ற சாதியப் பாத்திரங்கள் கூத்தில் நேரடியாக உண்டு. கப்பலில் காத்தான் செல்லுதல் கரையூர்களில் நீண்ட நேரம் கூத்தாக ஆடப்படும். காளி, பத்திரகாளியை குல தெய்வமாகக் கொண்டவர்கள், காளியால் மீட்கப்பட்ட காத்தான் கூத்தை தம் கலையாகக் கொள்வர். வடமராட்சியில் இவற்றில் சம்பந்தப்படாத பள்ளர் சமூகத்தவரிடம் இருபதுக்கும் மேற்பட்ட கோயில்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. பொதுவாக விவசாய சமூகத்தினதும் கரையூர் சமூகத்தினதும் தெய்வமாக காத்தவராயர் காணப்படுகின்றார்.
கணபதிப்பிள்ளை, வித்தியானந்தன் போன்றோரின் கூத்து மீட்டுருவாக்கச் செயற்பாடுகள் காரணமாக இது பாடசாலைகளில் கலை நிகழ்வாகவும் தேசிய தமிழ்த்தினப் போட்டியில் ஒரு நிகழ்வாகவும் மாறியது. யுத்த சூழலும் சாதி கடந்த மக்கள் கலையாக கூத்தை மாற்றியது. ஆகம மயமாக்கப்பட்டதாக கருதப்படும் யாழ்ப்பாணச் சூழலில் 21 ஆம் நூற்றாண்டில் முன்பில்லாதவாறு பெரும்பாலான மாரியம்மன் கோவில்களின் முன்றல்களில், அல்லது வீதியில் காத்தான் சந்நிதி அமைக்கப்படுகிறது. குதிரையில் காத்தான் நிற்பதாக அது அமைக்கப்பட்டு கழுமரமும் அருகில் வைக்கப்படுகிறது. திருநெல்வேலி முத்துமாரியம்மன் ஆலயத்தில் அண்மையில் அமைக்கப்பட்ட இவ்வாறான சந்நிதியில் பிராமணர் ஒருவர் திரூநீற்றைக் கொடுத்து, குறி சொல்லி, நூல் கட்டுவது நடைபெற்று வருகின்றது. காத்தவராயர் சாதியம் கடந்த மக்கள் தெய்வமாக மிளிர்கிறார். கோண்டாவில் சிவமாரியம்மன் கோயிலில் கழுமரம் செப்பாலானதாக அமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆகமமயப்பட்ட மாரியம்மன் கோயில்களில் பிராமணர் காத்தானுக்கு அல்லது கழுமரத்திற்கு பூசை செய்தலும் நிகழ்ந்து வருகிறது. அந்தவகையில் இன்று காத்தான் வழிபாடு தனிக்கிராமிய வழிபாடாகவும், ஆகமக் கோவில் வழிபாடாகவும் இரு பண்புகளும் கொண்ட கலப்புரு (ஆகமவழிபாடும் கிராமியப் பூசாரி, மடை பரவல் முதலானவையும்) வழிபாடாகவும் நிலவி வருவதை அவதானிக்க முடிகிறது.
காத்தானின் தனிக்கோயில்களில் பெரும்பாலும் சாதாரண மக்களாலேயே பூசை செய்யப்படுகிறது. பலியிடல் பெரும்பாலும் இல்லாது விடினும் மாமிச, மட்சப் படையல் பெரும்பாலான கோயில்களில் உண்டு. ஏனைய கோயில்களில் பொங்கல் பொங்கி வடைமாலையிட்டு மடை பரவுவர். சில இடங்களில் காத்தான் கூத்தில் வரும் சின்னான் முதலான தெய்வங்களுக்கும் சந்நிதிகள் அமைக்கப்படுகின்றன. யாழ்ப்பாணத்துக் காத்தான் கோயில்களில் காத்தான் கூத்துப்பாடல்களே இசைக்கப்படுகின்றன.
முடிவுரை
காத்தவராயன் சுவாமி வழிபாடு மாரியம்மன் வழிபாட்டோடு இயைந்து வளர்ந்து வந்துள்ளது. ஈழத்தில் வடபுலத்திலே காத்தானுக்கு எனத் தனித்துவமான கோயில்கள் பல காணப்படுகின்றன. காத்தான் பற்றி பல்வேறு விதமான கதைகள் காணப்படுகின்றன. துயரம் மிகுந்த காதல் கதையும், இடைவிடாத முயற்சியும், இறை அருள் வெற்றி தரும் என்ற கதையும் இவற்றில் குறிப்பிடத்தக்கவை. காத்தான் காவல் தெய்வம், நோய் நொடியின்றி வாழ வைக்கும் தெய்வம் எனப் பொருள்படுகிறார். காத்தான் ஆரம்பத்தில் குறித்த சாதியினருக்குரிய தெய்வமாக நோக்கப்பட்டாலும், காத்தான் கதையின் வளர்ச்சி, அதில் வரும் பல்வேறு சாதியினருக்கு இடையிலும் இணைப்பை (செட்டி, மலைச்சாதி, பறையர், பஞ்சகம்மாளர்) உருவாக்கி மக்களின் தெய்வமாகியது. காத்தவராயன் கூத்து மக்களின் கலையாகியதன் ஊடாக காத்தவராய சுவாமி பலராலும் நம்பிக்கையுடன் வழிபடும் தெய்வமாகத் திகழ்கின்றார். ஆகமக் கோயிலை ஒத்த பெருங்கோயில்கள் உருவாகி வருகின்றன. கழுமரமும் காத்தானும் இல்லாத மாரியம்மன் கோயில்கள் இல்லை எனலாம். காத்தவராய சுவாமிக்கு புதுக் கோயில்களும் உருவாகி வருகின்றன. ஆனால் எல்லாக் கோயில்களும் மக்களின் ‘பூசாரியே’ பூசகராக இருப்பது குறிப்பிடத்தக்கது. காத்தானுக்குரிய பூஜையில் பலியிடல் செல்வாக்கிழந்து வருகிறது. கூத்தாடல் நேர்த்திக்கடன் இன்றும் நின்று நிலவுகிறது. 1958 இல் காத்தவராயன் என்று ஒரு திரைப்படம் வந்தது. அது போல 2024 இல் ராயன் என்ற பெயரில் காத்தவராயன் படம் நவீன மயப்படுத்தப்பட்டு வந்திருப்பது, காத்தவராயன் வழிபாடு இன்றும் உயிர்ப்புடன் தமிழகத்திலும், ஈழத்திலும், தமிழர் வாழும் நிலங்களிலும் செல்வாக்கோடு இயங்கி வருவதை உறுதி செய்கிறது. காத்தவராய சுவாமி, வேண்டும் வரம் அருளும் கிராமியத் தெய்வமாக செல்வாகுற்று வருகிறது.
தொடரும்.