அதிகாரத்தின் முன் உண்மைகளைப் பேசுதல் பற்றி எட்வேர்ட் ஸயீட் ‘Representations of the Intellectual’ என்கின்ற நூலில், ஒரு அத்தியாயம் முழுவதும் விரிவாகப் பேசுகின்றார். விமர்சனங்களை வெளிப்படுத்தவும் அதைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளவும் தயங்கும் எந்தவொரு சமூகமும் தனக்கான வீழ்ச்சியை நோக்கியே செல்லும். தம்மைத் தாமே சுயவிமர்சனம் செய்து நகராதவிடத்து எந்த ஏற்றமும் எவருக்கும் ஏற்படப்போவதில்லை. ‘மாற்றம் என்பதே மாறாதது’ என்று வாளா சொல்லிக்கொண்டிருக்காது, எந்தத் திசையில் செல்லவேண்டுமென்பதைத் தீர்மானிக்கும் விமர்சனங்களைப் பொதுவெளியில் வைத்து திறந்த மனதுடன் விவாதிக்கும் மனப்பாங்கு ஒவ்வொரு சமூகத்திற்கும் அத்தியாவசியமாகின்றது. தமிழ்ச் சமூகத்தில் – முக்கியமாய் ஈழத்தமிழர் மத்தியில் – இந்தக் கூறுகள் மிக அரிதாகவிருக்கின்றதாலேயே குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டி, பழங்கதைகள் பேசி திருப்தியடைவதோடு எல்லாமே முடிந்துபோய் விடுகின்றது. இவற்றையெல்லாம் விட, வித்தியாசமாய்ச் சிந்திக்கின்றோம் என்பவர்களும், சமூகத்தை முன்னிறுத்தாமல் தம்மை முன்னிறுத்தி தமது சுயமுகங்களைக் வெளிக்காட்டுவது ‘இவர்களைவிட மற்றவர்களே பரவாயில்லை’ என்ற மனோநிலையை ஏற்படுத்தி விடுகின்றது.

போர்ச்சூழலிற்குள் வாழ்ந்தவர்கள், போரையும் அது நிகழ்ந்துகொண்டிருக்கும் சமூகத்தையும் பார்ப்பதற்கும், அதனோடு சம்பந்தப்படாத பிறர் அவற்றைப் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்களுண்டு. போர்ச்சூழலிற்குள் வாழ்ந்தவர்கள் தமது தனிப்பட்ட அனுபவங்கள், வாழத்திணிக்கப்பட்ட சூழல் என்பவற்றை முன்வைத்துத்தான் அதிகம் பேசுகின்றவர்களாய் இருக்கின்றார்கள்; அது பலவேளைகளில் தவிர்க்க முடியாததும் கூட. ஆனால் போர்ச்சூழலிற்குள் அகப்படாத புலம்பெயர்ந்த இரண்டாம் தலைமுறையினருக்கு (அல்லது மிகச்சிறிய வயதில் புலம்பெயர்ந்தவர்கள்) தனிப்பட்ட விருப்பு – வெறுப்பில்லாத தெளிவான பார்வையைத் தரக்கூடிய அதிக சாத்தியங்கள் விரிந்துகிடக்கின்றன. அந்தவகையில், இதுவரை ஈழத்துப் போர்ச்சூழல்/ புலம்பெயர் வாழ்வு குறித்து கவனிக்கப்படாத புள்ளிகளை முன்னிறுத்தும் என்ற எண்ணத்தோடே வாசுகி கணேசானந்தனின் Love Marriage புதினத்தை வாசிக்கத்தொடங்கினேன்.
இப்புதினம், நிச்சயிக்கப்படும் திருமணங்கள் (Arranged marriages) மற்றும் காதல் திருமணங்கள் பற்றிப் பேசுவதை மையமாகக்கொண்டு சுழன்றாலும், ஈழத்தமிழ்ச் சமூகம் பற்றிய மதிப்பீடுகளையும், போர்ச்சூழல்களையும் கூட உள்ளடக்கியுள்ளது. ஈழத்திலிருந்து அமெரிக்காவுக்கு வந்து, காதலித்து திருமணம் செய்த பெற்றோருக்குப் பிறந்த இரண்டாந்தலைமுறையைச் சேர்ந்த யாழினியால் இக்கதை சொல்லப்படுவதாய் எழுதப்பட்டிருக்கின்றது. இருபதுகளின் ஆரம்பத்தில் யாழினியும் அவரின் பெற்றோரும், புற்றுநோயின் காரணமாய் சிகிச்சைக்காக கனடா வரும் மாமனாரின் (குமரன்) நிமித்தம் அமெரிக்காவிலிருந்து கனடாவுக்கு குடிபெயர்கின்றார்கள். புற்றுநோய் முற்றி வாழ்வின் இறுதிக்கட்டத்திலிருக்கும் குமரன், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் நீண்டகாலமாய் இயங்கிக்கொண்டிருப்பவர். நோயின் தீவிரம் காரணமாய் வெளிநாடுசெல்ல அவருக்கு இயக்கம் அனுமதி கொடுப்பதாய்ச் சொல்லப்படுகின்றது.
கனடாவில் ரொறொண்டோவுக்கு தனது பதினெட்டு வயதான மகள் ஜனனியின் துணையுடன் குமரன் வருகின்றார். குமரனின் நோயின் நிமித்தம் உலகின் பல்வேறு திசைகளிலிருக்கும் அவரது உறவினர்களும் ரொறொண்டோவில் ஒன்றுகூடுகின்றார்கள். போர் குறித்தோ, உறவுகள் குறித்தோ அதிகம் தெரியாது வளர்ந்த யாழினி, இந்நிகழ்வின் மூலம் தனது அடையாளங்களைத் தேடத் தொடங்குகின்றார். யாழினியின் பெற்றோரின் நெருங்கிய உறவுகளின் கிளைக்கதைகள், பல்வேறு பின்னணிச் சூழல்களில் சொல்லப்படுகின்றன.
அமெரிக்காவில் பிறந்து தமிழ்ச்சமூகத்தோடு அவ்வளவு நெருங்கிப்பழகாத யாழினிக்கு, அவரது தாய் முறையிலான மாமாவும், புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகம் அதிகம் வாழும் ரொறொண்டோவும் அவரை ஒரு வெளியாளாக வித்தியாசப்படுத்திக் காட்டுகின்றது. தமிழ்ப்பெற்றோருக்குப் பிறந்ததால் மட்டுமே தமிழராக முடியுமா என்று இங்கே வளரும் இரண்டாம் தலைமுறைக்கு எழக்கூடிய கேள்விகள் யாழினிக்குள்ளும் எழுகின்றன. மேலும் தமிழ் மொழி, கலாசாரம், பண்பாடுகளோடு வந்திறங்கும் குமரனின் மகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தான் தமிழராய் இருப்பதற்கான எந்த அடையாளங்களையும் கொண்டிருக்கவில்லையென யாழினி இன்னமும் குழம்புகின்றார் (உரையாடும் தமிழை மட்டும் விளங்கிக்கொள்பவராக யாழினியின் பாத்திரம் இங்கு சித்தரிக்கப்படுகின்றது).

ஈழத்தில் நடக்கும் போர் பற்றி விரிவாக அறியாத யாழினிக்கு, போரை, விடுதலைப்புலிகளை, அதில் முக்கிய உறுப்பினராய் இருந்த தனது மாமனாரை எப்படி விளங்கிக்கொள்வது என்ற சிக்கல்களும் எழுகின்றன. 74 ஆம் ஆண்டு உலகத்தமிழாராய்ச்சி மாநாடு, 83 ஆம் ஆண்டு ஜூலைக் கலவரம், புலிகளின் சகோதர இயக்கப் படுகொலைகள் என்பன சில கதைமாந்தர்களினூடாக, சம்பவங்களினூடாக யாழினிக்குச் சொல்லப்பட்டிருந்தாலும் அவரால் போரின் ஊற்றுக்களை விரிவாக விளங்கிக்கொள்ள முடியாதிருக்கின்றது. ஈழத்தில் நடக்கும் இனவொடுக்கல் போராட்டத்தை, அதன் உண்மையான காரணங்களை காண மறுத்து, ‘ஆயுதம் தூக்கியவர்கள் எல்லோரும் கெட்டவர்களே’ என்ற எளிமைப்படுத்தப்பட்ட மேலைத்தேய பார்வைதான் யாழினிக்கும் இருக்கின்றதோ என்று ஐயமுறக்கூடிய அளவுக்கு யாழியின் பாத்திரம் படைக்கப்பட்டிருக்கின்றது. அதேவேளை புலம்பெயர்ந்த இரண்டாம் தலைமுறையில் அநேகருக்கு ஏற்படக்கூடிய பொது மனோநிலையாகவும் இதை எடுத்துக்கொள்ளாலாம்.
தொடக்கத்தில் யாழினி தனது மாமன் குமரனோடு அந்நியப்பட்டு நின்றாலும், குமரனின் இறுதிக்காலத்தில் அவருக்குப் பிரியமான மருமகளாக மாறிவிடுகின்றார். போர், புலி இன்னபிற நியாயத்தராசுகளின் எடைபோடல்களுக்கு அப்பால், மனிதாபிமானம் யாழினியை குமரனோடு நெருக்கமாக்கிவிடுகின்றது. குமரனின் மரணத்திற்குப் பின், குமரனின் மகள் கனடாவிலிருக்கும் புலிகளின் தீவிர ஆதரவாளர் ஒருவரைத் திருமணம் செய்வதோடு புதினம் முடிவடைகின்றது (இந்நபர், சட்டத்திற்குப் புறம்பான வழியில் ஏதோவொரு தொழில் செய்து, நிதி சேகரித்து புலிகளுக்கு அனுப்புகின்றார் என்ற குறிப்பு இந்நாவலில் வருகின்றது).
ஜனனியின் திருமணத்தை முன்வைத்து தமிழ் இந்துக்களின் சடங்குமுறைகள் விரிவாகப் பேசப்படுகின்றது. தமிழ்ச் சமூகத்தில் நடக்கும் திருமணங்கள், அது நிச்சயிக்கப்பட்ட திருமணமாகட்டும் அல்லது காதல் திருமணமாகட்டும், இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்ட சிக்கலான ஒரு முறை போலவே தோற்றமளிக்கின்றன. காதல் திருமணமோ அல்லது நிச்சயிக்கப்படும் திருமணமோ, அவற்றிற்கு தனித்துவமான வித்தியாசங்கள் இல்லையென்ற கருத்தையே வாசிப்பவர்களுக்கு இந் நாவல் தர முயற்சிக்கின்றது; அதுவே யதார்த்தமும் கூட.
புலம்பெயர்ந்த இரண்டாம் தலைமுறையை முன்னிலைப்படுத்தி எழுதப்படும் நாவலென்ற வகையில் மிகுந்த ஆர்வத்துடனேயே இந்நாவலை வாசிக்கத் தொடங்கினேன். காலங்காலமாய் கட்டிக்காக்கப்படும் கலாசார, பண்பாட்டுத் தளங்களுக்குள் இருந்துவரும் ஒருவருக்கு இருக்கும் மனத்தடைகளோ, போர்ச்சூழலுக்குள் இருந்துவரும் ஒருவரது தனிப்பட்ட சொந்த அனுபவங்களின் நிமித்தம் ஏற்படும் சமரசங்களோ இல்லாது, மிகச் சுதந்திரமாய் பல விடயங்கள் பேசப்படக்கூடிய சாத்தியங்களைக் கொண்ட இப்புதினம், இறுதியில் இந்து சமயச்சடங்குகளை முன்னிறுத்தி, திருமணங்களுக்கு அதிகம் விளக்கம் கொடுப்பதோடு மட்டும் நிற்கும்போது, தனக்கான சரிவைத் தானே தேடிக்கொள்கின்றது. போர் குறித்து இந்நாவலில் சொல்லப்படும் செய்திகள் கூட, ஒரு எல்லைக்கப்பால் வாசகருக்கு ‘வித்தியாசமாக’ எந்த அனுபவத்தையும் தரவில்லை எனக் குறிப்பிட வேண்டியிருக்கின்றது. மூன்றாம் நபராய், ஈழத்தில் நடக்கும் போர் குறித்தும் அதன் பாரதூரமான விளைவுகள் குறித்தும் ஒரு நேர்மையான பார்வையை படைப்பாளி, யாழினியினுடாக முன்வைப்பார் என்று எதிர்பார்த்து தொடர்ந்து வாசிக்கும்போது அலுப்பே மிஞ்சுகின்றது. இன்னும் சொல்லப்போனால், புலம்பெயர்ந்த இரண்டாம் தலைமுறை ஈழத்தில் நடக்கும் போர்குறித்து எப்படியான பார்வையைக் கொண்டிருக்கின்றது என்று அறியக்கூடிய வெளிகூட இப்புதினத்தில் விரிவாகப் பேசப்படாதது இன் நாவலில் முக்கிய பலவீனம் எனலாம்.
இந்நாவலின் பக்கங்களின் எண்ணிக்கைக்குச் சமனாக கதாபாத்திரங்களின் எண்ணிக்கையும் இருக்கின்றதோ என்று சொல்லுமளவுக்கு, அதிகமான பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், எந்தவொரு பாத்திரமும் வாசிப்பவரை அதிகம் பாதிக்கவில்லை எனலாம். முக்கியமாக குமரன் என்ற பாத்திரத்திற்குக் கொடுக்கப்படும் அடையாளத்தினூடாக ஈழத்தின் சில தசாப்தகால போர்ச்சூழல் வெளிக்கொண்டு வரப்பட்டிருக்கலாம் அல்லது போர்ச்சூழலில் இறந்துபோன குமரனின் துணைவியை முன்வைத்து, ஏன் மக்கள் அப்படி ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் எனும் புள்ளியிலாவது அதிகம் கவனம் குவிக்கப்பட்டிருக்கலாம். ஆகக்குறைந்தது, ஆபிரிக்க, ஆசிய நாடுகளில் மனிதவுயிர்கள் பல்லாயிரக்கணக்கில் அழியும்போது, மேற்கத்தேய நாடுகள் – தமக்கு ஏதும் நன்மை ஏற்படாதவரை – உள்நுழையாது அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதன் ‘அடர்த்தியான மெளனம்’ குறித்தாவது பல கேள்விகளை படைப்பாளி எழுப்பியிருக்கலாம்.
தமிழ்ச்சமூகத்தின் திருமண முறைகளைப் பற்றி விரிவாகப் பேசப்பட முயலும் ஒரு புதினத்தில் இவ்வாறான பிற அரசியல், சமூகப்புள்ளிகள் கட்டாயம் பேசப்பட வேண்டுமா என்ற கேள்விகள் நமக்குள் எழக்கூடும். ஆனால், திருமணம், பராம்பரியச் சடங்குகள், சம்பிரதாயங்கள் போன்றவற்றில் மட்டுமே கவனம்குவிக்க வேண்டியிருந்தால், ஈழத்தில் நடைபெறும் போராட்டங்கள் பற்றி இந்நாவலில் குறிப்பிட்டிருக்கத் தேவையில்லை; முக்கியமாய், குமரன் என்கின்ற விடுதலைப்புலியின் பாத்திரத்தை அறிமுகப்படுத்தவேண்டிய அவசியமில்லை. ஈழப்போராட்டச் சூழல் விரிவாகப் பேசப்படாது – தொட்டுக்கொள்ள ஊறுகாய் மாதிரி – இப்புதினத்தில் பாவிக்கப்பட்டிருக்கிறது. இது, புலம்பெயர்ந்த நாடுகளில் போராட்டத்தை முன்வைத்து வியாபாரம் செய்பவர்களைப் போன்றே, தனது புதினத்தையும் இப்படைப்பாளி மேற்கத்தைய சமூகத்திற்கு விற்கப் பிரியப்படுகின்றாரோ எனச் சந்தேகிக்க வைக்கிறது. திருமணத்தை விளங்கப்படுத்துகின்றேன் என்று மணவறைக்கு முன்னிற்கும் ஐயர் போட்டிருக்கும் பூணூலில் இருந்து தாலி வரை இன்னபிற எல்லாமே விரிவாக எழுதப்பட்டிருப்பது, வாசிக்கும்போது மிகுந்த அலுப்பைத் தருகின்றது. புலம்பெயர்தேசங்களில் கூட, நிச்சயிக்கப்படும் திருமணங்களில் சாதி மிகப்பெரும் பங்கு வகிக்கின்றது என்பதை படைப்பாளி மறந்துவிடுகின்றார். புலம்பெயர் சூழலில் சாதி மட்டுமல்ல, சீதனம் போன்ற பிற்போக்குக் கலாசாரங்களும் இங்கு பிறந்த அடுத்த தலைமுறையினருக்கு கடத்தப்பட்டிருக்கின்றது என்பது பற்றிய எந்தக் குறிப்பும் இந்நாவலில் காணக்கிடைக்கவில்லை. உறவுகளுக்குள் நடக்கும் (நிச்சயிக்கப்படும்) திருமணங்கள் என்பதே சாதியைக் கட்டிக் காப்பதற்காகத்தான் என்ற எளிய அரசியல் ஏன் மறைக்கப்பட வேண்டும்?

நான் அறிந்தவகையிலேயே, இந்நாவலில் நிறைய தகவல் பிழைகள் இருக்கின்றன. உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்கள் சுடப்பட்டுத்தான் இறந்தார்கள் என்ற செய்தி இப்புதினத்தில் வருகின்றது (பொலிசார் கூட்டத்தைக் கலைக்க மேலே சுட்டபோது, மின்சாரக் கம்பிகள் அறுந்தே பொதுமக்கள் இறந்திருக்கின்றார்கள் என்பதே நடந்த நிகழ்வு). யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடமிருப்பதாய் அடிக்கடி சொல்லப்பட்டிருப்பது இன்னொரு தகவல் பிழை (குமரன் ஒரு பொறியியல் பீட மாணவனாயிருந்து இயக்கத்தில் சேர்கின்றார்). மேலும், திருமணத்தில் கூறப்படும் மந்திரம், சமஸ்கிருதத்தில் சொல்லப்படுகின்றது என்று விபரிக்கப்படும்போது சமஸ்கிருதமானது, தமிழை விட ஆதியானது என்றவகையில் எழுதப்படுகின்றது.
இவற்றைவிட முக்கியமாய் இந்நாவலில் மிகக்குழப்பமாய் இருப்பது, குமரன் இயக்கத்தில் இருக்கின்றார் என்று எல்லோருக்கும் அறிவித்தபடியே ரொறொண்டோவுக்கு வருவது. மனிதாபிமான அடிப்படையில் குமரனுக்கு கனடா வர அனுமதி கொடுக்கப்படுவதாய் புதினத்தில் கூறப்படுகின்றது. கனடாவின் குடிவரவுக் கொள்கைகளின்படி, ஒருவர் இப்படி அறிவித்துக்கொண்டு வருவதற்கான எந்தச் சாத்தியப்பாடும் இருப்பதாய்த் தெரியவில்லை. அதுவும் குமரன் ஈழத்தில் இருந்தவரை புலியாகவே இருக்கின்றார் என்று சொல்லப்படுகின்றது; மகளும் போராளியாக இருந்திருக்கலாம் என்கின்ற மாதிரியான கருத்தும் இந்நாவலில் வருகின்றது. குமரனும், ஜனனியும் கனடா வருவதற்கு ஏதாவது அதிசயம் நிகழ்ந்து (அல்லது உயர்மட்டத்தில் மிகுந்த செல்வாக்கு இருந்து), விஸா குத்திக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி, இவ்வாறு ஒரு நிகழ்வு நடப்பது யதார்த்தத்தில் அவ்வளவு சாத்தியமில்லை (ஈழத்திலிருந்த சில தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினருக்கே, புலிகளோடு தொடர்பிருந்ததெனக் காரணங்காட்டி, கனடாவுக்கு வர விஸா மறுக்கப்பட்ட கடந்த கால உதாரணங்களையும் நினைவுபடுத்திக்கொள்ளலாம்).
மிகச் சிக்கலாகவும், பலவீனமாகவும் போய் அழிவில் முடிந்த தமிழரின் ஆயுதப் போராட்டத்தை, ‘எல்லாத் தரப்புகளும் பிழை செய்கின்றன’ என்று எளிதாக விளக்கிவிட முடியாது. தொடக்க காலத்தில் தமிழரின் உரிமைக்காய் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்திற்கு எவ்வளவு வலுவான காரணங்கள் இருந்ததோ, அந்தக் காரணங்கள் இன்னமும் இருக்கின்றன. இந்நாவலில் தமிழர் தரப்பின் தீர்க்கப்படாத பிரச்சினைகளின் ஆழங்களை அலசாமல், பொதுப்படையாக அனைவரும் தவறு செய்கின்றார்கள் என்று எழுதுவது, ஈழப்போராட்டம் குறித்து அவ்வளவு அறியாதவர்களுக்கு தவறான நிலைப்பாட்டை விதைக்கக்கூடியது. முக்கியமாய் தமிழல்லாத, ஆங்கிலம் போன்ற பிற மொழிகளில் நேரடியாக எழுதுபவர்கள், இவை குறித்து அதிக கவனத்தோடு, கடந்த கால வரலாற்றை ஆழமாய் அறிந்து, நிதானமாய் எழுதவேண்டியிருக்கிறது.
இப்படைப்பாளி தனது முதுமாணிப் பட்டத்துக்காக எழுதிய ஆய்வையே நாவலாக்கியதாய் புதினத்தின் பின்னட்டையில் கூறப்பட்டுள்ளது. ஆய்வு என்பதே தரவுகளையும், தகவல் திரட்டுகளையும், பன்முகப் பார்வைகளையும் உள்ளடக்கி எழுதப்படவேண்டியது. ஐயர், பூணூல், மணவறை, கூறைப்புடைவை, கன்னிகா தானம் என்பவற்றை ஆய்வுகள் செய்து விபரிக்கும் படைப்பாளி, போராளிகள் – போராட்டம் போன்றவற்றுக்கு அதிக விளக்கம் கொடுத்து விரிவாக அதிகம் எழுதத் தேவையில்லை என்று நினைத்திருக்கலாம். இவ்வாறான குறைகளுக்கும் அப்பால், பலவீனங்களுடன் என்றாலும் சமகாலப் பிரச்சினைகளை உள்ளடக்கியதாய், இயன்றளவு உண்மைகளை மறைக்காமல் எல்லாத் தரப்புகளினதும் அரசியல் பலவீனங்களைப் பதிவுசெய்ய முயன்றமைக்காய் படைப்பாளியைப் பாராட்டலாம். கதையின் நகர்வோட்டத்தை, சடங்குகளுக்கு விளக்கம் கொடுக்கும் இடங்கள் தடைசெய்தாலும், தமிழ்ச்சூழலில் ஒரு பெண் முக்கிய பாத்திரமாகப் படைக்கப்பட்டிருப்பது கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று. ஆனால் இரண்டாம் தலைமுறை புலம்பெயர்ந்த சமூகத்திடமிருந்து, வித்தியாசமான கோணங்களில், புதிய உரையாடல் புள்ளிகளை எதிர்பார்த்து வாசிக்கத் தொடங்கும் ஒரு வாசகருக்கு இப்புதினத்திலிருந்து எடுத்துக்கொள்ள அதிகம் எதுவுமில்லையெனத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது.