இலங்கைத் தீவின் அரசியலை அதன் கொலனித்துவக் காலத்திலிருந்து, சிங்களப் பெருந்தேசியவாதத்தின் எழுச்சி, இன முரண்பாடு, தமிழர்களின் விடுதலைப் போராட்டம், போர்கள், சமாதான முயற்சிகள், போருக்குப் பின்னான நிலைமைகள், சமகாலம் என பெரும் பரப்பினை இந்நூல் பேசுகின்றது. இலங்கைத்தீவின் இன முரண்பாடுடன் தொடர்புடைய உள்நாட்டுத்தரப்புகள், பிராந்திய சக்திகள், தமிழ் டயஸ்போறா, நோர்வே உட்பட்ட சர்வதேச சக்திகள் என அனைத்துத் தரப்பினரைப் பற்றியதும் நோக்கியதுமான விமர்சனங்களும் கணிசமாக உள்ளன.
நூலாசிரியர்:
ஒய்வின்ட் புக்லறூட் (Øivind Fuglerud) : நோர்வேஜிய சமூக மானிடவியற்துறைப் பேராசிரியர். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக இலங்கைத்தீவின் அரசியல், சமூக, பொருளாதார, இன முரண்பாடுகள் குறித்த ஆய்வுகளை முன்னெடுத்து வருபவர் மட்டுமல்லாது நோர்வேத் தமிழ்ச் சமூகம் தொடர்பான ஆழ்ந்த அறிதலுடையவர். ஈழத் தமிழர்களின் நாடுகடந்த வாழ்வு பற்றிய அறிதலும் ஆய்வனுபவமுமுடையவர். இலங்கையின் பல பாகங்களுக்கும் பயணம்செய்து, தங்கியிருந்து கள ஆய்வுகளை மேற்கொண்ட அனுபவம் மிக்கவர். இலங்கை நிலைமைகளில் நிபுணத்துவ அறிதல் உடைய கல்வியாளர்களில் முக்கியமானவர்.
இலங்கை தொடர்பான தன்னுடைய அனுபவமும் ஈடுபாடும் தொடர்பாக நூலின் முதல் அத்தியாயத்தில் இப்படிக் குறிப்பிடுகின்றார்:
முதலில் மாணவனாகவும், அடுத்து நோர்வே வெளிநாட்டுத் திணைக்களத்தின் புகலிட விண்ணப்ப கையாளுகைகளில் உண்மை கண்டறிபவனாகவும் தகவல் உறுதிப்படுத்துபவனாகவும் (Fact-finder), பின்னர் ஆய்வாளனாகவும் பல ஆண்டுகள் இலங்கைத் தீவின் முரண்பாட்டின் கூறுகளைப் புரிந்துகொள்ள விழைந்திருக்கின்றேன். தமிழர், சிங்களவர், முஸ்லீம்கள் மத்தியில் நண்பர்களைக் கொண்டிருப்பவன். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தைச் சேர்ந்த பலரை அறிந்திருந்தேன். போரின் முடிவுடன் 30 ஆண்டுகால ஆய்வும் ஈடுபாடும் திடீர் ஸ்தம்பிதமடைந்த நிலையை உணர்த்தியது.
நோர்வேயின் சமாதான முயற்சியின் தோல்வி
இலங்கைத்தீவின் இனமுரண்பாட்டுக்கான சமாதான அனுசரணை (2000 – 2009) நோர்வேயின் வெளியுறவு அரசியலில் அதீத முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வென்ற பிம்பம் நோர்வேயினால் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. நோர்வேயின் சமாதான முயற்சியின் தோல்வி, அது தொடர்ச்சியாகப் பலதளங்களில் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற விளைவு ஆகியன பற்றி ஆராய்கிறது இப் புத்தகம். சமாதான முயற்சியின் தோல்வியின் காரணங்களையும் ஆராய்கின்றது. அதற்கான அடிப்படையாக இலங்கைத்தீவின் அரசியல் வரலாற்றுப் பின்னணி – இனமுரண்பாட்டுக்கான மூலக் காரணிகள் – அரசியல், இன, மத, சமூக, பொருளாதார, பண்பாட்டு முரண்களும் யதார்த்தங்களும் நுணக்கமாகவும் விரிவாகவும் பேசப்படுகின்றன. பெரும் விடயப்பரப்புகளை இந்நூல் கையாண்டிருக்கின்றது.
முள்ளிவாய்க்கால் பேரழிவின் பத்தாண்டு நிறைவில் (2019) இந்தப்புத்தகம் வெளிவந்தது. இலங்கைத்தீவின் இன முரண்பாட்டுடன் தொடர்புடைய உள்நாட்டுத்தரப்புகள், பிராந்திய சக்திகள், தமிழ் டயஸ்போறா, நோர்வே உட்பட்ட சர்வதேச சக்திகள் என அனைத்துத் தரப்பினரைப் பற்றியதும் நோக்கியதுமான விமர்சனங்களும் கணிசமாக உள்ளன.
நோர்வேயின் அனுசரனையுடனான இலங்கைத் தீவின் சமாதான முயற்சியானது நோர்வேயில் உள்நாட்டு மட்டத்தில், ஊடகப்பரப்பில் போதியளவு கவனத்தைப் பெறவில்லை. சமாதான அனுசரனைப் பாத்திரத்தின் பொறுப்புப் பற்றி உரிய விவாதங்கள் முன்னெடுக்கப்படாமை நோர்வேயின் வெளியுறவுக் கொள்கையிலும் பொதுவிவாதத்தினதும் குறைபாடாகச் சுட்டப்படுகின்றது. நோர்வேயின் சமாதான வகிபாகம், இலங்கையில் அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தியதோடு, இன்றும் அத்தாக்கங்கள் வலுவானவையாக உள்ளன. இந்நூல் சமாதான முயற்சிகள் குறித்த தனியான மீளாய்வு அல்ல. ஆனால் சமாதான முன்னெடுப்பின் ஒரு பகுதியாக நிகழ்ந்த முக்கியமானவற்றை நோர்வேஜிய வாசகர்களுக்கு அறிமுகம் செய்கின்றது. அதனூடாகச் சமாதானத் தோல்வியின் விளைவுகள் பற்றியும் பேசுகின்றது.
ஒய்வின்ட் புக்லறூட் தனது ஆய்வுப் பணிகளின் பொருட்டான இலங்கைப் பயணங்களில் சிங்கள, தமிழ், முஸ்லீம் தரப்புகளைச் சேர்ந்த பல்வேறு மனிதர்களுடனான நேரடி உரையாடல்களின் அனுபவங்கள், தகவல்கள், பார்வைகளை ஆங்காங்கே பொருத்தமான இடங்களிற் பகிர்ந்து கருத்துகளை விவாதித்துச் செல்கின்ற ஒரு அணுகுமுறையும் இந்நூலின் தனித்துவங்களில் ஒன்று.
நூலின் பேசுபொருட்கள்
எனது ‘திக்குகள் எட்டும்’ தொடரின் இந்தப்பகுதியானது, ஒய்வின்ட் புக்லறூட் அவர்களின் இந்நூலின் முதல் இரண்டு அத்தியாயங்களின் அறிமுகமாக அமைகின்றது. அவை இலங்கைத் தீவின் புவியியல் அமைவிலிருந்து அதன் மொழி, இன, கலாச்சார, சமூக, பொருளாதாரக் கூறுகளை வரலாற்று ரீதியாகவும் தகவல், தரவுகள் ரீதியாகவும் முன்வைக்கின்றன. சிங்களத் தேசியவாதத்தின் தோற்றத்திலிருந்து அதன் போக்கு, தமிழ்த் தேசியவாதம், அதன் போக்கு, இனமுரண்பாடு, போர் மற்றும் சமாதான முயற்சிகள், வன்முறைகள், சிங்கள உயரடுக்குகளும் அவற்றுக்கெதிரான ஜே.வி.பி தலைமையிலான ஆயுதக் கிளர்ச்சிகளும், ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகள் என்பவற்றின் மீது ஆழமான ஆய்வுப் பார்வையை முன்வைக்கின்றன. ‘திக்குள் எட்டும்’ தொடரின் அடுத்த பகுதி இப்புத்தகத்தின் ஏனைய அத்தியாயங்களின் மீது பார்வையைச் செலுத்தும்.
இனமுரண்பாடு
இலங்கைத்தீவு 400 ஆண்டுகளுக்கு மேலான கொலனித்துவ வரலாற்றைக் கொண்டுள்ளது. பல வல்லரசுகள் மூலோபாய முக்கியத்துவமாகக் கருதும் அமைவிடத்தையும் அது கொண்டுள்ளது. கொலனித்துவ காலத்தில் உருவாக்கம் பெற்ற இனத்துவ மற்றும் பொருளாதார முரண்பாடுகள் தேசிய ஒருமைப்பாட்டினைக் கட்டியெழுப்புவதில் எதிர்கொள்ள நேர்ந்துள்ள சவால்கள் குறித்த வரலாற்றுப் புள்ளிகளை ஆராய்கிறது புத்தகத்தின் முதலாவது அத்தியாயம்.
2019 இன் ஈஸ்டர் குண்டுவெடிப்புப் போன்ற வன்முறைகளின் நீடிப்பிற்குக் காரணம் சிங்களப் பெரும்பான்மை அரச இயந்திரத்தினது போக்கு என முன்னுரையிற் குறிப்பிடப்படுகின்றது. நாட்டின் சகல பகுதி மக்களுக்கும் உரிய பாதுகாப்பும் சம உரிமைகளும் வழங்குவதற்குரிய விருப்பும் திறனும் அற்ற நிலையிலுள்ளது இலங்கை அரசு. 2009 இல் போர் முடிவுக்கு வந்தபின்னர், போரினால் களைப்படைந்து உழலும் மக்களை ஒருங்கிணைத்து ஒரு இனத்துவப் பன்முகத்தன்மை மற்றும் மத நல்லிணக்கச் சூழலை உருவாக்குவதற்கு மாறாக சிறிலங்கா அரசாங்கம் பௌத்த தேசியவாதத்தினைச் சிங்களப் பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் வளர அனுமதித்திருக்கின்றது என்கிறார் ஒய்வின்ட். இலங்கையின் இனத்துவ அடையாள அரசியல் என்பது சமகாலத்திலும் முக்கியத்துவம் நிறைந்த பேசுபொருளாக இருக்கின்றது என ஈஸ்டர் குண்டுவெடிப்பினை முன்வைத்து அவதானங்களைப் பதிவுசெய்கின்றார். மூன்று இனக்குழுமங்களின் மத்தியிலுள்ள கடும்போக்குச் சக்திகள் ஒன்றையொன்று அடிப்படைவாதத்திற்குள் தள்ளுகின்ற எதிர்மறைச் சூழலை உருவாக்கிவருகின்றது என்கிறார்.
ஒரு கடலுக்குள் ஒரு தீவு : நாடும் மக்களும்
‘ஒரு கடலுக்குள் ஒரு தீவு’ என்பது இந்நூலின் முதலாவது அத்தியாயத்தின் தலைப்பு. போர் முடிவுக்கு வந்த நான்கு ஆண்டுகளின் பின்னர் (2013), பேராசிரியர் ஒய்வின்ட் புக்லறூட் இலங்கைப் பயணம் மேற்கொண்ட அனுபவங்களின் நினைவுத் தெறிப்பாக ஒரு கதைசொல்லல் முறையில் அதன் பகிர்வுகள் அமைந்துள்ளன. போர் அழிவுகளின் எச்சங்கள் தொடர்பாகக் கண்ணுற்ற காட்சிகள், இறுதிப்போர் நடைபெற்ற வன்னிப் பிரதேசங்கள், குறிப்பாக முள்ளிவாய்க்கால் குறித்த விபரிப்புகள் இடம்பெற்றுள்ளன. நந்திக்கடல் வரை நேரடியாகச் சென்று பார்த்து இறுதிக்கட்டத்தில் நடந்தவற்றை மீள்பார்வை செய்கின்றார். அந்தக் காட்சி விபரிப்புகளிலிருந்து 2008-2009 சம்பவங்களை மீள்நினைவுகளாகப் பதிவுசெய்திருக்கின்றார். நோர்வே உட்பட்ட மேற்குநாடுகளில் வாழும் தமிழ்மக்கள் போரை நிறுத்தக் கோரி, சர்வதேச சமூகத்திடம் சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு முன்னெடுத்த கவனயீர்ப்புப் போராட்டங்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். ஆர்ப்பாட்டங்கள் ஒருபுறம் இடம்பெற மறுபுறம் அரசியல்வாதிகளுடன் இடம்பெற்ற கூட்டங்கள், உரையாடல்களில் இலங்கை அரசியல் விவகாரத்தில் ‘நடுநிலை ஆய்வு நிபுணராக’ தன்னைத் தமிழ் நண்பர்கள் அழைத்தமை குறித்த தகவல்களையும் குறிப்பிடுகின்றார்.
தொடர்ந்து, சமாதான முயற்சிகள் குழம்பிய சூழல், போருக்கு இட்டுச் சென்ற காரணிகள், இறுதிக்கட்டப் போரைச் சிறிலங்கா இராணுவம் முன்னெடுத்த முறை, புலிகள் அதனை எதிர்கொண்ட விதம், மக்கள் முகம்கொடுத்த அவலங்கள், அழிவுகள், படுகொலைகள், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட்ட உயர்மட்டத் தளபதிகளின் மரணம், போரின் பின்னான நிலைமைகள் என்பவை குறித்த தகவல்கள் இடம்பெறுகின்றன.
‘முள்ளிவாய்க்கால்’ – நோர்வே தலைமையிலான சமாதான முயற்சிக்கு அறுதியானதும் இரத்தக் களறியுடனுமான முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட இடம் என்கிறார். ஓரிரு சதுர கிலோமீற்றர் பரப்பளவு கொண்ட அந்த இடத்தில் நூறாயிரம் வரையான பொதுமக்களும் சில நூறு எஞ்சியிருந்த விடுதலைப் போராளிகளும் கடைசி மூன்று வாரங்கள் புகை மண்டலம், குருதி, சாவுகளுக்கு மத்தியில் சிறிலங்கா இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு இடைவிடாத தாக்குதல்களுக்கு முகம்கொடுத்த நிகழ்வுகளைப் பதிவுசெய்கின்றார்.
‘நாடும் மக்களும்’ என்ற துணைத்தலைப்பின் கீழ் இலங்கைத் தீவின் புவியியல் அமைப்பிலிருந்து, இனங்கள், மொழிகள், மதங்கள், அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடுகள் உட்பட்ட அம்சங்களைத் தகவல் மற்றும் வரலாற்றுப் பார்வையில் முன்வைக்கின்றார். சிங்கள – தமிழ் – முஸ்லீம் – மலையகத் தமிழ்ச் சமூகங்கள், சமூகங்களுக்கிடையிலான முரண்பாடுகளுடன் நிலவுகின்ற சாதிய வேறுபாடுகள் சார்ந்த முரண்களையும் வெவ்வேறு சிக்கல்களையும் தொட்டுச் செல்கின்றார்.
இறுதிப்போர் : சிறிலங்கா இராணுவ நகர்வும் புலிகள், தமிழரின் நிலையும்
போரை முடிவுக்குக் கொண்டுவருதல் என்ற வாக்குறுதியோடு 2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச தேர்தலில் வென்று அதிகாரத்திற்கு வந்தார். பாதுகாப்பு அமைச்சராகப் பதவிக்கு வந்த அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்ச பல்லாயிரக்கணக்கில் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பினை மேற்கொண்டதோடு, பெருந்தொகை வெளிநாட்டுக் கடனில் ஆயுதக் கொள்வனவுகளையும் செய்து படைத்துறையைப் பலப்படுத்தினார். 2005 – 2008 காலப்பகுதியில் மாதாந்தம் 5000 புதிய இளைஞர்கள் இராணுவத்தில் இணைக்கப்பட்டனர். 2006 சமாதான முயற்சிகள் முறிவடைந்து போர் தொடக்கப்பட்ட போது சிறிலங்காப் படைகள் மூன்று முனைகளில் அடிமேல் அடிவைத்து முன்னேறின. 58 ஆவது படைப்பிரிவு மேற்குக் கரையோரமாக மன்னாரிலிருந்து பூநகரிக்கும் பின்னர் கிழக்கு நோக்கியும் – 57 ஆவது படைப்பிரிவு உட்புறமாக வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கியும் – 59 ஆவது படைப்பிரிவு வடக்கு நோக்கி, கிழக்குக் கரையோரமாக திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு நோக்கியும் படைகளை நகர்த்தி முன்னேறின. 53 மற்றும் 55 ஆவது படைப்பிரிவின் சிறப்பு அதிரடிப்படையினர் முன்னணிக் களங்களிலும் குறுக்குவெட்டாகவும் போரில் ஈடுபட்டன. இத்தகு பாரிய மும்முனை இராணுவ ஆக்கிரமிப்பின் விளைவு, போராளிகளும பொதுமக்களும் அரச படைகளின் சூழ்ச்சிப்பொறிக்குள் சிக்கும் நிலைக்குள் இட்டுச் சென்றது என விபரிக்கப்படுகின்றது.
புலிகள் அதற்குப் பதிலாக பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதோடு, கட்டாய ஆட்சேர்ப்பினையும் தீவிரமாக முன்னெடுத்தனர். இதனால் ஆட்சேர்ப்பு அணிகளின் கண்களிற் படாமலிருக்கத் தமது பிள்ளைகளைப் பெற்றோர் நீண்ட காலம் மறைத்து வைத்திருக்க நேர்ந்திருக்கின்றது. இறுதியில் அதிகாரப் பிரயோகத்துடன் பிள்ளைகள் இழுத்துச் செல்லப்பட்ட பல கதைகள் உள்ளன எனவும் குறிப்பிடப்படுகின்றது. இராணுவ ரீதியான பின்வாங்கல் தொடங்கியதிலிருந்து விடுதலைப் புலிகள் இயக்கம் பொதுமக்கள் வெளியேறுவதைத் தீவிரமாகத் தடுத்தது. இறுதிப்போரின் போது இராணுவத்திடம் சரணடைய முயன்ற குழந்தைகள், பெண்கள் உட்பட்ட பொதுமக்கள் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கான ஆதாரபூர்வமான கதைகள் உள்ளன என்றும் பதிவுசெய்யப்படுகின்றது.
2008 இல் ஐ.நா உட்பட்ட தன்னார்வ நிறுவனங்களின் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்க முடியாது என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்ததை அடுத்து அந்நிறுவனங்களின் வெளிநாட்டுப் பணியாளர்கள் (உள்நாட்டுப் பணியாளர்கள் தவிர்த்து) வெளியேறினர். அது அடிப்படையில் சர்வதேசப் பிரசன்னத்தை இல்லாமற் செய்கின்றதும், போர் மீறல்கள், படுகொலைகளை மறைப்பதற்கான சிறிலங்கா அரசின் முன்னேற்பாடு. அவ்வெளியேற்றத்தைச் சுற்றி நடந்த சம்பவங்கள், விளைவுகள் குறித்து விபரமாக எழுதப்பட்டுள்ளது.
கொலனித்துவ ஆட்சிகள் பதித்த தடங்கள்
கொலனித்துவ ஆட்சிகள் இலங்கை அரசியலில் ஆழமான தடங்களைப் பதித்துள்ளன. கிறிஸ்தவ மிசனரிகளை உருவாக்கியதோடு, கொலனித்துவ ஆட்சிகள் இட்டுச்சென்ற முக்கிய மற்றும் நிலைத்திருக்கின்ற சமூக மாற்றங்களில் ஒன்று, பொருளாதார உயரடுக்குகளின் அபார வளர்ச்சி ஆகும். அவர்களே காலப்போக்கில், அரசியல் அதிகாரத்தை நிர்வகிக்கும் நிலைக்கும் வந்தனர். சமகாலத்திலும் இந்தப்போக்கின் தொடர்ச்சியை அவதானிக்க முடியும். இலங்கைத் தீவின் அரசியலின் பிரச்சாரமயம், கூர்மையான முரண்நிலைகள் உட்பட்ட கணிப்பிடமுடியாத போக்குகளுக்கு இந்தப் பொருளாதார உயரடுக்குகளுக்கு முதன்மைப் பங்குண்டு. உயரடுக்குகளுக்கும் சாதாரண வாக்காளர்களுக்குமிடையிலான இடைவெளி இன்றும் விவாதிக்கக்கூடிய அம்சமாக உள்ளது. திடமான கட்சிகள், சமூக அமைப்புகள், மற்றும் அடிமட்ட (மக்கள் மயப்பட்ட) இயக்கங்களின் பற்றாக்குறையானது அரசியல்வாதிகள் வெறுமனே கவர்ச்சிவாத நிலைப்பாடுகள் மற்றும் மிகைப்படுத்தல்கள் வாயிலாக வாக்குகளுக்குப் போட்டியிடுகின்ற நிலையைத் தக்கவைத்துள்ளது என்கிறார் ஒய்வின்ட்.
மாறிமாறி ஆட்சிசெய்த கொலனித்துவ சக்திகளின் அதிகாரப் பிரயோகத்திற்கும் சமகாலத்தின் இராஜதந்திர சதுரங்கத்திற்கும் இடையில் ஒரு தொடர்ச்சி உள்ளது. அந்தத் தொடர்ச்சிக்கான மூலகாரணி பிராந்திய நலன்கள் சங்கமிக்கின்றதும் பிளவுபடுகின்றதுமான ஒரு பகுதியில் இலங்கை அமைந்துள்ளமையாகும். ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டும் சுதந்திரத்திற்குப் பின் (பிரித்தானியாவிடமிருந்து) தமது வாக்கு வங்கிகளை எவ்வாறு தக்கவைத்துக் கொண்டன என்பதை வரலாற்று ரீதியாக விவாதிக்கின்றார். அக்கட்சிகளை நிறுவிய தலைவர்களின் ( டி.எஸ்.சேனநாயக்கா – ஐ.தே.க, S.W.R.D பண்டாரநாயக்கா – சிறிலங்கா சுதந்திரக் கட்சி) குடும்பப் பின்னணிகள், தலைமுறை தலைமுறையாகக் கட்சித் தலைமையைத் தம்மகத்தே கொண்டிருந்த வரலாறுகளும் பகிரப்படுகின்றன.
அடையாள அரசியல்
அடையாள அரசியல் இந்த நூல் முழுவதும் முக்கிய பரிமாணத்தைக் கொண்டுள்ளது. இலங்கைத் தீவின் முரண்நிலை அரசியலின் மைய அச்சாக ‘தேசியப் பிரச்சனை’ உள்ளது. அது அரசியல் அதிகாரம் மற்றும் ஆள்புலப் பங்கீடு தொடர்பானது; தெற்கின் சிங்களப் பெரும்பான்மைக்கும், வடக்கு-கிழக்கின் தமிழர்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் தொடர்பானது. பிரித்தானிய கொலனித்துவத்திலிருந்து நாடு விடுதலையடைந்த பின்னர் ஏற்படுத்தப்பட்ட பிரதிநிதித்துவ ஜனநாயகம் என்பது சிங்களப் பெரும்பான்மைக்குச் சாதகமானது. பல்லினத் தேசிய மக்களுக்கு உகந்த விளைவுகளைக் கொடுக்கவில்லை. தமிழ் அரசியல்வாதிகள் உரத்துக் குரலெழுப்பியுள்ளபோதும், இன்றும் எழுப்பிவருகின்ற போதும் அக்குரல்கள் செவிமடுக்கப்படவில்லை என்று விளக்குகின்றார். ஜனநாயகத்தின் மறுபக்கம் எப்படியிருக்கும் என்பதற்கு இலங்கை பொருத்தமான உதாரணம் என்று கூறும் ஒய்வின்ட் சிறுபான்மை இனக்குழுமங்கள் ஜனநாயகத் தேர்தல்களில் தமது நிலைப்பாடுகளுக்குரிய அங்கீகாரத்தை அடையக்கூடிய உத்தரவாதப் பொறிமுறைகளைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புகளின்றி, பெரும்பான்மையினர் தீர்மானங்களை எட்டும்போது என்ன நிகழும் என்பதற்கு இலங்கையின் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தினை உதாரணமாகச் சுட்டுகின்றார். இன்னும் சொல்லப்போனால், ‘போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் போரை உருவாக்கிய காரணிகள் முடியவில்லை (தீர்க்கப்படவில்லை) என்ற ஒற்றை வாசகத்தை புத்தகத்தின் மையப்பேசுபொருளாகச் சொல்லலாம்.
சிங்களத் தேசியவாதம்
இலங்கையின் சிங்களத்தரப்பில், ஓரளவு விளிம்புநிலையில் இருந்த அரசியற் கட்சிகள் நோர்வேயையும் அதன் சமாதான அனுசரனை வகிபாகத்தையும் கருவியாக்கிச் சிங்கள மக்கள் மத்தியில் எதிர்ப்பிரச்சாரங்களை மேற்கொண்டு மைய அரசியற் களத்திற்கு வந்தடைந்தன. எதிர்ப்பிரச்சாரம் என்பது தமிழர்களுக்கு ஆதரவாக, சிங்களவர்களுக்கு எதிராக மேற்குலகின் சார்பில் நோர்வே களமிறக்கிவிடப்பட்டுள்ளது என்பதான கருத்துருவாக்கங்களைக் குறிக்கின்றது.
இலங்கைத் தீவின் இனமுரண்பாட்டுக்கான காரணிகள் பல என்பதோடு அவை பன்முகப்பட்டவை. அடையாள அரசியல், இனமுரண்பாடு, சிங்களத் தரப்பின் குடும்ப ஆட்சிகள், ஒடுக்குமுறைகள், சமநிலையற்ற அபிவிருத்தி, சமாதான மற்றும் தீர்வு முயற்சிகளில் வெளிச்சக்திகளின் தோல்வி என அவை பல கூறுகளைக் கொண்டுள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக பிரித்தானியாவிலிருந்து நாடு சுதந்திரமடைந்த 1948 இலிருந்து நாட்டின் ஜனநாயக அமைப்பு முறைமை ஒரு நாட்டின் அனைத்துப் பிரதேச மக்களுக்கும் சம உரிமைகளையும் பாதுகாப்பினையும் வழங்குவதற்குரிய உத்தரவாதமும் விருப்புடனுமான ஒரு அரசைக் கட்டியெழுப்புவதில் இலங்கை தோல்வி கண்டிருக்கின்றது. பௌத்த தலைவர்களும் தேசியவாதிகளும் இலங்கைத் தீவின் முற்றுமுழுதான வரலாற்று நோக்கம் என்பது பௌத்த மதத்தைப் பேணுவதற்கானது என்று கருதுகின்றனர். அதிலும் மதபோதனையாக மட்டுல்லாமல், நிலப்பரப்பிலும் (வாக்களிக்கப்பட்ட பூமி கோட்பாடு), வாழ்வுமுறை, நெறிமுறைகளிலும் பொறிக்கப்பட்டதாகக் கருதுகின்றனர்.
தமிழ்த் தேசியவாதம்
தமிழ்த் தேசியவாதத்திற்கு இருபக்கமுள்ளதாகச் சுட்டப்படுகின்றது. கூட்டுணர்வை உருவாக்கும் வகிபாகத்தோடு துரோகிகளை உருவாக்கும் போக்கினையும் அது கொண்டிருக்கின்றது. உள்நாட்டுப் போர் இடம்பெற்ற போதான விடுதலைப் புலிகளின் மேலாதிக்க காலங்களில் ‘தமிழராய் இருத்தல்’ என்பது புலிகளின் இலக்கு மற்றும் அவர்களின் வழிமுறைகளை ஒருமித்து ஆதரிப்பதைக் குறித்து நின்றது. தமிழராய் இருத்தல் எதனை உள்ளடக்குகின்றது என்பது தொடர்பாக ஒரு மாறுபட்ட பார்வையைக் கொண்டிருத்தல் சிக்கலானது மட்டுமல்ல, ஆபத்தானதும்கூட. சிங்கள மற்றும் தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகளால் ‘துரோக முத்திரை’ அதிகம் பயன்படுத்தப்பட்டது. சிங்களத் தேசியவாதம் பௌத்தர் அல்லாதவர்களை விழுங்கியது. தமிழ்த் தேசியவாதம் தன்னைச் சார்ந்தவர்களையும் விழுங்கியது.
நோர்வேயின் சமாதான அனுசரனை
நோர்வேயின் சமாதான முயற்சிகளுக்கான முன்னெடுப்பு 1997 இல் தொடங்கியது. 2002 இல் இருதரப்பிற்குமிடையிலான போர்நிறுத்த உடன்படிக்கையும் அதனைத் தொடர்ந்து ஸ்கன்டிநேவிய நாடுகளின் உறுப்பினர்களைக் கொண்ட போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு உருவாக்கமும் முக்கியமான அடைவுகள். 2002 – 2003 காலப்பகுதியில் இருதரப்பும் நேரடியாகச் சந்தித்துக் கொண்ட 6 சுற்றுப் பேச்சுகள் இடம்பெற்றன. 2003 ஏப்ரலில் பேச்சுவார்த்தை முறிந்த நிலையில் நேரடிப் பேச்சுவார்த்தைகளின் ஆயுட்காலம் என்பது ஏறக்குறைய ஒரு வருடமே. அதற்குப் பின் 3 ஆண்டுகள் நோர்வே இருதரப்புடனும் தனித்தனியாகவே சந்திப்புகளை நடாத்தியது. 2006 இல் ஜெனிவாவில் 2 சுற்றுப் பேச்சுகளில் இருதரப்பும் நேரடியாகக் கலந்துகொண்டிருந்தபோதும் அப்பேச்சுகள் விளைவுகளைத் தரவில்லை.
சமாதான முயற்சிகளின் ஒவ்வொரு கட்டங்கள் குறித்த தகவல் ரீதியான சித்தரிப்புகள், பேச்சுவார்த்தைகளைச் சுற்றி நிகழ்ந்த சம்பவங்கள், விளைவுகளின் சாதக-பாதகத் தன்மைகள் குறித்த பார்வை புத்தகத்திற் பகிரப்பட்டுள்ளது. சமாதான முன்னெடுப்பின் அம்சங்களுக்கும் அந்நேரம் இலங்கையில் நிகழ்ந்த மாற்றங்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து நோக்கப்படுகின்றது. சமாதான முயற்சி குறித்த விரிவான மீளாய்வு இடம்பெறவில்லை. அது தொடர்பாக நோர்வேயின் ‘நூறாட்’ நிறுவனத்தின் (நோர்வே வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் இயங்குகின்றது. சர்வதேச நிதியுதவி தொடர்பான ஆய்வு மற்றும் ஆலோசனைகளை வழங்கும் செயல்மையம்) மையத்தின் பணிப்பிற்கு அமைய சுயாதீன ஆய்வாளர்களால் நோர்வேயின் சமாதான முன்னெடுப்புத் தொடர்பான மீளாய்வும் மதிப்பீடும் செய்யப்பட்டு அறிக்கை வெளிவந்திருந்தது. அந்த ஆய்வின் சில கூறுகளைத் தன் நோக்குநிலையில் விவாதித்துள்ளார்.
இரண்டு சூழமைவுகளில் உருவாக்கப்பட்ட குறுகிய வாய்ப்புகளுக்குள் நோர்வேயின் சமாதான செயல்முறை முன்னெடுக்கப்பட்டதாக ‘நூறாட்’ இன் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஒன்று பேச்சுவார்த்தைகளின் போது தமிழர்களின் விடுதலைப் போராட்ட அமைப்பினை சமதரப்பாக அங்கீகரிப்பதற்கான பிரதான தரப்புகளின் இணக்கம் சார்ந்தது. மற்றையது இருதரப்பிற்குமிடையிலான இராணுவச் சமநிலை.
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வும் சர்வதேச ஈடுபாடும்
போரும் பொருளாதார வாய்ப்புகளின் குறைபாடுகளும் நாட்டின் பெரும்பகுதி மக்களை நாட்டைவிட்டு வெளியேற வைத்தது. 1980 – 1990 தமிழர் பிரச்சினைக்கான பரந்த அளவிலான சர்வதேச அரசியல் அநுதாபம் கிட்டத்தொடங்கிய காலமாகும். 1983 தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளும் (கறுப்பு ஜூலை) அதன் விளைவாக திட்டமிட்ட முறைகளில் விரிவுபடுத்தப்பட்ட போர் நடவடிக்கைகளும் அதற்கான காரணிகளாகும். இந்தியா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான தமிழர்களின் அகதித் தஞ்சமடைவுகள் இலங்கையில் தமிழர்கள் மீதான துன்புறுத்தல்களை சர்வதேச ரீதியில் ஓர் அரசியற் பேசுபொருளாக்கியது. 1986-1992 காலப்பகுதியில் மட்டும் 120,000 ஈழத்தமிழர்கள் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கோரினர். இன்றைய அளவுகோலில் அந்த எண்ணிக்கை மிகப்பெரியது. குறைந்தது அதே எண்ணிக்கையான தமிழர்கள் கனடாவுக்குச் சென்றனர். இன்று கனடாவில் ஒரு மில்லியனுக்கு மேலானவர்கள் வாழ்கின்றனர். இலங்கைக்கு வெளியே அதிக ஈழத்தமிழர் வாழும் நாடு கனடா.
ஆரம்ப காலங்களிலேயே புலம்பெயர் நாடுகளில் விடுதலைப் புலிகள் தமது கருத்துகளை மேற்கு நாடுகளின் அரசாங்கங்களுக்கு எடுத்துச் சொல்வதற்கான தமது உட்கட்டுமானங்களை உருவாக்கியிருந்தனர். பெருந்தொகையான அகதிகள் மற்றும் ஒரு மோசமான அரசிற்கு எதிரான தமிழர்களின் நியாயமான பாதுகாவலர் என்ற புலிகள் தொடர்பான ஒரு முழுமையற்ற தோற்றம் ஆகிய இரண்டும் அரசியற் தீர்வு தொடர்பான சர்வதேச ஈடுபாட்டுக்கு இட்டுச்சென்றன.
விடுதலைப் புலிகளின் இராணுவ பலமும் சமதரப்பு அங்கீகாரமும்
புலிகளின் இராணுவ ரீதியிலான முன்னேற்றம் அரச தரப்பினைப் பேச்சுவார்த்தைக்கு நிர்ப்பந்தித்தது. 1996 இல் இலங்கை மத்திய வங்கி மீதான தற்கொலைத் தாக்குதல் – 2000 ஆம் ஆண்டு யாழ் நகரின் நுழைவாயிலும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததுமான ஆனையிறவுப் படைத்தளத்தினைக் கைப்பற்றியமை – 2001 இல் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் மீதான புலிகளின் தாக்குதல்கள் ஆகியன புலிகளின் இராணுவ வலிமையை நிரூபித்த தாக்குதல்கள்.
தமிழீழ விடுதலைப்புலிகளுடனும் தொடர்புகளைக் கொண்டிருப்பதற்குரிய சர்வதேச சமூகத்தின் விருப்பு – சிறிலங்கா அரசாங்கத்திற்கு இணையான தரப்பாக அவர்களை அணுகிய சூழல் ஆகியன ஆயுதம் தரித்த விடுதலை அமைப்புகளுக்கு அரிதாகக் கிட்டும் அங்கீகாரம். அமெரிக்காவைத் தவிர, ஐரோப்பிய ஒன்றியம் ஜப்பான் ஆகிய சிறிலங்காவின் முக்கிய வணிக உறவு நாடுகள் புலிகளுடன் நேரடித் தொடர்புகளைக் கொண்டிருந்தன. ஆனால் சர்வதேச அரசியற் போக்கில் ஏற்பட்டுவந்த மாற்றங்கள் குறித்த உரிய புரிதற்திறனைப் புலிகளின் தலைமை கொண்டிருக்கவில்லை அல்லது அதற்கான விருப்பினைக் கொண்டிருக்கவில்லை என்பதையே அவர்களின் பல அணுகுமுறைகள் தெளிவுபடுத்தின என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது.
விடுதலைப் புலிகளின் அணுகுமுறையும் சர்வதேச எதிர்வினையும்
‘செப் 11’ தாக்குதலின் பின்னர் உருவான அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர், புலிகள் போன்ற அமைப்புகள் மீதான பார்வையை உலகளவில் மாற்றியிருந்தன. இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் கூட்டமைப்பு (Co-Chairs : USA, EU, Japan, Norway) புலிகளின் முன்னைய தவறுகளைப் புறந்தள்ளி, (ராஜீவ் காந்தி, பிரேமதாசா கொலைகள் உட்பட) ஒரு சமாதானத் தீர்வை அமையக்கூடிய செயல்முறைக்குள் அவர்களை இழுப்பதற்கு முனைந்தது. அவர்களை ஒரு ஜனநாயக மற்றும் சட்ட வரையறைகளுக்கு உட்பட்ட பாதைக்குக் கொண்டுவர முயற்சித்தது. புலிகளிடம் சர்வதேசம் எதிர்பார்த்த மாற்றம் நிகழவில்லை. 2006 இல் கனடாவைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் புலிகளைத் தமது பயங்கரவாதப் பட்டியலில் இணைத்துக் கொண்டது. முன்னைய (2005) ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் அவர்களுக்குப் பயணத் தடை விதித்திருந்தது. சிறிலங்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் புலிகளால் கொலை செய்யப்பட்டமையின் நேரடி விளைவே ஐரோப்பிய ஒன்றித்தின் தடை.
பேச்சுவார்த்தைகளில் சிறிலங்கா, விடுதலைப்புலிகளின் மாறுபட்ட இலக்குகள்
‘நூறாட்’ இன் மீளாய்வின்படி, இரு தரப்பும் தத்தமது அரசியல் தொலைநோக்குகளோடு பேச்சுவார்த்தைகளுக்குள் நுழைந்தார்களே தவிர, பேச்சுவார்த்தைகளின் மூலம் அவற்றில் மாற்றங்களைக் ஏற்படுத்துவது குறித்துப் பெரியளவில் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. அக்கருத்துத் தொடர்பான தனது நிலைப்பாட்டினை முன்வைக்கும் ஒய்வின்ட், இருதரப்பும் பேச்சுவார்த்தையை முதன்மையாகத் தமது அரசியல் இலக்குகளுக்கான கருவியாக அணுகின என்கிறார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு (ரணில்) சர்வதேச உதவிகளும் முதலீடுகளும் முதன்மையானவை. கட்சியின் தேர்தற் பிரச்சாரத்தில் நாட்டின் மோசமடைந்த பொருளாதாரத்தை மேம்படுத்துவது முதன்மைப் பேசுபொருளாக இருந்தது. அதற்கு புலிகளுடனான பேச்சுவார்த்தை அவசியமான படிக்கல். புலிகளைப் பொறுத்தவரை போரிடும் தரப்புகளுக்கிடையிலான எல்லைகளை உறுதிப்படுத்துவதோடு, சிறிலங்காப் படைகளுடன் சேர்ந்து இயங்கிய தமிழ்க் குழுக்களிடமிருந்து ஆயுதக் களைவினைச் சாத்தியப்படுத்துவதற்கான வாய்ப்பினைப் போர் நிறுத்த ஒப்பந்தம் வழங்கியது. அதனைத் தமது அரசுருவாக்கச் செயல்முறைகளை விரிவுபடுத்தும் நோக்கிற்குப் பயன்படுத்துவதும் புலிகளின் இலக்கு.
சமாதானப் பேச்சுவார்த்தைகளின் தோல்விக்குப் பொறுப்பு நோர்வே இராஜதந்திரிகள் என ‘நூறாட்’ ஆய்வாளர்களின் மீளாய்வில் சுட்டப்படவில்லை. சமாதான அனுசரணையாளராக இரு தரப்புகளின் சர்வதேச சமூகத்துடனான உறவு தொடர்பாக எந்த அளவிற்கு நோர்வே கவனமெடுத்தது என்பது தொடர்பான கேள்வி இந்நூலில் எழுப்பப்படுகின்றது.
படுகொலைகள்
1953 இல் நிகழ்த்தப்பட்ட தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள், 1983 இன் கறுப்பு ஜூலை படுகொலைகள் உட்பட்டவற்றினை முன்னிறுத்தி வன்முறைகளின் போக்கு, அவற்றின் தன்மைகளை விளக்குகின்றார். தமிழர்களின் கூட்டு உளவியலையும் விழிப்புணர்வையும் கட்டமைத்ததில் கறுப்பு ஜூலை ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பொதுமக்கள் மீதான படுகொலைகள், மாற்றுத் தெரிவு ஏதும் இல்லை என்பதனையும் தமிழ் உயிர்களைப் பாதுகாக்க வேறெவரும் இல்லை என்பதனையும் தெளிவுபடுத்திய நிகழ்வாக மாறியது.
சிங்கள மற்றும் முஸ்லீம் மக்கள் மீதான புலிகளின் படுகொலைகள், அவற்றின் விளைவுகள் பற்றிய பார்வைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. 1984 – 1990 வரை, 1984 இல் முல்லைத்தீவில் டொலர் மற்றும் கென்ற் பண்ணைகளில் 62 சிங்கள மக்கள் கொல்லப்பட்டமை, 1985 இல் அநுராதபுரப் படுகொலை (146 பொதுமக்கள்), கிழக்கில் ஏறாவூரில், காத்தான்குடி முஸ்லீம்கள் மீதான படுகொலைகள் எனவாக பட்டியலிடப்படுகின்றன. இத்தகு வன்முறைகளும் படுகொலை நடவடிக்கைகளும் எந்தெந்தப் புறநிலைகளில், எவற்றின் விளைவுகளாக, எவற்றின் பின்னணிகளில் நடந்தேறின என்ற சூழமைவுகளையும் விளக்குகின்றார்.
இராணுவத்திலும் இயக்கத்திலும் இணைவதற்காக இளைஞர்களின் உந்துதல்
இருதரப்பிலும் படைத்துறையில் இணைவதற்கான இளைஞர்களின் உந்துதல்கள் வேறுபட்டவை. மானிடவியலாளர் Michele Ruth Gamburd, சிங்களக் கிராமமொன்றில் சிப்பாய்களுடன் நிகழ்த்திய ஆவணப்படுத்தப்பட்ட உரையாடலை மேற்கோள் காட்டிச் சிங்கள இளைஞர்களின் உந்துதல் குறிப்பிடப்படுகின்றது. அரசியல்வாதிகள் மேடைகளில் முன்னிறுத்த விரும்புகின்ற தேசியப்பற்று, பயங்கரவாதத்தை ஒழித்தல் என்பனவல்ல சிங்கள இளைஞர்கள் இராணுவத்தில் அதிகம் இணைந்ததற்கான உந்துதல். பொருளாதார மாற்று வழிகளின்மை, குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்ற முடியாமை, எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையீனங்களே அவர்களை இராணுவத்திற் சேரத் தூண்டிய புறக்காரணிகள். அவர்களைப் பொறுத்தவரையில் 12 – 24 ஆண்டுகால இராணுவசேவை ஒப்பந்தமென்பது, குடும்பத்திற்கு உணவளிக்கக்கூடிய வருமானத்தைத் தருகின்றது. இராணுவத்திலிருந்து பல்லாயிரக்கணக்கில் தப்பியோடுதல், இணைவிற்கான உண்மையான காரணங்களின் பிரதிபலிப்பினைக் காட்டுகின்றன. 2000 ஆம் ஆண்டுகளில் 35,000 – 60,000 வரையானவர்கள் தப்பியோடியதாகத் தரவுகள் கூறுகின்றன.
மனித உரிமைச் செயற்பாட்டாளர் மாலதி புலிகளின் நிர்வாகப் பகுதியின் வாழ்வு தொடர்பாக எழுதியுள்ள தனது புத்தகத்தில், இயக்கத்தில் இணைந்த பெண்களிற் பெரும்பாலானவர்களின் குடும்பங்கள் அழிவுகளைச் சந்தித்தவை என்பதை மேற்கோள் காட்டுகின்றார். போராட்டத்தில் இணைந்தமைக்கான முதன்மைக் காரணம் தனிநாட்டினை அடைவதுது அல்ல. தமது குடும்ப உறவுகளைக் கொன்ற இராணுவத்தினரைத் தண்டிக்கின்ற எண்ணமே அவர்களின் உந்துதல். வீடுகளை இழந்தமை, கல்விவாய்ப்பின் பற்றாக்குறைகள், மோசமான வறுமை என்பன இயக்கத்தில் இணைவதற்கான ஏனைய காரணிகளாக இருந்துள்ளன.
பௌத்த சிங்கள இனவாதம்
இனத்துவ முரண்பாடுகள் சார்ந்த அம்சங்களோடு, இந்நூலில் நுணக்கமாகக் கையாளப்படும் மற்றுமோர் விடயம், 1948 இல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரமடைந்த காலத்திலிருந்து சமகாலம் வரை, அரசு திட்டமிட்டமுறையில் ஜனநாயகச் செயல்முறையின் கீழ் அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்காமையின் விளைவுகள் ஆகும். சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இனவாதமும் அதிகரித்து வந்துள்ளமை குறித்தும் பிரஸ்தாபிக்கப்படுகின்றது. வன்முறைக்கான திறவுகோலாக மட்டும் இனவாதம் தொழிற்படவில்லை. வன்முறையைத் தக்கவைத்து உந்தித்தள்ளுகின்ற கருவியாகவும் இது இருந்து வருகின்றது. அதன் ஒரு பரிமாணம் முற்றிலும் பொருளாதார ரீதியிலானது; ஆயுத வணிகத்தினால் எட்டப்படும் இலாபம், படைத்துறையில் இராணுவத்தினருக்கான வேலைவாய்ப்பு, சேவை மற்றும் தொழிற்துறையின் இராணுவமயமாக்கல், டயஸ்போறாவில் நிகழும் மூலதனப் பரம்பல் என்பன. பகை முரண்பாட்டுநிலையைப் பேணுவதன் ஊடாகவும் ‘மற்றவர்களிடமிருந்து வரக்கூடிய’ அச்சுறுத்தலை நிலையானதாக ஆக்குவதனூடாகவும் தமது இலக்கிற்கான ஆதரவைத் தக்கவைத்தல் இரண்டாவது பரிமாணமாகும். காலவோட்டத்தில் இத்தைகைய போக்குகள் சமூகத்தை நிலையான எதிர்மறை மாற்றங்களுக்குள் இட்டுச்செல்கின்றது என்ற பார்வை முன்வைக்கப்படுகின்றது.
பொறுப்புக்கூறலின் அவசியம்
யாழ்ப்பாணம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த 1995 காலப்பகுதியில் அங்கும், 2002 இல் சமாதான காலத்தில் வன்னிக்கும், போர் முடிந்து 4 ஆண்டுகளின் பின்னர் 2013 இல் தமிழர் பிரதேசங்களுக்கும் பயணித்த தனது அனுபவங்கள், எதிர்கொண்ட சம்பவங்கள், நிகழ்ந்த உரையாடல்களை விரிவாகவும் நிலைமைகளின் பன்முகத்தன்மையை விளக்கும் வகையிலும் விபரிக்கின்றார்.
சமகாலத்திலும் நிலவுகின்ற முரண்பாட்டுக்கான அரசியற் தீர்வைக் கண்டடைவதற்கு வரலாற்று நிகழ்வுகள் மீதான ஒரு பொறுப்புக்கூறல் அவசியம் என்ற நம்பிக்கையோடு இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளதாக ஒய்வின்ட் ஓரிடத்தில் குறிப்பிடுகின்றார். சிங்களத் தரப்பின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் எந்தளவிற்கு அவசியமோ, அதேபோல் அரசியல் ஈடுபாடு கொண்ட தமிழர்கள், செயற்திறனையும் விமர்சனபூர்வமான அணுகுமுறையையும், தமது சொந்த வரலாறு சார்ந்து கொண்டிருத்தல் அவசியம். தமிழீழத் தனியரசு அவர்களது இலக்கு என்றால் அத்தகு அணுகுமுறை அதிகமதிகம் அவசியமாகுகின்றது என வலியுறுத்துகின்றார்.
மகாவம்சம் கட்டமைத்த சிங்களப் பெருந்தேசியவாதம்
இரண்டாவதும் மூன்றாவதுமான அத்தியாயங்கள் சிங்களத் தேசியவாதத்தினுடைய தோற்றம், உள்ளடக்கம், கட்டமைப்பு, போக்கு என்பனவற்றை வரலாற்று ரீதியாக அணுகுகின்றன. சிங்களத் தேசியவாதத்தின் வேர் முற்றிலும் பௌத்தத்தை மையப்படுத்தியது; முழு இலங்கைத் தீவினதும் ஆள்புலம், நிலப்பரப்பு மீதான கோரலை மையப்படுத்தியது. புத்தர், பௌத்த மதம், நாடு, சிங்கள மக்கள் ஆகியவற்றுக்கிடையிலான இணைப்பாகக் கட்டமைக்கப்பட்டதே சிங்களத் தேசியவாதம். மகாவம்சம் அதனது ‘ஆதாரம்’. இது 6 ஆம் நூற்றாண்டில் பௌத்த பிக்குகளால் தொகுக்கப்பட்ட புராணக்கதைகளின் தொகுப்பு நூல். இந்தக் கதைகளுக்குப் பின்னால் தான் பௌத்த மதபீடம் தன்னைக் கட்டமைத்து வைத்துள்ளது. அரசியல்வாதிகள் அதனைப் பிரதிபலிக்கின்றனர்.
மகாவம்சத்தின் முக்கிய கதைகளில் ஒன்று ‘லங்கா’ எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது என்பதாகும். வட இந்திய இளவரசனான விஜயன் (சிங்கபாகுவின் மூத்த மகன்) 700 தோழர்களுடன் இலங்கையை வந்தடைந்தாக கூறப்படுகின்றது. கௌதம புத்தர் தன் பூலோக வாழ்வைத் துறந்த சமகாலத்தில் அது நிகழ்ந்ததாக மகாவம்சம் சொல்கிறது. புத்தரின் போதனைகள் (தம்மம்) காக்கப்பட வேண்டும் என்பதற்காக பொ.மு 544 இல் இலங்கைத் தீவு புத்தரால் சிங்களவர்களுக்கு அருளப்பட்டதாகவும் அதிற் கூறப்படுகின்றது.
மகாவம்சத்தின் மற்றொரு அம்சம் துட்டகைமுனு இலங்கை முழுவதையும் எவ்வாறு ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான் என்பது பற்றியதாகும். துட்டகைமுனுவும் அவனது சகோதரன் மகாநாகவும் பொ.மு இரண்டாம் நூற்றண்டில் தென் இலங்கையின் ருகுண இராச்சியத்தில் இளவரசர்களாகப் பிறந்தனர் என்கிறது மகாவம்சம். அது தென் இந்தியாவைச் சேர்ந்த (மகாவம்சத்தின் படி) எல்லாளன் அநுராதபுரத்தினை தலைமையகமாகக் கொண்டு இலங்கையின் மாபெரும் இராச்சியத்தை ஆண்டுவந்த காலப்பகுதியாகும். எல்லாளனைப் போரில் வென்றே துட்டகைமுனு இலங்கை முழுவதையும் ஒற்றையாட்சியின் கீழ் கொண்டுவந்ததாகக் கூறப்படுகின்றது. மகாவம்சத்தின் துட்டகைமுனு – எல்லாளன் கதையையும் அதன் ஏனைய கதைகளையும் எவ்வாறு அர்த்தப்படுத்துவது என்பது தொடர்பாகப் பல விவாதங்கள் இடம்பெற்றே வந்துள்ளன. அதனை எழுதியவர்கள் தமிழ் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான சிங்கள மக்களின் யுத்தத்தை விபரித்ததாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால் பல சிங்களத் தேசியவாதிகளால் அக்கதை அவ்வாறுதான் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.
எல்லாள மன்னன் பற்றிய மகாவம்சத்தின் விபரிப்புகள் பெரும்பாலும் பாராட்டுதல்களாகவும் மதிப்பளிப்புகளாகவுமே உள்ளன. பௌத்த மதத்தைப் பின்பற்றுபவனாக இல்லாவிட்டாலும், பௌத்த மரபுகள், பாரம்பரியங்களையும் போதனைகளையும் பாதுகாத்த ஒரு மன்னன் அவன் எனும் குறிப்புகள் உள்ளன. அவனது மரணத்திற்குப் பின்னர் முழுமையான அரச சடங்குகளுடன் அடக்கம் செய்யப்பட்டதோடு, அவனது கல்லறையைக் கடந்து செல்லும் அனைவரும் மரியாதை செய்யவேண்டுமெனவும் பணிக்கப்பட்டிருந்தது. துட்டகைமுனு – எல்லாளன் கதை சார்ந்த மகாவம்சக் குறிப்புகள், இராச்சியங்களுக்கு இடையிலான மோதலில் துட்டகைமுனுவுக்கு சமமான எதிர்த்தரப்பு எல்லாளன் என்ற நோக்குநிலை சார்ந்தது. மகாவம்சத்தினை ஒரு சிங்கள-தமிழ் இன மோதலின் வெளிப்பாடாக அர்த்தப்படுத்துவது இலங்கை வரலாற்றின் நவீன காலப் பிரதிபலிப்பினைச் சார்ந்தது என பல வரலாற்றாசிரியர்கள் கருதுவதாக ஒய்வின்ட் மேற்கோள் காட்டுகின்றார்.
ஜே.வி.பி : தோற்றமும் பின்னணியும் விளைவுகளும்
ஜே.வி.பியினரின் தோற்றம், பின்னணி, ஆயுதப் புரட்சி, ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகள், அரசியற் கட்சியாக அவர்களின் செயற்பாடுகள் விபரிக்கப்படுகின்றன. ஜே.வி.பியின் தோற்றத்தின் சமூக, பொருளாதாரக் காரணிகள் பேசப்படுகின்றன. அரசியல்வாதிகள், நாட்டை ஆண்ட உயரடுக்குகளுடன் தொடர்பில்லாத விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக ஜே.வி.பியில் இணைந்த இளைஞர்கள். அவர்கள் சுதந்திரத்திற்குப் பின்னரான கல்வித்துறை ஜனநாயகப்படுத்தலின் உற்பத்திகள். அதாவது கல்விவாய்ப்பைப் பெற்ற சிங்கள இளைஞர்கள் வேலை வாய்ப்பின்மையால் எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையீனங்களின் விளைவாக அரசுக்கெதிரான நடவடிக்கைகளில் இறங்கும் உந்துதலைப் பெற்றனர். ஜே.வி.பி நிறுவனர் ரோஹண விஜயவீரவினது வரலாறும் இலங்கை அரசியலில் ஏற்பட்ட நிகழ்வுகளும் விளைவுகளும் ஆழமாகப் பேசப்படுகின்றன.
ஜே.வி.பி தொடர்பான பார்வைகளை இலங்கையைச் சேர்ந்த மானிடவியலாளர் Gananath Obeyesekere மேற்கொண்ட ஆய்வொன்றின் பெறுபேறுகளை முன்வைத்து ஒய்வின்ட் விளக்குகின்றார். ஆட்சியதிகாரத்தில் நீடித்தவர்கள் பிரித்தானிய ஆட்சியின் கீழ் கல்வி வாய்ப்பினைப் பெற்ற உயரடுக்கினைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மொழியை, கல்விநிறுவனங்களை, கலாச்சார முதுசங்களை முன்னிறுத்தி வாக்காளர்களை உசுப்பேத்தி, ஆட்சியதிகாரத்தைத் தக்கவைப்பதில் வெற்றி கண்டனர். ஆனால் அரசியற் தீர்மானங்களை எடுப்பதில் புதியவர்களை உள்வாங்கவில்லை.
கல்விப்பின்புலம், வலைப்பின்னல் ஆகியவற்றின் அடிப்படையில் சரியான அடையாளங்களைக் கொண்ட புதியவர்களுக்கு மட்டுமே உயரடுக்கு கதவுகள் திறந்திருந்தன. ஒரு இளைஞனுக்கான பிரகாசமான எதிர்காலம் என்பது உரிய தேர்வுமதிப்பீடுகள், ஆங்கிலத்திறன் மற்றும் அதிகார அடுக்குகளில், அதிகாரிகள் மட்டத்தில் அணைவுகளைக் கொண்டிருப்பதிற் பெரிதும் தங்கியிருந்தது. இவற்றையெல்லாம் பெறுவதற்கு ஒரு நல்ல குடும்பப் பின்னணியும் அவசியம் என்ற நிலையிருந்தது. 1956 இன் தேர்தல் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதோடு, சிறுபான்மைத் தேசிய இனங்கள் சார்ந்து பாரிய எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியது. ஆனால் சிங்களச் சமூகத்தின் மத்தியில் அது அதிகாரப் பகிர்வு மற்றும் பிற நிலைமைகள் சார்ந்து நேர்மறையான மாற்றத்திற்கும் வழிகோலவில்லை.
1970 இல் 31 வீதமான நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாட்டின் 5 முன்னணி உயரடுக்கு கல்லூரிகளில் கல்வி கற்றவர்களாக இருந்தனர். இருபது அமைச்சர்களில் 11 பேர் அதே கல்லூரிகளிற் பயின்றவர்களாக இருந்தனர். படிநிலை அடுக்குகளைச் சமன் செய்வதற்குப் பதிலாக இலங்கையின் ஜனநாயக அமைப்பு முறைமையானது வர்க்க சமூகத்தை மேலும் ஏற்றத்தாழ்வுகளுக்குள் இட்டுச்சென்றது. தேசிய உயரடுக்குச் சமூகம் ஏனைய வர்க்கச் சமூகங்களை வெளியில் நிறுத்தியது. இந்நிலை இன்னும் தொடர்கின்றது. பெரும்பாலும் வாய்ப்புகளுக்கான அணுகல், ஒப்பீட்டளவில் சாதாரணமான பதவிகள் கூட, தகுதிகள் மற்றும் திறந்த போட்டியின் ஊடாக அல்லாமல் – செல்வாக்குமிக்க நபர்களுடனான தொடர்புகளால் தீர்மானிக்கப்படுகின்றது. செல்வாக்குமிக்கவர்கள் எனும்போது அது நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் முக்கியஸ்தர்கள், அதிகார உயரடுக்குகளைச் சேர்ந்த நபர்களைக் குறிக்கின்றது. 1971 இன் ஜே.வி.பி, புரட்சி அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான முயற்சி மட்டுமல்ல அது சிறிலங்காவின் உயரடுக்கு மீதான தாக்குதலும்கூட என்பது ஒபயசேகரவின் பார்வை.
‘திக்குள் எட்டும்’ தொடரின் அடுத்த பகுதி இப்புத்தகத்தின் ஏனைய அத்தியாயங்களின் மீது பார்வையைச் செலுத்தும். அது தமிழர்களின் தனிநாட்டுக்கான போராட்டம், போர் – சமாதானம் – விசாரணை அறிக்கைகள், வெற்றிக்களிப்பும் சித்திரவதைகளும், சிறுபான்மை மூலோபாயங்கள், பத்து ஆண்டுகளுக்குப் பின் ஆகிய தலைப்புகளிலான பெரும் அத்தியாயங்களின் கீழ் பேசப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பான பார்வையாக அமையும்.
தொடரும்