‘திக்குகள் எட்டும்’ தொடரின் கடந்த பாகம் நோர்வேஜியப் பேராசிரியர் ஒய்வின்ட் புக்லறூட் எழுதி 2019 இல் வெளிவந்த ‘இலங்கையின் போரும் சமாதானமும் – நோர்வேயின் சமாதானத் தோல்வியின் விளைவுகள்’ நூலின் முதல் இரண்டு அத்தியாயங்களின் அறிமுகமாக அமைந்தது. அது, இலங்கைத் தீவின் புவியியல் அமைவிலிருந்து அதன் மொழி, இன, கலாசார, சமூக, பொருளாதாரக் கூறுகளை வரலாற்று ரீதியாகவும் தகவல், தரவுகள் ரீதியாகவும் முன்வைக்கின்றன. சிங்களத் தேசியவாதத்தின் தோற்றத்திலிருந்து அதன் போக்கு, தமிழ்த் தேசியவாதம், அதன் போக்கு, இனமுரண்பாடு, போர் மற்றும் சமாதான முயற்சிகள், வன்முறைகள், சிங்கள உயரடுக்குகளும் அவற்றுக்கெதிரான ஜே.வி.பி தலைமையிலான ஆயுதக் கிளர்ச்சிகளும், ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகள் என்பவற்றின் மீது ஆழமான ஆய்வுப் பார்வையை முன்வைத்திருந்ததைப் பற்றிப் பார்த்திருந்தோம். இந்தப் பகுதியில் நூலின் ஏனைய அத்தியாயங்கள் மீது பார்வையைச் செலுத்துவோம். இது, தமிழர்களின் தனிநாட்டுக்கான போராட்டம், போர் – சமாதானம் – விசாரணை அறிக்கைகள், வெற்றிக்களிப்பும் சித்திரவதைகளும், சிறுபான்மை மூலோபாயங்கள், பத்து ஆண்டுகளுக்குப் பின் ஆகிய தலைப்புகளிலான பெரும் அத்தியாயங்களின் கீழ் பேசப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பான பார்வையாக அமைகின்றது.
தமிழர்களின் விடுதலைப் போராட்டம்
தமிழர்கள் தனிநாடு கோரிப் போராட நிர்ப்பந்திக்கப்பட்ட இலங்கைத் தீவின் அரசியல் ரீதியான நிகழ்வுகள், போக்குகளையும் – தமிழர்கள் மீதான சிங்கள ஆட்சியாளர்களினது இனத்துவ ஒடுக்குமுறை நடவடிக்கைகளையும் விரிவாகவும், நிகழ்வுகளின் பின்னணயிலும் விபரிக்கின்ற இந்நூலின் ‘தமிழர்களின் விடுதலைப் போராட்டம்’ எனும் தலைப்பிலான அத்தியாயம் கல்வித்தரப்படுத்தல் தனிநாட்டுப் போராட்டம் நோக்கி இளைஞர்களை அணிதிரட்டியது பற்றிப் பேசுகிறது. தமிழ் அரசியலில் இனத்துவப் பாகுபாடு சார்ந்த ஒரு குறியீடாக கல்வித்தரப்படுத்தல் சட்டமும் அதன் விளைவுகளும் ஆகிப்போயின. சிறிலங்கா அரசாங்கம் கல்விசார் நிலமைகளை ஒரு பொருளாதாரக் கண்ணாடி ஊடாகப் பார்த்திருக்க வேண்டும். நாட்டின் பரந்துபட்ட இளைஞர்களுக்குக் கல்வி வாய்ப்பினை வழங்க வேண்டுமென்ற அரசாங்கத்தின் விருப்பு புரிந்துகொள்ளக்கூடியது. ஆனால் அதனை ஒரு பொறுப்பற்றதும், வெளிப்படையான ஒடுக்குமுறைக்கு ஊடாகவும் அரசாங்கம் செய்தது. தமிழ்ச் சமூகத்தினை விலைகொடுக்கச் செய்வதன் மூலம், சிங்கள வாக்காளர்களுக்கு ஆதரவாகத் தாம் இருக்கின்றோம் என்பதைக் காட்ட முனைந்தனர். அதன் விளைவு இனத்துவ துருவமயமாக்கலுக்கு இட்டுச் சென்றது என்கிறார் ஒய்வின்ட் புக்லறூட்.
1971 இல் கொண்டுவரப்பட்ட கல்வித்தரப்படுத்தல் 1956 இல் அமுல்படுத்தப்பட்ட தனிச் சிங்களச் சட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒடுக்குமுறைமயப்பட்ட மொழி அரசியலின் அடுத்தகட்டம் ஆகும். இவை தமிழ்ச் சமூகத்தின் மத்தியதர வர்க்கத்தினை வெகுவாகப் பாதித்ததோடு; கல்வி, இன ஒடுக்குமுறையின் குறியீடாகவும் ஆனது.
இந்த அத்தியாயத்தில், 1974 இல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சர்வதேச தமிழாராய்ச்சி மாநாட்டில் காவல்துறையினர் நடாத்திய வன்முறை, அதனைத் தொடர்ந்து இயக்கங்கள் மேற்கொண்ட எதிர் வன்முறைகள் ஆகியன விபரிக்கப்பட்டுள்ளன. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் உள்ளடக்கம் மற்றும் அதன் மூலம் தனிநாட்டுப் போராட்டத்திற்கு விடுக்கப்பட்ட நேரடியான அழைப்பு, போராட்ட இயக்கங்களின் தோற்றுவாய் குறித்த வரலாறும் பதிவாகியுள்ளது.
தமிழரசுக் கட்சித் தலைமையானது தனது உத்தியோகபூர்வ அறிவிப்புகளில் தமிழீழ விடுதலைக்கான போராட்டம் அமைதி வழியில் முன்னெடுக்கப்பட வேண்டுமென்று கருதியபோதும், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினை நேரடியான அர்த்தத்தில் பலர் பொருள் விளங்கினர்.
1970 களின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் திட்டமிடப்பட்ட படுகொலைகள், வங்கிக் கொள்ளைகள், காவல்துறை ரோந்துப் படைகள் மீதான தாக்குதல்கள் ஆகியன அதிகம் நிகழ்த்தப்பட்டன. 1970 களில், ஒடுக்குமுறை அரசியல், தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகியிருந்தது. காவல்துறை மோசமான வழிமுறைகளைக் கையாண்டது. ஆனால் தமிழ் போராட்ட அமைப்புகளின் வங்கிக் கொள்ளைகள், சிங்களப் பொலிசார் மீதான கொலைகள் இடம்பெற்ற காலத்தில், தமிழ் மக்களுக்கெதிராக அரச வன்முறை இயந்திரம் முழு அளவில் ஏவிவிடப்பட்டிருக்கவில்லை. தமிழ் ஆயுத இயக்கங்கள், அரசியல் தொலைநோக்கு என்பதைக் காட்டிலும் தமது இலக்கிற்கான ஆதரவை உருவாக்கும் பொருட்டுத் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டன. அந்நடவடிக்கைகள், தமிழ் மக்களுக்கெதிரான அரச ஆக்கிரமிப்பைத் தூண்டும் முனைப்பினைக் கொண்டிருந்தன என அக்கால நிகழ்வுகளை மேற்கோளிட்டு தமிழ் ஆயுதப் போராட்ட அமைப்புகள் மீதான விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது.
அந்தப் போக்கில் 1979 இன் அவசரகாலச் சட்டம், அதாவது பயங்கரவாதத் தடைச் சட்டம் (Prevention of terrorism act) ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்தச் சட்ட அமுலாக்கம், காவல்துறை மற்றும் படைத்துறையினருக்கு, கைதுகளுக்கும் சித்திரவதைகளுக்குமான பூரண சுதந்திரத்தை வழங்கிற்று. வடக்கில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான பொறுப்பு படைத்துறையினருக்கு வழங்கப்பட்டது. 1981 இல் நடந்த யாழ் நூலக எரிப்பு, தமிழ் வரலாற்றின் இக்காலத்தினது ஒரு குறியீடாக நிலைபெற்றிருக்கின்றது எனக் குறிப்பிடும் புக்லறூட், அக்காலகட்ட நிகழ்வுகளை வரலாற்று ரீதியாகவும் அவற்றின் சங்கிலித்தொடர் விளைவுகளை தொகுத்தும் முன்வைக்கின்றார்.
இனத்துவ மற்றும் அக சமத்துவமின்மை : சாதியப் படிநிலைகள்
இனத்துவ மற்றும் அகச் சமத்துவமின்மை என்ற துணைத்தலைப்பின் கீழ் தமிழ்ச் சமூகத்தின் சாதியப் பாகுபாடு, அதன் கட்டமைப்பு, அடுக்குகள், நடைமுறைகள், சாதியம் குறித்த சமூக மனநிலை குறித்த பார்வை என்பன முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மற்றும் சிங்களத் தரப்பில், குறிப்பாகத் தமிழ்த் தரப்பில், சமூக – பொருளாதார வேறுபாடு சாதிய அம்சத்துடன் தொடர்புபட்டதாக இருந்து வந்துள்ளது என்று குறிப்பிட்டு, அதன் தோற்றுவாயிலிருந்து சமூகப் பாகுபாட்டில் அதன் வகிபாகம் எப்படியாக இருந்து வந்துள்ளது என்பதை வருணாசிரம முறைமையை விபரித்து விளக்குகின்றார். சாதியப் போக்கினையும் அதன் கட்டமைப்பு, நடைமுறைசார் அம்சங்களை நுண் பார்வையினூடு பதிவு செய்கின்றார்.
தமிழ்ச் சமூகத்தின் சாதியக் கட்டமைப்புச் சார்ந்தும், அதற்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அணுகுமுறை, மூலோபாயம் குறித்தும் பேசப்படுகின்றது. போர் வரலாற்றினையும் தமிழ்ச் சமூகத்தின் இன்றைய நிலையினையும் புரிந்துகொள்வதற்கு சமூக முரண்பாடுகள் பற்றிய அறிதல் அவசியம் என்ற தனது நிலைப்பாட்டினைப் பதிவு செய்கின்றார் புக்லறூட்.
பல தாழ்த்தப்பட்ட சமூகங்கள் நவீன காலம் வரை நில உடமையாளர்களுடன் (வெள்ளாளர்) சேவைப் பரிமாற்றத்தில் ஈடுபட்டிருந்தாலும், சில சமூகங்கள் சாதியப் படிநிலை அடையாளங்களிலிருந்து விடுதலை பெறப் போராடினர். 1900 நடுப்பகுதியில் தமது சேவை, உற்பத்தி மற்றும் உழைப்பினை கைக்காசிற்கு விற்கக்கூடிய பொருளாதாரச் சந்தை வாய்ப்பினைப் பெற்ற சமூகத்தினர், நில உடமையாளர்களின் அதிகாரத்திலிருந்து விடுபடும் சூழல் ஏற்பட்டது. கைத்தொழில் மற்றும் மீனவச் சமூகங்கள் உட்பட்ட சில சமூகத்தினர் அவ்வாறு விடுபட முடிந்தமை பற்றி விபரிக்கப்படுகின்றது.
1900 களின் ஆரம்பத்தில் மீனவச் சமூகத்தினர் நில உடமையாளர்களின் மேலாதிக்கத்திலிருந்து விடுபடத் தொடங்கியதோடு மட்டுமல்லாமல், கடற்போக்குவரத்து மற்றும் கடத்தல் மூலம் அடைந்த சமூக நிலையினால், யாழ்ப்பாணக் கரையோரத்தில் அவர்கள் தமக்கான ஒரு சுதந்திரமான அதிகார நிலையைத் தமிழ் சமூகத்தின் மத்தியிற் கட்டியெழுப்பினர். சாதியப் படிநிலையின் தரவரிசையில், மீனவச் சமூகம் தாழ்த்தப்பட்டதாக வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் ஆதிக்க சாதியினரின் பொருளாதார வளங்களில் அதிகம் சார்ந்திருக்கவில்லை. பிரித்தானியாவிலிருந்து இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், அவர்கள் அரசியல் ரீதியாகவும் நில உடமையாளர்களுக்குப் போட்டியான நிலையையும் அடைந்தனர்.
சாதியப் பாகுபாடுகளின் அனைத்து வடிவங்களும் ஒழிக்கப்படவேண்டுமென்ற நிலைப்பாட்டினைப் புலிகள் கொண்டிருந்ததோடு, சாதியுடன் தொடர்புடைய நடைமுறைகளுக்குத் தடையும் விதித்திருந்தனர். தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று தம்மைத் தாமே கருதிக்கொண்ட அவர்கள், சாதியச் சிக்கல், ஒழிக்கப்பட்ட ஒன்றாகக் கருதினர். ஆனால் 35 ஆண்டுகளாக தமிழ் அரசியலில் வெளிப்படையாகப் பேசப்படாத பொருளாகச் சாதி இருந்திருக்கின்றது என்கிறார் புக்லறூட். இதன் மூலம் அவர் சொல்லமுனையும் செய்தி, மன ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சாதியச் சிக்கல் பேசாப் பொருளாக இருந்துள்ளது; அது முற்றிலும் ஒழிக்கப்படவில்லை என்பதாகும்.
தமிழ்ச் சமூகத்தின் பெண்கள் பற்றிய பார்வை
‘கற்பு’ என்ற கருதுகோளின் கீழ், தமிழ்ச் சமூகத்தின் பெண்கள் பற்றிய பார்வை கட்டமைக்கப்பட்டுள்ள விதத்தினை விபரிக்கின்றார். விடுதலைப் புலிகள் இயக்கம் பெண்கள் குறித்த தமிழ்ச் சமூகத்தின் பார்வையை, பெண் போராளிகள் விடயத்தில் எவ்வாறு உடைத்தது என்பதைக் குறிப்பிடுகின்றார். பெண்கள் குறித்த மரபுசார்ந்த கலாச்சாரப் ‘பொதி’யினைப் புலிகள் இயக்கம், குறிப்பாகத் தமது பெண் போராளிகள் மத்தியில், உடைத்துப் போட்டது. 1983 இலேயே புலிகள் இயக்கம் பெண்கள் மீதான அனைத்து வகை ஒடுக்குமுறைகளையும் இல்லாமற் செய்யும் நோக்குடன் பெண்கள் பிரிவினை உருவாக்கியது. பெண்கள் தமது வாழ்வைத் தாமே தீர்மானிக்கும் நிலையை ஏற்படுத்தும் நோக்கமும் இருந்துது.
புலிகள் இயக்கத்தின் வழிமுறைகள் தொடர்பான மாறுபட்ட கருத்துகள் இருப்பினும், பெண்கள் முன்னர் சமூகத்திற் பெற்றிராத செயற்பாட்டு வெளியினை, இயக்கத்திற்குள் கொண்டிருந்தனர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்கிறார். போர்க்கள முன்னரங்குகளில் அவர்களின் பங்கேற்பு, தற்கொலைப் போராளிகள் எனவாகத் தமிழ்ச் சமூகத்திற் பெண்கள் சார்ந்த நிலைப்பாடு, புதியதும் கவனயீர்ப்பிற்குரியதுமான நிலைமைகளைப் பிரதிபலித்தன. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு பயணம் செய்த ஒருவரால் இவற்றைத் தெளிவாக உணர முடியும். படைத்துறைப் பயிற்சியை முடித்த பெண்களிடத்து தனித்ததொரு உடல்மொழி, தகமை, பார்வை மற்றும் தன்னம்பிக்கையினை (சீருடை அணிந்திருந்தாலும் இல்லாவிட்டாலும்) அவதானிக்க முடிந்தது. சீதனத் தடை, காதல் திருமணத்திற்கான அனுமதி, இந்து சமயச் சடங்குகள் அற்ற சமத்துவத்தைப் பிரதிபலிக்கும் திருமண முறை போன்றவற்றை உதாரணமாகச் சுட்டும் புக்லறூட், சமூகத்தில் புலிகள் பின்பற்றிய பெண்ணியப் பார்வையின் நடைமுறைசார் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டுகின்றார்.
இந்தியாவின் நிழலில்
‘இந்தியாவின் நிழலில்’ என்ற துணைத்தலைப்பின் கீழ் ‘1983 கறுப்பு ஜூலை’ படுகொலைகளை அடுத்து, இலங்கை நிலைமைகள், குறைந்தது இரண்டு அடிப்படைகளில் மாற்றம் கண்டது என்கிறார். ஒன்று இந்தியாவின் தீவிர தலையீடு; இராணுவ ரீதியாகவும் அதன் தலையீடு அமைந்தது. மற்றையது தமிழர்களின் பெருவாரியான இடப்பெயர்வு; அதாவது வெளிநாடுகளுக்கான புலப்பெயர்வு. கறுப்பு ஜூலை படுகொலைகளுக்கான ஜே.ஆர் ஜெயவர்த்தனா அரசாங்கத்தின் பதில், மன்னிப்புக் கோரலாகவோ பொறுப்புக்கூறலாகவோ இருக்கவில்லை. மாறாக 6 ஆவது திருத்தச் சட்டத்தினை அவர் அமுல்படுத்தினார். அந்தச் சட்டத்திருத்தமானது இலங்கையின் ஆள்புலத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, தூண்டுதல்கள் மூலமோ, நிதியுதவி அல்லது வேறு வழிகளிலோ சுதந்திரத் தனியரை நிறுவுவதைச் சட்டவிரோதமாக்குகிறது.
எண்ணற்ற தமிழ் விடுதலைப் போராட்ட அமைப்புகள்
1980 கள் வரையான காலப்பகுதியிற் தோற்றம் பெற்ற விடுதலைப் போராட்ட அமைப்புகள் பற்றிய தகவல்களோடு, அவற்றுக்கான இந்தியாவின் பயிற்சிகள் குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன. இயக்கங்கள் கூட்டாக இணைந்து கலந்துகொண்ட திம்புப் பேச்சுவார்த்தை, அதில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்தும் பேசப்படுகின்றது. அக்கோரிக்கைகளில் ஒன்றான ‘இலங்கைத் தீவினைத் தமது நாடாகக் கருதும் அனைத்துத் தமிழர்களுக்கும் குடியுரிமை மற்றும் முழு ஜனநாயக உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும்’ என்ற இறுதிக் கோரிக்கை வடக்கு – கிழக்கிற்கு வெளியில் வாழும் மலையகத் தமிழர்களின் உரிமை சார்ந்தும் முக்கியமானது. அத்தோடு ‘திம்புக் கோட்பாடுகள்’ என அறியப்பட்ட ‘இலங்கைத் தமிழர் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்படுதல், இலங்கைத் தமிழருக்கென்ற அடையாளம் காணப்பட்ட தாயகத்தின் இருப்பை அங்கீகரித்தல், தமிழர் தேசத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல்’ ஆகிய கோரிக்கைகள் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்ட அரசியலின் அடிப்படையாக இருந்து வருவதோடு, நோர்வே தலைமையில் புலிகள் கலந்துகொண்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான அடிப்படையாகவும் அக்கோட்பாடுகள் அமைந்திருந்தன என்பதை இந்நூல் பதிவாக்கியுள்ளது.
இந்தியத் தலையீடும் 13 ஆவது திருத்தச்சட்டமும்
முப்பது ஆண்டு காலப் போரில் சில காலப்பகுதிகள் ஏனைய பகுதிகளைக் காட்டிலும் வடக்கின் பொது மக்களுக்கு அதிக அவலங்களை ஏற்படுத்தியுள்ளன. தொடர்ச்சியான குண்டுமழை, ஆட்லறித் தாக்குதல்கள், பயங்கரவாதம் ஆகியன இயல்பு வாழ்வின் ஒவ்வொரு அங்கங்களையும் சாத்தியமற்றதாக்கியது. 2009 இன் ஆரம்பம் முதல் மே வரையான காலப்பகுதி அதில் ஒன்று. மற்றையது 1990 களின் இறுதி அரைப் பகுதி. அதேபோல் 1987 இலிருந்து 1990 களின் இறுதிக் காலமும் அந்த வகைக்குள் அடங்குகின்றது என்கிறார்; இந்தியாவின் தலையீட்டினால் வலிந்து இலங்கை அரசாங்கத்தின் மீது திணிக்கப்பட்ட உடன்படிக்கைக்கு அமையை, தமிழர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கு என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான இந்திய இராணுவத்தினர் தமிழர் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்ட காலப்பகுதியையும், அவ்வாறான மோசமான காலப்பகுதியாகக் குறிப்பிடுகின்றார். வெகு குறுகிய காலத்திற்குள் ‘Indian Peace keeping forces (இந்திய அமைதி காக்கும் படை)’ என்ற பெயரில் அனுப்பப்பட்ட படைகள் Indian People killing forces (இந்திய மக்கள் கொலைப் படை) என அழைக்கப்படும் அளவிற்கு நிலைமை மோசமாகியது. மூன்று ஆண்டு காலம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இந்தியப் படைகளின் போர், பொதுமக்களுக்குப் பாரிய விளைவுகளை ஏற்படுத்தியது.
இந்த மூன்று ஆண்டுகளின் நிகழ்வுச் சங்கிலியை விரிவாக முன்வைப்பது தனியான ஒரு புத்தகத்தினைக் கோரக்கூடியது என்று குறிப்பிட்டு முக்கிய நிகழ்வுகள், விளைவுகளை விபரிக்கின்றார். அக்காலகட்டம், அரசியல் ரீதியாகப் பல்வேறு இரகசிய உடன்படிக்கைகள், துரோகங்கள், அதிர்ச்சிக்குரிய கூட்டுகள் என்பவற்றால் நிறைந்திருந்தது.
தமிழீழ விடுதலை இயக்கங்களுக்கிடையிலான சகோதரப் படுகொலைகள் குறித்த சம்பவங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. குறிப்பாக விடுதலைப் புலிகளால் ஏனைய இயக்கங்கள் தடைசெய்யப்பட்டமை, கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. புலிகள் ஏனைய இயக்க உறுப்பினர்களைப் படுகொலை செய்து தடை செய்தமை, அவ்வியக்கங்களும் போராளிகளும் இந்திய மற்றும் சிறிலங்கா அரச படைகளிடம் பாதுகாப்புத் தேட நிர்ப்பந்திக்கப்பட்டமை பற்றியும் பேசப்படுகின்றது.
புலிகள் இயக்கமும் சாதிய ஒடுக்குமுறை உடைப்பிற்கான வெளியும்
நியூசிலாந்தில் வாழும் என். மாலதி எழுதிய ‘A Fleeting moment in my country’ என்ற புத்தகத்தை முன்வைத்தும், அவருடனான தனது கலந்துரையாடல்கள், விவாதங்களை முன்வைத்தும் சில அவதானங்கள் பகிரப்படுகின்றன. இயக்கத்தின் உள்மட்டத்தில் ஒரு சமூக வெளியைப் புலிகள் உருவாக்கியிருந்தார்கள் என்ற மாலதியின் கருத்துப் பகிரப்படுகின்றது. சாதிய வேறுபாடுகள் நீக்கம்பெற்ற ஒரு வெளி அது என்கிறார் மாலதி. வன்னியில் ஒருமுறை தன்னுடனான உரையாடலில் மாலதி தெரிவித்ததைப் பதிவு செய்கின்றார் புக்லறூட்; ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இயக்கத்திற்குள் மேலெழ முடிந்திருக்கின்றது என்பது அந்த வாதமாகும்.
புலிகளும் தமிழரும்
2000 ஆம் ஆண்டுகளிலிருந்து வீட்டுக்கொரு வீரர் – வீராங்கனையை போராட்டுத்திற்குத் தரவேண்டுமென்று கோரி, இயக்கத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்துவந்த புலிகள், 2006 இலிருந்து வீட்டுக்கு இரண்டு பேரைக் கோரினர். 2009 இறுதிப் போரில் எவரொருவரும் போர்முனையில் நிற்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். புலிகளுக்கான தமிழ் மக்களின் ஆதரவு, எதிர்ப்பு குறித்த கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. புலிகள் சார்ந்து பல்வேறு நிலைப்பாடுகளும் பார்வைகளும் அனுபவங்களும் இருப்பினும், பல தமிழர்கள் தம்மை அச்சுறுத்திய சிங்கள அரச படைகளுக்கு எதிரான பாதுகாப்பாகப் புலிகளைப் பார்த்தனர்.
புலிகளின் தனித்துவமான இராணுவத் திறன்களுக்கு அப்பால், அவர்களின் வெற்றிக்கு இரண்டு காரணிகள் அடிப்படையானவை. ஒன்று சர்வதேச ரீதியில் அமைப்பு ரீதியான கட்டமைப்புகளை ஒவ்வொரு நாடுகளிலும் உருவாக்கியமை. அதன் மூலம் நிதிசேகரிப்பு மற்றும் தமது நிலைப்பட்ட தகவல் பரப்புரைகளை புலம்பெயர் தமிழர்கள் மற்றும் வெளிநாட்டுத் தொடர்புகள் மத்தியில் மேற்கொண்டமை. 1983 இலிருந்து போர் முடிவடைந்த காலம் வரை புலிகளின் மிகவலிமையான ஆதரவு சக்தியாக புலம்பெயர் தமிழ்ச்சமூகம் இருந்துள்ளது. தமிழ் ‘டயஸ்போறா’ மிகப்பெரியதும் உலகளாவிய கருத்துருவாக்க சக்திகள் உள்ள வட அமெரிக்கா, அவுஸ்ரேலியா, ஐரோப்பா எனப் பல பிராந்தியங்களில் பரந்துள்ளதும் உள்ளது.
மற்றைய அம்சம், தாம் முன்னெடுத்த போராட்டத்தைக் குறியீடுகள் மற்றும் வெளிப்பாட்டு வடிவங்களுக்கு ஊடாக படைப்பாற்றலுடன் நிலை நிறுத்தியமையாகும். அவர்கள் கொண்டுவந்த சடங்குகள், நடைமுறைகள், நினைவுச் சின்னங்கள், குறியீடுகள், கவிதைகள், இசைப் பாடல்கள் என்பன அவர்களுக்கான ஆதரவு அதிகரிக்க உதவின. அதனை அவர்களின் அரசியல் ‘அண்டவியல்’ என அழைக்கலாம். தமது அரசியல் பரப்புரைகளில் அவர்கள் பண்டைய தமிழ் போர் மரபினது விசுவாசம் மற்றும் வீரம் ஆகிய முதன்மை விழுமியங்களைப் பின்பற்றினர். சமத்துவம், மனித உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதைக் காட்டிலும், தலைமை மீதான விசுவாசத்தை முதன்மைப்படுத்தியமை, சாவைப் புனிதப்படுத்துகின்ற போக்கு புலிகள் இயக்கத்தில் நிலவியதெனக் குறிப்பிடுகின்றார் புக்லறூட்.
போர், சமாதானம் மற்றும் விசாரணை அறிக்கைகள்
‘போர், சமாதானம் மற்றும் விசாரணை அறிக்கைகள்’ என்ற தலைப்பிலான அத்தியாயம் இறுதிக்கட்டப் போரின் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், படுகொலைகள் குறித்த சர்வதேச அறிக்கைகள், ஆதாரங்கள் மற்றும் அவற்றின் விளைவுகள், அவற்றை சிறிலங்கா அரசாங்கங்கள் எதிர்கொண்ட முறைமை குறித்தும் பேசுகின்றது.
2009 மே போர் முடிவுற்ற ஐந்து நாட்களின் பின் அன்றைய ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி – மூன் இலங்கைப் பயணம் மேற்கொண்டார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் சந்திப்புகளை மேற்கொண்டார். உலங்குவானூர்தியில் போர் நடைபெற்ற பிரதேசங்களைப் பார்வையிட்டார். அத்தோடு வன்னியிலிருந்து வெளியேற்றப்பட்ட 300,000 மேற்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்த ‘மெனிக் பார்ம்’ அகதி முகாமிற்கும் விஜயம் செய்தார். பான் கி – மூனும் மகிந்த ராஜபக்சவும் கூட்டாக ஊடகச் சந்திப்புகளை நடாத்தி உறுதிமொழிகளை வழங்கினர். சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் மற்றும் மனித உரிமைச் சட்ட மீறல்களைக் கண்டடைவதற்கான (An accountability process) பொறுப்புக்கூறலின் அவசியத்தை ஊடகச் சந்திப்பின் இறுதியில் பான் கி – மூன் வலியுறுத்தினார்.
குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் என்பது ஊடக மாநாட்டின் இறுதிச் சொற்களாக அமைந்தன. இறுதிப் போரில் பொதுமக்கள் மீதான இராணுவத்தின் தாக்குதல்கள் பற்றியோ அல்லது போரில் உயிர் தப்பியவர்கள் மிக மோசமான நிலைமைகளில் மெனிக் பார்ம் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தமை குறித்தோ பான் கி – மூன் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) பின்னர் ஒரு அறிக்கையில், பான் கி – மூனின் கருத்துகள் ஐ.நா மனித உரிமை மன்றில் ஒரு காத்திரமான தீர்மானத்தினை நிறைவேற்றப்படுவதைப் பலவீனப்படுத்தியதோடு, ஐ.நா மீதான நம்பிக்கையையும் பலவீனப்படுத்தியதாகச் சுட்டிக் காட்டியிருந்தது.
முக்கிய அறிக்கைகள்
இறுதிப் போர் தொடர்பாக மனித உரிமை அமைப்புகள், ஆய்வு நிறுவனங்கள், அரசியல் நோக்கம் கொண்ட வெவ்வேறு அமைப்புகள் சார்பில் பல்வேறு அறிக்கைகள் வெளிவந்துள்ளன. சிறிலங்கா அரசாங்கத்திற்கும் ஐ.நா விற்கும் இடையிலான விவாதங்களில் மூன்று அறிக்கைகள் முக்கிய இடம்பிடித்தன. அவை, 2011 மார்ச் மாதம் வெளிவந்த ஜ.நா நிபுணர் குழு அறிக்கை, 2011 நவம்பரில் வெளிவந்த சிறிலங்கா அரசாங்கத்தின் சொந்த அறிக்கையான ‘கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும்’ அறிக்கை (Lessons Learnt and Reconciliation – LLRC), ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரகத்தின் சிறிலங்கா மீதான விசாரணை அறிக்கை (Office of the High Commissioner for Human Rights’ Investigation on Sri Lanka – OISL) ஆகியனவாகும். இவற்றின் உள்ளடக்கம், சிறிலங்கா மீதான போர்க்குற்றம் – மனிதத்திற்கும் மனித உரிமைகளுக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த சர்வதேச விவாதங்களில் அவை ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்து விரிவாகப் பேசுகின்றது.
ஐ.நா நிபுணர்குழு அறிக்கை
ஐ.நா நிபுணர்குழு அறிக்கையானது பேரழிவுமிக்க இறுதிக்கட்டத்திற்கு இட்டுச் சென்ற நிகழ்வுப் போக்கினை விபரிக்கின்றது. ‘தமது இராணுவ நடவடிக்கைகள் மனிதாபிமான மீட்பு’ என்ற சிறிலங்கா அரசாங்கத்தின் முன்னிறுத்தலை ஐ.நா நிபுணர்குழு அறிக்கை முற்றிலும் நிராகரிக்கின்றது. விளைந்த பெரும் அவலத்திற்கான பொறுப்பினைச் சிறிலங்காப் படைகள் ஏற்கவேண்டுமென்பதை மிகத் தெளிவாக அவ்வறிக்கை வலியுறுத்துகிறது. நிபுணர் குழுவின் புரிதலின் படி சிறிலங்காப் படையினரே பொது மக்களை முள்ளிவாய்க்கால் நீர் – விளிம்புவரை விரட்டிச் சென்றுள்ளனர். செப்ரெம்பர் 2008 இலிருந்து 2009 மே 19 வரை சிறிலங்கா இராணுவம் வன்னியில், பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களின் இறப்புகளுக்குக் காரணமான மிகப் பரவலான ஆட்லறித் தாக்குதல்களை நடாத்தியுள்ளது என இராணுவத்தின் படை முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து நிபுணர் குழு குறிப்பிட்டுள்ளது.
5 பிரிவுகளின் கீழ் படையினர் மோசமான மீறல்களைச் செய்துள்ளதாக அறிக்கை வகைப்படுத்துகிறது:
- பரந்தளவிலான தாக்குதல்களில் பெருமெண்ணிக்கையில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை.
- மருத்துவமனை உட்பட்ட மனிதாபிமான மையங்கள் இலக்குவைத்துத் தாக்கப்பட்டமை.
- மனிதாபிமான உதவிகளைத் தடுத்தமை.
- உயிர் தப்பியவர்கள் மீதான மனித உரிமை மீறல்கள்.
- முரண்பாட்டுச் (போர்) சூழலுக்கு வெளியில், அரசாங்கத்தை விமர்சித்தோர் மீதான மனித உரிமை மீறல்கள்.
விடுதலைப் புலிகள் இயக்கம் மீது நிபுணர் குழு 6 குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது:
- மனிதக் கேடயங்களாகப் பொதுமக்களைப் பயன்படுத்தியமை.
- புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியைவிட்டு வெளியேற முயன்ற பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு.
- பொதுமக்கள் கூடியிருந்த பகுதிக்கு அருகில் படைத்துறைக் கருவிகளைக் கையாண்டமை.
- வயது குறைந்தவர்களைத் தமது படையில் இணைத்தமை.
- கட்டாய வேலை.
- தற்கொலைத் தாக்குதல் மூலம் பொதுமக்களைக் கொன்றமை.
ராஜபக்சவின் சீனச்சாய்வும் மேற்கின் எதிர்வினையும்
ராஜபக்ச ஆட்சிபீடத்தின் அதிகார அரசியலின் கிழக்கு நோக்கிய (சீனா) நகர்விற்கும் சாய்விற்கும், ஒரு அழுத்தம் அல்லது பாடம் புகட்டும் நோக்கில், மேற்கு நாடுகளின் கூட்டுத் திட்டமாக, மனித உரிமைகள் மையத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட அரசியல் பற்றியும் புக்லறூட் குறிப்பிடுகின்றார். 2015 இல் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்தபோது, ஜனநாயகம் மற்றும் உள்வாங்கல் அரசியல் தொடர்பான நம்பிக்கை உருவாக்கப்பட்டிருந்தது. புதிய சகிப்புத்தன்மைக்கும் பொறுமைக்குமான நம்பிக்கை மேற்கில் உருவாக்கப்பட்டது. ஆனால் அது உரிய விளைவுகளை உண்டாக்கவில்லை.
ஐ.நா மனித உரிமைகள் மையம், இறுதிப்போரில் நிகழ்ந்தவை தொடர்பான சர்வதேச விவாதங்களுக்கான மையமாக 2009 இலிருந்து விளங்கி வருகின்றது. ஐ.நா பாதுகாப்பு அவையில், இலங்கை விவகாரத்தினை நிகழ்ச்சித் திட்டத்திற்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்பு இல்லவே இல்லை என்ற யதார்த்தப் புறநிலை, ஐ.நா மனித உரிமை மன்றத்தில் இலங்கை விவகாரம் கையாளப்பட்டதற்கான மற்றுமோர் காரணியாகும். 2009 இன் ஆரம்பத்தில் ஒருமுறை மெக்சிக்கோ பாதுகாப்பு மையத்தில் இலங்கை விவகாரத்தினைக் கொண்டுவர முயன்றபோது, மேற்கு நாடுகள் மற்றும் ஜப்பான் ஆதரவளித்தன. ஆனால் பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பு நாடுகளான சீனாவும் ரஸ்யாவும் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரித்தன. சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்பிற்குமான தீர்மானங்களைக் கொண்டுவருவதற்கான ஆணையை மட்டுமே ஐ.நா பாதுகாப்பு அவை கொண்டுள்ளது. அரசுகளின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஆணை இல்லை என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
சிறிலங்காவின் போர்க்குற்ற ஆதாரங்கள்
2009 இன் பின்னரான இலங்கைத் தீவின் அரசியல் மாற்றங்கள், அரசாங்க மாற்றங்கள் என்பன முக்கிய நிகழ்வுகளின் பின்னணியில் விபரிக்கவும் விவாதிக்கவும் படுகின்றன. 2009 – 2010 காலப்பகுதியில் போர்க்குற்றம் இடம்பெற்றதை ஆதாரப்படுத்தி மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கைகளை வெளிக்கொணர்ந்திருந்தது. 2011 இல் ஐ.நா நிபுணர் குழு அறிக்கையில் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தது. 2012 இல் இறுதியில் வெளிவந்த ஐ.நாவின் உள்ளக மீளாய்வு அறிக்கை, இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 70,000 என்று பதிவுசெய்துள்ளது.
2011 மே கோர்டன் வைஸ் எழுதிய ‘The Cage (கூண்டு)’ நூலில் ஐ.நா பணியாளர்கள் போர் முடிவினை எவ்வாறு எதிர்கொண்டனர் என்ற சித்தரிப்புகளை முன்வைத்து நிலைமைகள் சித்தரிக்கப்படுகின்றன.
2011 இல் பிரித்தானிய சனல் – 4 தொலைக்காட்சி வெளியிட்ட ‘Sri lanka’s killing fields’ ஆவணப்படம் ஏற்படுத்திய தாக்கங்கள் மற்றும் ஜெனீவாவில் மனித உரிமைகள் மன்றத்தின் 17 ஆவது கூட்டத்தொடரில் அவ் ஆவணப்படம் காண்பிக்கப்பட்ட சம்பவங்கள் பற்றியும் பேசப்படுகின்றன. தொடர்ந்து அந்த ஆவணப்படம் அமெரிக்க அரசியற் பிரதிநிதிகள், சர்வதேச இராஜதந்திரிகள் மற்றும் ஏனைய பிரமுகர்கள், சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச முரண்பாட்டுச் சபை ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் காண்பிக்கப்பட்டது.
சனல் – 4 ஆவணக் காட்சிகள் படுகொலைகளில் ஈடுபட்ட இராணுவச் சிப்பாய்களினால் கைத்தொலைபேசி மூலம் படம்பிடிக்கப்பட்டவை. அதில் கண்கள் கட்டப்பட்ட நிலையில் கைதிகள் படுகொலை செய்யப்படுகின்றனர்; கொல்லப்பட்ட நிலையில், நிர்வாணமாக வாகனங்களில் இராணுவத்தினரால் தூக்கி அடுக்கப்படும் பெண் உடல்கள் தொடர்பான வக்கிரமான பேச்சுகள் எனவாக அந்தக் காணொளியில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகளுக்கு எதிரான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர், ஆவணப்படத்தின் உண்மைத் தன்மை, தொழில்நுட்ப நிபுணர்களால் உறுதிப்படுத்தப்பட்டவை என்பதை உறுதிப்படுத்தினார்.
2012 இல் பி.பி.சி (BBC) ஊடகவியலாளர் ‘Frances Harrison vOjta’ உடைய ‘Still Counting the Dead : Survivors of Sri Lanka’s Hidden War’ எனும் புத்தகத்தில் கலங்கவும் நடுங்கவும் வைக்கும் விபரிப்புகள் இடம்பெற்றுள்ளன. தனிமனிதர்கள் எவ்வாறான கொடூரங்களை இறுதி யுத்தத்திலும் அதற்குப் பின்னரும் எதிர்கொண்டனர் என்ற சித்தரிப்புகள் அதில் உள்ளன. ஐ.நா நிபுணர் குழு அறிக்கை மற்றும் சனல் – 4 ஆவணப்படம் ஆகியன, 2012 மார்ச்சில் ‘LLRC’ அறிக்கையின் தீர்மானங்களைச் சிறிலங்கா நிறைவேற்ற வேண்டுமென்று, அமெரிக்கா வலியுறுத்துவதற்கான புற அழுத்தங்களைக் கொடுத்தன.
இவ்வாறாகத் தொடர்ந்து வெளிவந்த புதிய புதிய ஆதாரங்கள், இறுதிக்கட்டப் போரின் போதான இராணுவத்தின் திட்டமிட்ட அடிப்படை மனித உரிமை மறுப்புகளையும் மீறல்களையும் வெளிப்படுத்தின. 2014 வரை, அதாவது போர் முடிவடைந்த 5 ஆண்டுகள் வரை, காத்திரமான பல அறிக்கைகள் தமிழர் பிரதேசங்களில் சிறிலங்காப் படைகள் நடாத்திய மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தின.
‘OISL’ அறிக்கை
குறுகிய கால ஆய்வின் பயனாக வெளிவந்த போதிலும் OISL அறிக்கை விரிவானதும் சிறந்த முறையில் ஆவணப்படுத்தப்பட்டதுமாகும். விசாரணை ஆணைக்குழுவிற்கு இலங்கை செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. ஆணைக்குழு தனது அறிக்கையில் குறிப்பிடுவது போல், விசாரணையை முடிப்பதற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்காததும், ஆணைக்குழுவின் பணிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதும் மிகப்பெரிய தடையாக இருந்தது. அறிக்கை முக்கியமாக மூன்று வகையான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது:
- மனித உரிமை அமைப்புகள், ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள் மற்றும் பல அறிக்கைகளை ஆதாரமாகக் கொண்டது.
- மீறல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஏனைய சாட்சிகளுடனான நேர்காணல்கள்.
- எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளை நேரடியாக அனுப்புமாறு OISL இன் கோரிக்கைக்கு அமையக் கிடைக்கப் பெற்ற எழுத்துமூலப் பதில்கள்.
OISL அறிக்கையின் முக்கிய கண்டடைவுகள் இந்நூலிற் பட்டியலிடப்பட்டுள்ளன.
சிறிலங்கா அரசாங்கமும் அரசியல்வாதிகளும், ஐ.நா உட்பட சர்வதேச தரப்புகள் வலியுறுத்திய பொறுப்புக்கூறல், போர்க்குற்ற – மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளையும் அறிக்கைகளையும் மறுதலிப்பதும் எதிர்ப்பதுமாகவே இருந்தனர்.
வெற்றியும் சித்திரவதைகளும்
போர் வெற்றியின் கதாநாயகனாகக் கொண்டாடப்பட்ட மகிந்த ராஜபக்ச 2015 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியுறுகின்றார். நல்லிணக்க அரசியலை முன்வைத்து மைத்ரிபால சிறிசேன வெற்றிபெறுகின்றார். 2010 ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்டுத் தோல்வியுற்ற இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, மகிந்த ஆட்சியில் கைது செய்யப்பட்டார்; அரசியலமைப்புச் சட்டத்திற்கு மாறாகக் கட்சிப் பெரும்பான்மையைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்ற நீதிபதி, சிரானி பண்டாரநாயகாவை 2013 இல் பதவியிலிருந்து நீக்கினார். மகிந்தவின் மறுசீரமைப்புகளில் ஒன்றினை ஏற்று அங்கீகரிப்பதற்கு உச்சநீதி மன்றம் மறுத்தமையே சிரானி பதவி நீக்கத்திற்கான காரணமாகும்.
18 ஆவது அரசியலமைப்புச் சட்ட மாற்றம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு இட்டுச் சென்றது. அது பொது ஆணையங்களுக்குரிய பிரதிநிதிகளை நியமிப்பதற்குரிய அதிகாரத்தினை ஜனாதிபதிக்கு வழங்கியது. அடிப்படையில் அந்த ஆணையங்கள் அரச நிர்வாக அலகுகளைக் கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டவை. உதாரணமாக தேர்தல் ஆணையம், காவல்துறை மற்றும் மனித உரிமை ஆணையம் போன்றனவற்றைக் குறிப்பிடலாம். அத்தோடு உச்ச நீதிமன்ற மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் போன்ற சட்ட அமைப்பில், உயர் பதவிகளுக்கான பிரதிநிதிகளையும் தன்னிச்சையாக நியமிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி தன்வசம் கொண்டிருந்தார். நடைமுறையில் நிறைவேற்று அதிகாரம், ஜனாதிபதியை ‘எல்லாம் வல்லவர்’ ஆக்கியது.
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமற் செய்வதென்பது மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் வாக்குறுதியாக இருந்தது. தேர்தலில் வெல்ல வைத்தால், நூறு நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவேன் என்பது மைத்திரியின் வாக்குறுதிகளில் ஒன்று. 2010 இல் புதிய ஜனாதிபதியாகத் தேர்தலில் வென்ற மைத்திரியின் வெற்றி ‘சிறுபான்மையினரின் (தமிழ்) பெரும்பான்மை (தமிழர்) மற்றும் பெரும்பான்மையினரின் (சிங்கள) சிறுபான்மை வாக்குகளினாற் சாத்தியமாயிற்று. ஆனால் மகிந்தவிற்குப் பெரும்பான்மையினரின் பெரும்பான்மை வாக்குகள் கிட்டியபோதும் சிறுபான்மையினரின் பெரும்பான்மை வாக்குகளைப் பெறமுடியவில்லை என்று சொல்லப்படுவதுண்டு. அதாவது 2010 தேர்தலில் பெரும்பான்மை சிங்களவர்கள் (58%) மகிந்தவிற்கே வாக்களித்திருந்தனர். தமிழ், முஸ்லீம் வாக்குகள் பெரும்பான்மையாக மைத்திரிக்குச் சென்றதாலேயே அவரது வெற்றி சாத்தியமானது.
ராஜபக்ச ஆட்சிக்காலம் : குடும்பம் முதன்மை
மகிந்தவின் அரசியற் பிரவேசம் பற்றிய வரலாற்றினை மீட்டப் பார்க்கும் எவரும் சர்வாதிகார ஆட்சி, மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களின் குறியீடாக மகிந்தவின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வருமென நினைத்துப்பார்த்திருக்க வாய்ப்பில்லை. 1970 இல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்ட மகிந்த, அக்காலகட்டங்களிற் தன்னை அடிப்படையில் வறியவர்களினதும் உரிமை மறுக்கப்பட்டவர்களினதும் பிரதிநிதியாகவும் மனித உரிமைப் போராளியாகவுமே அடையாளப்படுத்தியவர். ஜே.வி.பி மீதான இராணுவத்தின் மோசமான நடவடிக்கைகளுக்கு எதிரான பேச்சாளராக மகிந்தவின் அரசியல் அத்திவாரம் வலுவாக இடப்பட்டதோடு, புகழுக்கும் வழி சமைத்தது. 1990 இல் ஜெனீவா சென்று அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் முறையீடு செய்தவர் மகிந்த. ஜெனீவாப் பயணத்தின் போது, எடுத்துச் சென்ற ஆவணங்கள் காரணமாக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டார். நாடு திரும்பியபின், அவரது அரசியல் எதிர்ப்பாளர்களால் துரோக முத்திரை குத்தப்பட்டுக் குற்றம் சாட்டப்பட்டார்.
கடத்தல், காணாமல் ஆக்கப்படல், படுகொலைகள்
2004 இல் பிரதமராகவும் – பின்னர் 2005 தேர்தலில் வென்று ஜனாதிபதியாகவும் மகிந்த எவ்வாறானதொரு மோசமான சிங்களப் பெருந்தேசிய இனவாத அரசியலை முன்னெடுத்தார் என்பது விரிவாகப் பேசப்படுகின்றது. போரைத் தீவிரப்படுத்தியது மட்டுமல்ல, கடத்தல் (வெள்ளைவான் கடத்தல்), கப்பம் அறவிடல், காணாமல் ஆக்கப்படுதல், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள், சித்திரவதைகள் என மகிந்த ஆட்சிபீடத்தின் மீறல்கள் பட்டியலிடப்படுகின்றன. இத்தகைய மோசமான மீறல்கள் சிங்களப் பகுதியிலும் நிகழ்த்தப்பட்டன.
ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைச் சம்பவங்கள் துல்லியமாக விபரிக்கப்படுகின்றன. தர்மரட்ணம் சிவராம் (தாராகி), லசந்த விக்ரமதுங்க ஆகிய ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகள் – மற்றும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டதை முன்வைத்து, ஊடகத்துறையின் குரல்வளையை மகிந்த ஆட்சிபீடம் எவ்வாறு நெரித்தது என்பதை விளக்குகின்றார் புக்லறூட். 2004 – 2011 காலப்பகுதியில் (இறுதிப் போர் தவிர்ந்த) 34 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக, கருத்துச் சுதந்திரத்தினை முன்னிறுத்திச் செயற்பட்டு வந்த ‘Ground Views’ ஊடகச் சேவை 2011 இல் தகவல் வெளியிட்டமை மேற்கோள் காட்டப்படுகின்றது. இக்கொலைகளுக்காக எவரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. 2004 – 2010 காலப்பகுதியில் 44 பெயர் குறிப்பிடப்பட்ட ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக ஜனநாயகத்திற்கான இலங்கை ஊடகவியலாளர்கள் (Journalists for democracy in Sri lanka) அமைப்பு தமது இணையத்தளத்திற் குறிப்பிட்டிருந்தமையும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
ஊழல், பொருளாதார மோசடிகளும் நாட்டின் நிதி நிர்வாக முறைகேடுகளும்
2005 இலிருந்து மகிந்த மகிந்த ஆட்சிபீடமானது நாட்டின் பொருளாதாரத்திற்கும் குடும்பத்தின் தனிப்பட்ட பொருளாதாரத்திற்கும் இடையிலான வேறுபாட்டினை இல்லாமற் செய்தது. எல்லாமாக 5 முதல் 6 பில்லியன் டொலர் வரையான அரச பட்ஜெட் தொகையை ராஜபக்ச குடும்பம் விழுங்கிவிட்டதாகக் கூறப்படுகின்றது. 2015 வரை ராஜபக்ச கும்பத்தைச் சேர்ந்த குறைந்தது 29 நபர்கள் அரசாங்கத்தில் முக்கிய துறைசார் பதவிகளை வகித்துள்ளனர். அத்தோடு 50 – 70 வீதமான தேசிய வருமானத்தினையும் குடும்பத்தினர் கட்டுப்படுத்தியுள்ளனர்.
ராஜபக்ச ககோதரர்களின் ஊழல் மோசடிகள், வருமான ஏய்ப்புத் தொடர்பான தகவல்களும் பதிவாகியுள்ளன. மகிந்தவின் மூத்த சகோதரர் பசில் ராஜபக்சவின் மனைவி புஸ்பா, 2012 ஆம் ஆண்டு 19 மில்லியன் ரூபாய்கள் ‘புஸ்பா ராஜபக்ச அறக்கட்டளைக்கு (Pushpa Rajapaksa Foundation) அன்பளிப்பாகப் பெற்றமையை ‘Lanka e-news’ இணையத்தளம் ஆவணப்படுத்தியுள்ளது. அன்பளிப்பினை வழங்கியது சி.ஐ.சி.ரி (CICT) சீன நிறுவனமாகும். இந்நிறுவனமே துறைமுக அபிவிருத்திக்குப் பொறுப்பு வகித்தது. துறைமுக அபிவிருத்திப் பணிகள் தொடங்கப்படுவதற்கு ஓராண்டுக்கு முன்னர் இந்தப் பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. 2015 ஆட்சி மாற்றத்தின் பின், பொது நிதிவளங்களை முறைகேடாக நிர்வகித்த குற்றச்சாட்டில், சட்ட நடவடிக்கைக்கு உட்பட்ட ராஜபக்ச குடும்பத்தின் முதல் ஆள் பசில் ராஜபக்ச ஆவார். அவர் மட்டுமல்ல மகிந்தவின் இரு புதல்வர்களான நாமல், ஜோசித மற்றும் மனைவி சிறாந்தி அத்தோடு இளைய சகோதரர் கோத்தபாய ஆகியோரும் பல்வேறு பொருளாதார முறைகேடுகளுக்காக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். ராஜபக்ச ஆட்சிபீடத்தின் முன்னிலை உறுப்பினர்கள் (குடும்பத்தினர் உட்பட்டோர்) 16 பொருளாதார முறைகேடுகளில் தொடர்புபட்டிருந்தமையும் அதற்கான வழக்குகளை எதிர்கொள்ள நேர்ந்தமையும் 2017 ஓகஸ்ட் ‘Daily News’ பத்திரிகை தகவல் வெளியிட்டிருந்தது. இவை தவிர, பல சட்ட மீறல் குற்றங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படவே இல்லை. போருக்கான ஆயுதக் கொள்வனவுகளில் கோத்தபாய மேற்கொண்ட ஊழல் மோசடிகளும் பேசப்படுகின்றன. மதச் சிறுபான்மையினர் மீதான இலக்குவைக்கப்பட்ட வன்முறைகள், 2018 முஸ்லீம்கள் மீதான கண்டி வன்முறையை முன்வைத்துப் பேசப்படுகின்றது.
சிறுபான்மையின மூலோபாயங்கள்
இவ்வத்தியாயம் முஸ்லீம்களின் நிலை, தமிழ் – முஸ்லீம் உறவு விரிசல், இஸ்லாமிய மரபுவாதத்தின் தோற்றமும் போக்கும் எனவாகப் பல்வேறு விடயங்களை நோக்குகின்றது. இலங்கைக்கு முஸ்லீம்களின் வருகை, பரம்பல் குறித்த வரலாற்றினையும் பேசுகின்றது. அவர்களின் அடையாள அரசியல் குறித்தும், வரலாற்று ரீதியாக அதன் தோற்றுவாய், மாற்றங்கள், போக்குகள் பற்றியும் சித்தரிப்புகள் இடம்பெற்றுள்ளன. இறுதிப் பத்து – இருபது ஆண்டுகளுக்குள், இலங்கை இஸ்லாமியவாதத்தின் போக்கு எவ்வாறு தலைகீழ் மாற்றம் கண்டிருக்கின்றது என்பது மேற்கோள்களுடன் முன்வைக்கப்படுகின்றது.
1990 கள் வரை தமிழ் – முஸ்லீம் உறவு, அரசியல் – கலாசார ரீதியில் நல்ல முறையில் விளங்கியமையும், பிற்பட்ட காலத்தில் அது எவ்வாறு பகைமுரண் நிலைக்கு இட்டுச் செல்லப்பட்டது என்பதும் விபரிக்கப்படுகின்றது. 1990 இல் யாழிலிருந்து அனைத்து முஸ்லீம் மக்களும் புலிகளால் வெளியேற்றப்பட்டமை, தமிழ் – முஸ்லீம் உறவினை உச்சமாகப் பாதித்த நிகழ்வு எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது. சிறிலங்கா முஸ்லீம் கொங்கிரசின் உருவாக்கமும், படிப்படியாக அக்கட்சி எவ்வாறு இலங்கையில் தேசிய அளவில் முஸ்லீம் நலன்களை முதன்மையாகப் பிரதிநிதித்துப்படுத்தும் கட்சி என்ற நிலையை அடைந்தது என்பதும் அரசியல் வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியில் பேசப்படுகின்றன.
தமிழ் டயஸ்போறாவும் தாயகமும் என்ற துணைத் தலைப்பின் கீழ், 2009 இற்குப் பின்னரான ஈழ – டயஸ்போறா உறவும், அரசியல் நிலைப்பாடுகள், முரண்கள், பிளவுகள் குறித்த தகவல்பூர்வமான பார்வையும் முன்வைக்கப்படுகின்றன. ஈழத் தமிழர்களின் உரிமை அரசியல் சார்ந்து இலங்கை அரசியலில் பங்கேற்றுள்ள கட்சிகளின் போக்கு, புலம்பெயர் அமைப்புகளின் போக்கு, நிலவுகின்ற சிக்கல்கள், முரண்கள் குறித்தும் பேசப்படுகின்றன.
மகிந்த மீள் தெரிவும் நகர அபிவிருத்தியும்
2010 இல் மீள் தெரிவின் பின்னர் மகிந்த ஆட்சிபீடம் நகர மற்றும் துறைமுக அபிவிருத்திகளுக்கு முதலிடம் கொடுத்துச் செயற்பட்டது. வெளித்தோற்றத்தில் நவீனப்படுத்தல் சார்ந்த கட்டுமானங்களுக்கும் அபிவிருத்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. உள்நாட்டு – வெளிநாட்டு முதலீட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகளின் மற்றும் உள்நாட்டு மேல் மத்தியதர வர்க்கத்தினர் மத்தியில் கொழும்பு நகரத்தின் கவர்ச்சிப் பெறுமதியைக் கூட்டும் வகையிலான திட்டங்களை அந்த வகையிற் குறிப்பிடலாம். 2009 இலிருந்து மேற்கொள்ளப்பட்ட கொழும்பு நகர அபிவிருத்தியானது, சந்தைப் பொருளாதாரக் கொள்கைகளுடனும், நவதாராளவாதக் கொள்கைகளுடனும் தொடர்புபட்டவையாக வகுக்கப்பட்டிருந்தது. நகர அபிவிருத்தி வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதோடு, அது பொருளாதார இலக்குடைய தனியார் மயப்படுத்தல் மூலோபாயமாகவும் அமைகிறது.
தாராளவாதப் பொருளாதாரம்
தாராளவாதப் பொருளாதாரம் இலங்கைக்குப் புதியதல்ல. 1977 இல் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தபோது அரச கட்டுப்பாட்டிலிருந்து சந்தைப் பொருளாதார மறுசீரமைப்புத் தொடங்கியது. ஆட்சிக்கு வந்த அடுத்த ஆண்டு நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரத்தினை அறிமுகப்படுத்திய புதிய அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து வந்த சீர்திருத்தங்கள் விரிவானவை. ஏற்றுமதியை அதிகரிக்க நாணய மதிப்பிறக்கம், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை நிறுவுவதற்கான கட்டுப்பாட்டுத் தளர்வு, அரச தனியதிகார நீக்கம், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வரிவிலக்குகளுடன் பொருளாதார மண்டலங்களை நிறுவுதல் போன்ற பொருளாதார மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. 1978 – 1984 வரையிலான ஆறு ஆண்டுகளில், பொருளாதார வளர்ச்சி இரட்டிப்பாகியது, ஆனால் அதே நேரத்தில் செல்வந்தர் – வறியவர்களுக்கிடையிலான ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்தன. அரசின் பொதுநல நடவடிக்கைகள் கணிசமாகக் குறைக்கப்பட்டன. 1970 ஆம் ஆண்டில், சமூக நலத்திட்டங்கள், சேவைகளுக்கான அரசாங்க செலவினங்கள், அரசின் மொத்தச் செலவினங்களில் கிட்டத்தட்ட 40 வீதமாக இருந்தது. 1980 களின் இறுதியில் இது பாதியாகக் குறைக்கப்பட்டது.
கடன்களும் பொருளாதார நெருக்கடியும்
மேற்சொன்ன பின்னணிகளோடு மகிந்த ஆட்சிப் பீடத்தின் பொருளாதாரக் கொள்கை எத்தகைய தன்மையைக் கொண்டிருந்தது, எத்தகைய விளைவுகளைக் கொடுத்தது என்பது குறித்துப் பேசப்படுகின்றது. மகிந்த ஆட்சிப் பீடத்தினால் தனியார் துறை, வெளிநாட்டு முதலீடுகள் என்பன முதன்மைப்படுத்தப்பட்டன. அத்தோடு சீனாவுடன் மேற்கொள்ளப்பட்ட கடன் உடன்படிக்கைகள் நாட்டின் பொருளாதார தாங்கு சக்தியைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளன. முன்னைய அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட கடன்கள் நாட்டின் பொருளாதாரத்தை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக கூறப்பட்ட 2015 இன் பின் பதவியில் இருந்த நிதி அமைச்சர்களின் கூற்று, மேற்கோள் காட்டப்படுகின்றது. 2022 இல் நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியும் மக்கள் போராட்டங்களுக்குமான எதிர்வுகூறலாக இதனை நோக்கமுடியும்.
தமிழ் அரசியல் வெளியின் வாய்ப்புகள்
ஒய்வின்ட் புக்லறூட் நூலின் முடிவுரையில் அல்லது இறுதிக் கட்டுரையின் முடிவில் தெரிவித்திருப்பதை இவ்வாறு பொருட்படுத்தலாம்:
ஈழத்தமிழர்களுக்கு இரண்டு தெரிவுகள் உள்ளன. ஒன்று அரசியற் தீர்வு நோக்கி ஆக்கபூர்வமான மூலோபாயங்களோடு செயற்படுவது. அது சிங்களத் தரப்பிலும் ஆதரவைக் கட்டியெழுப்புகின்ற மூலோபாயத்துடன் அரசியலை முன்னெடுப்பது பற்றியது. மற்றையது தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அரசியற் போராட்டத்தினை முன்னெடுப்பதன் ஊடாக, உரிய அரசியற் தீர்வு நோக்கி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பது. இப்போதைய சூழலில் இலங்கைக்கு வெளியே வசிப்பவர்களுக்கு இத்தகைய அரசியற் போராட்ட அணிதிரட்டலுக்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பது முக்கியமான அம்சமல்ல. ஆனால் போரினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு – கிழக்கில் வாழ்பவர்களுக்கு இது மிகவும் முக்கியமானது. இன்னும் 100 வருடங்கள் அல்லது அதற்கும் மேலாக என்ன சாத்தியம் இருக்கப்போகிறது என்பதை எவராலும் கணிக்க முடியாது. ஆனால் 2002 இல் புலிகள் கட்டியெழுப்பிய பேச்சுவார்த்தைக்கான பேரப் பலத்தினை ஒத்த நிலையை எதிர்வரும் காலங்களில் தமிழ் சமூகத்தின் அரசியல் பிரதிநிதிகள் எவரும் எட்ட முடியாது என்பது மட்டும் தெளிவானது.
இந்நூலின் முக்கியத்துவம்
இலங்கைத் தீவின் அரசியலை கொலனித்துவ காலகட்டத்திலிருந்து பின் – முள்ளிவாய்க்கால் காலம் வரை விரிவாக இந்நூல் நோர்வேஜிய மொழியில் முன்வைக்கின்றது. தமிழிற்கூட இத்தகைய பெரும்பரப்பினை கையாண்ட ஈழத்தமிழர் அரசியல் வரலாற்று நூலைக் காணமுடியாது என்று கருதுகின்றேன். நுண் விபரங்களுடன் பன்முகப்பட்ட பார்வை – தகவல் – தரவுகள் – வரலாற்று நிகழ்வுகளை முன்வைத்து விமர்சனபூர்வமாக (கல்வியியல் ஆய்வு) ஆராய்கிறது.
இலங்கைத் தீவின் சிங்கள – தமிழ் – முஸ்லீம் தரப்புகளின் அரசியல் வரலாறும் அதனுடன் தொடர்புடைய நிகழ்வுகள் – விளைவுகளும், சமூக உள்முரண்பாடுகளின் பின்னணிகளும் பேசப்படுகின்றன. பிராந்திய, சர்வதேசத் தலையீடுகளும், விளைவுகளும் பேசப்படுகின்றன. இந்நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டிய நூல். அதற்குரிய நேரம் கனியும்போது மொழிபெயர்ப்பினைச் செய்வேன். ஆனால் ‘திக்குகள் எட்டும்’ தொடரில் இந்த அறிமுகக் கட்டுரையை மிக விரிவாக எழுதியிருக்கின்றேன். இந்நூல் கையாண்டிருக்கின்ற கால அளவும் விடயப்பரப்பும் அத்தகைய விரிவான அறிமுகத்தினைக் கோரும் தன்மையுடையது.
தமிழர்கள் – சிங்களவர்கள் – முஸ்லீம்களின் அரசியல் பற்றிய விடயங்களை மட்டுமல்லாமல் அவர்களின் சமூக – மொழி – பண்பாட்டு – வாழ்வியல் – உளவியல் தொடர்பான ஆழமான அறிதலும் ஆய்வு அநுபவமும் கொண்டவர் புக்லறூட்; மட்டுமல்லாமல், இச் சமூகங்களுடனான நீண்ட கால நேரடியான ஊடாட்டமும் உறவுமுடையவர் என்பதுவும்தான் இத்தகைய நூலைச் சாத்தியப்படுத்தியுள்ளது. தமிழர்களும் இலங்கையின் ஏனைய சமூகத்தினரும் தம்மை மீளாய்வு செய்யவும் அது குறித்த உரையாடல்களை முன்னெடுக்கவும் இந்நூல் வழிகோலக்கூடியது. தமிழ்ச் சூழலில் இந்நூல் குறித்த உரையாடல்கள் நடாத்தப்படுவது பயனுடையது. ஈழத்தமிழ் அரசியலை அறிவார்ந்த திசைவழி செலுத்துவதற்கான உரையாடல்களுக்கு இந்நூலில் இடம்பெற்றுள்ள பல்வேறு தகவல்களும் பார்வைகளும் பயன்தரக்கூடியவை.
தொடரும்.