அநுராதபுரம் பண்டைய நகரில் அமைந்துள்ள வெஸ்ஸகிரிய பகுதியில் ஓடும் மல்வத்து ஓயா ஆற்றின் மேற்குக் கரையில் இந்தக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இது பொ. ஆ. 946-954 வரை இலங்கையை ஆட்சி செய்த 4 ஆம் உதயன் காலத்தில் எழுதப்பட்டுள்ளது.
மூன்று துண்டுகளாக உடைந்திருந்த கற்பலகை ஒன்றில் கல்வெட்டு பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால் கல்வெட்டின் இரண்டு துண்டுகள் மட்டுமே கிடைக்கப்பெற்றன. இவற்றில் பெரிய துண்டாகக் காணப்படுவது கல்வெட்டின் மேற்பகுதிக்குரிய துண்டாகும். இது 2 அடி 10 அங்குல உயரமும், 2 அடி 5 அங்குல அகலமும் கொண்டதாகும். இரண்டாவது துண்டு 8 அங்குல உயரமும், 2 அடி அகலமும் கொண்டதாகும். கிடைக்கப்பெறாத மூன்றாவது துண்டு இரண்டாவது துண்டின் இடது பக்கத்தின் ஓரத்தில் உள்ள துண்டாகும். இது சுமார் 6 அங்குல உயரமும் 2 அடி அகலமும் கொண்டதாகும். அந்த வகையில் இந்தக்கற்பலகை 4 அடி உயரமும், 2 அடி 5 அங்குல அகலமும் கொண்டதாக இருக்கவேண்டும் எனக் கூறப்படுகிறது. கல்வெட்டின் இரண்டு துண்டுகளும் பொருத்தப்பட்டு தற்போது அநுராதபுரம் தொல்பொருள் காட்சிச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தக்கல்வெட்டு மொத்தமாக 38 வரிகளைக் கொண்டதாகும். ஆனால் 26 ஆம் வரி முதல் 38 ஆம் வரி வரையான 13 வரிகளில் உள்ள விபரங்கள் கிடைக்கவில்லை. கல்வெட்டின் 7 ஆம், 8 ஆம் வரிகளில் தமிழர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக்கல்வெட்டிலும் மழுவேயாய கல்வெட்டில் கூறப்பட்டுள்ள அதே விடயமே கூறப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு,
“பெர ஆத்மசி தசபக் தவஸ் தக்குன் பசி தெமெழ்..வெகர் பமனியன் தசகமத் எக்ககி நாயகயன் கிபிகம்..”
தமிழர் மடாலயத்தில் பரம்பரைச் சொத்துக்களும், நிரந்தர மானியங்களும், பத்து ஊர்களுக்கு வழங்கப்படும் மானியங்களும் அந்த ஊர் அதிகாரிகளால் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே கல்வெட்டில் கூறப்பட்டுள்ள விடயமாகும். கல்வெட்டில் கூறப்பட்டுள்ள தமிழர் மடாலயம் என்பது தமிழரின் பெளத்தப் பள்ளியாக இருக்க வேண்டும்.
தமிழர் பள்ளி பற்றிக் கூறும் மிஹொந்த வெவ கற்பலகைக் கல்வெட்டு
அனுராதபுரம் நகரின் கிழக்குப்பக்கத்தில் சுமார் 48 கி.மீ தூரத்தில், கெக்கிராவையில் இருந்து ஹல்மில்லாவைக்கு செல்லும் வீதியில் மிஹொந்த வெவ என்னுமிடம் அமைந்துள்ளது. இங்கு ஒரு கல்வெட்டு கிடைக்கப்பெற்றது. இந்தக்கல்வெட்டும் பொ. ஆ. 946-954 வரை இலங்கையை ஆட்சி செய்த 4 ஆம் உதயன் காலத்தில் எழுதப்பட்டுள்ளது.
ஒரு கற்பலகையில், சரி பாதியாக, இரண்டு துண்டுகளாக உடைந்த நிலையில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட இந்தக்கல்வெட்டு காணப்பட்டது. இவ்விரண்டு துண்டுகளும் பொருத்தப்பட்ட நிலையில் 3 அடி 9 அங்குல உயரமும், 3 அடி 3 அங்குல அகலமும் கொண்ட கல்வெட்டு கிடைத்தது.
கல்வெட்டில் மொத்தமாக 27 வரிகளில் அடிக்கோடிடப்பட்டு எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்தன. இதில் 4 ஆம் வரியில் ஏனைய கல்வெட்டுக்களில் உள்ளது பொல “தெமெழ் விகார்” எனும் தமிழர் மடாலயம் அல்லது தமிழர் பள்ளி பற்றிக் கூறப்பட்டுள்ளது.
தமிழர் கூலி பற்றிய இரிபின்னியாவ தூண் கல்வெட்டு
அநுராதபுரம் மாவட்டத்தில் அனுராதபுரத்திற்கும், மதவாச்சிக்கும் இடையில் உள்ள ரம்பேவ சந்தியின் தென் மேற்கில் 5. கி.மீ தூரத்திலும், தித்தகோணாவ என்னுமிடத்தின் இருந்து 3 கி.மீ தூரத்திலும் இரிபின்னியாவ கிராமம் அமைந்துள்ளது. இந்தக்கிராமம் இங்குள்ள பெரிய தடாகத்திற்கு பெயர் போன இடமாகும்.
இங்கு 1892 ஆம் ஆண்டு ’கல்வெட்டு ஆய்வாளர்’ மார்ட்டின் விக்ரமசிங்கவினால் இங்குள்ள தடாகத்தின் அருகில் ஒரு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. தடாகத்தின் அருகில் சிதைந்த நிலையில் ஒரு தூபியும், அதன் அருகில் 7 அடி உயரமும், 1 அடி சதுரமும் கொண்ட 8 கற்தூண்களும் காணப்பட்டன. இவற்றில் ஒரு கற்தூணில் நான்கு பக்கங்களிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தூணின் மொத்த உயரம் 9 அடி 10 அங்குலமாகும்.
இந்தத்தூணின் 2 அடி வரையான பகுதி நிலத்திற்குள் காணப்படுகிறது. உச்சிப் பகுதியில் 1 அடி உயரத்திற்கு கும்பக்கலசம் செதுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 6 அடி 10 அங்குல உயரமும், 9 அங்குல சதுரமும் கொண்ட பகுதியில் கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தக்கல்வெட்டு அபய சலாமேவன் எனும் மன்னனின் ஆட்சியில் பொறிக்கப்பட்டுள்ளது. இவன் பொ. ஆ. 898 முதல் 914 வரையான காலப்பகுதியில் இலங்கையை ஆட்சி செய்த 4 ஆம் காசியப்பன் என அடையாளம் காணப்பட்டுள்ளான்.
தூணின் முதலாவது பக்கத்தில் 26 வரிகளிலும், இரண்டாவது பக்கத்தில் 29 வரிகளிலும், மூன்றாவது பக்கத்தில் 27 வரிகளிலும், நான்காவது பக்கத்தில் 34 வரிகளிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்தக்கல்வெட்டில் குறிப்பிட்ட ஒரு ஊருக்கும் அங்குள்ள பெளத்தப் பள்ளிக்கும் முக்கியமான சில சேனாதிபதிகள் அரசனின் ஆணைப்படி சில கொடுப்பனவுகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேசமயம் சில கூலித் தொகைகளைப் பெறக்கூடாது எனவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் மூன்றாம் பக்கத்தில் 6 ஆம், 7 ஆம் வரிகளில் தமிழர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு,
“ஹெல் குலி தெமழ் குலி கல் மிவுன் கம் கொன் பிலி பத்..”
கல்வெட்டில் தமிழர் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கும் “தெமழ் குலி” எனும் சொல் உட்பட இவ்வரிகளுக்கான மொழிபெயர்ப்பை இந்தக் கல்வெட்டுக்களைப் பதிவு செய்த கல்வெட்டாய்வாளர் மார்ட்டின் விக்ரமசிங்க அவர்கள் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.
“That District headmen, or Keepers of District record books, should not appropriate the melatsin, the Sinhalese coolies or the Tamil coolies, the carts, the buffaloes or the village oxen gifts of bodies or raw rice, curdled or milk.. .. .. ..”
இந்தக்குறிப்பின் படி சிங்களவர்களின் கூலியையோ, தமிழர்களின் கூலியையோ குறிப்பிட்ட இந்த ஊருக்குப் பெற்றுக் கொடுக்கக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து இரண்டு முக்கியமான விடயங்களைத் தெரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
முதலாவது விடயம், இந்தக்காலப்பகுதியில் அதாவது 9ஆம் நூற்றாண்டில் இலங்கையில் சிங்களவர் மற்றும் தமிழர் எனும் இரண்டு இனங்கள் மட்டுமே வாழ்ந்து வந்துள்ளனர். இரண்டாவது, இனவரி அல்லது கொடுப்பனவு பெறப்பட்டுள்ளது.
தமிழர் கூலி பற்றிக் கூறும் ரம்பேவ தூண் கல்வெட்டு
அநுராதபுரம் மாவட்டத்தில் அநுராதபுரத்திற்கும், மதவாச்சிக்கும் இடையில் உள்ள ரம்பேவ என்னுமிடத்தில் இந்தக்கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. தற்போது ரம்பாவெவ என்று அழைக்கப்படும் சங்கிலி குளத்தின் அணைக்கட்டில் 1891 ஆம் ஆண்டு எச்.சி.பி. பெல் இந்தக் கல்வெட்டைக் கண்டுபிடித்தார்.
5 அடி 10 அங்குல உயரமும், 12 அங்குல சதுர வடிவமும் கொண்ட ஒரு கற்தூணின் நான்கு பக்கங்களிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. A பக்கத்தில் 17 வரிகளிலும், B யில் 19 வரிகளிலும், C யில் 19 வரிகளிலும், D யில் 16 வரிகளிலும் கல்வெட்டு காணப்பட்டது.
இந்தக்கல்வெட்டும் பொ. ஆ. 898 முதல் 914 வரையான காலப்பகுதியில் இலங்கையை ஆட்சி செய்த அபய சலாமேவன் எனும் 4 ஆம் காசியப்பன் ஆட்சியில் பொறிக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரிபின்னியாவ கல்வெட்டு பொறிக்கப்பட்ட நாளில் இருந்து 5 வாரங்களுக்கு முன்பு இந்தக் கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. இரிபின்னியாவ கல்வெட்டு எழுதப்பட்டுள்ள அதே பாணியில் இந்தக் கல்வெட்டும் எழுதப்பட்டுள்ளது.
தமிழர் கூலி பற்றிக் கூறும் விகாரேகம தூண் கல்வெட்டு
குருநாகல் நகரில் இருந்து நீர்கொழும்புக்குச் செல்லும் வீதியில் நாரம்மல எனும் நகரம் அமைந்துள்ளது. இந்நகரின் வடக்கில் சுமார் 6 கி.மீ தூரத்தில் மலைப்பாறைகள் நிறைந்த காட்டுப்பகுதி ஒன்று காணப்படுகிறது. இம்மலைப்பாறைகளில் கற்புருவம் வெட்டப்பட்ட இயற்கையான கற்குகைகள் பல காணப்படுகின்றன. இந்தக்கற்குகைகளில் 5 பிராமிக் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு கல்வெட்டில் சிவன் எனும் பெயர் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
1930 ஆம் ஆண்டளவில் இந்தக்காட்டுப்பகுதியில் இருந்த சேனை ஒன்றில் இருந்து எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரு தூண் கண்டெடுக்கப்பட்டது. இந்தத்தூணின் அடிப்பகுதியும், தலைப்பகுதியின் ஒரு துண்டும் உடைந்திருந்தது. இந்தத்தூணின் நான்கு பக்கங்களிலும் கல்வெட்டுப் பொறிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்தக்கல்வெட்டு இங்குள்ள விகாரேகம ரஜமஹா விகாரை எனும் பெளத்த வழிபாட்டுத் தலத்தில் காணப்படுகிறது.
இந்தக்கல்வெட்டு பொ. ஆ. 914-923 காலப்பகுதியில் இலங்கையை ஆட்சி செய்த 5 ஆம் காசியப்பன் காலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தக்காலப்பகுதியில் இங்கு காணப்பட்ட ஒரு நிலத்தைப் பராமரிக்கும் சட்ட திட்டங்கள் பற்றிய செய்தி இக்கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது. கல்வெட்டு உள்ள தூணின் உயரம் 2 அடி 7 அங்குலமாகும். அகலம் 10 x 10.5 அங்குல சதுரமாகும். கல்வெட்டின் அடிப்பகுதி உடைந்து விட்டதால் அந்தப்பகுதியில் எத்தனை வரிகள் இருந்தன என்பதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை.
தற்போது A பக்கத்தில் 20 வரிகளில் எழுத்துக்கள் காணப்படுகின்றன. இருப்பினும் முதல் 5 வரிகளில் உள்ள எழுத்துக்கள் முற்றிலும் சிதைந்து வாசிக்க முடியாத அளவிற்கு அழிந்து போயுள்ளன. B பக்கத்தில் 6 வரிகளில் உள்ள எழுத்துக்கள் மட்டுமே வாசிக்கக் கூடியதாக உள்ளன. ஏனையவை முற்றாக அழிந்து போயுள்ளபடியால் இந்தப் பக்கத்தில் எத்தனை வரிகள் உள்ளன என்பதையும் அறிய முடியாமல் உள்ளது. C பக்கத்தில் மொத்தமாக 23 வரிகளில் எழுத்துகள் காணப்படுகின்றன. D பக்கத்தில் 5 வரிகளில் எழுத்துக்களும், அவற்றின் கீழே 10ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் கல்வெட்டுக்களில் பொறிக்கப்படும் அடையாள வடிவங்களும் காணப்படுகின்றன.
இவற்றில் முதலாவதாக அரை வட்டமும், அடுத்ததாக ஆல வட்டமும், அடுத்ததாக அரிவாள் வடிவமும், அரிவாள் வடிவத்தின் உள்ளே வட்ட வடிவமும் பொறிக்கப்பட்டுள்ளன. தூணின் அடிப்பகுதி உடைந்துள்ளதால் அரிவாளின் அடிப்பகுதியின் வடிவம் காணப்படவில்லை. மேலும் கல்வெட்டுக்களில் பொறிக்கப்படும் நாய் மற்றும் காகம் ஆகியவற்றின் உருவங்கள் இந்தக்கல்வெட்டிலும் பொறிக்கப்பட்டிருக்கலாம். இருப்பினும் தூணின் அடிப்பகுதி உடைந்து போயுள்ளதால் இவ்விரண்டு உருவங்களும் காணப்படவில்லை.
இந்தக்கல்வெட்டின் C பக்கத்தில் 3ஆம், 4ஆம் வரிகளில் தமிழர் பற்றி கூறப்பட்டுள்ளது. இரிபின்னியாவ, ரம்பேவ ஆகிய இடங்களில் உள்ள கல்வெட்டுக்களில் கூறப்பட்டுள்ளது போல் தமிழர்கூலி என்பதைக் குறிப்பிடும் “தெமழ் குலி” எனும் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.
தொடரும்.