கீழைக்கரைக்கான எழுத்துச் சான்றுகள் : பாளி சிங்கள இலக்கியங்கள்
Arts
9 நிமிட வாசிப்பு

கீழைக்கரைக்கான எழுத்துச் சான்றுகள் : பாளி சிங்கள இலக்கியங்கள்

November 30, 2022 | Ezhuna

இலங்கையில் பண்பாட்டுத் தனித்துவம் கொண்ட பல்வேறு நிலப்பரப்புகளுள் கிழக்கு மாகாணத்தின் கீழைக்கரை எனும் நிலப்பரப்பும் ஒன்றாகும். இந்நிலப்பரப்பு ஒரு நெடிய பாரம்பரியத்தையும், ஆதிவேரான பழங்குடிகளின் தொல்மரபையும் கொண்டமைந்துள்ளது. அவ் வரலாற்றை  சிங்கள வரலாற்றாதாரங்களுடன் ஒப்பிட்டு, நவீன ஆய்வுப்பார்வையில் எழுதும் முயற்சியே ‘ஈழத்துக் கீழைக்கரை: ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற இத்தொடராகும். இதன்படி, இலங்கையின் கிழக்கு மாகாணம் எனும் அரசியல் நிர்வாக அலகின் பெரும்பகுதியையும் அப்பகுதியைத் தாயகமாகக் கொண்ட மக்களின் பண்பாட்டையும் வரலாற்று ரீதியில் இது ஆராய்கிறது. கிழக்கிலங்கையின் புவியியல் ரீதியான பண்பாட்டு வளர்ச்சியையும், அங்கு தோன்றி நிலைத்திருக்கும் தமிழர், சோனகர், சிங்களவர், ஏனைய குடிகள் போன்றோரின் வரலாற்றையும், இன்றுவரை கிடைத்துள்ள சான்றுகளை வைத்துத் தொகுத்துக் கூறும் தொடராக இது அமைகிறது.

கீழைக்கரை தொடர்பான எழுத்துச் சான்றுகளில் பௌத்த பாளி (பாலி – pāli) இலக்கியங்கள், சிங்கள இலக்கியங்கள், தமிழக இலக்கியங்கள், ஈழத்துத் தமிழ் இலக்கியங்கள், பிறநாட்டவரின் பயணக்குறிப்புகள், காலனித்துவ காலக் குறிப்புகள் என்பன அடங்கும்.

பாளிமொழி  இலக்கியங்கள்

மகாவம்சம் (2)

புத்த சமயத்தின் பரவலோடு, பாளி மொழியில் பல இலக்கிய முயற்சிகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் “வம்சக்கதை” என்ற வகையறாவைச் சேர்ந்த நூல்கள் முக்கியமானவை ஆகும். குறிப்பிட்ட புத்த சமயப் பேசுபொருளொன்றை அல்லது பலவற்றை எடுத்துக்கொண்டு இந்த நூல்கள், அரசியல் வரலாற்றுக் காலகட்டமொன்றை விவரிக்கின்றன. இவற்றில் மிகப்பழையது தீபவம்சமாகும். இதை அடுத்து எழுந்த மகாவம்சம், அதன் தொடர்ச்சியான சூளவம்சத்துடன் இணைத்து இலங்கையின் மிக முக்கியமான வரலாற்று ஆவணமாக முன்வைக்கப்படுகின்றது. இவற்றைத் தவிர, தாதுவம்சம் (dhātuvamsa – ||தாதுவம்`ச), தூபவம்சம் (thūpavamsa ~தூபவம்`ச), மகாபோதிவம்சம் (mahābōdhivamsa மஃகா|போ||திவம்`ச), லலாடதாதுவம்சம் (lalātadhātuvamsa –  லலா|ட||தாதுவம்`ச), அத்தவனகல்லவிகாரவம்சம் (hattavanagallavihāravamsa – ஃகத்தவன|கல்லவிஃகாரவம்`ச)[1] முதலிய பல  வம்ச நூல்கள் பாளி மொழியில் எழுந்துள்ளன.

இந்த வம்ச நூல்களில், மகாவம்சம் (5ஆம் நூற்றாண்டு – தற்போதுவரை), லலாடதாதுவம்சம் (10ஆம் நூற்றாண்டு), முதலிய வம்ச நூல்கள் நமது ஆய்வுக்குப் பயனுள்ள பல தகவல்களைத் தருகின்றன. மகாவம்சதீகை அல்லது வம்சத்தப்பகாசினி என்று அழைக்கப்படும் மகாவம்சத்தின் உரைநூலும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

பழைய மகாவம்சமானது, மகாவம்சம் – சூளவம்சம் என்று இருபெரும் பாகங்களைக் கொண்டது. முதல் பாகத்தின் உண்மையான பெயர் தான் மகாவம்சம். பின்னாளில் முழு நூலும் அதே பெயரைப் பெற்றுக் கொண்டது. 37 அத்தியாயங்களைக் கொண்ட மகாவம்சத்தின் முதல் பாகம், ஐந்தாம் நூற்றாண்டில் மகாநாம தேரரால் எழுதப்பட்டது. இதில் இன்றைய இறக்காமம் பகுதியில் அமைந்திருந்த உரோகண நாட்டின் தீர்க்கமண்டலமும் அதை ஆண்ட துட்டகாமணி மன்னனின் சகோதரன் சத்தாதீசன் பற்றிய கதைகளும் முக்கியமானவை. மகாசேன மன்னன் சிவாலயங்களை அழித்த இடங்களாகச் சொல்லப்படும் கோகர்ணமும் ஏராவுலுமண்டலமும் இன்றைய திருக்கோணேச்சரமும் ஏறாவூராகவும் கருதப்படுகின்றன.

அட்டவணை

சூளவம்சம் (தமிழ்: சிறிய வம்சவரலாறு) என்று பொதுவில் அறியப்படும் மகாவம்சத்தின் இரண்டாம் பாகமானது, சிறிமேகவண்ண மன்னனிலிருந்து கீர்த்திசிறீ ராசசிங்க மன்னன் வரையான அரசர்களைப் பாடுகின்றது. பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஆசிரியர்களால் எழுதப்பட்டது இந்நூல். மகாவம்சத்தை யேர்மன் (Germen) மொழிக்கு மொழியாக்கம் செய்த வில்லியம் கைகர், சூளவம்சத்தில் மொழிநடையை வைத்து மூன்று தனித்தனிப் பாகங்களை இனங்கண்டிருக்கிறார் (அட்டவணை 1). அதிலும்  முதற்பாகமானது இருவேறு ஆசிரியர்களால் எழுதப்பட்டிருக்கவேண்டும் என்பது ஊகிக்கப்பட்டுள்ளது. புத்த தந்ததாதுவின் வருகை முதல் சோழர் வருகை வரை ஒருவரும், அதன் பின்னர் முதலாம் பராக்கிரமபாகு வரை இன்னொருவரும் இந்த சூளவம்சத்தின் முதற்பாகத்தை எழுதியிருக்கவேண்டும். பொதுவாக தர்மகீர்த்தி தேரரை இந்த இருவரில் ஒருவராகக் கருதுவதுண்டு.

மகாவம்சம்

சூளவம்சத்தின் முதற்பாகமானது, இலங்கைத்தீவின் கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு பகுதிகளில் பரந்திருந்த உரோகண நாட்டின் எழுச்சியைப் பாடும் பகுதி என்ற வகையில் முக்கியத்துவமடைகின்றது. இலங்கையின் சிங்கள வரலாற்றின் நிகரற்ற வீரர்களாக இன்று சித்திரிக்கப்படும் முதலாம் வி|சயபாகு, மற்றும் முதலாம் பராக்கிரமபாகு ஆகியோர் இந்தப்பிராந்தியத்திலேயே உதிக்கிறார்கள். அந்த இருவரும் கீழைக்கரையில் இருந்த பல குடியிருப்புக்களில் எதிர்ப்புகளையும் கிளர்ச்சிகளையும் சந்தித்ததையும் இப்பாகம் பதிவுசெய்கிறது.  இந்தக் கிளர்ச்சிகளின் மையங்களாக இருந்த இடங்களில் கீழைக்கரையின் ஏறாவூர் (ஏறாகுலு) அக்கரைப்பற்றுத் தெற்கிலுள்ள சாகாமம், சம்மாந்துறைப்பற்றின் மல்வத்தை, தீகவாபி என்பன முக்கியமானவை ஆகும் (மவ. 74:89-98).

கீழைக்கரையின் வட அந்தமான கொட்டியாரப்பற்று பகுதியும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. கயபாகு மன்னன் கந்தளாயில் இறக்கும்போது, அவன் உடல் பராக்கிரமபாகுவுக்கு எதிரான, அவன் அமைச்சர்களால் கொட்டியாரத்துக்குக் கொண்டுவரப்படுகிறது. (மவ. 72:06)  பராக்கிரமபாகு உரோகணத்துக் கிளர்ச்சிகளை அடக்க கீழைக்கரைக்கும் அதன் தெற்கேயும் படையனுப்பிய வேளையில் அதே கொட்டியாரத்தில் இருந்த சிங்கள வீரர்களும் கேரள வீரர்களும் வேளைக்காரப்படையினருடன் இணைந்து, இராச நாட்டுப் பகுதியைக் கைப்பற்ற முயன்றிருக்கிறார்கள் (மகாவம்சம் 74:44-45).

முதலாம் வி|சயபாகுவிற்கும் முதலாம் பராக்கிரமபாகுவுக்குமிடையே இலங்கை அரசியல் சூழலில் கீழைக்கரை பெற்றுக்கொண்ட முக்கியத்துவத்தையும் இப்பகுதியில் விரிவாகக் கற்கமுடிகின்றது. அனுராதபுரமும் பொலனறுவையும் அமைந்திருந்த இராசநாட்டை விட, தெற்கே இருந்த உரோகண நாடு பலம்பெற்று எழுந்த காலப்பகுதியாக இக்காலத்தை அறிந்துகொள்ளமுடிகின்றது. பொலனறுவை மணிமுடி யாருக்கு உரியது என்பதில் கலிங்க குலத்துக்கு எதிராகப் போட்டியிட்ட பாண்டிய ஆரிய வம்சம், உரோகணத்தைத் தலைமையிடமாகக் கொண்டே போராடிக்கொண்டிருந்தது என்ற வரலாற்றுச் செய்தியோடு இணைத்தே இந்த மகாவம்சப் பகுதியை வாசிக்கவேண்டும். முதலாம் பராக்கிரமபாகுவுக்கு எவ்விதத்திலும் சளைத்தவனாயிராத முதலாம் கயபாகு (Gajabāhu – |க|ச|பாஃகு) மன்னன் பற்றிய குறிப்புகளும் இப்பகுதியில் தான் இடம்பெறுகின்றன. ஆனால், இப்பகுதியை எழுதிய ஆசிரியரின் பக்கச்சார்பால், பராக்கிரமபாகு அதீதமாகப் புகழப்பட, கயபாகு ஓரளவு குறைத்தே மதிப்பிடப்படுகிறான். நடுநிலையான பார்வையுடன் இப்பகுதியை ஆராயும்போது கயபாகு, அவனுக்கு முந்திய விக்கிரமபாகு உள்ளிட்ட பல மன்னர்களின் வீரதீரம் பராக்கிரமபாகுவுக்குச் சமனானது என்றே கொள்ளமுடிகின்றது.

சூளவம்சத்தின் இரண்டாம் பாகம்,  80 – 90ஆம் அத்தியாயத்தையும்,  12ஆம் நூற். முதல் 14ஆம் நூற். வரையான காலப்பகுதியையும் அடக்குகின்றது. இதை எழுதியோர் யாரென்று தெரியவில்லை. 12ஆம் நூற்றாண்டில் முதலாம் பராக்கிரமபாகுவிற்குப் பின் இலங்கையின் அரசியல் நிலைப்பாட்டைச் சொல்லும் இப்பாகம், தம்பதெனி அரசை ஆண்ட நான்காம் பராக்கிரமபாகு காலம் (1302 – 1326) வரை விவரிக்கின்றது.  இந்த நான்காம் பராக்கிரமபாகு காலத்தில் தான் (1310), இன்று கிடைக்கும் இலங்கையின் மிகப்பழைய இலக்கியமான சரசோதிமாலை எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மகாவம்சம்-1

சூளவம்சத்தின் இரண்டாம் பாகத்தில் கலிங்க மாகன் காலத்தில் கோவிந்தசிலை மலையில் அரசுபுரிந்த சிங்கள மன்னன் பற்றிய தகவல் முக்கியமானது. இன்று கோவிந்தகெல என்று அழைக்கப்படும் கோவிந்தசிலை  கழிகாமமலை என்ற பெயரில் மட்டக்களப்பின் மேற்கெல்லையாகக் கருதப்பட்டது. மேலும் இந்தோனேசியாவிலிருந்து படையெடுத்து வந்த சாவகன் சந்திரபானுவின் படைகள், கீழைக்கரைக்குத் தெற்கே தான் தரையிறங்கின என்ற தகவலும், உரோகணத்தை வன்னிய அரசர்கள் ஆண்டமை உள்ளிட்ட பல தகவல்களும் இந்த இரண்டாம் பாகத்தில் கிடைக்கின்றன.

சூளவம்சத்தின் மூன்றாம் பாகம், 91 – 101 ஆம் அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறது. இந்தப் பாகம், 1815 இல் ஆங்கிலேயர் கண்டியைக் கைப்பற்றுவதுடன் நிறைவடைகின்றது.  எழுதியோர்  திப்பட்டுவாவி சுமங்கல தேரரும் கிக்கடுவை சிறீ சுமங்கல தேரரும்.  இப்பாகம் எழுதப்படும்போது, உரோகணம் ஒரு தனித்த அரசியல் பிரிவாக விளங்கவில்லை என்பதால் உரோகணம் பற்றியோ கீழைக்கரை பற்றியோ மிகக்குறைவான தகவல்களே கிடைக்கின்றன.

இவ்வாறு பழைய மகாவம்சமும் சூளவம்சமும் ஒட்டுமொத்தமாக மகாவம்சத்தின் முதல் இரு தொகுதிகளாகக் கருதப்பட, 1815 இலிருந்து 2010 வரையான காலப்பகுதியில் புதிய மகாவம்சப் பாகங்கள் எழுதப்பட்டு, இதுவரை ஆறு தொகுதிகளாக 130 அத்தியாயங்களுடன் வெளிவந்துள்ளன (சரவணன், 2021). இலங்கை அரசின் அனுசரணையில் தற்போதும் மகாவம்சம் எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது (Cultural Department, 2022). இன்றும் எழுதப்படுகின்ற உலகின் பழைமையான நீளமான தொடர் வரலாற்று இலக்கியம் என்ற பெருமையையும் மகாவம்சம் பெறுகின்றது.

மகாவம்ச உரைநூலான வம்சத்தப்பகாசினி, 10 அல்லது 11ஆம் நூற்றாண்டில் எழுந்ததாகக் கருதப்படுகின்றது (Jegannathan, n.d) மகாவம்சத்தில் குறிப்பிடப்படாத விரிவான வேறு தகவல்கள் இந்நூலில் காணப்படுகின்றன. உதாரணமாக வலகம்பாகு மன்னன் காலத்தில் அவனுக்கு எதிராக, உரோகணப்பகுதியை திய்யன் என்ற பிராமணன் ஆண்ட விபரம் இந்நூலில் கூறப்படுகின்றது. விந்தையாக, மட்டக்களப்புக் குலப்பாடலொன்றில் “வலகம்பாகு மன்னன் திறைகேட்க அதை நாங்கள் கொடாது தவிர்த்தோம்” என்ற குறிப்பு வருகின்றது[2] (கமலநாதன் & கமலநாதன், 2005:69)..

மகாவம்சத்தை அடுத்து கீழைக்கரை பற்றிய வரலாற்றுத்தகவல்களைத் தரும் இரண்டாவது முக்கியமான வம்சநூல், லலாடதாதுவம்சமாகும் (அல்லது நளாட தாதுவம்சம்). தாதுவம்சம் என்று அறியப்படும் சிங்கள நூலும் இதுவும் வேறுவேறு. லலாடதாதுவம்சம் பத்தாம் அல்லது பதினோராம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக நம்பப்படுகின்றது (Vijithakumara, 2016:33). அதன்படி, புத்தரின் நுதல் என்பானது, உரோகணத்தின் மகாகமத்தை வந்தடைந்தமை, காகவண்ணதீசனின் தந்தை கோதாபயனால் கதிர்காமத்து பத்து உடன்பிறந்த அரசர்கள் கொன்றழிக்கப்பட்டமை, காகவண்ணதீசன் வரையான அரசர்களால் அமைக்கப்பட்ட விகாரங்கள், சேருவில என்ற இடத்தில் காகவண்ணதீசன் அமைத்த மங்கலமகாசேத்தியம் உள்ளிட்ட தகவல்கள் கீழைக்கரை தொடர்பான வரலாற்றைக் கட்டமைப்பதில் மிக முக்கியமானவை ஆகும்.

சிங்களமொழி  இலக்கியங்கள்

கீழைக்கரை பற்றிய சான்றுகளை வரிசைப்படுத்துவதில், பூ|சாவலிய, ரா|சாவலிய, நிகாய சங்கிரகய முதலியன சிங்களத்தில் எழுந்த வரலாற்று இலக்கியங்களில் குறிப்பிடத்தக்கவை. இவற்றில் பூ|சாவலிய  மயூரபாத பிரிவேனாவைச் சேர்ந்த புத்தபுத்திரர் என்பவரால் மூன்றாம் பராக்கிரமபாகு மன்னன் காலத்தில் (1287 – 1293) எழுந்ததாகும். நிகாய சங்கிரகம் (சாசனாவதாரம் என்ற பெயரும் இதற்குண்டு) தேவரக்கித |சயபாகு என்பவரால் நான்காம் புவனேகபாகு மன்னன் (1341 – 1351) காலத்தில் எழுந்த நூல் (Davids, 1875:168 – 171). பதினெட்டாம் நூற்றாண்டில் எழுந்ததாகக் கருதப்படும் ரா|சாவலிய  சிங்களத்தில் பெருமளவு பூரணமான வரலாற்றுத்தகவல்களை நிரல்படுத்திக் கூறும் நூல். இது, வி|சயன் வருகையிலிருந்து இரண்டாம் விமலதர்ம சூரியன் வரையான அரசர்களின் காலத்தைப் பாடுகின்றது. இந்நூலிலும் கீழைக்கரை பற்றிய பல வரலாற்றுத்தகவல்கள் கிடைக்கின்றன. உதாரணமாக கண்டி மன்னன் இரண்டாம் ரா|சசிங்கன் பாணமைப் பகுதியை ஆண்டான் என்ற குறிப்பு இந்நூலில் வருகிறது (Gunasekara, 2000:90).   இவை அனைத்திலும் மகாவம்சத்தில் குறிப்பிடப்படாத பலவகையான சரித்திரச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ள முடிகின்றது.

கடையம்பொத் என்று அழைக்கப்படும் பதினான்காம் நூற்றாண்டுக்குப் பிந்திய சிங்கள நூல்களும் முக்கியமானவை. கடையம்பொத் என்பது “எல்லைகளைக் குறிப்பிடும் நூல்” எனப் பொருள்படும். மாத்தளை கடையம், திரிசிங்கள கடையம், சிறீலங்காதுவீபய கடையம் என பல கடையம்பொத்தகங்கள் உள்ளன.  இவை பழைய இலங்கையின் இராசநாடு, உரோகணநாடு, மாயநாடு ஆகிய மூன்று “திரிசிங்கள” நாடுகளிலும் அமைந்திருந்த ஆட்சி நிருவாகப் பிரிவுகள் பற்றிக் குறிப்பிடுகின்றன. கீழைக்கரை அடங்கியிருந்த உரோகண நாட்டிலிருந்த ஆட்சிநிர்வாகப் பிரிவுகளாக மடகலப்புவ, மல்வத்துமண்டலம், தீகவாபிமண்டலம், பலுகம் தானவ, ஏராவுலுமண்டலம் முதலியவற்றைக் குறிப்பிடுகின்றன (Abeyawardana, 1999:100-102). இவற்றை இன்றைய சம்மாந்துறை, மல்வத்தை, இறக்காமம், பழுகாமம், ஏறாவூர் ஆகிய ஊர்களை அண்டியிருந்த ஆட்சிநிர்வாக பிரிவுகளாக இனங்காணலாம்.

தொடரும்.

அடிகுறிப்புகள்

[1] பாளியில் எழுந்த அத்தவனகல்லவிகாரவம்சம் சிங்களத்திலும் கிடைக்கிறது. அத்தனகலு வம்ச என்றழைக்கப்படும் அந்நூல், பொதுவாக 14ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கணிக்கப்படுகிறது.

[2] “….திறைபெறு வாலகம்பாகொருவன் தண்டு தளத்தொடு சென்றனர் கண்டு மனைக்கதிபர் விண்டு திறை பணம் என்றுமில்லாமலே வேண்டினதால் அகம் மகிழ் குகனே.” – முக்குகர் மரபு,  படையாட்சிகுடி சொல்வது.

உசாத்துணைகள்

கமலநாதன், சா.இ. கமலநாதன், கமலா. (2005). மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம், கொழும்பு – சென்னை:குமரன் புத்தக இல்லம்.

சரவணன்,என். (2018). “மகாவம்சம் இன்றும் எழுதப்படுகிறது”. நமது மலையகம். https://www.namathumalayagam.com

Abeyawardana, H.A.P. Boundary Divisions of Mediaeval Sri Lanka. Polgasovita: Academy of Sri lankan Culture.

Davids, T.W.R. (1875). Art.  VIII. — Three  Inscriptions of  Parakrama Baku the  Great from  Pulastipura,  Ceylon  (date circa  1180  a.d.). Journal of the Royal Asiatic Society of Great Britain & Ireland, Vol. 07.

Gunasekara, B. (Ed.). (1900). Rajavaliya. Ceylon: George J.A.Skeen, Government Printers.

Jegannathan, P. (n.d). History, Historiography and the “Sinhala-Buddhists”: A reply to Nirmal Ranjith Dewasiri. Retrieved from: http://ices.lk

Vijitha Kumara, S. (2016). A Critical Edition of the Nalāṭa Dhātuvaṃsa: Chapter III. WWJMRD 2016; 2(2), pp.32-43.


ஒலிவடிவில் கேட்க

16809 பார்வைகள்

About the Author

விவேகானந்தராஜா துலாஞ்சனன்

விவேகானந்தராஜா துலாஞ்சனன் அவர்கள் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் மூலக்கூற்று உயிரியலும் உயிர் இரசாயனவியலும் கற்கைநெறியில் இளமாணிப் பட்டம் பெற்றவர். அதே பல்கலைக்கழகத்தின் பட்டக்கற்கைகள் பீடத்தில் பொது நிர்வாகமும் முகாமைத்துவமும் துறையில் முதுமாணிக் கற்கையைத் தொடர்கிறார்.

இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாகக் கடமையாற்றும் இவர் தற்போது மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராகப் பணி புரிகிறார்.

இலங்கை சைவநெறிக்கழக வெளியீடான ‘அலகிலா ஆடல்: சைவத்தின் கதை’ எனும் சைவ வரலாற்று நூலையும் (2018), தனது திருமண சிறப்புமலராக ‘மட்டக்களப்பு எட்டுப் பகுதி’ நூலையும் (2021) வெளியிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)