யாழ்ப்பாண இராச்சியத்தினதும், பிற்காலத்தில் இலங்கையின் வடபகுதியினதும் தலைநகரமாக யாழ்ப்பாண நகரத்தை இன்று குறிப்பிடும்போது, அதற்கு முன்னர் இப்பகுதியில் தலைமையிடமாக இருந்த நகரங்களைப் பற்றியும், யாழ்ப்பாண நகரம் தலைமையிடமாக ஆன வரன்முறை பற்றியும் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.
கதிரமலை (கந்தரோடை)
கி. மு 5 ஆம் நூற்றாண்டிலிருந்தே யாழ்ப்பாணக் குடாநாட்டில் மக்கள் குடியேற்றங்கள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. 1918 இலும் பின்னர் 1970 ஆம் ஆண்டிலும் கந்தரோடைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் அப்பகுதியில் ஒரு நகர நாகரிகம் இருந்ததைக் காட்டின. இதன் அடிப்படையில் ஏறத்தாழ 13 ஆம் நூற்றாண்டு வரை யாழ்ப்பாணக் குடாநாட்டின் குடியேற்றங்களுக்கான தலைமை இடமாகக் கதிரமலை என அழைக்கப்பட்ட கந்தரோடை விளங்கியது என வரலாற்றாளர்கள் நம்புகின்றனர். உக்கிரசிங்கன் என்னும் அரசன் கதிரமலையை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்ததாக யாழ்ப்பாண வைபவமாலையும் கூறுகின்றது.
சிங்கைநகரும் நல்லூரும்
13 ஆம் நூற்றாண்டில் இலங்கையின் வடபகுதியில் இன்று யாழ்ப்பாண இராச்சியம் என அழைக்கப்படும் ஒரு தமிழ் இராச்சியம் உருவானது. எழுத்துமூல ஆவணங்களும், கல்வெட்டுக்களும், இவ்விராச்சியத்தின் தொடக்க கால அரசர்களைச் சிங்கைநகர் என்னும் நகரோடு தொடர்புபடுத்திப் பேசுகின்றன. எடுத்துக்காட்டாக மன்னர்கள், சிங்கையாரியன், சிங்கை நகராரியன், சிங்கை ஆரியமால், சிங்கை மேவும் ஆரியர் கோன், சிங்கை நாடன், சிங்கையெங் கோமான் போன்ற பெயர்களால் குறிப்பிடப்படுகின்றனர். எனவே அவர்களது தலைநகரம் சிங்கைநகர் என்ற கருத்து உருவாகியுள்ளது. ஆனால், பிற்பட்ட கால அரசர்கள் தொடர்பில் சிங்கைநகர் என்னும் பெயர் பேசப்படாமல், நல்லூரே தலைநகரம் என்று குறிப்பிடப்படுகின்றது. அதேவேளை, ஏறத்தாழ 14 ஆம் நூற்றாண்டிலிருந்து, யாழ்ப்பாணம் அல்லது அதையொத்த ஒலிப்புக் கொண்ட, யாழ்ப்பாணாயன் பட்டினம், யாப்பா பட்டுன போன்ற பெயர்களும் பல்வேறு மூலங்களில் காணப்படுகின்றன. இதனால், சிங்கைநகர், நல்லூர், யாழ்ப்பாணம் என்பவை தொடர்பில் பல்வேறு முரண்பாடான கருத்துக்கள் எழுந்துள்ளன.
வரலாற்று அறிஞர்களுள் பேராசிரியர்கள் கா. இந்திரபாலா, சி. பத்மநாதன் உள்ளிட்ட ஒரு சாரார் சிங்கைநகர், நல்லூர் என்னும் பெயர்கள் ஒரே நகரத்தையே குறிக்கின்றன என்கின்றனர். 13 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாண இராச்சியம் தோன்றிய காலத்திலிருந்து, 1619 ஆம் ஆண்டில் அது போர்த்துக்கேயரிடம் வீழ்ச்சியடையும்வரை நல்லூர் என இன்று நாம் அழைக்கும் இடமே, ஏறத்தாழ 370 ஆண்டுகள். தலைநகரமாக இருந்தது என்பது அவர்களது கருத்து.
ஆனால் இன்னொரு சாரார் சிங்கைநகரும், நல்லூரும் வேறு வேறு நகரங்கள் என்னும் கருத்தைக் கொண்டுள்ளனர். இராசநாயக முதலியார், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றோர் இக்கருத்தை ஆதரிப்போருள் அடங்குவர். இவர்கள் 13 ஆம் நூற்றாண்டில் இருந்து 1450 ஆம் ஆண்டுவரை சிங்கைநகர் தலைநகரமாக இருந்தது என்கின்றனர். 1450 இல் கோட்டே இராசதானியில் இருந்து அனுப்பப்பட்ட சப்புமால் குமாரயா அல்லது செண்பகப் பெருமாள் என்பவன் தலைமையிலான படைகள் யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றிய பின்னர் சிங்கைநகர் கைவிடப்பட்டு, நல்லூர் நகரம் உருவானது என்பது அவர்களது கருத்து.
சிங்கை நகரின் அமைவிடம் குறித்த கருத்து வேறுபாடுகள்
சிங்கைநகர் என்றொரு நகர் இருந்தது என ஏற்றுக்கொள்ளும் தரப்பினரிடையே, அது எங்கே இருந்தது என்பது குறித்துக் கருத்தொற்றுமை இல்லை. சிங்கைநகர், நல்லூரிலிருந்து வேறுபட்ட ஒரு நகரம் என்ற கருத்தை முதலில் முன்வைத்தவர்களும் அதன் தொடக்க கால ஆதரவாளர்களும் அது வடமராட்சியின் கிழக்குக் கரையோரத்தில் உள்ள வல்லிபுரத்தில் அமைந்திருந்தது எனக் கருதினர். வல்லிபுரப் பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் கொண்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், அப்பகுதியில் ஒரு நகரம் இருந்திருக்கக்கூடும் என்ற எண்ணமே இக்கருத்துக்கு அடிப்படை. அங்கு கிடைத்தவை, அவ்விடத்தில் ஒரு தலைநகரம் இருந்தது எனக் கொள்வதற்குப் போதிய சான்றுகள் அல்ல என்ற கருத்தும் உண்டு. பூனகரிப் பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்ட பேராசிரியர் ப. புஷ்பரத்தினம், அப்பகுதியில் பல கட்டிட அழிபாடுகள் காணப்படுவது அவ்விடத்தில் ஒரு பழைய நகரம் இருந்ததைக் காட்டுகின்றது என்றும், அது சிங்கைநகராக இருக்கலாம் என்றும் புதிய கருத்தொன்றை முன்மொழிந்தார்.
அண்மைக் காலத்தில் யாழ்ப்பாணக் கோட்டைக்கு உள்ளேயும், அதன் அருகிலும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அப்பகுதியில் வெளிநாட்டு வணிகத் தொடர்புகளைக் காட்டும் சான்றுகள் கிடைத்தன. இதை அடிப்படையாகக் கொண்டு சில ஆய்வாளர்கள் இன்று யாழ்ப்பாணக் கோட்டை இருக்கும் பகுதியில் ஒரு துறைமுக நகரம் இருந்திருக்கலாம் என்றும் அதுவே சிங்கைநகராக இருக்கலாம் என்றும் ஒரு ஊகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணப் பட்டினம்
14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிங்கள நூல்களில் யாழ்ப்பாணப் பட்டினம் என்னும் பெயருடன் ஒத்த ஒலிப்புக் கொண்ட யாப்பாப் பட்டுன என்னும் பெயர் அக்கால வடபகுதித் தமிழ் மன்னர்களின் தலை நகரையே குறிக்கின்றன. சில பழைய தமிழ் நூல்களும்கூட நல்லூரையே யாழ்ப்பாணம் எனக் குறிப்பிடுவதைக் காண முடிகின்றது. இது நல்லூரும், யாழ்ப்பாணமும் ஒன்றே என்ற பொருளைத் தருகின்றது. ஆனால், யாழ்ப்பாணன் பரிசாகப் பெற்றதால் யாழ்ப்பாணம் என்னும் பெயர் ஏற்பட்டது என்ற வைபவ மாலையின் கூற்றை ஏற்றுக்கொள்ளும் இராசநாயக முதலியார் இன்றைய குருநகர், பாசையூர்ப் பகுதிகளை உள்ளடக்கிய இடமே யாழ்ப்பாணனுக்குப் பரிசாகக் கிடைத்திருக்கலாம் என்றும் அதனால் அப்பகுதியே யாழ்ப்பாணம் என வழங்கப்பட்டது என்றும் கருதுகின்றார். ஆனாலும், 16 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம் என்ற பெயரில் தனியாக ஒரு ஊரோ அல்லது நகரமோ இருந்ததற்கு எவ்வித சான்றுகளும் கிடைக்கவில்லை. ஆனால், அக்காலப் பகுதியில் போர்த்துக்கேயர் முழு இராச்சியத்தையுமே “ஜாஃப்னா பட்டவ்” என அழைத்தனர். 1621 ஆம் ஆண்டின் பின்னரே தாம் நிறுவிய புதிய நகரத்துக்கும் “ஜாஃப்னா பட்டவ்” எனப் பெயரிட்டனர்.
எனவே போர்த்துக்கேயர் நிறுவிய யாழ்ப்பாண நகரத்துக்கும், அதற்கு முன்னர் யாழ்ப்பாணம் என்ற பெயரால் வழங்கப்பட்ட இடங்களுக்கும் தொடர்ச்சி எதுவும் இல்லை என்றே கொள்ளவேண்டியுள்ளது.
தொடரும்.