மொழிபெயர்ப்புக் கட்டுரை : பிறையன் பவ்வன்பேர்ஜர்
நில உடைமை, மூலதனச் சொத்துக்கள், வர்த்தகம், நிர்வாகப் பதவிகள், அரசியல் தலைமைத்துவப் பதவிகள் என்ற யாவற்றையும் ஒரே ஒரு மேலாதிக்கச்சாதி தனது தனியுரிமையாக்கிக் கொண்டு ஆதிக்கம் செய்வது தென்னாசியப் பிராந்தியத்தில் பரவலாகக் காணப்படும் விடயம் (Srinivas 1955, 1959, Raheja 1988). இவ்வாறான ஒரு நிலைமைக்கு மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்வது யாழ்ப்பாணம் ஆகும். யாழ் குடாநாட்டின் அரைவாசிக்கும் மேற்பட்ட சனத்தொகையை கொண்ட வேளாளர்கள் எந்த போட்டியுமின்றி விவசாயக் காரணிகளின் உரிமையாளர்களாக உள்ளனர். மேலும் அவர்கள் குடாநாட்டின் வர்த்தக, நிர்வாக மற்றும் அரசியலில் பிரத்தியேக ஏகபோக பதவிகளை வகித்தனர்.(அருமைநாயகம் 1976, பவ்வன்பேர்ஜர் 1982). ஏனைய பகுதியில் ஆதிக்கச் சாதியொன்று எப்படி நடந்து கொள்ளுமோ அதேபோன்று யாழ்ப்பாணத்தின் வேளாளர்களின் ஆதிக்கம் தமது பகுதிக்கு சுயமாக அல்லது தனித்து இயங்கும் உரிமை உள்ளது என்ற கருத்துடன் தொடர்புபட்ட ஒன்றாக இருக்கிறது. அங்குள்ள சமூக அமைப்பு தமது நலன்களுக்கு உகந்ததாகவும் யாழ் குடாநாடு தமக்கு உரிய ஒன்று என்ற பார்வையுடன் உள்ளனர்(பாங்ஸ் 1960:71).
இப்படியான எண்ணம் இருந்தப்போதும் அவர்கள் மேலாதிக்கம் பூரணமானதல்ல. வேளாளரின் இயல்பும் மனப்போக்கும் மரபுவழி விவசாய முறையுடன் ஒத்துப்போகும் தன்மையென்பதால் விவசாயக் கிராமங்களில் அவர்களது நாட்டாண்மை செல்லுபடியாகின. கடற்கரையை ஒட்டி வாழும் ஆழ்கடல் மீன்பிடித் தொழில் செய்யும் கரையார் தங்கள் சுயாதிபத்தியத்தை கைநழுவ விடாது பாதுகாத்து வருகிறார்கள். போத்துக்கீசர் காலத்தில் கத்தோலிக்க சமய மதமாற்றம் நிகழ்ந்த காலம் தொட்டே கரையார் அத்தகைய சுயாதிபத்திய உணர்வை வெளிப்படுத்தி வந்தனர்.
டச்சுக்காரர் ஆட்சியின்போது வேளாளர் பிற சாதிகள் மீது உறுதியான கட்டுப்பாட்டை வைத்திருந்தனர். பிரித்தானியர் வருகையுடன் இது உடையத் தொடங்கியது. இதனால் 18 ஆம் நூற்றாண்டிலேயே கைவினைச் சாதிகள் (சனத்தொகையின் 5 வீதம்) மீதான வேளாளர் கட்டுப்பாடு தளர்வுற்றது. 20 ஆம் நூற்றாண்டில் பள்ளர், நளவர் என்ற இரு விவசாய ஊழிய சாதிகள் மீதே அவர்கள் தம் ஆதிக்கத்தைச் செலுத்தி வந்தனர். இவ்விரு சாதிகளினதும் ஒன்றிணைந்த சனத்தொகை குடாநாட்டின் மொத்தத் சனத்தொகையின் 18 வீதம் ஆகும். ஆயினும் அதே நூற்றாண்டில் வேளாளர்களுக்கும் பள்ளர், நளவர்களுக்கும் இடையில் இருந்த உறவின் தன்மை அடிமை நிர்பந்தத்திலிருந்து பொருளாதார நிர்பந்தமாக மாற்றம் பெற்றது. உதாரணமாக 1950பதுகளில் தாழ்த்தப்பட்டோரில் பலர் பனங்கூடல்களாகவோ அல்லது தரிசு நிலமான கட்டாந்தரையாகவோ இருந்த வேளாளருக்குரிய காணிகளில் வாழ்ந்து வந்தனர். வேளாளர்களுக்கு உழைப்பையும் தொண்டூழியத்தையும் வழங்கத் தவறினால் காணிகளில் இருந்து வெளியேற்றப்படும் ஆபத்தில் வாழ்ந்தனர். பொருளாதாரக் கட்டுப்பாடுகள், முறைசாரா அரசியல் கட்டுப்பாட்டோடு இணைந்திருந்தது. தங்களது வாழ்நிலையை உயர்த்துவதற்கு தாழ்த்தப்பட்டோர் முயன்றபோது வேளாளரின் காடையர் குழுக்கள் அவர்களின் குடிசைகளுக்குத் தீவைத்தும், கிணறுகளில் நஞ்சைக் கலந்தும் கொடுமைகளை இழைத்தனர்.
யாழ்ப்பாணத்தின் சாதி முறையின் அடிப்படை அம்சங்கள் காலனித்துவ ஆட்சியின் தொடக்கத்திற்கு முன்னரே உருவாக்கம் பெற்றிருத்தல் வேண்டும். யாழ்ப்பாணத்தின் சாதி முறையின் இறுக்கம் இடையில் புகுந்ததொன்று, அதனை காலனித்துவத்திற்கு முந்திய மரபு முறையின் தொடர்ச்சி என்று கூறுவது தவறாகும். இதனை அரசரத்தினம் ஒரு முக்கிய ஆய்வின் மூலம் (1978) சான்றுப்படுத்தியதுபோல டச்சுக்காரர் தமது வரி வருமானத்தை அறவிட வேண்டும் என்ற தேவைக்காக தமது சொந்த நலன்கருதி வேளாளரின் மேலாதிக்கத்தை வலுப்படுத்தினர். டச்சுக்காரர் கைப்பற்றிய இடங்களில் யாழ்ப்பாணம் ஆகக் கூடிய வருவாய் தரும் ஒன்றாக இருந்தது. அவர்கள் நோக்கில் யாழ்ப்பாணம் ஒரு செல்வம் கொழிக்கும் இடம். அங்கிருந்து யானைகளை ஏற்றி அனுப்பும் வியாபாரம் மிகுந்த லாபம் தருவதாக இருந்தது. இந்த ஏற்றுமதிப் பொருளோடு டச்சுக்காரர்கள் ஒரு இறக்குமதிப் பொருள் ஒன்றையும் அங்கே கண்டனர். அமெரிக்கக் கண்டத்தில் இருந்து யாழ்ப்பாணத்தில் வந்து புகுந்த புகையிலை நல்ல விளைச்சலைத் தரும் பயிராக இருந்தது.
18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வேளாளரால் பயிரிடப்பட்ட புகையிலை மலையாளத்திற்கு ஏற்றுமதியாயிற்று. அப்புகையிலையின் மணமும் ருசியும் மலையாளிகளுக்கு அதன் மேல் ஒரு மோகத்தை உண்டாக்கியது. வேளாள விவசாயிகளும், தரகர்களும் இதன் உற்பத்தியாலும் வர்த்தகத்தாலும் பணம் குவிக்க ஆரம்பித்தனர். டச்சுக்காரர் காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட புகையிலையின் அளவு வியப்பைத் தருவது. உதாரணமாக 1783 ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் இறாத்தல் புகையிலை ஏற்றுமதியாயிற்று. இதன் மூலம் அறவிடப்பட்ட சுங்கவரி மட்டும் ரூ 80,000 ஆக இருந்தது. அந்தக் காலத்தில் இது மிகப்பெரிய தொகை (அரசரத்தினம் 1982:8). புகையிலையைப் பயிரிடுவதற்கு வேண்டிய உடல் உழைப்பை வேளாளருக்கு தடையின்றி வழங்க டச்சுக்காரர் யாழ்ப்பாணத்தின் சாதி தொடர்பான சுதேச வழமைகளை ரோமன் டச்சுச் சட்டத்திற்கு ஏற்ப மீள் விளக்கம் அளிப்பது, நளவர்களையும் பள்ளர்களையும் அடிமையாக்க உதவியது. பஞ்சகாலத்தின்போது தென்னிந்தியாவில் இருந்து டச்சுக்காரர்களும், தனிப்பட்டவர்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளர்களை அடிமைகளாக இறக்குமதி செய்தனர். உதாரணமாக 1694 க்கும் 1696 க்கும் இடைப்பட்ட காலத்தில் கர்நாடகக் கரையோரச் சமவெளிப் பகுதியில் இருந்து 3,589 அடிமைகள் தனிப்பட்டவர்களால் கொண்டுவரப்பட்டனர். (அரசரத்தினம் 1982:19) நவீன காலத்தின் யாழ்ப்பாணத்தைப் பற்றிக் குறிப்பிட்டவர்களின் மனதை உறுத்திய விடயம் அதன் சாதிக் கட்டமைப்பின் இறுக்கம் ஆகும். இந்த இறுக்கம் யாழ்ப்பாணத்தின் மரபு முறையில் இணைந்த ஒன்று அல்ல. லாபம் தரும் விவசாய ஏற்றுமதி உற்பத்தி முறை ஒன்றின் கீழ் வழமைக்கு மாறான வித்தியாசமான சூழல் ஒன்றில் ஏற்பட்ட திரிபடைதலாகவே சாதிமுறையின் இறுக்கம் ஏற்பட்டது.
வேளாளரின் சாதி இறுக்கத்தை பாதுகாத்து பலப்படுத்த டச்சுக்காரர் உருவாக்கிய கட்டமைப்பினை பிரித்தானியர் அகற்றியதால் வேளாளர் அந்த இறுக்க சாதி முறைமையை அழியாமற்பேண சிரமப்பட்டனர். முதலில் பிரித்தானியர்கள் டச்சுக்காரரின் கொள்கைகளையே கடைப்பிடித்தனர். ஆனால் டச்சுக்காரர் செய்தது போன்று பிரித்தானியர்கள் ஒரு சாதியை இன்னொரு சாதியுடன் மோதவைக்கவில்லை. இதனால் வேளாளர் தமது மேலாதிக்கத்தை வலுப்படுத்தக்கூடியதாக இருந்தது. எனினும் (ஒரு அரை நூற்றாண்டு கூடக் கழிவதற்கு முன்பாகவே) 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரித்தானிய நிர்வாகம் தாராண்மைக் கொள்கையை வெளிப்படுத்தி வேளாளர் மேலாதிக்கத்திற்கு எதிரான அழுத்தத்தைப் பிரயோகித்து, பலவீனப்படுத்த முயற்சி செய்தது. 1844 ஆம் ஆண்டு அடிமை முறை ஒழிப்பால், கொள்கையளவிலாயினும் அடிமைகளை உபயோகப்படுத்திப் புகையிலை பயிரிடல் முடிவுக்கு வந்தது. பள்ளர்களும் நளவர்களும் தமது உழைப்புக்கு ஊதியமாக பணக்கூலியைப் பெற்றனர். (பாங்ஸ் 1960:73-74) 1844க்குப் பின்னர் நீதிமன்றங்கள் மரபுவழிப்பட்ட சாதிக்கட்டுபாடுகளை ஏற்க மறுத்தன. இதனால் வேளாளர்களுக்குக் கீழ்ப்பட்டவர்களாக இருந்த சமூகப்பிரிவினர் தமது விடுதலை பெறுவதற்கும் அப்பிரிவினர் தமது அடையாளங்களை மாற்றிக்கொள்வதற்கும் வழியேற்பட்டது. இதனை வேளாளர்களால் தடுக்கமுடியவில்லை. விடுதலை பெற்ற சமூகப்பிரிவினர் தம் அடையாளங்களை மாற்றி வேளாளர்கள் பிரிவுடன் ஒன்று கலந்தனர். இதனால் சனத்தொகையில் வேளாளர் பிரிவினரின் எண்ணிக்கை அதிகரித்தது. 1970க்கும் 1950க்கும் இடையில் யாழ்ப்பாணத்தின் சனத்தொகையில் வேளாளர் தொகை 30 வீதத்தில் இருந்து 50 வீதமாக அதிகரித்தது. (பாங்ஸ் 1957:411). தாழ்நிலையில் இருந்தோர் படிப்படியாக மேல்நிலைக்கு உயர்ந்து சென்றனர் என்பதை, “மெள்ள மெள்ள வேளாளர் ஆயினர்” என்ற பழமொழி குறிப்பிடுகிறது. (அரசரத்தினம் 1978:385) யாழ்ப்பாணத்தவர்களும் இம்மாற்றம் பற்றிய உணர்வு உடையவர்களாக இருந்தனர் என்பதை இப்பழமொழி உணர்த்துகிறது.
தோட்டச் செய்கைப் பொருளாதாரம் ஒன்றின் விளைவான இத்தகைய (அடிமைச்) சாதிமுறையை பலாத்காரத்தின் மூலமே நிலைநிறுத்த முடியும். உண்மையில் பலாத்காரமே அங்கு பிரயோகிக்கப்பட்டது. வேளாளர்கள் சிறுபான்மைத் தமிழர்கள் மெள்ள மெள்ள வேளாளர் ஆகிவிடுவதை தடுப்பதற்கு சட்டத்திற்கு அப்பாற்பட்ட சமூகக்கட்டுப்பாடுகளை நளவர், பள்ளர் மீது விதித்தனர். இந்தக் கட்டுப்பாடுகள் நளவர்களையும், பள்ளர்களையும் வெளிப்படையாக தாழ்த்தப்பட்டோர் என அடையாளம் காட்டுவனவாக இருந்தன. இந்த கட்டுப்பாடுகள் சட்டத்தின் தன்மையை டச்சுக்காரர் காலத்திலும் பிரித்தானியரின் ஆரம்ப ஆட்சியிலும் பின்னர் 1960களிலும் இருந்தன. 1940 மற்றும் 1950களில் உதாரணமாக கோவில்களுக்குள் நுழைவதற்கும், கோவில்களிற்கு அருகில் குடியிருப்பதற்கும் தாழ்த்தப்பட்டோர் அனுமதிக்கப்படவில்லை. உயர்சாதியினர் வீட்டுக் கிணறுகளில் தண்ணீர் அள்ள அனுமதிக்கப்படவில்லை. லோண்டரிகள், சிகை அலங்கரிப்பு நிலையங்கள், தேநீர்க்கடைகள் என்பனவற்றுக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை. பாடசாலைக்குச் செல்லுதல், தமது உடம்பின் மேற்பகுதியை மூடிச் சட்டை அணிதல், தங்க ஆபரணங்களை அணிதல், குடை பிடித்துக் கொண்டு செல்லுதல், ஆண்கள் தலைமயிரை வெட்டிக்கொள்ளுதல், துவிசக்கரவண்டி, கார் முதலியவற்றை வைத்திருத்தல் ஆகியனவற்றில் கட்டுப்பாடுகள் இருந்தன. தாழ்ந்த சாதியினர் தங்களின் இறந்தவர்களின் பிணங்களைத் தகனம் செய்யவோ முடியாது. கிறிஸ்தவராகவோ, பௌத்தராகவோ மதம்மாற முடியாது போன்ற தடைகளையும் விதித்தனர் (ஹோம்ஸ் 1980:232-34).
சட்டத்திற்கு அப்பாற்பட்ட இந்தச் சட்ட விரோதச் சமூகக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு வன்முறையை நாடினர். காடையர் குழுக்களை ஏவிவிட்டு தாழ்த்தப்பட்டோரை அடித்துத்துன்புறுத்தினர். இவ்வாறு மேலுயர முனையும் பள்ளர்களையும் நளவர்களையும் தண்டித்தனர். இக்காடையர்கள் தீண்டத்தகாதவர்களின் கிணறுகளை அசுத்தப்படுத்தல், அவற்றுள் இறந்த நாய்கள், மலம், குப்பைகள் என்பனவற்றைக் கொட்டுதல், வீடுகளிற்கும் வேலிகளுக்கும் தீவைத்தல் என்பனவற்றில் ஈடுபட்டனர். அடித்து உதைத்தல், சில சமயம் கொலை செய்தல் போன்ற கொடுஞ் செயல்களிலும் ஈடுபட்டனர். மாவிட்டபுரம் நெருக்கடிக்கு முற்பட்ட காலத்தில் ஏற்பட்ட சச்சரவுகள் பலவற்றின் போது தாழ்த்தப்பட்டோர் பலர் மரணத்தைத் தழுவினர் (டைமஸ் ஒவ்சிலோன் பெப் 1968, பக் 1).
நடை உடை பாவனைகளில் வேளாளர் விதித்த இக்கட்டுப்பாடுகள் உயர்சாதி – தாழ்ந்தோர் என்ற எல்லைக்கோடு வகுக்கும் முக்கிய கருவியாக இருந்தது. பாங்ஸின் கூற்றில் அவர் இந்த அம்சங்களின்றி (1957:415-16) வேளாளர் ஒருவர் தன்னைப் பள்ளர் குலத்தவர் ஒருவரில் இருந்து எப்படி வேறுபடுத்தலாம்? பள்ளர்கள் வேளாளரைப் போல் நடந்துகொள்வதையும் தம்மை வேளாளர் என்றே கூறிக் கொள்வதையும் தடுப்பதற்கு வழியில்லை. குறுகிய காலத்திற்குள் வேளாளருக்கும் பிறருக்கும் இடையிலான வேறுபாடுகள் மறைந்துவிடும். சாதி இப்போது இருக்கும் வடிவில் தொடர்ந்து இருக்க முடியாது. அது மறைந்துபோகும். பல்வேறு அகமணக் குழுக்கள் ஒவ்வொன்றும் பிறகுழுக்களை விடத் தாமே உயர்ந்தோர் என்றோ அல்லது சமமானவர்கள் என்றோ கூறிக்கொள்ள முடியும். இவ்வாறான ஒப்பீட்டுத் தரநிர்ணயம் புகுந்தால் காலப்போக்கில் கலப்புத் திருமணம் தோன்றும். சொத்துக்களிலும் பகிர்வு ஏற்படும்.
வேளாளர் தமக்கும் தீண்டப்படாதோர் என்று கருதப்பட்டவர்களுக்குமிடையில் உள்ள சமூக எல்லைக்கோட்டை பாதுகாப்பதிலும், அந்தக் கோட்டைத்தாண்டாமலும் இருப்பதற்காக பல நம்பிக்கைகளையும் சடங்குகளையும் வளர்த்துவிட்டனர். தீண்டத்தகாதோரை, நாகரிக நிலைக்கு உயராத புராதன மனிதராகவும் இழிந்தவர்களாகவும் காட்ட முயன்றனர். (Pfaffenberger 1982) வேளாளர் நடத்துவிக்கும் கோவில் கிரிகைகளில் தமது தீண்டத்தகாத வேலைக்காரரை விலக்கிவைத்து பின்னர் பிசாசு, கெட்ட ஆவிகளின் தீண்டலுக்கு வந்த படையல்களை வேளாளர் தீண்டத்தகாதவர்களுக்குக் கொடுத்தனர். (வடஇந்தியாவிலும் இது போன்ற இழிவு செய்யும் வழமைகள் சடங்குகள் இருப்பதை (Raheja 1888 குறிப்பிடுகிறார்). தாழ்த்தப்பட்டோருடன் தொடர்புபடுத்தப்படும் குழப்பம், விசர், மலட்டுத் தன்மை, மனதை வாட்டும் உபாதைகள் வேறுபல தோசங்கள் சங்கடங்கள் ஆகியவற்றை தமது இடத்திலிருந்தும் கோவில்களில் இருந்து அகற்றுவதாக நினைத்து இந்த சடங்குகளைச் செய்கிறார்கள் (பாங்ஸ் 1957:6).இவ்வாறு தாழ்த்தப்பட்டோரை புராதன நிலை (Primitivity) தோசம் என்பனவற்றுடன் தொடர்புறுத்துவதை பல ஆய்வாளர் சுட்டிக் காட்டியுள்ளனர். இந்த துடக்கு தோசப் பொருட்களுடன் தாழ்த்தப்பட்டோர் சம்பந்தப்படுவதால் அவர்கள் தீட்டும், துடக்கும் உடையவர்கள், எந்த வகையிலும் இந்தத் துடக்கைப் போக்கி அவர்களைச் சுத்தப்படுத்த முடியாது என்ற கருத்தை அவர்கள் இச்சடங்குகள் மூலம் நிலைபெறச் செய்து விட்டார்கள். வேளாளர் சிலரது சிந்தனைப்படி இவ்வாறு கறைப்பட்டவர்களை, துடக்கு உடையவர்களை தமிழ்ச் சமூகத்தில் முழுமையான உறுப்பினராக இணைத்துக்கொள்வது கடினம். இதுவொரு தீவிரமான நிலைப்பாடு. கரிய நிறத்தினரான நளவர்களும், பள்ளர்களும் அண்மைக் காலத்தில் தென்னிந்தியாவில் இருந்து வந்தவர்கள். டச்சுக்காலத்தில் ஏற்பட்ட இடப்பெயர்வால் இவர்கள் வந்தனர். இவர்கள் மைய நீரோட்டத்தில் சேராமல் விலகி நிற்பவர்கள் என்றவாறான சிந்தனையும் வேளாளரிடம் உண்டு.
ஒன்றிணைந்த இனமாக ஒரு அரசியல் அடிப்படையை கட்டியெழுப்பி அதன் மூலம் கொழும்பு அரசாங்கத்தை அரசியல்வாதிகளுக்கு மேற்கூறிய உட்பிளவுகள் பல்வேறு சவால்களை முன்வைத்தது. நளவர்களும் பள்ளர்களும் தமிழர்கள் இல்லை என்று 1970 க்களில் சிலர் கூறியதைப் போன்று சொன்னால் தமிழ்ச் சமூகத்தை எப்படி ஐக்கியப்படுத்துவது? தாழ்த்தப்பட்டோர் நீண்ட காலத்திற்கு முன்னரே நாமும் தமிழரே என்று கூறத்தொடங்கி விட்டார்கள். இது வேளாளர்களுக்கு ஒரு அபாய அறிவிப்பாக அமைய அவர்களின் தற்காப்பு எதிர்வினையைத் இது தூண்டியது. கென்னத்டேவிட் குறிப்பிட்டுள்ளது போன்று யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளர் தாம் எவ்வாறு தோன்றினோம் என ஒரு கதையை கூறுகிறார்கள். அதில் வேளாளர்களான அண்ணன் இறந்துபோக அவனது விதவை மனைவி சொத்துக்கள் யாவற்றையும் அபகரித்துக் கொண்டு தம்பியைத் துரத்திவிட்டாள். அவ்வாறு துரத்தப்பட்ட தம்பி காணிகள் இல்லாத அடிமையாகினான். அவனது சந்ததியினரே பள்ளராயினர். (டேவிட் 1976: 189-90). இதனால் தாழ்த்தப்பட்டோரின் தமிழ்ச்சமூகத்தின் அங்கத்துவ கோரிக்கையானது வேளாளரின் நிலை அந்தஸ்திற்கு உரிமை கோருவது ஆனது. ஆகையால் வேளாளர் தாழ்த்தப்பட்டோரின் இயக்கங்களைத் தீவிரமாக எதிர்த்தனர்.
குறிப்பு : ‘The Political Construction of Defensive Nationalism: The 1968 Temple-Entry Crisis in Northern Sri Lanka’ என்ற தலைப்பில் 1990 ஆம் ஆண்டு The Journal of Asian Studies, 49(1): 78-96 என்னும் இதழில் பிறையன் பவ்வன்பேர்ஜர் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம்.
தொடரும்.