தமிழ் பௌத்த மரபுரிமையை உரிமை கோரல்
Arts
8 நிமிட வாசிப்பு

தமிழ் பௌத்த மரபுரிமையை உரிமை கோரல்

May 6, 2022 | Ezhuna

மரபுரிமைகள் பற்றிய அக்கறை நம் சமூகத்தில் அருகிக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில், அத்தகைய அரும்பொருள்களைப் பற்றிய பிரக்ஞையையும், அறிமுகத்தையும், அவற்றைக் காப்பதற்கான அருட்டுணர்வையும் ‘மரபுரிமைகளைப் பறைதல்’ என்ற இந்தக் கட்டுரைத்தொடர் உண்டாக்க விழைகின்றது. வெறுமனே மரபுரிமைப் பொருட்களை அடையாளப்படுத்துவதோடு நின்றுவிடாமல், அகழ்வாய்வுகளின் தன்மைகள், மரபுரிமை பற்றிய மாற்றுச் சிந்தனைகள், புதிய நோக்குகள், மரபுரிமைச் சின்னங்களை சுற்றுலாத் தலங்களாக மாற்றுவதற்கான சாத்தியங்கள் , அவற்றின் தொடர் பேணுகையும் அதற்கான வழிமுறைகளும், சமயங்களுக்கும் மரபுரிமைகளுக்கும் இடையிலான ஊடாட்டங்கள் என்று பரந்து பட்ட நோக்கில் இந்தக் கட்டுரைத்தொடர் மரபுரிமைசார் விடயங்களை வெளிப்படுத்தும். கள ஆய்வினையே பிரதான ஆய்வுமூலமாகக் கொண்ட இந்தக் கட்டுரைத்தொடரில், நூல்களில் இடம்பெற்றுள்ள மரபுரிமைசார் விடயங்கள், செவிவழிக்கதைகள், மக்களுடனான உரையாடல்கள், நம்பிக்கைகள், ஐதீகங்கள், ஊடகச் செய்திகள் மற்றும் கட்டுரைகள் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு, விஞ்ஞானபூர்வமான நோக்குநிலையில் இந்தக் கட்டுரைத்தொடர் அமைகின்றது.

தமிழர்கள் மதப்பன்மை அடையாளம் உடையோர். சைவ – வைணவ மதங்கள் உட்பட ஏராளமான தாய் தெய்வங்கள் – இயற்கைச் சக்திகள்  முதல் ஆசிவகம், சமணம், பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம், சித்தர் மரபுகள், சூபிசம் வள்ளலார் மரபு, உலகாயதம் போன்றவற்றையும் அனுட்டிப்பதுடன், கடவுள் மறுப்பு வரை அவர்கள் பல்வகை அடையாளம் கொண்டவர்கள். இவையே அவர்களது தனித்துவமும்  சிறப்படையாளமுமாகும். அவ்வகையில் இலங்கைத் தீவில் சிங்கள பௌத்தம் போல தமிழ் பௌத்தமும் ஒரு வரலாற்று யதார்த்தமாகும். இது பற்றி தமிழர்கள், சிங்களவர்கள் உட்பட மேற்கு நாட்டவர்கள் எனப் பலரும் பல காலமாக எழுதியும் – விவாதித்தும் வந்துள்ளனர். எனினும்,  இலங்கையின் சிங்கள பௌத்த தேச நிர்மாண எடுத்துரைப்பைக் கேள்விக்குள்ளாக்கும் வலுவானதொரு வரலாற்று யதார்த்தமாகத் தமிழ் பௌத்தம் அமைகிறது.  அதனைத் தடய அழிப்புச் செய்தல் அல்லது குறைந்தபட்சம் விளிம்பு நிலைப்படுத்தல் எனும் தந்திரோபாயங்களூடாக முற்றாக மழுங்கடித்தல் என்பது இலங்கையின் அதிகாரபூர்வ வரலாற்று எழுத்துப் பாரம்பரியத்தில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நியமங்களுள் ஒன்றாகும். இத்தகைய பின்னணியில் இவ்விடயம் குறித்து 2006இல் பேராசிரியர் சுனில் ஆரியரத்தின எழுதி, கொடகே நிறுவனம் வெளியிட்ட ‘தெமள பௌத்தய’, ‘தமிழ்ப் பௌத்தர்’  என்ற நூல் முக்கியமானது.  அது தமிழக பௌத்தம் முதல் இலங்கைத் தீவு ஈறான தமிழ் பௌத்தப் பரம்பல் பற்றிப் பேசுகிறது.

அண்மைக் காலங்களில் இலங்கையில்  எழுதப்பட்டவற்றுள்Tamil Buddhism in Sri Lanka என்ற ஜி. பி. வி. சோமரட்ண எழுதிய கட்டுரையும் முக்கியமானது. அது தவிர பேராசிரியர்கள் ஆ.வேலுப்பிள்ளை, பீற்றர் ஷேக் ஆகியோரால் சுவீடன் உப்சலா பல்கலைக்கழகத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட பல கட்டுரைகள் மற்றும் நூல்கள் என்பன இவ்விடயம் தொடர்பில் முக்கியமானவை. இவை யாவற்றுக்கும் முன்னோடியாக இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே தமிழ் பௌத்தம் தொடர்பான புலமை ரீதியான பல ஆய்வுகளும் – நூல்களும் வெளிவரத் தொடங்கி இருந்தன. கலாநிதி பொ. இரகுபதி Buddhism in Yalppanam’ எனும் தலைப்பில் இலங்கையிற் தமிழ் பௌத்தத்தை முன்னிறுத்தி ஒரு கட்டுரையை 1990களில் ‘லங்கா’ ஆய்விதழில் எழுதியுள்ளார். அவரது ‘Early settlements in Jaffna’ (1987) என்ற யாழ்ப்பாண அகழ்வாய்வியல் பற்றிய முன்னோடி நூலும் அது பற்றிய அடிப்படைகளை எடுத்துக் காட்டியுள்ளது. மேலும் இவ்விடயத்தின் வேறுபட்ட பரிமாணங்கள் பற்றி தமிழகத்தை முன்னிலைப்படுத்தும் குறிப்பிடத்தக்க நூல்களும் – ஆய்வுகளும் இன்றுவரை வெளிவந்தவண்ணம்  உள்ளன.  சென்னையை மையமாகக் கொண்ட ‘ஆசியக் கற்கைகளுக்கான நிறுவனம்’, ‘சென்னை அரும்பொருளகம்’ முதலான நிறுவனங்கள்  தமிழ் பௌத்தம் பற்றிக் குறிப்பிடத்தக்க பல நூல்களைக் கடந்த சில தசாப்தங்களாகத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.

புத்தசாமி – தியாகனூர்

இந்தியப் பெருநிலத்துக்கும் இலங்கைக்கும் – குறிப்பாக இலங்கையின் வடபகுதிக்கும் இடையிலான புவியியல் நெருக்கம் பற்றி கலாநிதி கா. இந்திரபாலா குறிப்பிடும்போது, ‘இலங்கைக்கும் – இந்தியாவுக்கும் இடைப்பட்ட கடலான பாக்குநீரிணைப் பிராந்தியம் என்பது நிலங்களைப் பிரிக்கும் கடலாகவன்றி எப்போதும் நிலங்களை இணைக்கும் ஒரு கடலாகவே தொழிற்பட்டிருக்கிறது’ என்கிறார். அக்காலத்து இலங்கையின் பெருமளவு கடற் பெருந்துறைகள் வடபுலத்தில் அமைந்தமை, கடற் போக்குவரத்துப் வலைப்பின்னலில் வடபுலம் பெற்ற முதன்மை என்பனவற்றின்  பின்னணியில் இலங்கைக்குள் வெளியார் உள்நுழைவதற்கான அகலப் பெருவாயிலாக வடபுலமே முதன்மை பெற்றிருந்தது. தமிழின் முதற்காவியங்களுள் ஒன்றான மணிமேகலையில், ‘அதன் தலைமைக் கதாபாத்திரமும் பௌத்த பிக்குணியுமான மணிமேகலை மணிபல்லவம் என்று அப்போது அழைக்கப்பட்டு  யாழ்ப்பாணத்திற்கு ஆகாய மார்க்கமாக விஜயம் செய்தாள்’ என்று கூறப்படுகிறது. இங்கு குறிப்பிடப்படும் ‘ஆகாய மார்க்கம்’ என்பதை உருவகமாகக் கொள்ள வேண்டும் ஏனெனில், அதற்குக் காரணம் அக்காலத்துச் சமூக வழக்காறுகள் என மயிலை சீனி வேங்கடசாமி கருதுகிறார். அவ்வகையில் இலங்கைத் தீவினுள் நடந்த அனைத்துப் பௌத்த நுழைவுகளும் வடபுலத் துறைமுகம் ஒன்றினூடாகவே அதிகபட்சம் நடைபெற்று இருக்கும் எனக் கொள்வதிற் தவறேதுமில்லை.  இந்த அடிப்படையில் வெள்ளரசக் கிளையின் இலங்கைத் தீவுக்கான வருகை என்பது அப்படிப்பட்ட புரிதல் ஒன்றுக்கான பொருத்தமான உதாரணமாகும். அவ்வாறான ஒரு புவியியல் வரலாற்று யதார்த்தத்தின் பின்னணியில் வடபகுதி பௌத்தமயப்படாது, பௌத்தத்தை அவ்வாறே – நேரடியாகப் ‘பொதி செய்து’ அநுராதபுரத்திற்கு அனுப்பியது என்றவாறான வரலாற்று எழுத்து எவ்வளவு தூரத்திற்குத் தர்க்க வலுவுடையதாக இருக்க முடியும்?  என்பது அடிப்படையானதொரு கேள்வியாகும்.  அதுமட்டுமின்றி, அவ்விதம் யோசிக்கும்போது இலங்கைத் தீவின் வடகரையிலிருந்து அனுராபுரம் வரை பௌத்த (தமிழ்) வரலாற்றின் தவற விடப்பட்ட பக்கங்கள் உண்டெனவே எண்ணத் தோன்றுகிறது. நாம் இன்று அரசியல் அச்சத்தின் விளைவாக வடபுலத்துப் பௌத்தம் தொடர்பான தடயங்கள் – குறிப்பாக வாய்மொழி வரலாறுகளை மறைக்க முற்படுகின்றோம். வலிகாமப் பகுதிகளில் இன்றும் வழங்கும் வாய்மொழிக் கதைகளைத்  தொகுத்துப் பார்த்தால் தமிழ்ப் பகுதிகளின் பௌத்தப் பரம்பலது ஆதித் தடங்களைப் பின்தொடர்வதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.

பக்தி இயக்கத்தின் எழுச்சியும் – அதன் தமிழ் மொழிநிலைப்பட்ட தன்மையும் தமிழகத்தில் ஒரு பௌத்த – சமண மத நீக்கத்தை உருவாக்கியது. இது மதப் பண்பாட்டு அரசியலின் மோதற் களத்தை உற்பத்தி செய்து, பௌத்த – சமண மதங்களைப் பின்தள்ளியதோ அதேவகையான ஒரு நிலைமாற்றம் இலங்கைத் தீவின் தமிழ் மொழிபேசும் பிராந்தியங்களிலும் நடைபெற்றது. சைவ சமய குரவரான திருஞானசம்பந்தர் தமிழகக் கரையிலிருந்து இலங்கைத் தீவிலுள்ள கோயில்களை நோக்கிப் பாடுதல் என்பது ஒரு அகன்ற சைவத் தென்னகத்தை கட்டியெழுப்பும் அடிப்படை உடையது எனக் கண்டிப்பாக வாதிட முடியும். அது பௌத்தத்திலிருந்து முழுமையாகத் தமிழர்களை இடம்மாற்றி இருக்கலாம். இத்தகைய வரலாற்று நிலைமாற்றமும் ‘சிங்கள – பௌத்த’ ‘சைவத் தமிழ்’ என்ற மொழி – மதக் கூட்டு அடையாளம் ஒன்று உற்பத்தியாவதற்கான காரணங்களைக் கட்டமைத்த வரலாற்று நிலவரமாக அமைந்துள்ளது.

அதேநேரம், கிடைக்கப்பெற்ற சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, வடக்கு- கிழக்குப் பிராந்தியங்களுக்கு அப்பால் தமிழ் பௌத்த மையங்களும் பௌத்தத்துக்கான தமிழ் வணிகங்களின் பொதுப்படையான போசிப்புக்களும் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. அதனாலேயே லெஸ்லி குணவர்த்தனா ‘திராவிட பிக்கு என்பவர், புராதன இலங்கையில் நன்கு அறியப்பட்ட ஒரு நபரே’ எனக் கூறுகிறார். அதேநேரம் இலங்கையின் பௌத்த வரலாற்று மூலங்களுள் ஒன்றாகக் கருதப்படும் சூளவம்சம் தமிழ்பேசும் பிக்குகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளதையும் அவதானிக்க வேண்டும். திருகோணமலையிலுள்ள ‘இராஜராஜப் பெரும்பள்ளி’ (வெல்கம் விஹார) மட்டுமல்ல, பொலநறுவையிலுள்ள ‘தெமள மஹாசாயா’ வரை சரியான வரலாற்றின் தடயங்கள் வழி நகர்ந்தால் வரலாற்றில் மறைக்கப்பட்ட செய்திகளை வரலாற்றாசிரியர்களால் வெளிக்கொணர முடியும்.

கந்தரோடை – யாழ்ப்பாணம்

தென்னிலங்கையிலுள்ள பிரதான பௌத்த மையங்களில் தமிழ்நாட்டில் இருந்து வந்த பல துறவிகள் தலைமைக் குருக்களாக ஆசாரியர்களாகத் தொழிற்பட்டமை பற்றிய ஆதாரங்கள்  பல நூல்களிலும் கல்வெட்டுக்களிலும் பதியப்பட்டுள்ளன. சோழநாட்டில் இருந்து வந்த புத்த தத்தர் (கி.பி 5) காவேரிப் பட்டினம், காஞ்சிபுரம் ஆகிய பௌத்த மடங்களில் மட்டுமின்றி, அனுராதபுரத்திலிருந்த விகாரையிலும் சேவையாற்றியுள்ளார். இன்றைய தமிழகத்தின் திருநெல்வேலிப் பகுதியிலிருந்து கி.பி ஆறாம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்த தம்மபால அனுராதபுர மகாவிகாரையின் தலைமைக் குருவாக இருந்துள்ளார். ‘சோழியத் தேரர்கள்’ எனப் பொதுவாக அழைக்கப்பட்ட டிபன்ஹர, புத்தமித்திர மஹாகாசியப (கி.பி 11-12கள்) பாண்டிய நாட்டிலிருந்து புறப்பட்டு வந்தவரும்,  பௌத்த உலகில் புகழ்பெற்றவருமான தர்மகீர்த்தி, மதுரையிலிருந்து வந்த வஜ்ஜிரயான பௌத்தப் பிரிவைச் சேர்ந்த வஜ்ஜிரபோதி (கி.பி 6-7கள்) என எண்ணற்ற தமிழ்ப் பிக்குகள் தென்னிலங்கையின்  இன்றைய மாபெரும் ‘சிங்கள பௌத்த மையங்கள்’ என  அழைக்கப்பட்டு செயற்பட்டு வந்துள்ளனர். அதேநேரம் இலங்கைத் தீவில் தேரவாத – மஹாயான பௌத்த சமயப் பிரிவுகளுக்கிடையிலான மோதலில் முக்கிய பங்காற்றியதாகக் கருதப்படும் சங்கமித்தை கூட கி.பி நான்காம் நூற்றாண்டில் சோழநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தவராகவே கூறப்படுகிறார். இவ்வகைப்பட்ட வருகைகள் மட்டுமின்றி, பல்வேறுபட்ட தமிழ் பௌத்த பண்பாட்டுக் கலப்புகளையும் இலங்கைத் தீவில் கவனிக்க முடியும். உதாரணமாக, தமிழ் (பௌத்த) இலக்கண நூலான வீரசோழியம் சிங்களத்தில் பாவனையில் இருப்பதனை அவதானிக்கலாம்.

தமது தமிழ் பௌத்த கடந்த காலத்தை ஏற்கவும் – பிரகடனப்படுத்தவும் – அதனைப் புலமைரீதியாக நிரூபணம் செய்யவும் தமிழ்த் தரப்பு முன்வர வேண்டும். அதனை வெளிப்படுத்துவதால் வரக்கூடிய சிங்கள பௌத்த மேலாண்மையின் அனைத்துப் பொறிமுறைகளையும் சந்திக்கக் கூடிய புலமை மற்றும் அரசியற் செயற்பாடுச் சார்ந்த தயார்நிலையை தமிழர் தரப்பு அடைய வேண்டும். இல்லாவிட்டால் சிங்கள பௌத்தப் பெருங்கதையாடலுள் தமிழ் பௌத்த கடந்த காலம் – அதன் மரபுரிமைகள் கரைக்கப்பட்டு முழு இலங்கையும் சிங்கள பௌத்த மயமாக்கப்படும். அது தமிழ் பௌத்த கடந்த காலத்தை மட்டுமின்றி, தமிழ் சைவ, தமிழ் இஸ்லாமிய, தமிழ் கிறிஸ்தவ இருப்பு உட்பட அனைத்தையும் விரைவாக விழுங்கி ஏப்பம் விடும். இந்த வரலாற்று விளக்கத்தை அடைவதனூடாகவே  இன்று கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் பௌத்தத்தின் பெயரிலான தமிழர்களது மரபுரீதியான வாழிடப் பகுதிகளைக் கைப்பற்றும் செயற்பாடுகளுக்கான அறிவுபூர்வமான எதிர்வினை ஆற்றலைக் கட்டி எழுப்பலாம். இந்தத் தமிழ் பௌத்த கடந்த காலத்தை உரிமை கோரல் என்பது தமிழ் மரபுரிமைக் களத்தை மேலும் செழுமைப்படுத்துவதுடன், இலங்கைத் தீவில் பௌத்தத்தின் பெயரால் கட்டப்பட்டிருக்கும் ‘சிங்கள பௌத்த தேசம்’ என்ற பெருங்கதையாடலைக் குழப்பும் செயற்பாடாகவும்  அமையும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

9737 பார்வைகள்

About the Author

பாக்கியநாதன் அகிலன்

பாக்கியநாதன் அகிலன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தினையும் (கலை வரலாறு), பரோடா மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் (கலை விமர்சனம்) பட்டத்தினையும் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் முதுநிலை விரிவுரையாளாகப் பணிபுரியும் அகிலன் தனது கலாநிதிப்பட்ட ஆய்வை புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டுவருகின்றார்.

'பதுங்குகுழி நாட்கள்', 'சரமகவிகள்', 'அம்மை', 'எங்கள் மண்ணும் இந்த நாட்களும்' என்பன இவரது கவிதைத் தொகுப்புகளாகும்.

இவரின் ஏனைய நூல்களாகக் 'காலத்தின் விளிம்பு' என்ற மரபுரிமை சார்ந்த நூலும் 'குழந்தை ம. சண்முகலிங்கத்தின் நாடகங்கள் ஐந்து' ஆகியவை அமைவதுடன் 'வெங்கட்சாமிநாதன் – வாதங்களும், விவாதங்களும்' என்ற நூலின் தொகுப்பாசிரியர்களுள் ஒருவராகவும் உள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)