யாழ்ப்பாணமும் சாதிப்பழமை வாதமும் - பகுதி 3
Arts
10 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணமும் சாதிப்பழமை வாதமும் – பகுதி 3

May 7, 2022 | Ezhuna

‘யாழ்ப்பாணத்துச் சாதியம் – ஆய்வுகள்’ என்ற இத்தொடர் யாழ்ப்பாணத்தில் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதியக் கட்டமைப்பின் இருப்பியலையும், சாதிமுறையின் இறுக்கமான பின்பற்றுகைகளையும்  பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளை மொழி பெயர்த்து வழங்குவதாக அமைகின்றது. இதன்படி, பட்டறிவுசார் அனுபவப்பதிவுகள், அரசியல் மேடைப்பேச்சுகளின் உணர்ச்சி வெளிப்பாடுகள் போன்றவற்றுக்கு அழுத்தம் கொடுக்காத புறநிலைத் தன்மையுடைய நேரிய பகுப்பாய்வு தன்மைகளாக அமையும் ஆய்வுக்கட்டுரைகளின் ஊடாக யாழ்ப்பாணத்தின் சமூக கட்டமைப்பு, சாதியும் வர்க்கமும் சமயமும், சமய சடங்குகளும் சாதியமும், குடும்பம் திருமணம் ஆகிய சமூக நிறுவனங்களும் சாதியமும் ஆகியன இந்தத் தொடரில் வரலாற்று நோக்கில் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. சாதியத்துக்கு எதிரான மக்கள் எழுச்சிகள், கிளர்ச்சிகள் போராட்டங்கள் என்பவற்றை வரலாற்று நோக்கில் விபரிப்பதாகவும் இந்தத்தொடர் அமைகிறது.

மொழிபெயர்ப்புக் கட்டுரை : பிறையன் பவ்வன்பேர்ஜர்

தோட்டப் பொருளாதாரத்தில் ஆரம்பிக்கப்பட்ட அடக்குமுறையானது தொடர்ந்து சடங்கியல் இழிவுப்படுத்தல் மூலம் நகர்த்தப்பட்டது . இதன்மூலம்  அந்தஸ்துநிலை வேளாளர்களையும், தாழ்த்தப்பட்டோரையும் பிரிக்கும் எல்லைக்கோடுகள், வெளித்தலையீடுகளால் தாக்கப்படும் நிலையில் இருந்தன. இந்தவிடயம் விக்டோரியா காலத்தில் (19 ஆம் நூற்றாண்டில்) வேளாளருக்கு உணர்த்தப்பட்டது. தாராளவாதக்கொள்கை கொண்ட பிரித்தானிய அதிகாரிகள் ஒரு மனதோடு பழமைவாத சாதிக்கட்டுப்பாட்டு  அடிமைத்தனத்தில் இருந்து தமது காலனித்துவ குடிகளை விடுவிக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அவர்களால் கொண்டுவரப்பட்ட அடிமை ஒழிப்பும், தீண்டத்தகாதவர்களுக்கு விடுதலை வழங்கப்பட்டதும்,  அடிமைத்தனத்தை சட்டரீதியாக அங்கீகரிக்காது விட்டதும், சாதியால் தாழ்த்தப்பட்டிருந்தோர் இயக்கம் வலிமை பெறக் காரணமாயிற்று. தீண்டத்தகாதவர் முன்னேற்ற இயக்கம் எழுச்சிப்பெற்றது. இது பற்றி 19 ஆம் நூற்றாண்டில் உதவி அரசாங்க அதிபர்  ஒருவர் எழுதிய குறிப்பு வருமாறு. (மூலப்பிரதியில் இவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை)

யாழ்ப்பாணத்தின் சுதேசிகள், சமூகத்தில் பெருமாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டிருந்தனர்.  இதனை இச்சமூகத்தின் பழமைபேண் பிரிவினர் மிகத்தீவிரமாக எதிர்க்கின்றனர். ‘தாழ்ந்த சாதியினர்’ என்று கூறப்படுவோர் முன்னரை விடப் பணக்காரர்கள் ஆகின்றனர். சொத்துக்களை உடைமை கொண்டுள்ள இவர்கள் தமக்கு தடைச்செய்யப்பட்ட பழைய வழக்கங்களான ஆபரணங்களை அணிதல், வண்டிகளில் பயணம் செய்தல், விவாகச் சடங்கின் போதும் பிற வைபவங்களின் போதும் மேளவாத்தியத்தை முழக்குதல் என்பவற்றை பின்பற்றுவதில் இருந்து விலகவெளிக்கிட்டனர். இப்படியே சென்றால் தாழ்ந்த சாதியினர் அடுத்தபடியாக ஆபரணங்களை அணிந்து கொண்டு வேளாளர் வழமைகளை தாமும் கடைப்பிடிப்பர் என்பது வேளாளர்க்கு நன்கு தெரியும்.

1900களுக்கு முற்பட்ட காலனித்துவ அனுபவம், வேளாளர் மற்றும் சிறுபான்மைத் தமிழருக்குமிடையில் ஸ்திரமற்ற, சச்சரவான உறவுநிலையை உருவாக்கியது. பழைய உறவுமுறைகளை வெளிப்படையான அடக்குமுறையாலும், அரச ஆதரவாலும், சடங்கியல் நிலை இழிவுப்படுத்தலாலுமே தொடர  முடியும் என்ற எண்ணத்தில்  அந்த உறவுமுறை இருந்தது. வேளாளர் சிறுபான்மைத் தமிழர் உறவு முறையில் நிலவிய நிச்சயமின்மையும், உறுதியின்மையும் 20 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட  சமூக மாற்றங்களால் மேலும் மேலும் அதிகரித்தது.

புகையிலை உற்பத்தி

20 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சமூகமாற்றங்களினால் பிரதேச ஆதிக்கத்தை உறுதிப்படுத்த வேளாளருக்கு கல்வி, உத்தியோகம் எனும் இரண்டு புது விடயங்கள் உபாயமாக கிடைத்தன. 19 ஆம் நூற்றாண்டின் முடிவில் விவசாயத்தை நம்பி எதிர்கால வாழ்க்கையை உறுதியான தளத்தில் அமைக்க முடியாது என்பது தெளிவாயிற்று. குறிப்பாகப் விலை ஏற்ற இறக்கங்களாலும், அரசியல் மாற்றங்களாலும் புகையிலை வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இந்த மாற்றங்கள் மீது  யாழ்ப்பாணத்து விவசாயிகளும், தரகர்களும் எந்த கட்டுப்பாடும்  செய்யமுடியாது இருந்தனர். புகையிலை வர்த்தகம் பிற நாட்டு உற்பத்திகளோடு போட்டியிட முடியாத அளவிற்கு ஏற்றுமதி வரிகளும் உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதிக்கும் நிலையிலேயே இருந்தது.   பிரித்தானியர் ஆட்சியில் புகையிலை ஏற்றுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டது. 1820 இல் 3.5 மில்லியன் பவுண்களாக இருந்த ஏற்றுமதி 1830 இல் 750,000 பவுண்களாகக் குறைந்தது. (அரசரத்தினம் 1982:34) பிரித்தானியர் ஆட்சியில் தாராண்மைக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டதால் மீண்டும் புகையிலை ஏற்றுமதி அதிகரித்தது. 1880 – 90 இல் 10,244,752 பவுண்கள் பெறுமதியான புகையிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் பின்னர் சந்தையில் நிரம்பல் அதிகரித்ததால் விலைகள் சடுதியாக வீழ்ச்சியடைந்தன. 1902 இல் ஏற்றுமதி 3,870,000 பவுண்களாக வீழ்ச்சியடைந்தது. காற்று எப்பக்கம் வீசுகிறது என்பதைப் புரிந்துக்கொண்ட வேளாளர்கள் விவசாயத்தோடு  ஆங்கிலக் கல்விக்கும் முதன்மை அளித்தனர். பிரித்தானிய ஆட்சியில் யாழ்ப்பாணத்தவர்கள் கணிதம், பொறியியல், மருத்துவம் ஆகிய கல்வித்துறைகளில் சிறந்து விளங்கினர். பொதுச் சேவைப் பதவிகளைப் பெற்றனர். 1921 ஆம் ஆண்டில் 10,185 தமிழர்கள் பொது நிர்வாகத் துறையில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். பின்னாளில் பொதுத்துறைகளிலும், உயர் தொழில்களிலும் தமிழர் தம்சனத்தொகை விகிதாசாரத்தை விட மேன்மிகையாக இடம் பிடித்துக் கொண்டதாக சிங்களவர் கருத இடமளித்தது. ஒரு காலத்தில் மலாயாவில் ஒவ்வொரு புகையிரத நிலையத்திலும் எவரோவொரு யாழ்ப்பாணத்தவர் தான் நிலைய அதிபராக இருந்தார் என்ற அளவுக்கு யாழ்ப்பாணத்தவர் உத்தியோகங்களில் முன்னேறினர்.

உத்தியோகம் தேடி இடம்பெயர்ந்த யாழ்ப்பாணத்தவர்களின் செறிவான குடியிருப்புப் பகுதி கொழும்பு நகரில் உருவானது. இதன் பயனாக இலங்கையில் தமிழர் சனத்தொகையின் 10 வீதத்தினர் கொழும்பில் வாழும் நிலை ஏற்பட்டது. வேளாளர் ஏற்றுமதி விவசாயத்தில் ஆதிக்கம் கொண்டிருந்தனர். 20 ஆம் நூற்றாண்டில் வேளாளரின் ஏற்றுமதி விவசாய ஆதிக்கத்திற்குத் துணையாக கல்வியும், உத்தியோகமும் அமைந்தன. இவையிரண்டும் அவர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு வளம் சேர்த்தன. விவசாய ஏற்றுமதிகள் விலை ஏற்ற இறக்கங்களால் பாதிப்புற்ற போதும், 1970 களில் விவசாயம் யாழ்ப்பாண பொருளாதாரத்தின் ஆதாரமாக இருந்தது.  உத்தியோகங்கள் மூலம் கிடைத்த நிரந்தர வருமானம், ஓய்வூதியம், வெளிநாட்டில் இருந்து கிடைக்கும் பணம் ஆகியனவும் சேர்ந்து யாழ்ப்பாணத்து வேளாளர் விவசாயம் உறுதி நிலையையும், பாதுகாப்புத்தன்மையையும் பெற்றிருந்தது. குடாநாட்டின் பாடசாலைகளில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிள்ளைகள் இரண்டாம் மூன்றாம் ஆண்டுக்கு மேல் படிப்பதற்கு அனுமதிக்காத உபாயத்திட்டத்தோடு சம்பந்தப்பட்டிருந்தது. இந்த உபாயத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சட்ட முரணான செயல்களில் ஈடுபடவும் அவர்கள் தயங்கவில்லை.

யாழ்ப்பாணத்து வேளாளர்கள் ஏற்றுமதிக்கான  விவசாய உற்பத்தியில் இருந்து உத்தியோகங்களை நோக்கிக் கவனம் திருப்பியதால், மரபு வழிப்பட்ட சாதி வழக்கங்களையும் உறவுகளையும் பேணுவதில் அக்கறை கொள்ள மாட்டார்கள் என்று ஒருவர் எதிர்ப்பார்க்கலாம்.  டச்சுக்காரருக்கு பலப்படுத்த உதவிய சாதி முறையை தொடக்கக் காலத்தில் பிரித்தானியர் சகித்துக் கொண்டனர். இப்போக்கு விவசாய ஏற்றுமதி உற்பத்திக்கு உதவியது. கல்வி முன்னேற்றம் ஏற்பட்ட பின்னர் கல்விகற்ற வகுப்பு பழமையான இந்த உறவுகளைக் கைவிடும் என்று ஒருவர் எதிர்பார்க்கலாம். இந்த அர்த்தத்தில் உண்மையில் படித்தவர் என்ற பண்பைக் கொண்ட திறந்த மனமுடையவர்களான  வேளாளர் பலரும்  இருந்தனர், இருக்கிறார்கள் இருந்தப்போதும் பெரும்பாலான படித்த வேளாளர்களிடம் இப்பண்பு இருக்கவில்லை. கொழும்பு, மலாயா (மலேசியா) போன்ற  இடங்களில் வசிப்பவர்களிடம் சாதி மனப்பான்மை இருந்து வந்தது.

1970 க்களில் கூட தம் குடும்பத்தின் சாதி அந்தஸ்து அதன்வழியாக வரும் சலுகைகளைக் கைவிட விருப்பம் இல்லாதவர்களாய் இருந்தனர். நில உடைமை, தாழ்த்தப்பட்ட சாதியினரிடமிருந்து பெறக்கூடிய சாதி பாரம்பரிய சேவைகள் என்பனவே இவர்கள் இழக்கவிரும்பாத சலுகைகளாகும். இந்த மனப்பாங்கு நீடித்தமைக்கு யாழ்ப்பாணத்தின்  வாரிசுரிமையும், சீதன முறைமையும் காரணங்களாக இருந்தன (தம்பையா 1973). இவையிரண்டும் விவசாயம், உத்தியோகம் என்ற இரண்டோடும் பிணைக்கப்பட்டும் இருந்தன. இந்திய முறையுடன் தொடர்புடையதாக அல்லாமல் இலங்கையின் பிறபகுதிகளின் குடும்பமுறையுடன் ஒத்ததாக இருக்கும் யாழ்ப்பாணத்தின் குடும்ப முறையின் விசேட அம்சம் யாதெனில் இங்கு சீதனம் அசையும் சொத்துக்களான ஆபரணம் போன்றவற்றை மட்டும் உள்ளடங்காமல் அசையா  சொத்துக்களான  விவசாயக்காணி, வீடு என்பனவும் இதில் அடங்கின . யாழ்ப்பாணத்தின்  இளைஞர்கள் காணிக்காகவும், வீட்டுக்காகவும் மணம் முடிக்கிறார்களே தவிர பெண்ணிற்காகவன்று, என்றொரு கருத்து உண்டு. ஆதலால் நிறைந்த சொத்துக்களையுடைய பெண் மிகச் சிறந்த கணவனைத் தெரிந்தெடுக்கும் தகுதியுடையவளாகிறாள். சிறந்த கணவன்; ‘நல்லசாதியைச்’ சேர்ந்தவன், ஆங்கிலம் படித்தவன், உயர்ந்த உத்தியோகத்தில் உள்ளவன் என்ற சிறப்புக்கள் உடையவன். யாழ்ப்பாணத்தின் முறையானது இருவேறு உலகங்களான  நவீனத்துவ உலகின் கல்வி, உத்தியோகம்  மற்றும் மரபுலகத்தின் விவசாயம், நில உடைமை என்பவற்றை இணைத்தது. இக்காரணத்தால் உயர்கல்வி கற்றவர்களான இளைஞர்களும் சாதி விடயத்தில் மிகுந்த பழமைவாதிகளாகவே இருந்தனர்.

யாழ்ப்பாணத்தின் சாதி  பழமைவாதம், யாழ்ப்பாணத்தவர்களுக்கு   பெரும் அந்தஸ்துடைய குடும்பத்தில் திருமணம் செய்வதன் மூலம் ஒருவர் அதிகளவான மூலதனத்திற்கு உடைமையாகி பணக்காரராகின்றார்.  இவ்வாறு பணக்காரராவதில் மரபு வழிப்பட்ட சாதி அந்தஸ்து முக்கிய இடம்பெறுவது ‘உண்மை’.  வேளாளர் ( ‘Real’ Vellalar) யார் என்பதைப் பிரித்தறியும் வகையில் சாதித் தூய்மையை பேணிவருபவர்கள் நல்ல சீதனத்துடன் விவாகம் செய்யலாம். யாழ்ப்பாணத்தின் உண்மை வேளாளர்  டச்சுக்காலம் முதலாக தூய மரபுடையவர்கள். அவர்களை ‘போலி’ வேளாளரில் (‘Pseudo’ Vellalar) (யாழ்ப்பாணத்தில் கூறுவது போல் சின்ன வேளாளர்) இருந்து பிரித்து அறியலாம். ‘போலி’ வேளாளர் வெளியில் இருந்து வேளாளருக்குள் நுழைந்தவர்கள். விவாக பந்தத்தில் புகும் மாப்பிள்ளை ‘நல்ல சாதி’ நபர் என்பது அவரின் உண்மையான வேளாளர் மரபுரிமையை குறிக்கும். அதை அவர் உறுதிப்படுத்த டச்சுக்காரர் வழங்கிய கட்டளைகள், உரிமங்கள் அவரின் குடும்பம் அந்தஸ்தில் குறைந்த சாதிகளின் சேவைகளை பரம்பரை பரம்பரையாகப் பெற்று வந்ததற்கான சான்று, சாதிமுறைமை அதன் வழமை மரபுகள் தவறாது பேணி வருவது குறித்த குடும்பம் காட்டிய கரிசனை என்பனவும், சாதி அந்தஸ்துக்கான சான்றுகளாகும். இத்தகுதிகள் ஒருவர் விவசாயக் காணிகளையும், வீட்டையும் சொந்தமாக உடைய இளம் பெண் ஒருத்தியை மணம் முடிக்கும் பாக்கியத்தை வழங்குகின்றன. இவ்வாறு சீதனமாக பெறும் சொத்துக்கள் இங்கிலாந்தின் கிராமப் புறங்களில் இருந்த சொத்துக்களின் பெறுமதிக்கு சமமான பெறுமதியுடையவை. இவ்வாறான சீதன முறையால் நன்றாகப் படித்த இளைஞர்களும் தமது பொருளாதார விருப்பங்களுக்காக மரபுவழி சாதிமுறைகளை பின்பற்றினர்.

குறிப்பு : ‘The Political Construction of Defensive Nationalism: The 1968 Temple-Entry Crisis in Northern Sri Lanka’ என்ற தலைப்பில் 1990 ஆம் ஆண்டு The Journal of Asian Studies, 49(1): 78-96 என்னும் இதழில் பிறையன் பவ்வன்பேர்ஜர் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

6097 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)