பொருளாதார மாற்றங்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் - பகுதி 4
Arts
10 நிமிட வாசிப்பு

பொருளாதார மாற்றங்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் – பகுதி 4

May 10, 2022 | Ezhuna

‘யாழ்ப்பாணத்துச் சாதியம் – ஆய்வுகள்’ என்ற இத்தொடர் யாழ்ப்பாணத்தில் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதியக் கட்டமைப்பின் இருப்பியலையும், சாதிமுறையின் இறுக்கமான பின்பற்றுகைகளையும்  பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளை மொழி பெயர்த்து வழங்குவதாக அமைகின்றது. இதன்படி, பட்டறிவுசார் அனுபவப்பதிவுகள், அரசியல் மேடைப்பேச்சுகளின் உணர்ச்சி வெளிப்பாடுகள் போன்றவற்றுக்கு அழுத்தம் கொடுக்காத புறநிலைத் தன்மையுடைய நேரிய பகுப்பாய்வு தன்மைகளாக அமையும் ஆய்வுக்கட்டுரைகளின் ஊடாக யாழ்ப்பாணத்தின் சமூக கட்டமைப்பு, சாதியும் வர்க்கமும் சமயமும், சமய சடங்குகளும் சாதியமும், குடும்பம் திருமணம் ஆகிய சமூக நிறுவனங்களும் சாதியமும் ஆகியன இந்தத் தொடரில் வரலாற்று நோக்கில் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. சாதியத்துக்கு எதிரான மக்கள் எழுச்சிகள், கிளர்ச்சிகள் போராட்டங்கள் என்பவற்றை வரலாற்று நோக்கில் விபரிப்பதாகவும் இந்தத்தொடர் அமைகிறது.


மொழிபெயர்ப்புக் கட்டுரை : பிறையன் பவ்வன்பேர்ஜர்

 

இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வேளாளர்கள், தாழ்த்தப்பட்ட தமிழரை சாதி அந்தஸ்தில் குறைந்தவர்கள் என்ற  நிலையில் இருந்து உயரவிடாது தடுத்தமைக்கு இரு காரணங்கள் இருந்தன. முதலாவது காரணம் மலிவான கூலி தடையின்றித் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்ற தேவை. இரண்டாவது வேளாளரின் சாதி அந்தஸ்து தர அடுக்கில் தமது குடும்பத்தின் நிலையைத் தாழ்ந்து போகாது பாதுகாத்தல் (வேளாளர் சாதிக்குள் நூற்றுக்கணக்கான உபசாதிகள் உள்ளன). இப்படி இருந்தபோதிலும் இந்த இரு நோக்கங்களும் முரண்பாடான உபாயங்களைக் கொண்டமைந்ததன. விவசாயத்தில் உயர் இலாபத்தை ஈட்டுவதற்காக தாழ்த்தப்பட்டோருக்குக் கொடுக்கும் கூலியின் அளவை வேளாளர் குறைக்கத் தொடங்கினர். தமது இலாபத்தை உயர்த்த ஒரே ஒரு வழி தாழ்த்தப்பட்டோருக்கு உணவளித்துப் பராமரிப்பதற்குப் பதில் விவசாயத்திற்கு உதவாத எல்லை நிலங்களில் அவர்களைத் குடியிருத்தி கூலி உழைப்பு, வேறு இடங்களில் வேலைச் செய்து பிழைத்தல் போன்ற  வழிகளில் தாமே தமது சீவியத்திற்கு வழி தேட வைத்தல்தான் என்பதை உணர்ந்தனர். 1960 களில் இவ்விதமான தாழ்த்தப்பட்டோருக்கு என  குடியிருப்புக்கள் உருவாகியிருந்தன. கிராம விஸ்தரிப்பு திட்டம் மூலம் அரச காணிகளில் பெரும்பகுதி தாழ்த்தப்பட்டோருக்கு கொடுக்கப்பட்டது. ஆயினும் மரபுவழி முறையில் தமக்கென தாழ்த்தப்பட்ட மக்களை வேலையாட்களாக வைத்திருப்பதனால் கிடைக்கும் மதிப்பு இல்லாமல் போயிற்று. பழைய முறையில் உயர்சாதி ஆள் ஒருவர் தனது வேலையாட்களை ‘தந்தை ஒருவர் தன்மகன்மாரை கவனிப்பதுபோல்’ நடத்த வேண்டிய தேவை இருந்தது.

Untouchables,  were at the bottom of the caste system

1960 களில் இருந்த நிலையை உற்றுநோக்கும் போது மேற்கூறிய முரண்பாடு பின்வரும் முறையில் தீர்க்கப்பட்டிருந்தது. ஒரு வேளாளர் குடும்பம் தனக்கு வேண்டிய சேவைக்கடமைகளைச் செய்விப்பதற்காக  சில தாழ்த்தப்பட்ட குடும்பங்களை மட்டும் வைத்துக் கொள்ளும். ஏனைய தாழ்த்தப்பட்ட குடும்பங்களோடு குறித்த உயர்சாதி வேளாளர் குடும்பத்திற்கு உள்ள  உறவு பொருளாதார அடிப்படையானதாக மட்டும் இருக்கும்.  ஹோம்ஸ் குறிப்பிடுவது போல் (1980:208:9) அரிசியின் விலை உயர்வு வேளாளரை இம் முடிவுக்கு வரத் தூண்டியிருக்கலாம். 1970 களில் நெல்லின் விலை இரண்டு மூன்று மடங்காக உயர்ந்தது. பழைய முறைப்படி கூலியைப் பண்டமாகக் கொடுப்பது என்பது அதன் பண சரிசமத்தினை விட பெறுமதிமிக்கது என நில உடைமையாளர் உணர்ந்தனர். நில உடைமையாளரான வேளாளர் தமக்கு உள்ள அதிகாரத்தை உபயோகித்து ஒப்பந்தத்தின் விதி முறைகளை மாற்றி கூலியாட்களுக்கு நாள் கூலிக்குப் பதிலாக அரிசியினை வழங்க ஒரு தலைப்பட்சமாகக் தீர்மானித்தனர்.  சாதிகளிற்கிடையிலான இந்த உறவு முறையில் ஏற்பட்ட மாற்றத்தையிட்டு தாழ்த்தப்பட்டோர், எதிர்ப்புத் தெரிவிக்க  வழியில்லாது மௌனமாயினர். வேலையாள் இது பற்றி எதிர்ப்புத் தெரிவித்தால் அவரது வேலை தமக்குத் தேவையில்லை எனத் திருப்பி அனுப்பப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது (ஹோம்ஸ் 1980:209).

மேலதிகமான எண்ணிக்கையில் உள்ள தாழ்த்தப்பட்டவர்களை தங்கள் சீவனத்தை தாமே தேடிக்கொள்ள வேண்டும் என வேளாளர் அனுமதித்த காரணத்தால் கிராமப் புறங்களில் லும்பன் பாட்டாளிகள் தோன்றினர். இவர்கள் வேளாளர் ஆதிக்கத்திற்கு சவால் விடுத்தனர். 1950 களில் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களுள் இரண்டு முக்கியமானவை. முதலாவது மாற்றம்,  சந்தைப் பொருளாதாரம் விரிவாக்கம் பெற்றது. இரண்டாவது,  சேவைத் தொழில்கள் விரிவாக்கம் பெற்றன. உதாரணமாக, மீன் வியாபாரம் போன்ற தொழில்கள் வளர்ச்சியுற்றன. தாழ்த்தப்பட்டோர் சிலர் மீன் வியாபாரத்தில் ஈடுப்பட்டனர். பலர் இவ்வாறான புதுத் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றனர். இத்தொழில்களில் பல வேளாளர் ஆதிக்கத்தில் உள்ள மரபு வழி விவசாயத்தின் எல்லைக்கு வெளியே உள்ள தொழில்களாக இருந்தன.  இவ்வாறான பொருளாதார ஆதாரம் வெளியில் இருந்து கிடைத்ததால் துணிவு பெற்ற தாழ்த்தப்பட்டோர், வேளாளர் விதித்த தாழ்த்தப்பட்ட சாதிக்கான அடையாள சின்னங்கள் மற்றும் ஆலய பிரவேச தடைகள், உடை, ஆபரணங்கள் அணிதல் போன்றவற்றில் இருந்த கட்டுப்பாடுகளை மீறத்தொடங்கினர். ஆலயப் பிரவேசத்திற்குத் தடை என்ற கட்டுப்பாட்டையும் மீறும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இருந்தபோதும், தீண்டத்தகாதவர்கள் ஏதோ ஒரு வகையில் வேளாளருடன் பொருளாதார உறவுகளைக் கொண்டிருந்தனர். இதுவே பிராமணர் உடைமையாக இருந்த மாவிட்டபுரக் கோவிலை தேர்ந்தெடுத்ததற்கு காரணமாகும். வேளாளர் கோவில் ஒன்றைத் தேர்ந்திருந்தால் ஆலயப்பிரவேசத்திற்கு முன்னின்ற குறித்த ஊரின் தாழ்த்தப்பட்டோரை வேளாளர் தண்டிப்பர். ஆயினும் வேளாளர் கொண்டு வரக்கூடிய எந்தவொரு பொருளாதார முறையிலான தடைகளும் கட்டுப்பாடுகளும் பெரும்பான்மையான தாழ்த்தப்பட்டோர் மீது தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏற்கனவே பலவீனமுற்றிருந்த சாதிமுறைமை, தாழ்த்தப்பட்டோர் பெற்றுக்கொண்ட பொருளாதாரச் சுதந்திரம் காரணமாக மேலும் பலவீனமடைந்தது.

யாழ்ப்பாணத்தின் சாதிமுறை தொடர்களில்  சனத்தொகை அதிகரிப்பும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இரண்டாம் உலகயுத்தத்தின் பின்னர் யாழ்ப்பாணத்தின்  சனத்தொகை இன்று இரண்டு மடங்காகக் கூடியதன் காரணமாக நிலத்திற்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணக் குடாநாடு 436 சதுர மைல்கள் பரப்பளவுடையது. யாழ் குடா  இலங்கையிலே மிகவும் கூடிய சன அடர்த்தி உள்ள இடங்களில் ஒன்றாக விளங்கியது. 1966 ஆம் ஆண்டில் விவசாயப் பகுதிகளில் சதுர மைல் ஒன்றிற்கு 3000 பேர் என இருந்தனர் (செல்வநாயம் 1966:172). புதிய நிலங்களை மீட்டு விருத்தி செய்தல் மிகவும் கடினம். கற்களைத் தோண்டி எடுத்து நிலத்தை கிளறி மண்போட்டு நிரப்பி பயிர்ச்செய்கை நிலமாக்கவும், கிணறுகளைத் தோண்டவும் பெரும் முதலீடு தேவை. நிலத்திற்கான தட்டுப்பாடு காரணமாக காணிகளின் விலை நியாயமான அளவை விட மிகவும் உயர்ந்து விட்டது. 1952 – 54 காலத்தில் யாழ்ப்பாணத்தில் விவசாய நிலத்தின் பெறுமதி இங்கிலாந்தில் உள்ள  விலையை விடக் கூடுதலாக  இருந்தது (பாங்ஸ் 1957:28). சனத்தொகை உயர்வும், சீதன முறையும், சொத்து வாரிசு முறையும், காணிகள் சிறு சிறு துண்டங்களாகிப் போவதற்குக் காரணமாக அமைந்ததுடன்,  இதனால் நிலமில்லாத பிரச்சினை வேளாளர்களிடமும் அதிகரித்துள்ளது (செல்வநாயகம் 1966:175:76). இவற்றின் பயனாக சராசரியாக ஒரு குடும்பம் விவசாயத் தேவைகளிற்காகக் கூலியைப் பிடிக்கும் அளவு குறைந்துள்ளது. முன்னரைவிடச் சிறிய துண்டுக் காணியாதலால் குடும்ப உறுப்பினர்களின் உழைப்பைக் கொண்டே பயிரிடலாம். அத்தோடு ஒரு ஏக்கர் காணிக்கான வெளி உழைப்பாளர் தேவை வீதம் குறைந்து சென்றது.

பசுமைப் புரட்சியின் வருகையோடு களைநாசினி, உரம், கிருமிநாசினி, உழவு இயந்திரம் ஆகியவற்றின் உபயோகம் அதிகரித்தது. இதனால் தாழ்த்தப்பட்டோரின் கூலி, உழைப்பு வாய்ப்பையும் குறைத்து. இது தாழ்த்தப்பட்ட சாதியினை மேலும் விளிம்பு நிலைக்குத் தள்ளியது. 1960களின் பிற்பகுதியில் மேற்குறித்த மாற்றங்களின் பயனாக சிறு துண்டு நிலங்களில் செறிவான பயிர்ச்செய்கை மேற்கொள்ளுதலும், குடும்ப உழைப்பைக் கொண்டே விவசாயம் செய்தலும் அதிகரித்தது. பசுமைப்புரட்சியால் விவசாய உள்ளீடுகள் அதிகரித்தன. தாழ்த்தப்பட்டோரை பெருமளவில் கூலிக்கு அமர்த்தி தோட்ட வேலைகளைச் செய்விக்கும் தேவை இல்லாமல் போயிற்று.

சுருங்கக் கூறுவதாயின், 1960 களில் பொருளாதார மாற்றங்கள் காரணமாக வேளாளர்களின் விவசாய வேலைகளில் தாழ்த்தப்பட்ட மக்களை கூலிகளாக ஈடுபடுத்தும் தேவை குறைந்தது. இக்காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் புதிய சில சேவைத் தொழில்களில் வேலைவாய்ப்பைப் பெற்றனர். இதனால் கிடைத்த  ஓரளவு சுயாதீனத்தை வைத்து தமக்கான ‘சமஸ்கிருதமாதல் உரிமையை’ (Right to be Sanskritised) வலியுறுத்தினர். (கா.சிவத்தம்பி அவர்கள் தனிப்பட்ட தொடர்பாடலில் எனக்குத் தெரிவித்தது ஒக்15, 1988). தாழ்த்தப்பட்டோருக்கு உரிமைகளை மறுப்பதில், படித்த நிலம் வைத்திருக்கும் உயர்சாதி வேளாளர் கூட முன்னின்றனர். இவ்வுயர்சாதி வேளாளர் தாழ்த்தப்பட்டோரை மலிவான கூலியாகவும், தமது சாதி அந்தஸ்து மேன்மையைக் காட்டும் சடங்குச் சேவைகளை ஆற்றுவதற்குரிய சேவகர்களாகவும் வைத்திருக்க விரும்பினர்.

Untouchables,  were at the bottom of the caste system

கொழும்பு அரசாங்கம் யாழ்ப்பாணத்தின் சாதிப்பிரச்சினையில் தலையிட முன் வந்து நிலைமையை மேலும் சிக்கலாக்கியது. வேளாளர் ஆதிக்கத் தலைமைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் சிங்களப் பெரும்பான்மைப் பாராளுமன்றம் 1957 ஆம் ஆண்டில் சமூகக் குறைபாடுகளைத் தடுக்கும்  சட்டம்  (Prevention of Social disabilities Act) என்னும் சட்டத்தை இயற்றியது. இச்சட்டம் சாதியடிப்படையிலான சட்ட முறையற்ற பாரபட்சத்தை தாக்கியது. சிங்களவர் மத்தியில் காணப்படும் சாதிப் பாரபட்ச நடைமுறைகள் பற்றி இச்சட்டம் சில விடயங்களைக் குறிப்பிடுகின்றதேனும், சட்டத்தின் வாசகங்கள் யாழ்ப்பாணத்தின் சாதிகளுக்கு இடையிலான பாரபட்சம் பற்றிய வருணிப்பு போன்றே உள்ளது. இதனை வாசிக்கும் ஒரு சமூக மானிடவியலாளர் சட்டத்தை வரைந்தவர்களின் சித்திரிப்பை பாராட்டவே செய்வார். Social disability என்றால் என்ன என்பதை வரையறை செய்யும் சட்டம், ஆளொருவர் கல்வி நிறுவனங்கள் கடைகள், பொது உணவகங்கள், கிணறுகள், முடிதிருத்தும் நிலையங்கள், சலவை செய்யும் நிலையங்கள், சுடுகாடு, பொதுப் போக்குவரத்து, கோவில்கள் என்பனவற்றை உபயோகிப்பதற்கு  அல்லது அவற்றுள் செல்வதற்குத் தடை செய்தல் போன்றவற்றை Social disability என்று வரையறை செய்தது. வெவ்வேறு சாதிகள் உடையை எப்படி அணிய வேண்டும் என்ற விதிமுறைகள் இருந்து வந்தன. இவ் விதிமுறைகளைக் கடைப்பிடிக்கும் படியான கட்டுப்பாடுகளை விதிப்பதையும் இச்சட்டம்  தடை செய்தது. (ஜயவிக்கிரம 1976:71 – 73).

மேற்படி சட்டத்தை இயற்றியப்போதிலும்  அதனை நிறைவேற்றுவதில்  கவனம் செலுத்தப்படவில்லை. சிங்களவர் சந்தேகித்தபடி தமிழரின் கைகளில் இருந்த யாழ் பொலிஸ், உயர் சாதியினருக்கு சார்பாக செயற்பட்டது. (பின்னர் தாழ்த்தப்பட்டோரும் இக்குற்றச்சாட்டைக் கூறினர்) (Times of Ceylon, Feb 17, 1968, பக். 1). 1962 இல் ‘யாழ்ப்பாணத்தின்  அவமானம்’ ((‘The shame of Jaffna’) என்ற தலைப்பிலான கட்டுரையில் (Ceylon Observer,. 12, 1962, பக். 1) யாழ்ப்பாணத்தின் காற்பங்கு சனத்தொகை இன்னும் சாதிப் பாகுபாடுகளுக்கு உட்பட்டுள்ளது என்று  கூறப்பட்டது. இதுபோன்ற கட்டுரைகள் தமிழருக்கு பகுதி சுயாட்சி வழங்கக்கூடாது என்ற சிங்களவரின் வாதத்திற்கு மேலும் எண்ணையை ஊற்றியது. உதாரணமாக சிங்களவரான செனேட்டர் ‘ஒருவர் சிங்களவர்கள் தமிழர்களை ஒடுக்குகிறார்கள்’ என்ற குற்றச்சாட்டிற்குப் பதில் வழங்கும் முகமாக பின்வருமாறு கூறினார்.

இந்த நாட்டில் தமிழர்கள் மீது அடக்குமுறை என்று ஒன்று இருக்கிறதென்றால் அது வேளாளர் செய்யும் அடக்குமுறைதான் என்று நான் கூறுவேன். தமிழ் வேளாளர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் கிணறுகளில் இருந்து ஒருவாளி தண்ணீர் அள்ளுவதற்கு அனுமதிக்க மாட்டார்கள். வேளாளர் தமது தமிழ் சகோதரருக்கே கோவிலுக்குள் நுழைவதற்கும் மத சுதந்திரத்தை அனுபவிப்பதற்குமான அடிப்படை உரிமையை மறுக்கிறார்கள். கடவுளைத் தொழும்போது கூட தம்மோடு சமமாக நின்று தொழுவதற்கு வேளாளர் அனுமதிப்பதில்லை (Kearnyயின் நூலில் 1967:100 மேற்கோள் காட்டப்பட்டது).

யாழ்ப்பாணத்தின் பாரபட்சமான சாதி நடைமுறைகள் கொழும்பு அரசாங்கத்தின் தலையீட்டை கொண்டு வந்தது மட்டுமல்லாமல் புதிதாக மிசனரி இயக்கங்களின் தலையீட்டுக்கும் வழிவகுத்தது. கிறிஸ்தவ மிசனரிகள் அல்ல, பௌத்த மிசனரிகள் யாழ்ப்பாணத்தில் அக்கறை காட்டின. தங்கள் சமயம் சாதியை ஏற்றுக் கொள்வதில்லை எனக் கூறும் பௌத்த மிசனரி இயக்கங்கள் தாழ்த்தப்பட்டோரை பௌத்த மதத்திற்கு சமய மாற்றம் செய்ய முன் வந்தன. சிங்கள மொழியில் கல்வி வழங்குவோம் என்பதை ஓர் ஊக்குவிப்பாக வழங்கினர். மாவிட்டபுரம் சர்ச்சைக்கு சிறிது காலம் முன்பதாக மூன்று முக்கிய  பௌத்த குருமார்கள் சாதிச் சண்டைகளால் பாதிப்புக்கு உள்ளாகியிருந்த கிராமங்களிற்குச் (சங்கானை, காங்கேசன்துறை) சென்றனர். அவர்களின் வருகையின் நோக்கம் ‘உயர்சாதி இந்துக்களிற்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இடையில் இணக்கப்பாட்டை கொண்டு வருதாக இருந்தது’. இப்படியான ஒரு இணக்கப்பாட்டைத் தமிழ் அரசியல் தலைவர்கள் இதுவரை கொண்டு வர முயற்சிக்கவில்லை என்றும் கூறப்பட்டது (Times of Ceylon, Feb.17, 1968, பக். 1). இலங்கை அரசாங்கம் சமய மாற்றத்தை செய்து அரச நிதி உதவியையும் கொடுத்து யாழ்ப்பாணத்தில் அரசுக்குச் சார்பான ஒரு களத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது என்று எண்ணிய தமிழ் அரசியல் தலைவர்களிடையே அரசாங்கத்தின் நடவடிக்கை அச்சத்தை ஏற்படுத்தியது (Kearney 1978:529). 1972 இல் அரசியல் யாப்புச்சட்டம் பௌத்த சமயத்திற்கு அரச ஆதரவு வழங்குவதை உறுதி செய்தது. இது  தமிழ்  இந்துக்களிடையே பௌத்த மதமாற்றம் பற்றிய அச்ச உணர்வை ஏற்படுத்தியது. யாழ்ப்பாணத்தின் இந்து சமயத்தின் மீது பலமான அரச ஆதரவு கொண்ட ஒரு நேரடித் தாக்குதலாக மதமாற்ற இயக்கம் அமையலாம் என்று இந்துக்கள்  பயந்தனர். மாவிட்டபுரம் சர்ச்சையின் வித்தியாசமான பிரச்சினைகளை புரிந்துக்கொள்வதற்கு இந்து சமயம் பற்றிய விடயங்களையும் நாம் பரிசீலித்தல் அவசியம். யாழ்ப்பாணத்தின் சாதி முறை எப்படி காலனித்துவ ஆட்சியால் உருவாக்கப்பட்டதோ அது போன்றே காலனித்துவத்தின் பின்புலத்தில் யாழ்ப்பாணச் சமயத்தின் உருவாக்கமும் நடைபெற்றது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

குறிப்பு : ‘The Political Construction of Defensive Nationalism: The 1968 Temple-Entry Crisis in Northern Sri Lanka’ என்ற தலைப்பில் 1990 ஆம் ஆண்டு The Journal of Asian Studies, 49(1): 78-96 என்னும் இதழில் பிறையன் பவ்வன்பேர்ஜர் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம்.


ஒலிவடிவில் கேட்க

8398 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)