எம் இதயங்களில் அச்சொல்
புனிதமாய் இருக்கட்டும்
சாம்பலைப் போல காற்று அதனையும்
அள்ளிச் செல்ல விட வேண்டாம்
சுகப்படுத்த முடியாத காயமாக…
– மஹமூட் தர்வீஷ்
(பலஸ்தீனக் கவிதைகள். (மொ+ர்) எம்.ஏ. நுஃமான், இ. முருகையன்)
பண்பாட்டு மரபுரிமையின் மிக முக்கியமான பகுதியாக நினைவுச் சின்னங்கள் காணப்படுகின்றன. நினைவுச் சின்னம் (monuments) என்பது ‘உலகளாவிய ரீதியில் பெறுமதிமிக்கதும் வரலாறு, அழகியல், இனவியல் அல்லது மானுடவியல் ரீதியாக முதன்மை வாய்ந்ததுமான கட்டடங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், அகழ்வாய்வு எச்சங்கள், குகை வாழிடங்கள், சாசனங்கள் முதலியவற்றைக் குறிப்பதாகும்’ என யுனெஸ்கோவின் (UNESCO) 1972 இற்குரிய விதிக்கோவை வரையறை செய்கிறது. 1992இல் ‘பண்பாட்டு நிலவுரு’ என்பதும் இதன் அங்கமாக்கப்படுகிறது. அதன்படி இயற்கைமீது வினைபுரிதலூடாக மாற்றியமைக்கப்பட்ட நிலவுரு அமைவுகள் கவனத்தில் எடுக்கப்பட்டன. சர்வதேச நினைவுச் சின்னங்கள் மற்றும் புலங்களுக்கான சபை (ICOMOS) சர்வதேச நினைவுச் சின்னங்களுக்கான நிதியம் (WMF), நினைவுச் சின்னங்களுக்கான சர்வதேச நிதியம் (IFM) உள்ளிட்ட சர்வதேச ரீதியாகச் செயற்படும் அமைப்புக்கள் உட்பட தேசிய ரீதியாக இதேவிடயத்தைக் கவனத்தில் எடுத்துள்ள பல நிறுவனங்களும் தொழிற்பட்டு வருகின்றன. சர்வதேச நினைவுச் சின்னங்களுக்கான நிதியத்தால் இரு வருடங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படும் ‘World monument watch ‘ சஞ்சிகை உலகெங்கிலும் அறியாமை, அறிந்து சேதமாக்கல், ஆயுத முரண்பாடுகளுள் அகப்பட்டு அழிவின் விளிம்பில் இருப்பவை, அபிவிருத்தி–வர்த்தகமயமாக்கலால் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டவை, இயற்கைப் பேரழிவுகளைச் சந்திப்பவை என்ற ரீதியில் அழிவை நோக்கி இருக்கும் நினைவுச் சின்னங்களைக் கவனப்படுத்தி அவற்றைப் பாதுகாப்பதற்கான முன்வைப்புக்களைச் செய்கிறது.
நினைவுகொள்ளுதலின் பொருட்டாக உலகெங்கிலும் அமைக்கப்படும் அனைத்துவிதமான ஞாபகச் சின்னங்களும் இந்த ‘நினைவுச் சின்னங்கள்’ என்ற பெரும் வகைப்பாட்டைச் சேர்ந்தவைதான். ஆனால் அவ்வாறு உலகெங்கிலும் அமைக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் யாவும் உலகளாவிய நினைவுச் சின்னங்கள் தொடர்பான அமைப்புக்களின் பட்டியற்படுத்தலுக்குள் வந்து சேர்ந்துள்ளனவா? என்பதற்கான பதில் மிகச் சிக்கல்வாய்ந்த நிலவரங்கள் – நடைமுறைகள் சார்ந்ததும், அதேசமயம் இது தொடர்பாகச் செயற்படும் பல்வேறு தரப்புக்களது கருத்துநிலைகள் மற்றும் நுண்ணரசியலின் பாற்பட்ட பலவிதமான நிபந்தனைகளால் ஆட்சி செய்யப்படுவதையும் அவதானிக்கலாம்.
இத்தகைய பின்னணியில் தமிழர்களால் குறிப்பாக இலங்கைத் தீவில் வசிக்கும் தமிழர்களால் அமைக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் அவற்றின் வரலாற்றுண்மை – உணர்ச்சிகரத் தன்மை – அதன் நியாயப்பாடு என்பனவற்றைத் தாண்டி எவ்வளவு தூரத்திற்குத் தம் கட்டமைப்பாலும் – அது தாங்கியுள்ள கருத்து – உணர்ச்சி – அரசியல் என்பனவற்றை வெளியீடு செய்யும் திறனாலும் வெற்றிகரமான படைப்பாக்க வலுவுடன் கூடிய தொடர்பாடலைக் கண்டடைந்துள்ளன என்ற கேள்விக்கான பதில் எமக்கு ஏமாற்றத்தையே தருகிறது என்பது துரதிர்ஷ்டவசமானதுதான். அதேநேரம், முன்னோக்கிச் செல்ல முயலும் சமூகமும், சுய ஒளிப்பு மறைப்பு, சுய விசாரணைகளின்றி, எந்தவொரு விடயத்திலும் நீண்ட பயணங்களைச் செய்ய முடியாது என்ற அடிப்படையிலேயே இந்தக் கேள்வியை இக்கட்டுரை எழுப்ப முயல்கிறது.
ஒருவகையில் தமிழ்த் தரப்புக்களிடமிருந்து தோன்றும் இத்தகைய நினைவுச் சின்னங்கள் யாவும் பெருங்கதையாடல்களைக் (grand narratives) கேள்விக்குள்ளாக்கும் விளிம்பு நிலைப்படுத்தப்பட்டவர்களது மாற்றுக் குரல்கள் (alternative voices) ஆகும். மாற்றுக் குரல்கள் எவ்வாறு தமது கருத்தாக்கங்களில் மாற்று மற்றும் எதிரிடைத் தன்மைகளைக் (resistance) கொண்டிருக்கின்றனவோ அதே மாற்றும் – எதிரிடைத் தன்மையும் அவர்களது நினைவுச் சின்னங்களிலும் வேண்டும். நிறுவப்பட்ட குரல்களை – அதே நிறுவப்பட்ட வடிவங்களினூடாக அல்லது அதனை விடவும் வலுக்குன்றிய முறையால் எதிர்கொள்ளலானது, எந்த வகையிலும் ஒரு வலிமையான எதிர்கொள்ளும் முறையுமாகாது.
அதற்கு பதிலாக தாபிக்கப்பட்ட, ஒரே வகைமாதிரியான (Stereo typical) நினைவுச் சின்ன அமைவுகளை விடுத்து, புதிதாக – தனது வெளிப்பாட்டு வடிவத்தாலும் முறையாலும் அதிர்ச்சி தரத்தக்க ஒரு வருகையைத் தனது அரசியல் – அழகியல் என்பவற்றால் முன்னிறுத்தக் கூடிய முறைகளைத் தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மைத் தரப்புக்கள் கண்டடைய வேண்டும். அது தன் தோற்றத்தாலும் – அது உட்பொதிந்துள்ள கருத்து வலிமையாலும் உலகம் கண்மூடி மறந்து விட முடியாத – கவிஞை சிவரமணி கூறியது போல ‘நிராகரிக்க முடியாத கேள்வியாய்’ உலகின் முன்னால் பிரசன்னமாக வேண்டும். வெறும் உணர்ச்சிபூர்வமான மனநிலைகளால் மட்டுமின்றி, அவற்றை அறிவுபூர்வமாக ஆற்றுப்படுத்தக்கூடிய ஆற்றல்களின் வழியாக இவை மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்குத் துறைசார் நிபுணத்துவம் உடையவர்களது பங்குகொள்ளுதல் என்பது இன்றியமையாததொரு தேவைப்பாடாகும்.
கட்டடக் கலைஞர்கள் – ஆக்கத் திறனுடைய சிற்பிகள் உள்ளிட்ட காண்பியப் படைப்பாளிகள் இத்தகைய பணிகளுக்கு அழைக்கப்படல் வேண்டும். உலககெங்கணும் வெற்றிப்பெற்ற நினைவுச் சின்ன வெளிப்பாடுகளின் பின்னால் இத்தகையவர்களது பங்குகொள்ளல் இருந்துள்ளன. அத்தகைய துறைசார் ஆற்றல் உடையவர்கள் புதிதாய் சிந்திக்கவும் – மாற்றிச் சிந்திப்பதற்குமான உந்துதல்களை உடையோராக இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம். இவ்வாறு உள்ளவர்கள்தான் உலகத் தரத்திலும் ஆக்கத் திறனிலும் வலுவுடைய வெளிப்பாடுகளைத் தரத்தக்க ஆற்றல்களை – கொள்ளளவைக் கொண்டவராக இருக்க வாய்ப்புக்கள் அதிகம்.
மேலும் ஒரு நினைவுச் சின்னமானது, கண்டிப்பாக கட்டப்பட்ட ஓரமைவாக இருக்க வேண்டும் என்பது ஒரு முன்நிபந்தனை அல்ல. அவை உடைக்கப்பட்டு – அழிக்கப்பட்ட பின்னரான எச்சங்களது பிரதிநிதித்துவமாயும் இருக்கலாம். கட்டப்பட்டதை விடவும் – இந்த அழிக்கப்பட்ட வடிவம் வலுவானதும் – மேலும் உண்மையின் வலுவும் கொண்டது. முன்னயதை விடவும் வெளிப்பாட்டு ரீதியாக ஒரு மாற்று அழகியலையும் – ‘raw’ ஆன வெளிப்பாட்டு ஆற்றலையும் அது முன்வைக்கிறது. அந்த வகைப்பட்ட அழித்தலின் வடிவத்தை முன்வைப்பதனூடாக இருத்தலின் மீதான முடிவற்ற அச்சுறுத்தலை அது அமைதியாக சொல்லியபடி இருக்கும். பதிலாக, புதியதொன்றை அவ்விடத்திற்குத் தரும்போது பல வேளைகளில் இந்தத் தொடரழிப்புகளின் கதை அவற்றுள் மறைந்து பழங்கதையாகி மடியலாம் அல்லது பின் தள்ளப்படலாம். அதுதான் யாழ்ப்பாண பொதுசன நூலகத்திற்கு நடந்தது. ஆகவே எப்போதும் கட்டிய வடிவம் மட்டும் தான் நினைவுச் சின்னமாக இருக்கலாம் என்றில்லாமல் அழித்த – சிதைந்த வடிவமும் ஒரு வலுவான பிரதிநிதித்துவம்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.
அதேநேரம் வடிவமைப்பில் அதன் அழிவின் பட்டவர்த்தனத் தன்மை மறையும் வண்ணம் பொருத்தமற்ற சங்கிலிகளால் எல்லையிடல், சீமெந்துக் கட்டுமானங்களைச் செய்தல், பிரகாசமான வர்ண விளக்குகளாற் போர்த்தி ‘அழகூட்டல்’ எனும் அதன் வலிமை கெடும் செயற்பாடுகளையும் புரியக் கூடாது. அது அதன் உண்மையின் வலுவைத் தின்றுவிடும். அது எதனைக் கோருகிறதோ அதனை மட்டும் செய்ய வேண்டும். பதிலாக எமது ஜனரஞ்ச ஆசைகளை அதன்மீது கவிழ்த்து அதனை அவமானப்படுத்தக் கூடாது.
மேலும், அதுவொரு உருவமாக – உருக்களைக் (figurative) கொண்டதாக இருக்க வேண்டும் என்பதும் தாபிக்கப்பட்ட ஒரேயொரு முறையல்ல என்பதனால், நினைவுச் சின்னம் என்பது உருவமாக இருக்க வேண்டும் என்பதல்ல: அவை கேத்திர கணித உருக்களாக – அரூப உருக்களாகக் (abstract) கூட இருக்க முடியும். உதாரணமாக பேர்லினில் உள்ள யூத இனப் படுகொலைக்கான (holocaust) நினைவுச் சின்னம் பல நிரல்களையுடைய செவ்வக வடிவுடைய கட்டுமானமாக அமைந்துள்ளது.
அதேநேரம், எங்களிடம் இன்னும் சன்னத் துளையுடைய, காயம் ஆறாத பல சுவர்கள் தெருத்தெருவாய் உண்டு. ஏன் இவற்றில் வடிவ – வெளிசார்ந்த முக்கியத்துவமுடைய சுவரொன்றை நினைவுச் சின்னமாக்க முடியாது? ஏன் அவ்வாறான சிந்தனைகள் எங்களிடம் தோன்றுவதில்லை? அவ்வாறு தோன்றி இருந்தால் கிளிநொச்சியில் வீழ்ந்து கிடந்த பாரிய தண்ணீர்த் தாங்கியை நினைவுச் சின்னம் ஆக்கி இருப்போமே?
இன்னும் விரிவாகச் சிந்தித்தால், நினைவு வெளிகளை / நினைவு நிலங்களை / நினைவுச் சதுக்கங்களைக் கூட எந்தக் கட்டுமானங்களுமற்ற வெளிகளால் உருவாக்கலாம். நினைவுக் காடுகளை – நினைவுத் தோட்டங்களை நிறுவலாம். நினைவுப் பாதைகளைக் கட்டலாம். நினைவுக் குளங்கள் – கேணிகள் எனப் பல புத்தாக்க முறைகளைக் கண்டடையலாம். மேலும் விரிந்து ‘விடாது ஒலிக்கும் – பின் தொடரும்’ மறைந்தும் மறையாது கேட்கும் இசையால் ஒலியால் கூட ஓரிடத்தைக் கட்ட முடியாதா என்ன? – (மெய்நிகர் (virtual space) வெளிகளிலும் நினைவிடங்களை அமைக்கலாம்). எதுவானாலும், அது இடைவிடாது மனதைத் தொந்தரவு செய்வதாக விட்டு விலக முடியாத நினைவாக எம்முன்னால் நிற்க வேண்டும் என்பதுதான் அதன் அடிப்படையாக இருக்க வேண்டும். அது எங்களது காயமாகவும் – காயத்தைக் குணப்படுத்தும் மருந்தாகவும் நிற்குமாயின், அதுதான் ஆகச் சிறந்த வடிவமைப்பாக இருக்க முடியும் என நம்புகிறேன்.
தொடரும்.