மலையக மக்களும் எட்டாக்கனியாக்கப்பட்ட கல்வியும்
Arts
9 நிமிட வாசிப்பு

மலையக மக்களும் எட்டாக்கனியாக்கப்பட்ட கல்வியும்

July 25, 2022 | Ezhuna

இந்தியவம்சாவழி தொழிலாளர்களின் இலங்கை வருகை, அவர்களின் பிரஜாவுரிமை போன்ற பல விடயங்கள் தொடர்பேசுப்பொருளாக அமைந்திருக்கின்றன. ஆனால் கோப்பி பயிர்செய்கைக்குப் பின்னரான இந்தியவம்சாவழித் தமிழரின் வாழ்க்கை சூழல் எவ்வாறு அமைந்ததென ஒரு சில ஆய்வுகளே வெளிவந்துள்ளன. “கண்டி சீமையிலே-2 – சதிகளையும் சூழ்ச்சிகளையும் கடந்த வரலாறு” என்ற இந்த வரலாற்றுத்தொடர் அந்த இடைவெளியை நிரப்புவதாக அமைகின்றது. இலங்கையில் கோப்பிப்பயிர்செய்கை முடிவுற்று தேயிலை பயிர்செய்கைக்கான ஆரம்பத்தினை எடுத்துக்கூறுகின்றது. இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் தேயிலை தோட்டங்களில் பட்ட இன்னல்களையும் இடர்களையும் எடுத்துரைப்பதாக அமைகின்றது. கண்டி சீமைக்கு அழைத்துவரப்பட்ட தொழிலாளர்களின் உண்மை நிலையினை வரலாற்றுப் பார்வையினூடாக ஆதாரங்களுடன் எடுத்தியம்புகின்றது. இது வெறுமனே மக்களின் வாழ்வியல் பிரச்சினைசார் விடயங்களை மாத்திரம் தெளிவுப்படுத்தாமல், தொழில்சார், அரசியல், பொருளாதார, சமூகம் சார்ந்த பல்பரிமாண அம்சங்களினை வெளிகொணர்வதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பிலும் மற்றும் நகர்ப்புறங்களிலும் இருந்ததை விட பன்மடங்கு விசாலமான தொழிலாளர் படையணி பெருந்தோட்டங்களிலேயே காணப்பட்டது. நகர்ப்புற தொழிலாளர் மத்தியில் குறைந்தபட்ச கல்வியறிவேனும் காணப்பட்டது. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் சிறிதுகூட கல்வி அறிவு இருக்கவில்லை. 1893 ஆம் ஆண்டு முதல் 1923 ஆம் ஆண்டு வரை சுமார் எட்டு பெரிய வேலை நிறுத்தப் போராட்டங்கள் (1893 அச்சுத் தொழிலாளர், 1896 சலவைத் தொழிலாளர், 1906 கருத்தை ஓட்டுபவர்கள், 1912 புகையிரத தொழிலாளர்கள்,  1920 புகையிரதம் மற்றும் துறைமுக தொழிலாளர்கள், 1923 பொது வேலை நிறுத்தம், 1927 துறைமுகம்,  மற்றும் 1929 டிராம் வண்டி) இடம் பெற்றிருந்த போதும் பெருந்தோட்டத்துறை இதைப் பற்றி ஒன்றும் அறியாதிருந்தது போல்  எதுவித ஆர்ப்பாட்டங்களும் இன்றி மிக அமைதியாகவே இருந்தது.

இதற்கான முக்கியகாரணம் தோட்ட துரைமார்கள் தோட்டத் தொழிலாளரை தொழிற்சங்க ரீதியில் ஸ்தாபனப்படுத்த எந்த ஒரு வெளிச் சக்தியையும் நெருங்க விடாது தோட்டத் தொழிலாளரை தனிமைப்படுத்தி வைத்திருந்தமைதான். நகர்ப்புற தொழிலாளர்களைப் பொறுத்தவரை அவர்கள் தொழிற் பயிற்சியோடு, வாசிக்கவும் எழுதவும் அறிந்திருந்ததால், தம்மை  முதலாளித்துவமும் காலனித்துவம் எவ்வாறு சுரண்டி ஏமாற்றுகிறது என்பதை அவர்கள் தமது தலைமைத்துவம் வாயிலாகப் புரிந்து கொண்டிருந்தனர். ஏ.ஈ. குணசிங்க போன்ற தொழிலாளர் தலைவர்கள் ரஷ்யத் தொழிலாளர் புரட்சித் தலைவர்களான வி. ஐ. லெனின் மற்றும் காரல்மார்க்ஸ்  ஆகியோரின் சோசலிச கருத்துக்களால் ஈர்க்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1900 தோட்டத்த்ய்ரைமாருடன் தொழிலாளர்கள்

மறுபுறத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நகர்ப்புறத் தொழிலாளர்கள் போல் தொழிற்சங்கம் அமைத்து போராடத் தொடங்கினால் அது தமது தொழில்துறைக்கு மட்டுமன்றி தமது உயிருக்கும் கூட ஆபத்தானது என துரைமார்கள் பயந்தார்கள். அதற்கு பல காரணங்கள் இருந்தன.  தாம் எந்த அளவுக்கு தொழிலாளர்களை சுரண்டுகிறோம் என்பதையும் அவர்கள் மீது எந்த அளவுக்கு அட்டூழியங்களும் அடக்குமுறைகளும் அவிழ்த்து விடப்பட்டுள்ளன என்பதையும் தெரிந்தே வைத்திருந்தனர். அதனை அறிந்து கொண்டு அதற்கு எதிராக தோட்டத் தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்தால் அதன் விளைவு எவ்வளவு மோசமானதாக இருக்கும் என்பதையும் அத்தகைய எழுச்சிக்குமுன் தாம் மிகவும் பலவீனர்களாக இருக்கிறோம் என்பதையும்கூட  அவர்கள் நன்கு தெரிந்தே வைத்திருந்தார்கள்.

பெருந்தோட்டங்களில் பெருந்தொகையான தொழிலாளர்கள் தம்மை சுற்றிவர திரண்டு வசிப்பதால் அவர்கள் மத்தியில் துரைமாரும் மற்றும் ஏனைய நிர்வாக அதிகாரிகளும் தனிமைப்பட்டே வாழ்ந்துவந்தனர். அத்துடன் அனேகமான தோட்டங்கள் ஒரு பிராந்தியத்தில் ஒன்றை ஒன்று சூழ்ந்து ஒரு குழுமமாகவே அமைந்திருந்ததால் ஒரு தோட்டத்தில் எழக்கூடிய எந்தவிதமான கிளர்ச்சியும் போராட்டமும் உடனேயே ஏனைய தோட்டங்களுக்கும் பரவி விடும் என்பதும் அவர்களுக்கு நன்கு தெரிந்து தான் இருந்தது.  இவ்விதம் எல்லா சூழ்நிலைகளையும் சீர்தூக்கிப் பார்த்தே கல்வி அறிவு என்பது எந்தவிதத்திலும் இம் மக்களை சென்றடைந்து விடக் கூடாது என்றும் அவர்களது மனசாட்சியை தூண்டும் எந்த சக்தியும் இவர்களை அணுகி விடக்கூடாது என்பதிலும் இவர்கள் மிகக் கவனமாக செயற்பட்டனர்.

எனினும் 1900 ஆம் ஆண்டுகளைத் தொடர்ந்து அடுத்து வந்த ஒரு தசாப்த காலப்பகுதியில்  அங்கிலிக்கன்,  மெதடிஸ்ட், பெப்டிஸ்ட் போன்ற மிஷனரிகளின் முயற்சியால் ஆங்காங்கே பெரியதும் சிறியதுமான பாடசாலைகள் பெருந்தோட்டத்துறை இருந்த பகுதிகளிலும் ஆரம்பமாகின. கிறிஸ்தவ மிஷனரிகள் இதில் சம்பந்தப்பட்டிருந்ததால் தோட்ட துரைமார்களால் முற்றாக இதனை தடுத்து நிறுத்த முடியவில்லை. படிப்படியாக தோட்டங்களுக்கு உள்ளேயும் இரவுப் பாடசாலைகள், திண்ணைப் பாடசாலைகள், கூத்து மற்றும்  கலை கலாசார நிகழ்ச்சிகள் போன்றன தோன்ற ஆரம்பித்தன.  அனாதை இல்லங்கள்,  பிள்ளைப் பராமரிப்பு மடுவங்கள் என்பனவும்  தோன்ற ஆரம்பித்தன.  இதுவரை வீட்டிலிருந்த வயது முதிர்ந்த பெண்களும் பெரிய பெண் பிள்ளைகளுமே குழந்தைகளை பராமரித்து வந்தனர். எனினும் இந்த ஏற்பாடுகள் எல்லாம் சிறுபிள்ளைகள் அவர்களின் பெற்றோர்களுக்கு தொல்லை கொடுத்து வேலைக்குப் போகாமல் அவர்களைத் தடுத்து விடாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளாகவே இருந்தனவன்றி பிள்ளைகளுக்கு கல்வி அறிவு ஊட்ட வேண்டும் என்ற அக்கறை கொண்டதாக இருக்கவில்லை.

இவர்களுக்கு கல்வியறிவு ஊட்டுவது வீணானது என்றும்,  அதற்கான செலவும் அவசியமற்றது எனவும், எதிர்காலத்தில் இவர்களும் தேயிலைத் தோட்டங்களில் கொத்தடிமைகளாக வேலை செய்யப் போகிறவர்கள்தானே என்ற மிக எகத்தாளமான சிந்தனையே அவர்களுக்கு இருந்தது. சில துரைமார்கள் தோட்டத்தில் கூலிகளாக வேலை செய்ய போகிறவர்களுக்கு எதற்கு கல்வி என்று வெளிப்படையாகவே கருத்து தெரிவித்தனர். எனினும் இத்தகைய கெடுபிடிகளுக்கு மத்தியிலும் தடைகள், பாதகங்கள், முட்டுக்கட்டைகளை தகர்த்துக்கொண்டு 1904 ஆம் ஆண்டளவில் தோட்டப் புறங்களில் 60 ஆரம்ப பாடசாலைகள் உருவாகியிருந்தன.  இவற்றில் 2000 மாணவர்கள் கல்வி கற்றனர் என்பது  கவனிக்கத்தக்கதாகும்.

இந்தப் பாடசாலைகளில் உரிய அக்கறையுடனான கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாத போதும்  “சீனி இல்லாத ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை” என்ற விதத்தில் இத்தகைய கல்வியும் கூட இவர்களில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தன என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தப் பிள்ளைகள் பெற்றிருந்த கல்வியறிவு தொடர்பில் சில துரைமார்கள் கருத்து தெரிவிக்கும்போது  “கல்வி அறிவு பெற்றிராத பிள்ளைகளைவிட பாடசாலைக்கு சென்று வந்து தோட்டங்களில் வேலை செய்த பிள்ளைகள் திறமையானவர்களாக இருக்கின்றனர்” என தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஏ. எல். பிரெஞ்ச் (A. l. French) என்ற தோட்டத்துரை “பாடசாலை கல்வியை முடித்துவிட்டு தோட்ட மலைகளுக்கு வேலைக்காக வந்த இளம் தொழிலாளர்கள் புத்திசாலிகளாகவும் சரியான நேரத்தை கடைபிடிப்பவர்களாகவும்  இருக்கி ன்றனர்” என கருத்து தெரிவித்துள்ளார்.

கொழுந்து பறிக்கும் சிறுமிகள்

மற்றுமொரு தோட்டத்துரையான ஜி. எஸ். ஒஸ்போர்ன் (G.S. Osborne) தனது அறிக்கையில், பாடசாலைக் கல்வியை வெற்றிகரமாக பூர்த்தி செய்து விட்டு வெளியேறியபின் வேலையில் சேர்ந்த தொழிலாளர் பிள்ளைகள் சிறந்த கூலிகளாகவும், நேர்த்தியாக வேலை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பில் 1903 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட துரைமார்கள் சங்கத்தின் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவற்றில் எல்லாம் பெண் பிள்ளைகள் தொடர்பாக ஒன்றும் குறிப்பிடப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. பெண் பிள்ளைகள் வீட்டு வேலைகளைக் கவனிக்கவும், பிள்ளை பராமரிப்பில் ஈடுபடவும், வளர்ந்ததும் கொழுந்து பறிக்கும் மலைக்கு அனுப்பப்பட்டதால் அவர்கள் பாடசாலைக்குச் செல்லவில்லை என ஆய்வாளர்கள் கணிப்பீடு செய்துள்ளனர்.

பெருந்தோட்ட தொழிலாளர்களை “கூலிகள்”(Coolies)  என்று கொச்சைப்படுத்தி, மட்டம் தட்டி எந்தக் காரணத்துக்காகவும் அவர்களுக்கு கல்வி அறிவு கிடைத்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் அவர்களை அடிமைத்தனத்துக்குள் கட்டிப்போட்டு வைத்திருந்த நிலைமை மாறி எப்படியோ மிக சிறிய அளவில் கல்வி என்ற ஞானம் அவர்களை சென்றடைந்தது. அதன் காரணமாக கங்காணிகள் என்னென்ன விதங்களில் எல்லாம் தம்மை ஏமாற்றுகின்றனர் என்பதனை மெல்ல மெல்ல அவர்கள் தெரிந்து கொள்ள ஆரம்பித்தனர். இதன் முதற்கட்ட ஞானோதயமாக தம் தோள்மீது எந்த அளவுக்கு கடன் சுமை சுமத்தப்பட்டுள்ளது என்பதை அவர்கள் கணக்குப் போட்டு தெரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு அவர்களது கல்வி அறிவு வளர்ச்சி அடைந்திருந்தது.

இவர்கள் மத்தியில் இவ்விதம் கல்வியறிவு பெற்றோர் மிகக் குறைந்த தொகையினரே காணப்பட்ட போதும் அந்த மிகச் சிலர்  ஏனைய சக தொழிலாளர்களின் கணக்கு வழக்குகளை தெரிந்துகொள்ள  உதவியாக இருந்தனர். அவர்கள் தென்னிந்தியாவின் குக்கிராமங்களில் வசிக்கும் தமது இரத்த உறவுகளுக்கு கடிதங்கள் எழுதவும் விரைவிலேயே கற்றுக்கொண்டனர்.  ஏனைய கற்றோர், கல்லாதவருக்கும் கடிதம் எழுதிக் கொடுத்து உதவினார்கள். இத்தகைய அபிவிருத்திகள் தொடர்பில் கங்காணிகளும் துரைமார்களும் அச்சம் கொள்ளாமல் இல்லை. கங்காணிகள் இதுவரை தாம் செய்து வந்த தில்லுமுல்லுகளையும் திருகுதாளங்களையும் தொழிலாளர்கள் தெரிந்து கொள்ளக்கூடும் என்று பயந்தனர். துரைமார்களோ இனிமேல் தமது அதிகாரத்திற்கு இவர்கள் சவால் விடக்கக் கூடும் என்று மருகி பயந்தனர். இதனால் பாடசாலைகளில் எந்தவிதமான கல்வி கற்பிக்கப்படுகின்றது என்பது தொடர்பில் அவர்கள் மிக கவனமாக இருந்தனர். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பாடசாலைகளில் கல்வி புகட்டப்பட்டது. கூடுமானவரை பாடசாலைகளை பிள்ளை மடுவமாக மட்டுப்படுத்த முயற்சி எடுக்கப்பட்டது . 1920ஆம் ஆண்டளவில் பெருந்தோட்டத் துறை வளர்ச்சி அடைந்திருந்த மாவட்டங்களில் சுமார் 68 ஆயிரம் பாடசாலை செல்லக்கூடிய பிள்ளைகள் இருந்த போதும் சுமார் 275 பாடசாலைகளில் 11000 பிள்ளைகளே கல்வி கற்றனர் என்பதிலிருந்து தோட்ட துரைமார்கள் இவர்களுக்கு கல்வி வழங்குவதில் எந்த அளவுக்கு பின்வாங்கி இருந்தனர் என்பதை புரிந்து கொள்ளலாம்.

துரைமார்கள் இதற்கும்  அப்பால் ஒரு படி மேலே சென்று 1885 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அன்றைய தினம் வரை அமுலில் இருந்த குற்றவியல் தண்டனைச் சட்டக் கோவையின் 433 ஆவது பிரிவான,  குற்றவியல் அத்துமீறல்  (Criminal Trespass) என்ற பிரிவினை 1948 ஆம் ஆண்டில் இலங்கை சுதந்திரம் அடைந்து பத்து வருடத்திற்குப் பின்னர் வரை நீக்க விடாமல் பார்த்துக் கொண்டனர். இலங்கை குற்றவியல்  தண்டனை சட்டக் கோவையின்  (Penal Code) இந்தப் பிரிவே தொழிலாளர் பிரதிநிதிகள் எவரும்,  அவர்கள் வார்த்தையில் கூறுவதாயின் “வெளியார்” எவரும் தோட்டங்களுக்குள் சென்று தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கென தொழிலாளரை ஒன்று திரட்ட முடியாமல் பெரும் தடையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

8593 பார்வைகள்

About the Author

இரா. சடகோபன்

இரா. சடகோபன் என்று எழுத்து உலகில் அறியப்பட்ட இராமையா சடகோபன் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிறப்பு பட்டதாரி ஆவார். அதன்பின் ஒரு சட்டத்தரணியாக தன்னை உயர்த்திக் கொண்ட இவர் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் மூன்று நூல்களுக்குத் தேசிய சாகித்திய விருதுகளையும் பெற்றுள்ளார்.

விஜய் சிறுவர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரான இவர், 'சுகவாழ்வு' சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் ஆவார். இதனைத் தவிர மலையக மக்கள் மேம்பாடு தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். சடகோபன் ஊடகத்துறையில் ஆற்றிய பணிக்காகச் சிறந்த ஊடகவியலாளருக்கான ஜனாதிபதி விருதையும் பெற்றுள்ளார்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)