மருத்துவர் நேத்தன் உவோட்டுக்கு 4 பிள்ளைகள் மூவர் ஆண்கள், ஒருவர் பெண். இவர்கள் அனைவரும் 1834 – 1842 காலப்பகுதியில் வட்டுக்கோட்டையிலே பிறந்தார்கள். பெண்பிள்ளை ஒரு வயதாகும் போது இயற்கை எய்தியது. 1842 இல் பிறந்த இளையமகன் சாமுவேல் ரெட் உவோட் வாஷிங்டனில் உள்ள ஜோஜ்ரவுண் பல்கலைக்கழகத்தில் பயின்று 1868 இல் மருத்துவரானார்(Physician).
1865 ஆம் ஆண்டு ஏப்பிரல் 14 ஆம் திகதி அமெரிக்க வரலாற்றில் துயர்மிக்க ஒருநாள். அமெரிக்காவில் உள்நாட்டுப் போரின் போது அமெரிக்காவை வழிநடத்தி, அமெரிக்காவில் நிலவிய அடிமை முறைக்கெதிராகக் குரல்கொடுத்த, அமெரிக்காவின் 16 ஆவது சனாதிபதி ஆபிரகாம் லிங்கன், வோசிங்டன் டி.சி. யிலுள்ள போட்சினது நாடக அரங்கிலே ‘Our American Cousin’ என்ற நகைச்சுவை நாடகத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது ஜோன் உவில்க்ஸ் பூத் என்ற நடிகரால் தலையில் பின்புறம் சுடப்பட்டார். மறுநாள் லிங்கனது உயிர் பிரிந்தது. ஆபிரகாம் லிங்கன் சுடப்பட்ட அன்று யாழ்ப்பாணத்தில் பிறந்தவரும் மருத்துவர் நேத்தன் உவோட்டின் இளையமகனுமாகிய மருத்துவர் சாமுவேல் ரெட் உவோட்டும் இந்த நாடகத்தைப் பார்வையிட, போட்சினது நாடக அரங்கில் பார்வையாளர் வரிசையில் இருந்தார்.
1846 இல் யாழ்ப்பாணத்தைத் தாக்கிய கொலரா நோய்
தற்போது வட மாகாணத்தில் உள்ள கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா முதலான மாவட்டங்களும் ஏனைய மாகாணங்களின் சில பகுதிகளும் 1846 இல் யாழ்ப்பாண நிருவாக அலகின் கீழேயே இருந்தன.
1846 இல் யாழ்ப்பாணத்தை கொலரா நோய் மிகக் கடுமையாகத் தாக்கியது. 10,000 பேர் வரையில் கொலரா நோயினால் உயிரிழந்தார்கள். கொலரா நோய் தொடுகையின் மூலம் பரவும் என்ற அச்சம் மக்களிடையே காணப்பட்டதால் நோயாளிக்கு அருகே செல்லவும் அவர்களைப் பராமரிக்கவும் பொதுமக்கள் தயங்கினர். இதனால் அதிகமான இறப்புக்கள் ஏற்பட்டன.
மருத்துவர் நேத்தன் உவோட் யாழ்ப்பாணத்திலே கொலராவினது தாக்கத்தைப் பற்றி தனது குறிப்பேட்டிலே பின்வருமாறு எழுதியுள்ளார்:
“கொலராவை மருத்துவத்தின் மூலம் வெற்றிகொள்ளுதல் என்பது பாதிக்கப்பட்டவர்கள் மருந்தைப் பெற்றுக்கொள்ள ஆரம்பிக்கும் காலத்தைப் பொறுத்தது. பல சந்தர்ப்பங்களில் நோயாளர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஓரிரு மணிநேரங்களில் இறப்புக்கள் சம்பவித்தன. இறப்புக்கள் நிகழ்ந்த சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு உரிய தேவைகள் எவையுமே கவனிக்கப்படவில்லை என்பதை அறிந்து கொண்டேன். நோயின் ஆரம்பநிலையில் மருந்து கொடுக்கப்பட்டவர்களும், அதனை உரியமுறையில் பின்பற்றியவர்களும் இறக்கின்ற வீதம் குறைவடைந்தது. இதனால் பெருமளவானோர் காப்பாற்றப்பட்டனர். அநேகமானோர் உயிரிழக்கும் கடைசி நேரத்திலேயே மருத்துவ உதவியை நாடினர்; மருந்தை அருந்துவதற்குச் சம்மதித்தனர். ஒரு கிராமத்தில் 28 பேர் கொலராவினால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 14 பேர் மருந்தைப் பெற்றுக் கொள்ள சம்மதித்தனர்; இவர்களில் 12 பேர் காப்பாற்றப்பட்டனர். அதேவேளை 14 பேர் மருத்துவ உதவியைப் பெற்றுக்கொள்ள மறுத்தனர்; இவர்களில் 12 உயிரிழந்தனர். எனது வழிகாட்டலின் கீழ் யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் பணியாற்றிய உதவியாளர்கள், 900 பேர்வரையில் கொலராவினால் பாதிக்கப்பட்மையை அறிவித்தனர்; இவர்களில் மருந்து பெற்றுக்கொண்ட 600 பேர் காப்பாற்றப்பட்டனர்; 300 பேர் உயிரிழந்தனர்.”
மருத்துவர் நேத்தன் உவோட் 13 வருடங்கள் யாழ்ப்பாணத்திலே சேவையாற்றினார். 1846 இல் நேத்தன் உவோட்டும் அவரது மனைவியும் நோய்வாய்ப்பட்டனர். இதனால் அமெரிக்காவுக்குத் திரும்பினர்.
இன்று போல் விமானசேவைகள் இல்லாத அன்றைய நாளில் நோய்வாய்ப்பட்டவிடத்து மருத்துவ வசதியைப் பெற்றுக்கொள்ள பாய்மரக் கப்பலிலே அமெரிக்க செல்வதற்குக் குறைந்தது 4 மாதங்களாவது தேவை.
அமெரிக்கா திரும்பிய நேத்தன் உவோட் “வெர்மான்ட்“ இலிலுள்ள பெர்லிங்டனில் மருத்துவராகக் கடமையாற்றி வந்தார். இந்தக்காலப்பகுதியில் அவர் கிறிஸ்துவின் செய்தியைப் பிரசங்கிக்கும் அனுமதிச்சான்றிதழையும் இறைதூதர் என்ற நியமனத்தையும் பெற்றுக் கொண்டார். 1859 இல் உவோட் நோயிலிருந்து முற்றாக விடுபட்டார். இதனால் மீண்டும் யாழ்ப்பாணம் சென்று கடமையாற்ற விரும்பி பிரதேசங்களுக்கு தொண்டர்களை அனுப்பும் அமெரிக்க மிசன் சங்கத்துக்கு (ABCFM-American Board of Commissioners for Foreign Missions) விண்ணப்பித்தார்.
கடலிலே கரைந்த மருத்துவர் நேத்தன் உவோட்டின் 2 ஆவது பயணம்
மருத்துவர் நேத்தன் உவோட் அமெரிக்கா திரும்பியதும் மருத்துவர் கிறீன் 1847 இல் யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்து தனது மருத்துவப் பணியை பண்டத்தரிப்பிலே ஆரம்பித்தார். கிறீன் 1848 இல் மானிப்பாயில் மருத்துவமனையையும் மருத்துவக் கல்லூரியையும் ஆரம்பித்து மாணவர்களுக்கு மருத்துவப் பயிற்சியை வழங்கி வந்தார். 1857 இல் மருத்துவர் கிறீன் அவர்களுக்கு காசநோய் அறிகுறிகள் காணப்பட்டதால் அமெரிக்கா திரும்பினார். உடல்நலம் தேறியதைத் தொடர்ந்து கிறீனும் மீண்டும் யாழ்ப்பாணம் புறப்படத் தயாரானார்.
இம்முறை அமெரிக்க மிசன் (ABCFM) கிறீனை தென்னிந்தியாவிலுள்ள மதுரைக்கும், உவோட்டை யாழ்ப்பாணத்துக்கும் அனுப்பத் தீர்மானித்தது. இவ்விடயம் கிறீனுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. உவோட் ஒரு பிரசங்கியாக தகுதிபெற்றிருந்தார். உவோட் யாழ்ப்பாணத்தில் கிறிஸ்துவின் செய்தியை பிரசங்கிக்க விரும்பினார். ஆனால் கிறீனைப் போன்ற தமிழ்ப்புலமை அவரிடம் இல்லை. கிறீன் மதுரையில் தனக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படும் என்று கருதி வெப்பமான காலப்பகுதியில் பழனி மலையில் தங்குவதற்கு அனுமதிக்கும் பட்சத்தில் மதுரையில் பணியாற்றுவதற்குச் சம்மதித்தார்.
மருத்துவர் உவோட் மனைவியுடன் 1860 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 30 ஆம் திகதி போஸ்ரன் துறைமுகத்திலிருந்து ‘கடலரசன்’ (Sea-King) என்ற பாய்மரக் கப்பலில் யாழ்ப்பாணம் நோக்கிய தனது 2 ஆவது பயணத்தை ஆரம்பித்தார். கடற்பயணம் ஆரம்பமாகி 3 வாரங்கள் கழிந்த நிலையில் உவோட்டுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. கடலிலே மருத்துவர் உவோட்டின் உயிர் பிரிந்தது. 1860.11.24 அன்று மருத்துவர் உவோட்டின் உடல் கடலிலே நல்லடக்கம் செய்யப்பட்டது.எனினும் மருத்துவர் உவோட்டின் மனைவி ஹனா, யாழ்ப்பாணத்துக்கான பயணத்தைத் தொடர்ந்தார். ஹனா 5 வருடங்கள் யாழ்ப்பாணத்தில் பணியாற்றியபின் அமெரிக்கா திரும்பினார். 1884 ஆம் ஆண்டு ஹனா இவ்வுலக வாழ்வை நீத்தார்.
ஹனா வூட்வோட், கடற் பயணத்தின் போது மறைந்த தனது கணவர் மருத்துவர் உவோட்டின் இறுதிநாள்களைப் பற்றி விவரித்த பகுதிகள் பின்வருமாறு:
“எனது கணவரது மறைவு எதிர்பாராத ஒன்று; திடீரென நிகழ்ந்தது; ஆனால் சிலநாள்களாக சகுனங்கள் தென்பட்டன. அவரது மறைவுக்கு ஒருவாரத்துக்கு முன்னர் வரை அவர் நலமுடன் இருந்தார்; மிகுந்த மனோவலிமையுடன் காணப்பட்டார். இறப்பதற்குச் சில நாள்கள் முன்புதான் அவர் துன்பப்பட்டார். இது சமிபாட்டுக் குறைவினால் ஏற்பட்டது என்று கருதினோம். மருந்துகள் உள்ளெடுத்ததும் சுகமடைந்தார். கப்பலின் மேற் தளத்துக்கு அவரால் செல்லக் கூடியதாக இருந்தது. மிசனரி ஒருவருடன் கப்பலின் மேற்றளத்தில் நின்றவாறு உரையாடினார். அப்போது உடல் குளிர்வதை அவரது மிசனரி நண்பருக்குத் தெரிவித்தார்; தொடர்ந்து இருதயத்தில் கடுமையான வலி ஏற்பட்டதை முறையிட்டார். வழமையான மருந்துகளை எடுத்துத் தேறினார். இறப்பதற்கு முதல்நாள் அவர் மிக மகிழ்ச்சியாகக் காணப்பட்டார். அவர் மிக நலமுடன் இருப்பதாக நான் ஊகித்தேன். ஆனால் இருதயத்தில் ஏற்பட்ட வலி முற்றாக நீங்கவில்லை என்பதைச் சனிக்கிழமை காலையில் தெரிவித்தார்.
கடல்மீது நிலவொளி படர்ந்திருந்த ஒரு மாலைப் பொழுது; கப்பலின் மேற் தளத்தில் அவர் என் அருகில் இருந்தார். பரந்த கடலில் வீசிய பசுந் தென்றற் காற்று மனதுக்கு இதமானதாகவும் இலங்கையில் வீசும் தென்றலை நினைவூட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். சிறிது நேரத்துக்குப் பின்னர் எமக்கு உதவிய மருத்துவர் நான் கீழே இறங்கி கப்பலின் அறைக்கு செல்வதுக்கு உதவினார். நான் சற்று ஓய்வெடுத்தேன். அன்றைய இரவு அவர் வழமையைவிடவும் நன்றாக உறங்குவார் என்று எண்ணினேன். காலையில் அவரது “இருமல்” சத்தத்தைக் கேட்டேன். நான் நேரத்துடனேயே எழுந்து விட்டேன். அவரைப் பார்க்கையில் நன்றாக உறங்குவதாக உணர்ந்தேன். அவரது நித்திரையைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று நினைத்தேன். சிறிது நேரத்தில் அவரது முனகல் சத்தத்தைக் கேட்டேன். நான் உடனே அவருடன் உரையாட முற்பட்டேன். அவரிடமிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. அவர் ஏற்கனவே மீட்பரின் திருக்கரங்களைச் சென்றடைந்து விட்டார்.”
(தொடரும் )