கூட்டு ஒப்பந்தங்கள்
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்படும் கூட்டு ஒப்பந்தமொன்றின் ஊடாக வேதனங்களை நிர்ணயிப்பது தோட்டத்தொழிலாளரின் வேதனங்களை நிர்ணயிப்பதில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட ஒரு முக்கிய அபிவிருத்தியாகும். தொண்ணூறாம் ஆண்டுகளின் முற்பகுதியில் தோட்டங்களைத் தனியார்மயப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட வேளையில் வேதனங்கள், தொழில்நிலைமைகள் என்பன தொடர்பான கூட்டு ஒப்பந்தமொன்றின் அடிப்படையிலேயே அது மேற்கொள்ளப்படவேண்டுமென தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. எனினும், அவ்வித கூட்டுஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படாமலே தோட்டங்கள் தனியார்மயப்படுத்தப்பட்டன. 1994 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த புதிய அரசாங்கம், வேதனங்கள் தொடர்பான கூட்டு ஒப்பந்தமொன்றைத் தயாரிக்குமாறு தொழிற்சங்கங்களையும் கம்பனிகளையும் கேட்டுக்கொண்டதற்கிணங்க இலங்கைத்தொழிலாளர் காங்கிரசும் தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கமும் இணைந்து அவ்வாறான நகல் ஒப்பந்தமொன்றினைத் தயாரித்தன. 1995 ஆம் ஆண்டுகளில் அது கம்பனிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்குமிடையே கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதும், அது தொடர்பில் எதுவித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை. அதேவேளையில் வேதன உயர்வுகோரி தொழிற்சங்கங்கள் வழமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தன. இறுதியாக, 1998 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கூட்டு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது. கூட்டு ஒப்பந்தங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மீள்பரிசீலனை செய்யப்படுவதால் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு எவ்வித வேதன அதிகரிப்பையும் கோருவதில்லையென தொழிற்சங்கங்கள் வாக்குறுதி அளித்தன.
மேற்படி கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் ஏற்கனவே செலுத்தப்பட்டுவந்த விலை – வேதனப்படியானது (PWS) விலை – பங்குப்படியென (PSS) பெயர் மாற்றப்பட்டு அடிப்படை வேதனத்துடன் ரூபா 6.00 இணைத்துக் கொள்ளப்பட்டதால், ரூபா 101.00 ஆகவிருந்த நாளாந்த மொத்த வேதனம் ரூபா 107.00 ஆக உயரந்தது. இதற்கு மேலதிகமாக, வேலை வழங்கப்படும் நாட்களில் 90.0 வீதத்திற்கும் மேலான நாட்களில் வேலைக்கு சமூகமளிப்போருக்கு ரூபா 14.00 ஐயும் 85.0 தொடக்கம் 90.0 வீதமான நாட்களுக்கு சமுகமளிப்போருக்கு ரூபா 8.00 ஐயும் ஊக்குவிப்புப்படியாக செலுத்த கம்பெனிகள் இணங்கின. இதன்படி, முதலாவது பிரிவினர் ரூபா 121.00 ஐயும் (ரூபா 101.00 ரூபா 6.00ரூபா 8.00), இரண்டாவது பிரிவினர் ரூபா 115.00 ஐயும் (ரூபா 101.00 ரூபா 6.00 ரூபா 8.00) நாளாந்த வேதனங்களாகப் பெற்றனர். ஏனையோருக்கு அதாவது, 85.5 வீதத்திற்கும் குறைவான நாட்களுக்கு சமூகமளிப்போருக்கு ரூபா 107.00 மட்டும் செலுத்தப்பட்டது. இக்காலப்பகுதியில் தொடர்ச்சியாக ஏற்பட்டுவந்த சென்மதி நிலுவைக் குறைநிலை காரணமாக மேற்படி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட மறுநாளே ரூபாநாணயம் 5.0 வீதத்தால் மதிப்பிறக்கம் செய்யப்பட்டது. இந்த நாணய மதிப்பிறக்கத்தினால் வாழ்க்கைச் செலவிலேற்படும் அதிகரிப்பை ஈடுசெய்வதற்காக பொதுத்துறை ஊழியர்களுக்கு மாதாந்தம் ரூபா 500.00ஐ செலுத்துவதாக அரசாங்கம் பிரகடனம் செய்தது. இது பின்னர் தனியார்துறைக்கும் விஸ்தரிக்கப்பட்டு, தொழில் வழங்குநர் தமது ஊழியர்களுக்கு மாதாந்தம் ரூபா 400.00ஐ செலுத்தமுன்வந்தனர். ஓய்வூதியம் பெறுவோருக்கு மாதாந்தம் ரூபா 200.00ஐ மேலதிகமாக செலுத்தியது அரசாங்கம். தோட்டத்தொழிலாளர் இதற்கு ஓரிருதினங்களுக்கு முன்னரே வேதன அதிகரிப்பொன்றை பெற்றிருந்தபடியால், இந்த மதிப்பிறக்கப் படி அவர்களுக்கு செலுத்தப்படவில்லை. தொழிற்சங்கங்கள் இது குறித்து குரலெழுப்பியபோதும், அண்மையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட வேதனஉயர்வை சுட்டிக்காட்டிய கம்பனிகள் இதனை வழங்க மறுத்தன. எனவே, கூட்டு ஒப்பந்தத்தின்மூலம் வேதன உயர்வைப் பெற்றிருந்த அவர்கள் நாணயமதிப்பிறக்கத்தின் விளைவாக உடனடியாகவே அதன்மூலம் தாம்பெற்ற நன்மைகளை இழக்க வேண்டியதாயிற்று. குறிப்பிட்ட மதிப்பிறக்கப்படியானது வழமையானதொரு வேதன உயர்வல்ல என்பதையும், அது அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு விசேடபடி என்பதையும் ஏற்போமாயின், தோட்டத்தொழிலாளரும் அதனைப் பெறுவதற்கு உரித்துடையவர்களே என்பது தெளிவாகும். ஆனால் அது அவர்களுக்கு மறுக்கப்பட்டது.
மதிப்பிறக்கப்படியை தோட்டத்தொழிலாளருக்கு செலுத்துவது தொடர்பான விடயம் தோட்டக் கம்பனிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்குமிடையே சிக்கலானதொரு பிரச்சினையாக உருவெடுத்தது. இதே காலப்பகுதியில் உலகசந்தையில் பெற்றோலியப் பொருட்களின் விலைகள் ஏற்றமடைந்ததாலும், உள்நாட்டுப்போர் காரணமாக பாதுகாப்புச் செலவினங்கள் அதிகரித்ததாலும் சென்மதி நிலுவைப் பிரச்சினை தீவிரமடைந்து நாட்டின் அந்நியசெலாவணி ஒதுக்குகள் வேகமாக கரையத்தொடங்கின. இந்நிலையில் 2001 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அரசாங்கம் ரூபா நாணயத்தை சந்தையில் கட்டின்றி மிதக்கவிடப்பட்டதனால் ரூபாயின் வெளிநாட்டுப்பெறுமதி வீழ்ச்சியடைந்தது. இறக்குமதிப்பொருட்களின் விலைகளும் அதன்விளைவாக தொழிலாளரின் வாழ்க்கைச் செலவுகளும் அதிகரிக்கத்தொடங்கின. எனவே, தொழிற்சங்கங்கள் மறுபடியும் மதிப்பிறக்கப்படியை தமக்கும் செலுத்துமாறு கோரத்தொடங்கின. இது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தினால் கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்கமுடியாத தொழிற்சங்கங்கள் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைமையின்கீழ் தொழிற்சங்கத் தலைவர்கள் மட்டுமே பங்குபற்றும் சத்தியாக்கிரகப் போராட்டமொன்றில் இறங்கின. இப்போராட்டத்திற்குப் பரவலான ஆதரவு கிடைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. மதிப்பிறக்கப்படியை தோட்டத்தொழிலாளருக்கும் பெற்றுக்கொடுப்பதே இதன் பிரதானநோக்கமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பேச்சுவார்த்தைகளின் மூலம் எட்டப்பட்ட முடிவுகள் தொழிலாளருக்கு அதிகம் நன்மையளிப்பனவாக இருக்கவில்லை. இச்சத்தியாக்கிரகப் போராட்டம் வெற்றியடைந்திருக்குமாயின் எல்லாத் தோட்டத்தொழிலாளருமே நன்மை அடைந்திருப்பர் எனக் கூறலாம். மேலும், முன்னர் குறிப்பிட்ட ஊக்குவிப்புக் கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்கும் வேலை வழங்கப்படும் நாட்களில் ஒரு தொழிலாளி 75.0 வீதத்திற்கும் அதிகமான நாட்களில் வேலைக்கு சமூகமளிக்கவேண்டி இருந்தது.
தோட்டத்தொழிலாளர் பொதுவாகவே வேலைவழங்கப்படும் நாட்களில் முழுமையாக வேலைக்குச் சமூகமளிப்பதில்லை. அவர்களது வேலைவருகையானது அவர்களது தேகநலன், குடும்ப அங்கத்தவர்களுக்கு ஏற்படும் சுகயீனங்கள் உட்பட வேறு குடும்பப்பிரச்சினைகள், அவர்களது சமூகக் கடப்பாடுகள், காலநிலைத்தன்மை, தோட்டங்களுக்கு வெளியே சற்று உயர்ந்த வேதனத்தில் மாற்று வேலைவாய்ப்புக்களின் கிடைக்குந்தன்மை போன்ற பல்வேறு காரணிகளால் நிர்ணயிக்கப்படும். அதிலுங்குறிப்பாக, தோட்டங்களுக்கு வெளியே வேறுதுறைகளில் கிடைக்கும் நாளாந்த வேதனங்களை தோட்ட வேதனங்களுடன் ஒப்பிட்டுப்பார்த்தே தோட்டவேலைக்கு சமூகமளிப்பதை அவர்கள் நிர்ணயிப்பர். நுவரெலியா தவிர்ந்த ஏனைய பெருந்தோட்டப் பிரதேசங்களில் தோட்டத்தொழிலாளரது வேலைவருகையானது 75.0 வீதத்திற்கும் குறைவாகவே இருப்பதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. இப்பிரதேசங்களில் பரவலாகக் காணப்படும் மாற்று வேலைவாய்ப்புக்களே இதற்கான பிரதான காரணமாகும். எனவே, 75.0 வீதத்திற்கும் குறைவான நாட்களில் வேலைக்குச் சமூகமளிக்கும் பெரும்பாலான தோட்டத்தொழிலாளர்கள் வேலைவரவு ஊக்குவிப்புப்படியின் நன்மையை அனுபவிக்கமுடியவில்லை என்றே கூறலாம்.
கூட்டு ஒப்பந்தத்தில் இரு வருடங்களுக்கு ஒருமுறையும் ஓரிருசந்தர்ப்பங்களில் ஒருவருடகால இடைவெளியிலும் செய்துகொள்ளப்பட்ட மீள்ஒப்பந்தங்களின் அடிப்படையில் வேதனங்கள் படிப்படியாக அதிகரித்துவந்தன. ஆரம்ப ஒப்பந்தம் கைச்சாத்திட்டபோது (1998) ரூபா 95.00 ஆகவிருந்த நாளாந்த வேதனம் 2006ம் ஆண்டு ரூபா 260.00 ஆக உயர்ந்திருந்தது. கூட்டுஒப்பந்தத்தின்படி அடுத்தமீளாய்வு 2008 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திலேயே நடைபெற்றிருக்கவேண்டும். எனினும், நாட்டில் வேகமாக அதிகரித்துவந்த பணவீக்கம் காரணமாக 2007 ஆம் ஆண்டே தொழிற்சங்கங்கள் வேதனஉயர்வுக்கான கோரிக்கையை முன்வைத்தன. எனவே, அதே ஆண்டு நவம்பர் மாதத்தில் ரூபா 290.00 ஆக அது 30.00 ரூபாவால் உயர்த்தப்பட்டது. இது மொத்த வேதனத்தில் 11.0 வீத அதிகரிப்பை ஏற்படுத்திற்று. அத்துடன், அடிப்படைவேதனம் அதிகரிக்கப்பட்டதால் நிரந்தர ஊழியர்களுக்கான சேமலாபநிதியம், ஊழியர் நம்பிக்கைநிதியம், பிரசவகாலநலன் கொடுப்பனவுகள் என்பவற்றிற்கான பங்களிப்புக்களிலும் அதிகரிப்பு ஏற்பட்டதாக கம்பெனிகள் கூறின. மேற்படி வேதன அதிகரிப்பின் பின்னர் அடுத்த மீளாய்விற்கான திகதி 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின்போடப்பட்டது.
நாளாந்த அடிப்படை வேதனத்தை ரூபா 500.00 ஆக உயர்த்துமாறு 2009 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. எனினும், பலசுற்று பேச்சுவார்த்தைகளின் பின்னர் அதனை ரூபா 285.00ஆக உயர்த்துவதோடு, வேலைவழங்கப்படும் நாட்களில் 75.0 வீதத்திற்கும் அதிகமான நாட்களில் வேலைக்கு சமூகமளிப்போருக்கு வேலைவரவு ஊக்குவிப்பாக நாளாந்தம் ரூபா 90.00 ஐயும், உற்பத்தித்திறன் ஊக்குவிப்பாக ரூபா 30.00 ஐயும் செலுத்துவதற்கு உடன்பாடு எட்டப்பட்டது. இதன்மூலம் நாளாந்த மொத்தவேதனம் ரூபா 405.00 ஆக உயர்ந்தது. ஆனால் இது தொழிலாளரது வேலைவரவுடன் இறுகப்பிணைக்கப்பட்டிருந்ததால் குறிப்பிட்ட நாட்களுக்கு மேலாக வேலைக்கு சமூகமளிப்போருக்கு மட்டுமே இத்தொகை வேதனமாகக் கிடைத்தது என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.
மேற்படி ஒப்பந்தம் 2015ம் ஆண்டு மார்ச் மாதக்கடைசியில் முடிவிற்கு வந்ததால் ஒப்பந்தம் மீளாய்வு செய்யப்பட்டு அதன்கீழ் நாளாந்த அடிப்படை வேதனம் ரூபா 285.00 இலிருந்து ரூபா 380.00ஆக உயர்த்தப்பட்டதோடு, வேலைவரவு ஊக்குவிப்புக் கொடுப்பனவாக ரூபா 30.00 ஐயும், நியம அளவிற்கு மேலாக பறிக்கப்படும் தேயிலைத்தளிர் கிலோ ஒன்றிற்கு ரூபா 17.00 ஐயும் வழங்க இணக்கம் காணப்பட்டது. இதன்படி தொழிலாளர் நாளொன்றிற்கு ரூபா 415.00ஐ மொத்தவேதனமாகப் பெற்றனர். ஆனால் இது முன்னரைப்போன்றே வேலைவரவுடன் இறுகப் பிணைக்கப்பட்டிருந்ததால், வேலைவரவு நிபந்தனையைப் பூர்த்திசெய்யமுடியாதோர் ரூபா 285.00ஐ மட்டுமே நாளாந்த வேதனமாகப் பெற்றனர்.
மேற்படி ஒப்பந்தம் 2011 மார்ச் 31 இல் முடிவுற்றநிலையில் அதேவருடம் யூன்மாதத்தில் 23 பிராந்தியக் கம்பனிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்குமிடையே (இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தேசிய தொழிலாளர் சங்கம், பெருந்தோட்டத் தொழிற்சங்கக்கூட்டு என்பவற்றிற்குமிடையே) செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி நாளாந்த வேதனம் பின்வருமாறு ரூபா 110.00 ஆல் அதிகரிக்கப்பட்டது.
வேலைவரவிற்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவு, வேலை வழங்கப்படும் நாட்களில் வேலைவரவு 75.0 வீதத்திற்கு மேலாக இருந்தால் மட்டுமே செலுத்தப்படும் என்பதால் பெரும்பாலான தொழிலாளர் ரூபா 515.00ஐ வேதனமாகப் பெறும் வாய்ப்பினை இழந்தனர். எனவே, கூட்டுஉடன்படிக்கையில் ஏற்பட்ட மேற்படி திருத்தத்தின் நன்மைகளை அவர்கள் பெறத்தவறினர் என்றே கூறலாம்.
தேயிலை உற்பத்தியும் ஏற்றுமதியும் பெருமளவு மிகையினை உருவாக்குகின்றன. இம்மிகையானது தேயிலையின் ஏற்றுமதிப் பெறுமதிக்கும் அதனை உற்பத்திசெய்து கொழும்பிற்குக் கொண்டுசென்று ஏலவிற்பனைக்கும் ஏற்றுமதிக்கும் தயார்படுத்துவதற்கான செலவுகளுக்குமிடையிலான வித்தியாசத்தைக் குறிக்கும். தோட்டங்கள் மீள்தனியார்மயமாக்கப்படும் வரை இம்மிகையின் பெரும்பகுதியை ஏற்றுமதித்தீர்வை, விற்பனைவரி, CESS போன்ற பல்வேறு வரிகளினூடாக அரசாங்கம் வரிவருவாயாகத் திரட்டியது. உதாரணமாக, 1984இல் இது தேயிலையினது ஏற்றுமதிப்பெறுமதியின் சுமார் 30.0 வீதமாக இருந்தது. தொடர்ந்துவந்த ஆண்டுகளில் இப்பங்கு படிப்படியாக வீழ்ச்சியுற்றதோடு, தோட்டங்கள் தனியார் மயமாக்கப்படுவதற்கு சற்றுமுன்னர் CESS தவிர்ந்த ஏனைய எல்லா வரிகளுமே அகற்றப்பட்டதால், இம்மிகையின் பெரும்பகுதி இப்பொழுது கம்பெனிகளின் கரங்களையே சென்றடைகின்றது. அத்துடன், தனியார்மயமாக்கத்தின் பின்னர் தோட்ட மக்களுக்கு சமூகநலன் சேவைகளை வழங்கும் பொறுப்பினின்றும் தோட்டக்கம்பெனிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, கல்வி, சுகாதாரசேவைகள் என்பவற்றிற்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுள்ளது. அதேபோன்று, வேறுசில சேவைகளை வழங்கும் பொறுப்பு இப்பொழுது பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிறுவனத்திற்கு (Plantation Human Development Authority- PHDT) மாற்றப்பட்டுள்ளதால் கம்பெனிகளின் செலவீட்டில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மறுபக்கத்தில் தொடர்ந்துவந்த ஆண்டுகளில் தேயிலையின் சர்வதேச விலைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பும் ஏற்பட்டது. கம்பெனிகளின் செலவீடுகள் குறைந்து வருமானங்கள் உயர்ந்துள்ள நிலையில் தொழிற்சங்கங்கள் கோரிய ரூபா 500.00 அடிப்படை வேதனத்தைக் கம்பெனிகள் வழங்கி இருக்கலாம் என்றே தோன்றுகின்றது.
தோட்டத்தொழிலாளரின் வறுமையும் வேதன உயர்வும்
தோட்டத்தொழிலாளரின் வேதனங்களை உயர்த்துவதற்கு இன்னொரு வலுவான காரணத்தையும் இங்கு முன்வைக்கலாம். வறுமையின் தாக்கமானது, அதாவது, மொத்த சனத்தொகையில் உத்தியோகபூர்வ வறுமைக்கோட்டு வருமானத்திற்கும் குறைவான வருமானத்தைப் பெறுவோரின் விகிதாசாரம், தோட்ட மக்களிடையேதான் ஆகக்கூடிய மட்டத்தில் இருந்துவருகின்றது என்பதைப் பின்வரும் அட்டவணை காட்டுகின்றது:
1990 க்கும் 2002 க்குமிடையே தேசியமட்டத்தில் வறுமைக்கோட்டிற்குக்கீழே வாழ்வோரின் விகிதாசாரம் 22.0 வீதத்தால் வீழ்ச்சியடைந்தது. ஆனால் இதேகாலப்பகுதியில் தோட்டப்புற மக்களிடையே அது 20.5 வீதத்திலிருந்து 38.4 வீதமாக 40.0 வீதத்தால் அதிகரித்தது. இந்த அதிகரிப்பின் பெரும்பகுதி 1995-96க்கும் 2002க்கும் தோட்டப்புற மக்களிடையே 28.0 வீதத்தால் அது வீழ்ச்சியடைந்ததையும் இப்புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. இக்காலப்பகுதியில் தோட்டப்புற மக்களிடையே வறிய குடும்பங்களின் எண்ணிக்கை 7.8 வீதத்தால் அதிகரித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது (HIES, 2002) 1995-96க்கும் 2012-13க்குமிடையே தோட்டமக்களது வறுமை நிலையானது 34.3 வீதத்தால் வீழ்ச்சியடைந்ததாக அண்மைய புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன (HIES 2012-13). எனினும் அவர்களது வறுமை நிலையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் இவ்வீழ்ச்சி பற்றி ஐயப்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளன. நாட்டிலேயே மிகவும் பின்தங்கிய சமூகமான தோட்ட மக்களினது வறுமை நிலையில் இவ்வித பாரியவீழ்ச்சி எவ்வாறு ஏற்பட்டது என்பது பற்றியே ஐயப்பாடு எழுப்பப்பட்டுள்ளது.
தொடரும்.