இயற்கையுடன் இணைந்து அன்றும், இன்றும், என்றும் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற பழங்குடிகளின் பண்பாட்டு அசைவுகளில் உணவுமுறைகள் பிரதான இடத்தினை வகிக்கின்றன. அவ்வகையில் இன்றும் இலங்கைத் தீவின் கிழக்குக்கரையில் வசிக்கின்ற பூர்வகுடிகளிடம் காணப்படுகின்ற உணவுமுறைகள், அவற்றில் காணப்படுகின்ற மருத்துவக் குணங்கள், வழிபாட்டுப் பயன்பாடுகள் போன்ற நடைமுறை விளக்கி விபரிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். யாவரும் இயற்கையின் பிரதி பலன்களினை ஏதோ ஒரு வகையில் அனுபவித்துக் கொண்டு வருகின்றமை அறிந்த விடயம். ஆனால் பூர்வகுடிகளோ தாம் இயற்கையுடன் கொண்ட அதீத ஈடுபாட்டினால் இயற்கையின் அனைத்துக் கூறுகளினையும் முடிந்தளவு உச்சமாகப் பயன்படுத்திக் கொண்டு வருகின்றமை இற்றைவரைக்குமான வாழ்வாதார நடவடிக்கைகளாகக் காணப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. கட்டுரையின் விரிவுக் கணத்தினை கருத்தில் கொண்டு நேரடியாகவே விடயத்துள் நுழைவோம். அவ்வகையில் இயற்கையில் இருந்து எடுத்துக் கொள்கின்றவற்றில் முக்கியமான, அரிதான சில தாவரவகைகளைப் பற்றிப் பார்க்கலாம்.
01.குருவிச்சை (Viscum)
பொதுத்தன்மை
இது 70 தொடக்கம் 100 வரையான இனங்களைக் கொண்ட பேரினமாகும். இது சாந்தாலேசியே குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரம் ஆகும். இது ஒரு குறை ஒட்டுண்ணித் தாவரமாகும். குருவிச்சையானது அயன மண்டல மற்றும் குளிர் வலயத்தில் வளரக் கூடியது. வைரமான தண்டையுடைய இத்தாவரமானது ஒரு குறை ஒட்டுண்ணித் தாவரமாகும். கிளைகள் 15 தொடக்கம் 80 சதம மீட்டர் (5.9–31 அங்குலம்) நீளமுடையது. இவை வைரமான தண்டையுடைய தாவரங்களையே தனக்கானத் துணைத்தாவரமாகக் கொள்ளும். இது இணைக் கிளையுள்ள முறையில் கிளைவிடும் பச்சை இலையுடைய தாவரமாகும். இது துணைத்தாவரத்தில் இருந்து நீரையும் கனியுப்புகளையும் உறிஞ்சி ஒளித்தொகுப்பு செய்யக் கூடியது. இது ஒரு மரத்தில் ஒட்டுண்ணியாக வளர்வதனால் அதன் கனியுப்புக்களை தான் உறிஞ்சி குறித்த மரத்தினையே அழித்து விடவும் கூடியது.
பயன்பாடுகள்
பூர்வ குடிகளின் உணவு மற்றும் மருத்துவப் பயன்பாட்டினைப் பொறுத்த மட்டில் குருவிச்சைத் தாவரத்தில் இருந்து அதன் இலை, பூ பழம் என அனைத்தும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆரம்ப காலம் தொடக்கம் இன்றுவரை காலமாற்றத்திற்கு அமைய பயன்படுத்தப்படுகிறது.
வழிபாட்டு நடவடிக்கை
பல வகையான தாவரங்களை பூர்வகுடிகள் தமது வாழ்வாதரத்திற்காகப் பயன்படுத்தினாலும் குருவிச்சைத் தாவரமானது சற்று விசேடமான பயன்பாட்டிற்கும் உட்படுத்தப்படுகின்றது. அதாவது இது வேட வழிபாடுகளின் போது பயன்படுத்தப்படுகின்றது. குருவிச்சை இலையினை முன்னைய காலங்களில் வழிபாட்டின் வெற்றிலையின் வருகைக்கு முன்னர் போது வெற்றிலைக்குப் பதிலாகப் பயன்படுத்தி உள்ளனர். தற்காலத்திலும் வனப்பிரதேசங்களில் சடங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமிடத்து வெற்றிலை தீர்ந்து போனால் குருவிச்சை இலையே பயன்படுத்தப்படுகின்றது.
மருத்துவ நடவடிக்கை
பல தாவரங்களை வேடர்கள் தமது மருத்துவ நடவடிக்கைக்குப் பயன்படுத்துவது போலவே இவ்விலையும், அதன் பூவும் கூட மருத்துவ நடவடிக்கைகளுக்காகப் பயன் படுத்தப்பட்டுள்ளன. அதாவது குருவிச்சை இலையானது அடிபட்ட காயங்களுக்கு அதன் தன்மையைப் பொறுத்து அரைத்துக் கட்டப்படும். அதே நேரம் குருவிச்சம் மரத்தின் இயல்பினை நன்கறிந்த பூர்வகுடிகள் அதனை தமக்கேயான தனித்த தன்மையுடன் , அவர்தம் இயற்கை அறிவிக்கு சிறப்பான உதாரணமாகும் வகையில் பின்வருமாறு பயன்படுத்தி உள்ளனர். அதாவது குருவிச்சம் விதையினை மருத்துவக் குணமுள்ள ஏனைய மரங்களில் வளரவிட்டு அதன் இயல்பைக் கொண்ட குருவிச்சம் இலை மற்றும் பூக்களினை பெற்று மருத்துவத் தேவைக்காகப் பயன்படுத்தியுள்ளனர்.
உதாரணமாக திருக்கொண்டை மரத்தில் குருவிச்சம் கொடியை வளர்க்கும் போது குருவிச்சம் பூவானது அதன் இயற்கை நிறமான சிவப்பு நிறத்தினை இழந்து அழகிய மஞ்சள் நிறத்தில் வெளிப்பட்டு இருக்கின்றது. அது போலவே வம்மி மரத்திலும் வளர்த்து உள்ளனர். மஞ்சள் நிறத்தில் பெறப்படும் பூவானது வயிற்றோட்டம், வயிற்றுக்கடுப்பு, வயிற்று கலிச்சல் முதலான நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தி உள்ளனர். தற்காலத்தின் விஞ்ஞான உச்சங்களான கலப்பின பிறப்பாக்க முறைகள், இழைய வளர்ப்பு போன்ற நடவடிக்கைகளுக்கு இச்செயற்பாடுகளே முன்னுதாரணமாய் அமைந்திருக்கும் என்றால் அது புரட்டில்லை.
02. ஒல்லித்தாவரம்
பொதுத்தன்மை
இது அல்லி இலை என்று சில இடங்களில் தவறாக விளங்கப்படுகின்றது. இது அல்லித்தாவரத்தினைப் போன்று காணப்பட்டாலும் நிறம், காய் மற்றும் இலையின் அளவில் வித்தியாசமாகக் காணப்படும். ஒல்லி இலையானது தாமரைக்கு அடுத்ததாக பெரிய இலையும், பூவுங்கொண்டு நீளமான தண்டுடனும் காணப்படும் நீர் வாழ்த்தாவரமாகும். இது பூர்வகுடிகள் தம் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்ததாகக் காணப்படுகின்றது.
வழிபாட்டு நடவடிக்கை
அதாவது பூர்வகுடிகளின் வழிபாட்டின் போது பயன்படுத்தப்படுகின்ற இயற்கை சார் மூலக்கூறுகளில் ஒல்லித்தாவரத்திற்கு ஒல்லிப் பூ, கிழங்கு என்பன மடைவைக்க, படைக்கப் பயன்படுத்தப் பட்டுள்ளன. இன்று பழைய மரபை மறக்காது தொடரும் நோக்கில் மடையிலே ஏனைய பொருட்களுடன் இவைகளும் ஒன்றிரண்டு வைக்கப்படுகின்றன. அடுத்து இதன் மூலம் எடுத்துக் கொள்ளப்படுகின்ற உணவுத் தேவை பற்றி பார்க்கலாம்.
உணவு நடவடிக்கை
உணவுத் தேவை எனும் போது ஒல்லியின் அனைத்துக் கூறுகளும் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது ஒல்லி இலைத்தண்டு, கிழங்கு, பூ முதலியன பயன்படுத்தப்படுகின்றன. இதன் தண்டானது தற்போதைய வெண்டிக்காய் கறி போல சமைத்து எடுக்கப்படும். கிழங்கானது உப்பிட்டு அவித்து, புளிமாங்காய் கடையலுடன் (சம்பல்) சேர்த்து உண்ணப்படும். ஒல்லிக்காயானது நன்கு முற்றி வரும் போது அதை உடைத்தெடுப்பர். அதனுள் கடுகு போன்று விதைகள் காணப்படும். அதனை எடுத்து, காய வைத்து, தீட்டி, ஒல்லி அரிசி தயாரிக்கப்படும். பின்னர் சோற்றரிசியுடன் கலந்தோ அல்லது தனியாகவோ சமைத்து உண்ணப்படும். மிகுதியை இடித்து மாவாக்கி அதனை அரிசி, குரக்கன் மாக்களுடன் கலந்து பிட்டு, ரொட்டி என்பன தயாரிக்கப்பட்டு உணவாக எடுத்துக்கொள்ளப்படும். அதிகளவான சத்துக்களும், எதுவித இரசாயனக் கலப்படங்களும் அற்ற உணவு வகைகளாகவே இவ்வுணவுகள் காணப்படுகின்றன. இவ்வுணவுகள் அனைத்தும் ஒல்லியின் பருவகாலத்தில் சேமித்து வைக்கப்பட்டு மாரிகால உணவுகளாகவே அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இன்றும் இவ்வுணவுகள் கிடைக்கக்கூடியதைப் பொறுத்து பயன்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. குளச்சுத்திகரிப்பு, நில ஆக்கிரமிப்பு, எல்லை விரிவாக்கம் போன்ற காரணிகளால் இத்தாவர வகைகள் முற்றாக அழிவடைந்து விடும் தறுவாயில் இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கதே.
03. சாத்தாவாரி அல்லது தண்ணீர் விட்டான் கிழங்கு {அறிவியல் பெயர் -(Asparagus racemosus)}
பொதுத்தன்மை
தண்ணீர்விட்டான் கிழங்கு அல்லது சாத்தாவாரி (Asparagus racemosus) என்பது அஸ்பராகஸ் இனத் தாவரம். ஒன்று அல்லது இரண்டு மீட்டர் வளரும். இது சரளைக்கல், கற்கள் கொண்ட மணற்பாங்கான பகுதிகளில் வளரும் தன்மை கொண்டது. இதுவொரு பூண்டுத் தாவரமும் கூட. இதன் சிறப்பியல்பு யாதெனில் எவ்வாறான வெப்பமான வரட்சி கொண்ட காடுகளிலும் தூரத்தில் இருக்கும் நீர் நிலைகளில் இருந்து தண்ணீரை உறிஞ்சி வைத்துக் கொள்ளும். இதன் கிழங்கானது நீளமாக சீப்பு சீப்பாக இருக்கும்.
உணவு நடவடிக்கை
கடும் வெப்ப காலங்களில் பூர்வ குடிகள் இதனை வனப்பிரதேசங்ளில் தேடிக்கண்டு பிடித்துக் கொள்வர். இதன் இலையை இடித்து சாற்றை குடிப்பர். அதுபோல காயம், நோவுக்கும் இலையை வைத்துக் கட்டுவர். இது நாவரட்சி, தாகம், ஈழை, வரட்டு இருமல் போன்றவற்றிக்கு இடித்து பொடி செய்து பயன்படுத்தப்படும். இவற்றை விடவும் அதிகளவான மருத்துவக் குணங்கள் கொண்டது. மூலிகை மருத்துவத்தில் மூலிகை அரசி எனவும் அழைக்கப்படுகின்றது. காட்டில் கிடைக்கின்ற ஏனைய கிழங்கு வகைகளைப் போல இதன் கிழங்கையும் உணவுக்காகப் பயன்படுத்தும் வழக்கம் பூர்வகுடிகளிடம் உண்டு. சீப்புச்சீப்பாகக் காணப்படும் இதன் கிழங்கானது அவித்து உண்ணப்படும்.
இது தண்ணீர்விட்டான், சதாவேரி, சதாவரி, நாராயணி, உதகமூலம், சீக்குவை, பறணை, பீருதந்தி, தீக்குறிஞ்சி ஆகிய பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. இதன் ஊசி போன்ற இலைகளும் கிளைகளும் வரிவரியாக மேலேறுவதால் ‘வரிவரி’ எனும் பெயரும் உண்டு. இந்தக் கொடியில் இருந்து கிடைக்கும் கிழங்கானது வெப்பத்தைக் குறைக்கும் குளிர்ச்சித் தன்மைக் கொண்டது என்பதால், ‘நீர்’விட்டான், ‘நீர்’வாளி ஆகிய பெயர்கள் ஏற்பட்டிருக்கலாம். நூறு (சதா) நோய்களைத் தீர்க்கும் மூலம் (வேர்) என்பதால் ‘சதாமூலம்’ என்ற பெயரும் இதற்குண்டு.
மருத்துவ நடவடிக்கை
தண்ணீர்விட்டான் கிழங்கு பால் சேர்த்து அரைத்துக் காயவைத்து பொடி செய்து, தினமும் இரு வேளை சாப்பிட்டுவந்தால் நீரிழிவு குணமாகும். தண்ணீர்விட்டான் கிழங்குப் பொடியைப் பாலில் கலந்து குடித்துவந்தால் உடல் உஷ்ணம், வெட்டைச் சூடு குணமாகும்.
தண்ணீர்விட்டான் கிழங்கு, சுக்கு, மிளகு, திப்பிலி – தலா 50 கிராம் எடுத்துப் பொடி செய்து, தினமும் இரண்டு வேளை இரண்டு கிராம் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டால் அனைத்துவிதமான காய்ச்சல்களும் குணமாகும்.
தண்ணீவிட்டான் கிழங்கு, பூனைக்காலி விதை, நெருஞ்சில், அமுக்கரா, சாலாமிசரி – தலா 100கிராம் எடுத்துப் பொடி செய்து தினமும் பாலில் கலந்து குடித்தால் ஆண்மைக்குறைவு, நரம்புத் தளர்ச்சி குணமாகும். தண்ணீர்விட்டான் கிழங்கு இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. உடலைப் பலமாக்கும். உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும். தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். இசிவை அகற்றும். ஆண்மையை அதிகரிக்கச் செய்யும். அழகிற்காக வளர்க்கப்படும் வகையும் உள்ளது. இது சிறுசெடி அமைப்பில் வளரும். இதனுடைய வேர்கள் பெரியதாக இருப்பதில்லை. உடல் பலம் பெற தண்ணீர் விட்டான் கிழங்கைச் சேகரித்து, நீரில் கழுவி, மேல் தோல் நீக்கி, காயவைத்து தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூள் இரண்டு கிராம் அளவு, பசு நெய்யில் கலந்து, தினமும் காலை, மாலை இரண்டு வேளைகள் சாப்பிட்டுவர வேண்டும்.
ஆண்மை பெருக தண்ணீர் விட்டான் கிழங்கைக் காயவைத்து, தூள் செய்துகொண்டு, வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம், தினமும் இரண்டு வேளைகள், ஒரு மாதம் வரை தொடர்ந்து சாப்பிட்டு, ஒரு டம்ளர் பால் குடித்து வர வேண்டும்.
மாதவிடாயின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த நான்கு தேக்கரண்டி அளவு தண்ணீர் விட்டான் கிழங்கு சாற்றுடன், 2 தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து பருக வேண்டும். தினமும் மூன்று வேளைகள், 5 நாட்களுக்குச் செய்ய வேண்டும்.
கால் எரிச்சலைக் கட்டுப்படுத்த தண்ணீர் விட்டான் கிழங்கிலிருந்து சாறு எடுத்து, காலையிலும், படுக்கைக்குப் போகும் முன்பும், காலிலும், பாதத்திலும் பூச வேண்டும். குணமாகும் வரை சிகிச்சையைத் தொடரலாம்.
தண்ணீர்விட்டான் கிழங்கு பானம்
பசுமையான தண்ணீர் விட்டான் கிழங்குகளைக் கழுவி, தோல் நீக்கி, இடித்து, சாறு எடுக்க வேண்டும். ஒரு கோப்பை சாற்றுடன் ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து காலையில் பருக வேண்டும். 3 முதல் 7 நாட்கள் வரை தொடர்ந்து சாப்பிடலாம். இது ஒரு பல்நோக்கு ஆரோக்கிய மருந்தாகும். இதனால், இளைத்த உடல் பெருக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்குப் பால் சுரப்பு அதிகமாகும், நீர்ச்சுருக்கு, நீர்க்கட்டு, வயிற்று எரிச்சல் ஆகியவையும் குணமாகும்.
04. காஞ்சிரம் பழம்- POISON NUT
அறிவியல் பெயர்- Strychnos nux -vomica- loganiaceae.
பொதுத்தன்மை
நாக்ஸ் வாமிகா, விஷம் கொட்டை, சிமேன் ஸ்ட்ரைகோனஸ் மற்றும் குவாக்கர் பொத்தான்கள் என்றும் அழைக்கப்படும் ஸ்ட்ரைகோனஸ் மரம் (Strychnos nux-vomica L.), இந்தியா, மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கும் தாயகமாக கொண்ட ஒரு இலையுதிர் மரமாகும். இது திறந்தவெளி வாழ்விடங்களில் வளரும் லொகானியேசியே குடும்பத்தை சார்ந்த ஒரு நடுத்தர மரம் ஆகும். அதன் இலைகள் முட்டை மற்றும் 2-3.5 அங்குலங்கள் (51-89 மிமீ) அளவுள்ளன.
இது மரத்தின் வட்டத்திற்குள் விதைகளிலிருந்து பெறப்பட்ட மிகையான நச்சு, தீவிர கசப்பான அல்கலாய்டுஸ் ஸ்டிரைச்னைன் மற்றும் புரோசின் ஆகியவற்றை பெறுவதற்கு முக்கிய ஆதாரமாக உள்ளது, பச்சை நிற ஆரஞ்சு பழம். விதைகளில் சுமார் 1.5% ஸ்ட்ரைக்னின்கள் உள்ளன, மற்றும் உலர்ந்த பூக்கள் 1.0% கொண்டிருக்கும். இருப்பினும், மரத்தின் பட்டை கூட புளுசினையும் பிற விஷத்தன்மை உடைய கூட்டுப்பொருள்களை கொண்டுள்ளது. மாற்று மருத்துவத்தில் பல நிலைமைகளுக்கு சிகிச்சையாக ஸ்ட்ரைநினோஸ் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் மருத்துவ சான்றுகளால் இந்த கூற்றுகள் நிரூபிக்கப்படவில்லை. பல நாடுகளில் ஸ்ட்ரைநினின் பயன்பாடு மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது, மேலும் காட்டு விலங்குகள், நரிகள், மற்றும் கொறித்துண்ணிகள் உட்பட பல வகையான பாலூட்டிகளைக் கொல்ல உணவாக பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.தற்செயலாக தோலின்மீது பட்டாலோ அல்லது சுவாசித்தாலோ நச்சாக மாறிவிடும். இது பெரும்பாலான இடங்களில் எட்டி மரம் எனப்படுகிறது.
விஷத்தன்மை உள்ள பகுதி
இலை,வேர், காம்பு பட்டை ஆகிய அனைத்தும் விஷத்தன்மை உடையது. உயிரையும் கொள்ளும் அளவிற்கு விஷத்தன்மை கொண்டது.
அதனால் இதை கவனத்துடன் கையாள வேண்டும்.
மருந்தாக பயன்படும் பகுதி
இம் மரத்தின் விதைகள், பட்டை, வேர், கட்டை ஆகிய பகுதிகள் மருந்தாக பயன்படுத்தப்படுகின்றன. இதன் பொதுவான குணம் வெப்பத்தை உண்டாக்கும். வாயுவை முற்றிலும் அகற்றும் தன்மை கொண்டது. மேலும் சிறுநீரை பெருக்கும். நரம்பு மண்டலத்தை இயக்கும். வயிற்று வலி, வாந்தி, அடி வயிற்று வலி, குடல் எரிச்சல், இரத்த ஓட்டம், கண் வியாதி, மன அழுத்தம், நரம்பு சம்பந்தமான நோய்கள், தலைவலி, மாதவிடாய் பிரச்சனைகள், மூச்சுத்திணறல் போன்றவற்றை குணப்படுத்தும்.
இந்திய மருத்துவத்தில் அபின், மிளகு உடன் சம அளவில் மாத்திரையாக செய்யப்பட்டு, வெற்றிலை சாறுடன் நரம்பு மண்டல நோய்களுக்கு மருந்தாகிறது. சீன மருத்துவத்தில் எட்டி விதைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட களிம்பு முக முடக்கு வாதம் நோயான வெள் உனக்கு வாதத்தை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
இதன் இலைகளை அரைத்து, நாள்பட்ட உரியும் காயங்கள் மற்றும் புண்களுக்கு பற்று போடப்படுகிறது. விதை மருந்து நக்ஸ்வாமிகா எனப்படுகிறது. இது பல விதமான நோய்களை குணப்படுத்த உதவுகிறது. வயிற்றுப்போக்கு சீதபேதி, வலிப்பு நோய், காய்ச்சல், நீரிழிவு, காலரா, கால் கை வலிப்பு, மூட்டுவலி, நரம்பு மண்டல நோய்கள், தூக்கமின்மை, முடக்குவாதம், ஆண் மலடு, வாந்தி ஆகியவற்றில் மிகக் குறைந்த அளவில் மருந்தாக பயன்படுகிறது. இதன் வேர் பட்டை இருபது கிராம் எடுத்துக்கொண்டு இருநூறு மில்லி லீட்டர் நீரில் போட்டு காய்ச்சி குடிநீராக மூன்று வேளை கொடுக்க காலரா, வாந்தி, பேதி குணமாகும்.
இதன் சூரணத்தை வெந்நீரில் ஒன்று முதல் இரண்டு கிராம் கொடுக்க வாத வலி தீரும். மரப்பட்டை பத்து கிராம் நூறு மில்லி லீட்டர் நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி மேலே தடவ சொறி சிரங்கு, ஆறாத புண் குணமாகும். இதன் விதைகள் நாடுகளுக்குள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பூர்வ குடிகளின் பயன்பாடுகள்
இந்தப்பழமானது பலவகையான மருத்துவகுணம் கொண்டதாகக் காணப்பட்டாலும், நச்சுத்தன்மையும் கொண்டதாகும். ஆகவே இம்மரத்தினைக் கையாள்வது என்பது அனுபவம் உடையோரால் மட்டுமே முடியும். அவ்வாறான இயற்கை அறிஞர்களான பூர்வ குடிகளிடையே இதன் பயன்பாடானது இவ்வாறு காணப்படுகிறது.
காஞ்சிரம் பழத்தை இவர்கள் ஒரு வித போதையாகப் பயன்படுத்துகின்றனர். அதாவது இதன் பழத்தின் விதையினை முறையாக நச்சு நீக்கம் செய்து நான்கில் ஒரு பங்கு அளவு கொண்டதாக எடுத்து உண்கின்றனர். ஒருவர் இவ்வாறு 41 நாட்கள் தொடர்ச்சியாக உண்டு வருவாராயின் அவருக்கு எவ்வகையான விஷங்களும் பாதிப்பை ஏற்படுத்தாது. அதே நேரம் அந்தக்குறித்த நபருக்கு நாய், பாம்பு போன்ற விசமுள்ள எது கடித்தாலும் கடித்தவைகள் இறந்து விடும். எந்த வித நோய்களும் இலகுவில் தீண்டாது. தப்பித்தவறி எதாவது நோய் வந்தால் அந்த நோயினால் தான் அவருக்கு இறப்பு. அதே நேரம் தமது வீடுகளை அமைக்கு போது இம்மரத்தினைப் பயன்படுத்தி உள்ளனர். காரணம் மிக நீண்ட காலத்திற்கு பழுதடையாமல் வைரமாகக் காணப்படும் என்பதனால். இம்மரத்தின் வடக்கு பக்கம் செல்லும் வேரினை எடுத்து மாந்திரீக வேலைகள் செய்யவும் பயன்படுத்துகின்றனர்.
5. பக்கிளிய மரம்
பூர்வகுடிகளின் இயற்கையுடன் இணைந்த வாழ்வியல் முறைகளில் இம்மரமானது மிக நெருக்கமானதும், மறக்க முடியாத மரமும் ஆகும். இம்மரமானது மிகவும் அரிய மரமும் கூட. கண் பார்க்கும் இடமெல்லாம் இருந்த இம்மரமானது கண் காண முடியாத வனாந்தர தேசங்களிலேயே இன்று காணப்படுகிறது. இதன் உபயோகம் இவ்வாறு அமையும். அதாவது இம்மரத்தின் அடியில் மரத்தை வளைத்து வட்டமாக கீறிட்டு ஒரு பக்கம் பாத்திரத்தை வைக்க குறித்த நேரத்தின் பின்னர் பாத்திரம் முழுவதுமாக அதன் பால் நிரம்பி வரும். பின்னர் அதனை எடுத்து மரத்தின் தடி போன்று முறுக்கி அதனை இன்னுமொரு தடியுடன் இறுகச்சுற்றி ஒரு தீப்பந்தம் போல் எடுத்துக் கொள்வர். வேட வழிபாட்டின் போது அதுவே வெளிச்சமாகப் பயன்படுத்தப்படும். விடிய விடிய மெழுகு போன்று எரிந்து கொண்டே இருக்கும். காற்றுக்கோ, தூறல் மழைக்கோ கூட அது அணைந்து விடாது. சமீப காலம் வரைக்கும் கூத்துக்களரிகளில் கூட தீப்பந்தமாக பயன்படுத்தப்பட்டது. அதே நேரம் இம்மரத்தின் விதையானது மரமுந்திரியை ஒத்ததாகக் காணப்படும். அதனை உணவாக எடுத்தும் கொள்வர்.
06 . உளுமுந்தம் அல்லது உளுவிந்தம் மரம்
பொதுத்தன்மை
இவ்விலையானது பூர்வ குடிகளின் வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்த ஓர் இலையாகும். அதாவது இவ்விலையானது பூர்வகுடிகள் தம் தொழில் நடவடிக்கைகளின் போது பெரிதும் உதவுகின்றது. இதன் இலையானது கருங்காலி மற்றும் காயான் இலையைப் போன்ற தன்மை கொண்டதாகக் காணப்படும். ஒரு பற்றைத் தாவரம் போன்றே காணப்படும். இதன் பழம் உண்பதற்கு உகந்தது. பழம், இலை என்பன விக்ஸ் மரத்தின் இலையை ஒத்த வாசனை கொண்டதாகக் காணப்படும். அன்று தொடக்கம் இன்றுவரை மாட்டு வண்டிலுக்கான கேட்டித் தடிக்காகப் பயன்படுத்தப்படுகின்றது. இது மிகவும் உறுதித்தன்மையுடன் வளையும் தன்மை கொண்டதாகவும் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கதே.
தொழில் நடவடிக்கை
வேடர்களின் பூர்வ தொழிலான தேனெடுத்தலின் போது இவ்விலையானது பாரிய நன்மை பயக்கும் பங்களிப்பிற்காகப் பயன்படுத்தப் படுகின்றது. அதாவது ஆண்கள் தேனெடுக்க வனத்தினுள் சென்று தேன் இருக்கும் மரப்பொந்துகளை இனங்கண்டு கொள்ளுவர். பின்னர் உழுமுந்தம் இலைகளை வாயினுள் இட்டு நன்றாக மென்று விட்டு அதன் சக்கையை குறித்த தேன் பொந்தினுள் ஊதி விடுவர். அவ்வாறு செய்யுமிடத்து தேன் பொந்தினுள் இருக்கின்ற தேன் பூச்சுகள் அனைத்தும் மயங்கிவிடும். பின்னர் அவர்கள் தேனை இலகுவாக எடுத்துக் கொள்ள முடியும். இம்மரத்தின் அதீத வாசனைத் தன்மையே தேனீக்களை மயக்கமுறச் செய்ய காரணமாக அமைகின்றது. அதேநேரம் இதன் பழம் உணவுக்காகவும் எடுத்துக்கொள்ளப் படும்.
07.மருக்கால/ மருக்காரை மரம்
பொதுத்தன்மை
பேச்சு வழக்கில் இம்மரமானது மருக்காலை என்று அழைக்கப்படுகிறது. இதுவொரு முட்கள் கொண்ட பற்றை மரமாகும். இதன் காய்கள் அசலாக கொய்யாக் காய்கள் போன்று காணப்படும். காய்கள் பழுத்தால் விளாம்பழத்தின் மணத்தை ஒத்ததாக மணம் வீசும். ஆனால் இதுவொரு கொடிய நச்சு கொண்ட மரமாகும். இதன் வேரும் அவ்வாறே காணப்படும்.
தொழில் நடவடிக்கை
இம்மரமானது என்னதான் நச்சுத்தன்மை கொண்டதாகக் காணப்பட்டாலும் பூர்வகுடிகள் அதனையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றனர். அதாவது இந்த மரத்தின் காயைப்பறித்து கட்டையில் அல்லது கல்லில் வைத்து தட்டி நசுக்கி எடுப்பர். பின்னர் அதனை மீன்கள் செறிவாக உள்ள குளங்களில் கொட்டி கலந்து விடுவர். இவ்வாறு செய்யுமிடத்து மருக்காரைக் காய்களின் சக்கையானது மீன்களின் கண்களில் ஒட்டிக்கொள்ளும் அவ்வாறு நடக்கும் இடத்து சிறிது நேரம் கழித்து மீன்கள் மயங்கி நீரின் மேலே மிதந்து வரும். அவ்வேளை அவற்றை பொறுக்கி எடுத்துக் கொள்வர். மருக்காலைக் காயைப் போல தெகிளம் வேர், காண்ட வேர் போன்றவற்றையும் நீரில் கலந்து மீன்பிடிக்கும் முறையானது பூர்வ குடிகளிடம் இன்றுமுண்டு.
நன்றி- (https://www.vikatan.com/health/healthy/92641-health-benefits-of-pirandai)
தொடரும்.