தொலைய விடுதல் நியாயமா?
Arts
10 நிமிட வாசிப்பு

தொலைய விடுதல் நியாயமா?

May 9, 2022 | Ezhuna

வட பிராந்தியத்தின் சுதேச மரங்களின் பயன்கள் பற்றி அறிதல் என்பது தனியே அச்சுப்பிரதிகளிலிருந்தும் இணையத்திலிருந்தும் நாம் அறிந்துக்கொள்வதோடு மட்டுப்படுத்தப்படாது. ஏனெனில் ஏனைய பிராந்தியங்களோடு ஒப்பிடுகையில், வட பிராந்தியத்து மரங்கள், அவற்றின் பயன்கள் சார்ந்து வெளிவந்த அச்சுப்பிரதிகளும் தகவல்களும் மிகவும் வரையறுக்கப்பட்டவை. அவற்றிலும் நாம் இன்று அணுகக் கூடியதாக இருப்பவை மிகமிகக் குறைவானவையேயாகும். மூன்று தசாப்தங்கள்  நீடித்த யுத்தம், எம்மிடமிருந்து பறித்துச் சென்ற செல்வங்களுள் அவையும் சில.

மரங்களுக்கும், மக்களுக்கிடையிலான பந்தமெனப்படுவது மரங்களால் மக்கள் பெறும் நன்மைகளிலேயே அதிகம் தங்கியிருக்கிறது. அந்நன்மைகள் காலம் நிர்ப்பந்திக்கும் தேவைகளுக்கமைய மாறிவருவதுடன் அவை சார்ந்த அறிவு அனுபவ அறிவாக சந்ததிகளுக்குக் கடத்தப்படும். புதிய அபிவிருத்தி உருவாக உருவாக, மரங்கள் வழங்கும் சேவைகளை நவீன கண்டுபிடிப்புகள் பிரதியீடு செய்யச் செய்ய, மரங்களிலிருந்து நாம் நேரடியாகப் பெறும் பயன்கள் குறைந்துகொண்டே செல்லும். இது தொடர்ந்து  நடைபெற, மெது மெதுவாக அந்த அனுபவ அறிவு அடுத்த சந்ததிக்குக் கடத்தப்படாமலே போகும்.   

நிலைமை இப்படியிருக்க வன்னிப் பெருநிலப்பரப்பிலே மரங்கள் சார்ந்த தகவல்களும் அறிவும் எம் முதியோரிடம், அவர்களது அனுபவமாக, அறிவாக எந்தவொரு முயற்சிகளாலும் ஆவணப்படுத்தப்படாமல் இன்றும் காணப்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நீங்கள் நம்பித் தான் ஆகவேண்டும். வன்னிப் பெருநிலப்பரப்பின் ‘பழைய கிராமங்களிலே’ வதியும் முதியவர்களிடம் காணப்படும் இந்தப் பாரம்பரிய அறிவு பல சந்தர்ப்பங்களில் என்னைப் பிரமிக்க வைத்திருக்கிறது. 

பழைய கிராமங்கள்

‘பழைய கிராமங்களிலே’ என நான் குறிப்பிட்டுக் கூறுவதற்கும் காரணமிருக்கிறது. கடந்த மூன்று தசாப்தங்களிலே வன்னிப்பெரு நிலப்பரப்பின் சனத்தொகையும் அபிவிருத்தியும் வேகமாய் வளர்ந்தமையை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். யுத்த காலங்களில் நடந்த தொடர் இடப்பெயர்வுகளின் போதெல்லாம் அல்லலுற்று வந்த சனத்தொகையைத் தாங்கி நின்று வாழ்வளித்த பெருமைக்குச் சொந்தமான நிலம் அது. ‘வந்தாரை வாழவைக்கும் வன்னித் திருநாடு’ என இன்றும் பலர் பெருமையாக மார்தட்டிக் கொள்வர். வன்னியின் சனத்தொகை சடுதியாக அதிகரித்த போதெல்லாம் அடர் மரங்கள் செறிந்திருந்த காடுகள், தம்மைத் தியாகம் செய்து,  பரிதவித்து வந்த மக்களுக்கு நிலம் வழங்கின.  அம்மக்களுள் இடைத்தங்கல் முகாம்களில் நீண்ட காலம் தங்கிய மக்களும் கூட அடங்குவர். அவர்களின் மீள் இடப்பதிவு காரணமாக புதிய பல கிராமங்கள் உருவாகின.

இப்புதிய கிராமங்களையும், பழைய கிராமங்களையும் அவற்றின் பெயர்களைக் கொண்டு இலகுவாக வேறு பிரித்தறியலாம். பழைய கிராமங்களின் பெயர்கள் பொதுவாக பணிக்கர், வேடர், சாஸ்திரி, பண்டாரம், கொல்லர், தட்டார் என குலத்தொழிலையோ அல்லது பூவரசு, ஆத்தி, காஞ்சூரை, புளி என வன்னியின் சுதேச தாவரங்களின் பெயரையோ  முதலடியாகவும், நீர் நிலையைக் குறிக்கும் பெயர்களான மடு, குளம், ஆறு, மோட்டை போன்றவற்றை ஈற்றாகவும் கொண்டிருக்கும். மாறாக புதிய கிராமங்களோ, தாம் உருவாக்கப்பட்ட காலத்தில் அவசியமாகப்பட்ட அல்லது நினைவாகக் கொள்ளப்படவேண்டியதாகக் கருதப்பட்ட பெயரை முதலடியாகவும் ‘நகர்’, ‘புரம்’ போன்ற அபிவிருத்தியடைந்த பகுதிகளைக் குறிக்கும் பெயர்களை ஈற்றாகக் கொண்டனவாகக் காணப்படும். ஸ்ரீ நகர், ஈஸ்வரிபுரம், சுந்தரபுரம், கணேசபுரம் போன்ற கிராமப்பெயர்களை உதாரணமாகக் குறிப்பிடலாம்.

ஏலவே காணப்பட்ட அடர் காடுகள் அழிக்கப்பட்டு புதிய கிராமங்கள் உருவாக்கப்பட்டமையால், அப்புதிய கிராமங்களில் வாழும் மக்களுக்கு காடுகளில் இருக்கும் மரங்களின் பயனை அனுபவிக்கும் வாய்ப்பு மிகவும் அரிதாகவே கிடைத்தது. முதலில் 1970 களில் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமைகளில் மலையக மக்கள் பலர் வந்து குடியேறினர். பின்னர் அதிகளவில் 1990 களின் பின்னரே மக்கள் அங்கு குடியமர்ந்தனர்; குடியமர்த்தப்பட்டனர்.  ஆதலினால் அவர்களுள் பெரும்பாலானோருக்கு அக்காடுகளில் காணப்படும் மரங்களைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை. வன்னி தேசத்து சுதேச மரங்கள் பற்றி அவர்கள் அறிந்திராமலிருந்ததால் அவர்களுக்கும் மரங்களுக்குமான தொடர்புகள் புதிதாக உருவாகவில்லை. உண்மையில் இத்தொடர்புகள் ஓரிரு தசாப்தங்களில் உருவாக முடியாதவை. அவை உருவாகப் பல நூற்றாண்டுகள் தேவை. அத்துடன் போதியளவு வளங்களும் (மரங்களும்) காணப்பட வேண்டும். இவை இரண்டுமே இல்லாதவிடத்து அத்தொடர்புகள் உருவாகுமென நாம் எதிர்பார்க்கவும் இயலாது. அத்தொடர்புகள் இல்லாததால் அம்மக்கள் தமக்குக் கிட்டிய அயலில் காணப்படும் காடுகளைக் கூட விறகுக்காகவும், வேறு பொருளாதாரத் தேவைகளுக்காகவும் அழிக்கவே தலைப்பட்டார்கள்.

மரங்கள் சார்ந்த பாரம்பரிய அறிவு

அத்தி மரம்

பழைய  கிராமங்களிலே ‘சந்ததி சந்ததியாக வதிபவர்கள்’ மத்தியிலே அதிலும் குறிப்பாக அறுபது வயதைத் தாண்டிய முதியவர்கள் மத்தியிலே மரங்கள் சார்ந்த அறிவு செறிந்து கிடப்பதைக் காணமுடிகிறது. இங்கு நான் ‘சந்ததி சந்ததியாக வதிபவர்கள்’ எனக்குறிப்பிடக் காரணமிருக்கிறது. இடப்பெயர்வுகள் கொடியவை. தாம் காலம் காலமாக வாழ்ந்த ஊரை விட்டு யுத்தத்தின் கொடுமையால் இடம்பெயர்ந்த பலரும் காலத்தின் தேவை கருதி, தமக்கு அடைக்கலம் வழங்கிய ஊர்களிலே தங்கி விடும் வழக்கத்தையும் கொண்டிருந்தார்கள். இந்தப் பழைய கிராமங்களில் அத்தகைய மக்களும் வதிகிறார்கள். தொடர் இடப்பெயர்வுகளைச் சந்தித்தும் பற்பல இழப்புகளைக் கடந்தப்போதும் எவற்றுக்குமே சளைக்காமல் மீண்டும் மீண்டும் தம் ஊருக்கே வந்து குடியமர்பவர்களும் இல்லாமல் இல்லை. அத்தகைய முதியவர்களிடம் தான் எங்கள் சுதேச மரங்கள், அவற்றின் பயன்கள் சார்ந்த பாரம்பரிய அறிவு பொக்கிஷமாகப் பொதிந்து போய்க்கிடக்கிறது.

இங்கு பாரம்பரிய அறிவு என நான் குறிப்பிடுவது, சுதேச மக்கள் மற்றும் உள்ளூர் சமூகங்கள்,  கடந்த பல நூற்றாண்டுகளாகத் தாம்  பெற்ற அனுபவங்களைக் கொண்டு விருத்தி செய்து, உள்ளூர் சுற்றுச் சூழல் மற்றும் கலாசாரத்துக்கேற்ப தகவமைத்துக்கொண்ட நடைமுறைகள், கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவு ஆகியவற்றையே குறிக்கிறது. இவ்வறிவு ஒரு சந்தியிலிருந்து மற்றைய சந்ததிக்கு வாய்மொழி மூலமாகவே கடத்தப்படும். இது பொதுவாக ஒருவரால் உரிமை கோரப்படாது. மாறாகக் கூட்டாகவே உரிமை கோரப்படும். உதாரணமாக, சமூகங்கள்/குடும்பங்கள் சார்ந்ததாக இக்கூட்டுரிமை காணப்படும். கதைகளாக, பாட்டுகளாக, கலாசார வடிவங்களாக, பழமொழிகளாக, விடுகதைகளாக, பெறுமானங்களாக, நம்பிக்கைகளாக, சடங்குகளாக, சமூகச் சட்டங்களாக, உள்ளூர் மொழியாக, தாவர விலங்கினங்களின் தேர்வு செய்யப்பட்ட இனப்பெருக்கம் போன்ற விவசாய நடைமுறைகளாக இப்பாரம்பரிய அறிவு பல வடிவங்களைக் கொண்டிருக்கிறது. சில வேளைகளில் ஆயிரமாண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருக்கின்ற, பாடப்படுகின்ற, ஆடப்படுகின்ற, வரையப்படுகின்ற, செதுக்கப்படுகின்ற, ஓதப்படுகின்ற வாய்மொழிமூலப் பாரம்பரியமாகவும் இது விளிக்கப்படுகிறது. இயற்கையைப் பொறுத்தவரையிலே, இப்பாரம்பரிய அறிவானது இன்றளவும் நடைமுறைக்குச் சாத்தியமானதாகவே காணப்படுகிறது.

பாரம்பரிய அறிவின் முக்கியத்துவம்

பாரம்பரிய அறிவின் பெறுமதியை உணர்ந்து உலகெங்கிலும் அதைப் போற்ற ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த அறிவானது அதை அன்றாடம் தம் வாழ்வில் பயன்படுத்தும் மக்களுக்கு மட்டுமன்றி நவீன தொழிற்றுறைக்கும் விவசாயத்துக்கும் கூட மிக அவசியமானது. நூற்றாண்டுகாலமாக மக்கள் தம் அனுபவத்தினால் உணர்ந்து பெற்றுக்கொண்ட இவ்வறிவுக்கு நவீன விஞ்ஞானம் எவ்வகையிலும் ஈடாகாது. மாறாக,  நவீன விஞ்ஞான ஆய்வுகளுக்கான மூலாதாரமே இப்பாரம்பரிய அறிவு தான் என்றால் மிகையாகாது.

அத்திப்பழம்

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும் இவ்வறிவே மிக அத்தியாவசியமாகவிருக்கிறது. இன்று முழு உலகையுமே பெரும் அழுத்த துக்குள்ளாக்கியிருக்கும் பிரச்சினைகளாக கால நிலை மாற்றமாகட்டும்; நில முகாமைத்துவமாகட்டும்; தீரா நோய்களுக்கான நிர்ப்பீடனமும் தீர்வுமாகட்டும். எதுவாயினும் அதற்கான தீர்வை இப்பாரம்பரிய அறிவு தன்னகத்தே கொண்டிருக்கிறது. உலகளாவிய உணவுப்பாதுகாப்பை அடைவதற்குக்கூட இவ்வறிவு பல வாசல்களைத் திறந்திருக்கிறது.  உண்மையில் இவ்வறிவானது மனிதகுலத்தின் மரபுரிமையாகும். இதனைப் பாதுகாத்து வருங்கால சந்ததியினருக்கு வழங்க வேண்டியது எமது கடமையாகும்.

சந்ததிகளுக்கிடையிலான சமத்துவம்

தற்காலத்தில் உலகளாவிய ரீதியிலே பாரம்பரிய அறிவைப் பொறுத்தவரையிலே சந்திகளுக்கிடையே சமத்துவமற்றதோர் நிலைமையே காணப்படுகிறது. அதற்கு இலங்கையும் வன்னிப்பிராந்தியமும் கூட விதிவிலக்காகி விடவில்லை. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானதோர் நிலைமையாகும். எங்களுடைய கல்வி நடைமுறைகளை சுதேச, பாரம்பரிய அறிவையும் மொழியையும் ஒருங்கே இணைத்ததாக அமையச் செய்தலானது இவ்வறிவு தொடர்பில் சந்ததிகளுக்கிடையிலான சமத்துவத்தை உருவாக்குவதற்கான முக்கிய வழிமுறையாகும். அதுவரை காத்திருக்காமல் இன்றே நாம் செயற்படத்தொடங்க வேண்டும். மரங்களுடனும் இயற்கையுடம் இணைந்ததாக எங்கள் மூத்தவர் கொண்டிருக்கும் அனுபவங்களையும் அறிவையும் நாம் செவிமடுக்க வேண்டும். ஆவணப்படுத்த முனையவேண்டும். எண்ணிமத் தொழில் நுட்பத்துடனேயே வாழ்ந்துவரும் எமது சந்ததிக்கு அது ஒன்றும் பெரிய காரியமல்லவே. செய்யவேண்டுமென்ற மனம் மட்டுமே போதும். வெற்றி தானே வந்து சேரும்.

‘காணாமல் பூ பூக்கும்; கண்டு காய் காக்கும்; அது என்ன? ‘என்ற விடுகதையும் ‘அத்தி பூத்தாற்போல’ என்ற பழமொழியும் எங்கள் சந்ததிக்கே அரிதாகத் தெரியும் போது வருங்கால சந்ததிக்கு எப்படித் தெரியப்போகிறது? அத்தி மரம் சார்ந்த விடுகதைக்கும் பழமொழிக்கும் பின்னேயிருக்கும் விஞ்ஞானம் நவீன ஆராய்ச்சிகள் நிரூபிக்க முன்னரே வழக்கிலிருந்தது. எம்மில் எவருக்கு அத்தி மரத்தை அடையாளம் காணதெரியும்? கல்லத்தி[1] காட்டத்தி[2], குருகத்தி[3], கொடியத்தி[4], சிற்றத்தி[5], சீமையத்தி அல்லது தேனத்தி[6], செவ்வத்தி[7], அத்தி[8], நீரத்தி[9], பேயத்தி[10], பேரத்தி[11], மரந்தின்னியத்தி[12], மலையத்தி[13], விழலத்தி  போன்ற அத்தியின் வகைகள் பற்றித்தெரியும் ?

வன்னியின் பழைய கிராமங்களிலே வதியும் முதியவரொருவரிடம் போய்க் கேட்டுப்பாருங்கள். அத்திமரத்தை எப்படி அடையாளம் காணலாம் என்பது தொட்டு அதன் இலை, காய், தண்டு, பட்டை எப்படி இருக்கும், அம்மரம் பொதுவாக எங்கெல்லாம் இயற்கையாக வளரும், அதன் பயன்கள் என்ன என விலாவரியாகச் சொல்வார்.  அந்த உரையாடலிலே, மொழியிருக்கும்; விஞ்ஞானமிருக்கும்; வாழ்வியலிருக்கும்; மருத்துவமிருக்கும்; பொருளாதாரமிருக்கும்; புவியியலிருக்கும்; இன்னும் பல நவீன துறைசார் அறிவிருக்கும். இவையெல்லாவற்றையும் முறை சாராமல் தன்னகத்தே கொண்டிருப்பதுதான் பாரம்பரிய அறிவின் சிறப்பு. அதைத் தொலைய விடுதல் எங்ஙனம் நியாயமாகும்?


[1] stone fig-Ficus scandens

[2] jungle fig-Ficus hispida

[3] glossy long leaved fig-Ficus tjakela

[4] creeper fig- Ficus repens

[5] small fig –Ficus polycarpa

[6] foreign fig-Ficus carica

[7] red fig-Ficus heterophylla

[8] cluster fig-Ficus racemosa

[9] yellow fig-Ficus callosa

[10] devil fig-Ficus oppositifolia

[11] tall fig-Ficus excelsa

[12][12] sandpaper fig-Ficus asperrima

[13] mountain fig-Ficus macrocarpa

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

6877 பார்வைகள்

About the Author

மனோகரன் சாரதாஞ்சலி

மனோகரன் சாரதாஞ்சலி அவர்கள் ஆசிய தொழில் நுட்ப நிறுவகத்தில் இயற்கை வள முகாமைத்துவத்தில் முதுமாணிப் பட்டம் பெற்றவர். இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதிகவியல் இளமாணிப்பட்டதாரி என்பதுடன் ஊடகவியலும் கற்றவர். லேக் ஹவுஸ் நிறுவனத்தில் சூழலியல் கட்டுரையாளராகப் பணிபுரிந்து பின்னர் கடந்த ஒரு தசாப்தகாலமாக இலங்கை நிர்வாக சேவை அலுவலராகப் பணிபுரிகிறார்.

இவர் முதுமாணிப் பட்டப்படிப்புக்காக உலகவங்கியின் புலமைப்பரிசிலையும் முதன்மை மாணவிக்கான இரு விருதுகளையும் பெற்றவராவார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)