மொழிபெயர்ப்புக் கட்டுரை : கென்னத் டேவிட்
வட இலங்கையின் யாழ்ப்பாணத் தீபகற்பம் – அறிமுகம்
யாழ்ப்பாணத் தீபகற்பம் ஏறக்குறைய முட்டையின் வடிவமைப்புடைய பிரதேசம். அது 964 1: 2 சதுர மைல் பரப்பளவுடையது. 1963இல் இறுதியாக எடுக்கப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டின்படி இங்கு 612,000 தமிழ்பேசும் இந்து மக்கள் வாழ்ந்தனர். இங்கு எப்பொழுது குடியேற்றம் நடந்தது என்பதைப் பற்றி திட்டவட்டமாக ஆண்டுகளைக் குறிப்பிட முடியாது. எனினும் கி.பி 7ஆம் நூற்றாண்டில் வணிகர்களின் குடியேற்றம் ஏற்பட்டது. அதன் பின்னர் வேளாளர் சாதி நில உடைமையாளர்கள் குடியேறினர். அவ்வாறு குடியேறிய இம் மேலாதிக்கச் சாதி தமது குடிமக்களோடு இங்கு வந்து குடியேறினர். இக் குடியேற்றம் பாண்டியர் ஆட்சியில் கி.பி 13ஆம் 14 ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்டது. மேற்படை மண்ணிற்குக் கீழ் உள்ள சுண்ணாம்புக்கல் படை இங்கு உள்ளது. (இதனால் தான் இங்கு சீமெந்து தொழிற்சாலை காங்கேசன்துறையில் உள்ளது) குறைந்தளவு மழைவீழ்ச்சி ஆகிய புவியியற் காரணிகளால் தென்னிலங்கையோடு ஒப்பிடும் போது யாழ்ப்பாணத்தின் நிலம் நெற் செய்கைக்கு ஏற்றதல்ல, பெரும்பான்மை நிலம் காசுப் பயிர்களின் செய்கைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது (புகையிலை, மிளகாய், வெங்காயம், பாக்கு, தக்காளி) குடாநாட்டின் கடலை அடுத்த மணற்பரப்பு சில இடங்களில் சில யார் தூரத்தினை உடையது. சில இடங்களில் இது ஒன்றரை மைல் வரை நீள்கிறது. கடற்கரையை அடுத்த உட்பகுதி கருமண் பூமியாகும். நடுப்பகுதி வளம்மிக்க செம்மண் நிலமாகும். கடந்த மூன்று நூற்றாண்டுகளாக ஏற்பட்ட சனத்தொகை பெருக்கம் காரணமாக பயிர்செய்கை முறை செறிவானதாக மாறி வந்தது. பிரதானமாகப் பணப் பயிர்களே பயிரிடப்படுகின்றன. பௌதிக அமைப்பில் தனிமைப்பட்டு நிற்கும் யாழ்ப்பாணத் தீபகற்பம் புவியியல் சமூக, பண்பாட்டு அமைப்பில் தனித்துவம் மிக்க ஒரு இடமாகவும், இயற்கையான ஒரு பரிசோதனைக்கூடம் போன்றும் உள்ளது.
பகுதி-1 இல் நான் விவசாயக்கிராமங்கள், மீன்பிடிக்கிராமங்கள் கைவினைஞர் வாழும் நகரங்கள் என்ற மூன்றுவகை புவியியல் இடைவெளி ஒழுங்கமைப்பை விளக்குவேன். இந்த ஒப்பீடு சாதிகளுக்கு இடையிலான உறவுகள் பற்றி ஆராய உதவுகிறது. அதாவது விவசாயக் கிராமங்கள், மீன்பிடிக்கிராமங்கள், கைவினைஞர் நகரக் குடியிருப்புகள் என்ற மூன்று இடங்களிலும் சாதிகளிடையிலான இடையூடாட்டம் வேறுபடுவதை எடுத்துக் காட்டுவேன். இவை நியமத்திட்டங்களில் (Normative Schemes) மாறுபடுவதையும் எடுத்துக் காட்டுவேன். பகுதி -2 இல் சாதிகளுக்கிடையிலான இடையூடாட்டத்தின் இருவேறு மாதிரிகளை எடுத்துக் காட்டுவேன். இவ்வெதிர் நிலையான ஒவ்வொரு மாதிரியும் (Type or Mode) ஏழு வகை மாறிலிகள் கொண்டு விளக்கப்படும். இந்த ஏழு வகை மாறிலிகளாவன:
- ஆட்சேர்ப்பு (Recruitment)
- நேரம் /காலம் (Time
- புவிவெளி அல்லது இடவெளி(Space)
- வாடிக்கையாளர் (Clientele)
- விலைப்பொறிமுறை (Price Mechanism)
- சூழமைவு (Context)
- சமச்சீர் – சமச்சீர் இன்மை
இருவேறு சாதி இடையூடாட்ட முறைகளிலும் செயலிகள் (Actors) தமது செயல்களை ஒன்றுக்கொன்று எதிரான நியமத்திட்டங்களின்படி (Normative Schemes) அமைத்துக் கொள்வர். ஒவ்வொரு நியமத்திட்டமும் குறிப்பிட்ட வகைக் குறியீடுகளுடனும் அர்த்தங்களுடனும் தொடர்புடையவை. Value orientation means translating norms into action. Value orientation to the contrary normative scheme is not limited to inter caste conduct that is involvement in different modes of relations.
பகுதி ஒன்று: மூன்று கிராமங்கள்
மயிலிட்டி வடக்கு – வேளாளர் ஆதிக்கம் உடைய விவசாயக் கிராமம் – பொதுக் கட்டமைப்பு
மயிலிட்டி வடக்கு நில உடைமையாளர்களான வேளாளர் ஆதிக்கமுடைய கிராமமாகும். இது மயிலிட்டி வடக்கு நில உடைமையாளர்களான வேளாளர் ஆதிக்கமுடைய கிராமமாகும். இது தென்னிந்தியா போன்ற Nucleated கிராமம் அன்று. இங்கே ‘குறிச்சி| என்னும் பிரிவுகள் உள்ளன. மயிலிட்டி வடக்கின் வட்டாரங்களாக (wards) குறிச்சிகள் உள்ளன. பல வீடுகள் கொண்ட தொகுதியைச் சுற்றி தோட்ட நிலங்கள் உள்ளன. ஒவ்வொரு காணியிலும் வீடும் அதைச்சுற்றித் தோட்டமும் இருக்கும். வழமையாக வட்டாரத்திற்கென ஒரு கோவிலும் இருக்கும். குறிச்சிகளுக்கும், கிராமங்களுக்கும் தெளிவான எல்லைகள் இருப்பதில்லை. இதனால் இந்தியாவைப் போன்று எல்லைக்காவல் சடங்குகள் இங்கு நடைபெறுவதில்லை. வெளியாள் ஒருவரால் கிராமத்தின் எல்லைகள் இதுவென எளிதில் அடையாளம் காணமுடியாது. இதே போல் கிராமத்திற்குள் இருக்கும் குறிச்சிகளின் எல்லைகளையும் அடையாளம் காணமுடியாது. இவ்வாறான இட அடையாளம் (யாழ்ப்பாணக் கிராமங்களில்) முக்கியமில்லை. ஏனெனில் குறிச்சிகள் அல்லாமல் முழுக் கிராமமுமே அரசியல், பொருளாதார, சடங்கியல் பரிவர்த்தனையின் (Exchange) மையமாகத் திகழ்கின்றன. கிராமமே நில உடைமைச் சாதிக்கும் பிற சேவைச்சாதிகளுக்கும் இடையிலான பரிவர்த்தனையின் மையமாக உள்ளது. சேவைச் சாதிக் குடும்பங்கள் கிராமத்தின் குறிச்சிகளிலும், அயல் கிராமங்களில் உள்ளோருக்கும் சேவை செய்வர். குறிச்சிகளுக்குள்ளே தூய்மை அடிப்படையிலான இட ஒதுக்கல் வளைந்து வளைந்து செல்லும் குச்சொழுங்கை முறையால் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்நியர் ஒருவருக்கு நில உடைமையாளர் வீடு இலகுவில் கண்டுபிடிக்க முடியாதபடி வளைந்து செல்லும் பாதையின் வளவுக்குள் உள்ளே செல்வதாக இருக்கும்.
குறிச்சி, இரத்த உறவுமுறை மற்றும் அந்தஸ்துத் தரங்கள்
யாழ்ப்பாணத்தின் கிராமத்துக் குறிச்சிகளை (வட்டாரங்களை) கூட்டாக நிலத்தை உடைமை கொண்டுள்ள ஒரு அலகாகக் கொள்ளமுடியாது. உதாரணமாக தமிழ்நாட்டில் மதுரைக்கு அருகே உள்ள தெங்கலப்பட்டி கிராமம் பரமலைக் கள்ளர் சாதியின் நில உடைமை அலகாக இருப்பதைக் காணலாம். இதனை unilinear lineage structure என்பர். யாழ்ப்பாணத்தில் விவசாயக் கிராமத்தின் ஒரு குறிச்சியின் நிலங்கள் மூன்று முதல் ஐந்து வரையான தந்தை வழிக் குடும்பங்களின் உடைமையாக இருக்கும். அக்குடும்பங்களின் சந்ததியினர் அங்கு வசித்து வருவர் குறிச்சியின் காணிகள் இக்குடும்பங்களைச் சேர்ந்த பலரின் உடைமையாக இருக்கும். காணி பெரும்பாலும் சீதனமாக தாயிடமிருந்து மகளுக்கு உரிமையாக மாறும். அது தந்தையிடமிருந்தும் பிள்ளைகளுக்கு கிடைக்கலாம். சீதன முறை காரணமாக மனைவியின் வீட்டில் பலகுடும்பங்கள் ஒன்றாக வாழ்வதுண்டு. திருமணம் முடிந்து சில காலத்தின் பின் பெண் தனக்கு சீதனமாகக் கிடைத்த காணியில் வீட்டைக் கட்டி தனியாக குடித்தனம் நடத்தலாம். அல்லது தந்தையிடமிருந்து மகன் பெற்ற முதுசம் காணியில் வாழலாம். இவ்வாறு பல சிக்கலான மாற்றங்களால் சந்ததிக் குடும்பஙகள் சிதறி வாழ்வதுண்டு. ஒரே இடத்தில் ஒரே சந்ததி தொடர்ச்சியாக வாழும் நிலை யாழ்ப்பாணத்தில் இல்லை. குறிச்சியின் (வட்டாரத்தின்) சொத்தை கூட்டாக உடைமை கொள்ளும் முறையும் இல்லை.
ஆயினும் பண்பாட்டுத்தளத்தில் ஒரு சந்ததியை ஒரு குறிச்சியுடன் தொடர்புபடுத்தும் புனைவு இருந்துவரும். சந்ததியை நிறுவிய மூதாதையர் (வரி) நினைவு கூரப்படுவர். மயிலிட்டி வடக்கின் நான்கு குறிச்சிகளுக்கும் ஒரு இடப்பெயரும் வரியும் உள்ளது. ஒவ்வொரு குறிச்சியினரும் தமது மூதாதையர் பெயரை அறிந்து வைத்திருப்பர். ஆயினும் எவராலும் தமது உறவுத் தொடர்ச்சியைத் தெளிவாகக் கூறமுடியாது. உண்மையில் குறித்த ஒரு குறிச்சியில் வாழ்பவரில் சிலர் மட்டுமே மூல மூதாதையரின் சந்ததியில் வந்தவராய் இருப்பார்கள். சிலரே குறிப்பிட்ட குறிச்சியில் பிறந்தவர்களாகவும் வேறு பலர் வேறு கிராமங்களில் பிறந்து பின் மச்சான் - மச்சாள் உறவு வழியில் திருமணம் செய்து தமது மூதாதையர் இடத்துக்கே வந்தவர்களாயும் இருப்பர். ஒரு நில உடைமையாளர் குடும்பத்துப் பெண்ணின் கூற்று வருமாறு:
"அவரா, அவர் சுன்னாகத்தில் வாழ்கிறார். ஆனால் அவர் தயாளியை சேர்ந்தவர் வட்டிக்காரர் வரி ஆள். என்னுடைய மகளை நான் எப்படி அவையளுக்கு கட்டி வைக்கலாம்?" (இங்கு தயாளி, வட்டிக்காரர் என்பன கற்பனைப் பெயர்கள்) திருமண உறவுகளால் பிணைப்புற்ற குடும்பங்களிடை இன்னொரு புனைவும் உண்டு. அது ‘கிட்டிய சொந்தக்காரர் என்பதாகும். ஒவ்வொரு அலகிற்கும் அதற்கு உறவுடைய வேறு சில அலகுகள் வெவ்வேறு கிராமங்களில் இருக்கும். இவையாவும் சேர்ந்த ஒரு வட்ட அந்தஸ்து வட்டமே ‘சொந்தக்காரர்' என்பது. ஒவ்வொரு வட்டத்தினருக்கும் ஒரே இரத்தமும் பிற உடல் வஸ்துக்களும் பொதுவாக இருக்கும். இரத்தத்தின் தூய்மை அவர்களுக்கு உயர்குடி அந்தஸ்தை வழங்கும். ஊரவரின் இக்கோட்பாடு யதார்த்த நிலைக்கு சிலவேளை பொருந்துவதில்லை. காரணம் தெளிவான எல்லைகள் இல்லாமையும் அலகுகளிடையே மேவல் காணப்படுதலுமாகும். உதாரணமாக A என்ற அலகு F B,C,D என்ற அலகுகளுடன் தொடர்புடையது. அலகு B,A,C,E என்பனவற்றுடன் உறவுகளை வைத்திருக்கிறது. B என்ற அலகு A, B, D, F என்ற அலகுகளுடன் உறவு கொள்கிறது. இவ்வாறு வேறுபாடுகள் ஏற்படுவதால் B அலகுக்கு F தூரத்துச் சொந்தக்காரர் ஆவர். இதனால் அவர்களிடையே தொடர்ச்சியான உறவுகள் இருப்பதில்லை. B அலகின் பெண்கள் F அலகின் பெண்களோடு சமபந்தியில் இருந்து உண்பதில்லை. கிட்டிய சொந்தக்காரர் குழுக்கள் பெயரிடப்படாத அந்தஸ்துக் குழுவாக வேளாளர் சாதிக்குள் இருந்து வருகின்றன.
நில உடைமைச் சாதியான வேளாளர்கள் இரு பிரிவாக உள்ளனர். பெரிய வேளாளர் பிரிவு பலம்மிக்க நில உடைமையாளர்களாவர். அவர்களுக்கு சேவை செய்யும் வேலையாட்கள் பலர் இருந்தனர். பட்டம் பதவி என்பனவும் ஐயத்திற்கு இடமில்லாத மதிப்பும் அவர்களுக்கு இருந்தது. சின்ன வேளாளர் என்போர் உதிரியான பலசாதிகளில் இருந்து நில உடைமையாளர்களாகி நில உடைமைச் சாதியின் அடுத்த படிகளில் இணைந்து கொண்டவர்கள். தமிழ்ப் பழமொழி ஒன்று இதனை விளக்குகிறது. ‘கள்ளர் மறவர் அகம்படியர் மெள்ள மெள்ள வேளாளர் ஆயினரே என்பது இப்பழமொழி.
நில உடைமைச் சாதியின் கிராமத்துச் சமூகவியலாளர்கள் சில புனைவுகளையும் அடையாளங்களையும் தமது மூதாதையருடனும் குறிச்சியுடனும் தொடர்புபடுத்திக் கூறுவர். இவர்களின் கதையாடலில் மூன்று விடயங்கள் இணைந்து காணப்படும்.
அ) புவியியல் ரீதியான பிரிவு - குறிச்சி
ஆ) இரத்த உறவுக் குடும்பம் - சந்ததி
இ) உறவுக்காரர்களின் வட்டம் - கிட்டிய சொந்தக்காரர்
ஒவ்வொரு அலகினதும் இரத்தத் தூய்மையும், அவரவர் மூதாதையர் கால்வழியும் மேற்குறித்த மூன்றோடும் தொடர்புபடுத்தி விளக்கப்படும். உயர் குடிப்பிறப்பு பற்றிய கருத்து புவியியல் ஒழுங்கமைவுடன் (Spatial arrangement) தொடர்புபடுத்தப்படும்.
ஒரு கிராமத்திற்குள் சுத்த மற்றும் அசுத்த சேவைச் சாதிகளினதும் சேவைசெய்யாத சுத்த சாதிகளினது இடவமைவு
உயர்குடி வேளாளாருக்கும் சாதாரண வேளாளருக்கும் இடையிலான வேறுபாடு ஒரு குடும்பத்திற்குச் சொந்தமான காணியுடன் தொடர்புபட்டது. கிராமங்களின் குடும்பங்களது புள்ளிவிபரங்களைத் தொகுத்த போது உயர்குடி வேளாளர்கள் சராசரி ஏழு ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தை உடையவர்கள் என்பதையும், சாதாரண வேளாளர் (Commoner Vellala) முக்கால் ஏக்கர் நிலத்தை உடையவர் என்பதையும் அறிய முடிகிறது. ஆனால் எனக்கு இந்தப் புள்ளிவிபரங்களில் ஐயம் உள்ளது. நில உடைமையாளர்களிடம் தங்கள் நிலங்களை அரசு பறித்து பகிர்ந்தளித்து விடுமோ என்ற பயம் உள்ளது (1974 இல் அரசாங்கக் கொள்கைப்படி). அதனால் தங்களிடம் உள்ள நிலத்தின் அளவைக் குறைத்துக் கூறியிருக்கலாம். நான் காணி உடைமை தொடர்பான ஆவணங்களை ஆராயவில்லை. இவ்விருவகை நில உடைமையாளர்களுக்கும் ஒப்பீட்டளவிலான வேறுபாடுகளை கிராமத்திற்குள் சேவைச்சாதிகளின் இடஅமைவைக் கொண்டு மதிப்பிடலாம்.
சேவைச்சாதிகள் அவர்கள் வழங்கும் சேவைக்குப் பதிலீடாக உயர்குடி வேளாளரிடமிருந்து குடியிருப்பதற்குக் காணிகளை பெற்றனர். பிராமணர்களும் சைவக் குருக்கள் பலரும் அவர்களுக்கு மானியமாக வழங்கப்பட்ட காணிகளில் குடியிருந்தனர். அல்லது கோயிலுக்குக் கோவில் முகாமையாளரால் வழங்கப்பட்ட காணியில் குடியிருந்தனர். கோவியர் குடும்பங்களுக்கும் வளவுக்குள் பயன்களைப் பெறும் உரிமை இருந்தது. தோட்டக்காணிகள் குடும்பங்களின் தேவைகளுக்குரிய உற்பத்திப் பொருட்களை சீவியத்திற்கு தேவையான அளவு நிலம் அணியம் எனப்பட்டது. ஆயிரம் கன்றுநிலம் ஒரு குடும்பத்தின் சீவியத்திற்குத் தேவையான நிலம் ஆகும். 1000 புகையிலைக் கன்றுகளை நாட்டக் கூடிய (பயிர்செய்யக் கூடிய) நிலமே ஆயிரம் கன்றுத்தரையென்பது (3 3:4 பரப்பு அல்லது 1:4 ஏக்கர்). கோவியர் குடும்பம் ஒன்று இதற்குப் பதிலாக தனது கமக்காரனின் (எஜமானன்) மீதி நிலங்களைப் பயிரிட வேண்டும். ஆடுமாடுகளைப் பராமரிக்க வேண்டும். வீட்டு வேலைகளைச் செய்தலும் வேண்டும். இவர்கள் பல சடங்குக் கடமைகளையும் செய்தனர். சுத்தமான சாதியாகிய கோவியர் தோட்டக் காணிகளில் குடியமர்த்தப்பட்டனர். சுத்தமற்ற நளவர் (பள்ளரும்) பனங்காணியில் குயிடிருக்க அனுமதிக்கப்பட்டனர்.
பனை ஓலை விவசாயத்திற்கு அவசியமான ஒரு பொருள். பச்சைப்பனை ஓலை பச்சையாகவும் உபயோகிக்கப்பட்டது. பனை ஓலை வேலியடைக்கவும், கூரைவேயவும், பாய்கபனை ஓலை விவசாயத்திற்கு அவசியமான ஒரு பொருள். பச்சைப்பனை ஓலை பச்சையாகவும் உபயோகிக்கப்பட்டது. பனை ஓலை வேலியடைக்கவும், கூரைவேயவும், பாய்கள் இழைக்கவும் உபயோகிக்கப்பட்டது. பனையின் உற்பத்திப் பொருட்களோடு தொடர்புபட்டதாக நளவர்களின் வேலைகள் இருந்தன. அத்தோடு பனையில் இருந்து பெறப்படும் கள் அவர்களுக்கு வருமானம் தருவதாக இருந்தது. கோவியரும், நளவரும் ஒரு குடும்பத்திற்கு தம் சேவையை வழங்குவர். ஆனால் அம்பட்டர், வண்ணார் என்ற இரு சாதியினரின் குடும்பங்கள் பல வேளாளர்கள் குடும்பங்களிற்குச் சேவை செய்வனவாக இருக்கும். இச்சாதிக் குடும்பங்களுக்கு வாழ்வதற்கான குடியிருப்புக் காணி நிலஉடைமையாளரான வேளாளர் குடும்பத்தால் வழங்கப்பட்டிருக்கும். இந்த நான்கு வகைக் குடியிருப்புக்களும் நான் கள ஆய்வு செய்த 1974இல் தெளிவாக இருந்தன. இவ்வாறான குடியிருப்புக் காணித்துண்டுகள் குத்தகையாக இப்போது பெறப்பட்டுள்ளன. அல்லது வேளாளரிடமிருந்து விலைக்குப் பெறப்பட்டுள்ளன. சேவைச்சாதிகளிடம் தற்போது உள்ள நிலத்தின் அளவு முன்பு வேளாளரின் நிலமாக இருந்தது. சாதாரண வேளாளரிடம் தமக்குரிய குடியிருப்பு நிலமும் விவசாய காணியுமே இருந்தது. சேவைச் சாதிகளுக்குப் பகிர்ந்தளிக்கும் அளவுக்கு அவர்களிடம் நிலம் இருக்கவில்லை. சேவைச்சாதிகளுக்கு குடியிருப்பதற்கும் நிலத்தைக் கொடுக்கும் தகுதியைப் பொறுத்து உயர்குடி வேளாளருக்கும் சாதாரண வேளாளருக்கும் இடையே வேறுபாடும் இருந்தது. உயர் குடி வேளாளருக்கு பரம்பரையாகக் குடிமைச் சேவை செய்யும் குடும்பங்கள் இருந்தன. சாதாரண வேளாளர்களுக்கு அவ்வாறு பரம்பரையாகச் சேவை செய்யும் குடிமைக் குடும்பங்கள் இருக்கவில்லை. இதனால் சாதாரண வேளாளர்கள் உற்பத்தி வேலைகளுக்கும் சடங்குகளிற்கும் குடிமைச்சாதிக் குடும்பங்களின் சேவையைப் பெறும்போது கூலி கொடுக்க வேண்டும்.
சேவைச் சாதிகளின் வதிவிடங்கள் தூய்மை துடக்கு கருத்தியலைப் பிரதிபலிப்பது தென்னிந்தியாவின் தமிழ்நாடு போன்று இது மிகத்தெளிவாக இல்லை என்பது உண்மையே. தமிழ்நாட்டில் தீண்டத்தகாதவர்களுக்குத் தனி வீதிகளும் குடியிருப்புகளும் இருக்கும் சாதிகள் தனிமைப்பட்டுப் பிரிக்கப்பட்டுப் பிரத்தியேகமான பகுதிகளில் அங்கு வதிவர். யாழ்ப்பாணக் கிராமங்களில் உயர் குடி வேளாளர்களுக்கு அருகே சாதாரண வேளாளரும் கோவியரும் குடியிருப்பர். அம்பட்டர், வண்ணார் வீடுகள் தூரத்தே இருக்கும். நளவர் வீடுகள் இன்னும் தூரத்தே இருக்கும்.
மேற்குறிப்பிட்டவாறான இட அமைவு குடிமைச் சேவகர் அல்லாத தூய சாதிகள் சிலவற்றின் குடியிருப்புகளுக்குப் பொருந்தாது (அதாவது தோட்ட நிலத்தை தூய சாதிகளுக்கும் பனங்காணியைத் தூய்மையற்ற சாதிகளுக்கும் ஒதுக்குதல்). மயிலிட்டி வடக்கில் தச்சர், கொல்லர், நில உடைமையாளர்களான கரையார் மீனவர்கள் ஆகியோர் தீண்டத்தகாதவர்கள் எனப்படுவோர் குடியிருப்புகளுக்கு அண்மையில் வாழ்கின்றனர். தச்சர்கள் பனங்காணிகளில் வாழ்வதையும் காணலாம்.
மயிலிட்டிக் கடற்கரை ஒரு மீனவர் கிராமத்தின் பொதுவான கட்டமைப்பு
யாழ்ப்பாணத்தின் மீன்பிடிக் கிராமங்கள் அதன் விவசாயக் கிராமங்களை ஒத்தனவாகவே இருந்த போதும் இடஅமைவின் குறியீட்டு அம்சங்களில் (Spatial Symbolism) இரண்டுவகைக் கிராமங்களிற்கும் இடையில் வேறுபாடு உண்டு கரையாரினதும் வேளாள நில உடைமையாளரதும் மதிப்பீடுகள் வேறுபடுவதை இவை காட்டுகின்றன.
யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் வடக்குக் கடற்கரையில் சங்கிலித்தொடர்போல் அமைந்த மீனவக் கிராமங்களில் மயிலிட்டியும் ஒன்று. மயிலிட்டியின் கடற்கரைக் கிராமத்தின் எட்டு வட்டாரங்களின் பிரதான பகுதி வீதிகளுக்கும் கடற்கரைக்கும் இடையில் உள்ளது. இடையில் உள்ள வற்றிப்போன வாய்க்கால் ஒன்றுக்கு கிழக்காக ஐந்து வட்டாரங்கள் உள்ளன. இவை ஐந்தும் பிரதான குடியிருப்புகளாகும். வாய்க்காலுக்கு மேற்கே மூன்று புதிய வட்டாரங்கள் உள்ளன. திருப்பூர் வட்டாரம் அவற்றுள் ஒன்று. வீதியின் மறுபுறத்தில் இன்னொரு புதிய குடியிருப்பு உள்ளது. இங்கு 50 - 100 அடி தூரத்திற்கு பல வீடுகள் உள்ளன. மூன்று வீடுகள் கொண்ட வளவுகளாக இவை உள்ளன. வீதிக்கு மறுபக்கம் உள்ள பகுதி மயிலிட்டி வடக்குக்கு உரியதாகும். வீதியில் இருந்து வடக்காகக் கடற்கரை நோக்கி அகலமான ஒழுங்கைகள் செல்கின்றன.
ஒழுங்கைகள் இரண்டிற்கு இடைப்பட்ட பகுதி வட்டாரம் எனப்படும். ஒழுங்கைகள் ஒவ்வொன்றுக்கும் இடையிலான தூரம் ஏறக்குறைய 150 அடியாகும். கடலுக்கும் வீதிக்கும் இடையிலான தூரம் 500 முதல் 600 அடிவரை வேறுபடுகிறது. ஒவ்வொரு வட்டாரத்திலும் 50 முதல் 60 வரையான மீனவக் குடும்பங்கள் வாழ்கின்றன. ஒரு பிராமணக் குடும்பமும், இரண்டு அம்பட்டர் சாதிக் குடும்பங்களும் இரண்டு வண்ணார் சாதிக் குடும்பங்களும் பத்து நளவர் சாதிக் குடும்பங்களும் இக்கிராமத்தில் உள்ளன. விவசாயக் கிராமங்களில் வீட்டு வளவுகள் பெரியன. இங்கே மிகச் சிறிய வளவுகள் உள்ளன. விவசாயக் கிராமங்களில் குடியிருப்புக்களின் வளவுகள் பெரியன. வளவுக்குள் தோட்டநிலமும், வீட்டு நிலமும் சேர்ந்திருக்கும். வளவுகளை ஓலை வேலிகள் பிரித்து நிற்கும். ஒரு தொகுப்பாக அமையும். பல வீட்டு வளவுகளைச் சூழ வயல் நிலம் பரந்து இருக்கும். மீனவக்கிராமத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் வீட்டு நிலங்களைப் பிரித்து வேலிகள் உள்ளன. கிராமத்தின் முழுப் பகுதியிலும் மக்கள் செறிந்து வதிகிறார்கள் விவசாயிக் கிராமத்திற்கும்; மீனவர் கிராமத்திற்கும் வேறுபாடுகள் இருப்பதற்கு சூழலியல், பொருளியல் காரணங்கள் உள்ளன. கடற்கரை வீதிக்கும் கடலுக்கும் இடைப்பட்ட மணல் தரையில் எந்தப் பயிரையும் விளைவிக்க முடியாது. கடற்கரை வீதிக்கு மறுபுறத்தில் வீடுகள் உள்ளவர்களான பணக்காரக் கரையார்கள் தம் வீடுகளோடு சேர்த்துப் பெரிய நிலத்தை வைத்திருக்கிறார்கள். மீனவர் குடியிருப்பின் வளவுகளுக்குள் மீனுக்கு உப்பிடுதல், வலைகளை விரித்துக் காயப்போடுதல் என்பனவற்றிற்கான நிலம்தேவை.
வட்டாரங்கள் ஒவ்வொன்றும் இரத்த உறவுக் குடும்பங்கள் கூடிவாழும் இடங்களாவும் அவற்றின் பொருளாதார, அரசியல், சமய நடவடிக்கைகளின் மையங்களாகவும் உள்ளன. 65 வீதத் திருமணங்கள் வட்டாரம் ஒன்றின் குடும்பங்களுக்கிடையில் நடைபெறுகின்றன. வட்டாரங்களுக்கு இடையிலான திருமணங்களாக 25 வீதம் உள்ளன. ஏறக்குறைய மீதி 10 வீதம் இக்கிராமத்துக்கு வெளியே உள்ளவர்களுடன் செய்து கொள்ளும் திருமணங்களாகும். உறவுக்குடும்பங்கள் ஒன்று சோந்து இயங்குகின்றன. படகுகளை கூட்டாக வைத்திருத்தல், படகுக்கு வேண்டிய வலைகளைப் பலர் சேர்ந்து கொடுத்தல் போன்ற வகையில் குடும்பங்கள் இணைந்து செயற்படும். இவ்வாறான கூட்டுக்களில் 80 வீதம் வட்டாரத்திற்கு உள்ளே நிகழும். ஒரு வட்டாரத்தின் படகுகள் ஒன்றாக இணைந்து தொழிற்படும். அவற்றை இன்னொரு வட்டாரத்தின் படகுகளில் இருந்து வேறுபடுத்தி அறியலாம். ஒவ்வொரு வட்டராத்தின் எல்லைக்குள்ளும் ஒவ்வொரு கோவில் இருக்கும். இக்கோவிலை வட்டாரத்தை சேர்ந்த ஒருவரே பூசை செய்து பராமரிப்பவராய் இருப்பார். - பெரிய கோவில்களும் ஒவ்வொரு வட்டாரத்திற்கு உரியனவாகவே இருக்கும். விவசாயக் கிராமங்களில் உள்ளவாறே கோவில்களுக்கு வட்டாரத்தைச்சேர்ந்த அனைவரும் கூட்டாக ஆதரவு கொடுப்பர். வட்டாரத்தை மையமாகக் கொண்டே பொருளாதார உறவுகள் சமய உறவுகள் என்பனவும் குடும்ப உறவுகளும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு தொழிற்பாட்டு மையம் இருக்கும். அது போன்று முழுக்கிராமத்திற்கும் மீன்சந்தை, கடற்துறைமுகம் என்பவற்றைப் கொண்டமையம் ஒன்று இருக்கும். நன்றாக மீன் பிடிபடும் நாள் ஒன்றில் 300 வரையானோர் மீன்சந்தையில் கூடுவார்கள். இவர்களில் அரைவாசிப்பேர் வெளியூரவர்களாக இருப்பர். பலவகையான மீன்வியாபாரிகள் இங்கு வருவர் இவ்வியாபாரிகள் அல்லது தரகர்களில் சிலர் தலையில் மீன் கூடைகளைச் சுமந்து செல்லும் பெண்களாக இருப்பர். வேறு சிலர் துவிச்சக்கரவண்டியில் பெட்டி ஒன்றை கட்டிக்கொண்டு ஐஸ் கட்டியையும் கொண்டு வருவர். இன்னும் சிலர் மோட்டார் வண்டியில் வருவர். இவ்வியாபாரிகள் யாவரும் பிரதான வீதியில் இருந்து கடற்கரையை நோக்கிச் செல்லும் அகலமான ஒழுங்கைகள் பயணிப்பதற்கு ஏற்றனவாக உள்ளன. கிராமத்திற்கும் வெளியே உள்ள இடங்களிற்கும் இடையிலான வர்த்தக உறவுகளுக்கு இவ்வொழுங்கைகள் உதவுகின்றன. கிராமத்தின் தூய்மைபேணும் இடங்கள் தூய்மையுடன் பாதுகாக்கப்படுகின்றன. ஆயினும் விவசாயக் கிராமம் போன்று தூய்மை கடுமையாகப் பார்க்கப்படுவதில்லை.
மயிலிட்டியின் பிரதான கடற்கரை வீதியின் இருபக்கமும் வீடுகள் வரிசையாக அமைந்துள்ளன. காய்கறி விற்கும் கடைகள், தேநீர்க்கடைகள், பலசரக்குக்கடைகள் என்பனவும் வீதியை அண்டி உள்ளன. பலசரக்குக்கடைகளில் உணவுப் பொருட்கள், துணிவகை, மண்ணெண்ணெய், கயிறு, தகரத்தில் அடைக்கப்பட்ட பொருட்கள் என்பன விற்பனை செய்யப்படும். கள்ளுத் தவறணைகளும், ஒரு ஐஸ் கட்டித்தொழிற்சாலையும் உப்பு அரைக்கும் தொழிற்சாலையும் வீதியை அடுத்து உள்ளன. மயிலிட்டிக் கடற்கரைப் பகுதியில் வெளி ஆட்கள் நடமாட்டம், போவோர் வருவோர் தங்கி நிற்றல் என்பனவற்றைக் காணலாம். ஆனால் மயிலிட்டி வடக்கு கிராமத்தில் இப்படி வெளியாள் நடமாட்டம் இருப்பதில்லை.
வட்டாரங்கள், இரத்த உறவுமுறை மற்றும் அந்தஸ்து வேறுபாடுகள்
சாதி, இரத்த உறவுக் குடும்பம், பிரதேசம் என்ற மூன்றும் விவசாயக் கிராமத்தில் ஒன்றோடொன்று இணைவனவாக இருக்கும் மீனவக் கிராமங்களில் அப்படி இருப்பதில்லை. மீனவர்களில் இரண்டு தரங்கள் உள்ளன. பணக்காரர்களான தேவர்கள் ஒரு பிரிவினர். மற்றப் பிரிவினர் சாதாரண கரையார் எனப்படுவர். தேவர்கள் அவர்களது தொடக்க மூதாதையர்களான பெரிய நாட்டுத் தேவன். வீரமாணிக்க தேவன் என்றவர்களின் வழிவருபவர்கள். இவர்கள் சோழப்படைகளின் தலைவர்களாக இருந்தவர்கள். சாதாரண கரையார் படைவீரர்களாகவும், வேலையாட்களாகவும் இருந்தோரின் மரபில் தோன்றியவர்கள். சாதாரண கரையார்களுக்கு தம்மூதாதையர் என்று குறிப்பிடுவதற்கு முன்னோர் எவரும் இல்லை. இக்கிராமத்தின் பல வட்டாரங்கள் மூதாதையர் பெயரால் அழைக்கப்படுகின்றன விவசாயக் கிராமத்தின் வட்டாரங்கள் (குறிச்சிகள்) இவ்வாறு பெயர் பெறுவதில்லை. துறை, பணிவு என்ற இரு வட்டாரங்களின் தேவர்கள் வீரமாணிக்க தேவன் வழிவந்தோராவர். திருப்பூர் பழந்துறை, கலவி ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த தேவர்கள் பெரிய நாட்டுத் தேவன் வழிவந்தோராவர். திருப்பூர், சுகாதார வைத்தியசாலை, வெல்வெட்டி, அம்பட்டை ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்தவாக்ள் சாதாரண கரையர்கள் ஆவர். கடற்கரை கிராமத்தில் உயர்குடித்தேவர்களும், சாதாரண கரையார்களும் வெவ்வேறாக வெவ்வேறு வட்டாரங்களில் வதிவதில்லை. திருப்பூர் வட்டாரத்தில் ஒன்றாகவே உள்ளனர். இருப்பினும் தேவர்களும், சாதாரண கரையார்களும் தமக்குள் விவாக உறவை வைத்துக்கொள்வதில்லை. விவாக உறவுகள் வட்டாரங்களோடு நேர்த்தியாக இணங்கி இருப்பதும் கிடையாது. விவசாயக் கிராமம் போன்றே ஒரு வட்டாராத்தில் உள்ளவர் மற்றொரு வட்டாரத்தில் உள்ளவர்களுடன் விவாக உறவை வைத்திருப்பர். அம்பட்டர், வண்ணார், நளவர் ஆகியோர் தேவர் குடும்பங்களுக்குச் சேவைக் கடமைகளைச் செய்வர். சாதாரண கரையார் தம் தேவைகளுக்காக இவர்களைக் கூலிக்கு அமர்த்திக் கொள்வர். சுருங்கக் கூறின் பிரதேசம் என்ற அலகான வட்டாரம் சாதி அந்தஸ்தையும், குடும்ப அந்தஸ்தையும் காட்டும் பிரிவாக இருப்பதில்லை. மீனவர்களில் வர்த்தக நடவடிக்கைகளின் குவிமையமாகச் சந்தை விளங்குகிறது. அங்கே தூய்மை துடக்கு விதிகள் செயற்படுவதில்லை. உயர்வு தாழ்வுப் பிரிவுகள் அங்கு வெளிப்படையாகத் தெரிவதில்லை. அகன்ற ஒழுங்கைகள் சந்தைக்குப் போய்வரவும் உள்ளூரவர்களின் போக்குவரத்திற்கும் தொடர்பாடலுக்கும் உதவுகின்றன.
யாழ்ப்பாணத்தின் உட்பகுதிகளில் காணப்படும் கைவினைத் தொழில் நகரங்கள்
கைவினைச் சாதிகளிடம் வர்த்தகம் கூடிய முக்கியம் பெற்றுள்ளது. கோவிற்; சிற்ப வேலை செய்யும் ஆசாரி, பொற்கொல்லர்களான தட்டார், பட்டு நெசவாளர்களான கைக்குளர், நெசவு செய்யும் சேணியர், எண்ணெய் வடிக்கும் சாண்டார், ஆகிய சாதிகள் கட்டுப்படாத சாதிகளாவர். யாழ்ப்பாணத்தின் உட்பகுதிக் கிராமங்கள் மூன்றில் உள்ள கைவினைச் சாதிகளின் குடும்பங்களின் குத்துமதிப்பான சனத்தொகைப் புள்ளிவிபரத்தைக் கீழே தருகிறேன்.
இவர்களுள் தச்சர், கொல்லர், குயவர் என்ற மூன்று சாதிகளும் நில உடைமையாளர்களோடு தொழில் முறையில் தொடர்புடைய சாதிகளாகும். சிற்பாசாரி, தட்டார், பட்டு நெசவாளர், நெசவாளர், எண்ணெய் வடிப்போர் ஆகிய சாதிகளுக்கு நில உடைமையாளர்களுடன் உள்ள தொடர்பு ஒப்பீட்டளவில் குறைவு. முதல் பிரிவினரை உள்ளூர்க் கைவினைஞர்கள் என்றும், இரண்டாம் பிரிவினரை உள்ளூர் சாராத (நகரம்சார்) கைவினைஞர் என்றும் நான் குறிப்பிடுகின்றேன். உள்ளூர் கைவினைஞர்கள் பெரும்பாலான விவசாயக் கிராமங்களிலும் மீனவர் பெரும்பான்மையாக உள்ள கிராமங்களிலும் வாழ்கின்றனர். உள்ளூர் சாராத சாதிகள் ஒரு சாதிக்கிராமங்கள் பலவற்றில் வாழ்கின்றனர். அவர்கள் கிராமத்தை அண்டிய சிறுநகரங்களிலும், யாழ்ப்பாண நகரிலும் வதிகின்றனர். யாழ்ப்பாணத்தின் கிராமங்களை அண்டிய சிறுபட்டினங்களில் (Inner city) பின்வரும் வகையினர் வதிவதைக் காணலாம்.
- கைவினைச்சாதிகள் (உள்ளுர், உள்ளுரல்லாத இருவகையினரும்)
- கடைவியாபாரிகள் (எல்லாச் சாதிகளையும் சேர்ந்தவர்களும், முஸ்லிம்களும்)
- பூசகர்கள் (பிராமணரும், சைவக்குருக்களும்)
சிறு நகரங்களை யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் அடையாளம் காணலாம். யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான வீதிகள் கடந்த 30 ஆண்டுகளுக்குள் அமைக்கப்பட்டவை. இவை முன்னர் சந்தைகளையும் கோவில்களையும் இணைக்கும் வண்டிப் பாதைகளாக இருந்தன. சந்தைகள், கோவில்களைச் சுற்றி அரை மைல் வட்டம் ஒன்றைக் கற்பனை செய்து கொண்டால் அந்த வட்டத்திற்குள் கைவினைச் சாதிகளின் குடியிருப்புக்கள் உள்ளதைக் காணலாம். இந்த வட்டங்களில் இரண்டு வீதிகள் சந்திக்கும் சந்திகள் இருப்பதையும் காணலாம். இந்த வட்டத்திற்கு வெளியே நில உடைமையாளர்களது விவசாயக் கிராமங்கள் உள்ளன. மீனவக் கிராமங்களின் ஒழுங்கைகளும், வீதிகளும் உள்ளூர் போக்குவரத்துக்கும் வர்த்தகத்திற்கும் உதவுகின்றன. கிராமங்களை அண்டிய நகரங்கள் இந்த வர்த்தகத்தை உச்சப்படுத்துகின்றன. இவற்றில் இடம்பெறும் வாங்கல் விற்றல்
(i) அந்தஸ்து சாராதது
(ii) இவை நடுநிலையான சந்திப்பு இடங்கள்
(iii) வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த கொள்வோரும் கொடுப்போரும் இங்கே பங்கு பற்றுவர்.
கிராமத்தை அண்டிய நகரத்தில் காய்கறிச்சந்தையும், மீன் சந்தையும் உள்ள தெரு இருக்கும். இதைவிட பல கடைகளும், இரும்புக்கடைகள், புத்தகக் கடைகள், எண்ணெய்விற்கும் கடைகள் தேநீர்க்கடைகள் என்பனவும் இருக்கும். முடி அலங்கார நிலையங்கள், லோண்டரிகள் என்பனவும் இருக்கும். பால், தயிர்விற்கும் கடைகளும் இருக்கும். சிற்பாசாரிகள் தம் வீடுகளில் இருந்தே தொழில் செய்வர். பொற்கொல்லர்களின் பல கடைகள் யாழ்ப்பாண நகரத்தின் ஒரு தெருவில் உள்ளன. யாழ்ப்பாண நகரம் தவிர்ந்த பிற இடங்களில் பொற்கொல்லர்கள் தம் வீட்டில் இருந்தபடியே தொழில்செய்வதைக் காணலாம். கொல்லர்களும், தச்சர்களும் பெரும்பாலும் தமது வீட்டு வளவிலேயே பட்டறை வைத்திருப்பார்கள். கடந்த இருபது வருடங்களுக்குள் ஏராளமான தச்சு வேலைத்தளங்களும், கார் திருத்தும் கராஜ்களும் (கொல்லர் வேலை) தோன்றியுள்ளன. பெற்றோல் நிரப்பும் நிலையங்களும் தோன்றியுள்ளன. ஒவ்வொரு கிராமம் சார் பட்டினத்திலும் ஒரு பெரிய கோவில் இருக்கும். சுன்னாகம் பட்டினம் இதற்கு விதிவிலக்கு. இருப்பினும் சுன்னாகத்தில் பல இடைத்தர அளவுடைய கோவில்கள் உள்ளன. பெரிய கோவில் என்று கூறும்போது ஆகமவிதிப்படி பூசை நடைபெறுவதும் பத்து நாட்கள் வரையாவது நீடிக்கும் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும் கோவில்களையே கருதுகிறேன். சந்திகளிலோ அல்லது அவற்றுக்கு அண்மையிலோ அமைந்துள்ள கோவில்கள் திருவிழாக் காலத்தில் பிராந்தியங்களுக்கிடையிலான வர்த்தகமையமாகச் செயற்படும். தூர இடங்களில் இருந்து வரும் வர்த்தகர்கள் அங்கு கூடும் பெரும் சனக் கூட்டத்தின் காரணமாக நல்ல இலாபம் ஈட்டுவர்.
சேவைக்குடிகளும் குறிச்சிகளும்
நில உடைமை வேளாளர்களின் கிராமங்களின் வட்டார ஒழுங்கு முறை (குறிச்சிகள்) கைவினைஞர் குடியிருப்புக்களில் இல்லை. இதே போன்று தம்குடியை நிறுவிய முன்னோர், தொடக்கிவைத்தவர் என்ற கருத்தும் விவசாயக் கிராமங்களில் உள்ளதுபோல் இங்கு இல்லை. பட்டு நெசவாளர்களில் பணக்காரர்களாக உள்ளவர்களில் சிலர் தனிப்பட்ட முறையில் எனக்குக் கூறிய விடயம் ஒன்று உள்ளது. அவர்கள் தங்கள் வட்டாரத்தின் முன்னோர் என நான்கு பெயர்ளைக் குறிப்பிட்டனர். மயிலிட்டி வடக்கில் அந்தஸ்தில் குறைந்த வேளாளராலும் இவ்வாறு யாவரும் ஏற்றுக்கொண்ட கருத்தாக அல்லாத முன்னோர் வரலாறுகள் கூறப்பட்டன. குடியேற்றத்தைத் தொடக்கி வைத்த முன்னோர்களின் பெயர்களை யாழ்ப்பாண வைபவமாலை, யாழ்ப்பாண கௌமுதி என்ற இரு நூல்கள் மூலம் எவரும் கண்டு கொள்ளலாம்.
நில உடைமையாளர் வட்டாரங்களில் (குறிச்சிகளில்) குடியிருப்பு ஒழுங்கு ஒன்று இருக்கும். நில உடைமையாளரின் வீட்டுவளவுகள் ஒரு வட்டாரத்தில் இருக்கும். சுத்தமான சேவைச்சாதிகள் வீடுகள் இவ்வட்டாரத்திற்குள்ளேயே இருக்கும். தீண்டத்தகாதவர் குடியிருப்புக்கள் தூரத்தே இடையில் இருக்கும் இவ்வித ஒழுங்கை கைவினைச் சாதிகளின் வட்டாரத்தில் காணமுடியாது கைவினைச் சாதிகள் வாழும் பகுதிகளின் எல்லைகள் தெளிவாக இருப்பதில்லை. குறிச்சி என்ற சொல் இங்கே தனியாள் ஒருவர் தான் வதியும் வீட்டின் அயலிடத்தை எனது அயலிடம் என்ற கருத்தில் உபயோகிப்பதற்குப் பயன்படுத்தப்படும். இது அமெரிக்காவில் Neighborhood என்று சொல்லும் போது என்ன அர்த்தம் உள்ளதோ அதற்கு நிகரானது. கைவினைச் சாதியினரின் வீடுகள் ஒரு தொகுதியாக இருப்பதும் உண்டு. ஆயினும் இன்னொரு சாதியினைச் சேர்ந்தவர் வீடும் அருகில் இருக்கலாம். தூய்மையின் அடிப்படையிலான விலக்கு புவிவெளியில் (Space) நேரடியாக வெளிப்படுவதில்லை. அம்பட்டர், வண்ணார், நளவர், பறையர் ஆகியோரின் வீடுகள் கைவினைச் சாதியர் வீடுகளுக்கு அண்மித்தும் அருகேயும் இருக்கலாம். இல்லாதும் போகலாம். ஆயினும் கோவியர் குடியிருப்புகள் கைவினைஞர் குயிடிப்புகளின் மத்தியில் இருப்பதில்லை. கைவினைஞர்கள் சேவைச்சாதிகளை குறிப்பிட்ட வேலையொன்றுக்காக கூலிக்கு அமர்த்தலாம். இவ்வாறே சடங்கியல் வேலையையும் கூலிகொடுத்துச் செய்விக்கலாம். அவர்களுக்கு சேவைச்சாதிகளுடன் பரம்பரை வழியான உறவு இருப்பதில்லை.
கைவினைச் சாதிகளின் குடியிருப்புக்களில் உள்ள கோவில்கள் குறிப்பிட்ட ஒரு கைவினைச் சாதியின் கோவிலாகவே இருக்கும். கோவிலின் சில சமயச்சடங்குகளிற்கு வருடாந்த உற்சவத்தின் போது ஏனைய சாதியினர் பணம் கொடுப்பதுண்டு. உதாரணமாக எண்ணெய் வடிப்போர் சாதியினரின் பிள்ளையார்கோவில் ஒன்று ஓட்டுமடத்தில் உள்ளது. இக்கோவிலின் உபயகாரர் பட்டியிலில் ஒரு பொற்கொல்லர், பணக்காரரான ஒரு கொல்லர் சாதி நபர் ஆகியோரின் பெயர்கள் காணப்படுகின்றன. குயவர் சாதி கூட்டாக ஒரு திருவிழாவின் உபயகாரராக உள்ளனர்.
சுருங்கக் கூறின் கைவினைஞர் குடியிருப்புக்களின் புவி வெளி ஒழுங்கமைப்பு (Spatial Organization) வர்த்தக சமூகம் ஒன்றின் தன்மையைப் பலமாக வெளிப்படுத்துகிறது. வர்த்தக சமூகம் என்ற இந்த அம்சம் மீனவர் கிராமத்தை விட இங்கு அழுத்தமாக வெளிப்படுகிறது. ஒரு குடும்பம் எந்தச் சாதியைச் சேர்ந்தது என்பதைப் பொறுத்து வதிவிட ஒழுங்கு அமையவில்லை. வீடுகளும், கடைகளும் இப்படியான ஒழுங்கின் படி அமைக்கப்படவில்லை. சந்தைக்கு அண்மையில் இருத்தல், கோவிலைச் சார்ந்து இருத்தல், வீதிகளின் சந்திகளில் அமைந்திருத்தல் ஆகிய பண்புகளைக் கொண்டனவாகக் கைவினைஞர் குடியிருப்புக்கள் அமைந்திருந்தன. வெளியார் கைவினைஞர் உற்பத்தி செய்யும் பண்டங்களை இலகுவில் வந்து பெற்றுக் கொள்ள கூடியவகையில் குடியிருப்புக்கள் அமைந்திருந்தன.
குறிப்பு : ‘Spatial Organization and Normative Schemes in Jaffna, Northern Sri Lanka’ என்ற தலைப்பில் 1973 ஆம் ஆண்டு Modern Ceylon Studies, 4 (1&2), 21-52 என்னும் இதழில் கென்னத் டேவிட்அவர்களால் எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம்.
தொடரும்.