சில குறிப்புக்கள்
மருத்துவர் ஜோன் ஸ்கடர்
(Rev. Dr. John Scudder M.D., D.D.)
மானுடம் மேம்பட வேண்டும் என்ற சிந்தனையும், சிந்தனையைச் செயற்படுத்தும் திடமும், தியாக மனப்பான்மையும் உள்ள, எண்ணிக்கையில் மிகக் குறைவான மனிதர்களே உலக வரலாற்றை மாற்றியமைக்கிறார்கள்.
உலகக் கிறிஸ்தவ மிசன்களது வரலாற்றில் முதல் மருத்துவக் கலாநிதியாக விளங்கியவர் டேவிற் லிவிங்ஸ்டன். இவர் ஆபிரிக்காவில் மருத்துவராகப் பணியாற்றச் செல்ல 20 வருடங்களுக்கு முன்பே மருத்துவக் கலாநிதி ஜோன் ஸ்கடர் மற்றும் அவரது மனைவி திருமதி ஹரியற் வோட்டர்பரி ஸ்கடர் இருவரும் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து தமது மிசன் பணியை ஆரம்பித்தனர்.
யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய முதல் மருத்துவர் : ஓர் அமெரிக்கர்
உலகில் முதன்முதல் மேலைத்தேச மிசனரி மருத்துவமனையைப் பண்டத்தரிப்பிலே ஆரம்பித்து மருத்துவராகப் பணியாற்றிய ஜோன் ஸ்கடர் (1793.09.03 – 1855.01.13) இலங்கையின் வடபகுதியில் (யாழ்ப்பாணத்தில்) கடமையாற்றிய முதலாவது தகுதிவாய்ந்த மருத்துவர் மற்றும் சத்திரசிகிச்சை நிபுணர் என்ற கௌரவத்துக்கும் உரியவர். அமெரிக்க மருத்துவரான ஸ்கடருக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் பிரிட்டிஷ்காரரது படைகளுடன் கடமையாற்றிய மருத்துவர்கள் முறைப்படி பல்கலைக் கழகத்தில் மருத்துவம் பயின்று மருத்துவர்களானவர்கள் அல்லர்.
அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி மாநிலத்தில் பிரிஹோல்ட் என்னும் கிராமத்தில் 1793 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 3ஆம் திகதி பிறந்த ஸ்கடர், 1811 இல் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திலும், 1813 இல் நியூயோர்க்கிலுள்ள மருத்துவ மற்றும் சத்திரசிகிச்சை நிபுணர்கள் கல்லூரியிலும் பயின்று தனது மருத்துவக் கல்வியைப் பூர்த்தி செய்து நியூயோர்க்கில் மருத்துவராகப் பணியாற்றினார்.
ஓர் இரவு நோயாளி ஒருவரைப் பார்வையிட்ட வேளை மேசையில் இருந்த துண்டுப்பிரசுரம் ஸ்கடரது கவனத்தை ஈர்த்தது. ’உலகில் பல மில்லியன் மக்கள் இன்னமும் கிறிஸ்துவினது நற்செய்தியை அறியாது உள்ளனர்; துன்பத்தில் வாழ்கின்றனர்’ என்ற வாசகம் அவரை வருத்தியது. ’இறை அழைப்பை ஏற்று உடலுக்கும் ஆன்மாவுக்கும் சுகமளிக்கும் பணியை நான் ஏன் செய்யக் கூடாது? உலகில் துன்புறும் மக்களுக்கு நோய் தீர்க்கும் மருத்துவராகவும் மதகுருவாகவும் பணியாற்ற வேண்டும்‘ என்ற சிந்தனை அவருள் வியாபித்தது.
அத்திலாந்திக் சமுத்திரத்தை கடக்கும் ஆபத்தான கடற் பயணம்
ஸ்கடர் நியூயோர்க்கில் அனைத்து வசதிகளுடனும் புகழுடனும் மருத்துவராகப் பணிபுரிந்து வந்தார். நியூயோர்க்கில் உள்ள வசதி வாய்ப்புக்கள், தனக்குக் கிடைத்த புகழ் எல்லாவற்றையும் துறந்து அமெரிக்க மிசனரியில் இணைந்து தூர கிழக்குத் தேசம் சென்று ஏழைகளுக்கு மருத்துவம் அளிக்க ஆவலுற்றார். ஸ்கடரது மருத்துவ மிசன் பயணத்தை அவரது தந்தையார் ஜோசப் ஸ்கடர் ஏற்றுக்கொள்ளவில்லை. தாயாரும் சகோதரர்களும் ஸ்கடருக்கு ஆதரவாக இருந்தார்கள்.
அமெரிக்க மிசனரியினரின் வெளிநாட்டுப் பணியகத்தினரால் 26 வயது இளைஞனான ஸ்கடர் அவரது மனைவி திருமதி ஹரியற், 2 வயது மகள் மரியா கத்தரின் மற்றும் பணிப்பெண் அமி ஆகியோருடன் மேலும் 3 இளம் தம்பதியினர் “இந்துஸ்“ என்ற பாய்க்கப்பல் மூலம் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டனர். இக்கப்பல் 1819 ஆம் ஆண்டு யூன் மாதம் 6 ஆம் திகதி போஸ்டன் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது. 4 மாதக் கடற்பயணத்துக்குப் பின்னர் 1819 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 20 ஆம் திகதி கொல்கொத்தாவை வந்தடைந்தனர். இந்தியாவில் ஸ்கடரது மகள் நோய்வாய்ப்பட்டு தீவிர வயிற்றுப்போக்கினால் இறந்து போனார்.
அமெரிக்க மருத்துவ மிசனரியினரின் யாழ்ப்பாண வருகை
1816 இல் அமெரிக்க மிசனரியினர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தபோது தெல்லிப்பழையிலே உத்தியோகப்பற்றற்ற மேலைத்தேச அலோபதி மருத்துவமனைய ஆரம்பித்தனர். எனினும் இங்கு தகுதிவாய்ந்த மருத்துவர்கள் எவரும் கடமையாற்றவில்லை.
கிழக்கிந்தியக் கம்பனியினால் அக்காலப்பகுதியில் அமெரிக்க மிசனரியினருக்கு இந்தியாவில் பணியாற்ற அனுமதி வழங்கப்படாத காரணத்தால் மருத்துவர் ஸ்கடர் யாழ்ப்பாணத்துக்கு கொல்கொத்தாவிலிருந்து பயணமானார். ஸ்கடர் தம்பதியினர் 1819 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் திகதி தெல்லிப்பழையை வந்தடைந்தனர். பின்னர் அங்கிருந்து பண்டத்தரிப்புக்குச் சென்றனர். ஸ்கடர் உலகின் முதல் மிசனரி மருத்துவமனையை 1820 ஆண்டு யூன் மாதம் 18 ஆம் திகதி பண்டத்தரிப்பிலே ஆரம்பித்தார். ஸ்கடர் தம்பதியினருக்கு மரியாவை அடுத்துப் பிறந்த 2 ஆவது பெண் குழந்தையும் பிறந்த சில நாள்களிலே இறந்து போனது. பின்னர் ஓர் ஆண்குழந்தையும் இறந்து போனது. அடுத்தடுத்து நிகழ்ந்த குழந்தைகளது இறப்பு இருவரதும் இதயத்தை நொருக்குவதாக இருந்தது.
ஸ்கடர் தம்பதியினருக்கு மொத்தமாக 13 பிள்ளைகள் இருந்தனர். இவர்களில் மூவர் குழந்தைகளாக இருந்த போதும் ஒருவர் நீரில் மூழ்கியும் இறந்து போயினர். பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதும் ஸ்கடரும் திருமதி ஹரியற் ஸ்கடரும் யாழ்ப்பாணத்தில் இருந்து சேவைசெய்ய திடசங்கற்பம் பூண்டு ஏறத்தாழ 16 ஆண்டுகள் 1936 வரை யாழ்ப்பாணத்தில் பணியாற்றினர்.
கிறித்துவின் செய்தியைப் பரப்புவதும் கல்வியறிவூட்டுவதும் அமெரிக்க மிசனரியினரது பணிகளில் பிரதானமாக விளங்கியது. யாழ்ப்பாணத்தில் ஸ்கடர் தம்பதியினர் பெண்களுக்குக் கல்வியறிவு ஊட்டியமை முக்கியத்துவம் வாய்ந்தது. இவர்களது வீட்டில் 40 பிள்ளைகள் தங்கியிருந்து கல்விகற்றனர். இப்பிள்ளைகளில் பலர் பெற்றோரை இழந்தவர்கள்.
பண்டத்தரிப்பிலே ஸ்கடர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் என தனித்தனியாகப் பாடசாலைகளை நிறுவினார். இவற்றை விட யாழ்ப்பாணத்திலே 25 பாடசாலைகளை நிறுவுவதற்கும் உதவினார்.
1836 இல் அமெரிக்க மிசனரியினரின் வேண்டுகோளை ஏற்று இந்தியாவுக்குப் பயணமான ஸ்கடர் அங்கு சிலகாலம் பணியாற்றிய பின்னர் அமெரிக்காவுக்குப் பயணமானார். மருத்துவர் ஸ்கடரது பிள்ளைகளிற் சிலர் மருத்துவர்களாகவும், வேறு சிலர் அமெரிக்க மிசனரி மருத்தவர்களாகவும் பணியாற்றியுள்ளனர். இவரது பேர்த்தியான மருத்துவர் ஐடா சோபியா ஸ்கடர் (Dr. Ida S. Scudder) இன்று இந்தியாவில் முதல்தரமான மருத்துவமனைகளில் ஒன்றாக விளங்கும் வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரியை 1900 ஆம் ஆண்டு ஒரே ஒரு படுக்கை வசதியுடன் ஆரம்பித்தார்.
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பில் ஆரம்பமான மருத்துவப் பணி
மருத்துவர் ஜோன் ஸ்கடர் யாழ்ப்பாணத்தை அடைந்த போது இங்கு சித்த மருத்துவமே நடைமுறையில் இருந்தது. பல்வேறு காரணிகளால் சித்த மருத்துவம் வளர்ச்சியடையவில்லை. யாழ்ப்பாணத்தில் நோய் தொடா்பில் அறியாமையும் மூடநம்பிக்கையும் மிகுந்திருந்த காலப்பகுதியிலேயே மருத்துவர் ஸ்கடர் தனது மருத்துவமனையை பண்டத்தரிப்பில் நிறுவி பல்வேறு நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார்.
ஸ்கடரது மருத்துவமனைக் காட்சி:
மண்ணினாற் கட்டப்பட்டு ஓலையால் வேயப்பட்ட மருத்துவமனைக்கு வெளியே ஒரு புறம் ஆண்கள் நடக்கவும் நிற்கவும் முடியாது நொண்டிக்கொண்டும், பெண்கள் திராணியற்றுச் சோர்ந்து போயும் காணப்பட்டனர். நொய்ந்து நோய்வாய்ப்பட்ட பிள்ளைகளும் இருந்தனர். அனைவரும் மிகுந்த பொறுமையோடு காத்திருந்தார்கள். முதலில் ஸ்கடர் வெளியே வந்து பைபிளைத் திறந்து நோயினால் துன்பப்பட்டவர்கள் ஆறுதலடையும் வண்ணம் சுருக்கமாக உரையாற்றி தனது பிரத்தியேக அறைக்குச் செல்வார். அங்கே இன்னொருபுறம் வெளிநாட்டிலிருந்து வந்த வெள்ளைக்காரர் எவ்வாறு நோயைக் குணப்படுத்துகின்றார்? அவர் நோயைக் குணப்படுத்துகின்ற வல்லமையை அறிந்து கொள்வதில் ஆர்வம் மிக்க உள்ளூர் இளைஞர்களும் தங்களது முறை வரும்வரை காத்திருந்தனர்.
யாழ்ப்பாணத்தில் அக்காலத்தில் பரவிய வாந்திபேதி மற்றும் மஞ்சட்காமாலை நோயைக் கட்டுப்படுத்துவதில் மருத்துவர் ஸ்கடர் வெற்றிபெற்றார். அவர் சத்திர சிகிச்சை மேற்கொள்வதில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தார். சத்திரசிகிச்சையின் போது வழங்குகின்ற மயக்கமருந்துகள், குருதி மாற்றீடு, நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் எவையுமே அக்காலத்தில் பயன்பாட்டுக்கு வரவில்லை.
மயக்கமருந்துகள் இல்லாத அக்காலத்தில் ஸ்கடர் மேற்கொண்ட சத்திர சிகிச்சை பற்றிய குறிப்புக்கள் ஆச்சரியம் தருகின்றன.
தொடரும்.