ஆசியாவில் பெண்களுக்கான முதலாவது மருத்துவக் கல்லூரி
Arts
7 நிமிட வாசிப்பு

ஆசியாவில் பெண்களுக்கான முதலாவது மருத்துவக் கல்லூரி

July 16, 2022 | Ezhuna

ஆங்கிலேயர்களின் ஆட்சியால் இலங்கைக்கு கிடைத்த சில பேறுகளில், மேலைத்தேச மருத்துவமுறையின் உள்நுழைவும் ஒன்றாகும். அதுவரை தனியே சுதேச மருத்துவத்தையே நம்பியிருந்த இலங்கை மக்கள், மேலைத்தேய மருத்துவத்தின் அறிமுகத்தோடு தீர்க்கப்படமுடியாத பல நோய்களையும் குணப்படுத்த முடிந்தது. இறப்புவீதம் பெருமளவுக்கு குறைந்தது. இவ்வாறான மேலைத்தேய மருத்துவத்துறையை இலங்கையில் குறிப்பாக வடபகுதியில் வளர்த்தெடுக்க, அமெரிக்க மருத்துவ மிஷனரிகள் மேற்கொண்ட பணிகள் அளப்பரியவை. அவ்வாறு மேலைத்தேய மருத்துவத்தை இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வளர்த்தெடுக்க தம் வாழ்வையே அர்ப்பணித்த மருத்துவர்களையும், அவர்களது பணிகளின் தனித்துவத்தையும், இலங்கையின் வடபகுதியில் மேலைத்தேச மருத்துவத்துறை 1820 முதல் இப்போதுவரை வளர்ந்து வந்த முறைமைகளையும் தொகுத்து தருவதாக ‘யாழ்ப்பாண மருத்துவ வரலாறு’ என்ற இந்தக் கட்டுரைத் தொடர் அமைகின்றது.

மருத்துவர் ஐடா சோபியா ஸ்கடரது மருத்துவப்பணியைக் கேள்வியுற்று 1928 ஆண்டு இந்தியாவின் தேசபிதா மகாத்மா காந்தி அவர்கள் வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரிக்கு வருகைதந்து அவரது சேவையைப் பாராட்டுகிறார்.

ஐடா ஸ்கடர் 1912 இல் பெண்களுக்கென தனியான ஒரு மருத்துவக்கல்லூரியை ஆரம்பிக்கும் எண்ணத்தை வெளியிட்ட போது பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்புக்களை எதிர்கொண்டார்.  அமெரிக்க மிசனரியினரும்  ஆரம்பத்தில் அனுமதியளிக்கவில்லை. ஐடா ஸ்கடரின் பிரார்த்தனை 1918 இல் நிறைவேறியது. ஆசியாவில் பெண்களுக்கான முதலாவது மருத்துவக் கல்லூரி 1918.08.12 அன்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

மருத்துவர் ஐடா சோபியா ஸ்கடரவும் இந்தியாவின் தேசபிதா மகாத்மா காந்தியும்

ஐடா ஸ்கடர் சத்திரசிகிச்சை நிபுணராகவும், விரிவுரையாளராகவும், மருத்துவக்கல்லூரியின் நிருவாகியாகவும் கடமையாற்றிய அதேவேளை வேலூர் மருத்துவக் கல்லூரியைத் தரமுயர்த்துவதற்காகவும் அதனது அங்கீகாரத்துக்காகவும் அயராது முயன்றார். மருத்துவக் கல்லூரியைத் தரமுயர்த்த மருத்துவமனையின் படுக்கை வசதியை (Bed Strength) அதிகரிக்க வேண்டியேற்பட்டது. மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க அமெரிக்காவிலிருந்து மருத்துவப் பேராசிரியர்களை அழைத்தும் வரவேண்டியிருந்தது. இவற்றுக்குப் பெருமளவு நிதி தேவைப்பட்டது. ஐடா ஸ்கடர் நிதி திரட்டுவதுக்காகப் பல தடவைகள் அமெரிக்காவுக்குச் சென்று பல மில்லியன் டொலர்களைத் திரட்டி வந்தார்.  

பல்கலைக்கழகங்கள் மட்டுமே மருத்துவப் பட்டம் வழங்கலாம் என்ற சட்டத்தை 1938 இல் மெட்ராஸ்(சென்னை) அரசாங்கம் நிறைவேற்றியபோது வேலூர் மருத்துவக் கல்லூரி சவாலை எதிர்கொண்டது. மருத்துவக் கல்லூரியை மூடவேண்டிய நிலையேற்பட்டது. மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரத்துக்காகவும் மருத்துவ சேவையை மேம்படுத்தவும் ஐடா பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்; பல முயற்சிகளை எடுத்தார்; இதற்காக ஆண்களையும் மருத்துவக் கல்லூரியில் இணைக்க வேண்டிய தேவையேற்பட்டது; ஐடாவின் மிசனரி நண்பர்கள் பலரும் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை; எனினும் ஐடா இம்முயற்சியைக் கைவிடவில்லை. 1947 இல் வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில ஆண்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. 1950 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணை வளாகமாக வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் பெற்றது.

வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரி

1948 இல் உலகிலே முதற்றடவையாக தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களது  கை, கால் விரல்களில் ஏற்படும் பாதிப்புக்களை சீரமைக்கும் மீளஅமைப்பு சத்திரசிகிச்சையானது வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் என்புமுறிவு சத்திரசிகிச்சை மருத்துவ வல்லுநர் போல் வின்சன் பிரான்ட் அவர்களால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.  

மருத்துவர் போல் வில்சன் பிரான்ட் தொழுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை பார்வையிடல்

மேலும் உலகின் முதல் கண்சிகிச்சை முகாம் வேலூரிலே மேற்கொள்ளப்பட்டது. 1950 இல் தென்னாசியாவில் முதற்றடவையாக நரம்பியில் விஞ்ஞானத்துறைக்கான மருத்துவப் பட்டப்பின் படிப்புக் கற்கைநெறி கிறித்துவ மருத்துவக் கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டது.

20 வயதில் இந்தியப் பெண்களுக்காக அர்ப்பணித்த ஐடாவின் வாழ்வு 80 வயது வரை ஓய்வின்றித் தொடர்ந்து. வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரி மருத்துவப் பட்டம் வழங்கும் அங்கீகாரம் பெற்றதும் மருத்துவர் ஐடா ஸ்கடர் ஓய்வு பெறுகிறார். ஐடா ஸ்கடரின் பிரார்த்தனை, கனவு, மருத்துவ மிசன் நிறைவேறியது.

நியூயோர்க் கண் மற்றும் காது மருத்துவமனை (New York Eye and Ear Infirmary) 1952 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த பெண் மருத்துவ வல்லுநர்கள் ஐவரில் ஒருவராக  மருத்துவர் ஐடா ஸ்கடரைத் தெரிவு செய்து, 1953 ஆம் ஆண்டு அவரது 82 ஆவது வயதில் எலிசபேத் பிளெக்வெல் விருதை வழங்கிக் கௌரவித்தது.

தன்னுடைய வாழ்வை இந்தியாவில் மருத்துவத் தொண்டுக்காக அர்ப்பணித்த ஐடா ஸ்கடர் அம்மையார் 1960 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி கோடைக்கானலில் உயிர்நீத்தார். இவரது உடல் வேலூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.  

ஸ்கடர் பரம்பரையின் 4 தலைமுறையைச் சேர்ந்த 42 பேர் மருத்துவர்களாகி அமெரிக்க மருத்துவ மிசனுக்காக இந்தியாவில் மருத்துவத் தொண்டு ஆற்றியுள்ளனர். சிலர் ஆபிரிக்காவுக்கும், ஏனைய ஆசிய நாடுகளுக்கும் சென்று மிசன் பணியை ஆற்றியிருக்கிறார்கள். உலகின் முதல் மருத்துவ மிசனரியாக யாழ்ப்பாணத்தில் கடமையாற்றிய மருத்துவர் ஜோன் ஸ்கடரில் இருந்து “ஸ்கடர் குடும்பத்தின்” மருத்துவ மிசன் பணி ஆரம்பிக்கிறது.

ஸ்கட்டர் குடும்பம்

அமெரிக்க மருத்துவ மிசனரிக்காக மட்டுமன்றி உலகில் வேறு எந்த மிசனுக்காகவும் பல தலைமுறைகளாகத் தங்களைத் தியாகம் செய்த ஒரு குடும்பத்தினை உலகில் வேறெங்கும் எடுத்துக் காட்ட முடியாது. ”ஸ்கடர் குடும்பம்” உலெகெங்கும் சிதறியிருக்கும் தங்கள் பரம்பரையை இணைக்கும் நிறுவனத்தை (The Scudder Association Foundation) 1912 இல் உருவாக்கினர். வருடந்தோறும் இவர்கள் ஒன்றுகூடல் நிகழ்வொன்றையும் ஏற்பாடு செய்கின்றனர்.

இற்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க மருத்துவ மிசனரியினர் இந்தியாவிலே தமது மருத்துவப் பணியை ஆரம்பிக்க எண்ணியிருந்தனர். மருத்துவ மிசன் முன்னோடியான ஜோன் ஸ்கடர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தமை தற்செயலானது. மருத்துவர் ஜோன் ஸ்கடரின் யாழ்ப்பாண வருகையானது இலங்கையின் வடபகுதியில் இன்றும் நிலைத்திருக்கும் மேலைத்தேச மருத்துவ, மற்றும் கல்விப் பாரம்பரியத்துக்கு வித்திட்டது.

 ஸ்கடரது மருத்துவ மிசனைக்  கௌரவித்து 200 ஆவது ஆண்டு வெளியிடப்பட்ட முதல்நாள் தபால் உறை

அமெரிக்க மிசனரியினரின் யாழ்ப்பாண வருகையின் 200 ஆவது ஆண்டை நினைவுகூருவதற்காக அமெரிக்க இலங்கை மிசன் சபையினரால் 1816 ஒக்ரோபர் முதல் ஓராண்டு காலமாக பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. தொடர் நிகழ்ச்சிகளின்  நிறைவுநாள் வைபவம் 2017 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 18 ஆம் திகதி பண்டத்தரிப்பிலே நடைபெற்றது. அன்றைய தினம் இலங்கைத் தபாற் திணைக்களம் மருத்துவர் ஜோன் ஸ்கடரின் உருவம் பொறித்த முத்திரையை வெளியிட்டது. ஸ்கடரது மருத்துவ மிசனைக்  கௌரவித்து 200 ஆவது ஆண்டை சிறப்பிக்கும் விசேட ஞாபகார்த்த முதல்நாள் தபால் உறையையும் வெளியிட்டது.

கொழும்பு மருத்துவக் கல்லூரி 1870 இல் ஆரம்பிக்கப்பட்டமையயைத் தொடர்ந்து, மானிப்பாயில் 1848 இல் மருத்துவர் கிறீன் ஆரம்பித்த தென்னாசியாவின் முதலாவது மருத்துவக் கல்லூரி 1875 இல் மூடப்படுகிறது.  மருத்துவர் ஐடா ஸ்கடர் 1918 இல் வேலூரில் தாபித்த கிறித்துவ மருத்துவக் கல்லூரி எதிர்நோக்கிய சவால்களில் இருந்து கிறீன் தாபித்த மானிப்பாய் மருத்துவக் கல்லூரியின் வீழ்ச்சிக்கான காரணங்களைத் தேட முடியும்.

யாழ்ப்பாணத்தின் அன்னை தெரேசா (Mother Teresa of Jaffna)

அமெரிக்க மருத்துவ மிசனரிகள் மட்டுமன்றி, இங்கிலாந்தின் ஸெனனா மருத்துவ மிசனரியினரும் (Church of England Zenana Missionary Society) 19ஆம் – 20 ஆம் நுாற்றாண்டுகளில் இலங்கையின் வடபகுதியில் மருத்துவ சேவைக்காகத் தங்களது வாழ்வைத் தியாகம் செய்து அருந்தொண்டு ஆற்றியிருக்கிறார்கள்.

இணுவில் மக்லியோட் மகப்பேற்று மருத்துமனையில் 40 ஆண்டுகளாக மகப்பேற்று மருத்துவராக அரும்பணியாற்றிய மருத்துவர் இசபெல்லா கேர் அம்மையார் பற்றி மிசனரி வரலாற்றாசிரியர்கள்  அதிகம் எழுதவில்லை; உலகம் இவரது தன்னலமற்ற சேவையை அறியவில்லை. “கேர் அம்மா என்றும் இணுவில் அம்மா என்றும் யாழ்ப்பாணத்தவர்களால் அழைக்கப்பட்ட இவ் அம்மையாரது சேவையை யாழ்ப்பாணத்துப் பெண்கள் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

இலண்டன் ஸெனனான மருத்துவ மிசனுக்காக ஸ்கொட்லாந்து நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்து தமிழ்ப் பெண்களுக்கு அறிவூட்டி “மகப்பெறுவித்துப்” பெருந்தொண்டாற்றிய மருத்துவரான இஸெபெல்லா கேர் அம்மையார் பற்றி தென்னிந்தியத் திருச்சபையின் இளைப்பாறிய பேராயர் பேரருட்கலாநிதி சுப்பிரமணியம் ஜெபநேசன் அவர்கள் குறிப்பிடுகின்றவற்றில் 2 விடயங்களை இங்கே மேற்கோள் காட்டுகிறேன். மருத்துவர் கேர் அம்மையாரது மருத்துவத் தொண்டு பற்றி இன்னோர் அத்தியாயத்தில் விரிவாகப் பார்ப்போம்.

  1. அன்னை தெரெசா அவர்கள் கொல்கொத்தாவிலே (கல்கத்தா) செய்த மிகப்பெரிய பணிகளைப்போன்று மருத்துவர் கேர் அம்மையாரும் யாழ்ப்பாணத்திலே பெண்கள் மத்தியில் அரிய பணிகளைச் செய்தார் என்று துணிந்து கூறலாம். (Dr. Isabella H Curr: Teresa of Jaffna/Inuvil)  
  1. நாம் எழுந்து நின்று இசபெல்லா கேர் அம்மையாருக்கு மரியாதை செலுத்த வேண்டும்.

(தொடரும்)


ஒலிவடிவில் கேட்க

5486 பார்வைகள்

About the Author

பாலசுப்ரமணியம் துவாரகன்

பாலசுப்ரமணியம் துவாரகன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் விஞ்ஞானமாணிப் பட்டம் பெற்றவர். 2005 - 2008 காலப்பகுதியில் சுகாதார அமைச்சில் கடமையாற்றியுள்ளார். இக்காலப்பகுதியில் 10 இற்கும் மேற்பட்ட பல்வேறு துறைசார் ஆளுமைகளை நேர்காணல் செய்து கனடாவிலிருந்து வெளிவரும் 'வைகறை' வாரப்பத்திரிகையிலும் 'காலம்' சஞ்சிகையிலும் பிரசுரித்துள்ளார். கலாநிதி. சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் நூற்றாண்டு மலரின் பதிப்பாசிரியர்.

கடந்த 14 வருடங்களாக யாழ். போதனா மருத்துவமனையில் அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றும் துவாரகன் 2018 இல் யாழ். போதனா மருத்துவமனையில் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண மருத்துவ அருங்காட்சியகத்தில் மேலைத்தேச மருத்துவ வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ளார். இவர் மருத்துவ அருங்காட்சியகத்துக்குப் பொறுப்பு அலுவலராக விளங்குவதுடன் மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி அவர்களது வழிகாட்டலில் யாழ்ப்பாணத்தில் தனித்துவமான மருத்துவ அருங்காட்சியகம் உருவாகக் காரணமானவர். இங்குள்ள தொலைமருத்துவப் பிரிவில் பன்னாட்டு மருத்துவ வல்லுநர்கள், பேராசிரியர்கள் வாரந்தோறும் கலந்துகொள்ளும் இணையவழி தொலைமருத்துவக் கருத்தமர்வுகளின் இணைப்பாளராகவும் செயற்படுகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)