யாழ்ப்பாணமும் மருத்துவ - அறிவியல் கற்கைகளின் பரவுகையும்!
Arts
7 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணமும் மருத்துவ – அறிவியல் கற்கைகளின் பரவுகையும்!

July 23, 2022 | Ezhuna

ஆங்கிலேயர்களின் ஆட்சியால் இலங்கைக்கு கிடைத்த சில பேறுகளில், மேலைத்தேச மருத்துவமுறையின் உள்நுழைவும் ஒன்றாகும். அதுவரை தனியே சுதேச மருத்துவத்தையே நம்பியிருந்த இலங்கை மக்கள், மேலைத்தேய மருத்துவத்தின் அறிமுகத்தோடு தீர்க்கப்படமுடியாத பல நோய்களையும் குணப்படுத்த முடிந்தது. இறப்புவீதம் பெருமளவுக்கு குறைந்தது. இவ்வாறான மேலைத்தேய மருத்துவத்துறையை இலங்கையில் குறிப்பாக வடபகுதியில் வளர்த்தெடுக்க, அமெரிக்க மருத்துவ மிஷனரிகள் மேற்கொண்ட பணிகள் அளப்பரியவை. அவ்வாறு மேலைத்தேய மருத்துவத்தை இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வளர்த்தெடுக்க தம் வாழ்வையே அர்ப்பணித்த மருத்துவர்களையும், அவர்களது பணிகளின் தனித்துவத்தையும், இலங்கையின் வடபகுதியில் மேலைத்தேச மருத்துவத்துறை 1820 முதல் இப்போதுவரை வளர்ந்து வந்த முறைமைகளையும் தொகுத்து தருவதாக ‘யாழ்ப்பாண மருத்துவ வரலாறு’ என்ற இந்தக் கட்டுரைத் தொடர் அமைகின்றது.

மருத்துவர் ஜோன் ஸ்கடரை அடுத்து அமெரிக்காவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த 2 ஆவது  தகுதிவாய்ந்த மருத்துவர் நேத்தன் உவோட் ஆவர். இவர் அமெரிக்காவில் நியூ ஹம்ப்சயரில் உள்ள பிளைமோத் என்னுமிடத்தில் 1804 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி பிறந்தார். பௌடுன் மருத்துவக் கல்லூரியில் (Bowdoin Medical College) பயின்று மருத்துவப் பட்டம் பெற்று அமெரிக்காவில் பணியாற்றி வந்தார். வெளிநாடு சென்று மருத்துவ மிசனில் பணியாற்ற விரும்பி பிரதேசத்துக்கு மிசன் தொண்டர்களை அனுப்பும் அமெரிக்கச் சங்கத்துக்கு விண்ணப்பித்தார். இவரது விண்ணப்பத்தை ஏற்ற அமெரிக்க மிசன் சங்கமானது மருத்துவர் உவோட்டை  யாழ்ப்பாணத்தில் உள்ள அமெரிக்க மிசன் சபைக்கு அனுப்பத் தீர்மானித்தனர்.  

உவோட் 1833 ஆம் ஆண்டு சனவரி மாதம் 8 ஆம் திகதி ஹனா வூட்வோட் கிளார்க் என்பவரைத் திருமணம் செய்தார். 1833 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் திகதி தனது மனைவியுடன் போஸ்ரன் துறைமுகத்திலிருந்து ‘இஸ்ரேல்’ என்ற பாய்க்கப்பலில் யாழ்ப்பாணத்துக்குப் புறப்பட்டார். ஏறத்தாழ 4 மாத கடற்பயணத்துக்குப் பின்னர் 1833.10.28 அன்று சென்னை வழியாக யாழ்ப்பாணத்தை அடைந்தனர். உவோட் தம்பதியினருடன் வேறு 4 மிசனரி தம்பதியினரும் இந்தக்கப்பலில் யாழ்ப்பாணத்துக்கு  வந்தனர்.


இந்தக்காலப் பகுதியில் மருத்துவர் ஜோன் ஸ்கடர் பண்டத்தரிப்பில் உள்ள சிகிச்சை நிலையத்துக்கு மேலதிகமாக சாவகச்சேரியிலும் சிகிச்சை நிலையமொன்றை நிறுவி அமெரிக்க மிசன் பணியை ஆற்றி வந்தார்.

வட்டுக்கோட்டை குருமடத்தின் (Batticotta Seminary)  முதல்வராக  டானியல் பூவர்

யாழ்ப்பாணத்தில் ஜோன் ஸ்கடர் அமெரிக்க மிசனரியினரது பிரதான பணியாகிய கிறிஸ்துவினது நற்செய்தியைப் அறிவிக்கும் பணியையும்  மருத்துவத் தொண்டையும்  ஆற்றி வந்தார். அதேவேளை 1832 இல் சுதேச மாணவர்களுக்கு மருத்துவ செய்முறைப் பயிற்சியையும் ஆரம்பித்தார். மருத்துவர் நேத்தன் உவோட்டின்  வருகையைத் தொடர்ந்து வட்டுக்கோட்டை குருமடத்தின் (Batticotta Seminary)  முதல்வராக இருந்த டானியல் பூவர், யாழ்ப்பாணத்தில் மருத்துவமனையையும் மருத்துவக் கல்லூரியையும் ஆரம்பிப்பதன் அவசியம் பற்றி 1835 இல் அமெரிக்காவிலுள்ள மிசன் பணியகத்துக்குக்  கடிதம் வரைந்தார்.


பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி 1833 இல் அமெரிக்க மிசனரியினருக்கு இந்தியாவில் பணியாற்ற அனுமதி வழங்கியதை அடுத்து மருத்துவர் ஜோன் ஸ்கடர் 1836 இல் இந்தியாவுக்கு மருத்துவ மிசனை ஆரம்பிக்கச் சென்றார்.  இதனால் மருத்துவர் உவோட்  யாழ்ப்பாணம் முழுமைக்கும் ஒரேஒரு மருத்துவராகக் கடமையாற்ற வேண்டியேற்பட்டது.


வட்டுக்கோட்டை குருமடத்தில் ஆரம்பிக்கப்பட்ட மருத்துவக் கல்வி
(Medical Education at Batticotta Seminary)


இந்தப் பாடசாலை 1823 இல் ஆரம்பிக்கப்பட்டது. வட்டுக்கோட்டை குருமடம் ஆசியாவில் நிறுவப்பட்ட முதலாவது கிறிஸ்தவ உயர்கல்வி நிறுவனமாகும். 1855 இல் குருமடத்தின் கல்விச் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டன.  இந்தப்பாடசாலையே இன்று யாழ்ப்பாணக் கல்லூரி என்ற பெயரில் விளங்குகிறது.

1823 இல் உடுவிலில் பெண்கள் தங்கியிருந்து படிக்கும் விடுதிப் பாடசாலையும் ஆரம்பிக்கப்பட்டது.  இன்று உடுவில் மகளிர் கல்லூரி என்ற பெயரில் விளங்கும் யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற பெண்கள் பாடசாலையானது ஆசியாவில் பெண்களுக்காக அமைக்கப்பட்ட முதலாவது விடுதிப் பாடசாலையாகும். (The first boarding school in Asia)

வட்டுக்கோட்டையில் வசித்த உவோட், மருத்துவராக மட்டுமன்றி சிறந்த ஆசிரியராகவும் விளங்கினார். மருத்துவர் உவோட்,  எட்டு அல்லது பத்து வரையான உள்ளூர் மாணவர்களுக்கு வட்டுக்கோட்டை குருமடத்தில் மருத்துவக் கல்வியைப் போதித்தார். இவர்கள் யாழ்ப்பாணத்தில் பல்வேறு  இடங்களிலும் உள்ள மிசன் பணிமனைகளில் உள்ளூர் மருத்துவர்களாகவும் (Physicians), மருந்தாளர்களாகவும் (Dispensers)  அமெரிக்க மிசனில் பணியாற்றினர்.  

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் தற்கால முகப்புத் தோற்றம்


மருத்துவர் நேத்தன் உவோட்டைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்துக்கு 3 ஆவதாக வருகை தந்த மருத்துவரான கிறீன், 1850 ஆம் ஆண்டு நவம்பரில் தாம் எழுதிய கடிதம் ஒன்றில் உவோட்டிடம் கற்றவர்களது பெயர்களைக் குறிப்பிடுகிறபோது “மருத்துவர்” (Dr) என்ற அடைமொழியை அனைவரது பெயரின் முன்பும் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது: “என்னுடன் மருத்துவர் கௌல்ட் (Dr Gould, a Native Assistant), என்பவர் பணிபுரிந்தார். இவர் வட்டுக்கோட்டை செமினரியில் மருத்துவர் உவோட்டிடம் மருத்துவம் பயின்றவர். வட்டுக்கோட்டையில் மருத்துவர் எஸ். ஏ. இவாட்ஸ் (Dr S A Evarts) தம்மை நாடிவரும் அனைவருக்கும் சிகிச்சை அளித்தார்.  உடுவிலில் மருத்துவர் டானியல் நிக்கலஸ் (Dr Daniel Nicholas) நோயாளர்களைப் பார்வையிட்டார். இவர்கள் இருவரும் மருத்துவர்  கௌல்ட்  போன்று செமினரியில் மருத்துவப் பயிற்சி பெற்றவர்கள். தெல்லிப்பளையில் மருத்துவர்  எஸ். ரோப்ஸ் (Dr S Ropes) கடமையாற்றினார்.” *

மருத்துவர் உவோட் தனது நேரத்தின் பெரும் பகுதியை வட்டுக்கோட்டை செமினரியில் இயற்கை மெய்யியல், மருத்துவம் ஆகிய பாடங்களை கற்பிப்பதில் செலவிட்டார். மேலே குறிப்பிட்டவர்களை விட ரி. ஸ்கொட், எஸ். மில்லர், எஸ். குட்வெல் மற்றும் ஜெரேமியா இவாட்ஸ் ஆகியோரும் வட்டுக்கோட்டை செமினரியில் மருத்துவர் உவோட்டிடம் மருத்துவம் பயின்றனர்.


மருத்துவர் கிறீன் ,மருத்துவக் கல்லூரியை மானிப்பாயில் ஆரம்பிப்பதற்கு முன்பே அமெரிக்க மிசன் சபையில் சேர்ந்த அந்தக்காலத்து யாழ்ப்பாணத்து இளைஞர்கள் கல்வி கற்பதில் குறிப்பாக மருத்துவம் பயில்வதில் கொண்டிருந்த ஆர்வத்தை வட்டுக்கோட்டை செமினரியில் மருத்துவம் கற்பித்த மருத்துவர் உவோட்டும் தனது கடிதங்களில் குறிப்பிட்டுள்ளார். மருத்துவர் உவோட் 1844 ஒக்ரோபர் 15, திகதியிட்ட  கடிதம் ஒன்றில் மேல்வருமாறு எழுதுகின்றார்:
செமினரியில் ஜெரேமியா இவாட்ஸ் தன்னுடைய பயிற்சிக் காலநிறைவில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.  1840 இல் ஆரம்பிக்கப்பட்ட வகுப்பின் ஓர் உறுப்பினராக விளங்கிய இவர் தன்னுடைய மாணவப்பருவத்தின் முழுநேரத்தையும் மருத்துவம் பயில்வதிலேயே செலவிட்டார்.”*  


பிரதேசத்துக்கு மிசன் தொண்டர்களை அனுப்பும் அமெரிக்கச் சங்கத்துக்கு (ABCFM) மருத்துவர் உவோட் 1845 ஆகஸ்ட் 15 அன்று எழுதிய கடிதத்தின் சில வரிகள் மேல்வருமாறு
இவாட்ஸ் குருமடத்தில் கெமிஸ்தம் (இரசாயனவியல்) கற்பிக்கும் ஆசிரியராக விளங்கினார். இவர் மருத்துவம் கற்கும் முறையானது ஒழுங்குமுறையானதாகவும் பரந்ததாகவும் இருந்ததுடன் புதிய இங்கிலாந்தை வெற்றி கொள்வதாகவும் அமைந்திருந்து. இளைஞனான இவாட்ஸ் எதிர்காலத்தில் நம்பிக்கை தரும் ஒருவராக விளங்குவார்.” *  

வட்டுக்கோட்டை குருமட உயர்கல்வி நிறுவனமானது நாட்டின் தேவைகள் சூழமைவுக்கு ஏற்ற பாடத்திட்டங்களை வகுத்திருந்ததுடன் அன்றைய நாட்களில் ஐரோப்பிலும் அமெரிக்காவிலும் பின்பற்றப்பட்ட விஞ்ஞானக் கல்வியை யாழ்ப்பாண மாணவர்களுக்கு வழங்கியது. 1840 களில் மின்னியல் விஞ்ஞானப்பாடத்தில் இடம்பெற்றிருந்தது.


1831 இல் மைக்கல் பரடே மின்சாரத்தை உற்பத்திசெய்யும் டைனமோவை கண்டுபிடித்தார். பரடே காந்தத்திலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும் என்பதைக் கண்டுபிடித்து பத்து வருடங்கள் நிறைவுற்றிருந்த காலத்தில் வட்டுக்கோட்டை குருமட உயர்கல்வி நிறுவனத்தில் மின்னியல் என்பது ஒரு பாடமாக இருந்தது. வட்டுக்கோட்டை குருமட உயர்கல்வி நிறுவனத்தின் அன்றைய கல்வித் தரத்தை மதிப்பிடும் அளவுகோலாக பிரித்தானிய குடியேற்ற நாட்டுச் செயலாளர் சேர் ஜேம்ஸ் எமர்சன் ரெனன்ற் அவர்களது வருகையும் அவர் எழுதிய குறிப்பும் காணப்படுகிறது.


சேர் ஜேம்ஸ் எமர்சன் ரெனன்ற்  1848 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை குருமட உயர்கல்வி நிறுவனத்தைப் பார்வையிட வருகை தந்தார். 1850 இல் அவர் எழுதிய இலங்கையில் கிறிஸ்தவம் (Christianity in Ceylon) என்ற நூலில் வட்டுக்கோட்டை குருமட உயர்கல்வி நிறுவனத்தில் தான் கண்ட அனுபவத்தை மேல்வருமாறு விவரிக்கிறார்: “வட்டுக்கோட்டை குருமட உயர்கலாசாலை மாணவர்கள் செய்து காண்பித்த விஞ்ஞான செய்முறையானது எனக்கு வியப்பாக இருந்தது.  அவர்களைப்பற்றி மிகையான புகழுரை கூறவேண்டிய அவசியம் இல்லை. வட்டுக்கோட்டை குருமட உயர்  கல்லூரியில் நடைமுறையில் இருந்த கல்வித்திட்ட முறையும் மாணவர்கள் தாம் கற்றுக்கொண்டதை வெளிப்படுத்தும் விதமும் ஐரோப்பிய பல்கலைக்கழங்களுக்கு இணையானதாக இருந்தது.” *


*  Nineteenth century American Medical Masonries in Jaffna Ceylon, By: Thiru Arumugam

(தொடரும் )


ஒலிவடிவில் கேட்க

5889 பார்வைகள்

About the Author

பாலசுப்ரமணியம் துவாரகன்

பாலசுப்ரமணியம் துவாரகன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் விஞ்ஞானமாணிப் பட்டம் பெற்றவர். 2005 - 2008 காலப்பகுதியில் சுகாதார அமைச்சில் கடமையாற்றியுள்ளார். இக்காலப்பகுதியில் 10 இற்கும் மேற்பட்ட பல்வேறு துறைசார் ஆளுமைகளை நேர்காணல் செய்து கனடாவிலிருந்து வெளிவரும் 'வைகறை' வாரப்பத்திரிகையிலும் 'காலம்' சஞ்சிகையிலும் பிரசுரித்துள்ளார். கலாநிதி. சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் நூற்றாண்டு மலரின் பதிப்பாசிரியர்.

கடந்த 14 வருடங்களாக யாழ். போதனா மருத்துவமனையில் அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றும் துவாரகன் 2018 இல் யாழ். போதனா மருத்துவமனையில் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண மருத்துவ அருங்காட்சியகத்தில் மேலைத்தேச மருத்துவ வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ளார். இவர் மருத்துவ அருங்காட்சியகத்துக்குப் பொறுப்பு அலுவலராக விளங்குவதுடன் மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி அவர்களது வழிகாட்டலில் யாழ்ப்பாணத்தில் தனித்துவமான மருத்துவ அருங்காட்சியகம் உருவாகக் காரணமானவர். இங்குள்ள தொலைமருத்துவப் பிரிவில் பன்னாட்டு மருத்துவ வல்லுநர்கள், பேராசிரியர்கள் வாரந்தோறும் கலந்துகொள்ளும் இணையவழி தொலைமருத்துவக் கருத்தமர்வுகளின் இணைப்பாளராகவும் செயற்படுகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (17)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)