கட்டுக்கரையும் பெருங்கற்காலப் பண்பாடும்
கட்டுக்கரையில் நுண்கற்காலப் பண்பாட்டின் தொடர்ச்சியாகப் பெருங்கற்காலப் பண்பாடு தோன்றியுள்ளது. இங்கு மேற்கொள்ளப்பட்ட இரு அகழ்வாய்விலும் இப்பண்பாடு பற்றிய ஆதாரங்களே அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை வடஇலங்கை வரலாற்றுக்கு சிறப்பாக இலங்கைத் தமிழர் வரலாற்றிற்குப் புதுவெளிச்ச மூட்டுவதாக உள்ளன. பெருங்கற்காலப் பண்பாடு என்பது இறந்தவர்களுக்கான ஈமச் சின்னங்கள் பெரிய கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டதால் தோன்றிய பெயராகும்.
ஆதிகால மக்கள் இறந்தவர்களுக்கு மறுபிறப்பு உண்டு என்ற நம்பிக்கையில் தமது வாழ்விடங்களை விட இறந்தவர்களுக்கு பெரிய கற்களைப் பயன்படுத்தி ஈமச் சின்னங்களை அமைத்ததற்கான சான்றுகள் பல நாடுகளில் காணப்படுகின்றன. ஆயினும் திராவிட மொழி பேசும் தென்னிந்திய மாநிலங்களின் பெருங்கற்காலப் பண்பாட்டிற்குச் சில தனித்துவமான அம்சங்கள் காணப்படுகின்றன. அதிலும் தென் தமிழகப் பெருங்கற்காலப் பண்பாடும் இலங்கைப் பெருங்கற்காலப் பண்பாடும் ஒரே பிராந்தியம் என மயங்கும் அளவிற்கு பல அம்சங்களில் நெருங்கிய ஒற்றுமை கொண்டு காணப்படுகின்றன. அவற்றுள் இரும்பின் உபயோகம், கறுப்புச் சிவப்பு மட்பாண்டங்களின் பயன்பாடு, தாழியடக்க முறை, சுடுமண் கலைவடிவங்கள் என்பன தனித்துவமான அம்சங்களாகப் பார்க்கப்படுகின்றது. இதனால் பெரிய கற்கள் கொண்டு ஈமச்சின்னங்கள் அமைக்கப்படாத இடங்களில் இப்பண்பாட்டுச் சின்னங்கள் காணப்படுமாயின் அப்பண்பாடும் பெருங்கற்காலப் பண்பாடு அல்லது ஆதியிரும்புக் காலப் பண்பாடு என அழைக்கப்படுகின்றது.
இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் சிறப்பாக தென் தமிழகத்திலும் பெருங்கற்காலப் பண்பாட்டின் தோற்றம் வரலாற்றின் புதிய காலகட்டத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகின்றது. இப்பண்பாட்டின் தோற்றத்துடன் நாடோடிகளாக வாழ்ந்த மக்கள் ஓர் இடத்தில் நிரந்தரமாகக் கூடி வாழ்தல், நிரந்தர பொருளாதாரம், நீர்ப்பாசன விவசாயம், குளத்தை மையப்படுத்திய கிராமக் குடியிருப்புக்கள், இரும்பின் அறிமுகம், மிகை உற்பத்தி, சிறு தொழில்நுட்ப வளர்ச்சி, சக்கரங்களைப் பயன்படுத்திய மட்பாண்ட உற்பத்தி, பண்டமாற்று, உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தகம், நகரமயமாக்கம், அரச உருவாக்கம் என்பன தோற்றம் பெற்றன. இலங்கையில் ஏறத்தாழ 60க்கு மேற்பட்ட இடங்களில் பெருங்கற்காலக் குடியிருப்புக்களும், ஈமச் சின்ன மையங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் மிகப் பெரிய குடியிருப்பு மையமாக அநுராதபுரம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இரண்டாவது பெரிய குடியிருப்பு மையமாக வட இலங்கையில் கந்தரோடை அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இலங்கையின் கரையோரங்களில் குடியேறிய மக்களே காலப்போக்கில் வளமான இடங்களைத் தேடிச் சென்று அவ்விடங்களில் குடியேறினர் (Seneviratne 1983 237 -307) அவற்றுள் பௌதீக மற்றும் கனிமவளங்கள் என்பவற்றைக் கொண்டிருந்த அநுராதபுரம், கந்தரோடை, மகாகமை ஆகிய இடங்களில் பரந்த பெருங்கற்காலக் குடியிருப்புக்கள் உருவாகி அவ்விடங்களில் ஆரம்பகால நகரமயமாக்கமும், அரச உருவாக்கமும் ஏற்பட்டன. அவற்றுள் அநுராதபுரத்தில் மிகப்பெரிய குடியிருப்புகள் தோன்றியதால் அங்கு பலமான மைய அரசு தோன்றியது. 1994ஆம் ஆண்டு காலப்பகுதியில் இங்கு அகழ்வாய்வு செய்த பேராசிரியர் கனிங்காம் தலைமையிலான குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்ட சான்றுகள் நவீன கணிப்பில் பெருங்கற்காலப் பண்பாட்டின் தோற்றம் கி.மு.1000 (இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு) எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. இக்காலக் கணிப்பு வடஇந்தியக் குடியேற்றம் நடந்ததாகக் கூறப்படும் காலத்திற்கு 400 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத் தொடர்பால் இலங்கையின் நாகரிக வரலாறு தோன்றியமை உறுதிப்படுத்தப்பட்டது.
பெருங்கற்காலப் பண்பாட்டில் கட்டுக்கரையின் முக்கியத்தும்
வட இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய பெருங்கற்காலக் குடியிருப்பு மையமாகக் கட்டுக்கரை காணப்படுகின்றது. இதை அநுராதபுரத்திற்கு அடுத்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய குடியிருப்பு பிரதேசம் எனக் கூறலாம். கட்டுக்கரைப் பெருங்கற்காலப் பண்பாடு சமகாலத் தமிழக, இலங்கைப் பெருங்கற்காலப் பண்பாடுகளுடன் ஒற்றுமை கொண்டிருந்தாலும் சில சான்றாதா ரங்கள் வட இலங்கையின் பூர்வீக வரலாற்றிற்கு அதிலும் குறிப்பாகத் தமிழர் வரலாற்றிற்குப் புதிய செய்திகளைக் கூறுவதாக உள்ளன. கட்டுக்கரைத் தொல்லியல் ஆய்விலேயே பெருங்கற்கால மக்களின் சமய நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் அதிகளவிலான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் நாக வழிபாட்டுக்கு உரிய சான்றாதாரங்கள் மிகப்பெரிய அளவில் கிடைத்திருப்பது சிறப்பாக நோக்கத்தக்கது. பெருங்கற்காலப் பண்பாட்டில் குடியிருப்பு, ஈமக்காடு, குளம் என்பன ஒருங்கே அமைந்திருப்பது அப்பண்பாட்டின் முக்கிய அம்சங்களாகும். இந்த நான்கு அம்சங்களும் தமிழகப் பெருங்கற்காலப் பண்பாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆயினும் இலங்கைப் பெருங்கற்காலப் பண்பாட்டில் இந்த அம்சங்கள் குறிப்பிட்ட மையப்பரப்பிற்குள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் கட்டுக்கரையில் இந்த நான்கு அம்சங்களும் ஒரு குறுகிய வட்டத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இங்கு சிறப்பாக நோக்கத்தக்கது. பெருங்கற்கால மக்கள் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு பல அளவுகளில், பல வடிவங்களில் ஈமச் சின்னங்களை அமைத்துள்ளனர். அவற்றுள் எருது, யானை போன்ற மிருகங்களின் உருவங்களை மண்ணில் செய்து அவற்றுள் இறந்தவரின் உடலை அல்லது எலும்புகளை வைத்து அடக்கம் செய்யும் ஈமப்பேழை சிறப்பான அம்சமாக நோக்கப்படுகின்றது. ஆயினும் இலங்கைப் பெருங்கற்கால ஈமச் சின்னங்களுள் இவ்வகையான ஈமப்பேழை கண்டுபிடித்ததாகத் தெரியவில்லை. கட்டுக்கரை அகழ்வாய்வில் தாழியடக்க ஈமச் சின்னத்துடன் ஈமப்பேழை ஈமச்சின்னமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவே இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது பெருங்கற்கால ஈமப்பேழையாக இருக்கலாம். வரலாற்று மூலங்கள் பலவும் இலங்கையின் வரலாற்றுப் பழமைவாய்ந்த துறைமுகமாக வடஇலங்கையில் உள்ள மாதோட்டத்தைக் குறிப்பிடுகின்றன. அங்கு 1825இல் இருந்து 1984வரை விரிவான தொல்லியல் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆயினும் அங்கு கண்டுபிடிக்கப்படாத தொன்மைச் சான்றுகள் கட்டுக்கரையில் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இச்சான்றுகள் மாதோட்டத்தில் இருந்து துறைமுக நகரத்தை அடையாளம்காண உதவலாம்.
தென்னாசியாவில் கி.மு.3ஆம் நூற்றாண்டளவில் பிராமி எழுத்து தோன்றுவதற்கு முன்னர் இங்கு வாழ்ந்த மக்களிடையே குறியீடுகள் ஒரு தொடர்பு மொழியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிந்துவெளி நாகரிகத்தில் தோன்றிய இக்குறியீடுகள் மேற்கிந்தியா ஊடாக பெருங்கற்காலப் பண்பாடு வரை தொடர்ந்ததற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன. கட்டுக்கரை அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பெருங்கற்கால மட்பாண்டங்களில் சிலவகையான குறியீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒரு குறியீடு சிந்துவெளி நாகரிக காலச் சிறப்புக் குறியீடாகக் காணப்படுகின்றது. இக்குறியீட்டை தென்னிந்தியாவின் முதன்மைத் தொல்லியலாளர்களில் ஒருவரான பேராசிரியர் இராஜன் கட்டுக்கரை பெருங்கற்காலக் குடியிருப்புகளின் தோற்றம் தமிழகத்தின் மிகப்பெரிய குடியிருப்பு மையமான கொடுமணலின் சமகாலமாக அல்லது அதற்கு முற்பட்டகாலமாக இருக்கலாம் எனக் கூறியிருப்பது இங்கு சிறப்பாக நோக்கத்தக்கது. மேலும் கட்டுக்கரைத் தொல்லியல் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சமயம், சமய நம்பிக்கைகள், உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தகம், நகர மயமாக்கம், சிறு கைத்தொழில் சாலைகள் என்பன தொடர்பான தொல்லியற் சான்றுகள் பெருங்கற்காலப் பண்பாட்டுடன் கட்டுக்கரையில் வலுவான ஒரு நாகரிகம் உருவாகிவிட்டது என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளன.
பெருங்கற்கால மக்களின் சமய நம்பிக்கைகள்
கி.மு.3ஆம் நூற்றாண்டு பௌத்த மதம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் இங்கு வாழ்ந்த மக்களிடையே நிலவிய சமய நம்பிக்கைகள் இந்து மதத்துடன் தொடர்புடையவையாக இருந்துள்ளன. இதைப் பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்தி கூறும் பாளி இலக்கியங்களும் உறுதிசெய்கின்றன. இம்மத நம்பிக்கைகள் பற்றிப் பல அறிஞர்களும் ஆராய்ந்துள்ளனர் (Paranavithana 1970, சிற்றம்பலம் 1996, பத்மநாதன் 2016, இரகுபதி2006) இந்த உண்மையை பெருங்கற்காலப் பண்பாடு பற்றிய ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட சுடுமண் சிற்பங்கள், சிலைகள், சமயச் சின்னங்கள், குறியீடுகள் என்பனவும் உறுதிசெய்கின்றன.
கட்டுக்கரைத் தொல்லியல் அகழ்வாய்வின் போது பெருங்கற்காலக் குடியிருப்புப் பகுதியிலிருந்து வெளிவந்த சமயச் சின்னங்கள் பொது மக்கள் பலரின் கவனத்தைக் கட்டுக்கரையின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருந்தது. அவற்றுள் கட்டுக்கரைக் குளத்தின் வடக்குப்பக்க அணைக்கட்டுப்பகுதி அகழ்வாய்வின் மூன்றாவது கலாசார மண் அடுக்கில் கண்டுபிடிக்கப்பட்ட சமயச் சான்றுகள் இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இச்சான்றுகள் செங்கட்டிகள் கொண்டு கட்டப்பட்ட அத்திவாரத்திற்கு உட்பட்ட பகுதியிருந்து கண்டுபிடிக்கப்பட்டவையாகும். இக்கட்டிட அத்திவாரம் இவ்விடத்தில் பழமையான ஆலயம் அல்லது சமயச் சடங்கு நடந்த மண்டபம் இருந்திருக்கலாம் என்பதை உறுதிப்படுத்துகின்றது. இக்கட்டிடப் பகுதியில் இருந்தே பெருமளவு சுடுமண் சிற்பங்கள், சிலைகள், மணிகள், யானை, குதிரை, நந்தி, முதலான தெய்வ வாகனங்களின் பாகங்கள், அகல் விளக்குகள், தீபங்கள், சமயச் சின்னங்கள், இலட்சனைகள், குறியீடுகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக்கலை வடிவங்கள் களிமண் அல்லது களி மண்ணுடன் குருமணல், நெல்லுமி அல்லது வைக்கோல் என்பன கலந்து வடிவமைக்கப்பட்டு பின்னர் அவை சுடப்பட்டவையாகக் காணப்படுகின்றன. இவை தமிழகப் பெருங்கற்காலப் பண்பாட்டு மையங்களில் கண்டுபிடிக்கப்பட்ட சமயச் சின்னங்களைப் பெருமளவு ஒத்ததாகக் காணப்படுகின்றன. தமிழகத்தில் பெருங்கற்காலப் பண்பாட்டிலிருந்து கி.பி. 6ஆம் நூற்றாண்டுவரை இந்து ஆலயங்களும், அவை சார்ந்த கலைவடிங்களும் அழியக்கூடிய மண், மரம், சுதை என்பன கொண்டு அமைக்கப்பட்டவையாகும். இம்மரபே சமகால இலங்கையிலும் பின்பற்றப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
கட்டுக்கரைத் தொல்லியல் அகழ்வாய்வில் சிவன், முருகன், விநாயகர், அகத்தியர், நாகம் முதலான வழிபாடுகளுக்குரிய சின்னங்கள், சிற்பங்கள், சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஐயனார் வழிபாட்டுக்குரிய சான்றுகளே அதிக அளவில் கிடைத்துள்ளன. இவற்றின் அடிப்படையில் இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கட்டிட எச்சங்கள் இங்கு ஐயனாருக்குரிய ஆலயம் அல்லது ஐயனார் வழிபாட்டுச் சடங்கு நடந்த இடமாக எடுத்துக் கொள்வதே பொருத்தமாகும். தென் தமிழகத்திலும், இலங்கையிலும் பெருங்கற்காலப் பண்பாட்டுடன் தோன்றிய குளக் குடியிருப்பில் ஐயனாரை முக்கிய தெய்வமாக வழிபடும் மரபு இருந்துள்ளது. இது பொருளாதாரச் செழிப்பிற்காகவும், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் கொடிய மிருகங்கள் என்பவற்றிலிருந்து பாதுகாக்கவும் மக்களால் வழிபடப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இதற்கு தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிகத் தொன்மையான ஐயனார் வழிபாட்டுக்குரிய சின்னங்கள் சிறந்த சான்றுகளாகும். வன்னியிலும் பண்டு தொட்டு ஐயனார் ஒரு முக்கிய தெய்வமாக வழிபடப்பட்டு வருவதற்குப் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன. கட்டுக்கரை அகழ்வாய்வுகளில் ஐயனார் தெய்வத்தை அடையாளப்படுத்தும் நூற்றுக்கணக்கான யானை, குதிரை என்பவற்றின் உடற் பாகங்கள், தலைப்பகுதிகள், 75 இற்கும் மேற்பட்ட யானைத் தந்தங்கள், 50 இதிற்கும் மேற்பட்ட யானை, குதிரை, நந்தி முதலான வாகனங்களின் கழுத்தில் அணியப்பட்டிருந்த மணிகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டமை இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இவ்வாதாரங்களிடையே யானை அல்லது குதிரையின் மேலமைந்திருந்த பீடத்தில் தெய்வீக கோலத்தில் இரு கால்களையும் கீழே தொங்கவிடப்பட்ட நிலையில் இருக்கும் இரு பெண் தெய்வங்களின் அரிய சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை ஐயனாரின் இரு தேவியர்களைக் குறிப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர். இவற்றைத் தவிர ஆண், பெண் தெய்வங்களின் தலை உருவங்கள் பலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை ஐயனார், ஐயனாரின் தேவியர்களின் சிலைகளின் உடைந்த பாகங்களாக இருக்கலாம்.
இங்கு ஐயனார் வழிபாட்டுக்குரிய சான்றுகளுடன் சிவன், முருகன், விநாயகர், அகத்தியர் முதலான வழிபாட்டுக்குரிய சான்றுகளும் கிடைத்துள்ளன. இவ்வாதாரங்கள் பிற்கால ஐயனார் ஆலயங்களில் பிற தெய்வங்களையும் வைத்து வழிபடப்படும் மரபு பெருங்கற்காலப் பண்பாட்டிலிருந்து தோன்றியதை எடுத்துக்காட்டுகின்றன. அல்லது பொருளாதாரச் செழிப்பு, பாதுகாப்பிற்காக ஐயனாரை வழிபாடு செய்த மக்கள் தமது குலத் தெய்வங்களின் உருவங்களை, சின்னங்களை மண்ணிலே செய்து ஐயனாருக்கு காணிக்கையாக வழங்கியிருக்கலாம் அல்லது அவ்விடத்தில் வைத்து வழிபாடு செய்திருக்கலாம்.
இங்கு கண்டுபிடிக்கப்பட்ட நந்தி, ஆவுடையுடன் கூடிய சிவலிங்கம், திரிசூலம் என்பன சிவவழிபாடு முக்கியத்துவம் பெற்றிருந்ததை உறுதி செய்கின்றன. நந்தி, ஆவுடையுடன் கூடிய சிவலிங்கம் முதலான சுடுமண் சிற்பங்கள் கட்டுக்கரை பெருங்கற்காலப் பண்பாட்டில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டிருப்பது சிறப்பாக நோக்கத்தக்கது. தமிழக ஆதிச்சநல்லூர் பெருங்கற்காலப் பண்பாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட முருக வழிபாட்டிற்குரிய வேலும், சேவல் சின்னமும் இரும்பால் செய்யப்பட்டிருந்தன. ஆனால் கட்டுக்கரையில் அவ் வழிபாட்டை அடையாளப் படுத்தும் மயில் சின்னங்களும், அதன் இறகுகளும், வேல் சின்னங்களும் சுடுமண் உருவங்களாகக் கிடைத்திருப்பது அவ் வழிபாட்டின் தொன்மைக்குச் சான்றாகும். இங்கு மிகச் சிறிய கலசங்கள் பெருங்கற்கால மட்பாண்டங்களுடன் கண்டு பிடிக்கப்பட்டன. இக்கலசங்களின் வாய்ப்பகுதிலிருந்து தெய்வ உருவத்தின் முகம் வெளிவருவது போன்ற தோற்றப்பாடு காணப்படுகின்றது. வரலாற்றுக் கதைகளில் அகத்தியரை குடமுனி என அழைக்கும் மரபு காணப்படுகின்றது. அவ்வழிபாடு இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்குப் பரவியதான மரபும் காணப்படுகின்றது. இதனால் கட்டுக்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட சிறிய கலசங்கள் அகத்தியர் வழிபாடு இருந்ததை நினைவுபடுத்துவதாக உள்ளன.
கட்டுக்கரையின் அயல்நாட்டுத் தொடர்புகளும் நகரமயமாக்கமும்
பண்டைய காலத்தில் தரை, நீர்வழிப்பாதைகள், கடல்சார்வழித் தொடர்புகளுக்கு சாதகமான இயற்கைத் துறைமுகங்கள், வணிகமையங்கள் என்பன வர்த்தக நோக்கத்திற்காக பல நாட்டவர்களும், பல இன மக்களும் ஒன்று கூடுவதற்கு வழிவகுத்துக் கொடுத்தன. அவ்வாறான இடங்களிலிலேயே நெருக்கமான குடியிருப்புகள் தோன்றி அவ்விடங்கள் காலப்போக்கில் புராதன நகரங்களாக எழுச்சி பெற்றன. இப்பின்னணியிலேயே இற்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் அநுராதபுரம், மகாகமை, மாதோட்டம், கந்தரோடை முதலான இடங்கள் முக்கிய வணிக நகரங்களாகத் தோற்றம் பெற்றன.
கட்டுக்கரையைப் பொறுத்தவரை இங்கு கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பம் வாய்ந்த மட்பாண்டங்கள், விலையுயர்ந்த கற்கள், கல்மணிகள் என்பன தமிழகத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றன. இவ்வாதாரங்கள் பெருங்கற்காலப்பண்பாடு நிலவிய காலத்திலேயே கட்டுக்கரைக்கும் தமிழகத்திற்கும் இடையே நெருக்கமான வர்த்தக, கலாசாரத் தொடர்புகள் இருந்ததை உறுதிசெய்கின்றன. இவ்வர்த்தகத் தொடர்பு தமிழகத்துடன் மட்டுமன்றி இந்தியாவின் பல வட்டாரங்களுடனும் இருந்துள்ளது. கி.மு.5ஆம், 4ஆம் நூற்றாண்டுகளில் வட இந்தியாவில் மகத அரசால் வெளியிடப்பட்ட அச்சுக் குத்தப்பட்ட வெள்ளி நாணயங்களே (Punch-marks coins) தென்னாசியாவில் வெளியிடப்பட்ட முதலாவது வகை நாணயமாகும். இவ்வகை நாணயம் கட்டுக்கரைக் குளப்பரப்பில் இருந்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அச்சுக் குத்தப்பட்ட நாணயங்களைத் தொடர்ந்து கி.மு 3ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.13 ஆம் நூற்றாண்டுவரை தமிழகத்திலும், இலங்கையிலும் வெளியிடப்பட்ட சிலவகை நாணயங்களும் கட்டுக்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாதாரங்களுடன் கி.பி.4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அராபிய நாட்டு மட்பாண்டங்களும், 10ஆம், 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீனநாட்டுப் பீங்கான் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாதாரங்கள் ஆதிகால, இடைக்கால வரலாற்றில் கட்டுக்கரை பிறநாடுகளுடன் வணிக, கலாசாரத் தொடர்புகளைக் கொண்டிருந்ததை எடுத்துக்காட்டுகின்றன. இவ்வாதாரங்களின் அடிப்படையில் அநுராதபுரத்திற்குச் சமாந்தரமான காலத்தில் கட்டுக்கரையிலும் நகரமயமாக்கம் ஏற்பட்டதெனக் கூறமுடியும் இங்கு நடைபெற்ற தொல்லியல் ஆய்வுகளையும், கண்டுபிடிப்புக்களையும் நேரில் பார்வையிட்ட மத்திய கலாசார நிதிய யாழ்ப்பாணச் செயல்திட்ட முகாமையாளர் லட்சுமன் சந்தன மைத்திரிபாலா, யாழ்ப்பாணப் பிராந்திய தொல்லியல் பணிப்பாளர் பாலித்த விக்கிரமசிங்கே மற்றும் தென்னிலங்கைத் தொல்லியல் அறிஞர்கள் தற்போது காடாகக் காட்சிதரும் கட்டுக்கரைப் பிரதேசம் பண்டைய காலத்தில் மாதோட்டத்திற்கும் அநுராதபுரத்திற்கும் இடைப்பட்ட போக்குவரத்தில் ஒருநகரமாக எழுச்சிபெற்றதை இங்கு கண்டுபிடிக்கப்பட்ட சான்றுகள் உறுதிசெய்வதாகக் கூறியுள்ளனர்.
தொடரும்.