இலங்கையில் தேயிலைத் தொழில்துறை அதன் நூற்றி ஐம்பது வருடகால வரலாற்றைப் பதிவு செய்து கொண்ட போது (1867 – 2017), தேயிலைத் தொழிலின் தந்தையெனப் போற்றப்படும் ஜேம்ஸ் டெய்லரும் கௌரவிக்கப்பட்டு நினைவு கூரப்பட்டார்.
ஜேம்ஸ் டெய்லர் இந்த நாட்டுக்கு தேயிலை பொருளாதாரத்தை வளர்த்து, கட்டியெழுப்பியிருக்காவிட்டால், இலங்கை ஒரு செல்வம் கொழிக்கும் நாடாகத் திகழ்ந்திருக்க முடியாது. இந்த ஆய்வுக் கட்டுரைத் தொடரை நான் எழுத ஆரம்பித்ததன் நோக்கம் கோப்பி வரலாற்று காலத்தைப் போலவே தேயிலை வரலாற்றுக் காலம் முழுவதும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எவ்வாறு வஞ்சிக்கப்பட்டு, சுரண்டப்பட்டு இன்றுவரையில் துன்ப துயரத்தில் தள்ளப்பட்டுள்ளனர் என்பதை அம்பலப்படுத்தத் தான்.
எனினும் அதற்காக இந்நாட்டுக்கு தேயிலைப் பொருளாதாரத்தை பெற்றுத்தந்த ஜேம்ஸ் டெய்லரை குற்றம்சாட்ட முடியுமா? என்ற கேள்வி என் மனதில் எழுந்தது. ஜேம்ஸ் டெய்லரும் ஏனைய தோட்டத்துரைகளை போலவே ஒரு தோட்டத் துரையாக இருந்தவர் தான். ஆனால் ஒரு சராசரி தோட்டத் துரையாக இருந்து விட்டு போய் விடாமல் தனது மிகக் கடின உழைப்பால் தேயிலைப் பொருளாதாரம் உருவாகக் காரணமாக இருந்து, இந்த நாட்டின் வரலாற்றில் நிரந்தரமான ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர். இவர் தனது தோட்டத்தில் கூலி வேலை செய்த தொழிலாளர்கள் மீது அன்பும் பரிவும் காட்டியதனால் அவர்கள் அவரை “சாமித்துரை” என்ற பட்டப்பெயர் வைத்து போற்றிப் புகழ்ந்தனர்.
ஜேம்ஸ் டெய்லர் இங்கிலாந்தின் ஸ்கொட்லாந்து பிரதேசத்தில் கிங்கார்ட்சயர் என்ற இடத்தில் மொன் பொடோ என்ற தோட்டத்தில் (Monbodo) மோஸ் பார்க் (Moss park) என்று பெயரிடப்பட்ட வீட்டில் 1835 ஆம் ஆண்டு மார்ச் 29 இல் பிறந்தார். இவரது தந்தையான மைக்கேல் டெய்லர் அவரது முதலாவது மனைவி இறந்து மூன்று மாதத்திலேயே மார்க்ரெட் மொயார் (Margeret Moiyar) என்ற இரண்டாவது மனைவியை மணந்து கொண்டார். அதன் காரணமாக ஆரம்பத்திலிருந்தே தனது தந்தையின் இரண்டாவது மனைவியும் தனது சிறிய தாயுமான மார்க்ரெட் மொயாருடன் மனத்தாங்கலுடனேயே இவர் வாழ்ந்துவந்தார். இந்த மனத்தாங்கலும் ஜேம்ஸ் டெய்லர் இலங்கைக்கு வருவதற்கான ஒரு தள்ளு விசையாக இருந்துள்ளது என்று தெரிகிறது.
ஜேம்ஸ் டெய்லர் என்ற அந்த இளைஞன் தனது 16 ஆவது வயதில், அவனது அதே வயதைச் சேர்ந்த மச்சினனான ஹென்றி ஸ்டீபனுடன் 1857ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி இலங்கை நோக்கி செல்வதற்காக ஸ்கொட்லாந்தில் இருந்து லண்டன் நோக்கி சென்ற கப்பலில் பயணமானான். அவர்கள் லண்டன், கல்கத்தா, என மூன்று கப்பல்களில் 122 நாட்கள் பயணித்து 1852 பெப்ரவரி 20ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தனர். அவர்களது கப்பல் பிரயாணம் மிக சுவாரஸ்யமானதாகவே அமைந்திருந்தது என அவர் தனது தந்தைக்கு அவ்வப்போது எழுதிய கடிதங்களில் இருந்தும் அவர் தன்னுடன் வைத்திருந்த குறிப்புப் புத்தகத்தில் இருந்தும் தெரியவந்துள்ளது என்று “டீ எம்பயர்” (Tea Empire) என்ற நூலை எழுதியுள்ள ஆய்வாளர்களான ஏஞ்சலா மெக்கார்த்தி மற்றும் டி. எம். டிவைன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் கொழும்பில் இருந்த போது மெகவுட் இல்லத்தில் (Mack Wood House) தங்கி இருந்துள்ளனர். இது கோப்பி பெருந்தோட்ட முன்னோடிகளில் ஒருவரான கேப்டன் வில்லியம் மெக்வுட்டுக்கு சொந்தமானது. இந்த நிறுவனம் 1845ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு அண்மைக்காலம் வரை தேயிலை நிறுவனமாக இயங்கி வந்துள்ளது. அவர்கள் சில தினங்கள் கொழும்பில் தங்கியிருந்து புறநகர்ப் பகுதிகளைச் சுற்றி பார்த்துவிட்டு கண்டி நோக்கி குதிரை வண்டி ஒன்றில் பயணமானார்கள். கண்டி செல்லும் வழியில், தான் பார்த்த காட்சியை பின்வருமாறு வியப்புடன் விவரிக்கின்றார் ஹென்றி ஸ்டீவன்: –
“கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் மலைகளை ஒன்றுக்கு மேல் ஒன்று அடுக்கி அடுக்கி வைத்தது போல் அவை தலையை நிமிர்த்தி கொண்டிருந்தன. சில மலைகளின் உச்சி வரையில் மரங்கள் அடர்ந்து வளர்ந்த மரங்களுக்கு இடைநடுவே பெரும்பர்வதங்கள் துருத்திக் கொண்டு தலையை தூக்கி பயமுறுத்திக் கொண்டிருந்தன. ஆங்காங்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் உள்நாட்டு மக்களின் நெல்வயல்கள் பாய் விரித்து பரவிக் கிடப்பது போல் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் பரவலாகக் காணப்பட்டன. ஒருவராலும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு ஒரு பிரமாண்டமான அழகிய காட்சி கண்முன் விரிந்து கொண்டிருந்தது. பாம்புகள் வளைந்து நெளிந்து செல்வதைப்போல காணப்பட்ட வண்டில் பாதைகளின் இரு மருங்குகளிலும் வரிசையாகப் பெட்டிக்கடைகள் நிறைந்து காணப்பட்டதால் மக்கள் செறிந்து வாழ்கின்றார்களோ என்ற ஒரு மாயத்தோற்றம் தோன்றினாலும் ,எங்குமே மக்களை அதிகமாகக் காண முடியவில்லை”.
அவர்கள் கண்டியை அடைந்து அடுத்த நாளே தாம் தொழில் பார்க்க வேண்டிய தோட்டங்களுக்கு தனித்தனியாக செல்ல வேண்டியவர்களாக இருந்தார்கள். அதன் பிரகாரம் ஜேம்ஸ் டெய்லர் கண்டிப் பிரதேசத்தில் இருந்த லூல் கொந்தரா தோட்டத்துக்கும் ஹென்றி ஸ்டீவன் கண்டிக்கு வடக்கே இருந்த அங்கும்புர தோட்டத்துக்கும் சென்றனர். அதன் பின் ஜேம்ஸ் டெய்லர் அவரது மச்சினன் ஸ்டீபனை ஒருபோதும் சந்திக்கவுமில்லை, ஜேம்ஸ் டெய்லர் ஒருபோதும் தன் தாய்நாட்டுக்குத் திரும்பி போகவும் இல்லை. இந்த இரண்டு தோட்டங்களும் அப்போது ஜார்ஜ் பிரைட் என்பவருக்கு சொந்தமாக இருந்தன.
அதன்பின்னர் சுமார் 40 ஆண்டு காலத்தை கோப்பி, சிங்கோனா, பின்னர் தேயிலை பயிர்ச்செய்கை வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் டெய்லர். ஆரம்பத்தில் கோப்பிப் பயிர் வளர்ச்சி பெற பெரிதும் உழைத்து இருந்தாலும் தேயிலைத்தொழிலின் வளர்ச்சிக்கு அவர் செய்த பங்களிப்புக்காகவே “தேயிலையின் தந்தை” என அவர் இலங்கையர்களால் போற்றப்படுகின்றார். தான் பொறுப்பேற்றுக்கொண்ட சகல பணிகள் மற்றும் கடமைகளின் போது மிக உயரிய பொறுப்புணர்வு, அர்ப்பணிப்பு, விஞ்ஞான பூர்வமான அணுகுமுறைகள் என்பவற்றை அவர் கடைப்பிடித்துள்ளார்.
அவரால் தொடங்கப்பட்ட முதல் பணி, லூல் கொந்தரா தோட்டத்தின் மலை உச்சியில் 300 ஏக்கர் உயர்ந்த மரங்கள் அடர்ந்த காட்டை அழித்து சுத்தப்படுத்துவது ஆகும். முதல் கட்டத்திலேயே இது ஒரு மாபெரும் சூழல் அழிவாகும் என்று திகைத்துப் போகிறார் டெய்லர். தடித்த, உயரமான, உருக்குப் போன்ற பெறுமதிமிக்க மரங்களை வெட்டி வீழ்த்தி, நெருப்பிட்டு கொளுத்தி அழிக்கும் பணியில் ஈடுபட அவர் மனம் உடன்பட மறுத்தது. என்றாலும் கோப்பிப் பயிர்ச்செய்கை இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து கடந்த மூன்று தசாப்த காலமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் காட்டு நிலங்கள் சுத்தப்படுத்தப்பட்டு லட்சக்கணக்கான மரங்கள் அழிக்கப்பட்டு நாசப்படுத்தப்பட்டு விட்டன என்பது அவர் அறியாத விடயம் அல்ல. இதில் ஜேம்ஸ் டெய்லருக்கு மீள் பரிசீலனை செய்வதற்கு எதுவும் மீதம் இருக்கவில்லை. எனினும் மரங்களை வெட்டி வீழ்த்தி குவித்து உலர்த்தி நெருப்புப் போடுவதற்கு தமிழ்க் கூலிகள் பயன்படுத்தப்படவில்லை. அந்தப் பணிக்கு ஏற்கனவே சேனைப் பயிர்ச்செய்கை மூலம் இது தொடர்பில் காடுவெட்டி, தீமூட்டி அனுபவம் பெற்றிருந்த சிங்கள ஒப்பந்தக்காரர்களே அமர்த்தப்பட்டனர்.
இலங்கையின் மலைநாட்டுப் பகுதியில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான கோப்பித் தோட்டங்கள் உருவாகியிருந்தன. அக்காலத்தில் ஜேம்ஸ் டெய்லரின் தோட்டம் எல்லாவற்றுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தது. ஒவ்வொரு நாளும் அவரையும் அவரது தோட்டத்தையும் பார்த்துவிட்டுப் போகவென பல விருந்தாளிகள் வந்த வண்ணமிருந்தனர். அப்படி வந்து போனவர்கள் தோட்டத்தில் அவரது செயற்பாடுகளைப் பார்த்துவிட்டு அவர்களும் தமது தோட்டங்களில் ஜேம்ஸ் டெய்லரின் செயல்முறைகளைப் பின்பற்றத் தொடங்கினர். ஜேம்ஸ் டெய்லர் தனது தோட்டத்தில் செய்த முதலாவது பணி தோட்டத்துக்கு உள்ளும் வெளியிலும் போக்குவரத்தை இலகுபடுத்த, கல் பதித்து செப்பனிடப்பட்ட பாதைகளை அமைத்ததாகும். இங்கிலாந்தில் இவரது ஊரான ஸ்கொட்லாந்து பிரதேசம் மலைப்பாங்கானது. ஆதலால் இப்பிரதேசத்தவர்களுக்கு இங்கிலாந்தில் “மலை நாட்டினர்” (The Islanders) என்ற பட்டப் பெயரும் வழங்கப்பட்டிருந்தது. ஆதலால் அவருக்கு இலங்கையில் மலைநாடு என்பது அந்நியமானதாக இருக்கவில்லை. அவர் தான் அமைத்த பாதைகள், மழைநீரால் கரைந்து அழிந்து போவதில் இருந்து பாதுகாக்க, உயர் மலை உச்சியிலிருந்து அடிவார ஓடைகள் வரை, செங்குத்தாகவும் கிடையாகவும் சமமான இடைவெளிகளில் கான் வடிகால் முறை ஒன்றையும் அமைத்து உருவாக்கினார். இவற்றுக்கு நடுவில் நடுநாயகமாக இருக்கும் கான் “நெற்றிக்கான்” என அழைக்கப்பட்டது. இவை மண் அரிப்பை மட்டுமின்றி மண்சரிவு அபாயத்தையும் தடுத்தன.
இத்தகைய மழைநீர் வடிகால் கான் தொகுதிகள் அமைப்பு மலையகத் தோட்டங்களில் அண்மைக்காலம் வரை நன்கு பராமரிக்கப்பட்டு வந்தன. ஆனால் இவை இப்போது கைவிடப்பட்டு தூர்ந்து போய்விட்டன. கொஸ்லாந்தை மீரியபெத்த தோட்டத்தில் இவ்வித நீர் வடிகாலமைப்பு கைவிடப்பட்டமை காரணமாகவே அங்கே மண்சரிவு ஏற்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இவ்வித சூழல் மீதான அக்கறைக்கு மேலாக ஜேம்ஸ் டெய்லர், தான் கற்றிருந்த விஞ்ஞானக் கல்வியை அடிப்படையாகக் கொண்டு நீரின் வேகத்தை பயன்படுத்தி சிறிய நீர்ச்சில்லு முறையிலான மின்பிறப்பாக்கி (Electric Generator) ஒன்றையும் உருவாக்கினார். இந்த நீர்ச் சில்லு மின்பிறப்பாக்கி முறை பின்னர் பிரித்தானியாவில் இயந்திரமாக உருவாக்கப்பட்டு அனேகமான தோட்டங்களில் தொழிற்சாலைகள் இயங்குவதற்கு தேவையான மின்சாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக பயன்படுத்தப்பட்டது. இந்த முறை இலங்கையில் மின்சாரம் அறிமுகப்படுத்தப்படும் வரை பாவனையில் இருந்தது.
ஜேம்ஸ் டெய்லரின் முதல் தொகை தேயிலை 1872 ஆம் ஆண்டு கல்கத்தா சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட போது அது ஒரு றாத்தலுக்கு 2 பவுண் அல்லது 9 டொலர் என்று விலையை பெற்று முதல்தர தேயிலை என்ற அந்தஸ்தை தனதாக்கிக் கொண்டது. அதன்பின் ஒரு தசாப்த காலத்திலேயே உலகெங்கும் லண்டன் உள்ளடங்கலாக இலங்கைத் தேயிலை முதல்தர தேயிலை என்ற நாமத்தை சுவீகரித்துக் கொண்டது. விரைவிலேயே ஏனைய பெருந்தோட்டப் பயிர்களை விட அதிக அளவில் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை தனதாக ஆக்கிரமித்துக் கொண்டது.
ஜேம்ஸ் டெய்லர் தனது 57 ஆவது வயதில் 1892 ஆம் ஆண்டு இறக்கும் வரை தனியாகவே வாழ்ந்து வந்துள்ளார். எனினும் அவர் பார்வதி என்ற தமிழ்ப்பெண்ணுடன் 10 ஆண்டுகள் வாழ்ந்ததுடன் அவர்களுக்கு குழந்தைகளும் இருந்துள்ளனர். பின்னர் அவர் சில காலம் மெனிக்கே என்ற சிங்கள பெண்ணுடனும் வாழ்ந்துள்ளார். அவர் எப்போதும் தோட்ட முகாமையாளராகவே இருந்தார் என்றும் தோட்டச் சொந்தக்காரராக ஒருபோதும் இருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவர் பற்றி கருத்து தெரிவித்த லூல்கொந்தரா தோட்டத்தின் உரிமையாளர் மார்ட்டின் லீக், “அவர் ஒரு உன்னதமான கடும் உழைப்பாளி, அர்ப்பணிப்பு மிக்கவர். லாபம், சுயநலம் கருதாதவர். கற்பனைத்திறன், அறிவுத்திறன், சாதிக்க வேண்டும் என்ற வேட்கை என்பனவே அவரது சொத்துக்களாக இருந்தன ”என்று குறிப்பிட்டுள்ளார் .
தொடரும்.