தோட்டத் தொழிலாளர்களும் அதிகார வர்க்கத்திற்கெதிரான முரண்பாடுகளும்
Arts
10 நிமிட வாசிப்பு

தோட்டத் தொழிலாளர்களும் அதிகார வர்க்கத்திற்கெதிரான முரண்பாடுகளும்

September 6, 2022 | Ezhuna

இந்தியவம்சாவழி தொழிலாளர்களின் இலங்கை வருகை, அவர்களின் பிரஜாவுரிமை போன்ற பல விடயங்கள் தொடர்பேசுப்பொருளாக அமைந்திருக்கின்றன. ஆனால் கோப்பி பயிர்செய்கைக்குப் பின்னரான இந்தியவம்சாவழித் தமிழரின் வாழ்க்கை சூழல் எவ்வாறு அமைந்ததென ஒரு சில ஆய்வுகளே வெளிவந்துள்ளன. “கண்டி சீமையிலே-2 – சதிகளையும் சூழ்ச்சிகளையும் கடந்த வரலாறு” என்ற இந்த வரலாற்றுத்தொடர் அந்த இடைவெளியை நிரப்புவதாக அமைகின்றது. இலங்கையில் கோப்பிப்பயிர்செய்கை முடிவுற்று தேயிலை பயிர்செய்கைக்கான ஆரம்பத்தினை எடுத்துக்கூறுகின்றது. இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் தேயிலை தோட்டங்களில் பட்ட இன்னல்களையும் இடர்களையும் எடுத்துரைப்பதாக அமைகின்றது. கண்டி சீமைக்கு அழைத்துவரப்பட்ட தொழிலாளர்களின் உண்மை நிலையினை வரலாற்றுப் பார்வையினூடாக ஆதாரங்களுடன் எடுத்தியம்புகின்றது. இது வெறுமனே மக்களின் வாழ்வியல் பிரச்சினைசார் விடயங்களை மாத்திரம் தெளிவுப்படுத்தாமல், தொழில்சார், அரசியல், பொருளாதார, சமூகம் சார்ந்த பல்பரிமாண அம்சங்களினை வெளிகொணர்வதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மலையக மக்களின் வாழ்வியல், அரசியல், பொருளாதாரம், கலை, இலக்கியம் போன்றவை பற்றி எல்லாம் ஆராய்ந்த ஆய்வாளர்கள் “ஏன் இந்த மக்கள் கூட்டத்தினர் தம்மை நசுக்கி, அடக்கி, ஆளுகின்றவர்களுக்கு எதிராக கிளர்ந்து எழவில்லை?” என்று வியப்புடன் கேள்வி எழுப்பியுள்ளனர். இவ்வளவு துன்ப துயரங்களையும் பொறுமையாக சகித்துக் கொண்டு எவ்வாறு இவர்களால் இவ்வளவு நீண்ட காலம் வாழ முடிந்தது? என்று கேள்வி எழுப்பி அதற்கு விடை காணவும் முயன்றிருக்கிறார்கள். நான் முன் குறிப்பிட்டப்படி இந்த மக்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் தமக்கெதிராகக் கிளர்ந்தெழக்கூடும் என்ற பயம் அதிகார வர்க்கத்துக்கு எப்போதும் இருக்கவே செய்தது.

வரலாற்றுக் காலம் முழுவதும் “நீங்கள் எமக்கு எதிராக ஏதும் செய்ய முற்பட்டால் அதற்கான கடுமையான தண்டனை உங்களுக்கு வழங்கப்படும்” என்ற மௌனமான பயமுறுத்தல் இம்மக்களை எழ விடாது தடுக்க உபயோகிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பயமுறுத்தல் இந்த மக்களுக்கு மாத்திரமின்றி ஒடுக்கப்படும் மக்கள் எங்கெல்லாம் இருக்கின்றனரோ, அங்கெல்லாம் ஒடுக்குமுறையாளர்களால் விடுக்கப்படும் பயமுறுத்தலாகும் என்பது பொதுவான ஒரு எடுகோள். எனினும் அவ்வப்போது தமக்கு அதிகார வர்க்கத்தின் மீது கோபம் ஏற்பட்ட போதெல்லாம் அவர்கள் பல்வேறு எதிர்ப்பு செயல்கள் மூலம் தம் கோபத்தை கொட்டித் தீர்த்துக் கொண்டார்கள் என்பதனை இவர்களது வரலாற்றை நுணுகி ஆராயும் போது புரிந்து கொள்ள முடிகின்றது.

அத்தகைய எதிர்ப்பு நடவடிக்கைகளாக பின்வரும் செயல்களை ஆய்வாளர்கள் பட்டியல்படுத்தியுள்ளனர் :- வரலாற்றுக் காலம் முழுவதுமே அடிமைமுறையும் அதிகார அடக்குமுறையும் எங்கெல்லாம் காணப்பட்டதோ அங்கெல்லாம் அடக்கப்பட்டவர்கள் மௌனமாக ஒருவித கீழ்படியாமையையும் “நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்” என்ற மெத்தனப் போக்கையும் கடைப்பிடித்துள்ளனர் என ஈ. பி. தொம்சன் (E. P. Thompson) என்ற ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

அதிகாரவர்க்கத்திற்கெதிராக போராடும் தொழிலாளர்கள்

அவர் அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது :- அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் தாம் கொண்டு நடத்திச்செல்கின்ற திருப்தி இல்லாத வாழ்க்கை காரணமாகவும், கட்டாயம் அவ்வாழ்க்கை தம்மீது திணிக்கப்படுள்ளமையாலும், அன்றாடம் ஏதோ ஒரு விதத்தில் தம் வெறுப்பையும் இயலாமையையும் வெளிப்படுத்திக் கொண்டேதான் இருந்தார்கள். இதனை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும் இது 1, 3, 9 என பெருக்கல் விதிப்படி பெருகி அரசியலிலும், பொருளாதாரத்திலும் பாரிய “கடலடித்தள தடைகள் போல்” உருவாகி பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது என்பதனைப் பலரும் உணர்ந்திருக்கவில்லை. இவ்வாறுதான் அவர்கள் அரசியல் ரீதியிலான தமது இருப்பை வெளிப்படுத்தினார்கள். தாம் செல்லும் பாதையில் மறைந்திருக்கும் இந்தப் பாரிய தடைகளை அறிந்திராத கப்பல் ஓட்டிகள், வெளியே துருத்திக் கொண்டிருக்கும் உடைந்த கப்பல்களின் எச்சங்கள் தொடர்பில் மட்டுமே அதிக அச்சம் கொள்கிறார்கள் என்பது போன்றது தான் இது – என்று அவர் தனது ஆய்வில் கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பெருந்தோட்டத் தொழிலாளர்களும் கூட நம்மால் முடிந்த வரையில் எதிர்ப்பை காட்டித்தான் வந்திருக்கிறார்கள் என்பதற்கான பல சான்றுகள் உள்ளன. அத்தகைய எதிர்ப்புக்களில் ஒன்றுதான் “தாம் அவசியமான நேரத்தில் வேலைக்குப் போகாமல் விடுதல்” அவ்விதம் செய்வதன் மூலம் தொழிலாளர் மீதான தோட்டத்துரைமார்களின் அதிகாரத்துக்கு சவால்விட்டதுடன் உற்பத்தியினையும், கிடைக்கும் இலாபத்தையும் குறைவடையச் செய்ய அவர்கள் முயற்சித்தார்கள். அவர்கள் அவ்வாறு மலைக்கு வேலைக்குச் செல்லாமல் பறிக்காமல் விட்ட கொழுந்து நிரந்தரமாக பறிக்கப்படாமல் போய்விட்டதாகவே கருதப்படவேண்டும். அதனை வேறு ஒரு தினத்தில் சென்று பறிக்க முடியாது. மற்றும் வேறு ஒரு தினத்தில் வேலைக்குச் செல்வது என்பது அது அன்றைய தினத்துக்கான வேலையாக மட்டுமே இருக்கும். இவ்விதம் மறைமுகமாக நமது எதிர்ப்பை அவர்கள் தொடர்ந்து காட்டி வந்திருக்கிறார்கள் என்பது தோட்டத்துரைமாருக்கு இறுதிவரை தெரியாமலேயே போய்விட்டது.

வேலைக்குச் செல்லாமல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடும் பெண் தொழிலாளர்கள்

தொழிலாளர்கள் திடீரென்று வேலைக்கு வராமல் விடுவது தோட்டங்களில் பெரும் பிரச்சினையாக இருந்தது. அது தோட்டத்துரைமார்களின் அதிகாரத்தை சவாலுக்கு உட்படுத்துவதாக இருந்தது மட்டுமன்றி தோட்டத்தின் உற்பத்தி, அறுவடை, வருமானம் என்பவற்றையும் பாதித்தது. இதனை தடுப்பதற்காக வேலையைப் புறக்கணித்தல் மற்றும் கவனக்குறைவாக நடந்து கொண்டமை ஆகிய குற்றங்களுக்காக ஒரு தோட்டத்தின் மொத்த தொழிலாளர் தொகையின் 1450 பேரில் 577 பேர் மீது 1915 ஆம் ஆண்டு 1865 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க குற்றவியல் சட்டப் பிரிவு 11இன் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டனர். பல சந்தர்ப்பங்களில் தொழிலாளர்கள் வேலையை பாதியில் விட்டுச் செல்லுதல் அல்லது தாமதமாக வேலைக்கு சமுகமளித்தல் போன்ற காரியங்கள் மூலம் துரைமார்களுக்கு கோபத்தையும் எரிச்சலையும் உண்டு பண்ணினார்கள் என்றும் கூறப்படுகின்றது.

அதிக மது அருந்துகின்றமையும், இவ்விதம் மது அருந்திவிட்டு தம்முள் சண்டை போட்டுக் கொள்வதும், இத்தகைய சண்டைகளின் போது கங்காணிகளையும் துரைமார்களையும் கெட்ட வார்த்தைகளால் திட்டுவதும் என்பன ஒருவிதத்தில் அதிகாரத்துக்கு எதிரான எதிர்ப்புணர்வே என்று ஆய்வாளர் பெல்ப்ஸ் பிரவுண் (Phelps Brown) குறிப்பிட்டுள்ளார். பல சந்தர்ப்பங்களில் தொழிலாளர்கள் கூட்டமாக நன்கு குடித்துவிட்டு வன்முறைகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய வன்முறைகளால் தம் உடலுக்கும் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம் என்று துரைமார்கள் பயந்து பொலிஸ் பாதுகாப்பை நாடிய சந்தர்ப்பங்களும் இடம்பெற்றிருக்கின்றன.

மற்றுமொரு சந்தர்ப்பத்தில் 1886 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் நெல் விளையும் பல மாவட்டங்களில் வறட்சி ஏற்பட்டதால் நெல் விளைச்சல் வீழ்ச்சி ஏற்பட்டது. அதன் காரணமாக இலங்கையிலும் அரிசிக்குத் தட்டுப்பாடு உண்டானது. பதுக்கல் வியாபாரிகள் தானியங்களை பதுக்கி அதிக விலைக்கு விற்றனர். இதனை தொடர்ந்தும் சகித்துக்கொள்ள முடியாத தோட்டத் தொழிலாளர்கள் கூட்டமாக கண்டி நகருக்கு சென்று பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் தானியக் களஞ்சியசாலைகளை உடைத்து திறந்து அரிசியையும் தானியங்களையும் பலவந்தமாக எடுத்துச் சென்றுள்ளனர்.

இதன் காரணமாக கண்டி நகரத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. அது கண்டி அரசாங்க அதிபருக்கு அறிவிக்கப்பட்டது. உடனே ஸ்தலத்துக்கு விரைந்த அரசாங்க அதிபர் எல்லாக் கடைகளையும் களஞ்சியசாலைகளையும் திறக்கச் செய்து உரிய விலையில் அவற்றை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தார். இந்தச்செயலால் மேலும் கலவரம் பரவாமல் தடுக்கப்பட்டது. அதேபோல தோட்டத் தொழிலாளர்கள் துரைமார்களுக்கு எதிராகவும், கங்காணிகள், மேற்பார்வையாளர்களுக்கு எதிராகவும் கிளர்ந்தெழுந்த சம்பவங்களும் வரலாற்றில் பதிவாகியுள்ளன. இதற்கு மேலதிகமாக கங்காணிகளும் துரைமார்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டுள்ளமையும் வரலாற்றில் இடம்பெற்றுள்ளன. 1866 ஆம் ஆண்டு ஹந்தானா தோட்டத்துறையாக பணிபுரிந்த ஜோன் பால்க்னர் (John Falconer) என்ற துரை, கங்காணி ஒருவனால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பில் வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது.

மேற்படி துரை, பல தடவைகள் அந்தத் தோட்டத்தின் கங்காணி சரியாக வேலை செய்யவில்லை என்று திட்டித்தீர்த்துள்ளார். அவர் ஒரு கடுமையான போக்குள்ளவர் என்று தொழிலாளர் மத்தியில் கருத்து நிலவியது. ஒருமுறை அந்தக் கங்காணி அத்துரையைப் பார்த்து “உனக்கு என்ன தெரியும்? உன்னை மாதிரி எத்தனை துரையை நான் பார்த்திருக்கிறேன். நீ இன்னும் எத்தனை நாள் இந்த தோட்டத்தில் இருக்கிறாய் என்று பார்ப்போம்” என்று கோபமாக கத்தியிருக்கிறான். அதன் பின்னரும் ஆத்திரத்தை அடக்க முடியாமல் அந்த துரையை கடுமையாக தாக்கி கொலை செய்து விட்டான் கங்காணி.

இதேபோல் 1880 களில் மற்றுமொரு சம்பவத்தின்போது பெனிசன் (Benison) என்ற இளம் துரை கொலை செய்யப்பட்ட நிகழ்வு ஒன்றும் பதிவாகியுள்ளது. இதன்போது மேற்படி துரையின் வைப்பாட்டியான சிங்களப் பெண்ணை பாலியல் ரீதியில் வம்புக்கிழுத்தமைக்காக பென்சன் துரை அவரது சமையல்காரனை நையப்புடைத்திருக்கிறார். அதற்கு பழிவாங்குவதற்காக தருணம் பார்த்திருந்த அந்த சமையல்காரன் “அப்பு” என்ற இன்னொரு துரையின் கைத்துப்பாக்கியை எடுத்து அதனைக் கொண்டே துரையை சுட்டு கொன்றுள்ளான். இதே காலப்பகுதியில் பெத்தே வெல்ல என்ற தோட்டத்தில் சேவை பார்த்த ஜோன்சன் (Johnson) என்ற இளம் துரை, கத்தியால் குத்தியும் வெட்டியும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இதில் பல தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டிருந்தனர். இவரும் தொழிலாளரை கடுமையாக வேலை வாங்குபவர் என்று பெயர் பெற்றிருந்தார்.

ஏனைய எல்லாச் சமூகங்களிலும் காணப்படுவது போலவே பெருந்தோட்டத் தொழிலாளர் சமூகத்திலும் வீர தீரமாகப் பேசப்பட்ட பல கதைகளும் காணப்படத்தான் செய்கின்றன. “பெருமாள் வெட்டு” என்பதும் அத்தகைய ஒரு கதைதான். நன்றாக “கவ்வாத்து” வெட்டுவான் என்று பெயர் வாங்கியிருந்த பெருமாள் என்ற அந்த இளம் முரட்டு தோட்டத் தொழிலாளிக்கு, அப்போதுதான் புதிதாக வேலை பழக வந்திருந்த வெள்ளைக்கார துரை எவ்வாறு கவ்வாத்து வெட்ட வேண்டும் என்று கற்றுக் கொடுக்க முற்பட்டிருக்கிறார்.அவர் அவன் கையில் இருந்த கத்தியை பறித்து “தேயிலைத் தூரிலிருந்து 15 அங்குலம் மேலே இப்படி வெட்ட வேண்டும்” என சொல்லிக் கொடுத்தார்.”எனக்கே குண்டடிக்கிறாயா..?” என்று மனதுக்குள் கறுவிக் கொண்ட பெருமாள் ஆத்திரத்துடன் அவர் கையில் இருந்த கத்தியை பிடுங்கி “அப்படி இல்லீங்க.. தொர, இந்தா இப்படித்தா” என்று கூறி அவர் வலது கரத்தை இழுத்தெடுத்து முழங்கைக்கு சற்று மேலே ஒரே வெட்டு வெட்டினான். அவன் துண்டித்த கை சரியாக 15 அங்குலம் இருந்ததாக கூறப்படுகிறது. “பெருமாள் வெட்டு” என்ற கதை இப்போதும் அங்கே பேசப்பட்டு வருகிறதென்று வெலன்டின் டேனியல் (Valentine Daniel) என்ற ஆய்வாளர் தனது ஆய்வு குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

10790 பார்வைகள்

About the Author

இரா. சடகோபன்

இரா. சடகோபன் என்று எழுத்து உலகில் அறியப்பட்ட இராமையா சடகோபன் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிறப்பு பட்டதாரி ஆவார். அதன்பின் ஒரு சட்டத்தரணியாக தன்னை உயர்த்திக் கொண்ட இவர் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் மூன்று நூல்களுக்குத் தேசிய சாகித்திய விருதுகளையும் பெற்றுள்ளார்.

விஜய் சிறுவர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரான இவர், 'சுகவாழ்வு' சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் ஆவார். இதனைத் தவிர மலையக மக்கள் மேம்பாடு தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். சடகோபன் ஊடகத்துறையில் ஆற்றிய பணிக்காகச் சிறந்த ஊடகவியலாளருக்கான ஜனாதிபதி விருதையும் பெற்றுள்ளார்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (17)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)